கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட்

bradmanகிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்களில் ஒன்று.  விளையாட்டுக்களில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனாகிய நான் கிரிக்கெட்டை மட்டும் வாழ்வு ஏற்படுத்திய எந்த சலிப்புகளின்போதும் கூட இடைவிடாது தொடர்ந்தே வந்தேன்.  யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் இருக்கின்றபோது இராணுவம் கொடிகாமம் நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த ஏப்ரல் 19, 1996 அன்று கூட கடுமையாக ஷெல் தாக்குதல்கள் எமது வீட்டுக்கு ஒரளவு அருகாமையில் விழுந்துகொண்டிருந்த போதும் கடுமையான பயத்துடனும் கூட அன்று ஷார்ஜாவில் இடம்பெற்றுக்கொண்டிருந்த இந்தியாவிற்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இறுதிப்போட்டியின் வர்ணனையைக் கேட்டபடியே இருந்தேன் என்பது இப்போதும் நினைவில் இருக்கின்றது.  Continue reading

சென்று வாருங்கள் ஹைடன்

எம் பதின்ம வயதின் ஆதர்சங்கள் எல்லாம் படிபடியாக விடைபெறும் காலம் என்று முன்பொருமுறை ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி மன்னன் மத்யூ ஹைடனும் இணைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய அணியினருடனான டெஸ்ட் போட்டிகளின் பின்னர் அவரது துடுப்பாட்டம் சோபிக்காததாலும், அவரது ஆரம்ப துடுப்பாட்டக்காரர் என்ற இடத்தில் ஆடக்கூடியவர்களான பில் ஜாக்கஸ் மற்றும் மைக்கேல் கடிச் ஆகியோர் சிறப்பான முறையில் ஆடிவரும் நிலையிலும் இவரது ஓய்வு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் தனது அதிரடி ஆட்டங்கள் மூலமாக ரசிகர்கள் இடையே மிகுந்த ஆதரவை பெற்றிருந்த இவரது ஓய்வு ரசிகர்களுக்கு இழப்புத்தான்.

அண்மையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவுடனான் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தோல்வியடந்த்போது இவரது மோசமான ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதலாவது விக்கட் விரைவிலேயே இழக்கப்படுவதால் அது அடுத்துவரும் ஆட்டக்காரர்களின்மீது பெரும் அழுத்தத்தை தரும். இப்படியிருக்கும்போது இந்தியாவுடனான் தொடரில் இவர் இரண்டு ஆட்டங்களில் முதலாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட்டின்போதே இவர் உடனடியாக ஓய்வு பெறாவேண்டும் என்ற குரல் உரக்க தொடங்கியது. இந்த நிலையில் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் மற்றும் 20/20 போட்டிகளில் இவரது பெயர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அடுத்துவரும் டெஸ்ட் ஆட்டங்களில் கூட இவர் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற எதுவிதமான உறுதியான தகவல்களும் தரப்படவில்லை. அவர் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு தன் திறமையை நிரூபிக்கவேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 13, 2008) இல் இவர் தான் அனைத்துவித கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள இரண்டாவது 20/20 போட்டியின் இடைவேளையின்போது இவர் ரசிகர்கள் மத்தியில் தோன்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1994ல் ஜோஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற ஆட்டதுடன் தன் டெஸ்ட் வாழ்வை தொடங்கிய இவரது டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 103 ஆட்டங்களில் 30 நூறூகள், 29 அரைசதங்கள் உட்பட 8625 ரன்களை 50।73 என்ற ச்ராசரியில் பெற்றுள்ளார். இதில் அதிகபட்சமாக ஸிம்பாப்வேயுடன் பெற்ற 380 ஓட்டம் இருக்கின்றது.

