உலக ரட்சகர் ஒபாமாவும் உளுத்துப்போன தமிழர்களும்

அலுவலகத்தில் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், ஓய்வு நேரங்களில் நூலகங்களுக்கு செல்லும்போதும் The new york times, Time, Macleans, The Economist என்கிற சில ஆங்கில இதழ்களை சற்று புரட்டிப்பார்ப்பது எனது அண்மைக்கால வழக்கம். இந்த நிலையில் பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து வந்த சில இதழ்களை பார்த்தபோது கட்டுக்கடங்காத அளவு கோபமே வந்தது. எந்த ஒரு இதழிலும் அதன் அட்டைப்பட செய்தி ( cover story ) பெரும் கவனத்தை பெறுவது வாடிக்கை. அதிலும் டைம், நியூ யோர்க் டைம்ஸ், மக்லீன்ஸ், நியூஸ்வீக், எகனமிக்ஸ் போன்ற இதழ்கள் வட அமெரிக்கர்களின் பொதுப்புத்தியில் கற்றோர் படிக்கும் இதழ்கள் என்று தொடர்ந்து கருதப்படுபவை.

இப்படி இருக்கும்போது சில மாதங்களின் முன்னர் வந்த நியூயோக் டைம்ஸ் இதழ் ஒன்றின் அட்டையில் பிடல் கஸ்ரோ அவரது போராட்ட கால தோழர்களுடன் ராணுவ உடை அணிந்து வாயில் சுருட்டுடன் கம்பீரமாக நிற்கும் படத்தை எதேச்சையாக பார்க்க நேரிட்டது. எனக்கு பிடித்த ஒரே புரட்சியாளன் “சே”யின் தோழனாயிற்றே, ”சே”யை பற்றியும் ஏதாவது எழுதியிருப்பார்கள் என்ற ஆவலில் இதழை புரட்டதொடங்கினேன். அட்டையில் சிறிய எழுத்துகளில் “what Obama can do to bring back Cuba to 21st century?” என்று எழுதியிருந்தது. இப்போது இருக்கின்ற அமெரிக்க பொருளாதார நிலையில் அமெரிக்காவே தடுமாறுகின்ற போது இப்படி ஒரு ஆசிரியர் தலையஙம் தேவைதானா? கூபாவின் சீரழிவுகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. கூபிய போராட்டம், சே, அமெரிக்காவுக்கு அடிபணியாத 50 ஐ அண்மித்த ஆண்டு போராட்டம் இப்படியான காரணங்களால் எனக்கு எப்போதும் கூபா ஒரு பிரமிப்பாகவே இருந்தாலும் கூபாவின் இன்றைய நிலை நிச்சயமாக எலாரும் கவனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியது. பாலியல் தொழில் அங்கே சட்ட விரோதம் என்று இருந்தாலும் பாலியல் தொழிலே அங்கு கொடி கட்டி பறக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவை கூபாவில் இருக்கும் பாலியல் தொழிலாளிகளும், மலிவு விலை மதுக்களுமே. இந்த நிலை முற்றாக மாறவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்க பொருளாதாரமே அத்திவாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமாவை ஒரு உலக ரட்சகர் போல உருவகித்து இப்படி பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் அமெரிக்க மன நிலையின் அப்பட்டமான வெளிப்பாடே.

