மானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ!

எஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான்.  வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர்.  சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர்.  ஒருவர் பாரதி.  அடுத்தவர் ஜெயகாந்தன்.  பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர்.  ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள்.  அவருடன் நெருக்கமான உறவு எதுவும் எனக்குக் கிடையாது. ஓரிருவார்த்தைகளைத் தவிர பேசியதுமில்லை.  “எஸ்பொவின் நனவிடைதோய்தல்” என்கிற, காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் எஸ்பொவின் பேச்சொன்றினைக் கேட்டிருக்கின்றேன்.  “ஈழத்து ஜெயகாந்தன் என்று உங்களை அழைக்கலாமா ? என்று அவரிடம் கேட்டதற்கு, ஜெயகாந்தனை வேண்டுமானால் தமிழ்நாட்டு எஸ்பொ என்று அழையுங்கள்” என்று எஸ்பொ கூறியதாகக் கேட்டிருக்கின்றேன்.  அப்படி கேட்டிருக்கக் கூடியவர் என்பதை உறுதி செய்கின்ற தோரணையிலான பேச்சு.  அப்போது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கான எதிர்ப்பை எஸ்பொ முன்னெடுத்து, அது பற்றிய சர்ச்சைகள் இடம்பெற்றிருந்த காலம்.  தான் ஏன் கனடா வந்தேன் என்று சொல்ல வெளிக்கிட்டவர், கனடாவில் இருந்து ஒருவர், சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் எஸ்பொ சிலுவையில் அறையட்டுவிட்டார் என்ற பொருள்பட கூறியதாகவும், அதற்கு தான், சிலுவையில் அறையப்படுவது நிகழ்ந்தால் புத்துயிர்ப்பும் நிச்சயம் நிகழும், எஸ்பொவின் புத்துயிர்ப்பு கனடாவிலேயே நிகழும் என்று கூறியதாகவும், அதன் நிமித்தமே கனடா வந்தேன் என்றும் கூறினார்.  நான் வாசித்த, கேள்விப்பட்ட, கற்பனை செய்திருந்த அதே எஸ்பொவை கண் முன்னால் கண்ட தருணம் அது.  ஒரு வாசகனாக எஸ்பொ பற்றிய என் பார்வையை, அவர் என்னில் ஏற்படுத்திய தாக்கங்களை இச்சிறு கட்டுரையில் முன்வைக்கின்றேன்.

எஸ்பொவின் படைப்புகளில் எனக்கு பிடித்தவை என்று தீ, சடங்கு, அப்பாவும் மகனும், நனவிடை தோய்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.  இன்று வரை எஸ்பொ பற்றிக் குறிப்பிடுபவர்கள் பேணும் எஸ் பொ பற்றிய விம்பம் கிட்டத்தட்ட முழுவதுமே தீயாலும், சடங்காலுமே கட்டமைக்கப்பட்டது.

