கையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்

கையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய ஓரிரு நண்பர்களிடம் இருந்தும், நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய 97ன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த நண்பர்களுடனும் தொடர்ச்சியான கடிதப்போக்குவரத்து இருந்துவந்தது. கடிதம் என்றால் ஒரு பக்கம், இரண்டு பக்கம் என்றல்ல, ஃபுல்ஸ்கப் அளவில் 10 பக்கம் அளவில் நீளும் கடிதங்கள், அதுவும் மாதம் ஒன்றிற்கு இரண்டு கடிதங்களாவது ஒவ்வொரு நண்பரிடம் இருந்தும் வரும். இன்றும் அந்த கடிதங்கள் என்னிடம் ஒழுங்காக கோப்பில் இடப்பட்டுள்ளன. கடிதம் என்கிற தொடர்பாடல் வடிவத்தை, உறவுகளை வளர்க்கும் முறையை நாம் கடந்த பத்தாண்டுக்குள் அந்நியப்படுத்திக்கொண்டோம். தன் வாழ்நாளில் எந்த உறவுக்கும் நட்புக்கும் ஒரு கடிதம் கூட எழுதியிராத தலைமுறையொன்று உருவாகிவிட்டது என்று நினைக்கும்போது பிரமிப்பாகவும் நம்பமுடியாமலும் இருக்கின்றது.

அதுபோல கையெழுத்துப் பிரதி ஒன்றைக் கடைசியாக எப்போது பார்த்தோம் என்று யோசித்துப்பாருங்கள். கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட இன்னொருவடிவிலான எழுத்துமுயற்சி கையெழுத்துப்பிரதி என்றே நினைக்கின்றேன். நாம் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் கையெழுத்துப் பிரதி எழுதுவது என்பது அனேகமான பாடசாலைகளில் ஒரு கலாசாரமாகவே இருந்துவந்தது. குறிப்பாக கொக்குவில் இந்துக்கல்லூரியில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அதிபராக மாற்றலாகி திரு பஞ்சலிங்கம் அவர்கள் வந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும், அதேபோல கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் (திரு சுடர் மகேந்திரன் அவர்களாலும் இம்முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டதாக நினைவுள்ளது) இவ்வழக்கம் தொடர்ந்துவந்தது. முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்த இவ்வழக்கம் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகுப்பும் ஒரு கையெழுத்துப் பிரதியேனும் வெளியிடும் அளவிற்கு போனது. ஒவ்வொரு வகுப்பின் வெவ்வேறு பிரிவுகளும் வெளியிடும் பிரதிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. எமது வகுப்பில் “C” பிரிவில் கையெழுத்துப்பிரதிகள் வெளியிடும்நோக்கில் மூன்று கழகங்கள் இயங்கின. அதில் அமலன் என்ற நண்பனும், தவரூபன் என்ற நண்பனும் சேர்ந்து அமைத்த ஒரு கழகத்தினர் ஒருமுறை எம் வகுப்பிற்கிடையில் ஒரு பொது அறிவுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர். பரிசுகள் என்னவென்பது சுவாரசியமானது. அப்போது மிகப் பிரபலமாக இருந்த ஒக்ஸ்ஃபோர்ட் கொம்பாஸ் என்ற Oxford Set of Mathematic Instrumentsன் உபகரணங்களை பிரித்து முதல் 3 பரிசுகளும் வழங்கப்பட்டன. இவற்றுடன் முதலாம் பரிசாக ஒரு “மிக்” நாலு கட்டு (180 பக்க) கொப்பியும் வழங்கப்பட்டது.

இந்தக் கையெழுத்துப்பிரதிகளின் உள்ளடக்கம் பெரிதும் தகவல்களாக – அதாவது நாடுகளின் தலைநகரம், பண அலகுகள், பிரதமர்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றைப் பட்டியலிடுவதாக – அமைந்திருந்தன. பெரிய அளவில் புனைவுகள் இடம்பெறவில்லை. சில விஞ்ஞானக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. ஓவியங்களும் ஊக்குவிக்கப்பட்டன. சில காலங்களிற்கு முன்னர் வெற்றி எஃப் எம்மில் பணியாற்றிய பிரதீப் என்ற நண்பரின் ஓவியங்களைத் தாங்கி, குகப்பிரசாதன் என்ற நண்பரின் எழுத்தில் “பனிமலர்” என்ற ஒரு மாய ஜாலக் கதையை நூலாக்கி ரோனியோ பிரதிகள் எடுத்து 15 வயதில் விற்பனை செய்தனர். அன்றைய காலகட்டத்தில் இது ஒரு சாதனை. பொருளாதாரத் தடை காரணமாக காகிதங்கள் ஒழுங்காக வராத மூடுண்ட அன்றைய யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் ஃபைல்மட்டை என்று சொல்லப்படுகின்ற தரத்திலான காகிதத்தில் கூட – அதுவும் பச்சை, மஞ்சள், நீலம் என்று பல்வேறு நிறங்களில்ல் – பத்திரிகைகள் வெளியாகிவந்த காலப்பகுதி அது. மாட்டுத்தாள் பேப்பர் என்று சொல்லப்படுகின்ற, காகிதப் பைகள் செய்யப்பயன்படுகின்ற காகிதத்தில்தான் பல பத்திரிகைகள் வெளியாகின. சஞ்சிககள் சர்வ சாதாரணமாக கோடிட்ட, அப்பியாசக் கொப்பிகளில் காகிதங்களிலேயே வெளியாகின. இப்படியான காலப்பகுதியில் 15 வயது மாணவர்கள் இருவர் இணைந்து செய்த இம்முயற்சி நிச்சயம் சாதனைதானே.