இது தவிர வெளியான வேறு சில பிரதான கட்டுரைகளின் தலையங்கங்கள்
1 What can Obama do to transform an economy that can no longer on wall street or silicon valley?
2 What Obama can do to control the deficit?
3 How the world leader Obama was welcomed in Ottawa?
4 What Obama going to do to control the tension arise in middle east?
இதை எல்லாம் படிக்கும் போதே ஒபாமாவை உலகையே மீட்க வந்த ஒரு சக்திபோல ஒரு கட்டமைப்பை முன்னெடுத்து, ஒபாமா என்கிற அமெரிக்க ஐக்கிய குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஒரு அகில உலகின் தலைவராக, ஒரு மீட்பராக உருவகிப்பது, நம் காலத்து கல்கியாக, யேசுவாக, நபிகளாக கட்டமைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அண்மைக்காலத்தில் பத்திரிகைகளிலும், மக்கள் வாயிலும் அதிகம் அடிபட்ட பெயர் ஒபாமாவாகத்தான் இருக்கும் என்னும் அளவுக்கு எம் சமகால வாழ்வை பெருமளவு சலனப்படுத்திய மனிதர் ஒபாமா என்பதில் எதுவித மறுப்பும் கிடையாது. மக்கள் தம்மை இலகுவாக தொடர்பு படுத்தக்கூடியதாக இருந்த அவரது பேச்சுக்களும், புஷ்ஷின் மிக மோசமான தலைமையின்கீழ் மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தில் சிக்குண்டு மாற்றம் தேவை என்று இருந்த மக்களுக்கு “மாற்றம் தேவை” என்பதையே கருப்பொருளாக்கி ஒபாமா செய்த தேர்தல் பிரசாரங்களும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தான் போதைப் பொருள் உட்கொண்டது பற்றி மக்களிடம் கதைத்தும், நடனம் ஆடியும், கூடைப்பந்து ஆடியும் அவர் மக்கள் முன் ஏற்படுத்திய விம்பமானது மக்களுக்கு அவரை நெருக்கமானவராக உணரப்பண்ணியது. இதன் தொடர்ச்சியாக அவர் அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகின்றார். இது போல கொண்டாடப்பட்ட நிகழ்வு அண்மைக்காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது இல்லை. கிட்டதட்ட 95/96 தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி நேரடியாக குதித்திருந்தால் (அப்போது நிச்சயம் வென்றிருப்பார்) எப்படி ஒரு கொண்டாட்டம் இருந்திருக்குமோ அப்படி ஒரு கொண்டாட்டம். (ரஜினியை அரசியல் அணுகுமுறையில் ஒபாமாவுடன் நான் ஒப்பிடவில்லை. பிரபலம், என்கிற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரும் எவரையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை).

இனிதான் சோதனைக்காலம் தொடங்குகிறது. உடனடியாக குவண்டனாமா சிறைகளை மூடுவேன் என்றவர் இப்போது இயன்றவரை விரைவில் மூடுவேன் என்கிறார். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் குவண்டனாமா சிறை மூடுவதென்பது குவண்டனாமா சிறையில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிறுத்தப்படுவதாய் இருக்கவேண்டுமே தவிர, குவண்டனாமாவை மூடிவிட்டு இன்னுமொரு இடத்தில் அதே நடைமுறையுடன் கூடிய ஒரு சிறையை நிர்மாணிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. (குவண்டனாமா சிறையால் பாதிக்கப்பட்ட கனேடிய இளைஞன் ஓமர் கடார் பற்றிய ஒரு பதிவு).

இதே சமயம் அமெரிக்கா வெளிநாட்டு உறவுகளில் ஏற்படுத்திய பிழைகள் உடனடியாக திருத்தப்படவேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும், பதவியேற்பின்போதும் முழங்கியவர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் இரு மடங்காக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். அப்படி இருமடங்காக்கியவுடன் அமெரிக்காவுக்கு உண்டாகும் இழப்புகள் இன்னும் பல மடங்காகும், அதற்காகத்தான் காத்திருக்கின்றோம் என்று அல்-கொய்தா தலைவர் ஒருவர் அறிவித்திருக்கின்றார். அதே சமயம் புஷ்ஷுக்கு ஆப்கான் போல ஒபாமாவுக்கு பாகிஸ்தான் என்று சில ஊடகங்கள் தொடர்ந்து சொல்லுகின்றன. தம்மை ரட்சிக்க வந்தவர் என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ஒபாமா இப்போது என்ன செய்கிறார் என்று அவர் பில்லியர்ட்ஸ் விளையாடும் அழகையும், அவர் நன்றாக நடனம் ஆடக்கூடியவர் என்றும், அவர் கூடைப்பந்தில் ஷூட் பண்ணும் அழகே தனி என்றும் இதழ்கள் நடுப் பக்கத்தில் “எந்திரன் படத்தின் புதிய காட்சிகள்” என்கிற அளவில் படங்களை வெளியிட்டு வருகின்றன. பழைய மொந்தையில் புதிய கள் என்று பெரியார் விமர்சித்தது நினைவு வருகின்றது. என் சொந்த கருத்தில் “அமெரிக்கர்கள் எப்போதும் அமெரிக்கர்களாகவே இருக்கின்றார்கள்”.

