செழியனின் நூல் மற்றும் காலம் இதழ் வெளியீடு

கவிதைகள் கருத்தரங்கு – சில கருத்துக்கள்

-1-
வாழும் தமிழ் என்ற பெயரில் காலம் சஞ்சிகை தொடர்ச்சியாக நடத்தும் நிகழ்வுகளின் வரிசையில் இன்று நடைபெற்ற கவிதைகள் பற்றிய கருத்தரங்கத்திலும், புத்தகக் கண்காட்சியிலும் கலந்துகொண்டேன்.    காலம் சஞ்சிகை மற்றும் காலம் செல்வம் பற்றிய விமர்சனங்கள் காலத்துக்குக் காலம் பலராலும் வைக்கப்பட்டாலும், காலம் புலம் பெயர் சூழலில் காலம் மிக முக்கியமான ஒரு இடத்தை தனக்கென நிலை நாட்டியே இருக்கின்றது.   1990 ஜூலையில் தனது முதலாவது இதழை வெளிட்ட காலம் கடந்த 20 ஆண்டுகளில் 35 இதழ்களை வெளியிட்டதுடன், தொடர்ச்சியாக பல புத்தக கண்காட்சிகளை நடத்தியும், இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைத்தும் தன் பணிகளைத் தொடர்ந்திருக்கின்றது.  
அண்மையில் பதிவுகள் இணையத் தளத்தில் காலம் செல்வம் புத்தக விலைகளை வியாபார நோக்குடன் நிர்ணயிக்கிறார் என்ற ஒரு குற்றச் சாற்றை முன்வைத்திருந்தனர்.  கனடாவில் இலக்கிய வாசகர்கள் அனேகம் பேர் காலம் ஒருங்கிணைக்கின்ற புத்தகக் கண்காட்சிகளுக்கு நிச்சயம் சென்றிருப்பர்.  பலர் அவர் வீட்டுக்கே போய் புத்தகங்களை வாங்கி இருக்கவும் கூடும்.  அங்கே அவர் எத்தனை புத்தகங்களை விற்பதற்காக வாங்கி இன்றுவரை விற்கப்படாமல் அவரிடமே தங்கி இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்கத்தானே வேண்டும்.  பெட்டி பெட்டிகளாகவும், ராக்கை ராக்கைகளாகவும் விற்கப்படாமல் தேங்கி இருக்கின்ற புத்தகங்களை நானே அவதானித்து இருக்கின்றேன்.  தொடர்ச்சியாக விற்கப்படாமல் தேங்கி நிற்கும் புத்தகங்களை பின்னர் ஒரு புத்தகம் ஒரு டொலர் என்று விற்றுத் தள்ளுவதையும், அதில் கூட பேரம் பேசுபவர்களையும் நான் கவனித்தே வருகிறேன்.  இந்தச் சூழலில் எந்த அறங்களின் அடிப்படையில் காலம் மீதான குற்றச் சாற்றுகள் வைக்கப்படுகின்றன என்று தெரியவில்லை.  தவிர, காலம் செல்வம் ஒன்றும் கனடாவில் தமிழ்ப் புத்தகங்கள் விற்பதற்கான ஏக அனுமதி பெற்றவரும் இல்லை, எனவே அவர் மீது குற்றச் சாற்றுகளை அள்ளி இறைப்பவர்கள் ஏன் தாமே ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கமைத்து ‘எந்த வியாபாரத்தனமும்’ இல்லாது நியாய விலைக்கு புத்தகங்களை விற்காமல் காலம் செல்வம் மீதான அவதூறுகளை மாத்திரம் கூஉறி வருகின்றனர் என்பதும் அவ்வாறு புத்தகம் விற்க அவர்கள் எடுத்த முயற்சிகளை ஏன் கைவிட்டனர் என்பதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே இருப்பர்.  