அதேபோல 1993 முதல் 2008 வரை 161 ஒருநாள் ஆட்டங்களில் 6133 ஓட்டங்களை பெற்றுளார். அதில் 10 சதங்களும் 36 அரை சதங்களும் அடங்கும். ஓட்ட சராசரி 43. 8. ஸ்ட்ரைக் ரேட் 76

இவரது ஸ்ட்ரைக் ரேட், சராசரி போன்றவையோ அல்லது தனிப்பட்ட சாதனைகளோ இவர் காலத்திலேயே கோலோச்சிய சச்சின், ட்ராவிட், ஜயசூரியா, லாரா, இன்ஸமாம் போன்ற இதர நாடுவீரர்களுடன் ஒப்பிடும்போது ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் இவர் தொடர்ச்சியாக வெற்றிகளையே சுவைத்துவந்த ஒரு அணியில் அதன் வெற்றிகளிற்கான ஒரு தூணாக நெடுங்காலம் இருந்துவந்தார். உதாரணமாக கடந்த உலககோப்பை தொடர் முழுவது இவர் ஆடிய ருத்திர தாண்டவம். தொடர் முழுவது மூன்று சதங்களை அடித்ததுடன் இறுதிப்போட்டியில் கூட கில்க்ரஸ்ட் உடன் இணைந்து ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்தபின்னர் தான் விடைபெற்றார்.

அதுபோல, இவரது குறிப்பிடு சொல்லக்கூடிய இன்னொரு சாதனை 95ல் லாரா அமைத்த உலகசாதனையை முறியடித்து இவர் 2004ல் ஸிம்பாப்வே அணியுடன் அடித்த 380 ஓட்டங்கள். அந்த ஆட்டத்தில் வெறும் 437 பந்துகளிலேயே 380 ஓட்டங்களை 11 ஆறுகள் மற்றும் 38 நான்குகளுடன் பெற்றார். (இதனை லாரா வாழ்த்தி ஏற்றுக்கொண்டதுடன் அடுத்த ஆண்டே இவரது சாதனையை முறியடித்து 400 ஓட்டங்களை பெற்றார். ஆனால் அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா வழமைபோல லாராவின் சாதனையில் அது சொத்தை இது நொள்ளை என்று புலம்பியது.)

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஷேன் வார்ண், மக்ராத், லங்கர், டேமியன் மார்ட்டின், ஸ்டூவர்ட் மக்கில், இப்போது ஹைடன் என்று தனது பெருன் தூண்களை எல்லாம் இழந்து வருகின்றது ஆஸ்திரேலியா. இவரது வெளியேற்றம் எப்படி ஆஸ்திரேலிய அணியை பாதிக்கப்போகின்றது? கொஞ்சம் பொறுத்திருந்த் பார்ப்போம்.

அதுவரை இவர் பற்றி மேலதிக தகவல்களை கிரிக் இன்ஃபோ தளத்தில் பெற்றுக்கொள்ள இங்கே சுட்டுங்கள்

கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள்

பொதுவாக எந்த ஒரு விடயத்திலும் ஏகப் பிரதிநிதித்துவம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அதிலும் கலைகள், விளையாட்டுத்துறைகளில் ஏற்படுகின்ற ஏகப்பிரதிநிதித்துவம் அந்த துறைகளின் வளர்ச்சியை முற்றாக ஸ்தம்பிக்க செய்துவிடும் என்பது என் நம்பிக்கை. மேலும், ஏகப்பிரதிநிதித்துவம் எல்லா மாற்று முயற்சிகளையும் தன் ராட்சச கரங்களால் நசுக்கி விடுகின்றது என்பதும், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற நளவெண்பா காலத்து சொல்லாடலுடன் அந்த துறைகளை நிறுத்தி விடும் என்பதும் எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். ஒரு துறை இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்று அந்த துறையில் பலர் உச்ச கட்ட புகழுடன் / வெற்றிகளுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது எனது கருத்து.