அப்போது கிரிக்கெட் பைத்தியமாக இருந்த நானும், பிரசன்னா, மமான்ஸ் ஜான்சன் என்ற இரண்டு நண்பர்களும் இணைந்து கிரிக்கெட் பற்றி ஒரு புத்தகம் எழுத எமது 12வது வயதில் ஆரம்பித்தோம். அப்போது மின்சாரம் இல்லாமையால் எந்த கிரிக்கெட் ஆட்டங்களையும் நேரலை ஒலிபரப்பில் பார்த்தது இல்லை. நேரடி வர்ணனைகளைக் கூடக் கேட்டதில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றி அறியவேண்டும் என்பதற்காகவே எல்லாப் பத்திரிகைகளையும் தேடுவோம், ஆட்டங்கள் பற்றிய விபரங்களை அறியவேண்டும் என்பதற்காக. அப்போதெல்லாம் விளையாட்டுச் செய்திகள் பெரிதும் பத்திரிகைகளின் பின்பக்கத்தில்தான் இடம்பெறும்; அவ்வாறு பழகிய பழக்கம் இன்றுவரை பத்திரிகைகளின் பின்பக்கத்தினை முதலில் படித்துப் பார்க்கும் பழக்கமே தொடர்கின்றது. இவ்வாறு திரட்டிய தகவல்களை எல்லாம் வைத்து, அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்து நாலு கட்டுக் கொப்பிகளில் இரண்டினை ஒன்றாக பைண்ட் பண்னி எழுதினோம். அந்த வயதில் முக்கியமானது என தெரிந்திருந்த ஆட்டங்களின் ஓட்ட விபரங்களை (ஸ்கோர்) தேடித் தேடிச் சேகரித்தோம். ஒஸ்ரேலியாவுக்கும் இங்கிலாந்திற்குமான முதலாவது ரெஸ்ற் போட்டியின் ஓட்ட விபரங்களை அந்த வயதில் தேடிப் பிடித்ததை இப்போதும் ஒரு சாதனை என்றே சொல்லுவேன். விவேகானந்தா பழைய புத்தகசாலை, அதற்கு முன்னால் ஒரு வயதான ஐயா வைத்திருந்த பழைய புத்தகசாலை என்று யாழ்ப்பாணத்தில் இருந்த அனைத்துப் பழைய புத்தகசாலைக் கடைக்காரரும் பழக்கமானது அப்போதுதான்.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, சுவாரசியமான இன்னொரு விடயம் தோன்றுகின்றது. அப்போதெல்லாம் பரீட்சைகளில் தமிழ், ஆங்கில மொழிப்பரீட்சைகளில் உங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழா பற்றியோ, வேறேதேனும் நிகழ்வுகள் பற்றிய ஒரு விவரணக்கடிதத்தை கொழும்பில் இருக்கின்ற உறவினர் ஒருவருக்கு எழுதும்படி ஒரு கேள்வி வரும். இப்போதும் இக்கேள்வி வருகின்றதா தெரியாது. கையெழுத்துப் பிரதிகளிலும் இதேபாணியைப் பின்பற்றி கடிதங்கள் எழுதுவோம். உடன்பிறப்புக்கு கடிதங்கள், தம்பிக்கு கடிதங்கள் என்கிற திமுகவினரின் பாதிப்பாக இருக்கலாம். இப்போதும் எனது சேகரிப்பில் இருக்கின்ற நண்பர்களின் கடிதங்களைப் புரட்டிப்பார்த்தால் 97ம் ஆண்டு முதல் 2002 ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரிய மாற்றங்களையும், அக்காலங்களில் நடைபெற்ற பாடசாலை, பல்கலைக்கழக நிகழ்வுகள் பற்றியும், பொருட்களின் விலை உயர்வுகள் பற்றியும், மின்சார வருகை ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் நல்லதோர் அவதானத்தினைப் பெறமுடிகின்றது. இன்று இவை எல்லாம் காலவதியாகிவிட்டன.

பாடசாலை மட்டங்களில் இப்போதும் கையெழுத்துப் பிரதிகள் வருகின்றனவா என்று தெரியாது. நிச்சயம் ஏதோ ஒரு மூலையில் தனிச்சுற்றுக்கான கையெழுத்துப் பிரதிகள் வழக்கில் இருந்துகொண்டிருக்கும். ஆனால் ஒரு கலாசாரமாக, முக்கியமான பாடசாலைகளின் மைய நிகழ்வுகளில் ஒன்றாக அவை இல்லை என்றே அறியமுடிகின்றது. பொருளாதாரத் தடைநீக்கமும், மின்சாரத்தின் வருகையும், வீடுகளில் இலகுவாக இருக்கக்கூடிய நூல் வடிவமைப்பிற்கான மென்பொருட்களும் நூலொன்றினை உருவாக்கத்தை இலகுவாக்கியிருக்கின்றன. இது கையெழுத்துப்பிரதிகள் என்பவற்றிற்கான தேவையை வெகுவாகக் குறைத்திருக்கின்றன. ஆனால் ஒரு அச்சு நூல் ஒருபோதும் கையெழுத்துப் பிரதியை ஈடுசெய்யாது. முன்னர் வெளியான கையெழுத்துப்பிரதிகள் கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தன. இப்போதும் அவை இருக்கின்றனவா என்றும் தெரியாது. ஆவணப்படுத்தல் முயற்சி ஒன்றுக்காக விசாரித்தபோது அப்படி ஒன்றையும் காணமுடியேல்ல என்றார்கள். “அப்படி ஒன்றையும்” என்பதில் இருந்த அந்நியத்தன்மையை குரலில் இருந்து அவதானிக்கமுடிந்தது; அதுவே சிலவே விடயங்களைச் சொல்லிற்று.

குறிப்பு :
இக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்திக்காக எழுதப்பட்டது. 26-10-2014 ல் வெளியானது.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

-அருண்மொழிவர்மன்

நானும் நூலகங்களும்

library

நூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு, முத்தாரம் என்பன எமது வீட்டிற்கு கொழும்பில் இருந்து அனுப்பிவைக்கப்படும். இது தவிர, மாலைமதி, ராணிமுத்து என்று அப்போது வந்துகொண்டிருந்த இதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு வரும், அவற்றை வீட்டில் அம்மாவும் மாமியும் வாசித்தபின்னர் எடுத்துக்கொண்டு ஆனைக்கோட்டையில் இருந்த பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்க நான் மாமியுடன் செல்வேன். இதுவே எனது நினைவில் நூலகம் ஒன்றுடன் எனக்கேற்பட்ட முதலாவது தொடர்பு என்று சொல்வேன்.

அதன்பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் சேர்ந்த பின்னர், அப்போது எமது தமிழாசிரியராக இருந்த தங்கவேல் என்பவர் வகுப்பு நூலகம் ஒன்றினை ஆரம்பித்தார். அதாவது, 35 பேர் இருந்த எமது வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆளுக்கு ஒன்று ஒரு புத்தகத்தினை கொண்டுவரவேண்டும் என்றும் வகுப்பு மாணவர்கள் சுழற்சிமுறையில் இப்புத்தகங்களை வாசிக்கலாம் என்பதும் ஏற்பாடு. ஜனார்த்தனன், கிருஷ்காந்தன் என்ற இரண்டு சகமாணவர்கள் இவ் வகுப்பு நூலகத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் அப்போது தீவிரமான போர்ச்சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் இத்திட்டம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டது. இதற்கு இன்னுமோர் காரணமாக, அப்போதுதான் யாழ் இந்துக்கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்றிருந்த பஞ்சலிங்கம் அவர்கள் யாழ் இந்துக்கல்லூரியில் ஆரம்பித்திருந்த சிறுவர் நூலகத்தின் உருவாக்கமும், அதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவு புத்தகங்களும் வகுப்பு நூலகம் என்கிற தேவையை இல்லாமல் செய்தது எனலாம்.

