கடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும்

“மனுஷன் அப்படியில்லை. அவனுக்கு ஒன்றின் மீதும் நம்பிக்கையில்லை. வல்லம் ஒரு ஜீவனுள்ள சாட்சியம். அது பேசாது. அது சொல்லுகிற கதைகளை கேட்டால் அந்தப் பறையக்குடியே தீப்பிடித்துவிடும். எல்லா வல்லங்களுக்கும் எல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் தங்கள் எஜமானர்களுடைய நன்மையைக்கருதி பேசாமல் இருக்கின்றன. கடல் காற்றில் புதிய லாஞ்சிகள் கூட துருப்பிடித்துவிடுகிறதுண்டு. இந்த மரம் துருப்பிடிக்கிறதேயில்லை. அது கடலுக்கு விசுவாசமாயிருக்கின்றது. வல்லங்களைக் கடல் அலைகள் கவர்ந்து கொண்டதில்லை. சிலுவைப் பாறைச்சுழலில் வல்லங்கள் கவிழ்ந்தால் வல்லங்கள் கரையில் ஒதுங்கிவிடுகின்றன. அந்தச் சுழலில் கடல் மோகினி வாசம் செய்கின்றாள். அவள் மனுஷருடைய ரத்தத்தை விரும்புகிறவள். ஆனால் இந்தப் பறையர்களுக்கு அவளைப் பற்றிய பயம் மறாட்ன்ஹுவிடுகிறதும் நிஜம்தான். கடலோடு போட்டி போட்டு மனுஷன் ஜெயித்ததில்லை. இதை உணராமல் லாஞ்சிகள் மிகுந்த சத்ததுடன் வல்லங்களோடும், நாட்டுப் படவுகளோடும் போட்டியிட்டுக்கொண்டு போகின்றன.” – கடல்புரத்தில் வண்ணநிலவன்”

 

