உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து

Event

புரூஸ் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட ஸ்கந்தா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப் பேர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் சென்ற வாரம் ரொரன்றோவில் இரண்டு இடங்களில் நடைபெற்றிருந்தன.  இவற்றில் வெள்ளிக்கிழமை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன்.  Continue reading “உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து”

Happy Together திரைப்பட அறிமுகம்

happytogether

In the mood for love திரைப்படத்தின் இயக்குனர் என்றே எனக்கு அறிமுகமான Wong Kar-wai, அதற்கு முன்னதாகவே இயக்கிய முக்கியமான திரைப்படமான Happy Together 1997 இல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது.  1997 ஆம் ஆண்டுக்குரிய கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வொங் கார்-வைக்குப் பெற்றுத்தந்த  இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் Tony Leung Chiu-wai, Leslie Cheung, Chang Chen ஆகியோர்  நடித்திருக்கின்றார்கள்.  Continue reading “Happy Together திரைப்பட அறிமுகம்”

தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்

முன்பொரு முறை அ. மார்க்ஸ் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில்  “ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம்” என்று குறிப்பிடிருந்தேன்.  துரதிஸ்டவசமாக இதே மேற்கோளை எனக்கு அதிகம் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனுடனும் இணைத்துப் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளேன்.
 

கனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன் பக்கங்கள் என்கிற பெயரில் பத்தி ஒன்றினை தேவகாந்தன் எழுதி வருகின்றார்.  அதில் இரண்டாவது கட்டுரையாக அவர் எழுதிய கட்டுரை பற்றிய சில எதிர்வினைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.  மேற்படி கட்டுரையை அவர் தனது வலைப்பக்கத்திலும் (http://devakanthan.blogspot.com/2010_12_01_archive.html) பதிவு செய்திருக்கிறார்,  எனவே இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க முன்னர் அவர் எழுதிய கட்டுரையை மேற்படி இணைப்பில் சென்று வாசிப்பது புரிதலுக்கு இலகுவாக இருக்குமென்று நம்புகின்றேன்.  தேவகாந்தனின் கட்டுரையை வெளியிட்டிருந்த தாய்வீடு பத்திரிகை இந்த எதிர்வினையையும் வெளியிடுவதே அதிகம் பொருத்தமானது என்றாலும், அவ்வாறு வெளிவராதவிடத்து குறைந்த பட்சம் எனது வலைப்பதிவுகளிலேனும் இதற்கான எதிர்வினையை பதிவு செய்யவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.
 

தற்பாலினர் என்ற விடயத்தில் உரையாடல் ஒன்றுக்கான எல்லா வாசல்களையும் மூடி வைத்து விட்டு ஒற்றைப்படையான தீர்ப்பொன்றை வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.    அதே நேரம் தற்பாலினர் சார்ந்த விடயங்கள் போன்ற ஒருவரது பாலியல் விழைவுகள் சார்ந்த தேர்வுகள் அவரது அடிப்படை உரிமை சார்ந்தே கருதப்படவேண்டியன என்பதே எனது நிலைப்பாடு.  அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், தற்பால் விழைவாளர்கள் தமது பாலியல் தேவைகளுக்காக பிறரைக் கட்டாயப்படுத்தியதையும், துஷ்பிரயோகம் செய்ததையும் கண்டதாலேயே தான் தற்பால் விழைவோரை எதிர்க்கத் தொடங்கியதாக.  மிக மிகத் தவறான நிலைப்பாடு இது.  இதே அடிப்படையில் பார்த்தால் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் மிக அதிகம் என்பதை அனேகம் பேர் அறிந்தே இருப்போம்.  அவற்றில் பெரும்பாலானவை ஆண்களாலேயே செய்யப்படுகின்றன.  ஒருவர் இதை முன்வைத்து நான் எதிப்பால் விழைவோரை எல்லாம் வெறுக்கிறேன் என்று சொன்னால் அது அவரது புரிதலின் குறைபாடா அல்லது எதிப்பால் விழைவோரின் தவறா?.  பாலியல் துஷ்பிரயோகங்களை முன் வைத்து ஒரு சாராரின் பாலியல் விழைவையும் கூடவே அவர்களையும் வெறுப்பது / நிராகரிப்பது என்பது தவறான முன்னுதாரனமே.  கட்டுரையில் ஓரிடத்தில் தேவகாந்தன் கூறுகிறார்,