புத்தகங்களை நாம் நமக்குள்ளேயே பகிர்ந்து வாசிப்பதன் மூலம் காலம் செல்வம் ஊடாக விற்கப்படுகின்ற புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும் என்று இப்ப புதிதாக ஒரு சாரார் கூறத் தொடங்கி உள்ளனர்.   இது போன்றவர்கள் தாம் நாம் இலக்கியச் சூழலில் அவதானமாக இருக்கவேண்டிய நச்சுச் சக்திகள்.  இவர்களிடம் இருப்பது காழ்ப்புணர்வு தவிர வேறொன்றுமில்லை.  புத்தகங்களை விலை கொடுத்து வாங்கிப் படிக்கும் வழக்கம் தமிழர்களிடம் மிக அரிதாகவே காணப்படுகின்றது.  அதையும் முடமாக்க முயலும் இவர்களை என்ன சொல்லித் திட்டுவது?  தமிழ் இலக்கியங்களை உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து விமர்சனங்களையும், விசனங்களையும் முன்வைக்கும்போது முழு நேர எழுத்தாளனென்று ஒருவன் தன்னை நிர்ணயித்துக்கொள்ளும் சூழல் தமிழில் இல்லாமல் இருக்கின்றது என்பதையும் அவதானித்தே பார்க்கவேண்டும்.  தவிர இணையம் ஊடாக புத்தங்களை வாங்கலாம் என்றபோதும், சிறிய, புதிய பதிப்பகங்களின் புத்தகங்களை இணையம் ஊடாக வாங்க எவரும் முன்வருவதில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.  எனக்குத் தெரிந்து 90களின் மத்தியில் ரொரன்றோவில் 5 புத்தகக் கடைகள் இருந்தன.  இன்று 2 புத்தகக் கடைகள் மாத்திரமே இருக்கின்றன.     அதிலும் ஒரு கடையில் இருந்த புத்தகங்களை மாத்திரமே வைத்து விற்கின்றனர்.  புதிதாக புத்தகங்கள் எடுப்பது (விகடன் பிரசுரங்கள் தவிர்த்து) இல்லை அல்லது மிக மிகக் குறைவு.  இந்தச் சூழலில் காலம் மீதான ஆலாசனைகளையும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் செய்வதைத் தவிர்த்து, புரளி கிளப்புவதும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் எந்த விதத்திலும் ஆக்க பூர்வமாக மாட்டா.
-2-
இன்றைய கவிதை பற்றிய கருத்தரங்கு சேரன் தலமையில் நடைபெற்றது.  முதலில் இசைத் தமிழ் என்ற தலைப்பில் வி. கந்தவனம் உரையாற்றினார்.  இதற்கு சில வாரங்களின் முன்னர் நண்பர்கள் இணைந்து கவிதைகள் பற்றிய திறந்த வெளி கல்ந்துரையாடல் ஒன்றை ஒழுங்கமைத்திருந்தோம். அதில் செல்வம் பேசும்போது கவிதை எழுத வருபவர்கள் கட்டாயம் கம்பனைப் படிக்கவேண்டும் என்றும், பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயம் எமது மொழி ஆளுமையை அதிகரிக்கும் என்றும் கூறியிருந்தார்.  கிட்டத்தட்ட அதன் தொடர்ச்சியாகவே இன்றைய கந்தவனத்தின் பேச்சும் இருந்தபோதும், செல்வம் – கந்தவனத்தின் நவீன / தற்கால இலக்கிய வாசிப்பு பற்றிய வேறுபாடு இங்கே முக்கியமானதாக இருக்கின்றது.  செல்வம் தொடர்ந்து சமகால இலக்கியங்களைப் படித்தே வருகிறார்.  தவிர பழந்தமிழ் பாடல்கள் முதல் நிறைய கவிதைகளை நினைத்த மாத்திரத்தில் வரி பிசகாமல் மேற்கோள் காட்டும் திறனும் படைத்தவர்.  ஆனால் கந்தவனத்தின் வாசிப்பு பற்றிய விவரணம் பரிதாபகரமானதாகவே இருக்கின்றது.  தன்னுடைய பேச்சில் ஒரு பொழுதில் அவர் கூறுகிறார், “இன்று புதுக்கவிதை எழுதுவதிலே உச்சத்தில் இருக்கின்ற வைரமுத்து கூட மரபுக் கவிதை எழுதுவதில் பயிற்சி பெற்றவர்” என்று.  இந்த ஒன்றை வைத்தே நாம் கந்தவனம் இன்னமும் 80களின் தொடக்கத்தை விட்டு வெளியே வரவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம். 