இதேசமயம் 91ம் ஆண்டளவில் நவாலியில் YMCA நூலகத்திலும் இணைந்துகொண்டேன். தமிழ்வாணனின் அனேகமான நூல்களை வாசித்தது இங்குதான். அதுதவிர வாண்டுமாமாவின் நூல்கள் சிவசங்கரியின் சில கதைகள் என்று வாசித்ததும் நினைவுக்கு வருகின்றது. இங்கே சிறுவருக்குரிய நூல்கள் என்றும், அனைத்து நூல்களுக்கும் என்றும் இரண்டு பிரிவுகளாக நூலக உறுப்புரிமை வழங்கப்பட்டது. சிறுவர்கள் பிரிவிற்கு 15 ரூபாயாகவும், அனைத்து நூல்களுக்கான பிரிவிற்கு 20 ரூபாயாகவும் இருந்ததாக ஞாபகம். சில நாட்களில் யுத்தம் அகோரமாக, பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அனேகமான பொழுதுகள் புத்தக வாசிப்பிலேயே கழிந்தன. ஏற்கனவே நண்பர்கள் பலர் எமது வீட்டிற்கு வந்து புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வது வழமையாக இருந்தது. நானும் வீட்டில் புத்தகங்களை ஒரு கொப்பியில் பட்டியலிட்டு, ஒரு நூலகம் போல ஒழுங்குபடுத்தி வைத்திருந்தேன். புத்தகங்களை தொடர்ச்சியாக எமக்கு அனுப்பி வைத்த எனது பெரியப்பாவும் வளர்ந்து ஒரு நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று எமக்கு அடிக்கடி சொல்லிவந்திருந்ததுடன் அதற்கென Little Library என்ற பெயரையும் வைத்திருந்தார். அவர் அனுப்பும் புத்தகங்களில் அவர் கையெழுத்திலோ அல்லது ரப்பர் ஸ்ராம்ப்பாலோ இந்தப்பெயர் எழுதப்பட்டிருக்கும். இதே Little Library என்ற பெயரில் சிறிய நூலகம் ஒன்றினை எனது 12 வயதிலே வீட்டில் ஆரம்பித்தேன். இதேவேளை எமது ஊரிலேயே இருந்த என்னைவிட சில வயது மூத்தவரான சர்வேஸ்வரன் என்பவரும் வள்ளுவன் கோட்டம் என்ற நூலகத்தினை நடத்தினார். என்னிடம் புத்தகங்களை வாங்கிச்சென்ற பலர் புத்தகங்களை திரும்பித்தராத நிலையில் நூலகம் இடையில் நிறுத்தப்பட்டது. எனினும் நண்பர்களுக்கிடையில் புத்தக பரிமாற்றம் நடந்துகொண்டேயிருந்தது.

மெல்ல மெல்ல சக மாணவர்கள் சரித்திர நாவல்களை வாசிக்கத் தொடங்கியிருந்தனர். வீட்டில் கல்கியில் தொடராக வெளியாகி பைண்ட் செய்து வைக்கப்பட்டிருந்த தொடர்கள் பெரிதும் கறையான் அரித்து அழிந்துபோயிருந்தன. எனவே மானிப்பாய் சென்ற் ஆன்ற்ஸ் சிறுவர் பாடசாலைக்கு அருகில் இருந்த நாயகபாலன் புத்தகநிலையம் என்ற கடையில் புத்தகங்களை கட்டணத்துக்கு வாடகைக்கு விடப்படுவதை அறிந்து அங்கே இணைந்து பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பாண்டிமாராணி, வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, கடல் புறா, அலை ஓசை, யவன ராணி என்பவற்றை அடுத்தடுத்து வாசித்தேன். எனது நினைவில் அனேக நண்பர்கள் தமது 14வது வயது அல்லது அதற்கு முன்பாக சரித்திர நாவல்களை, குறிப்பாக பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவற்றை வாசித்தவர்களாக இருந்தனர். பின்னாட்களில் பாலகுமாரன் தனது சுயசரிதையாக எழுதிய முன்கதைச் சுருக்கத்தில் தான் தன் 12வதோ 13வதோ வயதில் பொன்னியின் செல்வன் வாசித்தை ஆச்சரியமாக எழுதியபோது இதிலென்ன ஆச்சரியம் என்ற உணர்வே உடனே எழ இதுவே காரணமாக அமைந்தது. சம காலத்திலேயே மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கு முன்னால் இருந்த கடையொன்றிலும், மானிப்பாய் மருதடிப்பிள்ளையார்கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு கடையிலும் கூட இவ்வாறு புத்தகங்களை வாடகைக்கு விடும் வழக்கம் இருந்தது. இவற்றிலும் உறுப்பினராக இணைந்திருந்தேன். அனேகமான கடைகளில் 25 – 50 ரூபாய்கள் வரை வைப்புத்தொகையாகப் பெறப்பட்டு மேலதிகமாக ஒவ்வொரு புத்தகத்தினை வாடகைக்கு எடுத்துச் செல்லும்போதும் 2 ரூபாய்கள் முதல் 5 ரூபாய்கள் வரை கட்டணமாகவும் அறவிடப்பட்டதாக ஞாபகம்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பொது நூலகங்கள் எதிலும் அப்போது நான் உறுப்பினராக இருந்ததாக நினைவில்லை. ஆயினும், கொக்குவில் நாச்சிமார் கோவிலடியில் உள்ள பொது நூலகத்திற்கு வாரத்திற்கு ஒருமுறையேனும் செல்லும் வழக்கம் இருந்தது. அது போலவே இணுவிலில் மாணவர் அறிவியல் கழகத்திற்குள் இயங்கிவந்த நூலகத்திற்கும் தொடர்ச்சியாக செல்லும் வழக்கம் இருந்தது.

97ல் கொழும்பு வந்து மாமா வீட்டில் தங்கியிருந்த சிறிய இடைவெளியில் ஹம்டன் லேனில் அப்போது இருந்த ஒரு புத்தக வாடகை நிலையத்தில் நண்பன் குணாளனுடன் போய் இணைந்துகொண்டேன். பாலகுமாரனையும், சுஜாதாவையும், ஒஷோவையும் தொடர்ந்து படிக்கத் தொடங்கியது அப்போதுதான். ஓஷோ பெரிதாக பிடிபடவில்லை. பாலகுமாரன் மிக நெருக்கமானவராக இருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்தவரை எனக்கு நெருக்கமாக இருந்த அனேகமான நட்புகள், புத்தகப் பரிமாற்றங்களூடாகவோ அல்லது வாசிப்புப் பழக்கத்தின் ஊடாகவோ அறிமுகமானவர்களே. முதன்முதலாக கொழும்பிலேதான் புத்தகம் சார்ந்த ரசனை தவிர்த்து, நண்பர்கள் அறிமுகமாயினர். ஆனால் நிலைமை இன்னும் மோசமானது புலம்பெயர்ந்து கனடா வந்த பின்னரே.