கிரிகெட்டில் முடிசூடா மன்னர்களாக கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாறி மாறி திகழ்ந்த மேற்கிந்திய, அவுஸ்திரேலிய அணிகள் அடிக்கடி (முன்பு மேற்கிந்தியா இருந்தது, இப்போது அவுஸ்திரேலேயா மட்டுமே) எதிர் அணிகளால் சோதனைக்குள்ளாக்கப்படுவது கிரிக்கெட் ஆரோக்கியமான வளார்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. இந்தியாவுடன் டெஸ்ட் தொடரிலும், சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மும்முனை தொடரிலும், தற்போது தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விகள் அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி என்பதாகவே கருதப்படவேண்டும். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற அளவில் இருந்த அணி அவுஸ்திரேலிய அணி. இதற்கு சரியான உதாரணம் 1994-95ல் நடைபெற்ற ஒரு ஒரு நாள் தொடர். ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டி தொடர் ஒன்று நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 3 / 4 போட்டிகளில் ஆடி இறுதி போட்டியில் நுழையும். 94-95ல் அவுஸ்திரேலியா இந்த தொடரில் இங்கிலாந்து, ஸிம்பாப்வே அணிகளுடன் நான்காவது அணியாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணியையும் (Australia – A) நுழைத்தது. இதில் எல்லார் புருவங்களும் உயரும்படி இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியாவுடன் மோத அவுஸ்திரேலிய இரண்டாவது அணி தெரிவானது. அதாவது, ஏற்கனவே டெஸ்ட் அந்தஸ்து பெற்ற இரண்டு அணிகளைவிட வலிமையாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணி இருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலிய அணியின் தூண்களாக இருந்த மத்யூ ஹைடன், க்ரேக் ப்ளீவட், ரிக்கி பொண்டிங், மைக்கேள் பவான் போன்றவர்கள் அதன் இரண்டாவது அணியில் ஆடினார்கள். இந்த இறுதி போட்டி ஐ சி சி யால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் பின்னர் அவுஸ்திரேலியா இப்படியான முயற்சியையும் செய்யவில்லை. 1992ல் மேற்கிந்திய அணியின் மாபெரும் வீரர்களான ரிச்சர்ட்ஸ், மார்ஷல், க்ரீனிட்ஜ், டுஜோன் போன்றவர்கள் ஒரேயடியாக ஓய்வுபெற, அவுஸ்திரேலியா மெல்ல மெல்ல ஆதிக்கம் பெற்றது. அதே நேரம் ஷான் வார்ணின் வருகையும் அமைய, ஏற்கனவே வேகப்பந்து வீச்சில் புகழ்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி ஒரு முழுமையான அணியாக உருவெடுத்தது. ஒரு அணியில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஒரு சுழல் பந்து வீச்சாளார் தன்னும் இருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி. உலகில் அசைக்க முடியாத அணியாக மேற்கிந்தியா உருவெடுத்த 70களில் அவ்வணி தலைவர் க்ளைவ் லோயிட் “சந்திரசேகர் போன்ற ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டும் இருந்தால் எம்மை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னது குறிப்பிடத்தக்கது. ஷான் வார்ணின் மாய விரல்களில் சிக்கி தவித்த பாட்ஸ்மன்களை பற்றி கதை கதையாக சொல்லலாம். ஒரு சுழல் பந்து வீச்சாளனின் எல்லா சாத்தியங்களையும் செய்து காட்டியவர் அவர். விக்கெட்களின் எண்ணிக்கையில் முரளி அவரை தாண்டி போனாலும், அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகளில் சுழல் பந்து கைகொடுக்காத மைதானங்களில் ஷான் வார்ண் பந்து வீசினார் என்பதை கவனித்து கொள்ளவேண்டும். அந்த நாட்களில் எல்லாம் பந்து எகிறும் அவுஸ்திரேலிய பிட்ச் என்றாலே பாட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனம்தான். மைதானத்தில் கரணமடித்தும், வழுக்கி சென்றும் அவர்கள் செய்யும் களத்தடுப்பை ஒரு அதிசயம் போலதான் மற்ற அணிகள் பார்த்துக்கொண்டிருந்தன.