“இவர்களில் சிலவகையானவர்களுடன் எனக்கு பல்வேறு தருணங்களில் பழகுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.  இவர்களது வாழ்வு நிலையின் நேரடித் தரிசனம் என்னை அதிரவே வைத்திருக்கின்றது”

என்று.  தேவகாந்தன் நேரடித் தரிசனம் என்று எதனை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.  அதையும், அவை எவ்வாறு தற்பாலினரை வெறுப்பதற்குக் காரணமாயின என்பதையும் தேவகாந்தன் விளக்கமாக எழுதவேண்டும்.  மூன்றாம் பாலினர்களுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்களும் முன்னர் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த மூன்றாம் பாலினர் பிச்சை கேட்கும்போது செய்யும் வற்புறுத்தல்களையும், அவ்வாறு பணம் கொடுக்கப்படாதவிடத்து கேவலமான முறையில் திட்டுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாற்றுகளையும் முன்வைப்பது வழக்கம்.  ஆனால் இவற்றுக்கான அடிப்படையைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.  சமூக அளவில் எல்லாவிதமான அங்கீகாரங்களும் மறுக்கப்பட்டிருந்த இந்தியச் சூழலில் (இது போன்ற குற்றச்சாற்றுகள் இந்தியாவை ஆதாரமாக வைத்தே முன்வைக்கப்பட்டன)  உயிர்வாழ்வதற்கான தேவையே அவர்களின் இது போன்ற நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.  மூன்றாம் பாலினரின்வாழ்க்கை நிலைகளைப் பேசுகின்ற ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல் –வாழ்வியல்”, லிவிங்ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையான “நான் சரவணன் வித்யா” போன்ற புத்தகங்கள் இந்தியச் சூழ்நிலையில் மூன்றாம் பாலினர் உயிர் வாழவே எதிர் கொள்ளக் கூடிய சிக்கல்களைப் பேசுகின்றன.  எனவே மூன்றாம் பாலினர்கள் வாழ்வதற்கான எல்லா உரிமைகளையும் தனக்கிருக்கின்ற பெரும்பான்மை என்கிற பலத்தால் மறைத்தும் தடுத்தும் வைத்துள்ள  சமூகம் மீது எமது கோபத்தைக் காட்டாமல் மூன்றாம் பாலினர் மீது எமது வெறுப்பைக் காட்டுவது எப்படிப் பொறுத்தமற்றதோ அதை ஒத்ததே தற்பாலினர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல், அவர்களைத் தொடர்ந்து கேலிக்கும், அவதூறுக்கும் ஆளாக்கிவரும் பெரும்பான்மை சமூகத்துக்கு தற்பாலினர் பற்றிய புரிதல்களையும், அவர்களுக்கான எல்லா நியாயங்களையும் புரியவைக்காமல் / அப்படிச் செய்வதற்கான முயற்சிகள் எதையும் எடுக்காமல் தற்பாலினர் மீதான வெறுப்பைக் கக்குவதும்.  இந்த அடிப்படையில் தேவகாந்தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற

“…..அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள், அரவாணிகள் போல தற்பால் புணர்ச்சியாளர்ளையும் எளிதில் என்னால் வரவேற்று விட முடியாதிருக்கின்றது.  அது ஒரு தனி மனித பிரச்சனையே எனினும்  அதையும் மீறி அது ஒரு தனி மனித வக்கிர நிலையை அடைந்து வருவதால், இது சமூகப் பிரச்சனையும் தான் ஆகின்றது என்பதே என் திடமான கருத்து.”