கந்தவனம் தன் பேச்சில் கம்பனின் மற்றும் பழந்தமிழ்ப் பாடல்களில் இருந்த ஓசைநயம் பற்றியும்,  கம்பன் பாடல்களில் அநதப் பாடல்கள் வருகின்ற சூழலிற்கும், பாடலைப் பாடும்போது வருகின்ற ஓசைக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் இது போன்ற இலக்கியச் சுவைகளைத் தாண்டி அவரது பேச்சில் நிறைய இடங்கள் ஏமாற்றத்தையே தந்தன.  வைரமுத்து ஆரம்பகாலப் பாடல்களில் மரபுப் பாடல்கள் இல்லாமல், ஓசை நயம் பற்றிய அக்கறை இல்லாமலே ஆனால் கவிதை நயத்துடன் எழுதினாரென்று என்று கூறி மண்வாசனை படப் பாடல்களை சிலாகித்த பின்னர், வைரமுத்து ரகுமானுடன் சேர்ந்து கொண்ட பின்னர் ஓசை நயத்துடன் எழுதத் தொடங்கினாரென்றும் குறிப்பிட்டார்.  ஆனால் இவர் குறிப்பிட்ட மண்வாசனை படத்தில் தான் வைரமுத்து எழுதி மிகப் புகழ்பெற்ற “பொத்தி வச்ச மல்லிகை மொட்டு” பாடல் இரண்டு வடிவங்களிலும் (காதல் பாடல், பிரிவைச் சொல்லும் பாடல்) உள்ளது.  இந்தப் பாடலில் கந்தவனம் குறிப்பிட்ட ஓசைநயம் இல்லையா?.  அதன் பின்னர் சொன்னார், வாலியை எல்லாம் குறைத்து மதிப்பிட முடியாது.  புதுக் கவிஞர்களில் அவர் முக்கியமானவர்.  காப்பியங்களை எல்லாம் அவர் புதுக் கவிதையில் எழுதி இருக்கிறார் என்று.  வாலி எழுதிய பாண்டவர் பூமி. அவதார புருஷன் என்பன நல்ல முயற்சிகள் என்பதை நான் மறுக்கவில்லை.  ஆனால் இவற்றை அடிப்படையாக வைத்து வாலியை முக்கியமான ஒரு புதுக்கவிஞர் என்று ஒருவர் 2010லே அதுவும் ஒரு சிறப்புப் பேச்சாளர் கூறுவதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.  தவிர சேரன் அவைத்தலைவராக உள்ள அவையிலேயே, அதுவும் சேரனுக்கு அருகில் இருந்தபடியே தன் உரையை ஆற்றிய கந்தவனம், மரபுக் கவிதைகளிலோ அல்லது சேரன் கவிதைகளிலோ என்று சொல்லி நிறுத்தி விட்டு, புதுக்கவிதைகள் என்று குறிப்பிட்டால் என்ன, சேரன் கவிதைகள் என்றால் என்ன இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னது ஆபாசத்தின் உச்சம்.  சேரனுக்குக் கூட அது விரசமான ஒரு கணமாகவே இருந்திருக்கும்.  அந்தக் கணத்தில் தமிழ்நாட்டில் கவியரங்கம் என்ற பெயரில் வாலி, வைரமுத்து, அப்துல் ரகுமான், பா. விஜய் போன்றோர் கருணாநிதிக்கு காக்கா பிடிப்பதன் சாயல் வெளிப்படையாகவே தெரிந்தது.  