இதன் பின்னர் தென்னாபிரிக்காவின் வருகையுடன் எல்லா அணியினரும் களத்தடுப்பிலும், பல்துறை ஆட்டக்காரர்களை அணியில் அதிகம் இணைப்பதிலும் கவனம் செலுத்த தொடங்க கிரிக்கெட் நவீனப்படுத்தப்பட்டது. பாட்ஸ்மன், பந்து வீச்சாளார் என்றில்லாமல் களத்தடுப்பு என்ற வகையிலும் வீரர்கள் ரசிக்கப்பட்டனர். பாட்டிங்கை பொறுத்தவரை ஒரு சராசரி வீரரான ரோட்ஸ் ஒரு நட்சத்திர வீரராக மதிக்கப்பட்டார். இந்திய அணி பல ஆட்டங்களில் ரொபின் சிங்கை சேர்த்துக்கொண்டது. தனது மெதுவான துடுப்பாட்டத்தை தாண்டியும் ரொஷன் மகனாம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சித்து, லக்‌ஷ்மண் போன்ற இந்திய வீரர்கள் அணியை விட்டு ஓரங்கட்டப்பட அவர்களின் மோசமான களத்தடுப்பும் உடல் தகுதியும் காரணாங்களாக காட்டப்பட்டன இதே சமயம் அணிகள் வேற்று நாட்டவரை சேர்ந்தவரை பயிற்றுவிப்பாளாராக கொண்டுவர தொடங்க, ஆசிய அணிவீரர்களுக்கு மற்ற அணிவீரர்களின் மனநிலை கற்றுத்தரப்பட்டது. இதே காலப்பகுதியில் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் உலகம் முழுவதும் ஏற்பட்ட ஆர்வம் இந்திய, இலங்கை அணி வீரர்களிலும் பிரதிபலித்தது. அவ்ஸ்திரேலிய, தென்னாபிரிக்க வீரர்கள் போல இவர்களும் வேகமான உடல் இயக்கங்கள் மூலம் களத்தடுப்பில் சில ஆச்சரியங்களை ஏற்படுத்தினர். முக்கியமாக டில்ஷான், முரளிதரன், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரய்னா, கைஃப் போன்றாவர்கள். உலகமயமாக்கல் என்கிற பலத்த கேள்விகளுக்குள்ளான ஒரு இயல்பினால் வந்த ஒரு சாதகமான நிலை எல்லா நாட்டு இளைஞர்களும் கிட்ட தட்ட ஒரே மனநிலைக்கு கொண்டுவரப்பட்டனர். எல்லாவற்றுடன் சமரசம் செய்துகொள்வது என்ற தென்னாசிய மனநிலையை விட்டு இளைஞர்கள் வெளிவந்து எதையும் ஒரு சவாலாக, போராட்ட மனப்பாங்குடன் எதிர்கொள்ள தொடங்க கிரிக்கெட்டின் தீர்மானிக்கப்பட்ட கூறுகள் அனைத்தும் ஒரே நாளில் தகர்ந்து போயின. ஃப்ளிண்டொஃப் உடன் சூடாக விவாதித்த பின்னர் யுவ்ராஜ் அடித்த ஆறு 6களும், அவுஸ்திரேலியாவில் வைத்து அவர்களுக்கு ஈடாக இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதும், ஆண்ட்ரே நெல்லை சுற்றி ஸ்ரீ சாந்த் ஆடிய ஆட்டமும், தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் தன் பந்து வீச்சால் மட்டும் எதிர்கொண்ட முரளியும், தமக்கு எதிராக செய்யப்பட்டது அநீதி என்றவுடன் உடனே இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இருந்து விலகிக் கொண்ட இன்ஸமாமும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

அத்துடன் நேரடி ஒளிபரப்பும், பலகோண காமரா வசதியும் ஒவ்வொரு ஆட்டக்காரரதும் பலவீனங்களை அறிந்துகொள்ள பேருதவி செய்தன. இவற்றை செய்வதற்காகவே சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு பாட்ஸ்மன் வரும்போதும் அவனுக்கு எப்படியான வியூகம் அமைக்கப்படும் / அமைக்கப்படவேண்டும் என்பதை கடைக்கோடி ரசிகன் வரை தெரிந்துகொள்ளகூடியதான வாய்ப்புகளை தொழில்நுட்பம் செய்து தந்தது. இதனால் அணிகளுக்கிடையில் குறைந்தளவு தீர்மானிக்கப்பட்ட வித்தியாசங்களே அமைய பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் அந்த நாள் மோதல்களிலேயே தீர்மாணிக்கப்பட்டன.

அவுஸ்திரேலிய அணியில் கூட தற்போது கில்க்றைஸ்ட், ஷான் வார்ண், மக்ராத் என்ற மும்மூர்த்திகளின் ஓவை காரணம் காட்டலாம். ஆனால் மக் டேர்மட், மேர்வ் ஹ்யூஜ், அலன் போடர், மார்க் டெய்லர், மார்க் வா, ஸ்டீவ் வா போன்றாவர்களின் ஓய்வு அந்த அணியில் இந்தளாவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும், முன்னர் சொன்ன மூவரின் இடங்களில் ஷான் வார்ண் தவிர மற்ற இடங்களில் வந்தவர்கள் ஏற்கனவே திறமை நிரூபிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உண்மையான கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக ரசிப்பதற்கு அருமையான காலம் கனிந்துள்ளது.

கலைந்து போகும் காலங்கள்…

Copyஅண்மையில் எனது பெரியம்மா கொழும்பு சென்று திரும்பியபோது எனது அம்மா அவவிடம் எனக்காக கொடுத்துவிட்ட பொருட்களில் நான் முக்கியமாக கருதுவது எனது ஒன்பதாம் ஆண்டு விஞ்ஞான பாட கொப்பி. இலங்கையில் க. பொ. த சாதாரண தர (11ம் ஆண்டு) பரீட்சைக்கான பாடத்திட்டம் ஆரம்பிப்பது ஓன்பதாம் ஆண்டில் இருந்து என்பதால் மிகுந்த உற்சாகமாக படிக்க தொடங்கியிருந்தோம். அப்போது நான் வாசித்த ஒரேயொரு ஆங்கில சஞ்சிகையான The Sporststar ன் நடுப்பக்கத்தில் அப்போது star poster என்று விளையாட்டு வீரர்களின் அழகிய வண்ணப்படம் வருவது வழக்கம். அதனை தான் நான் எனக்கு விருப்பமான் ஆசிரியர்களின் கொப்பிகளிற்கு உறையிடுவேன்.  அப்படியாக உறையிட்டு எனக்கு கிடைத்த கொப்பியை பார்த்ததும் எனது மனம் மழையில் நனைந்த துணி போல கனக்கத்தொடங்கியது.

எமக்கு ஒன்பதாம் ஆண்டு முதல் 11ம் ஆண்டு வரை விஞ்ஞானம் படிப்பித்தவர் திரு வை. க. தவமணிதாசன் அவர்கள். கண்டிப்புக்கு பெயர் போனவர். சின்னதாய் ஒரு கவிஞர். “வைகை” என்று ஒரு கவிதை தொகுப்பு வெளியிட்டவர். அதில்
“வைகை எந்தனுக்கு வாடிக்கை ஆனதற்கு
வைகை முறையே தலையும் தலையெழுத்தும்”
என்று மாணவர்களை கடுமையாக கண்டிக்கும் தன் இயல்பு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தார்.

அமிலத்துக்கும் காரத்துக்கும் இடையிலான நடுநிலையாக்கல் தாக்கம் பற்றி
அமிலம் + காரம் –> உப்பு + அப்பு (நீர்)
என்று எல்லாம் சுவரசியமாகக் கற்பிப்பார். (இவர் பற்றி முழுமையாக ஒரு தனி பத்தி எழுதவேண்டும். ஆனால் நான் இப்போது கூறவந்ததை முதலில் கூறிவிட்டு பிறகு இவர் பற்றி.)

அவருடைய பாட கொப்பிக்கும் எனது வழக்கப்படியே உறையிட்டிருந்தேன்.  ஆனால் அந்த உறையை பார்த்ததும் என் மனம் பாதிக்கப்பட காரணம் அதில் இருந்த அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் டேமியன் மார்ட்டினின் படம்.  அது (92) அவர் அவுஸ்திரேலிய அணிக்காக கிரிக்கெட் விளையாட தொடங்கியிருந்த காலம்.  அந்த கொப்பி மீண்டும் எனது கை வந்து சேர்ந்தபோது அவர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார்.  என்னைப் பொறுத்தவரை நான் விட்டுவந்த யாழ்ப்பாணம் இப்போதும் என்மனதில் (10 ஆண்டுகளாகியும் கூட) (F)ப்ரிட்ஜில் வைத்த அப்பிள் பழம்போலதான் உள்ளது.  ஆனால் நிஜத்தில் ஒரு தலைமுறை, அதுவும் நாம் பார்த்து, ரசித்து, பழகி, கற்று வளர்ந்த தலைமுறை எம்மை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நாற்றாண்டின் அற்புதமான கிரிக்கெட் வீரர் என்று கொண்டாடப்பட்ட சச்சின் , லாரா, ஷான் வார்னே, மக்ராத், ட்ராவிட், இன்ஸமாம், பொலொக் என்று பெரும் சிங்கங்கள் எல்லாம் ஓய்வு பெறும் கால கட்டத்தில் உள்ளனர். கிட்டத்தட்ட சச்சினின் சர்வதேச அனுபவமும் எனது விளையாட்டு அனுபவமும் ஒரே கால அளவானவை.