குரூரத்தை மட்டுமே பரிசாகத் தந்துவிட்டு நாட்காட்டித் தாள்கள் நகர்ந்துகொண்டு போகின்றன. ஒரு சிறு குழந்தையின் சிரிப்புக் கூட செத்துப்போய் பிண்டங்களாகக் கிடக்கின்ற வேறு பல குழந்தைகளின் சிரிப்பையே ஏனோ நினைவூட்டுகின்றது. கருட புராணம் சொன்னதாய் கதைகள் கூறும் தண்டணைகள் அனைத்தும் எந்த பாவமும் செய்யாத எம் சக உதரங்களுக்கு நேர்ந்து விடப்பட்டிருக்கின்றது. நாடோறும் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அமைப்புகளும், சில ஊடகங்களும் இவற்றை காட்சியாக்கி தமக்கான கணக்கு வழக்குகளை நேர் செய்துகொண்டு போகின்றனர். தொடர்ச்சியான மன உளைச்சல்களே நாளாந்த அனுபவங்களாகிப் போன இன்றைய நாட்களில் நல்ல புத்தகங்களும் சில திரைப்படங்களுமே அவ்வப்போது நிஜத்தின் தழலில் இருந்து எம்மை கரை சேர்க்கின்றன. அந்த வகையில் அண்மையில் வாசித்து முடித்த “கடல் புரத்தில்” என்ற வண்ணநிலவனின் நாவல் என்னளவில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. வண்ணநிலவனின் எழு த்துக்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டும், வாசித்தும் இருந்தாலும் அவரது எஸ்தர் டீச்சர் போன்ற ஒரு சில சிறுகதைகளை மட்டுமே வாசித்திருக்கின்றேன். கடல் புரத்தில் நாவலை வாசித்து முடித்தபோது எத்தனை அருமையான ஒரு வாசிப்பனுபவத்தை இத்தனை காலம் தவற விட்டிருக்கின்றேன் என்று உணர முடிந்தது.
ம்ணப்பாடு என்கிற கடலோர கிராமம் ஒன்றில் வாழும் குரூஸ் என்பவனின் குடும்பத்தையும் அந்த குடும்பத்துடன் தொடர்புற்றவர்களையும் பற்றி அவர்கள் வாழும் கிராமம் சார்ந்து நாவல் அமைகின்றது. அதே நேரம் பாராம்பரியத்தின் மீது நவீனம் செலுத்தும் ஆதிக்கம் வள்ர்வதையும், அதை ஏற்றுக்கொளள முடியாது பாரம்பரியத்தின் மீது கொண்ட தீராத காதலுடன் போராடுபவர்களை பற்றி சொல்வதாயும் எடுக்கவும் முடியும். மனப்பாடு கிராமத்தில் பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்துவருகிறான் குரூஸ். தன் தகப்பன் காலத்து வல்லத்தையே ஒட்டுக்களுடன் பாவித்து வருகின்றான். அவனது மகன் செபஸ்தி படித்து வெளியூர் ஒன்றில் ஆசிரியனாகப் பணிசெய்கின்றான். சம்பளம் வாங்கித் தொழில் செய்தால் முன்னேற முடியாது என்ற எண்ணம் கொண்ட அவன் வல்லத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு பட்டணத்துக்கு வந்துவிடும்படி தகப்பனை கேட்டுவருகின்றான். இதனால் தொடர்ச்சியாக தகபனுக்கும் மக்னுக்கும் இடையில் வாக்குவாதங்கள் எழுந்துவருகின்றன. இன்றைய சூழலில் நாம் அடிக்கடி காண்கின்ற மாற்றங்களுடன் தம்மை பொருத்தி வாழும் தலைமுறைக்கும், மாறக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருக்கும் ஒரு தலைமுறைக்குமான போராட்டமாகவே இது காணப்படுகின்றன. தலைமுறை இடைவெளி என்று இன்றைய காலங்களில் அடிக்கடி பாவிக்கப்படும் சொல் இன்று மட்டுமல்ல மிக நீண்ட காலமாக / அடி நாள் முதலாகவே இருந்துவருகின்றது என்பது தெளிவாகின்றது. விழா நாளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்ற மரபை மீறி லாஞ்சியில் சிலர் மீன்பிடிக்க செல்கின்றனர் என்று அறிந்த குரூஸ் வாளையும் எடுத்துக்கொண்டு க்டற்கரைக்கு செல்கின்றான். அதே நேரம் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக், ரொசாரியா, சாமிதாஸ் போன்றவர்கள் தம் முடிவில் உறுதியாக இருந்தும் பின்னர் அது தடைப்படுகின்றது. பொதுவாக லாஞ்சியில் கடலில் வெகுதூரம் சென்று மீன்பிடிக்கும் வசதி இருப்பதால் அவர்களால் பெருந்தொகை மீன்களை பிடிக்க முடிகின்றது. இதனால் வல்லங்களில் சென்று மீன்பிடிப்பவர்களுக்கு மீன் கிடைப்பது அரிதாகும் அதே வேளை சந்தையை தீர்மானிக்கும் வல்லமையும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடுகின்றது. உண்மையில் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தும் இந்த பிளவுதான் அவர்களிடையே இருந்த உறவிலும் விரிசலை உண்டாக்குகின்றது.

 

கடல் புரத்தில் நாவலில் கூட படித்த செபஸ்தியன் தான் காதலித்த ரஞ்சியை கல்யாணம் செய்ய முடியாமல் போக, அவள் நினைவுவரும்போதெல்லாம் குடிக்கிறான். இந்த கையறு நிலைதான் அதிகம் காசு உழைக்கவேண்டும் என்ற அவனின் ஆவேசத்துக்குக்கூட காரணமாக இருந்திருக்கக்கூடும். அதுபோல பிலோமிக்குட்டியை காதலித்த சாமிதாஸ் தனக்கு பூரண சம்மதம் இல்லாதபோதும் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்கின்றான். சாமிதாஸின் தகப்பன் சொந்தமாக லோஞ்சி வைத்திருப்பவன். இதுபோல குரூசுக்கு நெருக்கமான நண்பனான ஐசக், (இவனும் லோஞ்சி வைத்திருப்பவன்) தனது மனைவியை துரத்திவிட்டு குரூஸின் மகள் பிலோமிக்குட்டியை திருமணம் செய்யவேண்டும் என்று நினைக்கின்றான். மக்களிடையே இருந்த இயல்பான உறவுநிலைகள் நாகரிகத்தின் வருகை தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சீர் குலைக்கப்படுகின்றது. ஆனால் சற்று யோசித்துப்பார்த்தால் லாஞ்சியின் வருகையினை விரும்பாத வல்லம் வைத்திருப்போரின் முன்னோரைக்கூட அதற்கு முன்னைய மரபுரீதியான மீன் பிடித்தல்களை செய்தவர்கள் இதுபோலத்தான் எதிர்த்திருப்பார்கள். இலகுவாக சொல்வதென்றால், ஏ. ஆர். ரஹ்மானின் வருகையின்போது அவரை எப்படி இளையராஜா ரசிகர்கள் எதிர்த்தார்களோ அதேபோலத்தான் இளையராஜாவின் வருகையை விஸ்வநாதனின் ரசிகர்களும் எதிர்த்திருப்பார்கள். இது சக்கரம் போன்ற தொடர்ச்சியான இயக்கம். ஆனால், நாகரிக வளர்ச்சி முக்கியமாக உள்ள அதே நேரம், அடிப்படை வாழ்வாதார தொழிலாக இத் தொழில்களை செய்வோரின் நலன் காக்கப்படவேண்டியதும் அவசியம்.