கனடாவைப் பொறுத்தவரை முதல் பத்தாண்டுகளில் வாசிப்புப் பழக்கம் உள்ள எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை. ரொரன்றோ பொது நூலகக் கிளைகளிற்கு கனடா வந்த புதிதில் சென்றிருக்கின்றேன். இப்போதிருப்பதுபோல அருமையான புத்தக தேர்வுகள் அப்போது இருக்கவில்லை. இதனால் ரொரன்றோ நூலகங்களிற்கு செல்வதும் இல்லாதுபோயிருந்தது. ஆயினும் இந்த நிலை இன்று மாறி இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக அனேகமான புது நூல்களை ரொரன்றோ பொதுநூலகத்தில் இருந்து பெற்று வாசித்துவருகின்றேன்.

இன்றைய காலப்பகுதியில் இணையத்தின் பரவலாலும், வலைப்பதிவுகள், மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனையில் ஏற்பட்ட பெருக்கத்தாலும், நூலகங்கள் குறைந்திருக்கலாம். குறிப்பாக ஈழத்தில் முன்னர் போர்ச்சூழலில் எத்தனையோ புத்தக வாடகைநிலையங்கள் இயங்கிவந்தன என்பதையும் எனையொத்த பதின்மங்களின் ஆரம்பத்தில் இருந்தோர் கூட அவற்றினை பயன்படுத்திக்கொண்டனர் என்பதையும் இந்தப் பதிவினூடாகவே அறியமுடியும். ஈழத்தில் நான் இருந்த காலப்பகுதியில், குறிப்பாக 90 முதல் 95 வரையான காலப்பகுதியில் அங்கே இயங்கிவந்த நூலகங்கள் பற்றிய ஒரு சிறிய பதிவினைச் செய்வதே இப்பகிர்வின் நோக்கமாகும்.

குறிப்பு : இக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழாக சூரியகாந்திக்காக எழுதப்பட்டது. 19.10.2014 இதழில் வெளியானது. பத்திரிகையில் பிரசுரமானபோது எனது பெயரை தவறுதலாக அருண்மொழித்தேவன் என்று குறிப்பிட்டுவிட்டார்கள்.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97 வரை, தன் பதின்மங்களை ஒட்டிய வயதுகளிலும், பதின்மங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுத திட்டமிட்டுள்ளேன். அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களையும், அப்பாவித்தனத்தையும் இயன்றவரை பதிவுசெய்ய முயன்றுள்ளேன். இயன்றவை அன்றைய மாணவன் ஒருவனின் வாழ்வியலைப் பதிவுசெய்வதே இப்பதிவுகளின் நோக்கமாகும்.

-அருண்மொழிவர்மன்

பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995

downloadபிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவுச்சொல்லை ஞாபகப்படுத்தக் கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை.

அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் இருந்துவிட்டு வந்திருந்ததால் எனது பேச்சுத் தமிழ் கூட அவர்கள் பேசிய தமிழுடன் வேறுபட்டு இருந்திருக்கலாம். இதனால் பள்ளிக்கூடம் போவதே ஏதோ சிறைக்கு போவதை போன்று இருந்தது. இந்த நாட்களில் தான் பிரதீஸ் அறிமுகம் ஆனான். ஏதோ அவனுடனும் துளசி(1) என்ற இன்னொருவனிடமும் தான் கொஞ்சம் பழக ஆரம்பித்தேன்.

எப்போதும் அந்த பள்ளிக்கூட நண்பர்களை விட்டு விலகியே இருந்த என்னை அவன் மெல்ல மெல்ல பூமிக்கு இழுத்துவந்தான். ஒரு மழை நாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் வராமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு கற்களை எப்படி காந்தம் ஆக்குவது(2) என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லி தந்தான். அந்த வயதிலேயே அவனுக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன. பூக்களை அவற்றின் காம்பை பிடித்து கிள்ளும்போது அவை விழும் விதத்தில் இருந்து ஆண் பூவா பெண் பூவா என்று கண்டறியும் வித்தையை(2) ஒரு முறை எனக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பொறுமையாக சொல்லித் தந்தான்.

அப்போதெல்லாம் அவன் ஒரு சிறிய அளவிலான சூட் கேசில்தான் பள்ளிக்கூடத்துக்கு புத்தகம் கொண்டு வருவான். நானும் எனது அப்பாவிடம் அடம் பிடித்து அது மாதிரி ஒரு சூட்கேஸ் வாங்கிக்கொண்டேன். அவனது சொந்தக்காரர் யாரோ அவனுக்கு கொடுத்த ஒரு தோடம்பழத்தின் (orange) அரைவாசியை அவன் எனக்குத் தந்தான். அதை ஒரு பேப்பரால் சுற்றி அந்த சூட்கேசில் வைத்திருந்தேன். சனி, ஞாயிறுகளில் வீட்டில் எடுத்து உண்டால் யார் தந்தது என்று கேட்பார்களோ என்று பயந்து அதை ஒளித்தே வைத்திருந்ததில் எனது புத்தகம் எல்லாம் தோடை வாசம் அடிக்க தொடங்கியது. இந்த நேரம் பார்த்து காந்தம், விளையாட்டு பொருட்களில் வரும் மோட்டார், சைக்கில் பாகங்கள் என்று சேர்க்கும் ஆசையும் வந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்ட போற வழியில் அரசடி சந்தி கடந்தவுடன் வரதனின் சைக்கில் கடை வரும். கடைக்கு முன்னால இருந்த நிலத்தில் பழைய சைக்கில் போல்ஸ், நட்டுகள் எல்லாம் எறிந்திருக்கும். நாங்கள் அதை பொறுக்கிச் சேர்ப்போம். என்னிலும் நிறைய உற்சாகமான பிரதீஸ் நிறைய சேர்த்து எனக்கும் பாதி தருவான். ஒரு முறை ஒரு பழைய விளையாட்டு ஹெலிகொப்டரை உடைத்து அதில் இருந்த காந்தத்தை இருவரும் பகிர்ந்து எடுத்தோம். எம்மிடம் இருந்த எல்லா இரும்பு உதிரிபாகங்களுக்கும் காந்தத்தை ஏற்றவேண்டும் என்பது எமது திட்டம்.

download (1)அப்போது நான் ஒரு மோதிரம் போட்டிருந்தேன். அடிக்கடி பிரதீஸ் அதை வாங்கி அணிந்து பார்ப்பான். ஒரு நாள் நான் அவனையே அதை வைத்திருக்க சொல்லிவிட்டேன். பிறகு இருவரும் வரதன் கடையை தாண்டி, ரோட்டோரத்தில் காயப்போட்டிருக்கிற எள்ளை(3) எல்லாம் எடுத்து சாப்பிட்டபடி வீட்ட போனோம். கொஞ்ச நேரத்தால எங்கட வீட்ட பிரதீஸ் அவன்ட அம்மாவோட வந்து நிற்கிறான். ஏனோ தெரியேல்லை, அந்த மோதிரத்தை அவன் என்ட அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டான். அதை பற்றி அவனிடம் அடுத்த நாள் கேட்கோணும் என்றிருந்தேன்.

