ஒடுக்கு முறைகள் பற்றி சில வாசிப்புகள்

1

அமைதிக்கான யுத்தம் என்ற பெயரில் ஒரு மிகப்பெரும் அழிவு இலங்கையில் நடந்து முடிந்திருக்கிறது. இதுவரை கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர், காணாமல் போனவர்கள் எத்தனை பேர், கைது செய்யப்பட்டோர் எத்தனை பேர் என்று எந்தக் கணக்குகளும் காண்பிக்கப்படாமல் இலங்கை அரசாங்கம் இந்தியப் படவிழா என்றும், புலி உறுப்பினர்களுக்குத் திருமணம் என்றும் ஈழப் பிரச்சனையில் அக்கறை கொண்டோர் கவனத்தைக் கூட வெற்றிகரமாக சிதறடிக்கத் தொடங்கியிருக்கின்றது.  அழித்தொழிப்பின் ஒரு பங்குதாரரான இந்திய அரசோ இப்போது இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பச்சை வேட்டை என்ற பெயரில் ராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. திரைப்படங்கலில் காட்டப்படும் மோசமான பண்ணைக்காரர்கள் போல பழங்குடி மக்களின் நிலத்தை அவர்களிடம் இருந்து பறித்து வியாபரக் கம்பனிகளிடம் தாரைவார்க்கும் ‘ரவுடிப்படை’ யின் வேலையை ஒரு அரசாங்கம் தனது ராணுவக் கூலிகளுடன் சேர்ந்து செய்யத்தொடங்கியுள்ளது.

 2

தாம் வாழும் நிலத்தை தெய்வமாகப் போற்றி வாழும் வாழ்க்கை முறை பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறை. இன்று G8, G20 என்ற பெயரில் உலகின் உல்லாச நகரங்களில் கூட்டம் கூட்டி, சூழல் மாசடைவதை எப்படிக் கட்டுப்படுத்தலாம் என்று ‘உலக்கை போன இடம் பாராது, ஊசி போன இடம் தேடும்’ உலகத் தலைவர்கள் இதற்கெல்லாம் தொடக்கம் தமது நாடு பிடிக்கும் ஆசையும், பணம் பண்ணும் பேராசையும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிகைகளை எடுக்க முன்வரவேண்டும். 1855ல், வாஷிங்டன் கவர்னராக இருந்த ஐசக் இங்கல்ஸ் (Issac Ingalls) என்பவர் பூர்வீக குடிகள் தமது நிலத்தை தம்மிடம் (வெள்ளையரிடம்) விற்றிடவேண்டும் என்று கூறியபோது பூர்வீக குடிமக்களின் தலைவர்களின் ஒருவரான Chief Seattle என்பவர் ஆற்றிய உரை (http://www.context.org/ICLIB/IC03/Seattle.html) அந்த மக்கள் தாம் வாழும் நிலத்துடன் எவ்வளவு பிணைத்துப்போய் இருந்தனர் என்று காட்டுகின்றது. இறுதியில் அத்தனை மக்களும் கொல்லப்பட்டும், மீறி உயிர் பிழைத்தவர்கள் ஏதாவது ஓர் மூலையில் கொண்டு போய் ஒதுக்கப்பட்டும் ரத்தக் கறையுடன் கட்டி எழுப்பப்பட்ட அமெரிக்க சாம்ராஜ்யம்தான் இன்று முரண் நகையாக மனித உரிமைகள் பற்றி அடிகக்டி அக்கறைப்படுவது போல ஆடு நனைவதைக் கண்ட ஓநாயாக அழுகிறது.