 

இந்த நாவலில் முக்கியமாக நான் கருதுகின்ற இன்னுமொரு அம்சம் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக காட்டப்படும் முறை. கற்பு என்கிற மனம் சார்ந்த இரு பாலாருக்கும் பொதுவான ஒரு விடயத்தை பெண்களுக்கு உடல் சார்ந்த ஒரு விடயமாகவே சமூகம் பார்ப்பது வழக்கம். இந்த நாவலில் பிலோமிக்குட்டி, சாமிதாஸை ஆழமாக நேசித்து அவனிடம் உறவும் கொண்டபின்னரும் கூட, சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சொன்னவுடன் அழுகிறாள்; தொடர்ச்சியாக அவன் எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுகின்றாள்; ஆனால் இதுவும் கடந்துபோகும் என்ற மனத் துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ள தயாராகின்றாள். கிட்ட தட்ட இவளின் அனுபவத்தையே உடைய அவள் சினேகிதி ரஞ்சி அவளுக்கு துணைநிற்கின்றாள். இது போன்ற ஒரு பெரிய நிகழ்வின் பின்னர் அதை தாண்டி வர முற்படும் எவருக்கும் ஒரு ஆதரவு அவசியம். அண்மையில் நான் பார்த்த DEV. D என்கிற ஹிந்தி திரைப்படத்தில் வரும் என்கிற லெனி/சந்தா என்கிற கதாபாத்திரம் இது பற்றி சில ஆதாரமான கேள்விகளை எழுப்புகின்றது. சாரு நிவேதிதா மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்த இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி சந்தா, தேவ் இடம் கேட்கும் அந்த கேள்விகள்தான். அதாவது, சந்தாவுடன் தனிமையில் காமமுற்று இருந்த வேளைகளில் எடுத்த வீடியோ ஒன்றை அவள் காதலன் எம்.எம்.எஸ் மூலம் பரப்புகின்றான். இதை பலரும் பார்க்கின்றனர். இதை அறிந்த அவள் பெற்றோரும் அவளை திட்டுகின்றனர். உன்னால் எனக்கு அவமானம் என்று திட்டி அவள் தகப்பன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கின்றார். அதன் பின்னர் பாட்டி வீட்டிற்கு செல்லும் அவள் மீண்டும் மீண்டும் இந்த நிகழ்வை ஞாபகமூட்டி திட்டப்படுகின்றாள். இதனால் ஒரு நிலையில் வீட்டை விட்டு வெளியேறும் சந்தா மும்பையில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் சேர்கின்றாள். அங்கே அவள் தேவ் ஐ சந்தித்டு அவனிடம் தன்னுடைய கடந்த காலம் பற்றி கூறும்போது “அந்த சோதனைக்காலத்தில் எனக்கு அப்பா எனக்கு ஆறுதலாக இருக்கவில்லை. மாறாக அவர் தன்னை சுட்டுக்கொண்டு இறந்ததால் என்னை மேலும் சோதனைக்குள்ளாக்கி என்னை சிக்கல்களில் இருந்து மீளவே முடியாமல் பண்ணினார்”. ஒழுக்கம் பற்றி அதிகம் நன் சமூகம் கவலைப்படுவதால் மனித நேயத்தையும் மறந்து, பாதிக்கப்பட்ட ஒருத்திக்கு இனப்பெருக்க உறுப்புகளின் வழி தீர்மாணிக்கப்படும் ஒழுக்கங்களை முன்வைத்து தீர்ப்பெழுதுகிறோம். “மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்” என்றுதாம் எமக்கு உதவிக்கு வர நிறைய விடயங்களும் இருக்கின்றனவே. ஜெயகாந்தன் அக்கினிபிரவேசம் கதையை எழுதியபின்னர் அதன் முடிவு பற்றி பல விமர்சனங்கள் வர, அவர் விமர்சகர்கள் சொல்லும் பாதையிலேயே கதை போய் இருந்தால் பாதிக்கப்பட்ட பெண் என்னென்ன சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டிருப்பார் என்று சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற கதையாக தந்தார். அதிலும் முக்கியமாக ஒருமுறை உடலுறவு கொண்டாலே பெண் வாந்தியெடுத்து, கர்ப்பம் ஆகிவிடுவதை காலம் காலமாக திரைப்படங்களில் சொல்லிவரும் சமூகத்தில் பிலோமிக்குட்டியும், ரஞ்சியும் முன்மாதிரிகள்.