(2)

பொதுமக்கள் தம் வாழ்வில் இழந்துவிட்ட வசந்தங்கள் எல்லாவற்றையும் மீட்க வந்த ரட்சகராக ஒபாமாவை பார்ப்பதுபோல இன்னுமொரு ரட்சகரை 15 வருடங்களுக்கு முன்னரே பார்த்த அனுபவம் இலங்கை தமிழ் மக்களுக்கு உண்டு. 1994 ஆகஸ்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதூங்க இலங்கை பிரதமராக பதவியேற்கிறார். தொடர்ந்து 1994 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். தேர்தல் காலங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்களால் பெருமளவு கவரப்பட்ட தமிழர்கள் எமக்கொரு மீட்பர் அவதரித்துவிட்டார் என்பதுபோல குதூகலிக்கின்றனர். வழமைபோல நல்லூர் திருவிழா நடைபெறுகின்றது. ஆனால் வழமைக்கு மாறாக மக்கள் சந்திரிக்கா காப்பு, சந்திரிக்கா பொட்டு, சந்திரிக்கா மாலை, சந்திரிக்கா சேலை எல்லாம் அமோகமாக விற்பனையாகின்றது. சிங்களப் பெண்ணான சந்திரிக்கா இவை எல்லாவற்றையும் அணிவாரா என்கிற கேள்வி யாரிடமும் எழவில்லை. பில்லா சாரி என்று வாங்கி அணிகிறோம், பில்லா படத்தில் யார் சேலையுடன் வந்தார்கள் என்று கேட்டோமா, எமது மூத்த தலைமுறையினர் தானே அவர்கள். தமிழர்கள் எப்போதும் ஏமாற தயாராக இருக்கின்றார்கள். ஏமாற்றுபவர்கள் மட்டும் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள். ட்ரெண்டுக்கு ஏற்ப எடுக்கும் படம்தான் ஓடும் என்பதுபோல ட்ரெண்டுக்கு ஏற்ப செய்யும் ஏமாற்றுதான் எடுபடும்போல.

(3)

உலக ரட்சகர், இலங்கை ரட்சகர் என்பதுபோல தமிழ் நாட்டு ரட்சகர் ஒருவரும் இப்போது உதயமாகி இருக்கின்றார். எனக்கு தெரிந்து தனது கட்சியின் கொள்கை என்ன என்று கூட சொல்லாமல் சில தேர்தல்களை சந்தித்த ஒரே அரசியல் தலைவர் இவர்தான். கருணாநிதியின் தீவிர ஆதரவாளனாக இருந்து அவரிடமே கேட்டு ( ஆதாரம் – கலைஞர் பொன்விழா மலர்) படித்த வசனமான “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று தனக்கே உரிய உச்சரிப்புகளுடன், இயலுமானவரை முழங்க முற்படும், தன்னை கறுப்பு எம் ஜி ஆர் என்று தானே பெயரிட்டுக்கொண்ட விஜயகாந்த், எம் ஜி ஆருக்கு ஒரே ஒரு உதவிதான் செய்திருக்கிறார். அதாவது எம் ஜி ஆர் முதல்வர் ஆனபோது அவரிடம் பத்திரிகையாளர்கள் உங்களது ஆட்சி என்ன கப்பிட்டலிஸமா, இல்லை கம்யூனிஸமா என்கிற ரீதியில் கேள்வி கேட்க அவர் சொன்னாராம் அண்ணாயிசம் என்று. பொதுவாக எம் ஜி ஆர் மீதான ஒரு நக்கலாக சொல்லப்படும் விடயம் இது. எம் ஜி ஆர் அதையாவது சொன்னார், அவரது நிலைப்பாடு அது. சினிமாயிஸம் என்கிற தன் நிலைப்பாடை கூட சொல்லாமல் இன்றுவரை கட்சி நடத்தும் விஜயகாந்த் உண்மையில் வருங்காலங்களிலும் எம் ஜி ஆருக்கு தொடர இருந்த இந்த அவப்பெயரை தீர்த்துவிட்டாரென்றே சொல்லவேண்டும்.