என்னளவில் மேலே சொன்ன கருத்துக்களை துளியேனும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தேவகாந்தனுக்கு அவரது கருத்துக்களை வெளியிடுவதற்கான எல்லா உரிமைகளும் இருக்கின்றது என்பதில் நான் குறுக்கிடவில்லை, ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளையும், கருத்தை வெளியிடுகிறேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பைத் தூண்டும் வார்த்தைகளையும் வெளியிடுவது எந்த விதத்திலும் ஏற்புடையதன்று.  தவிர கட்டுரையில் “அதையும் மீறி அது ஒரு தனி மனித வக்கிர நிலையை அடைந்து வருவதால்” என்று கூறுகின்ற கட்டுரையாளர் அவ்விதம் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடாமல், அதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.
 

அது போலவே கட்டுரையில் தற்பாலினர் என்பதற்குப் “தன் பால் புணர்ச்சியாளர்” என்கிற பதமே பிரயோகிக்கப்படுகின்றது.  பாலியல் விழைவுகள் குறித்த சரியான தமிழ்ச் சொற்கள் இல்லையென்பது உண்மையே.  Friends Against Homophobia என்கிற பெயரில் நாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்திலும் தமிழில் பாவனையில் இருக்கின்ற பாலியல் தேர்வுகள் குறித்த சொற்களுக்காக பற்றாக்குறை பற்றியே பலராலும் பேசப்பட்டது.  சிநேகிதன் அமைப்பைச் சார்ந்த டன்ஸ்ரனுடன் பேசியபோது அவரும் இது பற்றித் தெரிவித்ததாக நண்பர்களூடாக அறிந்திருக்கிறேன்.  ஆனால், என்னதான் சொற்கள் இல்லையென்றாலும் சில சொற்களைப் பிரயோகிப்பதைத்  தவிர்ப்பதே ஆரோக்கியமானது.  தன் பால் புணர்ச்சியாளர்கள் என்று சொல்கின்ற போது அந்த உறவுகளை அவர்கள் புணர்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கின்ற பாலினர் சார்ந்து மாத்திரமே பிரித்து விடுவதாகா ஆகிவிடாதா?  ஒரு உதாரணத்துக்கு எதிர்ப்பால் விழைவோர்களை “எதிர்ப்பால் புணர்ச்சியாளர்” என்று அழைத்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.  இந்த எதிர்வினையில் நான் உபயோகித்த “எதிர்ப்பால் விழைவோர்” என்ற அடையாளப்படுத்தலிலும் கூட அதற்கேயுரிய குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.  தவிர எனக்கு எந்தவிதமான அடையாளப்படுத்தல்களிலும் உடன்பாடில்லை.  (அடையாளப்படுத்தல்களின் அரசியல் பற்றி இன்னும் ஆழமாக வாசிக்காமல் அது பற்றிப் பெரிதாகப் பேசவேண்டாமென்று நினைக்கின்றேன்.)  ஆனால் “எதிப்பால் புணர்ச்சியாளர்கள்” என்று சொல்லும்போது அவர்களின் உறவு நிலையை முழுக்க முழுக்கப் புணர்ச்சியுடனேயே சம்பந்தப்படுத்திப் பார்ப்பதாகிவிடுகின்றது அல்லவா.  2009ல் வெளியாகி இருந்த கோவா என்கிற தமிழ்த் திரைப்படமே தமிழ்ச்சூழலில் தற்பால் விழைவோரைப் பற்றி அதிகம் சரியாகக் காண்பித்த திரைப்படமாக இருக்கின்றது.  சிநேகிதம் அமைப்பபச் சார்ந்த டன்ஸ்ரன், சிவா, விஜய் ஆகியோருடன் கறுப்பி செய்திருந்த நேர்காணலிலும் (இணைப்பு ) இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  எனவே இனிவரும் காலங்களிலாவது நாம் ஓரினச் சேர்க்கையாளர், தன் பால் புணர்ச்சியாளர் போன்ற சொற்களைப் பாவிப்பதை பிரக்ஞை பூர்வமாகவே தவிர்க்கவேண்டும்.
 

தவிர கட்டுரையில் இன்னோர் இடத்தில் தேவகாந்தன் குறிப்பிடுகிறார்

“தற்பால் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவது கனடா.  அது நல்லது.  அந்தளவுதான் அந்த விவகாரத்தில்.  சமூக அக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்ல வேண்டியதில்லை.  அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம் மட்டுமாக எடுத்துக் கொண்டு ஒதுக்கி வைப்பதுதான் விவேகம்.”