பெற்றோர், காதல், நட்பு என்று உறவுகள் தொடர்ந்து போற்றப்படும் சமூகத்தில் எல்லா உறவுகளும் உள்ளபடியே, அவர்களுக்கான குறைபாடுகளுடன் காண்பிக்கப்படுவது கதையின் இயல்புத்தன்மையை அதிகரிக்கின்றது. ஐசக் தன் உற்ற நண்பன் குரூஸின் மகளை இரண்டாம் தாரமாக கல்யாணம் கட்ட வேண்டும் என்று ஓயாது எண்ணுகின்றான். அவள் உடை மாற்றும்போது ஜன்னலுக்கால் பார்த்தப்டி இருக்கின்றான். குரூஸின் மனைவி மரியம்மை அவனுக்குப் பிடிக்காமல் மாலை வேளைகளில் வாத்தி வீட்ட போய் வருகிறாள். ரஞ்சியும், சாமிதாஸும் தாம் நேசித்தவர்களை கைவிட்டு இன்னொருத்தரை பொருளாதார நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு கல்யாணம் செய்துவிடுகின்றனர். குரூஸின் நம்பிக்கைக்குரிய சிலுவை, குரூஸ் பழைய நினைவுகளை மறந்ததும் அவனுக்கு கொடுக்கவேண்டிய காசை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறான். அது மட்டுமல்ல ஏற்கனவே கல்யாணமான அவனுக்கும் பிலோமினாவை கல்யாணாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கூட உள்ளது. ஒரு முறை பிலோமினா படுத்திருக்கும்போது அவளது விலகிய ஆடைகளூடாக அவள் உடலழகை பார்த்தபடி இருக்கின்றான். ஆனால் எல்லாக் கசடுகளையும் தாண்டி எல்லார் மனதுக்குள்ளும் இருக்கும் மானுட நேயம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பீறிட்டு வருவதை அழகாக காட்டியுள்ளா வண்ணநிலவன்.

 

இந்தக் கதையை வாசித்தபோது என்னை நிரடிய வித சாதிப்பெயர்களால் தொடர்ந்து மனிதர்கள் அழைக்கப்படுவது. அதே நேரம், சாதீய கூறுகள் சமூகத்தில் ஆழமாக வேரோடிப்போயிருந்த 70களில் எழுதப்பட்ட நாவல் இது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது முக்கியம். கதைக்கு முன்னுரை ஒன்று வழங்கியுள்ள ஞாநி கூட இன்றைய நாட்களில் இந்த நுலை மறுபதிப்பிக்க தயங்கியதாகவும் “எழுச்சிக் காலத்தில்தான் நமது அடிமை மரபு நினைவு படுத்தப்படவேண்டும். அப்போதுதான் எத்தனை போராட்டத்துக்குப்பின் இன்றாஇய எழுச்சியை அடைய வேண்இ வந்தது என்பது புதிய தலைமுறைகளுக்குப் புரியும்” என்றூ சொல்லி ஊக்குவித்ததாயும் சொன்னார். எமது சமூகத்தில் ஜாதி வேறுபாடு இல்லை, வறுமை இல்லை, அறியாமை இல்லை என்று பிதற்றுவதை தவிர்த்து இலக்கியங்களை எழுதும்போது அக்காலங்களில் அந்த சமூகத்தில் இருந்த பிரச்சனைகளையும் சொல்லி எழுதுவதே நேர்மையானதாக இருக்கும் என்றூ நினைக்கின்றேன். அந்த் வகையிலும் வண்ணநிலவன் ஓரளவுக்கு திருப்திகரமாக தன் கடனை செய்கின்றார்.