OpenVeinCoverஒபாமாவுக்கு சாவேஸ் பரிசாக அளித்த புத்தகம் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாத உயிர்மை இதழில் பத்தி ஒன்றில் குறிப்பிடப்பட்ட பின்னர்தான் எட்வர்டோ கலியானோ எழுதிய Open Veins of Latin America என்ற புத்தகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் படிக்க ஆரம்பித்தேன். தென்னமெரிக்கா நாடுகள் எப்படி படிப்படியாக பிரித்தானிய, ஸ்பானிய, மற்றும் அமெரிக்க அரசுகளால் தங்கத்துக்காகவும், வெள்ளிக்காகவும் சூறையாடப்பட்டு இன்று பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன என்று எளிமையாகவும், ஆனால் அழுத்தமாகவும் சொல்லுகின்றது இந்தப் புத்தகம். நாளொன்றுக்கு சில பக்கங்கள் என்று மெதுவாகவே வாசித்து வந்தாலும், இது போன்ற புத்தகங்களை வாசிப்பது முக்கியமானது என்றே கருதுகிறேன்.

3

சில நாட்களின் முன்னர் சோளகர் தொட்டி நாவலை வாசித்தபோது மனதளவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. வீரப்பன் வேட்டை என்ற பெயரில் நரவேட்டை ஆடிய காவல் துறையினராலும், தமிழக + கர்நாடக அதிரடிப் படையினராலும் பழங்குடிமக்கள் எப்படியெல்லாம் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதை ஒரு புனைவினூடாக சொல்லும் முயற்சியில் நிச்சயமாக ச.பாலமுருகன் வெற்றி பெற்றிருக்கிறார்.

காட்டை அண்டிய பகுதி ஒன்றில் (தம் ஊரை தொட்டி என்றழைக்கிறார்கள் இவர்கள்) வசிக்கும் சோளகர் என்கிற இன மக்கள் தாம் வாழும் ஊரையும், அதை அண்டிய காட்டையும் புனிதமாக பாவித்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தை அண்டிய காடுகளில் வீரப்பன் உலாவுகின்றதாக வரும் செய்திகளை அடுத்து வீரப்பன் வதம் செய்ய புறப்பட்ட காவல்துரையினராலும், அதிரடிப் படையினராலும் (தமிழக + கர்நாடக) சோளகர் தொட்டி மக்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டு, நார் நாராக சிதைக்கப்படுகிறார்கள் என்று இந்த நாவல் சொல்கிறது. அத்துடன், இந்தப் பழங்குடி மக்களின் பூர்வீக நிலத்தை அபகரிக்க உயர்குடி மக்கள் செய்யும் தந்திரங்களும், அவர்கள் எப்படித் தம் சுயநலங்களிற்காக அரசு இயந்திரத்தை பழங்குடி மக்கள் மீது ஏவுகின்றார்கள் என்றும் விரிவாகக் காட்டப்படுகின்றது. நாவலை வாசித்து முடித்த கையோடு வாசிப்பில் ஆர்வம் உள்ள எனக்குத் தெரிந்த அனைத்து நண்பர்களுக்கும் இந்த நூலை வாசிக்கும்படி சிபாரிசு செய்தேன்.

விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடத்தப்படும் மனிதத் தன்மையே அல்லாத வக்கிரமான தாக்குதல்கள் எல்லாம், நாம் ஏற்கனவே கேட்ட கதைகளையே நினைவூட்டுகின்றன. ஒரு ராணுவம் தன் நாட்டைச் சேர்ந்த மக்களையே, இப்படி எல்லாம் துன்புறுத்துமா என்ற கேள்வி ஈழத்தில் பிறந்த எவருக்கும் ஏற்படாத அளவுக்கு இந்திய (சொந்த நாட்டு ராணுவம் இல்லாதவிடத்தும் தமிழ் மக்கள் தம்மைக் காக்க வந்தவர்கள், தமக்காக வந்தவர்கள் என்றே இந்திய ராணுவத்தைப் பார்த்தனர்) மற்றும் இலங்கை ராணுவத்தினரால் சின்னா பின்னமாக்கப்பட்டவர்கள் ஈழத்தமிழர்கள். ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் இந்நாவலில் கூறப்படுகின்ற நிறைய அத்து மீறல்களை, உள மற்றும் உடல் ரீதியான வன்முறைகளை, அவை ஏற்படுத்தக் கூடிய வலிகளை முற்றாக உணர முடிகின்றது.

4

ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கொழும்பிவில் இருந்த எனது நண்பன் ஒருவனின் தம்பி, வன்னியில் நடைபெற்ற மோதல் ஒன்றில் இறந்து போயிருந்தான். அவனது முழுக் குடும்பத்தினரும் கொழும்பில் இருந்தனர். அவர்களில் எவராலுமே அந்த இழப்பை சுதந்திரமாக வெளியில் காட்டிக் கொள்ள முடியவில்லை, அந்த மரணம் தந்த வலியைவிட, அந்த வலியை வெளியில் காட்டிக் கொள்ளவே முடியவில்லை என்ற வலி நிச்சயமாக அவர்களுக்கு அதிகமாகவே இருந்திருக்கும். வன்னியில் இறுதி யுத்தத்தில் இறந்த விழுந்த உறவுகளுக்கு அழக்கூட ஒரு கணம் தரிக்க முடியாமல் உயிர் காக்க ஓடி ஒளிந்த மக்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். “ஹாஜார் சுராஷிர்மா” என்று வங்காளத்தில் வெளியாகி தமிழில் “1084ன் அம்மா” என்று மொழி பெயர்க்கபட்ட மகாசுவேதா தேவியின் நாவலும் தனது மகனின் மரணம் தரும் வலியைக் கூட, அதன் தாக்கதைக்கூட அனுபவிப்பதற்கு, உணர்வதற்கு, உரிமை மறுக்கப்படும் ஒரு தாயின் வலியையும், அவர் மனதில் அது ஏற்படுத்தும் தாக்கதையும் கூறுகிறது.

1084பணம் பண்ணுவதையும், அதைப் பெருக்குவதையும் குறியாகக் கொண்டு வாழும் திவ்யநாத்துக்கும், தன்னை இயல்பாகவே எளிமையாக்கிக் கொண்டவரான சுஜாதாவுக்கும் ஜோதி, நீபா, தூலி, ப்ரதீ என்று நான்கு பிள்ளைகள். திவ்யநாத் பணத்தைக் குறியாக கொண்டே எல்லாத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுகிறார். அவருக்கு திருமணத்து அப்பால் வேறு பெண்களுடனும் தொடர்பு இருக்கின்றது. தனது அலுவலகத்தில் வேலை செய்த டைப்பிஸ்ட் பெண் ஒருவருடன் அவர் இன்னுமொரு குடித்தனமும் நடத்துகிறார். குடும்பத்தில் உள்ள இதர உறுப்பினர்கள் அனைவருமே சுயநலம் மிகுந்தவர்களாகவும், போலித்தனமான வாழ்க்கை மீது அக்கறை கொள்பவர்களாகவும் திவ்யநாத்தின் பிரதிகளாகவும் இருக்க, ப்ரதீயோ மானுடத்தையும், மற்றோரின் இருப்பையும் மதிப்பவனாக இருக்கிறான். வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைசெய்கின்ற ஹேம் பொருட்களை வாங்கிக்கொண்டு கடைவீதியால் திரும்பும்போது அவளை வாடகை வண்டியில் வரலாமே என்று அறிவுறுத்துகிறான். அவர்களுடன் சேர்ந்து சமையலறையிலேயே உண்ணுகிறான். தன் தகப்பனின் நடவடிக்கையால் அதிருப்தியுற்று வீட்டை விட்டு வெளியேற எண்ணியபோதும், அப்படி வெளியேறுவது தன் தாயைத்தான் நிராதரவாக்கும் என்று அங்கேயே தங்குகிறான். அதே நேரம் தனக்கு கல்லூரியால் கிடைக்கின்ற புலமைப் பரிசில் பணத்தில் தனக்கான வாடகையை செலுத்திக் கொள்ளுகிறான்.