இந்தக் கூற்று முழுக்க முழுக்க ஆட்சேபத்துக்குரியது.  முதலில் கனடா தற்பால் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவது மட்டுமே என்பதாலும், நிறைய உலக நாடுகளில் அது அங்கீகரிக்கப்படாத ஒன்றாயும், சில நாடுகளில் சட்டவிரோதமாயும் இருக்கின்றது என்பதாலும் நாம் தற்பால் விழைவோரின் திருமணம் செய்யும் மற்றும் இதர உரிமைகளையும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.  கனடாவையும் தற்பால் திருமணங்களை அங்கீகரித்த பிற நாடுகளையும் (http://en.wikipedia.org/wiki/Same-sex_marriage ) முன்னுதாரணமாய்க் கொண்டு பிற நாடுகளிலும் இது போன்ற உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கவேண்டுமே தவிர பல நாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி இவர்களை ஒதுக்குவது முறை அன்று.  சவூதி அரபியாவில் இன்றுவரை பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி கிடையாது.  எத்தனையோ நாடுகளில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஓட்டுரிமையும் கிடையாது.  கட்டுரையில் தேவகாந்தன் தான் ஏற்றுக்கொள்வோராய்க் குறிப்பிட்டிருக்கின்ற மூன்றாம் பாலினர் கூட பெரும்பான்மையான நாடுகளில் இன்னமும் முழுக்க முழுக்க அங்கீரிக்கப்பட்டவர்கள் அல்ல.  எனவே உலக நாடுகளால் அங்கீகாரம் கிடைகின்ற மட்டத்தையே அளவு கோலாக்கி எம் கணிப்புகளை முன்னெடுப்பது முறையானதன்று.
 

அது போலவே கட்டுரையின் நிறைவுப் பகுதியில் தேவகாந்தன் குறிப்பிடுகின்ற கருத்துக்களும் எந்த விதத்திலும் ஏற்புடையதன்று.

“அது விபச்சாரம் போல மிகப் புராதனமானது.  சுயவின்பத் திருப்திப்படுத்தல் போல உயிரின இயல்பானது.  ஆனாலும் விபச்சாரத்தில் ஒரு சமூக நீதியின் கூறு ஒட்டிக் கொண்டிருக்கும்.  சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின் விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும்.  தன் பாற் புணர்ச்சியாளரிடத்தில் மனோவிகாரத்தின் கூறு மட்டும் காணக் கிடைக்கும்.
வெற்றிலை, புகையிலை, கள்ளு வரைக்கும் விகல்பம், கஞ்சாவும் அபினும் இடைநிலை, மறுப்பதற்கும் ஒத்துக்கொள்வதற்குமான நிலை, அது போல கொக்ஹேயினும், ஹெரோயினும் கருதப்படுவதில்லை”

என்கிற இந்தக் கருத்து ஒரு சாராரின் வாழ்க்கைத் தேர்வுகளை, பாலியல் தேர்வுகளை சர்வ சாதாரணமாக புறக்கணித்துத் தீர்ப்பெழுதி நகர்கின்றது.  கட்டுரையின் இறுதி வசனமாக “இதற்கு மேலே இச்சைகளின் கடும்கூத்தை, அதை இச்சிப்பதற்கான முயற்சிகளை வக்கரித்ததாய் நிராகரிக்க ஒரு பொது ஜனத்துக்கு நிராகரிக்க எப்போதும் உரிமை உண்டு” என்கிறார்.  தாம் சரியென்று கருதுவதை வெளியிடுகின்ற உரிமை பொது ஜனத்துக்கு இருக்கின்றபோது அது இன்னொரு சாராரின் இருப்பையே கேலி பேசுவதாகவோ அல்லது இருப்பையோ நிராகரிப்பதாயோ இருந்துவிடக்கூடாது என்பதும் முக்கியமானது.  அந்த வகையில் நான் அதிகம் மதிக்கின்ற எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனின் இந்தக் கட்டுரை மிகப் பெரிய ஏமாற்றமே.