 

புதிய தலைமுறையின் மாற்றத்தையும், நவீனத்தின் வருகையையும் எதிர்த்து பாராம்பரியத்தை காக்க விடாப்பிடியாக போராடிய குரூஸ் எனப்படும் குரூஸ் மைக்கேல் தன் பிடி தளர்ந்து தொடர்ந்து போராடும் தெம்பில்லை என்ற நிலை வரும்போது வீட்டையும், படகையும் விற்றுவிட்டு வெளியூர் செல்ல முற்படுகிறான். புதியவற்றின் எழுச்சிகளுக்கெதிரான அவனது போராட்டத்தின் வீழ்ச்சியையே இது காட்டுகின்றது. இந்த நிலையில் அவனால் எதிர்காலத்தின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்க, மனப் பிறழ்வினால் தன் பழைய நினைவுகளை எல்லாம் மறந்த நிலையை அடைகின்றான். குரூஸ் விற்ற வீட்டை அவன் மகன் மீட்டுக்கொடுக்க, அவன் விரும்பிய அதே பழைய சூழலில் ஒரு நடைப்பிணம் போல குரூஸின் இயக்கம் தொடர்கின்றது. சாமிதாஸின் கல்யாணம், அது, இதென்று உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றது. மாறும் உலகுடன் சேர்ந்து மாறாமல் அதை எதிர்த்து போராடுபவர்களை எங்கோ தூக்கி எறிந்துவிட்டு காலச்சக்கரம் தொடர்ந்து இயங்கும் என்று சொல்வது நிஜம்தானோ என்ற எண்ணம் பலமாகவே எழுகின்றது.

*****இந்தக் கதையை வாசித்து முடித்து அசை போடுகையில், பிலோமிக்குட்டி கதாபாத்திரத்தையும் DEV. Dல் சந்தா கதா பாத்திரத்தையும் நினைக்கையில் ஏனோ மனுஷ்யபுத்திரன் அவரது நீராலானது தொகுதியில் எழுதிய “ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு” என்ற கவிதை நினைவு வந்தது. எப்போது எந்த தொடர்ச்சியும் இல்லாதவைகளாகவே என் நினைவுகள் இருந்திருக்கின்றன. பிறிதொரு பொழுதில் பார்த்தபோது அந்த தொடர்ச்சியின்மைக்குள்ளும் ஒரு தொடர்ச்சி இருந்திருக்கின்றது

“ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு”

நன்றாக குளிக்கவேண்டும்
வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடி திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிகொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாக கொஞ்ச வேண்டும்

மர்மமாக புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் கனிவை வழங்குபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லாரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக
தப்பிச் சென்று விடவேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருந்தும்

தனித்த அறை ஒன்றில்
மனங் கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசை கேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ளவேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது இந்த உலகின் கருணை

 

