Rob Ford மற்றும் Kristyn Wong-Tam கற்கவேண்டிய பாடங்கள்

ரொரன்றோ மேயர் Rob Ford ன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பது நல்லது.  இப்படி ஒருவர் எப்படி மேயரானார் என்கிற கேள்வியே தொடந்து எழுகின்றது.  2008 ல் இவர் கவுன்சிலராக இருந்த போது “Those Oriental people work like dogs. … They’re slowly taking over என்றும் they even sleep beside machines என்றும் கூறியிருந்தார்.  அப்போது இதற்கான த்மது எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்தவர் ஆன Krystyn Wang-Tam அதன் பின்னர் தானும் அல்ல்து தன்னைப் போன்றவர்களும் அரசியலில் முழுமையாக ஈடுபடவேண்டிய தேவையை உணர்ந்து 2010 ல் கவுன்சிலர் தேர்தலில் நின்று 27ம் வட்டாரத்திற்கான கவுன்சிலராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  Rob Ford போன்ற அது தீவிர வலது சாரிகள் செய்கின்ற மக்கள் விரோத அரசியலை பார்க்கின்ற அதே நேரம் அதற்கான எதிர்ப்பாக உருவான Krystyn Wang-Tam போன்றவர்களை ஆதரிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  Krystyn Wang-Tam பற்றிய விக்கி பீடியா பக்கம் http://en.wikipedia.org/wiki/Kristyn_Wong-Tam

 

சமீபத்திய Toronto Life இதழில் The Anti-Ford என்கிற Nicholas Hune-Brown எழுதிய கட்டுரை ஒன்று வந்துள்ளது,  அதில்  Krystyn Wang-Tam எப்படி ஒரு புதிய குடிவரவாளராகக் கனடாவில் நுழைந்து தனது Sexual Orientation காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி தனது பல்கலைக்கழகக் கல்வியில் இருந்து இடையில் வெளியேறி, தான கற்கவேண்டியது மக்களிடம் தான் இருக்கின்றது என்று, தனது வாசிப்பினூடக தன்னைத் தகவமைத்து, ஒரு வெற்றிகரமான Realtor ஆகி தனது Political Activism காரணமாக இன்று மக்கள் பிரச்சனையை முன்வைத்து பேசிப் போராடும் ஒரு கவுன்சிலராக வந்தது வரை குறிப்பிடப்படுகின்றது.

 

பின் இணைப்பு :- Rob Fordன் பத்தாண்டு கால சர்ச்சைகள் என்று the gloe and mailல் வெளியான கட்டுரை ஒன்று http://www.theglobeandmail.com/news/national/toronto/rob-ford-and-a-decade-of-controversy/article1678543/

 

புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்: செய்யவேண்டியது என்ன

கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவுபெற்று ஹார்பர் தலைமையின் கீழான வலதுசாரி பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியக் கைப்பற்றி இருக்கின்றது.  அதே நேரம் புதிய ஜன நாயகக் கட்சி (NDP) கனேடியப் பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக இரண்டாவது அதிக இருக்கைகளைக் கைப்பற்றி, உத்தியோகபூர்வமான எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.  தொடர்ச்சியாக NDP கட்சியை அவதானித்துவந்ததன் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் எனது விருப்பத்துக்குரிய கட்சியாகவும்  NDPயினரே இருந்துவந்துள்ளனர்.  இதுவரை காலமும் நிறைய இடங்களில் என்டிபி கட்சியனர் பற்றிக் கூறியபோதெல்லாம், அவர்கள் நல்ல கட்சிதான், ஆனால் அவர்கள் வெல்ல மாட்டாகள், எனவே தாராளவாதக் கட்சி (Liberal) அல்லது பழமைவாதக் கட்சி தான் எமது தேர்வாக இருக்கவேண்டும் என்பதே பெரும்பாலான தமிழர்களின் தேர்வாக இருந்துள்ளது.  இந்த நிலையில் இந்தத் தேர்தலில் என்டிபி கட்சியினர் பெற்ற வரவேற்பு, இனிவருங் காலங்களில் கனேடியத் தமிழர்கள் எந்த விதமான சாக்குப் போக்கும் சொல்லாது புலம்பெயர் அரசியலில் தம்மை வலுவாக நிலைநிறுத்தவும், தமது வாக்குப் பலத்தைக் காட்டவும் நிறைய நம்பிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது.  கனடா மாத்திரமல்லாது, எல்லாப் புலம்பெயர் நாடுகளிலும் தமிழர்கள் தம்மை அரசியல் ரீதியாக நிலைநிறுத்துவது புலம்பெயர் தமிழர்களின் நலனுக்கும், தாயகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கும், இலங்கையில் தமிழர்கள் தமது சுய உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ச்சியாக முன்னெடுக்கும் போராட்டத்தை இன்னும் வலுப்படுத்தவும் மிக முக்கியமானதாகும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பழமைவாதக் கட்சிய சார்பாக ராகவன் பரஞ்சோதியும், புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக ராதிகா சிற்சபேசனுமாக இரண்டு தமிழர்கள் போட்டியிட்டிருக்கின்றனர்.  தமிழர்கள் கனடாவில் மிகக் குறைவான அடர்த்தியிலேயே வாழ்வதால் தமிழர் ஒருவர் பாரளுமன்றத் தேர்தலில் வெல்வது சாத்தியமில்லாதது என்பதை முறியடித்து ராதிகா சிற்சபேசன் சுமார் 5000 வாக்குகள் வித்தியாசத்தில், அதாவது மொத்த வாக்குகளில் 40.53%இனைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றார்.  அதே நேரம் ராகவனின் அரசியல் காரணமாகவும், அவர் சார்ந்திருக்கும் CMR வானொலி கட்டியெழுப்பிய ராகவனின் விம்பத்திற்கும், அதே நேரம் ராகவன் ஆங்கில ஊடகங்கள் ஊடாக தன்னை வெளிப்படுத்திகொண்ட விம்பத்திற்கும் இடையில் இருக்கின்ற பாரிய வித்தியாசத்தின் காரணமாகவும் ராகவன் செய்கின்ற சுயநல அரசியல் வெற்றிபெறக்கூடாதென்று விரும்பினபோதும், ராகவன் தனது தொகுதியில் 12,828 (31.85%) வாக்குகளைப் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றதைக் குறிப்பிடவே வேண்டும்.  அந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் 14,113 (35.04%) வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.  எனவே இந்தத் தேர்தல் கனேடியக் கட்சிகளுக்கும், கனேடிய மக்களுக்கும் கனேடியத் தமிழர்கள் வாக்குகளின் அடிப்படையில் பலமானவர்கள் என்பதைத் தெளிவாகக் காட்டி இருக்கின்றது.  இந்த அடிப்படையில் கனேடிய அரசியலில் நாம் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் பற்றிப் பகிரலாம் என நினைக்கிறேன்.