இதற்குபிறகு சிறிது நாளில் அந்த ஆண்டும் முடிய நான் மிக சாதாரணமான புள்ளிகளையே பெற்றதால் என்னை சுதுமலையில் இருந்த எனது அப்பம்மா வீட்டிற்கு அனுப்பி அங்கு இருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள் இப்படியே மெல்ல மெல்ல பிரதீஸ்டனான உறவு அப்போதைக்கு முடிவடைந்தது.

இதற்கு பிறகு அவனுடன் மீண்டும் பழக தொடங்கியது 10 வருடம் கழித்து, நானும் அவனும் ஒரே டியூஷனில் படிக்கும்போது. அவன் நிறைய வளர்ந்திருந்தான். பெரிதாக மீசை கூட வந்திருந்தது. நிறைய சதை போட்டிருந்தான். முன்பிருந்த நெருக்கம் தொலைந்துபோயிருந்தாலும் அன்பாக கதைத்தான். டியூஷன் முடிய அடிக்கடி ஒன்றாக வருவோம். நவாலியில் எம் இருவர் வீட்டிற்கும் நடுவில் இருந்த எனது கல்லூரி தோழனும்(4) அவனும் மிக நெருக்கமாகியிருந்தார்கள். சந்தோஷமாக நாட்கள் போய் கொண்டிருக்கும்போது, அந்த எனது கல்லூரி நண்பனுக்கும் எனது நண்பன் ஒருவனுக்கும் ஏதோ சில சிறுபிள்ளை கோபங்கள் வர நட்பு இரண்டு அணியாக பிரிந்தது. எனது நண்பன் பக்க நியாயங்களை ஏற்று நான் பிரதீஸுடனும் மற்ற நண்பனுடனும் கதைப்பதை தவிர்த்தேன். ஒரு நாள் டியூஷன்(5) முடிய நவாலி அரசடி சந்தியில் நாகேஸ் கடையில் பொறித்த வேர்கடலை வாங்கி கொறித்தபடி வீடு செல்லும்போது பிரதீஸும் மற்றைய நண்பனும் அருகில் வந்து “எமக்கும் உனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏன் நீ எம்மோட கதைக்கிறதில்லை” என்று கேட்டனர். ஒன்றுமில்லை என்றுவிட்டு நான் என் பாட்டில் போவிட்டேன். ஆனால் ஏனோ சின்ன வயது பிரதீஸின் ஞாபகங்கள் நிறைய வந்தன.

இதற்கு பிறகு பிரதீஸை நான் சந்தித்தது ஜூலை 9, 95ல். முதல் நாள் யாழ் இந்துக் கல்லூரி விளையாட்டு போட்டியை பார்த்து அதில் சாம்பியன் கிண்ணத்தை தவற விட்ட நண்பன் அனுஷனுக்கு(6) நானும் தயா என்ற நண்பனும் ஆறுதல் சொல்லிவிட்டு வீட்ட வர நேரமாகிவிட்டது. விடிய டியூஷனுக்கு போய்ட்டு வாறன். ஆமி முன்னேற அராலி பக்கத்தால முன்னேறுகிறான் என்று சனமு இடம்பெயர வெளிக்கிட்டுது. ரேடியோ எல்லாம் எதோ முன்னேறிப்பாய்ச்சல் என்று அலறுது. டியூஷன் முடிஞ்சு போனா உயரப்புலம் பிள்ளையார் கோயில், மூத்த நாயனார் கோயில், சிதம்பர பிள்ளையார் கோயில் என்று எல்லா இடமும் இடம்பெயர்ந்த சனம். நவாலி தேவாலயம் முன்னால் பெரிய கூட்டம். முன்னுக்கு இருந்த இந்து கோயிலிலும் நிறைய சனம். ஊரில் எனக்கு நன்கு தெரிந்த சனம் வேற நின்று உதவிசெய்து கொண்டிருந்தது. சர்ச்சுக்கு முன்னால் பிரதீஸ் அவன் ஒன்று விட்ட தமக்கையுடன் நின்றான். அவ அப்ப ஊர் விதானை. அதால இடம்பெயர்ந்த சனத்தின் விபரங்களை திரட்டி அவர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். நிறைய நாட்களின் பின்னர் அவனுடன் கதைத்தேன். தூரத்தில் ஷெல் விழுந்து வெடிக்கும் ஓசைகள் கேட்க கேட்க அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சம்பந்தமேயில்லாமல் சின்ன வயசில் நான் கொடுத்த மோதிரம் பற்றி சொன்னேன். இதை இப்ப சொன்னால் பெடியள் பகிடி பண்ணுவாங்களடா என்று சிரித்தான். சில நாட்களின் முன்னர்தான் (அல்லது அன்று காலையோ) தகப்பன் சவூதியில் இருந்து நீண்ட நாட்களின் பின்னர் ஊர் வந்திருப்பதாக சொன்னான். குண்டுகள் வெடிக்கும் சத்தம் நெருங்குவதுபோல கேட்க, என்ன நடக்கும் என்று கேட்டேன். விட மாட்டங்களடா. ஏதாவது செய்வாங்கள் பாரன் என்றான். சிறிது நேரத்தில் விடைபெற்று வீட்ட வந்துவிட்டேன்.