ஞாநியை நான் ஏன் நிராகரிக்கிறேன்

அறிவு ஜீவிகள் என்று தம்மை நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் இருக்கின்ற ஒரு பொதுவான பிரச்சனை தாம் மற்றவர்கலிருந்து வித்தியாசமானவர்கள் என்றும், தம் சிந்தனைகள் வித்தியாசமானவை என்றும் காட்டவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிகளை தமது கடந்த கால வரலாற்று அறிவினாலும், அளாவுக்கு அதிகமான புள்ளி விபரங்களினாலும், தர்க்கங்களினாலும் குழப்பி, மக்களை மட்டம் தட்டி நிற்பதாகும். வரலாற்று அறிவினாலும், புள்ளி விபரங்களாலும் சரியென சொல்லப்படுபவை பிழையாக இருக்க முடியாதே என்று சிலர் கூறலாம், ஆனால் சற்று புத்திசாலித்தனமான ஒருவரால் எந்த விடயத்தையும் நியாயப்படுத்தக்கூடிய புள்ளி விபரங்களை வெகு இலகுவாக தொகுக்கவோ தர்க்கிக்கவோ முடியும். சென்ற வார தினமலரை பார்த்துக்கொன்ண்டிருந்த போது அரசியல் விமர்சகர் ஞாநியும் இந்த வகையோ என்ற என்னுடைய நெடுநாள் சந்தேகம் நிரூபனமாகிவிட்டது.

ஆனந்த விகடனில் ஓ பக்கங்களை தொடங்கிய நாள் முதல் விகடனின் வெகுஜன கவர்ச்சியால் மிகப்பெரும் கவனிப்புக்கு உள்ளானவர் ஞாநி. அதற்கு முன்னரே 98ல் விகடனில் அவர் எழுதிய தவிப்பு என்கிற தொடர்கதை கூட விடுதலை போராட்டங்களை பற்றி சரியான முறையில் பதிவு செய்யவில்லை என்பது எனது கருத்து. (அதில் வரும் ஆனந்தி என்கிற பாத்திரம் என்னை மிகவும் கவர்ந்தது). இந்நாட்களில் அவர் எழுதிய கண்ணகி சிலை பற்றிய கட்டுரை, கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்கிற கட்டுரை, ஜெயலலிதா – சசிகலா ஆலயம் ஒன்றில் பூசகர் கொடுத்த மாலைகளை மாற்றி மாற்றி அணிந்த போது தி மு க சார்பான ஏடுகள் “ஜெ – சசி ஆலயத்தில் மாலை மாற்றினர்” என்று கொச்சை படுத்தியபோது இவர் இன்னும் ஒரு படி போய் லெஸ்பியன் உறவில் என்ன தவறு ? என கேள்வியெழுப்பி அவர்கள் ஒரு பாற் சேர்க்கையாளார்கள் என்பது போன்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கியது, பின்னர் பிரபாகரன் பற்றி கொச்சைப்படுத்தி படம் எடுத்ததாக சிங்கள இயக்குனர் துசாரா பீரிஸ், சீமான், சுபவீ போன்றவர்களால் தாக்கப்பட்ட போது, “இரட்டை குவளை முறையை ஒழிக்க போராடாத சுபவீ ஏன் இலங்கை இனப்பிரச்சனை பற்றிய போராட்டங்களில் ஈடுபடுகிறார்?” என்கிற அபத்தமான கேள்வியை எழுப்பியது, அதனை தொடர்ந்து சுபவீ, அறிவுமதி போன்றவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்று இவரது பல கட்டுரைகளும் கருத்துகளும் மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன.