  1. இந்தத் தேர்தலில் ராகவன் பரஞ்சோதியும், ராதிகா சிற்சபேசனும் வேட்பாளராக தெரிவாக நாளில் இருந்து இவர்கள் போட்டியிடும் தொகுதியில் வாழும் தமிழர்கள் இவர்கள் தமிழர்கள் என்பதற்காக இவர்களுக்கே வாக்களிக்கவேண்டும் என்ற கருத்து பல இடங்களிலும் பரப்பப்பட்டது.  தேர்தலுக்குச் சிலநாட்களுக்கு முன்னர் பொன். பாலராஜன் (இவர் நாடுகடந்த தமிழீழ அரசின் அரசவைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது)  எழுதிய கட்டுரையிலும் “ராகவனையும் ராதிகாவையும் வெல்ல வைப்பது இலட்சக்கணக்கில் கனடாவில்  வாழ்கின்ற சமூகத்திற்கு முக்கிய பொறுப்பாகும்.  கட்சி பேதங்களை மறந்து, நாம் தமிழர்களாக நம் தமிழர்களை ஆதரிப்போம்” (தாய்வீடு மே 2011) இவ்வாறான ஒரு கருத்தை முன்வைத்தே கட்டுரையே நிறைவு செய்திருந்தார்.  இங்கே எனக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது ராகவன் சார்ந்து இருக்கின்ற கட்சியின் அரசியல்.  பழமைவாதக் கட்சியின் தேர்தல் விளம்பரமே, sun sea கப்பலில் வந்த அகதிகளைக் காட்டி “Canada wants to welcome those who want to build a better future; but our openness doesn’t extent to criminals to target Canadian generosity” என்கிற வெறுப்பூட்டும் கருத்தொன்றைச் சொன்னதை நினைவுறுத்த விரும்புகின்றேன்.  இந்த விளம்பரம் பற்றி எந்த சந்தர்ப்பத்திலும் பழமைவாதக் கட்சியினரோ அல்லது ராகவனோ எந்த வித வருத்தத்தையும் தெரிவிக்கவேயில்லை.  ஏற்கனவே முன்னொரு தேர்தலில்  பழமைவாதக் கட்சி வெல்வதற்கே அதிகம் வாய்ப்பிருப்பதால் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே சாதுரியமானது என்று சொல்லி தமிழ் அமைப்புகள் பழமைவாதக் கட்சியினருக்கு தமது ஆதரவை அள்ளி வீச, ஆட்சிக்கு வந்த பழமைவாதக் கட்சியினர் ஆட்சிக்கு வந்த கையோடு செய்த வேலையே விடுதலைப் புலிகளை கனடாவில் தடை செய்ததுதான்.  அதன் தொடர்ச்சியாக உலகத் தமிழர் அமைப்பும் 2008ல் தீவிரவாத அமைப்பாகக் கூறி தடை செய்யப்பட்டது.  எனவே வெல்கின்ற கட்சிக்கு வாக்களிக்கின்ற சாதுரியம் என்கின்ற முட்டாள்த் தனத்தையெல்லாம் ஒதுக்கிவிட்டு தமிழர்கள் தம் அரசியல் என்னவென்பதிலும், அரசியல் தெரிவுகள் என்னவென்பதிலும் தெளிவாக இருக்கவேண்டும்.   இந்தத் தேர்தலில் தமிழர்கள் பழமைவாதக் கட்சியினருக்கு வாக்களிப்பதும், அதன் சார்பாக நின்ற ராகவனுக்கு வாக்களிப்பதும், அப்படி வாக்களித்தவர்கள் பழமைவாதக் கட்சியினரின் அரசியலை முழுமையாக நிராகரித்துக் கொண்டே, ராகவன் தமிழர் என்பதற்காக அவருக்கு வாக்களித்திருந்தால் கூட, அது தமிழர்கள் பழமைவாதக் கட்சியினரின் அரசியலை ஏற்றுக் கொள்கின்றார்கள் என்ற சமிக்ஞையாகவே கருதப்படும்.
  2.  இந்தத் தேர்தல் பற்றி தமிழ் விண் உள்ளிட்ட ஊடகங்களிலும், கனேடியத் தேர்தல் தொடர்பாக தேடகம் அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த கூட்டம் ஒன்றிலும், குறித்த கட்சியில் இடம் தராததாலேயே சிலர் வேறுகட்சிகளில் தேர்தல்களின் நிற்கின்றனர் என்கின்ற வாதம் முன்வைக்கப்பட்டது (தாராளவாதக் கட்சியினரை முன்வைத்தே இந்த வாதம் முன்வைக்கபட்டது.  அதாவது அவர்களைத் தமிழர்கள் ஆதரித்தும் அவர்கள் தமிழ் வேட்பாளர்களை அனுமதிக்கவில்லை ஆனால் பழமைவாதக் கட்சியினர் தமிழர்களை வேட்பாளராக நிறுத்துகின்றனர்.  எனவே அவர்களை ஆதரிக்கவேண்டும் என்பது அவர்களது வாதம்).  உண்மையில் மக்கள் எவ்வளவு தூரம் அரசியல் தெளிவில்லாமலே இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகின்றது.  அரசியல் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வது என்பது ஒருவர் தான் ஏற்றுக் கொள்கின்ற அரசியல் தத்துவம், கொள்கை, செயற்திட்டம் என்பதுவன் தொடர்புடையது மாத்திரமல்லாது அவற்றுடன் நேரடியாகத் தொடர்புகொண்டது.  இப்படி இருக்கின்ற போது ஒருவர் தன்னை வேட்பாளராக நிறுத்துகின்ற கட்சியில்தான் சேர்வேன் என்று சொல்வதோ அல்லது அப்படி ஒருவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதோ எந்த விதத்திலும் ஏற்க முடியாதது.  இது போன்ற அரசியல் தெளிவின்மையின் இன்னொரு வெளிப்பாடாகவே, எல்லாக் கட்சிக்கும் தமிழர்கள் தமது வாக்குகளைப் போடவேண்டும் என்கிற கருத்து முன்னெடுக்கப்பட்டதையும் சொல்லவேண்டும்.  பரவலாக எல்லாக் கட்சிக்கும் தமிழர்கள் வாக்களிப்பதன் மூலமாகவே எல்லாத் தரப்பில் இருந்தும் ஆதரவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்கிற விளக்கமும் கொடுக்கப்பட்டிருந்தது.  இப்படியான ஒரு கருத்துருவாக்கத்தை  தமிழர்களுக்கென்றொரு தெளிவான அரசியல் இருந்தால் முன்வைத்திருக்கவே முடியாது.  எல்லாருக்கும் ஆதரவளிப்போம் என்பது, அந்தக் கட்சிகளின் கொள்கைகளைப் பரிசீலனை செய்யத் தேவையில்லை என்று நீட்சியுறும் என்பதைக் கவனிக்கவேண்டும்.
