மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? 2

 

நான் மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? என்கிற என் முன்னைய குறிப்பில் வலியுறுத்தியது, இங்கே குறிப்பிடப்படும் அறம் என்பது, “ஆள்வோர்க்கான அறம்” என்பதை வலியுறுத்தவே.  அவ் அறம், எல்லாருக்கும் பொதுவானதாகவோ அல்லது எல்லாருக்கும் அறமாகவோ இருப்பதில்லை.  புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி ஆராயும்போது அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பேசவேண்டும்.  அன்றைய வழமைகளை ஆராயவேண்டும்.  அவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும்.  அவையெல்லாம் புராணங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல.  அதே நேரத்தில் புராணங்கள், அடிப்படைவாதம் ஒன்றினையோ அல்லது மதவெறியையோ தூண்டவோ அல்லது பிற இனங்களை அல்லது குழுமங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கவோ பிரயோகிக்கப்படக்கூடும் என்ற அவதானத்துடனும் அவற்றை அணுகுவதே நன்று.

 

மகாபாரதம் தொடர்பான எனது குறிப்பினைத் தொடர்ந்த தனது பதிவுகளில் ஆனந்தராம் அவர்கள் “இவற்றில் பெண்கள், சாதாரண மக்கள் வெறும் காய்களே. அப்படியானால் இக்காவியங்களில் பேசப்படுவது அறமா வெறும் சந்தர்ப்ப வாத அரசியலா?” என்று கேட்டிருக்கின்றார்.  நான் குறிப்பிட விரும்பியது, அந்நாளில் அதுவே ஆள்வோரின் அறமாக இருந்தது என்பதையே.  இதன் அர்த்தம், இதை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன் என்பதோ அல்லது விரும்புகின்றேன் என்பதோ அல்ல.  மகாபாரதம் போதிக்கின்ற ஆள்வோருக்கான அறம் என்பது அதுதான்.  அவ்வளவே.

 

சில நாட்களின் முன்னர் நண்பர் இளங்கோ தனது முகநூலில் எழுதி இருந்த சிறு குறிப்பின் மூலம் தூண்டப்பட்டு பெருமாள் முருகனின் ஆளண்டாப்பட்சி, மாதொருபாகன் இரண்டையும் வாசித்து முடித்தேன்.  இதில் மாதொருபாகன் பற்றி சில விடயங்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.

 

மாதொருபாகன் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் கொங்கு பிரதேசத்தில் நடைபெறும் கதை.  இந்நாவலிற்காக அவர் திருச்செங்கோடு ஆலயத்தினையும், அவ் ஆலயத்தில் இடம்பெறும் சடங்குகளையும், மக்களின் பண்பாட்டு வாழ்வியலையும் பற்றி களப்பணியாற்றி ஆய்வுகளைத் திரட்டி நாவலாக்கியுள்ளார்.  குறிப்பாக, திருச்செங்கோடு ஆலயத் திருவிழாவின் பதினான்காம் நாள் திருவிழா பற்றிக் குறிப்பிடுகின்றார்.  இந்நாளின்போது ஆலயத்திற்கு குழந்தைப் பேறற்ற தம்பதியரில் பெண்கள் அவ்விழாவிற்கு வரும் ஆண்களில் விருப்பமானவர்களுடன் உறவுகொண்டு குழந்தைப் பேறடையை முயலலாம் என்பது வழக்கமாக இருந்திருக்கின்றது.  இந்நாவலில் பெண்ணின் கணவனுடன் இது பற்றி உரையாடப்படுகின்றது.  பெண்ணின் பெற்றோர், சகோதரன் மற்றும் கணவனின் தாய் அனைவரும் இதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர்.  குடும்பப் பேறடையாத தம்பதியரில் ஆணுக்கு இரண்டாம் திருமணம் என்பது உரிமையாக இருந்தது போன்றே, பெண்ணுக்கும் இத்திருவிழாவில் கலந்துகொள்வது உரிமையாக இருந்திருக்கின்றது.  இந்நாவல் இடம்பெறுவது 1930 கள் முதல் 1947 வரையாக இருக்கலாம்.  ஆனால் இவ்வழமை  “நானறிந்து முப்பதாண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் நான் பணிபுரிந்த இரண்டு இடங்களில் நடந்த திருவிழாக்களில் இத்தகைய பழக்கம் இருந்ததைப்பற்றி அறிந்திருக்கிறேன்.  ஒன்று கோடைக்காலத்தில் அகண்ட காவிரி நதிப்படுகையில் நடக்கும் ஒரு திருவிழா……………………………………………………………… இன்னொரு திருவிழா அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் விஸ்தாரமான, நீண்ட பிரகாரம் கொண்ட ஒரு கோயிலில் நடைபெறுவது” என்று இந்நாவலுக்கு காலச்சுவடில் எழுதிய மதிப்புரையில் தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த மரபு மகாபாரத காலத்திலும் கூறப்பட்ட மரபே.  இது சரியா, பிழையா என்பதை விட, இப்படி இருந்தது என்றே கூறமுடியும்.  பண்பாட்டு வாழ்வியலின் அடிப்படையில் சொல்லக்கூடியதும் அதுவே.

 

குறிப்பு

பெருமாள்முருகனின் மாதொருபாகன் Cultural Studies தொடர்பான அக்கறை உள்ளவர்கள் படிக்கவேண்டிய நாவல்.  அதுபோலவே குமாரசெல்வா எழுதிய குன்னிமுத்துவும்.  அதே நேரம் குன்னிமுத்துவில் கலையன் கருணைநாதன், அலையன் கண்ணாயிரம், தன்மான முன்னேற்றக் கழகம், தந்தை பெரியவர், அரவிந்தன் கன்னையன் என்கிற பெயர்கள் எழுப்பக்கூடிய கிசு கிசுத்தன்மை தவிர்த்திருக்கக்கூடியதே!