அக்டோபர் 26ம் திகதி வெளியான தினமலர் இதழில் ஞாநி ஈழப்பிரச்சனை பற்றி எழுப்பியிருக்கும் சில வினாக்கள் மிகுந்த கண்டணத்துக்குரியவை. வெகுஜன இதழ்களில் புகுந்ததனால் மிகப்பெரும் கவனிப்பை பெற்ற, தம்மை மிகப்பெரிய சிந்தனாவாதிகளாக காட்டிக்கொள்ளும் ஞாநி போன்றவர்களின் இக்கருத்துகள் மிகப்பெரும் விஷ வித்துக்களாக உருவெடுக்க கூடியவை. “ஆயுதப் போராட்டம் தொடங்கியபோதும் ஈழத்தமிழர்கள் ஓரணியில் இருக்கவில்லை, அதற்கு காரணம் அவர்களுக்கிருந்த வேறுபட்ட அரசியல் பார்வைகள்தான். அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்கள் ஒற்றுமையாக இயங்கியிருந்தால் வெகு சுலபமாக அன்றைக்கே தனி ஈழத்தினை பெற்றிருப்பர்” என்கிற கருத்தை கண்டுபிடித்துள்ளார் ஞாநி. ஊர் கூடி தேரிழுத்தால் வந்து சேரும் என்கிற பழமொழிக்காலத்தில் இருக்கிறீர்கள். நன்றி. இக்கருத்தை இருபதாண்டுகளுக்கு முன்னர் நீங்கள் சொல்லியிருந்தால் கூட சிலவேளை ஏற்றிருக்கலாம். ஆனால் இன்று அங்கு நடைபெறுவது பெருமெடுப்பிலான இனவழிப்பு. அதுமட்டுமல்ல கொழும்பில் இருக்கும் விடுதலைப்புலிகளால் நிராகரிக்கப்பட்ட ஏனைய தமிழ் இயக்கங்கள் இந்த இனவழிப்பின்போது ஏன் மௌனமாக உள்ளன என்ற கேள்விக்கு ஏதாவது பதில் கைவசம் வைத்துள்ளீர்களா? எல்லாம் புரிந்த மிகப்பெரும் மனிதாபிமானியான உங்களுக்கு இது ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. இயக்கங்கள் பிழை விட்டதாக வைத்துக்கொண்டாலும் அதற்காக ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. அடுத்ததாக தோல்வியுற்று வரும் புலிகள் சிங்கள அரசின் தாக்குதலை நிறுத்தவும் அந்த நேரத்தில் தம்மை வலுப்படுத்தவும் தான் தமிழகத்தில் உள்ள மனித நேய உணர்வையும், தமிழ் உணர்வையும் பயன்படுத்த முயல்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் இந்த முழு கட்டுரையிலும் ஒரு தடவை கூட திரள் திரளாக மக்கள் சாகின்றார்களே என்பதை நீங்கள் ஏன் உணர்த்தவில்லை. கட்டுரை முழுவதும் சிங்கள அரசு என்றே குறிப்பிடுவதால், அது சிங்களவர்களின் அரசு, தமிழர்களிற்கு பங்கில்லாதது என்கின்ற ஒரு கட்டமைப்பும் காணப்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒப்புக்கொண்ட இந்த ஒற்றுமைக்கு நன்றிகள்.

தமிழர்களும் சிங்களவர்களும் ஒற்றுமையாகவேண்டும் என்ற ஒரு உயரிய சிந்தனையை சொல்லிவிட்டு, அப்படி ஒற்றுமையானால்தான் தமிழர்களின் கல்வி மேம்பாட்டை சிங்களவர்களும் சிங்களவர்களிடமிருந்து நல்ல படங்களை எடுப்பது எப்படி என்று தமிழர்களும் அறிந்துகொள்ளமுடியும் என்றும் கூறியிருக்கிறீர்கள். கட்டாய மதுவிலக்கை அமுல் படுத்தவேண்டும் என்று அடிக்கடி எழுதும் ஞநி நீங்கள் தானே என்று எனக்கு குழப்பமாகவுள்ளது. ஞாநி, தென்னிந்திய திரைப்படங்களின் பாணியை விட்டு விலகி உய்ர் ரசனையுடன் படம் எடுப்பதல்ல இப்போதைய பிரச்சனை, இலங்கையில் இருக்கும் தமிழர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கே உயிருடன் வாழ்வார்கள் என்பதே பிரச்சனை. பாலியல் பலாத்காரத்தில் கைதுசெய்யப்பட்ட நடிகர் எப்படி ராணுவம் செய்யும் பாலியல் பலாத்காரம் பற்றி பேசுவார் என்கிறீர்கள், திரைப்பட படப்பிடிப்பிற்காக சிம்பு ஏன் கண்டி சென்றார் என்கிறீர்கள் இது ஒரு வறட்டு வாதம். ஒரு சினிமா நன்றாக இல்லை என்று விமர்சகன் சொன்னால் அப்ப நீயே படம் எடு என்று இயக்குநர் சொல்வதற்கொப்பானது. எது பற்றியும் முழுமையாக தெரிந்த ஒருவனே அது பற்றிய தொழிலில் இறங்கவேண்டும் என்று சொன்ன நீங்கள் மருத்துவம், உளவியல், பாலியல் எல்லாம் கற்று முடித்தா அறிந்தும் அறியாமலும் என்று ஆனந்த விகடனில் எழுதினீர்கள்????

