திரைப்படங்களாகும் நாவல்கள்/இலக்கியங்கள்

செம்மீன்நாவல்களையும், சிறுகதைகளையும் திரைப்படங்களாக்குவது பற்றி பல்வேறு இடங்களில் பேசப்பட்டிருக்கின்றது.  தமிழ்த் திரைப்படங்களில் கதையம்சம் மிகவும் பலவீனமாக இருப்பது பற்றிப் பேசும்போதெல்லாம், நாவல்களும், இலக்கியங்களும் திரைப்படங்களாக்கப்படவேண்டும் என்பதுவும் பரவலாக முன்வைக்கப்படும் ஆலோசனை.  ஆரம்ப காலங்களில் தனது நாவல்களான காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, பிரியா போன்றன திரைப்படங்களாக எடுக்கப்பட்ட போது அவை நாவல்களாக இருந்தபோது கொண்டிருந்த ஜீவனை இழந்து, மிகவும் அந்நியமாக வெளிவந்ததாக சுஜாதா பல்வேறு பத்திகளில் எழுதி இருக்கின்றார்.  பதின்மங்களில் பலருக்கும் பிடித்திருந்த அவரது பிரிவோம் சந்திப்போம் பின்னர் ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் திரைப்படமான போதும் பாத்திர உருவாக்கங்கள் வெறுமையானவையாக, மிகவும் நாடகத்தன்மையானவையாக இருந்தன.  அதே நேரம் நாவல்கள் / தொடர்கதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டால் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்த காலம் ஒன்றும் கூட இருந்திருக்கின்றது.  Continue reading

அதனிலும் கொடிது முதுமையில் தனிமை

ஆரஞ்சுஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.  இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது.  நன்றாக எடுத்திருக்கக் கூடிய கதை.  ஆனால் திரைக்கதையின் பலவீனத்தாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ஓரளவு வெளிப்படையாகவே தெரிந்த குழப்பத்தாலும், பொறுத்தமற்ற பாத்திரத் தேர்வுகளாலும் சற்றே தள்ளாடித் தள்ளாடி…. ஆயினும் நல்ல திரைப்படம் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் விஜய் சேதுபதியிடமும், பிஜூ விஸ்வநாத்திடமும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.  இத்திரைப்படத்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்துடன் சரியான கதை, திரைக்கதைகள் நோக்கி அவர் நகரும்போது அதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கலாம். Continue reading

கோ மற்றும் பயணம் திரைப்படங்களை முன்வைத்துச் சில கருத்துக்கள்

1-

கோ திரைப்படத்தைச் சற்றுத் தாமதமாக நேற்றுத்தான் பார்த்தேன்.  சினிமா போன்ற வணிக ஊடகங்கள் எப்படி மக்கள் மத்தியில் விஷம் தோய்ந்த கருத்துக்களை விதைக்கின்றார்கள் என்பதற்கு நல்லதோர் உதாரணம் இந்தத் திரைப்படம்.  நக்சல்கள் பற்றி இவ்வளவு மோசமாக அண்மைக்காலத்தில் விபரித்த திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  படத்தில் தின அஞ்சல் என்கிற பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக / செய்தியாளனாக வரும் ஜீவா (படத்தில் இவர் கமராக்காரன் என்றே பிறரால் சுட்டிக் காட்டப்பட்டபோதும், சமயங்களில் செய்தி சேகரிக்கும் பணிகளையும் செய்கிறார்) பல இடங்களில் சமூகப் பிரக்ஞையுடனே செயற்படுகிறார்.  ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி என்று எல்லாக் கட்சிகளின் வண்டவாளங்களையும்  தண்டவாளம் ஏற்றுகிறார்.  சமூகம் மீதான அக்கறை கொண்ட இளைஞர்களின் சிறகுகள் என்ற அமைப்பு ஆட்சியைப் பிடிக்க உதவுகிறார்.  ஆனால் அவரே கூட நக்சல்கள் என்றால் காலில் அமிலமே கொட்டியது போல அலறுகிறார்.
 நக்சல்கள் என்றாலே தீவிரவாதம், குண்டு, கொலை, கொள்ளை என்றே படமெங்கும் தொடர்புபடுத்தப்படுகின்றது.  ஒரு பத்திரிகையாளரின் அறிவே நக்சல்களை இந்தக் கண்னோட்டத்துடன் தான் பார்க்கும் என்ற இயக்குனரின் அறிவு எத்தனை மொக்கைத்தனமானது.  இத்தனைக்கும் இந்தத் திரைப்படம் பற்றிய எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இத்திரைப்பட இயக்குனர் கே. வி ஆனந்த் முன்னர் புகைப்படக் கலைஞராக பணி புரிந்தவர், அந்த அனுபவங்களை மையமாக வைத்தே இத்திரைப்படம் உருவானது என்று தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டது.  அவரது மேலான புரிதல்களை வைத்துப் பார்க்கின்றபோது அவர் வேலை செய்த ஊடகங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கக் கவலையாக இருக்கின்றது.  இதே பாதையில் போனால் தமிழ் சினிமாவில் அடுத்த ஷங்கராக உருவெடுக்க சர்வ வல்லமையும் பெற்றவராக கே.வி. ஆனந்த் ஒருவரே தகுதி பெற்றவராவார்.  வாழ்த்துக்கள்.
**திரைப்படத்தை என்னுடன் பார்த்த என் தம்பி சுட்டிக்காட்டிய சுவாரசியமான ஒரு விடயம் :   கருணாநிதி தேர்தலில் வெற்றி பெற்ற அதே 50, 000 வாக்குகளாலேயே திரைப்படத்தில் முதல்வராகக் காட்டப்படும் பிரகாஷ் ராஜும் வெற்றி பெறுகிறார்.

-2-

கோ திரைப்படம் போலவே அண்மைக்காலத்தில் வெளிவந்த மிக மோசமான இன்னுமொரு திரைப்படம் பயணம்.  எனக்குப் பிடித்த நடிகர்களுள் ஒருவரான பிரகாஷ் ராஜுக்காக இந்தத் திரைப்படத்தை ஆவலுடன் பார்க்க விரும்பினேன்.  பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் திரைப்படங்கள் அனேகம் எனக்கும் ரசனை பூர்வமாக விருப்புடையனவே.  சில சில விமர்சனங்கள் இருந்தாலும் மொழி, அபியும் நானும், கண்ட நாள் முதல், அழகிய தீயே போன்றவை நல்ல உதாரணங்கள்.  ஆனால் பயணம் திரைப்படம் மிக மிக ஆபத்தான, இஸ்லாமிய வெறுப்புணர்வை தூபம் இட்டு வளர்க்கக் கூடிய இந்துத்துவப் பிரதியாகவே அமைந்தது.  அதே நேரத்தில் திரைப்படத்தில் கிறீஸ்தவப் பாதிரியார் புனிதத்துவத்தின், அன்பின் உச்சமாகக் காண்பிக்கப்படுகிறார்.  திரைப்படம் பற்றி தம்பியுடன் பேசிக் கொண்டிருந்த போது, வெளிநாட்டுத் திரைபப்டக் கண்காட்சிகளில் திரையிடப்படும்போது / போட்டிக்கு அனுப்பப்படும்போது பாதிரியாரை தியாகத்தின் உச்சமாகக் காண்பிப்பது வணிக ரீதியாக உதவும் என்றான் (கவனிக்க மேற்குலகில் கட்டமைக்கப்படும் கிறீஸ்தவ X இஸ்லாமிய விம்பம்).  மறுப்பதற்குக் கடினமாகத்தான் இருந்தது.


-3-

இந்தியாவில் சம காலத்தில் இருக்கின்ற பிரச்சனைகள் பற்றியே இத்தனை மேம்போக்கானதாயும், எந்தப் புரிதலும் இல்லாமலேயும் திரைப்படங்கள் எடுப்பவர்கள் எப்படி ஈழப் பிரச்ச்னை பற்றி சரியாக பிரதிபலிப்பார்கள் என்பதே எனது கேள்வி.  தமிழ்த் திரைப்பட உலகம் எந்தப் பிரக்ஞையும் இல்லாத மந்தைக் கூட்டமாகவே தொடர்ந்து இயங்கி வருகின்றது.  அவ்வப்போது சில விதி விலக்குகள் நிகழ்ந்தாலும் தமிழ்த்திரைப்படங்களைத் தொடர்ந்து கவனித்து வருபவர்களால்  இது போன்ற முடிவுக்கே வரமுடியும்.  இட ஒதுக்குமுறையால் மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தவன் உயர்கல்விக்கான அனுமதி மறுக்கப்பட்டான் என்ற கோமாளித்தனங்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் மாத்திரமே நிகழும்.  இது பற்றி எந்தக் கேள்வியும் இல்லாமல் இப்படியான கருத்துக்களைச் சொல்கின்ற திரைப்படங்கள் பெறுகின்ற வெற்றிதான் தமிழ்ச் சமுதாயம் பற்றிய நம்பிக்கையீனத்தை வலுப்பெற வைக்கின்றது.  இது போன்ற பிரச்சனைகளில் இந்தத் திரைப்படங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரச்ச்னையில் இட ஒதுக்கீடை மோசமாகப் பிரதிபலித்தன என்பது மாத்திரமன்றி, ஆதிக்க சாதிகளுக்கு வக்காலத்து வாங்கின என்பதே உண்மை.  திரைப்படங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் இது போன்ற அரசியல்கள் பற்றித் தொடந்து பேசப்பட வேண்டும்.

ஏதிலிகள் சார்பில் நாங்கள் ஒழுங்கு செய்திருந்த அமர்வொன்றில், “the boy with striped pyjamas” என்கிற திரைப்படத்தினை திரையிட்டிருந்தோம்.  அத் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் யூதர்களுடன் சேர்ந்து, யூதச் சிறுவன் ஒருவனுடன் விளையாடச் சென்ற நாசிச் சிறுவனும் கொல்லப்படுவதாகக் காட்சி வரும்.  அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதத்தைச் சுட்டுக்காட்டிய இளங்கோ, அந்த நாசிச் சிறுவனின் இறப்பே அதிகம் பாதிப்பை ஏற்படுத்துமாறு படமாக்கப்பட்டிருந்தது என்று சுட்டிக் காட்டி இருந்தார்.  இரண்டாம் உலகப் போர் பற்றி இது வரை ஹொலிவூட்டில் இருந்து வெளியான திரைப்ப்படங்களில், நாசிகளின் கொடுமைகள், ஜப்பான் செய்த கொடுமைகள் என்று நிறையத் திரைப்படங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.  அதே நேரம் எத்தனை திரைப்படங்கள் அமெரிக்கா ஹிரோஷிமா, நாகசாகியில் மேற்கொண்ட அணுகுண்டுத் தாக்குதல் பற்றிக் காட்டியிருக்கின்றன என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.  உடனடியாக நினைவுக்கு வருவது பேர்ல் ஹாபர் திரைப்படம் என்றாலும் பேர்ல் ஹாபரில் “இப்படியாக இவர்கள் செய்த அட்டூழியங்களையும் அதனால் ஏற்பட்ட உலக அழிவுகளையும் நிறுத்தற் பொருட்ட அமெரிக்கா செய்த  வேறு எந்தத் தேர்வும் இல்லாத நடவடிக்கையாகவே”  அந்த அணுகுண்டுப் பிரயோகம் காண்பிக்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தக்கது.  ஊடகங்களில் எவர் அதிகாரம் மிக்கவராக இருக்கின்றாரோ அவரே அதிகாரப் படிநிலைகளில் உச்சமாக இருக்கின்றார் என்பதற்கு இது நல்லதோர் உதாரணம்.  இன்னுமோர் சிறந்த உதாரணம் கருணாநிதி தனது காலை உணவிற்கும், மதிய உணவிற்கும் இடையில் கடற்கரையில் எடுத்த சன் பாத்தினை உண்ணாவிரதம் என்று அவரது குடு(சு)ம்ப ஊடகங்கள் கட்டமைத்தமை.  தமிழர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்படுகின்ற தொலைக்காட்சி சானல்களாக சன், கலைஞர் தொலைக்காட்சிகள் இருப்பதும், அதிகம் விற்கப்படுகின்ற வார சஞ்சிகைகளில் ஒன்றாக குங்குமம் இருப்பதும், அதிகம் விற்கப்படுகின்ற மஞ்சள் பத்திரிகையாக நக்கீரன் இருப்பதும், மற்றும் கருணாநிதி ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து அதிகம் மக்களை சென்றடைவதும் இதற்குக் காரணங்களாக இருக்கின்றன.  வெகுசன ஊடகங்கள் பிரதிபலிப்பவை பற்றி தொடர்ச்சியாகக் கேள்விக்குள்ளாக்கவேண்டும் என்பதற்கும், அவை தொடர்ந்து கட்டுடைப்பு செய்யப்படவேண்டும் என்பதற்கும் இதைத்தவிர வேறேதும் சான்றுளதோ??

நட்பென்றால் என்னவென்று எனக்குத் தவணை முறையில் வகுப்பெடுத்த என் பிரசன்னாவிற்கு.