எஸ்பொவின் தீ மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் உறவுகளின் அடிப்படையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது என்பதை தத்துவ நோக்கில் (ஆழமாக இல்லாத விடத்தும்) ஒரு நாவல் வடிவில் சொல்கின்ற படைப்பாகும்.  இந்நாவலின் முன்னுரையில் எஸ்பொ அவர்கள் கூறுகின்றார் “மேனாட்டார் Sex ஐ மையமாக வைத்துப் பல நவீனங்களை சிருஷ்டித்திருக்கின்றனர்.  மனித இனத்தின் பின்னமற்ற அடிப்படஇ உணார்ச்சி பாலுணர்ச்சியே.  இவ்வுணர்ச்சியில் வித்தூன்றிக் கருவாகி ஜனித்து, வளர்ந்து,, அந்த நுகர்ச்சியில் எழும் குரோதம் பாசம் ஆகிய மன நெகிழ்ச்சிகளுக்கு மசிந்து, சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டே வாழ்கிறான் மனிதன்.  அவன் தனது பலவீன நிலைகளில் செய்பவற்றையும், அனுபவிப்பவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்படவேண்டும்?”  இந்தக் கேள்வியே எஸ்பொவின் பலபடைப்புகளுக்கான அடிநாதமாகும்.  கதையில் கதையின் நாயனுக்கு அவன் வாழ்வில் சந்திக்கின்ற 7 பேருடன் பாலுறவின் அடிப்படையிலான தொடர்பு உருவாகின்றது. (இதில் சிறு வயதில் பாதிரியார் ஒருவரால் அவன் பாலியல் தேவைகளுக்காக அறிந்தும் அறியாமலும் பலியாக்கப்படுவதும், பின்னர் அவனே பூப்பெய்தாத சிறுமியை தனது தேவைகளுக்காக பலியாக்க முயல்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலாசாரம், பண்பாடு என்ற போர்வைகளில் வெளியில் சொல்லப்படாது மறைக்கப்பட்டு நான் சிறுவனாக இருந்த காலத்திலும் கூட நிறையப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.   ஆனால் 1960 களிலேயே இது பற்றி எஸ்பொ எழுதி இருக்கின்றார் என்பதை அறியும் போது வியப்பாகவே இருக்கின்றது.

அது போல சடங்கு நாவல் கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் 1960களிலேயே இந்நாவல் எழுதடப்பட்டது பேரதிசயம் தான்.  அதிலும் குடும்பம் என்பதை சமூகத்தின் ஆகச் சிறிய அலகாக்கி கட்டி எழுப்பப்பட்ட அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களைப்பற்றி அக்கறை கொள்ளாது தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பொருளாதார ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன .  என்று சொல்கிறது சடங்கு நாவல்.  இந்த இரண்டு படைப்புகளும் அவற்றின் பேச்சும்பொருட்களால் இன்றுவரை சமகாலப் பிரதிகளாக கருதத்தக்கவை.

அதுபோல பண்பாட்டு வரலாற்றியல் என்பதில் பெரும் அக்கறை கொண்டவன் என்ற வகையில் எனக்கு எஸ்பொவின் ஆக்கங்களுல் அதிகம் பிடித்தது நனவிடைதோய்தல் ஆகும்.  நனவிடை தோய்தல் (nostalgia) என்றாலே காதலுடன் மாத்திரமே தொடர்புபடுத்திப் பார்க்கின்ற காலத்தில் முதன்முதலாக இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதாலோ என்னால் முதல் வாசிப்பில் லயிக்கமுடியவிட்டாலும் மீண்டும் வாசித்த போது எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிகமிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவுசெய்திருக்கின்றார்.  அந்நாளைய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய சிறந்த ஆவணப்பதிவாகவும் இந்தப் புத்தகம் உள்ளது.  உதாரணத்துக்கு ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது”

இது போல பணம், துட்டு என்கிற பிரயோகங்கள் மெல்ல வழக்கொழிந்து எப்படி ரூபா சதம் என்கிற பாவனை வந்தது என்பதையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லுகின்றார் எஸ்பொ. நாலு பணம் என்பது இருபத்தைந்து சதம். இந்தக் கணக்கின் அடிப்படையில் 3 பணம் என்றால் அது பதினெட்டுச் சதமா அல்லது பத்தொன்பது சதமா என்று பெரிய வாக்குவாதம் கூட நடைபெற்றதாம்.

இன்றுவரை எஸ்பொ குறிப்பிட்ட இந்த ஐந்துசத தாள் பற்றி வேறெங்கும் என்னால் அறியமுடியவில்லை. எஸ்பொ மட்டும் எழுதியிராவிட்டால் இந்த வரலாறு மறக்கப்பட்டதாகவே போய் இருக்கும்.