நவாலிக்கு அருகில் குண்டுகள் விழ தொடங்க நாமும் சுதுமலை நோக்கி சென்றுவிட்டோம். பின்னேரம் ஒரு நான்கரை மணி அப்படி இருக்கும் தொடர்ச்சியான சத்தம். புக்காராவில்(7) வந்து ராணுவம் குண்டு போட்டு நிறைய சனம் செத்துவிட்டது(7) என்று ரோட்டால சனம் குளறிக்கொண்டு ஓடி திரியிது. எதுவுமே செய்யமுடியாத நிலை. இரண்டு நாட்களின் பின்னர் செத்தவர்கள் பேர் பேப்பரில் வருகிது. அதில் அவனது அக்காவின் பெயருடன் அவனது பெயரும். என் நினைவுகள் எல்லாம் ஒரு வெட்ட வெளியில் குவிக்கப்பட்டு ஒரு கணம் செயலிழந்தேன். கிட்ட தட்ட நான் யாழ்ப்பாணம் வந்த நாள் முதல் அறிமுகமான நண்பன். மற்றவர்கள் முன்னர் உணர்ச்சிகளை காட்டாமல் கழிவறை சென்றேன். என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அழு அழு என்று அழுதேன். இனிய நண்பன் ஒருவன் இறந்துவிட்டன் என்று, வீணாக கதையாமல் விட்டு விட்டோமே என்று, அவன் சாவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் கூட கதைத்துள்ளோமே என்று எத்தனையோ எண்ணி எண்ணி அழுதேன். கிட்ட தட்ட 150 க்கு மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். நிறைய பேரின் உடல்களை எடுக்க முடியாமல் கட்டட இடிபாடுகளின் இடையேயே மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்தி எரித்தார்கள். அவனது உடலை எடுக்க முடிந்ததாம். ஆனால் தலை வெடித்து பிளந்திருந்த அவனது உடலை பார்த்து அவனது தந்தை கதறி கதறி அழுதாராம்.

இதற்கு பிறகு எத்தனையோ நடந்துவிட்டது. எமது ஊரில் இருந்து நிறைய பேர் விடுதலை போராட்டத்தில் குதித்தார்கள். அந்த பகுதியில் கிட்ட தட்ட எல்லா வீட்டிலும் ஒரு சாவு விழுந்திருந்தது. பாலகுமார் என்ற உதைபந்தாட்ட வீரன் தன் கால்களை இழந்தான். ரெக்ஸன் என்கிற நண்பனின் தங்கை கொல்லப்பட்டாள். நிறைய இழப்புகள். ரத்தங்கள்.

இப்போதும் கையில் ஒரு மோதிரம் அணிந்துள்ளேன். எப்போதும் பேசாமல் இருக்கும் மோதிரம் திடீரென்று கையை உறுத்துவதுபோல தோன்றும்போது பிரதீஸுடன் கடைசியாக கதைத்த ஞாபகம் வரும்


அடிக்குறிப்புகள்

(1) துளசி – இவன் மானிப்பாயை சேர்ந்தவன் விடுதலை போராட்டத்தில் குதித்து அண்மையில் வீரமரணம் அடைந்தவன்

(2) புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்பதுபோல எமது பால்யகால நம்பிக்கைகள்


(3) நவாலி, ஆனைக்கோட்டை பகுதிகள் நல்லெண்ணெய், அதாவது எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செய்வதில் பேர்போனவை அதனால் பல வீடுகளின் வாசலில் காய் விடப்பட்ட எள்ளும், காதுகளில் விழும் செக்கிழுக்கபடும் ஓசையும் எப்போதும் நிறைந்திருக்கும்

(4) இப்போதும் இவனுடன் அடிக்கடி கதைப்பதுண்டு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் நவாலியில் வசித்து வருகிறான்.

(5) இந்த டியூஷன் கால நினைவுகள் பற்றி முன்பு ஒரு முறை எழுதியுள்ளேன். அதன் சுட்டியை பெற இங்கே அழுத்தவும்

(6) அன்று அவன் பிறந்த தினம் வேறு, இதனால் அவன் சகஜ நிலைக்கு வரும்வரை காத்திருந்தோம்

(7) புக்காரா (Pucara) இவை ஆர்ஜெந்தீன தயாரிப்பு யுத்த விமானங்கள் 90களின் மத்திய பகுதிகளில் பெருமளவு இன அழிப்பில் பயன்பட்டவை. பின்னர் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தவகை யுத்த விமானத்துடன் அப்போது குண்டுகளை வீசிய விமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

(8) கிட்ட தட்ட 150 பேர் செத்தனர். இது பற்றிய பதிவுகள்
http://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing
http://www.tamilnation.org/indictment/genocide95/gen95012.htm
http://www.ltteps.org/?view=1750&folder=25
கனடாவில் இருந்து வெளியான கோடை என்கிற இணைய இதழில் வெளியானது

 

 

 

சில பாடல்கள், சில காதல்கள், சில நிகழ்வுகள்

ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நினைவிருக்கு” என்ற ஒரு அழகான பாடல் என்னவளே என்ற திரைப்ப்டத்தில் இடம் பெற்றிருந்தது. எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வைரமுத்து எழுதிய பாடல். பாடியவர் உன்னிகிருஷ்ணன். சற்று நினைத்துப் பார்த்தால் எல்லா நினைவுகளுக்கும், மறக்க முடியாத நிகழ்வுகளுக்கும் அவற்றுடன் தொடர்புடையதாக ஏதோ ஒரு பாடல் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் கேட்கும் பாடல்களும், சமயங்களில் வாசிக்கும் புத்தகங்களும் திரைப்படங்களும் எம் வாழ்வின் பிண்ணனி இசையை தாமே அமைத்துச் செல்கின்றன. கடந்து போன நினைவுகளை எப்போதாவது மீட்டிப் பார்க்கும்போது நினவுகளும், பாடல்களும் ஒரு கோர்வையாக, சரம் சரமாக ஒன்றுடன் ஒன்று தொடுத்து வருவதை நாம் காணமுடியும்.

அப்போது இடம்பெயர்ந்து கொடிகாமத்தில் தங்கி இருந்தோம். நாளை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்வு. பாடசாலைகள் இடம்பெறவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் வடமராட்சியிலும், தென்மராட்சியிலும் இருந்த வீடுகளில் அடைக்கலம் அடைந்திருந்தனர். அப்போது நான் இருந்த வீட்டில்தான் பதிவர் புல்லட்டும் தங்கி இருந்தார். அதே போல கதியால் என்ற பெயரில் பதிவெழுதும் என் விசாகன் மிக நீண்டகாலமாக என் ஆக நெருங்கிய நண்பர் ஆதலால் அவரும் ஒவ்வொரு நாளும் வீட்ட வந்து விடுவார். 90முதலே யாழ் குடா நாட்டில் மின்சாரம் இருக்கவில்லை. பாடசாலைகள் வேறு இருக்கவில்லை. பொழுது போவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. பாடல்கள் மட்டுமே எப்போதும் துணை செய்தன. இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பின் காலை நிகழ்ச்சிகள் எப்போதும் எம் காலை நேர நண்பன். நல்ல வேளை, இலங்கை வானொலி ஒலிபரப்புகளைக் கேட்கக் கூடாது, அப்படி கேட்பவன் துரோகி என்று அப்போது யாரும் புறப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் யாழ் குடாநாட்டு மக்கள் பலாலியில் இருந்து ஒலிபரப்பாகும் எஃப் எம் ஒலிபரப்பு நிகழ்வுகளைக் கூட கேட்டு ரசிக்கவே செய்தனர்.

