வெளிநாட்டவர்களின் தமிழ்ச் சேவை என்கிற பெயரில் ஈழத்தில் வடக்கு கிழக்கில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவப் பாடசாலைகள் பற்றிய தொடரினையே முருகேசு பாக்கியநாதன் தாய்வீட்டில் எழுதிவந்தார். கிட்டத்தட்ட 28 பாடசாலைகளை இந்தத் தொடரில் முருகேசு பாக்கியநாதன் எழுதியிருந்தார். அதன் தொடர்ச்சியாக அதே தாய்வீடு பத்திரிகையில் வடக்குக் கிழக்கில் நூறாண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட சைவப் பாடசாடசாலைகள் பற்றிய தொடரொன்றினையும் முருகேசு பாக்கியநாதன் எழுதிவந்தார். அந்தத் தொடரில் இருபது பாடசாலைகள் பற்றிய விபரங்களையும் வரலாற்றினையும் திரட்டி ஆவணப்படுத்தியிருந்தார். ஈழத்தைப் பொறுத்தவரை அங்கிருக்கின்ற பாடசாலைகள் பற்றிய இத்தகைய ஒரு ஆவணப்படுத்தல் இதற்கு முன்னர் நடக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒடுக்கப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுகின்ற மக்கள் ஆவணப்படுத்தல் என்பதை ஓர் அரசியற் செயற்பாடு என்ற புரிதலுடன் முன்னெடுப்பது அவசியமானது. அந்த வகையில் ஈழத்தின் தமிழ்ப் பாடசாலைகளின் வரலாற்றைத் தொகுப்பது என்கிற இந்தப் பெருமுயற்சியை எடுத்த முருகேசு பாக்கியநாதனுக்கு மதிப்புக் கலந்த நன்றியும் பாராட்டுகளும்.