அதுபோல எஸ்பொவின் மொழிபெயர்ப்புப் பணி பற்றியும் குறிப்பிடவேண்டும்.  எஸ்பொ ஒரு வேலைத்திட்டமாக ஆபிரிக்க நாவல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார்.  லத்தின் அமெரிக்க இலக்கியங்கள் தமிழில் தொடர்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அதைவிட அதிகமும் தமிழர் வாழ்வியலுடன் ஒற்றுமைகள் கொண்டிருந்த ஆபிரிக்க இலக்கியங்களை தமிழ் மொழியிலாக்கும் முயற்சியை முன்னெடுத்தார் எஸ்பொ.  2011ல் ரொரன்றோ வந்திருந்தபோதும் அவர் அப்போது மொழியாக்கம் செய்து முடித்திருந்த 5 நாவல்களை ஒரே தொகுதியாகவே விற்பனை செய்தார்.  இவற்றில் சினுபா ஆச்சிபேயின் A Man of the People என்பதை “மக்களின் மனிதன்” என்று மொழியாக்கம் செய்ததும், நக்வீப் மஹ்ஃபூஃப் எழுதிய Miramar என்பதை சாதாரணன் மொழியாக்கம் செய்ததும், ஜே எம் கூற்சி எழுதிய The Disgrace என்பதை “மானக்கேடு” என்று மொழியாக்கம் செய்ததும், மையா கௌரோ எழுதுய “The Sleep Walking Land” என்பதை நித்திரையில் நடக்கும் நாடு என்று மொழியாக்கம் செய்ததும், கம்ரன் லெயெ எழுதிய The African Child என்பதை கறுப்புக் குழந்தை என்று மொழியாக்கம் செய்ததும், என்று பத்துக்குமேற்பட்ட ஆபிரிக்க இலக்கிய நூல்களை தமிழாக்கம் செய்து மக்களிடன் கொண்டுசெல்ல முயன்றார். அவரளவில் அவர் முன்னெடுத்த அரசியலுக்கு பண்பாட்டு ரீதியில் வலிமைசேர்ப்பதாக இந்த இலக்கியங்களை அவர் கண்டுகொண்டார். இவைதவிர அவர் வெவ்வேறு காலப்பகுதிகள் செய்த மொழியாக்கங்கள் மகாவம்ச உட்பட பல!

அதேநேரம், எஸ்பொ பற்றிக் குறிப்பிடும்போது அவர் பற்றி சில எதிர்மறையான அபிப்பிராயங்களையும் பதிவுசெய்வதே எஸ்பொவிற்கு உண்மையாக இருப்பதாகும்.  பொய்யைத் தலைக்குள் வைத்துக்கொண்டு என்னால் எழுத முடியாது என்றார் எஸ்பொ.  அவ்விதம் ஒழுகவே விருப்பம்.  எனவே சம்பிரதாயம் கருதாமல் அதையும் பதிவுசெய்கின்றேன்.  நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்பொ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே நான் கனடாவில் அவரை நேரடியாகப் பார்த்தபோதும் தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் அயர்ச்சியையும் தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்போ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவேயில்லை.  சடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த போலி ஒழுக்கத்தை, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந்தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன.  முற்போக்கி இலக்கியத்தைவிட்டு விலகி நற்போக்கு இலக்கியம் என்று தன்னை வகைப்படுத்திக்கொண்ட எஸ்பொ, பின்னர் தனது மாயினியில் முன்னிறுத்திய தேசியத்தின் உள்ளடக்கத்தால் மாயினி எனது பார்வையில் அது எஸ்பொவின் மிக பலவீனமான பிரதியாகவே உருப்பெற்றிருந்தது.  (தேசியத்தை அவர் முன்னெடுத்ததால் இப்படைப்பு பலவீனமாகவில்லை.  அவர் தேசியத்தை முன்வைத்த விதத்தாலேயே பலவீனமானது).  இதே பாதிப்பை எஸ்பொ மித்ர வெளியீடு ஊடாக வெளியிட்ட புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளில் “தமிழ் தேசியத்தின்” நிமித்தம் கடைப்பிடித்த மென்போக்கிலும் காண முடிந்தது.  ஒரு உதாரணமாக ஈழவாணி எழுதிய நிர்வாண முக்தி சிறுகதை தொகுதியையும், அதற்கு எஸ்பொ எழுதிய முன்னுரையையும் வாசித்துப்பார்க்கலாம்.  (எஸ்பொ வைத் தொடர்ந்து வாசித்தவர்கள் எஸ்போ என்கிற படைப்பிலக்கியவாதிக்கும் , எஸ்பொவின் விமர்சனங்கள் / மதிப்பீடுகளுக்கும் இடையில் இருக்கின்ற பெரிய இடைவெளியை தெளிவாக அவதானித்திருப்பர்).