அரசாங்கம் மீதும், அதிகார வர்க்கம் மீதும் அதிருப்தியுற்று நக்சல்கள் புறப்பட்டிருந்த நேரம் அது. ப்ரதியும் அவர்களுடன் சேர்ந்து இயங்குகிறான். வாழும் சமூகம் மீதும் மனிதர்கள் மீதும் இருக்கின்ற கோபம் அவனை ஒரு போராளியாக்குகின்றது. ஒரு முறை சுஜாதா அவனிடம் “நீ ஏன் (அப்பாவை / திவ்யநாத்தை) வெறுக்கிற” என்று சுஜாதா கேட்டபோது, “திவ்யநாத் என்கிற தனி மனிதன் என் எதிரியில்லை. அவர் நம்பறாரே அந்த விஷயங்கள், அந்த மதிப்பீடுகள், அவை எனக்கு உடன்பாடில்லை. இன்னும் பல பேர் அவற்றை நம்புறாங்க, அப்படி நம்பறவங்க எல்லாம் ஒரு வர்க்கம். அந்த வர்க்கத்தை நான் வெறுக்கிறன்…. அந்த வர்க்கத்தில அப்பாவும் ஒருத்தர்” என்று சொல்லுகிறான். வாழ்க்கை பற்றிய ப்ரதீயினது அபிப்பிராயங்கள் பசப்பில்லாதவை. கறாரானவை.

ஆனால் அதுதான் அவனை வாழும் உலகில் இருந்து தூக்கித் தூரவீசுகிறது. இப்போதைய பச்சை வேட்டை போல அப்போது நக்சல்களுக்கு எதிராக ஏதோ ஒரு வேட்டையில் இந்திய அரசு பெரு முனைப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அர்ப்பணிப்புகளால் நிரப்பப்பட்ட போராட்டங்களில் சில துரோகங்களும் அவர்கள் அறியாதவண்ணம் கலந்திருப்பது வாழ்வின் மிகப்பெரும் அபத்தங்களில் ஒன்று. ப்ரதீயும் அவன் நண்பர்களும், தப்பிச் செல்வதற்கு முன்னர் அவர்கள் நண்பன் ஒருவன் வீட்டில் ஒளிந்திருக்கும் போது, அவர்களால் அதிகம் நம்பப்பட்ட இன்னொரு நண்பனால் காட்டிக் கொடுக்கபப்பட்டு, அரசு சார்பானவர்களால், கூலிப்படையினரால் அடித்தே கொல்லப்படுகின்றனர். வாழும்போது தந்தை மற்றும் சகோதரர்களால் கோழை என்று அவனிடம் இருந்த சில நல்ல குணங்களை முன்னிட்டு பரிகசிக்கப்பட்ட ப்ரதீ தன் வீரத்தை தன் மரணத்தால் பதிவு செய்கின்றான். ஆனால் அவன் தந்தையோ, அவன் மரணத்தை எல்லா விதமான பதிவுகளில் இருந்தும் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி அழித்துவிடுகிறார்.

உரிமைக்காக போராடிய ஒருவனின் மரணத்தை ஒரு கேவலமான விடயமாக மாத்திரமே அவரால் பார்க்க முடிகின்றது. ப்ரதீ போன்ற பல இளைஞர்களை விசாரணை இன்றியே கொன்று தள்ளுவதற்கு ஆதரவாக நின்ற சரோஜ் பால் போன்றவர்களுடன் உறவு கொண்டாட முடிகின்றது. ப்ரதீ இறந்த இரண்டாவது நினைவுநாளிலேயே தனது கடைசி மகளின் திருமண நிச்சயதார்த்தத்தை எந்தவித உறுத்தலும் இல்லாமல் கொண்டாட முடிகின்றது. வாழும் போது தான் பிறந்த குடும்பத்தை விட்டு விலகியே இருந்த ப்ரதீ, சாவின் பின்னர் அந்த குடும்பத்தில் இருந்து மறக்கப்பட்டே விடுகிறான். ஆனால் ப்ரதீக்கள் பிறப்பால் அமைந்தவற்றை கொண்டாடாதவர்கள். புதியதோர் உலகம் அமைக்க கனாக் கண்டவர்கள். அவன் அமைத்த புதிய உலகில், அவன் அம்மாவின், அவன் தோழி நந்தினியின், அவன் நண்பர்களின் குடும்பங்களும் அவன் நினைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறான்.