  3. புலம்பெயர் நாடொன்றில் எம்மை அரசியல் ரீதியாகப் பலப்படுத்தச் செய்யக்கூடிய இலகுவான வழி தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதும் தமது அரசியல் என்ன என்பதைத் தெளிவாக முன்வைப்பதுமாகும்.  இதற்கு தமிழர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரம் அரசியல் கதைப்பதைத் தவிர்த்து, தொடர்ச்சியாக தத்தமது நாட்டு அரசியலை உன்னிப்பாக அவதானிக்கவேண்டும்.  அது மாத்திரமல்லாது தொடர்ச்சியாகச் செய்யப்படுகின்ற சட்டத் திருத்தம் போன்றவற்றையும் அவதானிக்கவேண்டும்.  புலம்பெயர்நாடுகளில் இயங்குகின்ற தமிழர் அமைப்புகள் தத்தம் புலம்பெயர் தேச அரசியல்கள் பற்றியும் தொடர்ச்சியான கருத்தரங்குகளையும், கூட்டங்களையும் ஒழுங்குசெய்யலாம்.  முடியுமானால் அவற்றை தமிழில் மொழிபெயர்த்து பரவலாக மக்களைச் சென்றடையச் செய்யலாம்.  கனடாவைப் பொறுத்தவரை வருகின்ற ஒக்ரோபர் மாதம் ஒன்ராரியோ மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.  கனடாவில் இருக்கின்ற தமிழர்களில் மிகப் பெரும்பான்மையானோர் ஒன்ராரியோவிலேயே இருப்பதால் இந்தத் தேர்தலில் தமிழர்கள் நிதானமாக தமது தேவைகள் எவையென்பதையும், அவற்றில்  எவற்றுக்கு முன்னுரிமை என்பதையும் ஆராய்ந்து தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டும்.
  4. இங்கு மக்களிடம் அரசியலைக் கொண்டுசெல்வது பற்றிப் பேசும்போது ஊடகங்கள் பற்றிப் பேசவேண்டிய தேவைவருகின்றது.  நாம் பொது மனநிலையில் தமிழகத்து ஊடகங்கள் பற்றிய விம்பம் ஒன்றை வைத்திருக்கின்றோமே, அதே நிலையில்தான் கனடாவில் இருக்கின்ற முக்கியமாக ஊடகங்களான (முக்கியமான என்கிற போது அதிக மக்களைச் சென்றடைகின்ற என்கிற வகையில் அவை பெறுகின்ற முக்கியத்துவம் என்ற பொருளில் மாத்திரமே உபயோகிக்கின்றேன்) CTBC, CMR, உதயன் பத்திரிகை போன்றவையும் அதிக மக்கள் பார்க்கின்ற தமிழ் விண் போன்ற இணைய ஊடகங்களும் இருக்கின்றன.  எனவே மக்களுக்கு சரியான முறையில் அரசியலை முன்னெடுக்க விரும்புபவர்கள் இந்த ஊடகங்களை நம்பிப் பயனில்லை.  சிறு பிரசுரங்கள், வலைப்பதிவுகள் மூலமாக ஒரு குறிக்கபட்ட மக்களைச் சென்றடையலாம் என்றாலும், ஒரு மாற்று ஊடகத்திற்கான தேவை இருந்துகொண்டே இருக்கின்றது.
  5. அடுத்து கனடாவில் இருக்கின்ற எந்த ஒரு கட்சியோ அல்லது அவற்றின் பிரதிநிதிகளோ தம்மை கனடாவில் தடைசெய்யப்பட்டதோர் அமைப்பின் ஆதரவாளர்களாக வெளிக்காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்கள்.  அவர்களால் செய்ய முடியாததும் கூட.  அவர்கள் உண்மையில் ஈழப் பிரச்சனையில் ஈழத்தமிழர்களின் ஆதரவாளர்களாக இருந்தாலும் கூட அவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதியாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவே மாட்டார்கள்.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், கனேடிய நாடாளுமன்றத்திற்கு ஒரு ஈழத்தமிழர் தெரிவாகி இருக்கின்றார் என்றதும், தமிழர் தரப்பில் இருந்தே மாவீரர் தினம் போன்றவற்றிற்கு அவர் அழைக்கப்படலாம் அல்லது புலிக்கொடி ஏந்தப்படுகின்ற இடங்களிற்கும் அவர் அழைக்கப்படலாம்.  அதே நேரம் அவர் அதற்கு மறுப்புத் தெரிவிக்கும் போது உடனே அவரைத் தமிழர்களுக்கு எதிரானவர் என்றும் முத்திரை குத்த சிலர் முயல்வர்.  இந்த உள் அரசியலில் தமிழர்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும்.  கனேடிய நாடாளுமன்றில் தமிழர் ஒருவர் அங்கம் வகிப்பது அவர் அங்கே எழுச்சிக் குரலெழுப்பி ஈழத்தமிழர் பிரச்சனையைத் தீர்த்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பில் அல்ல.  மாறாக, தமிழர்களின் வாக்குப் பலத்தையும், சமூகத்தில் அவர்கள் அரசியல் ரீதியில் தமிழர்கள் அடைகின்ற வலுவான நிலையையும் நிரூபித்தாவது எமது பிரச்சனைகளுக்கு புலம்பெயர் நாட்டு அரசாங்கங்களைக் குரலெழுப்ப வைப்பதற்காக..

