திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களுடனான சந்திப்பினை முன்வைத்து: ஓர் அறிமுகம் ஓர் அனுபவம் ஓர் அவதானம்

 

திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களைச் சந்திக்கும் அருமையான வாய்ப்பொன்றினை திரு நவம் அவர்களூடாகக் கிடைத்ததுஅண்மையில் எனக்குக் கிடைத்த பேறென்றே சொல்லுவேன்.  அந்தச் சந்திப்பின் போது அவரது சமூகப்பணிகளையும், செயற்பாடுகளையும் கோட்பாடுகளையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் வெளியான எழுச்சிப்பாதை என்கிற நூலையும் பெற்றுக்கொண்டேன்.  யார் இந்த ஆர். எம் நாகலிங்கம் என்று அறிந்துகொண்டால் நான் முன்னர் சொன்னதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

இவர் 1936ம் ஆண்டில் மாவிட்டபுரத்தில் பிறந்தவர்.  ஈழத்தில் மிக மோசமான சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சமூகங்களில் ஒன்றான நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்.  சைவத்தமிழ் பாடசாலைகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக கல்விகற்பதற்கான சமத்துவ உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த அந்நாட்களில், தனது கல்வியை மாவிட்டபுரம் அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் பயின்றார்.  அதன் பின்னர் தன் பாடசாலை இறுதியவரையான படிப்பினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தொடர்ந்தார்.  தனது சிறுவயது முதலே, அதாவது 11 வயது முதலே தாம் ஒடுக்கப்படுவதை உணர்ந்தவர் கிராமசபைத் தேர்தல் ஒன்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் வெற்றிபெறுவதற்கான சரியான நகர்வுகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்பட்டார்.

இதன் பின்னர் இந்தப் போராட்டங்களை இன்னமும் முழு வீச்சுடன் முன்னெடுக்க வேண்டும் என்றுணர்ந்து முதல் முயற்சியாக 1955ல் மாவை பாரதி வாசிகசாலையை நிறுவுகின்றார்.  அதன் பின்னர் 1971ல் மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றமாக விருத்தியடைகின்றது.  அதன் பின்னர் நாடெங்கிலும் உள்ள நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய இயக்கத்தினை கட்டியெழுப்பும் நோக்குடன் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்களை அணுகி, அவர்களை அமைப்புகளாக ஒன்று திரட்டி, 28 அமைப்புகளை உருவாக்கி அவற்றை சமூக முன்னேற்ற கழகங்களின் சமாசம் என்கிற தேசிய இயக்கமாக 1980ல் கட்டியெழுப்புகின்றார். 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி செல்வச்சந்நிதியில் நடைபெற்ற மாநாட்டில் ஆறு அம்சப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படுகின்றது.  இந்தத் திட்டத்தில்

1)   சமாசத்தின் நிறுவன அமைப்புமுறை நோக்கங்கள் பற்றிய திட்டம்

2)   கல்வி அபிவிருத்திக்கான திட்டம்

3)   தொழிற்பெயர்ச்சி சக, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றுக்கான திட்டம்

4)   குடிமைத்தொழில் ஒழிப்புப் பற்றிய திட்டம்

5)   சமூக ஒருமைப்பாட்டை வளர்த்தல் பற்றிய திட்டம்

6)   ஒழுக்கக் கட்டுப்பாட்டை வளர்த்தல் பற்றிய திட்டம்

என்கிற அம்சங்கள் விரிவான திட்டமிடல்களுடனும் நோக்குகளுடனும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற சமூகங்கள் விடுதலை பெறுவதை கல்வியறிவினாலேயே முன்னெடுக்கமுடியும் என்ற நோக்குடன் அதனை தான்  சார்ந்திருக்கும் ஈழத்தின் பஞ்சமர் சாதிகளுல் ஒன்றான நாவிதர் சாதியினரிடையே முன்னெடுத்து இன்று நாவிதர் சாதியினர் கல்வி வளர்ச்சி பெறவும், அதனூடாக சமூக விடுதலை நோக்கி நகரவும் முக்கிய காரணமானவர் ஆர். எம். நாகலிங்கம் அவர்கள்.  எழுச்சிப்பாதை என்கிற இந்தத் தொகுப்பானது நிச்சயம் வாசிப்பின் மீதும், சமூகம் மீதும், சமூக அரசியல் செயற்பாடுகள் மீதும் அக்கறை கொண்டவர்கள் அனவரும் வைத்திருக்கவேண்டிய முக்கியமான ஒரு ஆவணமாகும்.