இதன் பின்னர் ஒரு பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு தன் பேச்சினை கந்தவனம் நிறைவு செய்யவும் கேள்வி நேரம் ஆரம்பமானது.   “தமிழ் இலக்கணப் பயிற்சியும், மரபுக் கவிதை எழுதுவது பற்றிய அறிவும் கவிதை எழுதுபவர்களுக்கு முக்கியம், அப்படி இல்லாமல் எழுத வருபவர்கள் அவர்கள் படைப்பை மாத்திரம் அல்ல, அந்தச் சூழலையே நாசம் செய்துவிடுகின்றனர்” என்ற சாரத்துடன் பேசிய கந்தவனத்திடம் தர்ஷன், கந்தவனம் மேலே சொன்ன எல்லா வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்ட சூழல்களில் இருந்து வரும் விளிம்புநிலை மனிதர்கள் தாம் வழமையாக உபயோகிக்கும் மொழியுடனேயே படைப்பிலக்கியத்தில் ஈடுபடுகின்றனர். அவற்றை கந்தவனம் எவ்வாறு பார்க்கின்றார் என்று கேள்வி எழுப்பினார்.  துரதிஸ்டவசமாக கந்தவனத்துக்கு அந்த கேள்வி என்னவென்றே புரியவில்லை.  தான் மலையக மக்களுக்கு அவர்கள் மொழியிலேயே கூட கவிதை எழுதி வாசித்துக் காட்டியதாயும், (விளிம்புநிலை மனிதர்கள் என்றவுடன் மலையக மக்களே கந்தவனத்துக்கு நினைவு வருகின்றா அளாவு இருக்கின்றது கந்தவனத்தில் சமூகப் பிரக்ஞை) எல்லா மக்களுக்கும் விளங்கக் கூடியவாறு கூட தான் கவிதைகள் எழுதி இருப்பதாயும், திருக்குறளில் இருக்க்கும் எளிமையான சொற்கள் நவீன கவிதைகளில் கூட இல்லை என்றும் சொன்னார்.  அதன் பின்னர் என். கே. மகாலிங்கம் கேட்ட வேறு ஒரு கேள்வியைத் தொடர்ந்து சேனா, தர்ஷன் கேட்ட கேள்வியைக் கந்தவனம் தவறாகப் புரிந்து கொண்டதைச் சுட்டிக் காட்டி, விளிம்புநிலை மனிதர்கள் எழுதும் படைப்புகளை கந்தவனம் எவ்வாறு புரிந்து கொள்கிறார் என்று கேட்டார்.  ஆனால் கந்தவனம் போன்றவர்களிடம் இருந்து இது போன்ற கேள்விகளுக்கு எவ்வாறான பதில்கள் கிடைக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது.  “நான் கவிதை எழுதுவது எப்படி என்று உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன், அவருக்கு இந்த சந்தேகம் வந்ததென்றால் நான் இது வரை சொன்னது எதுவுமே அவருக்கு விளங்கவில்லை என்று அர்த்தம் , i thought this is an intelligent crowd’ என்று சொல்லிஅரங்கை விட்டு விலகினார் கந்தவனம்.   வேறு ஒரு நிகழ்வுக்குத் தான் செல்லவேண்டும் என்று அவர் ஏற்கனவே சொல்லித்தான் இருந்தார்.  ஆனால் தர்ஷன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாத கந்தவனம் பின்னர் அதே கேள்வியை சேனா கேட்ட போது சில நிமிடங்கள் மாத்திரமே எடுத்து தன் பதிலை சொல்லி இருக்கலாம், அல்லது பதில் தெரியவில்லை என்றாவது ஒப்புக் கொண்டிருக்கலாம்.  ஆனால், தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக நினைத்து கந்தவனம் செய்த செயல்களும், , i thought this is an intelligent crowd என்ற திமிரில் தோய்ந்த வார்த்தைகளும் முழுக்க முழுக்க அயோக்கியத்தனம்; அப்படி இல்லை எனும் பட்சத்தில் அறியாமை.  எனது கேள்வி எல்லாம் இது போன்ற இடங்களில் ஏன் இவரை எல்லாம் பேச அழைக்கின்றனர் என்பது தான்.  இவர் பேசிய அதே அவையிலேயே தம்மை தம் கவிதைகளால் நிலை நாட்டிய சேரன், செழியன், மு. புஷ்பராஜன், திருமாவளவன் போன்றோர்கள் இருந்தனர்.  நான் கவிதை எழுதுவது எப்படி என்று உங்களுக்கெல்லாம் சொல்லித் தந்திருக்கிறேன் என்ற கந்தவனத்தின் திமிர் தோய்ந்த வார்த்தைகள் இவர்களுக்கெல்லாம் அவ மரியாதை இல்லையா? ஏற்கனவே ஒரு இடத்தில் தன்னிடம் கேள்வி கேட்ட ஒருவரிடம் அந்தக் கேள்விக்கான பதிலையோ அல்லது விளக்கத்தையோ சொல்லாமல், நான் ஒரு மலை என்னிடம் மோதினால் நீதான் நொறுங்கிப் போவாய் என்று இதே கந்தவனம் பஞ்ச் டயலாக் ஒன்றைச் சொன்னதை நான் அவதானித்து இருக்கிறேன்.  இன்றைய கந்தவனத்தின் ஒட்டுமொத்த செயல்களும் கந்தவனம் மீதான் என் கணிப்பை மீளவும் உறுதி செய்திருக்கின்றன.  ஆனால் கவிதை பற்றிய கருத்தரங்கம் ஒன்றின் தலைமைப் பேச்சாளராக கந்தவனத்தை அழைத்த காலம் செல்வத்துக்கு இது ஒரு தோல்வியே.
