சென்று வாருங்கள் ஹைடன்

எம் பதின்ம வயதின் ஆதர்சங்கள் எல்லாம் படிபடியாக விடைபெறும் காலம் என்று முன்பொருமுறை ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி மன்னன் மத்யூ ஹைடனும் இணைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற மேற்கிந்திய அணியினருடனான டெஸ்ட் போட்டிகளின் பின்னர் அவரது துடுப்பாட்டம் சோபிக்காததாலும், அவரது ஆரம்ப துடுப்பாட்டக்காரர் என்ற இடத்தில் ஆடக்கூடியவர்களான பில் ஜாக்கஸ் மற்றும் மைக்கேல் கடிச் ஆகியோர் சிறப்பான முறையில் ஆடிவரும் நிலையிலும் இவரது ஓய்வு எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும் தனது அதிரடி ஆட்டங்கள் மூலமாக ரசிகர்கள் இடையே மிகுந்த ஆதரவை பெற்றிருந்த இவரது ஓய்வு ரசிகர்களுக்கு இழப்புத்தான்.

அண்மையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவுடனான் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா தோல்வியடந்த்போது இவரது மோசமான ஆட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. முதலாவது விக்கட் விரைவிலேயே இழக்கப்படுவதால் அது அடுத்துவரும் ஆட்டக்காரர்களின்மீது பெரும் அழுத்தத்தை தரும். இப்படியிருக்கும்போது இந்தியாவுடனான் தொடரில் இவர் இரண்டு ஆட்டங்களில் முதலாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட்டின்போதே இவர் உடனடியாக ஓய்வு பெறாவேண்டும் என்ற குரல் உரக்க தொடங்கியது. இந்த நிலையில் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் மற்றும் 20/20 போட்டிகளில் இவரது பெயர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அடுத்துவரும் டெஸ்ட் ஆட்டங்களில் கூட இவர் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற எதுவிதமான உறுதியான தகவல்களும் தரப்படவில்லை. அவர் மீண்டும் உள்ளூர் போட்டிகளில் கலந்துகொண்டு தன் திறமையை நிரூபிக்கவேண்டும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 13, 2008) இல் இவர் தான் அனைத்துவித கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இன்று தென்னாபிரிக்காவுடன் இடம்பெறவுள்ள இரண்டாவது 20/20 போட்டியின் இடைவேளையின்போது இவர் ரசிகர்கள் மத்தியில் தோன்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1994ல் ஜோஹனஸ்பேர்க்கில் நடைபெற்ற ஆட்டதுடன் தன் டெஸ்ட் வாழ்வை தொடங்கிய இவரது டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 103 ஆட்டங்களில் 30 நூறூகள், 29 அரைசதங்கள் உட்பட 8625 ரன்களை 50।73 என்ற ச்ராசரியில் பெற்றுள்ளார். இதில் அதிகபட்சமாக ஸிம்பாப்வேயுடன் பெற்ற 380 ஓட்டம் இருக்கின்றது.

அதேபோல 1993 முதல் 2008 வரை 161 ஒருநாள் ஆட்டங்களில் 6133 ஓட்டங்களை பெற்றுளார். அதில் 10 சதங்களும் 36 அரை சதங்களும் அடங்கும். ஓட்ட சராசரி 43. 8. ஸ்ட்ரைக் ரேட் 76

இவரது ஸ்ட்ரைக் ரேட், சராசரி போன்றவையோ அல்லது தனிப்பட்ட சாதனைகளோ இவர் காலத்திலேயே கோலோச்சிய சச்சின், ட்ராவிட், ஜயசூரியா, லாரா, இன்ஸமாம் போன்ற இதர நாடுவீரர்களுடன் ஒப்பிடும்போது ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் இவர் தொடர்ச்சியாக வெற்றிகளையே சுவைத்துவந்த ஒரு அணியில் அதன் வெற்றிகளிற்கான ஒரு தூணாக நெடுங்காலம் இருந்துவந்தார். உதாரணமாக கடந்த உலககோப்பை தொடர் முழுவது இவர் ஆடிய ருத்திர தாண்டவம். தொடர் முழுவது மூன்று சதங்களை அடித்ததுடன் இறுதிப்போட்டியில் கூட கில்க்ரஸ்ட் உடன் இணைந்து ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்தபின்னர் தான் விடைபெற்றார்.

அதுபோல, இவரது குறிப்பிடு சொல்லக்கூடிய இன்னொரு சாதனை 95ல் லாரா அமைத்த உலகசாதனையை முறியடித்து இவர் 2004ல் ஸிம்பாப்வே அணியுடன் அடித்த 380 ஓட்டங்கள். அந்த ஆட்டத்தில் வெறும் 437 பந்துகளிலேயே 380 ஓட்டங்களை 11 ஆறுகள் மற்றும் 38 நான்குகளுடன் பெற்றார். (இதனை லாரா வாழ்த்தி ஏற்றுக்கொண்டதுடன் அடுத்த ஆண்டே இவரது சாதனையை முறியடித்து 400 ஓட்டங்களை பெற்றார். ஆனால் அந்த நேரத்தில் ஆஸ்திரேலியா வழமைபோல லாராவின் சாதனையில் அது சொத்தை இது நொள்ளை என்று புலம்பியது.)

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஷேன் வார்ண், மக்ராத், லங்கர், டேமியன் மார்ட்டின், ஸ்டூவர்ட் மக்கில், இப்போது ஹைடன் என்று தனது பெருன் தூண்களை எல்லாம் இழந்து வருகின்றது ஆஸ்திரேலியா. இவரது வெளியேற்றம் எப்படி ஆஸ்திரேலிய அணியை பாதிக்கப்போகின்றது? கொஞ்சம் பொறுத்திருந்த் பார்ப்போம்.

அதுவரை இவர் பற்றி மேலதிக தகவல்களை கிரிக் இன்ஃபோ தளத்தில் பெற்றுக்கொள்ள இங்கே சுட்டுங்கள்