அதே நேரம், ப்ரதீயின் குடும்பத்தைப் போலவே, அவனுடன் இறந்து போன சமூவின் சகோதரியும் சுஜாதா அங்கே வருவதால் சமூவின் நினைவு சமூவின் தாய்க்கு மீண்டும் மீண்டும் வரும் என்பதால் அவர் வருகையை விரும்புவதில்லை. ஆனால் ப்ர்தீயின் அப்பா ப்ரதீயின் நினைவுகள் மறக்கப்படவேண்டும் என்று விரும்புவதற்கும், சமூவின் அக்கா அவன் நினைவு மறக்கப் படவேண்டும் என்று விரும்புவதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

ப்ரதீயின் அப்பாவின் பார்வையில் அவன் மரணம் அவமானத்துக்குரியது போன்ற தோற்றம் தெரிய, சமூவின் அக்கா பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கும் அவர்களது குடும்பம் சமூவின் அடையாளத்தால் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை தவிர்க்கவும், அவர்கள் தாயினை மனநிலை அளவிலாவது மீட்டெடுக்கவும் விரும்புகிறார்.  நாவலில் அவதானித்த இன்னுமொரு பாராட்டத்தக்க அவதானம் சுஜாதா நாவல் முழுவதும் அவர் என்று “ர்” விகுதியுடனேயே அழைக்கபப்டுகிறார். பொதுவாக இந்த விகுதி ஆண்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டு, பெண்களுக்கு “ள்” விகுதியே வழங்கப்படுவது வழக்கம். வங்காளத்தில் இந்த அவதானத்தைக் காட்ட மகாசுவேதா தேவி ஏதாவது உத்திகளைக் கையாண்டாரா அல்லது மொழி பெயர்த்த சு. கிருஷ்ணமூர்த்தி இந்த விதமாக எழுதினாரா தெரியவில்லை. எவராக இருந்தாலும் இது நிச்சயம் பாராட்டவேண்டியதும் மற்றவர்கள் பின்பற்றவேண்டியதும் ஆகும்.

அது போல நாவலில் வரும் தீமான் ராய் என்ற கவிஞர் உட்பட்ட பல அறிவு ஜீவிகள், பங்களாதேஷில் கிளர்ச்சி நடந்தபோது, உணர்ச்சி வசப்பட்டு கவிதைகள் எழுதிவிட்டு பின்னர் வங்காளத்தில் கிளர்ச்சி ஏற்பட்ட போது மௌனம் காத்தனர் என்று கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர். ப்ரதீக்கள், திவ்யநாத்துக்கள், அநித்யாக்கள் போல தீமான் ராய்களும் அழிவதில்லை. நமது தமிழ் சூழலிலும் கூட இது போன்ற தீமன் ராய்கள் நிறையப் பேரை சென்ற ஆண்டு அடையாளம் கண்டிருக்கிறோம். நாவலின் ஆரம்பத்தில் சுஜாதாவுக்கு ஒரு சந்தேகம் வருகின்றது. அது நாவலை வாசிக்கும், வாசித்த ஒவ்வொருவருக்குமான சந்தேகமானது ப்ரதீ இறந்தபின் எழும் கேள்வியாக பின்வருமாறு அமைகின்றது;

அவனது ஃபைல் மூடப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால் இதன் மூலம் நம்பிக்கை ஒழிப்பில் அவன் கொண்டிருந்த தீவிர நம்பிக்கை ஒழிக்கப்பட்டு விட்டதா? ப்ரதீயும் அவனது சகாக்களும் இப்போது இல்லைதான். அதனாலேயே எல்லாம்முடிந்து போய்விட்டதா? ப்ரதீயின் சாவு அர்த்தமற்றதா என்பதுதான் கேள்வி. அந்த மரணத்துக்கு ஒரு பெரிய பொருள் “இல்லை”யா?