சினிமாவில் கூட புதிய தலைமுறையினர் பொறுப்பேற்க தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கது.  பாரதிராஜா, பாலசந்தர், பாலுமகேந்திரா, இளையராஜா, வைரமுத்து, வாலி, போன்ற ஜாம்பவான்களிடமிருந்து செல்வராகவன், கௌதம், முருகதாஸ், நா. முத்துக்குமார், யுவன் ஷங்கர் ராஜா, ஹரிஷ் ஜெயராஜ் போன்றோர் கிட்டதட்ட பதவியேற்று கொண்டனர்.  எமது பதின்ம வயதுகளில் 27 வயதுக்காரரை எல்லம் மிகுந்த மரியாதையுடன் அண்ணே என்று தான் அழைப்பது தான் வழக்கம்.  இப்போது அதே 27 வயதில் நாம் இருக்கும்போது பதின்மவயதார் அண்ணே என்றழைக்கும்போது நட்புக்குள் வயதேது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

நான் புத்தகம் வாசிக்கதொடங்கிய ஆரம்பகாலங்களில் மரபுக்கவிதைகளையும் கவிஞர்களையும் சாடி மு. மேத்தா, வைரமுத்து போன்றோர் பேசிவந்தனர். இப்போது அவர்கள் எழுதுவது கவிதையே இல்லை என்று பேசும் நவீன இலக்கியகாரர் வந்துவிட்டனர்.

காலம் ஒரு வற்றாத நெடுநதி போல ஒடிக்கொண்டேயிருக்கிறது.  அதன் கரையில் அது விட்டுசெல்லும் தடங்கள் பற்றிய விமர்சனங்கள் நடந்துகொண்டிருக்கும்போதே அது பல மைல்களை கடந்து சென்று இன்னும் பல புதிய தடங்களை உருவாக்கிவிடுகிறது. சில மாதங்களின் முன்னே எனது நண்பனின் சித்தி மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.  நான் யாழ்ப்பாணத்தை விட்டு வரும்போது அவனுக்கு 6 அல்லது 7 வயது இருந்திருக்கும். எனது மனதளவில் அவன் பற்றிய விம்பம் சிறுவன் என்கிற அளவிலேயே பதிந்துள்ளது. ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது அவன் சொன்னான், “நீங்கள் இங்க இருக்கேக்க உங்களுக்கு இப்ப எங்கட வயதுதானே” என்று. காலம் பயணிக்கும் வேகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றோ என்று எனக்கு சந்தேகம் வந்தது.

எனது சக மாணவி ஒருத்தி, ஏறத்தாழ எமது வயதுடைய எல்லாராலும் காதலிக்கப்பட்டவள், ஆனால் யாரையும் காதலிக்காதவளுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அது பற்றி எனது நண்பன் ஒருவன் சொன்னான் “நாங்கள் கல்யாணம் கட்டி பிள்ளை பெற்றாலும் வயசாச்சே என்ற நினைப்பு வராது, ஆனால் எங்களோட படிச்ச ஒருத்திக்கு கல்யாணம் என்றாலே வயசு போன மாதிரி இருக்கடா” என்றான். எமக்கே தெரியாமல் எம் வாழ்வில் பங்கெடுத்த விடயங்கள் கடந்து போகும் போது தான் புரிகிறது எத்தனை காலம் எம்மை கடந்து போய்விட்டது என்று.

Continue reading