முன்னொரு காலத்தில் ஈழப்பிரச்சனை தீரும்வரை தன் பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இவர். அதை தொடர்ந்து கப்டன் பிரபாகரன் என்று தன் படத்துக்கு பெயர் வைத்தும், விஜய பிரபாகரன் என்று தன் மகனுக்கு பெயர் வைத்தும் இலங்கை தமிழ் மக்களின் செல்லப்பிள்ளை போலவே மாறினார் இவர். இது அவருக்கு பெரும் பரபரப்புடன் கூடிய புகழையும் ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர் கால ஓட்டத்தில் அவரும் ஒரு அரசியல்வாதியாகி போனார். குமுதத்தில் இயக்குனர் மகேந்திரன் வழங்கிய ஒரு நேர்காணலில் “விடுதலை புலி உறுப்பினர்களும், தமிழீழ மக்களும் நடிகர் விஜயகாந்தை சின்ன பிரபாகரன் என்றே அழைக்கின்றனர்” என்ற ஒரு கருத்து தான் சொல்லாமல் சேர்க்கப்பட்டதாக இய்க்குனர் மகேந்திரனே ஒரு கடிதம் வழங்கினார். ஆனால் அந்த சேர்க்கை ஏற்படுத்திய தாக்கம் பலமாக பரப்பப்பட்டது. இதில் விஜயகாந்தின் செல்வாக்கு இருந்ததாக பரவிய செய்தியை மறுக்க முடியவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இருவருக்கும் தானே மாற்று என்று சொல்லும் விஜயகாந்த் அவரது பேச்சுக்களிலும், ஆனந்த விகடன் ஆதரவுடன் நடந்தேறிய ஊர்வலம் என்கிற நாடகத்திலும் (ஆனந்த விகடன் நிகழ்த்தும் இன்னுமொரு நாடகம் “சிவா மனசில சக்தி” படத்தின் வெற்றி தொடர்ந்து வெளியாகும் செய்திகள்) தான் ஒரு பக்கா நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றார். கருணாநிதி இலவச ரேஷன் அறிவித்தால் இவர் தான் ஆட்சிக்கு வந்தால் வீடுவரை இலவசமாக விநியோகம் செய்வேன் என்கிறார். என்ன, மக்கள் எல்லாரும் முடமாகி போய்விட்டார்களா? ஏன் இந்த பித்தலாட்டம். இங்கே நடப்பது மூன்றாந்தர சினிமா இல்லை. வாழ்க்கை. விஜயகாந்தை நினைக்கும்போது எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்ன ஒரு கருத்து தான் நினைவுக்கு வருகின்றது. ஆனந்த விகடன் ஒரு நேர்காணலில் ஜெயகாந்தனிடம் “திமுக அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் கட்சி தொடங்கியிருக்கின்றாரே?” என்கிற ரீதியில் கேட்கப்பட்டபோது அவர் சொன்னார் “கழுதை என்றொன்று இருந்தது, குதிரை என்றொன்று இருந்தது, இப்போது கோவேறு கழுதை என்றொன்று புதிதாக வந்திருக்கின்றது” என்று.

அபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள்

அபியும் நானும் திரைப்படம் இந்தியாவில் வெளியாகி ஓரிரு தினங்களின் பின்னரே கனடாவில் வெளியானது. அண்மைக்காலங்களில் நான் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம் இது. வைரமுத்து – வித்யாசாகர் – ராதாமோகன் கூட்டணி ஏற்கனவே மொழியில் ஒரு இனிய இசை அனுபவத்தை தந்த பின்னர் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி என்னை மிகவும் கவர்ந்திருந்தன. அதிலும் பாலா உயிரை தந்து பாடி இருந்த அழகிய அழகிய… பாடலும் சின்னம்மா கல்யாணம்… பாடலும் எப்படியாக படமாக்கப்பட்டிருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன். பிரகாஷ்ராஜ் மீது ஒரு நடிகர் என்பதை தாண்டி நல்ல ஒரு ரசனையாளர் என்றளவிலும் ஒரு மரியாதை உண்டு. இந்த நேரத்தில் படத்தை இங்கே திரையிடவில்லை என்றதும் நல்ல படங்களை திரையிடுவதில்லை என்ற தம் வழக்கத்தை மீண்டும் ஒரு முறை செய்துவிட்டார்களோ என்று நினைத்தேன். தமிழ் சினிமாவின் முக்கிய படங்களாக ஓரளாவு சொல்லத்தக்க சென்னை 600 028, அஞ்சாதே போன்ற திரைப்படங்கள் இங்கு திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. படம் பிரகாஷ் ராஜ் பூங்கா ஒன்றில் பிருத்விராஜை சந்தித்து தனது மகளுடனான தன் அனுபவங்களை சொல்வதாக செல்கின்றது. திருப்பங்கள் எதுவும் இல்லாமல் ஒரு தெளிந்த நதி போல செல்கின்ற கதையும் அதில் இயல்பாகவே கலந்த்விடப்பட்ட நகைச்சுவை நிகழ்வுகளும் ஒரு இனிய அனுபவத்தை படம் பார்ப்பவருக்கு கொடுக்கின்றன. இயல்பான, தெளிவான காதலர்களாக திரிஷாவும், கணேஷும் காட்டப்படுகிறார்கள். திரைப்படத்தில் போகிற போக்கில் ஒரு சர்தார்ஜி, அவர்களை கேலி செய்து கொண்டிருந்த தமிழர்களிடம் ஒரு ரூபாயை கொடுத்து அதை காண்கின்ற பிச்சை எடுக்கும் சர்தார்ஜியிடம் கொடுக்க சொல்வதாகவும், இன்றுவரை அந்த ஒரு ரூபாய் தமிழனிடமே உள்ளதாயும் சொல்லும் காட்சி “தெருவெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி” என்று எம்மவர்களை பற்றி எங்கோ படித்ததை நினைவூட்டியது. தமிழில் நல்ல படங்கள் வருவதில்லை என்று சொல்லிக்கொண்டேயிருக்காமல் இப்படியான படங்களை அரங்கிலே சென்று பார்ப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

2

ஆனந்த விகடனின் தற்போதைய தரம் பற்றிய ஒரு பதிவை கடந்த வாரம் வாசித்திருந்தேன். இதே கருத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். புதிய அளவில் ஆனந்த விகடன் வெளியானபோது மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படலாம் என்று நம்பியிருந்தேன். ஆனால் உள்ளடக்கம் பெருமளவான வண்ணப்படங்களாலேயே நிறைக்கப்பட்டிருக்கின்றது. அகமும் புறமும் என்று வண்ணதாசன் எழுதிய பிறகு தீதும் நன்றும் என்று நாஞ்சில் நாடன் எழுதிவருகிறார். பத்தி எழுத்துவகையை சேர்ந்த கட்டுரைகள் இவை. இதற்கு முன்னர் இதே விதமாக ஆனந்த விகடனில் எழுதிய சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன் உடன் ஒப்பிடும்போது இவர்களின் எழுத்து இறுக்கம் குறைந்ததாகவே தெரிகின்றது. நாஞ்சில்நாடனின் நஞ்சென்றும் அமுதென்றும் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரை தொகுதி. எந்த விதமான ஆவேசமும் இல்லாமல் ஒரு மெல்லிய த்வனியில் தனது கருத்துக்களை மிக நெருக்கமான ஒருவருடன் கதைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக சொல்லியிருப்பார். அதேபோல வண்ணதாசனின் சிறுகதைகளும் என்னை கவர்ந்திருக்கின்றன. வண்ணதாசனின் படைப்புகள் அவற்றில் வருகின்ற ரசனை பூர்வமான சொல்லாடல்களுக்கு பேர்பெற்றவை. அதிலும், அவரது கட்டுரைகள். அகமும் புறமும் எழுத தொடங்கு முன்பாக விகடனில் இவரது பேட்டி ஒன்று வெளியாகி அடுத்த இதழிலேயே அவர் எழுதிய கடிதம் ஒன்று பிரசுரமாகியிருந்தது. ஆனால் அவர் எழுதிய அகமும் புறமும் அவரது முன்னைய படைப்புகளுடன் ஒப்பிடும்போது என்னை பாதித்த விதம் சற்று குறைவாகவே இருந்தது. வாரா வாரம் ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்ற அழுத்தம் சிலவேளை இவர்களது படைபாற்றலை பாதித்திருக்கலாம்.

