மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்

அதிகாரத்தைச் சிலுவையிலறைவதா
அதிகாரத்திற்கெதிரான நமது இதயங்களைச்
சிலுவையில் அறைவதா?

poseஎன்கிற ஒரு காலத்தினதும் தலைமுறையினதும்  மனசாட்சிகளின் தவிப்பாக இருந்த நிராதரவுக் குரலை எழுதிய எஸ்போஸ் என்றறியப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் திகதி தனது ஏழு வயது மகனின் கண்ணெதிரே மிகக் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு பத்தாண்டுகளுக்குப் பின்னர் எஸ்போஸ் படைப்புகள் மற்றும் எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் என்கிற இந்தத் தொகுப்பு நூல் கருணாகரன், ப, தயாளன், சித்தாந்தன் ஆகியோரைத் தொகுப்பாசியரியர்களாகக் கொண்டு வடலி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது. Continue reading “மானுடத்தின் குரலாய் ஒலித்த எஸ்போஸ்”

“இடாகினி பேய்களும்”…:ஒரு அறிமுகம்

எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் பற்றி சுஜாதா ஒரு முறை குறிப்பிட்டிருந்ததில் இருந்து நெடுநாட்களாக அவரது புத்தகங்களை தேட தொடங்கியிருந்தேன். எனக்கு அமைந்த ஒரு குறை, எனது நண்பர்கள் வட்டத்தில் இலக்கிய ஆர்வம் கொண்டவர்கள் மிக குறைவாக இருப்பது. அதுவும் கனடாவில் இல்லை என்றே சொல்லி விடலாம். அதனால் நான் தேடும் புத்தகங்களோ, திரைப்படங்களோ நேரடியாக எனக்கு கிடைத்தாலே அன்றி, மற்றவர்கள் ஊடாக எனக்கு கிடைப்பது குறைவு. ஒரு கண்காட்சி ஒன்றில் காலம் சிற்றிதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தத்தின் அறிமுகம் கிடைத்தது, பின்னர் அவர் ஊடாக, அவர் நடத்தும் புத்தக கண்காட்சிகளில் அவர் சிபாரிசு செய்து சில நல்ல புத்தகங்களை வாசித்துள்ளேன். அண்மையில் அப்படியான ஒரு கண்காட்சியில் கோபிகிருஷ்ணன் எழுதிய “இடாகினி பேய்களும்” என்கிற நாவலை அவர் அறிமுகம் செய்ய, பல நாட்களாக வாசிக்க ஆசைப்பட்ட கோபிகிருஷ்ணனின் நடை தரும் அனுபவத்தை முதன் முதலாக அனுபவித்தேன். நகர்ப்புற வாழ்வில் மனிதர்களுக்கு ஏற்படும் வாழ்வு மீதான ஆழமான சலிப்பும், மன உளைச்சலும் பற்றி வீர்யமாக, அதே நேரம் காதோரமாய் ஒரு தோழன் கதை சொல்வதுபோல சொல்லும் நடை இவருக்கு கைவந்திருக்கின்றது.

எனது புரிதலில், நாவல் self fiction வடிவில் கொண்டு செல்லப்படுகின்றது. அதாவது, சேவை மையம் ஒன்றில் அவர் பணியாற்றிய போது அவர் பெற்ற அனுபவங்களை அவர் வாசகரிடம் சொல்வதாக கதை போகின்றது. அந்த மூலக்கதையில் வரும் சில சம்பவங்களை மையம் கொண்ட 9 சிறுகதைகளும் ஒரு கவிதையும் பிண்ணினைப்பாக தொடர்கின்றது. அதாவது, மூலக்கதையைவிட, கிளைக்கதைகள் அளவில் பெரியனவாக உள்ளது. சாருவின் ராஸலீலாவில் சில அத்தியாயங்கள் இப்படி அமைந்தன. தொடர்ச்சியான மன உளைச்சல்களாலும், வறுமையாலும் பாதிக்கப்பட்டே அவர் இறந்தார் என்று அறிந்திருக்கிறேன். கதையில், சமூகத்தின் போலியான மனிதர்கள் மீதான அவரது வெறுப்பு தெளிவாக காட்டப்படுகிறது. அவரது அலுவலகத்தில் உயர் நிலை அதிகாரிகள் மட்டும் பாவிக்க என்று ஒரு கழிவறையும், சாதாரண ஊழியர்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் தட்டச்சு பணியாளார்கள் பாவிக்க இன்னொரு கழிவறையும் பேணாப்படுகிறது. உயர் அதிகாரிகள் ஒவ்வொருமுறை கழிவறை போய்வந்த பின்னரும் அதற்கென இருக்கும் ஒரு தொழிலாளியால் கழிவறை சுத்திகரிக்கப்படும் வழமை கொண்டுவரப்படுகிறது. இதைப்பற்றி சுத்திகரிப்பு தொழிலாளி கோபியிடம் “என்ன சார் மேடம்கள் மூத்திரம் பெய்றது இல்லைபோல, பன்னீர்தான் பெய்றாங்களா?” என்று கேட்கிறான். அதுபோல வாகனத் தரிப்பிடத்திலும் சில வரைமுறைகள் கொண்டுவரப்படுகின்றன. அதன்படி, சாதாரண நிலை ஊழியர்கள் தம் டூ வீலர்களை தாழ்வான இடத்தில்தான் நிறுத்தவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இதனால் இரண்டு படிகளில் டூவீலர்களை ஒவ்வொரு நாளும் ஏற்றி இறக்கவேண்டிய கட்டாயம் வருகின்றது. இதில் உள்ள சிரமங்களை விளக்கி, அந்த படிகளை மறைத்து நீண்ட சாய்வான மரமொன்றை வைக்குமாறு தொழிலாளர் சார்பாக கோபி வைக்கும் வேண்டுகோள் மிக மோசமாக நிராகரிக்கப்படுகின்றது. உன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை என்று தலைமை அதிகாரி கூறுகிறார். இப்படியான சம்பவங்களால், ஆறு மாதங்களின் பின்னர் வேலையை விட்டு விலகுகிறார்.