முன்பொருமுறை இயக்குநர் துசாரா பீரிஸ் தாக்கபட்டபோது நீங்கள் இரட்டை குவளை முறையை எதிர்க்காத சுபவீ ஏன் இதில் தலையிடுகிறார் என்கிற ஒரு மகா அபத்தமான கேள்வியை எழுப்பியிருந்தீர்கள். இயக்குநர் பீரிஸ் தாக்கப்பட்டதை அணுவளவு கூட ஏற்றுக்கொள்ளாத என் போன்ற ஆயிரக்கணக்கானோர் உள்ளோம். ஆனால் நீங்கள் காட்டும் உதாரணம் மிகத்தவறானது. ஞாநி, ஒரு தவறுக்கு இன்னொரு தவறு ஒருபோதும் நியாயமாகாது. விடுதலைப்புலிகளைப்பற்றி மிகப்பெரிய அளவில் ஊடகங்களினூடாக அவர்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரத்தை சில சுயநலவாதிகள் மூலம் கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சிங்கள அரசின் பிரச்சார உத்தி ஒன்றிற்கான எதிர்வினைதான் அது. அசர் தாக்கபட்டது பிழ என்றபோதும் கூட இப்படியான உங்களின் விதண்டாவாதங்களின் சரியான பதிலடி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கூரிய பதில் என்பது என்கருத்து. (பீரிஸ் தாக்கப்பட்டிருக்க கூடாது, அவரது படத்தை சுதந்திரமாக வெளியிட்டு, பின்னர் தமது தரப்பை நியாயப்படுத்தி விடுதலைப்புலிக்ளா தரப்பும் ஒரு படம் தயாரிக்கலாம் என்று ஞாநி கூற, அதாவது நடு வீட்டில் நரகல் வந்துவிட்டால், அதையும் இருக்க விட்டு விட்டு, ஒரு ஊதுபத்தியையும் ஏற்றி வைக்கலாம் என்கிறீர்களா என்று திருமாவளவன் கேட்டார்.)

சின்னக்குத்தூசி, சோலை, ஞாநி, சோ என்று மிகச்சில அரசியல் விமர்சகர்களே தமிழ் மொழியில் இருக்கின்ற் சூழலில், நால்வருமே பக்கச் சார்புடையவர்களாகிப்போனது பெரும் சோகம். அதிலும் ஞாநி வேண்டும் என்றே கட்டமைக்கும் கலகக்காரர் தோற்றம் மிகுந்த விமர்சனத்துகுள்ளாக்கவேண்டியது. மகாபலிபுர புலிக்குகையில் குடுபத்தினருடன் வந்து இளைப்பாறி கலாஷேத்திராவின் நடன நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் ஈழத்து முத்லமைச்சராக பிரபாகரன் வரும் நாளையும், ஈழத்து முதலமைச்சராக சிங்கள இயக்குனர் பிரசன்னாவுக்கு சிறந்த இயக்குனர் என்று பிரபாகரன் பரிசளிக்கும் நாளையும் கனவுகாண்கிறேன் என்றெல்லாம் கோமாளித்தனமாக இந்த இக்கட்டான நிலையில் ஒரு நியாயமான போரட்டத்தை மசாலா சினிமா போல காட்டாதீர்கள். பிரபாகரனின் ராணுவ அரசாங்கத்தைவிட, கலைஞரின் ஊழல் அரசாங்கம் மக்களுக்கு அதிகம் உதவியிருக்கிறதென்று விஷன் தோய்ந்த சொற்களை கூறியுள்ளீர்களே, தாயின் கருவில் இருக்கும் பிள்ளை சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்று நாம் கவலைப்படுகிறோம், பிறக்கும் பிள்ளை வளர்ந்து சிலவேளை கெட்டவன் ஆகிவிட்டால் என்ன செய்வது, எனவே பிள்ளை இறந்தால் கூட கவலைப்படாதீர்கள் என்பது போலிருக்கிறது உங்கள் கருத்து. பிரபாகரன் ஈழத்தின் முதல்வராகவேண்டும் என்ற உங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும். ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, விகடன், பண்பலை வானொலி, என்று எல்லா இடங்களிலும் துரத்தப்பட்டு ஓடிவந்ததால் உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவேண்டும் என்ற எமது கனவு என்றேனும் நிறைவேறுமா