அதுபோல கடந்த சில மாதங்களாக மாறி மாறி தி.மு.க மற்றும் அ.தி.மு.க பற்றி மாறி மாறி எக்ஸ்ரே ரிப்போர்ட் என்கிற பெயரில் ரிப்போர்ட்கள் வந்தன. அதுவும் அழகிரி ராஜ்யம் பற்றியும், இரண்டு கட்சிகளினதும் முக்கியஸ்தவர்களதும் விபரங்களுடனும் வந்த கட்டுரைகள் முக்கியமானவை. ஆனால் இதேநேரம் விகடன் கிராமம், கிராமமாக விஜயகாந்துடன் டூர் அடிக்க தொடங்கினான். இது கிட்ட தட்ட இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்றுத் தீர்வாக மக்கள் விஜயகாந்தை பார்ப்பது போன்ற ஒரு விம்பம் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றது. ஒரு தனிக்கட்சியாக விஜயகாந்த் பிரமிக்க தக்க அளவு வளர்ந்திருந்தாலும் அவரிடம் இருக்கும் மாற்று தீர்வு என்ன? என்ற அடிப்படை கேள்விக்கு இன்றுவரை எவருமே பதிலளிக்கவில்லை. கறுப்பு எம். ஜி. ஆர் என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக்கொண்ட இவர், திராவிடக் கட்சிகள் வளர்த்துவிட்ட இலவச பொருட்களை தருவதாக கூறி வாக்குகளை அள்ளும் கலாசாரத்தை இன்னும் வளார்த்துவிடுவாரோ என்றே எண்ண தோன்றுகின்றது. விகடன் மட்டுமில்லாமல் குமுதம் உட்பட பல பத்திரிகைகள் விஜயகாந்தை பெரும் சக்தியாக காட்டிக்கொண்டிருக்கின்றன. இயக்குனர் மகேந்திரன் வன்னி சென்று திரும்பியபின்னர் குமுதத்துக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜயகாந்தை வன்னியில் சின்ன பிரபாகரன் / சின்ன தலைவர் என்று அழைப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு பின்னர் தான் அப்படி ச்ரு செய்தியை கூறவேயில்லை என்று மகேந்திரன் மறுப்பு தெரிவிக்க, குமுதமும் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது. சன் குழுமம் என்ற பெயரில் பெரும்பான்மை மீடியாக்களை எல்லாம் தி. மு. க வளைத்து போட்டபின்னர், அரசியல் ரீதியான ஒரு பின்புலம் வேண்டும் என்பதாலேயே ஆனந்தவிகடன் இப்படி விஜயகாந்த் புகழ் பாடலாம் என்று அண்மையில் எனக்கு அறிமுகமான நண்பர் ரமணன் சொன்னது சரிபோலதான் தோன்றுகின்றது. விஜய்காந்த் பற்றிய விமர்சனங்களையும் ஆனந்த விகடன் சரியான முறையில் முன்வைக்காத இந்நாட்களில் அதே ஆனந்த விகடனில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் ஜெயகாந்தன் திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் வந்துள்ளாரே என்று கேட்டபோது “கழுதை என்று ஒன்று இருக்கிறது, குதிரை என்று ஒன்று இருக்கிறது இப்போது கோவேறு கழுதை என்று ஒன்று வந்துள்ளது” என்று சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது.