அதுபோல நாவலில் எனக்கு பிடித்த இன்னொரு பகுதி, சமாதானம் என்ற பெண் ஊழியருடன் கோபிக்கு ஏற்பட்ட உறவு பற்றிய பகுதி. ஏற்கனவே கோபிக்கு திருமணமான நிலையில் அது ஒரு வரம்பு மீறிய உறவேயானாலும் மிகுந்த காதல் ரசத்துடன் அந்த உறவு கூறப்படுகின்றது. காதல் மனச மட்டும் தான் பார்க்கும் அது இதென்ற பிதற்றல்கள் இல்லாமல் காதலும் காமமும் கலந்து அந்த உறவை மறக்க முடியாத அளவுக்கு மனதில் பதிக்க வைத்துள்ளார். ஒரு முறை காரில் கேளாம்பாக்கம் நோக்கி தொலைதூர பயணம் செல்கையில் சமாதானத்தின் உடல் மீதான ஸ்பரிசிப்பில் இருவரும் காமவசப்படுகிறார்கள். “it’s very soothing” என்கிறாள் சமாதானம், அப்போது “நான் வரம்புகள் அற்றவன், ஆனால் நீங்களாக என்னை நாடும்போது உங்களை நான் பரத்தையாக உணரவைக்க மாட்டேன்” என்கிறார் கோபி. சுதந்திரம் என்பது மற்றவரின் இருப்பையும் அங்கீகரித்தல் என்ற தொனிவரும் இடம் இது.

சமூகப்பணிகளுக்கென வரும் பணம் தேவையில்லாமல் விரயம் செய்யப்படுகின்றது. வெளிநாடொன்றில் இருந்து ஒருவர் செய்யும் நன்கொடை பற்றிய விபரங்களை பார்க்க மூவர் பணியாற்றுகிறார்கள். இப்படியான நிகழ்வுகள் கதை ஓட்டத்தில் சொல்லப்படுகின்றன. இவற்றின் மீதான அவரது வெறுப்பும் அது சார்ந்து அவருக்கு அதிகாரிகள் மீதெழும் கோபமும் பல இடங்களில் தெளிவாக தெரிகின்றது. (கனடாவில் சேகரிக்கப்படும் charitable trust நிதிகள் எவ்வாறெல்லாம் வீண் விரயம் செய்யப்படுகின்றது என்று சில ஆண்டுகளின் முன்னர் தொடர்ச்சியாக சில நாட்கள் புள்ளிவிபரங்களுடன் Toronto star பத்திரிகை நிறுவியது ஞாபகம் வருகின்றது) அவருக்கு மேலதிகாரியாக பணியாற்றிய ஒரு பெண் response என்பதை responce என்று எழுதுகிறாள். இப்படியான தவறுகளை சுட்டிக்காட்டும்போது இன்னொரு அதிகாரியால் “Gopikrishnan is not an authority in English” என்று திட்டப்படுகிறார். ஆற்றலும், அறிவும், சரியான உழைப்பும் இருந்தும் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வலி சுட்டிக்காட்டப்படுகின்றது. இது அப்பட்டமாக அவரது சொந்த வாழ்வின் நிலையே தான். அவர் இறந்தபோது இறுதி சடங்குகள் செய்யக்கூட காசு இருக்கவில்லை என்று வாசித்திருக்கிறேன். இது பற்றி எஸ். ராமகிருஷ்ணன் ஒரு அருமையான கட்டுரை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் நூற்றுக்கணக்கான நாவல்களை எழுதியவர்களைவிட பெருமளவு பாதிப்பை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தின. எனக்குத் தெரிந்து எந்த இலக்கிய அரசியலிலும் ஈடுபடாது தன் எழுத்து நடை போல அமைதியாக வாழ்ந்து மறைந்த எழுத்தாளர் இவர். இவரது பிற படைப்புகளையும் வாசிக்க மிகுந்த ஆவலாக உள்ளேன்.

வலைப்பூக்களில் இவர் பற்றிய இரண்டு பதிவுகள்
லேகாவின் பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் உயிர்மை பதிவு
எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம்