கண்ணை கட்டி கோபம்…………

 கடந்து போன எமது வாழ்வை வாழ்வின் அமைதியான ஒரு பொழுதில் திரும்பிப் பார்க்கும் போது முதல் காதல், முதல் முத்தம் போல சிறு வயதில் நண்பர்களுடன் கோபித்துக்கொண்டு கதைக்காமல் விட்ட, மீண்டும் கதைக்க தொடங்கிய நினைவுகளும் நெஞ்சில் பச்சை வயலில் பாத அடையாளம் போல மாறாமல் தொடர்கின்றன. சற்று பக்குவப்பட்ட இந்த வயதில் அந்த கோபங்கள் எல்லாம் ஒரு நகைச்சுவைக்கு இடமானதாக இருந்தாலும் எம் மனதை அதே பால்ய மனதாக்கி கொண்டு பார்த்தால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத, பேச நினைக்க கூட முடியாத அந்த குழந்தை வயதில் எம்மிடம் இருந்த, இப்பொழுது தொலைந்து போன அந்த தெய்வ நிலையை எம்மால் மீண்டும் நினைவுக்கு கொண்டுவரமுடியும்.

உணர்ச்சிவசப்பட்டு திடீர் முடிவுகளை எடுப்பதற்கும் முற்கோபத்துக்கும் நண்பர்கள் மத்தியில் சற்று பிரபலமான எனக்கு, நண்பர்கள் இருக்கின்ற அதே அளவு பிழையான புரிதல்களால் தொலைந்து போன உறவுகளும், கோபித்து கொண்டிருந்துவிட்டு பின்னர் மீண்டும் கதைத்து கொண்ட நட்புகளும் ஏராளம். பாயாசத்தின் அடியில் அடைந்து போயிருக்கும் முந்திரி பருப்பு போல மனதடியில் தேங்கியிருந்த நினைவுகளை எல்லாம் என் நிச்சயதார்த்தத்திற்கு எனது ஆருயிர் நண்பன் தெய்வீகன் எழுதிய ஒரு கவிதை முத்தாய் மாற்றி கரையில் போட்டுவிட்டது.

அப்போது எமக்கு 13 வயது. பாடசாலைக்கு ஒரு பத்து பேர் (நான், தெய்வீ, ஜனா, தயா, தர்ஷன், பிரதீபன், பார்த்தீபன், பிரசன்னா, மமான்ஸ், ஜேனா, கெல்வின்) ஒன்றாக போய் வருவோம். பாராளுமன்றம் வரை லஞ்சமும் வராத, அந்த வல்லமையும் அமையாத அந்த வயதில் அந்த கூட்டணி திடீரென உடைந்துவிட்டது. பிரதீபனின் சைக்கிள் திறப்பை தெய்வீகன் ஒளித்து வைத்ததால் இந்த பிரச்சனை வந்தது என்று இப்ப காரணம் சொன்னால் சிலர் chaos theory என்று நினைக்கலாம். ஆனால் நேரடியான, மறைமுகமான இப்படி எப்படி பார்த்தாலும் இருந்த ஒரே காரணம். அது மட்டும் தான் காரணம் என்பதை கஸ்டம் என்றாலும் அதை நம்பத்தான் வேண்டும். அற்புதமான நண்பர்களாய் பவனி வந்தவர்கள் அற்ப விடயத்துக்காக பிரிந்துவிட்டோம். மீண்டும் நட்பு பாராட்ட நெஞ்சம் விளைந்தும் ஈகோ எம்மை தடுத்தே வைத்தது. புலம் பெயர் நாடுகளில் எல்லாம் கொடி கட்டி பறக்கும் குழு மோதல்களுக்கு அப்பவே “அ” போட்டு வைத்தவர்கள் நாங்கள் தான். “எமக்கிடையேயான மோதல் வீதியோர கற்களை எல்லம் சுத்தம் செய்தது” என்று தெய்வீகன்  அளவுக்கு எமது மோதல்கள் மிகுந்த பிரபலம். கற்கள், நெயில் கட்டர், மண்கட்டிகள் போன்ற “பேரழிவு ஆயுதங்கள்” பயன்படுத்தப்பட்ட அந்த “வீரப்போர்களில்” ஆனைக்கோட்டை வீதி முழுவதுமே அமளிப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் மறக்கமுடியாத ஒரு நினைவு நாம் சண்முகராஜா மாஸ்டரிடம் மாட்டுபட்ட சந்தர்ப்பம் தான். கிட்டதட்ட ஆணைக்கோட்டை , குளப்பிட்டி சந்திக்கருகில் நாம் கற்களால் எறிபடும் போது அவர் பார்த்துவிட்டர். பின்னேரம் ட்யூஷனில் அவர் எமக்கு சமூகக்கல்வி (social studies) வகுப்பெடுக்கிறார். அத்தனை மாணவர்களையும் எதிர்பார்க்கவைக்கும் அற்புதமான ஆசிரியர். எல்லா ஆண்களுக்கும் தந்தைக்கு பின்னர் ஆசிரியர்கள் தான் ரோல் மாடலாக வருகிறார்கள் என்பதை எமக்கு நிரூபித்தவர். இப்பொழுது கனடாவில் குடிவரவு வழக்குகளில் மிகுந்த பிரபலமாக இருப்பவர். வகுப்புக்கு வந்தவுடன் எம்மை முன்னே அழைத்து கண்டித்துவிட்டு ஒரு புதுமையான தண்டனையை அறிவித்தார். அதாவது அவர் கேட்கும் கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனையாக 15 பிரம்படி. தெய்வீகனிடம் முதல் கேள்வி கேட்கிறார்; அவன் பதில் சொல்லி விடுகிறான். அடுத்த கேள்வி என்னிடம். தனிப்பட்ட முறையில் அவருக்கு என்மீதிருந்த தைரியத்தில் பாடத்திட்டத்தை விட்டு விலகி கேள்வி கேட்கிறார். “கிரேக்கத்தின் வெற்றியை சொல்ல எந்த வீரன் ஓடிய ஓட்டத்தின் நினைவாக மரதன் போட்டி நடத்தப்படிகிறது?” என்பது கேள்வி. தெரிந்திருந்தும் நாவில் பயம் இருந்ததோ சனி இருந்ததோ விடை வரவில்லை. ஒப்பொழுது அடுத்த சந்தர்ப்பத்தை எனக்காக தருகிறார். அவரை பொறுத்தவரை அது வாய்ப்பே இல்லாத சந்தர்ப்பம். அதாவது யாராவது ஒரு பெண் அதற்கு விடை சொல்லி என்னை பிணை எடுக்கலாம். கட்டுப்பாடுகள் அளவுக்கு அதிகமாகவெ இருந்த எமது ட்யூஷனில் இது நிறைவேறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை; நான் என்றும் மதிக்கும் அந்த பெண் என்னை பிணை எடுத்து எனக்கு வரம் கொடுக்கும் வரை. எப்போதோ தொடர்பறுந்த சகோதரியே இப்போதும் உன் நினைவு என் நெஞ்சில்.

“புகைந்திருந்தால் தொடர்ந்திருக்கும்; தொடக்கத்திலேயே எரிந்ததால் உடனேயே அணைந்து விட்டது” என்ற தெய்வீகனின் அற்புதமான வரிகளுக்கேற்ப அத்திவாரமில்லாமல் கட்டப்பட்ட எமது கோபம் ஆட்டம் போட, பாசம் வந்து மனசை மீண்டும் ஆட்டிப்பார்த்தது. “ இருவருமே சிந்தித்தோம், எம்மை நாமே நிந்தித்தோம்”. உண்மை நண்பனாக அவனிடம் நான் ரசித்த விடயம் நாம் கதையாத போதும் அவன் என் வீட்டாருடன் இருந்த தொடர்பை என்றும் பேணிய விதம். நான் கதையாத போதும் வீட்ட வருவான். எனது அம்மாவுக்கோ ஏனோ தெரியவில்லை எனது நண்பர்களிடையே இவனிடம் கொஞ்சம் ஸ்பெஷல் பாசம். அது போலவே அவனது வீட்டாரும். ஒரு முறை நவாலி சந்தைக்கு அவன் அம்மாவுடன் வந்தபோது அவனது அம்மா அவனது சைக்கிளை விட்டு இறங்கி வந்து என்னிடம் கதைத்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன். எப்போ, எப்பொ என்று சந்தர்ப்பம் பார்த்து சொல்லாமல் வைத்திருக்கும் காதல் போலவே கதைக்க நினைத்தபோதும் கதைக்காமல் பிற்போடப்படும் நண்பர்களுடனான கோபம் கூட ஒரு சுகமான அவஸ்தை.

அந்த சந்தர்ப்பம் கூட ஒரு கவிதை போலவே எமக்கு அமைந்தது. விஞ்ஞான வகுப்பென்று நினைவு. எனக்கு முன் வாங்கில் இருக்கிறான் தெய்வீகன். தலையங்கத்துக்கு கீழே கோடு கீற சிவப்பு பேணாவை தேடுகிறான். அவனுக்கு பக்கத்தில் பிரசா. நான் சிவப்பு பேனாவை எடுத்து பிரசாவிடம் கொடுத்து “தெய்வீகனிடம் கொடும்” என்கிறேன். அவன் திரும்பி “நீ கோடு போட்டிட்டு தா” என்கிறான். இருவருக்கும் மனசு றெக்கை கட்டி பறக்கிது. அன்று வகுப்பு முடிந்து நான் வீட்ட போன கையோட தெய்வீகன் எண்ட வீட்ட வந்து நிக்கிறான். மௌனத்திரைகள் உடனே விலக நட்புப் பெருஞ்சுவர் பலமாய் எழுந்தது. அதற்குப்பிறகென்ன அலையில் துரும்பாய் அடிபட்ட நட்பு கல் மேல் எழுத்தாய் சரித்திரமானது. சில அற்ப காரணங்களுக்காக நான் நண்பர்களை விலத்தி இருந்த 96ன் பிற்பகுதிகளில் எத்தனையோ நாட்கள் அவன் எனக்கு பெருந்துணை புரிந்திருக்கிறான். புலம்பெயர்ந்த நாட்களில் சில நாட்கள் தொலைபேசாவிடால் உரிமயுடன் எடுத்து சண்டை போட்டிருக்கிறான். காலத்தால் அழியாத என் நண்பர்கள் பட்டியலில் சற்று பலமாகவே தனது அத்திவாரம் அமைந்திருக்கிறது.

மூன்று நாட்களின் முன் எனது பிறந்த நாளினை முன்னிட்டு நண்பர்களுடன் ஒரு சந்திப்பை அமைத்திருந்தேன். ஏனோ அவனுடன் கதைக்க வேண்டும் போல இருந்தது. உடனே தொடர்புகொண்டேன். பேசினோம்…. பேசிக்கொண்டேயிருந்தோம். அற்புதமான பாடகன் அவன். எனது all time favourites ஆன ஆனந்தம் ஆனந்தம் பாடும்……, நிலாக்காய்கிறது…. தீராத விளையாட்டு பிள்ளை……, பச்சை கிளிகள் தோளோடு…. என்று பாடித்தள்ளினான்.

இப்பொழுது யோசித்துப்பார்க்கும்போது அன்று நான் நீட்டிய சிகப்பு பேனா எத்தனை மரியாதைக்குரியது என்று வியப்பு தோன்றுகிறது. வைரமுத்துவின் வரிகளில் சொன்னால் “உனக்குப் பொன்னாடை போர்த்தும் லட்சியத்தோடு அந்தப்பேனாவை நீட்டினேன்”. அதற்குப் பிறகு நானும் அவனும் சில காதல்களை சந்தித்திருக்கிறோம். காதலை சொல்லாமல் தவித்தபோதும், சொல்ல திட்டமிட்டபோதும், சொன்னபோதும், சொல்லப்பட்ட காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அடைந்த அதே பரவசத்தை, அவனிடம் மீண்டும் கதைக்க நினைத்தபோதும் திட்டமிட்ட போதும், கதைத்தபோதும் அடைந்திருக்கிறேன். காதல் என்பதும், நட்பு என்பதும் ஆதியில் ஒரே அர்த்தத்தில்தான் இருந்திருக்குமோ………………..

தெய்வீகனின் கவிதை