 

-2-

புலம்பெயர் நாடுகளில் சாதியம் ஒழிந்துவிட்டது என்கிற கருத்துக்கள் பல்வேறு இடங்களில் இடங்களில் கூறப்படுவதைக் கேட்டிருக்கின்றேன்.  இன்னும் இரண்டு தலைமுறையில் ஒருத்தருக்கும் சாதி என்றால் என்னவென்றே தெரியாது என்றெல்லாம் சமூகச் செயற்பாட்டாளர்களை நோக்கி சொல்லப்படுவது மிக வழமையானதாகி வருகின்றது.  ஆனால் உண்மை அப்படியா இருக்கின்றது?  புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன்; எத்தனையோ ஊர்ச் சங்கங்கள் இருக்கின்றன, இவற்றில் எத்தனை ஊர்ச்சங்கங்களில் முக்கிய பதவிகளிற்கு தாழ்த்தப்பட்டவர்களும் தலித்துக்களும் தெரியப்பட்டிருக்கின்றார்கள்?  ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சாதியப் பாகுபாடுகள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தன.  ஆனால் மக்களின் மனநிலையில் மாற்றம் உண்டானதா என்பது கேள்விக்குறிதான்.  சட்டங்கள் மூலம் மாத்திரமே சாதியொழிப்பினைச் செய்துவிடமுடியாது.  சாதியொழிப்பு என்கிற கருத்தியலினை தொடர்ச்சியாக மக்களுடன் உரையாடலில் ஈடுபடுத்துவதனால் மாத்திரமே மக்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்கலாம்.  மக்களுடனான உரையாடல் இல்லாமற்போனது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகளை உருவாக்கிய காரணிகளுல் முக்கியமானது.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுபவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களில் ஈடுபடுவது மூலமே ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றிப்பெறும் என்று Pedagogy of the Oppressed நூலில் Paulo Freire வலியுறுத்தியதே மீண்டும் ஞாபகம் வருகின்றது.

 

-3-

சாதியம் தொடர்பான இன்னும் ஓர் அவதானத்தினை அண்மையில் பார்த்த மதயானைக் கூட்டம் திரைப்படத்திலும் காணமுடிந்தது.  மதயானைக்கூட்டம் திரைப்படத்தை முதன்முறை பார்த்தபோது அத்திரைப்படத்திற்கும் கிழக்குச் சீமையிலே திரைப்படத்துக்திற்கும் இடையில் சில ஒற்றுமைகளைக் உணரமுடிந்தது.  அதன் தொடர்ச்சியாக இரண்டு படங்களையும் மீளவும் பார்த்ததில் பெற்ற அவதானம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன்.  இரண்டு படங்களிலும் வில்லன்களாக காட்டப்படும் பெரிய கறுப்பும் (கிழக்குச் சீமையிலே), பொன்ராசுவும் (மதயானைக் கூட்டம்) பிரதான பாத்திரம் வகிக்கும் மாயாண்டித் தேவன் – சிவாண்டி (விஜயகுமார்-நெப்போலியன்) மற்றும் ஜெயக்கொடி தேவர் – வீரத்தேவர் (முருகன்ஜி – வேல ராமமூர்த்தி) பாத்திரங்களை விட சமூக மதிப்பில் / சாதிய படிநிலையில் குறைவான படிநிலையில் இருப்பவர்கள்,  இருவரும் (பொன்ராசு பொருளாதார உயர்வினாலும், பெரிய கறுப்பு “உயர் குடிப்பெண்ணை” மணம் செய்வதன் மூலமும்) தமது “சமூக அந்தஸ்தை உயர்த்த” அல்லது “மேல் நிலையாக்க” விரும்புபவர்கள்.  குறிப்பாக கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் வரும் பெரிய கறுப்பு கதாபாத்திரம், தன்னைவிட சாதியப் படிநிலையில் உயர்வாக உள்ள பெண்ணைத் திருமணம் செய்வதன் மூலம் தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளவிரும்புகின்றது என்பது அக்கதாபாத்திரம் பிற கதாபாத்திரங்களுடன் செய்யும் உரையாடல்களினூடாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.  இத்திரைப்படங்களில் இங்கே குறிப்பிடப்பட்ட கதாபாதிரங்கள மாத்திரமே வில்லன்கள் / எதிர் பாத்திரங்களா அல்லது அந்தப் போக்கே (மேல்நிலையாக்கமே) தவறானதாக படைப்பாளிகளால் பார்க்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.   அத்துடன் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் நேரடியான வில்லத்தனங்கள் எதுவும் செய்யாமல் “பங்காளிகளான” மாயாண்டித் தேவன் – சிவாண்டி (கிழக்குச் சீமையிலே), ஜெயக்கொடி தேவர் – வீரத்தேவர் (மதயானைக் கூட்டம்) இடையே புறங்கூறி குழப்பத்தையும் விரோதத்தையும் வளர்ப்பதன் மூலமும், சூழ்ச்சி செய்வது மூலமுமே தமது எதிராளிகளை பழிவாங்குவது அல்லது வன்மம் தீர்ப்பதாயும் காட்டப்படுகின்றது.  அந்தவகையில் மக்களின் பொதுப்புத்தியை பிரதிபலிப்பதாக இத்திரைப்படங்களும் அமைகின்றன.

 

 

-தாய்வீடு இதழுக்காக எழுதப்பட்டது.