அந்த நேரங்களில் எஸ் பி. பாலசுப்ரமணியமும் ஜானகியும் இணைந்து சற்று விரகத்துடன் பாடும் பாடல்களுக்கு நானும் விசாகனும் தயா என்ற நண்பனும் நிறையவே ரசிகர்களாகி இருந்தோம். புள்ளகுட்டிக்காரன் படத்தில் வரும் ஒரு பாடலும், திரு. மூர்த்தி என்ற திரைப்படத்தில் வரும் செங்குருவி, செங்குருவி என்ற பாடலும் இதில் அடக்கம். இதில் செங்குருவி பாடல் வெளிவந்து சில காலமே ஆகி இருந்தபடியால் அந்தப் பாடல் மீது ஓரளவு வெறியே இருந்தது.  அப்போது காலையிலேயே விசாகன் எனது வீட்ட வந்துவிடுவான்.  எனது பெரியம்மா நீதிமன்றத்தில் வேலை செய்துவந்தார்.  எனவே அவரை பேருந்து தரிப்பிடத்தில் இறக்கிவிடுவதற்கான நான் சைக்கிளில் ஏற்றிச்செல்லும்போது விசாகனும் என்னுடன் வருவான்.  ஒருமுறை அவரை கொடிகாமச் சந்தியில் இருந்த பேருந்து தரிப்பிடத்தில் இறக்கி விட்டு வரும்போது அங்கிருந்த சாப்பாட்டுக் கடையொன்றில் ஒலித்த இலங்கை வானொலியின் அறிவிப்பு அடுத்ததாக திருமூர்த்தி திரைப்படத்தில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம்,  எஸ், ஜானகி பாடிய பாடல் என்ற அறிவிப்பைக் கேட்டோம்.  அவர்கள் குறிப்பிடும் பாடல் செங்குருவி செங்குருவி பாடல்தான் என்று உணர்ந்து  பாடலைக் கேட்டே ஆகவேண்டும் என்று இருவருக்கும் ஒரே நேரத்தில் யோசித்தோம். கடைக்கு வெளியில், தெருவோரமாக இருந்து பாடல் கேட்டால் ஒழுங்காக இராது. வாகன இரைச்சல் வேறு. சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தோம். அது ஒரு அப்பக் கடை. ஆளுக்கு இரண்டு அப்பமும் தேனீரும் பாடலைக் கேட்டபடியே, பாடலைக் கேட்பதற்காகவே சாப்பிட்டோம். அவ்வளவு சுவையான அப்பம் அதன் பிறகு சாப்பிட்டதுமில்லை, அந்த பாடலை அத்தனை நெருக்கமாக பின்னொருபோதும் உணர்ந்ததும் இல்லை.

திரைப்படங்களில் ஏதாவது முக்கிய சம்பவங்கள் நடைபெறும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாடலைத் திரும்ப திரும்ப காட்டுவார்கள். இதெல்லாம் சினிமாத்தனம் என்றுதான் நாம் பெரும்பாலும் நினைத்திருப்போம். ஆனால் சினிமாவைவிட நம்ப முடியாத நிகழ்வுகள் வாழ்க்கையில்தான் அதிகம் இடம்பெறுகின்றன. அச்சமில்லை அச்சமில்லை என்ற இந்திரா திரைப்படப் பாடலை நான் கேட்ட பெரும்பாலான சந்தர்ப்பங்களும் அது போன்ற அதிசயம்தான். வாழ்வில் நெருக்கடி மிகுந்து, அடுத்தது என்னவென்று தெரியாத சந்தர்ப்பங்களில் எல்லாம் ஏதோ ஒரு மூலையில் இருந்து இந்தப் பாடலை காலம் எனக்காக ஒலிபரப்பும். 95ல் யாழ்ப்பாணத்தை விட்டு, பெற்றோர்கள், தம்பி, தங்கை எல்லாம் கொழும்பு சென்றிருக்க, நானும் ஒரு தம்பியும் (எனக்கு 16 வயது அவனுக்கு 13 வயது) 16 மைல் தூரத்தை இரண்டு நாட்களாக நடந்து கொடிகாமம் வந்து சேர்ந்த அன்று இந்தப் பாடலைக் கேட்டேன். பின்னர் கொடிகாமத்தில் இருந்து ராணுவக் கட்டுபாட்டு யாழ்ப்பாணத்துக்குச் செல்கையில் இதே பாடலைக் கேட்டேன். இது போல தனியாக இந்தியா சென்று தனியறையில் படுத்து இருந்த ஒரு இரவில், கனடா வந்தபின் எல்லா நம்பிக்கைகளும் உடைந்து போய் இருந்த ஒரு மறக்க முடியாத இரவில் என்று எத்தனையோ பொழுதுகளில் காலம் இந்தப் பாடலை எனக்காக பின்னணி இசையாக்கி உள்ளது.