(இது ஒரு கட்டுரையில் நிறைவடைகின்ற விடயம் மாத்திரமல்ல.  தொடர்ச்சியாக அக்கறை உள்ளோர் தங்கள் பார்வையில் புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும்  என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதுவதன் மூலம்  புலம்பெயர் நாடுகளின் அரசியலும், புலம்பெயர் தமிழர்களும் என்கிற தொடர்ச்சியான உரையாடல்களை சாத்தியப்படுத்தலாம்.  தொடர்வோம்.  பேசுவோம்.)

கனேடியத் தேர்தல்களும் தமிழ்விண்ணின் தில்லாலங்கடிகளும் மற்றும் ராகவன் பரஞ்சோதி

கனேடியத் தேர்தல்கள் சூடுபிடித்திருக்கின்ற இந்த நிலையில் ஏற்கனவே ஒரு முறை தமிழ் விண் (tamilwin.com) இந்தத் தேர்தல்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதில் செய்து வருகின்ற தகிடுதித்தங்கள் பற்றி முன்பொருமுறை முகப் பகக்த்தில் நண்பர்களுடன் நடைபெற்ற உரையாடல் ஒன்றில் கவனப்படுத்தி இருந்தேன்.  இன்று காலை மீண்டும் ஒரு முறை தமிழ் விண் தன் சாமர்த்தியத்தை / தகிடுதித்தத்தைக் காட்டியுள்ளது.

நேற்று மாலை கனேடியத் தமிழ் பேரவையும், சீன கனேடிய தேசிய கவுன்சிலும் அனைத்துக் கட்சி வேட்பாளர் விவாதம் ஒன்றுக்கு ஒழுங்குசெய்திருந்தது பற்றிய செய்தி ஒன்றை வெளியிட்டு, அந்த விவாதத்தில் இருந்து CMR, TVIயின் பணிப்பாளர் ராகவன் என்று பரவலாக அறியப்பட்ட, “கவன் பரஞ்சோதி” தனது அறிமுகம் நடந்து, கேள்வி நேரம் ஆரம்பமாகும் முன்னரே அரங்கை விட்டு வெளியேறியது பற்றிய செய்தி ஒன்றை இன்று காலை tamilwin.com தளத்தில் பார்க்கக்கூடியதாக இருந்தது.  இன்று மாலை அந்தச் செய்தி நீக்கப்பட்டிருக்கின்றது.  இதே நேரத்தில் இதே செய்தி இன்னமும் வேறு பல தளங்களில் காணப்படுவதுடன், google தளத்தில் தேடும்போது தமிழ்விண் தளத்தில் இந்த செய்தி காணப்பட்டமைக்கான தடம் மட்டுமே காணப்படுகின்றது.  அதற்கான இணைப்புகளை கீழே இணைத்துள்ளேன்.

  1. தமிழ் விண்ணில் செய்தி இருந்தமைக்கான தடம்.  http://tamilwin.org/view.php?22cIBB3035jQe4e2sGpLcb3T92Odd0W292bceXpG3e4bKQj402dLLcc2 (http://goo.gl/V5Ih7)
  2. கூகிளில் தேடியபோது இந்த செய்தியைப் பிரசுரித்த இதர தளங்கள் பற்றிய விபரங்கள்.  http://www.google.lk/#hl=ta&biw=1366&bih=667&q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&aq=f&aqi=&aql=&oq=&fp=1&cad=b  (http://goo.gl/xZXEi)


போர் தந்த பேரழிவுகளுக்குப் பின்னர் ஈழத்தமிழர் தம்மை அரசியல் ரீதியாகப் பலமாகக் கட்டியெழுப்பவேண்டிய அதி முக்கியமான ஒரு சூழ்நிலையில் கனேடியத் தேர்தல் வருகின்றது.  இந்தத் தேர்தலில் கனேடிய தற்போதைய ஆளுங்கட்சியான பழமைவாதக் கட்சி (conservative party of Canada) தயாரித்த விளம்பரம் ஒன்றில் Sun Sea கப்பலினைக் காட்டி “Canada wants to welcome those who want to build a better future; but our openness doesn’t extent to criminals to target Canadian generosity” என்று குறிப்பிட்டும் இருந்தனர்.  இது பற்றி முன்னர் ஒரு பதிவும் எழுதி இருந்தேன்.  பழமைவாதக் கட்சியினர் தமது நிலைப்பாட்டை மிக உறுதியாகவே தெரிவிக்கின்றனர்.  முன்னைய மாவீரர் தின விழாக்களில் ராகவன் கலந்துகொண்டது பற்றி கேள்வி எழுப்பியபோது ராகவன், தான் ஊடகவியலாளராக மாத்திரமே அந்த விழாக்களில் கலந்து கொண்டதாகவும், போரின் உச்சகாலங்களில் ரொரன்ரோவில் தொடர்ந்து நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டங்களிலும் கூட தான் ஊடகவியலாளராக மாத்திரமே கலந்து கொண்டதாகவும் கூறி இருந்தார்.  இது பற்றி Toronto star பத்திரிகையில் வெளிவந்த செய்திக் குறிப்பு, http://goo.gl/ZR3GT.   Globe and Mail ராகவனின் கருத்துக்களையும், அவரது பெயர் மாற்றம் பற்றியும் வெளியிட்ட செய்தி, http://goo.gl/PlJpo.

இதுவரைகாலமும் புலிகளை முன்னிறுத்தியே அரசியல் செய்து பிழைத்த ராகவன் போன்றவர்கள், இன்று ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக அளித்து வருகின்ற பேட்டிகள் நிச்சயமாகக் கவனிக்கப்படவேண்டியன.  தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து, “தமிழன் ” என்கிற அடையாளத்துடன் தன்னை முன்னிலைப்படுத்தி வருகின்ற ராகவனின் நிலைப்பாடு, அவர் சார்ந்திருக்கும் பழமைவாதக் கட்சி தயாரித்து விளம்பரம் தொடர்பாக எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்ச்சியாக இருக்கின்ற கேள்வி.  தொடர்ச்சியாக தமிழர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் அரசியலையே வெளிப்படுத்தும் பழமைவாதக் கட்சிக்கு, ராகவன் தமிழர் என்று புல்லரித்துப் போய் வாக்களித்தால் / வாக்களிக்கும்படி கோரினால் அது அபத்தத்தின் உச்சமாகவே முடியும்.

இதே நேரம், இதே தமிழ்விண் முன்னொருமுறை லிபரல் கட்சி தலைவர் மைக்கேல் இக்னாற்றியேவ் எழுதி இருந்த கட்டுரை ஒன்றில் விடுதலைப் புலிகளின் பெண் தற்கொலைப் போராளிகள் பற்றி பற்றி கேவலமாகக் குறிப்பிட்டிருந்த கட்டுரை ஒன்றினையும் குறிப்பிட்டு லிபரல் கட்சியை விமர்சித்து ஒரு கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தனர்.  அந்த செய்தி தமிழ்விண் தளத்தை விட்டு அகற்றப்பட்டதோடு, தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்த லிபரல் என்கிற இன்னொரு செய்தி பதிவேறி இருந்தது.  ஊடகத்துறையில் பிழைப்புவாதத்தின் உச்சத்தைத் தமிழ்விண் தொட்ட தருணம் அது.  அப்படித் தொடங்கிய பாதையில் இன்றுவரை வெற்றி நடைபோடுகின்றது.  கீழே இருக்கின்ற படத்தில் கூகிளில் தமிழ்விண் லிபரல் கட்சி தொடர்பாக வெளியிட்ட செய்தி வெளியிடப்பட்ட பின்னர் அளிக்கபப்ட்டதற்கான தடம் இருக்கின்றது

இதே செய்தி தொடர்பாக சங்கமம் என்கிற இணையத்தளம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பையும் பார்க்க http://goo.gl/Lhwux.

கொன்சர்வேடிவ் கட்சியினரின் தேர்தல் விளம்பரமும் கனேடியத் தமிழரின் மெத்தனமும்

கனேடிய பாராளுமன்ற தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை (கடந்த 7 ஆண்டுகளில் கனடா சந்திக்கின்ற 4வது பாராளுமன்ற தேர்தல் இது.  இந்த விடயத்தில் இந்தியா கூட கனடாவின் தற்போதைய நிலையை எண்ணிப் பெருமைப்படலாம்).  கனேடிய பாராளுமன்றத் தேர்தல்கள் வருகின்றா மே மாதம் 2ம் திகதி நடைபெற உள்ளன.  இந்தச் சூழ்நிலையில் Conservative Party of Canada அண்மையில் வெளியிட்ட தனது தேர்தல் விளம்பர வீடியோவைப் பார்க்க நேர்ந்தது.  அந்த விளம்பரத்தின் ஒளித்துண்டு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் கனடாவிற்கு 490 ஈழ அகதிகளுடன் வ்ந்து சேர்ந்த சன் சீ கபலின் படம் பின்னணியில் காட்டப்படும்போது “Canada wants to welcome those who want to build a better future; but our openness doesn’t extent to criminals to target Canadian generosity ” என்கிற பதம் பாவிக்கபப்டுகின்றது.  இது பற்றி எதிர்பார்த்த அல்லது வரவேண்டிய எந்த சலனமும் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வரவில்லை என்பது வேதனைக்குரியது.  Conservative party of Canadaவிடம் இருந்து இதை விட வேறொன்றையும் எதிபார்க்கமுடியாதுதான் என்றாலும், அதையே ஒரு காரணமாகச் சொல்லி சாதிக்கும் மௌனங்கள் நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்திச் செல்கின்றன.