-3-
நிகழ்வின் இன்னொரு பேச்சாளராக கலாநிதி. நா. சுப்ரமண்யன், “தமிழில் புதுக்கவிதை ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வாசித்தார்.  ஆராய்ச்சி அடிப்படையிலான ஒரு கட்டுரையாக அவரது கட்டுரை அமைந்த போதும், அவரே சொன்னது போல தற்கால எழுத்துக்களை வாசிக்காத, அவற்றுடன் பரிச்சயம் இல்லாத அவர் அவர் கட்டுரை கூட பூரணமில்லாததாகவே இருந்தது.  தன் கட்டுரை வாசிப்பினிடையே ஓரிடத்தில் கடந்த 15 வருட கவிதைகள் பற்றிய பரிச்சயம் தனக்கில்லை என்பதை சுப்ரமண்யன் குறிப்பிட்டார்.  15 வருடம் என்பது தமிழ்க் கவிதை உலகில் மிகப்பெரிய மாறுதல்களை உள்ளடக்கிய காலப்பகுதி.  அப்படி இருக்கும்போது அந்தப் 15 வருட வாசிப்புகளை உள்ளடக்காத சுப்ரமண்யனின் கட்டுரை ஆறின கஞ்சியாகவே இருந்தது.  ரமேஷ்-பிரேம் என்கிற கவிஞர்கள், விமர்சகர்கள் கவிதை பற்றி இவ்வாறு சொல்லி இருக்கிறார்கள்என்று சில கருத்துக்களை தன் கட்டுரையை வாசிக்கத் தொடங்கும்போது சுப்ரமண்யன் சொன்னார்.  ஐயா, ரமேஷ்-பிரேமை எல்லாம் கவிஞர்கள் – விமர்சகர்கள் என்று அறிமுகம் செய்துவைத்து கட்டுரை வாசிக்கின்ற அளவுக்கு அந்த மேடையில் யாரும் இருக்கவில்லை.
கவிதை பற்றிய கருத்தரங்கம் என்கிற இந்த முயற்சி முக்கியமானது.  அது போலவே, மரபு இலக்கியப் பயிற்சி, பழந்தமிழ்ப் பாடல்களின் பரிச்சயம் போன்றவை ஒரு படைப்பாளிக்கு எந்த அளவுக்கு முக்கியமானவை என்கிற வாதங்களும் நிச்சயம் தேவை.  ஆனால் பேசிய இரண்டு பேச்சாளர்களுமே நவீன கவிதைகள், சமகால இலக்கியம் பற்றிய எதுவித வாசிப்பும் இல்லாமல் இருந்தது “கவிதை கருத்தரங்கம்” என்ற நிகழ்ச்சித் தலைப்புக்துப் பொருத்தமில்லாததாகவே அமைந்தது.
-4-
நிகழ்வின் இன்னோர் அங்கமாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பின்வரும் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டேன்
  1. ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் – ஆ. சிவசுப்ரமணியன் (காலச்சுவடு)
  2. தாத்தாவும் பேரனும் – ராபர்ட் ஸி. ரூவர்க்;  தமிழாக்கம் – வல்லிக்கண்ணன் (சந்தியா)
  3. பாஸ்கரபட்டேலரும் என் வாழ்க்கையும் – சக்கரியா’ தமிழாக்கம் – சுரா (சந்தியா)
  4. சுயம்வரம் – தொகுப்பு மீரா (அன்னம் வெளியீடு)
  5. கதிரேசன் செட்டியாரின் காதல் – மா. கிருஷ்ணன் (மதுரை பிரஸ்)
  6. திராவிடச் சான்று (எல்லீஸும் திராவிட மொழிகளும் – தாமஸ் டிரவுட்மன் (காலச்சுவடு)
  7. பேரினவாதத்தின் ராஜா – டி. அருள் எழிலன் (புலம்)