புறா விடு தூது, கிளி விடு தூது, புழுதி விடு தூது என்கிற விடு தூதுகளைப் போல நான் தூது சொல்ல அனுப்பியவையும் பாடல்களே. அப்போது கல்லூரியில் படித்து கொண்டிருந்தேன். தோழி ஒருத்தியிடம் மெல்லக் காதலைச் சொல்லவேண்டும். அவளோ நீ யாரைக் காதலிக்கிறாய், யாரைக் காதலிக்கிறாய் என்று அடிக்கடி நச்சரித்துக் கொண்டிருப்பவள். உன்னைத்தான் என்று சொல்ல ஆசை, அதைக் கேட்கத்தான் அவளும் ஆசைப்படுகிறாள் என்று நிச்சயம் தெரியும். ஆனாலும் சொல்லத் தயக்கம். அப்போதும் பாடல் தான் துணை வந்தது. உல்லாசம் திரைப்படத்தில் “வீசும் காற்றுக்கு” என்று ஒரு பாடல் வரும். படத்தில் நாயகி மகேஸ்வரி நாயகன் விக்ரமிடம் நீ யாரைக் காதலிக்கிறாய் என்றூ கேட்க, உன்னைதான் என்று சொல்ல முடியாமல் விக்ரம் தவிப்பார். இதையே நானும் பயன்படுத்திக் கொண்டேன். இந்த சமயத்தில்தான் (இந்த நிகழ்வு நடைபெறும்போதுதான்) மின்சாரக் கண்ணா திரைப்படப் பாடல்களும் வெளியாகி ”உன் பேர் சொல்ல ஆசைதான்” பாடல் என் விருப்பப் பாடலாக வீட்டில் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இரண்டையும் ஒன்றாக பயன்படுத்தினேன். ஒரு பாடல் கசட்டில் (இசைத்தட்டுகள் எல்லாம் அப்போது அவ்வளவு பிரபலமாகவில்லை) இரண்டு பாடல்களையும் அடுத்தடுத்து பதிந்து கசட்டுக்கு “யாரோ அவளுக்கு என்று பெயரும் எழுதி அவளிடம் கொடுத்தேன். நான் காதலிக்கும் பெண் யாரென்று இந்தப் பாடல்களில் சொல்லி இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளிடம் வாக்மேனைக் கொடுத்தேன். வீசும் காற்றுக்கு பாடல் ஒலிக்கின்றது. யாரவள் யாரவள் என்று பின்னணியில் ஒலித்த குரல்கள் மெல்ல அடர்த்தியாகிவர, “மேகம் போலே என் வானில் வந்தவளே, யாரோ அவளுக்கு நீதான் என்னவளே” என்று பாடல் ஒலிபரப்பாகும். அடுத்து ஒலித்த உன் பேர் சொல்ல ஆசைதான் பாடலும் அதை உறுதி செய்ய, எதிர்பார்த்த செய்தி, எதிர்பாராத சந்தர்ப்பத்தில் கிடைத்த பரவசம் அவள் முகத்தில்.

-2-

ஞாபகங்கள் இனிமையானவை. சமயங்களில் அவை கொடுமையானவையும் கூட. மறந்தே தீரவேண்டும் என்று நினைக்கும் சில நினைவுகளை புதைக்கவே முடியாமல் போவது போல துன்பம் வேறில்லை. “மறக்கத்தான் நினைக்கிறேன்” என்று ஒரு வரியில் இதைக் கவித்துவமாகத் தன் கிறுக்கல்கள் புத்தகத்தில் சொல்லி இருப்பார் பார்த்திபன். ஆட்டோகிராப் சினேகா போல ஒருத்தி. புலம்பெயர் வாழ்வின் என் முதல் கட்டத்தில் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்தவள். அலைபாயும் மனத்துடன் நான் தடுமாறும் போதெல்லாம் என்னை நிலையாக்கினவள். என் நண்பன், என்பதைத் தாண்டி, எனக்கு மட்டுமே நண்பன் என்கிற அவள் எதிர்பார்ப்பு சமயங்களில் எரிச்சலூட்டினாலும், ஒரு போதும் அவளை வெறுக்க முடிந்ததில்லை. கோகுலத்தில் சீதை திரைப்படத்தில் வரும் ”எந்தன் குரல் கேட்டு” பாடல் எப்போதும் அவள் இருப்பையே நினைவூட்டும். ஒரு கொடிய பொழுதில் எனக்கும் அவளுக்குமான உறவு முறிக்கப்பட்டபோதும் நினைவுகளை நான் மறக்க நினைத்தாலும், மறக்கத்தான் (மறக்கத் தான்) நினைக்கிறேன். மதுவுடன் கூடிய சில மாலைப் பொழுதுகளில் நான் அதிகம் நேரம் செலவளிக்க விரும்புவது அனேகமாக இந்தப் பாடலுடன்தான். என் ஆரம்பகால கனேடிய நட்புகளில் புத்தகம் வாசிப்பவள் இவள் ஒருத்திதான். அப்போது பாலகுமாரனின் தீவிர வாசகர்களாகி இருந்தோம். பயணிகள் கவனிக்கவும், கரையோர முதலைகள், சினேகமுள்ள சிங்கம் போன்ற பாலகுமாரனின் பல புத்தகங்களை ஒன்றாக இருந்தே வாசித்தும் இருக்கிறோம். சண்டையிட்டு இருக்கிறோம். எல்லாரும் படித்த பாலகுமாரனின் இரும்பு குதிரைகள்(இதில் “க்” வராது. ஏனென்று நாவலின் கடைசி அத்தியாயத்தில் அழகாகச் சொல்லியிருப்பார் பாலா. இப்படியெல்லாம் பாலா யோசிக்க மாட்டார், இது சுப்ரமண்ய ராஜூவின் யோசனையாகத்தான் இருக்கும் என்பாள் அவள். எனக்கு பாலாவை அதிகம் பிடிக்கும், அடிக்கடி அவருடன் பேசுவேன் என்பதாலேயே அவர் பற்றி வம்பிழுப்பாள் அவள்.) இரும்பு குதிரைகள் அவள் ஏன் வாசிக்கவில்லை என்றால், அதில் வரும் நாயகி பெயர் தாரணி. இவளோ புத்தகத்தில் தாரணி என்று வரும் எல்லா இடங்களிலும் பேனா மையால் அழித்து வைத்தாள். அந்தப் பெயரை அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். தன்னைத் தவிர எவரிடமும் நான் நெருக்கமாகி விடக்கூடாது என்ற முனைப்பு அவளுக்கு. இதற்கும் தாரணிக்கும் என்ன சம்மதம் என்று கேட்கிறீர்களா. அதைத்தான் ”காதல் பழசாவதும் இல்லை, தேவதைகளுக்கு வயசாவதுமில்லை என்று பின்னொரு நாளில் பதிவிட்டு வைத்தேன். கொடிகாமத்திலும், கொக்குவிலிலும் நண்பன் விசாகன் அடிக்கடி என்னைப் பார்த்து “கொஞ்ச நாள் பொறு தலைவா…” என்று பாடுவான். அவன் ஏனோ பாடியதை நான் எனக்காகப் பாடியதாக எண்ணிக் கொண்டேன். விசாகன் பாடும் “கொஞ்ச நாள் பொறு தலைவா…:” அவளே ஒரு முறை பாடிய “கஸ்தூரி மான் குட்டியாம் பாடலும்” எப்போதும் என் மனதுக்கு நெருக்கமான பாடல்களே. எப்போதும் என்னால் மறக்கமுடியாத, எவருடனும் பேசவே விரும்பாத ஒரு நினைவாகிப் போனாள் அவள். இரட்டைப் பின்னல், எதிலும் காட்டும் வேகம், சடாரென்ற (நடிகர் ரஜினியை ஒத்த) உடல் அசைவுகள், குறும்பு, அடிக்கடி அணியும் கறுப்பு – சிவப்பு உடைகள்…….. ம்ம்ம்

”மீண்டும், சந்திக்கும் வாய்ப்பு வந்தால் தள்ளி நின்றழுது பார்ப்போம்” – வைரமுத்து