அடுத்து எஸ்பொ தன்னை தமிழ் ஊழியம் செய்பவன் என்றும், பாணன் என்றும் காட்டான் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துக்கொண்டார்.  அவர் பிற்போக்கு இலக்கியம் (மரபைப் பேணும் இலக்கியம் என்பதே பொருத்தமானது) X முற்போக்கு இலக்கியம் என்று இருந்தபோது தன்னை நற்போக்கு என்று கூறியது ஒரு தனிமனித செயற்பாடே அன்றி அது ஒரு இயக்கம் அல்ல.  அவர் இயக்கமாக “நற்போக்கு இலக்கியத்தை” முன்னெடுத்தவரும் அல்ல.  ஒரு படைப்பாளியாக அவர் எடுத்துக்கொண்ட சுதந்திரம் அது.  ஆனால் அது அவரது அரசியல் வேலைத்திட்டம் அல்ல.  தற்போது எஸ்பொ வின் “எல்லாவற்றையும் உடைத்தல்” என்பதை அரசியல் செயற்பாட்டாளார்களும் (நாம் எஸ்பொ வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டே) பின்பற்றுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.  ஒரு செயற்பாட்டாளர் கலகம் செய்யும்போது அது பற்றிய ஒரு தெளிவான பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இருக்கவேண்டும்.  அப்படி இல்லாமல் எல்லாவற்றையும் உடைப்பது கலகமும் அல்ல, செயற்பாடும் அல்ல.  ஒரு கலகம் என்பது முன்னெடுக்கப்படும்போது மாற்றாகவும் தொடர்ச்சியாகவும் ஒரு ஆக்கபூர்வமான ஒரு வேலைத்திட்டம் இருக்கவேண்டும் என்பது பொறுப்பான செயற்பாட்டாளார் செய்யவேண்டியது.

இன்று எஸ்பொ அவர்களின் மரணத்தின் பின்னர் தமிழ் தேசியர்களும், தமிழ் தேசியத்தை மறுதலித்து சாதிப் பிரிவினைகள் தொடர்பான பிரச்சனைகளை தம் பிரதான வேலைத்திட்டங்களாக முன்னெடுப்போர்களும் எஸ்பொவை தம்முடன் சேர்த்து அடையாளப்படுத்த முயல்வதைக் காணமுடிகின்றது.  எஸ்பொவுக்கு அதிகாரங்கள் மீதான கோபம் இருந்தது.  சாதி ஒழிப்பு தொடர்பான அக்கறை இருந்தது.  பிற்காலத்தில் அவர் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகவே அடையாளப்படுத்திக்கொண்டார்.  துரதிஸ்டவசமாக அவர் முன்வைத்த தமிழ்த்தேசியம் இனவாதம் பேசுவதாக அமைந்தது.  அதுவும் சேர்ந்ததாகவே எஸ்பொ அமைந்தார்.

மாய்ந்து மாய்ந்து

நான் எழுதியதெல்லாம்

மானிட நேயம் மாண்புற என்றேன்.

