இந்த நோக்கமும் அந்த அக்கறையின்பாற்பட்ட தொலைநோக்குமே தாசீசியஸை வழிநடத்தியிருக்கவேண்டும். பிபிசியில் பணியாற்றியதில் இருந்து பின்னர் ஐபிசியை உருவாக்குவதற்கான தேவை எதுவாக இருந்தது என்பது குறித்தும், பின்னர் ஐபிசியை உருவாக்கியது குறித்தும் கானா பிரபாவிற்கு வழங்கிய நேர்காணலில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அதுபோலவே தமிழ்க் குடில் என்கிற அவரது செயற்திட்டம் மிகவும் முன்னோடியானதென்பதை அதன் நோக்கங்களை வைத்துப் பார்க்கின்றபோது அறியமுடிகின்றது. அதற்கப்பால் நாராய் நாராய் என்கிற நாடகப் பயணம் இன்னொரு முக்கியமான செயற்திட்டம். இந்த விடயங்களையெல்லாம் வெறும் தரவுகளாக இல்லாமல் எந்தச் சூழலில் எந்தப் பின்னணியில் எந்த நோக்கத்துக்காக இவையெல்லாம் உருவாகிய என்பதை இந்த நூலினூடாகவே அறியமுடிகின்றது.