இநத விளம்பரத்தைப்பார்த்ததும் இதில் Conservative கட்சியினர் தம்மைச் சட்ட ரீடியாகக் காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ஹ்டிருப்பார்கள் என்பது பற்றி நண்ப்ர் ஒருவரிடம் உரையாடினேன்.  அதே நேரம் இது பற்றி பொது வெளியில் கவனப்படுத்தவேண்டும் என்ற அக்கறை எனக்கு இருந்தது.  மறு நாள் இது பற்றி முகப்புத்தகத்தில் பகிர்ந்துவிட்டு, http://www.adstandards.com என்கிற அமைப்பினரிடம் கவனப்படுத்திவிட்டு (416 961 6311)அவர்கள் ஊடாக இதனை கனேடியத் தேர்தல் ஆணையத்திடமும் முறையிடலாம் என்று தெரிந்துகொண்டேன்.  அடுத்து கனேடியத் தமிழ் காங்கிரஸினரைத் தொடர்புகொண்டு இது பற்றி அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று கேட்டேன்.   அவர்கள் தாம் இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர் என்று கூறினர். கனேடியத் தமிழ் காங்கிரஸினரிடம் எனக்கிருக்கின்ற விமர்சனங்களில் ஒன்று அவர்கள் தமது இணையத்தளத்தை உடனுக்குடன் இற்றைப்படுத்துவதில்லை என்பதும், இது பொன்ற பொது விடயங்களில் தமது செயற்பாடுகளை வெளிப்படையாக முன்வைப்பதுமில்லை என்பதுமே.  மேற்படி சம்பவம் நடந்தபோதும் மார்ச் 8ற்குப்பின்னர் அவர்களது இணையத்தளம் இற்றைப்படுத்தப்படவில்லை.  அவர்களிடம் இந்த விளம்பரம் பற்றியும் இது பற்றி எவ்விதம் முறையிடலாம் என்றும் அவர்கள் இணையத்தளத்தில் ஒரு பதிவொன்றினை விளியிடும்படிக் கேட்டுக்கொண்டேன்.  அவர்கள் ஒப்புக்கொண்ட போதும் இன்றுவரை அது நடைபெறவில்லை.  இது போன்ற விடயங்களில் CTCயினர் போதிய கவனம் எடுப்பது அவசியம் என்றே நினைக்கிறேன்.  தமிழ்த் தேசியப் போராட்டங்களில் சமூக வலைத்தளங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்படவில்லை என்றே நினைக்கிறேன்.   நடைபெறப்போகின்ற கனேடியத் தேர்தல்களை தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ள உள்ளனர் என்கிற கேள்வி இருக்கின்றது.  அது பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள முதல் இந்த விளம்பரம் பற்றிய முறைப்பாடுகளை

Commissioner of Canada Elections
c/o Elections Canada
257 Slater Street
Ottawa, Ontario
K1A 0M6
Fax: 1-800-663-4908
E-mail: commissionersoffice@elections.ca

என்கிற முகவரிகள் மற்றும் தொலைநகல் இலக்கங்களூடாக மேற்கொள்ளலாம்.  எனது பங்கிற்கு நான் ஒரு முறைபாட்டைச் செய்து அது கிடைக்கப்பெற்றது என்று தேர்தல் ஆணையத்தினரின் மறுமொழியையும் பெற்றுள்ளேன்.  இவ்வாறு முறைபாடு செய்வதை கனடாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் உடனடியாகச் செய்யவேண்டிய தேவை இருக்கின்றது.

நன்றிகள்:கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட + எனது வேலைப்பளுவின் போது முறைப்பாட்டுக கடிதம் ஒன்றை வடிவமைப்பதில் உதவிய நண்பருக்கு