3

நவீன இலக்கியம் மீதான எனது ஈடுபாட்டில் “காலம்” இதழாசிரியர் செல்வம் அவர்களின் பங்கு முக்கியமானது. யானையுடன் மோதாதே எலியே என்ற பொருள்பட கருணாநிதி எழுதிய ஒரு கவிதைக்கு (கருணாநிதி ஒரு பிரசார எழுத்தாளரே தவிர அவர் இலக்கியவாதி அல்ல என்று இளையபாரதியின் புத்தக வெளியீட்டை முன்வைத்து ஜெயமோகன் சொன்னதற்காக இக்கவிதை எழுதப்பட்டதாய் நினைவு) எதிர்வினையாக ஜெயமோகனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதற்கு விரைவிலேயே பதிலும் வந்தது. அவர் மூலமாகவே செல்வத்தின் அறிமுகமும் கிடைத்தது. அதற்கு முன்பொருமுறை ஒரு கண்காட்சியில் செல்வத்திடம் இருந்து கணையாழியின் தொகுப்பு ஒன்றை பெற்றிருக்கிறேன். சென்ற வாரம் அவரை எதேச்சையாக சந்தித்தபோது காலம் சஞ்சிகையின் 31வது இதழையும் கனவாகிப்போன கச்சதீவு என்ற நூலையும் பெற்றுக்கொண்டேன். கனடாவின் குறுகிய வணிக சாத்தியங்களுக்கு மத்தியில் காலம் சிறப்பாகவே வந்துகொண்டுள்ளது. இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.

இதே போல கருணாமூர்த்தியின் கதையில் தன் பால்ய சினேகிதங்களை தேடி அலையும் ஒருவனின் அனுபவம் சொல்லப்படுகின்றது. இலங்கை செல்லும் கதை நாயகன் இறுதியில் பாலசந்திரன் என்ற தன் பால்யசினேகிதனை காண்கிறான். தான் எழுதிய புத்தகத்தை பரிசளித்துவிட்டு பேசிக்கொண்டிருக்கின்றான். அந்தரங்கமான பழைய நினைவுகள் எல்லாம் கிளறப்படுகின்றன. தான் திரும்பி செல்ல முன்னர் மறுமுறை வருவதாக வாக்களித்துவிட்டு விடைபெறும்போது நண்பன் (பாலசந்திரன்) இவர் கொடுத்த புத்தகத்தின் பின்புறத்தை பார்த்தவாறு (அதில் அ. முத்துலிங்கம் எழுதிய முன்னுரை இருக்கின்றது) “அ. முத்துலிங்கம் என்று எங்களோட யாரும் படிக்கேல்லையே…..நீ யார் மச்சான்…. உனக்கு என்ன பெயர்?” என்று கேட்கிறான். அத்துடன் கதை முடிகின்றது. ஒரு கதையை சரியான இடத்துடன் நிறுத்திவிடுவதில்தான் அதன் வெற்றி உள்ளது என்பார்கள். அதனை திறம்பட செய்துள்ளார் கருணாமூர்த்தி அவர்கள்.

4.


கடந்த சில நாட்களாக இணையத்தில் பெண்புலிகளின் இறந்த உடல்களை சிங்கள ராணுவத்தினர் புணர்ந்து அதை வீடியோவில் எடுத்ததாக வந்த வீடியா துண்டுகள் பெரும்பாலானவர்களின் மனதை பாதித்தன. ஈழப்போராட்டத்தில் எத்தனையோ பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கின்றனர். இவற்றை பற்றி சரியான முறையில் வந்த பதிவுகள் குறைவென்பது எனது கருத்து. அண்மையில் டிசே தமிழன் எழுதிய ஒரு சிறுகதை சரியான முறையில் வாசகன் மனதிலும் இந்த பாதிப்பை கொண்டுசென்றிருக்கின்றது என்று நினைக்கிறேன். ஒரு கவிஞராக பரவலாக அறியப்பட்ட இவர் என்னை ஒரு கட்டுரையாளராக, ஒரு புனைவு எழுத்தாளராகதான் பெருமளவு கவர்ந்திருக்கிறார். இனி நீண்ட காலத்துக்கு, உங்களை பாத்தித்த சிறுகதை எது என்று கேட்டால் எந்தவித தயக்கமும் இல்லாமல் இந்த கதையை கூறலாம்