என்றார் எஸ்போ.  அவ்விதமே வாழ்ந்தார்.  அவ்விதமே நம் நினைவிலும் நிலைத்தார்.


குறிப்பு 1 : எஸ்பொ எழுத ஆரம்பித்த ஆரம்பகாலங்களிலேயே எஸ்பொ மற்றும் நற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கியம் X நற்போக்கு இலக்கியம் பற்றி மு.தளையசிங்கம் “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில்” எழுதியவை முக்கியமானவை.


 

குறிப்பு 2 :

எஸ்பொவின் மறைவை ஒட்டி ரொரன்றோவில் காலம் செல்வம் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் வாசித்த கட்டுரை.  இக்கட்டுரை ஜனவரி, 2015 தாய்வீடு இதழில் பிரசுரமானது.

ஏற்கனவே நான் எழுதிய வெவ்வேறு கட்டுரைகளில் இருந்து சிலபகுதிகள் இக்கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

 

மரணம் மனிதர்களை மறக்கச்செய்துவிடுகின்றது, மகா மனிதர்களை மனதில் நிலைக்கச்செய்துவிடுகின்றது. பழகியவர்களைக் கூட மரணத்தின்பின்னர் மறந்துசெல்கின்ற இன்றைய காலத்தில், இலேசான அறிமுகம் மாத்திரம் உள்ள ஒருவரை மரணத்தின் பின்னர் அறிந்து, அவர் பற்றி மதிப்புற்று, இன்னும் இன்னும் தேடி அறிந்து அதிசயிப்பது என்பது அரிதாகவே நிகழ்கின்றது. அப்படி ஒருவர் பவன் என்று பலராலும் அறியப்பட்ட சத்தியபவன் சத்தியசீலன் அவர்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து இலக்கிய நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தோம். எம் அனைவருக்கும் அது முதன்முயற்சி. அப்போது தமிழ்வண் தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பன் ஒருவன் எமது நிகழ்வை ஒளிப்பதிவுசெய்து தொலைக்காட்சியில் சிறு ஒளித்துண்டுகளாக ஒளிபரப்பலாம் என்று கூறி, ஊக்குவித்ததுடன் தமது தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒருவர் வருவார் என்றும் கூறி இருந்தான். வந்தவர், புன்னகை பூத்த முகம் என்று சொல்வார்களே அவ்விதமே இருந்து அமைதியாக தனது வேலைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். புரொஜெக்ரர் ஒன்றை இணைக்க முயன்று கொண்டிருந்தோம். அது பற்றிய அறிமுகம் எமக்கு இருக்கவில்லை. நாம் பதற்றமடைவதைக் கண்டு அவர் உணர்ந்திருக்கவேண்டும்; தானாகவே வந்து தள்ளுங்கோ என்று விட்டு இணைப்புகளை ஒழுங்காக்கினார். நன்றி சொன்னோமா என்று நினைவில் இல்லை. ஆனால் அதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை என்பது நினைவில் இருந்தது. அன்று புதியவர்கள் எம்மை ஆதரிக்கவேண்டும் என்ற நோக்குடன் வழமையான இலக்கிய நிகழ்வுகளிற்கு வருபவர்களைவிட அதிகமானோர் வந்திருந்தனர். வந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமே அவரைத் தெரிந்திருந்தது. அப்போது தான் இலக்கிய/சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருந்த எனக்கும் அவரை கண்ட அளவிலான பரிச்சயம் இருந்தது. வந்தவர்கள் பெரும்பாலும் அவரைக் கண்டவுடன் சிரித்தனர். சிலர் பேசினர். அவரும் சிரித்தார். மென்மையாக தலையசைத்தார். பேசினாரா அல்லது உதடசைத்தாரா அல்லது அவர் பேசுவதே உதடசைவது போலா என்று தெரியவில்லை. ஏனோ நெருக்கமானவராக தோன்றினார். அவர்தான் பவான்.

அதன் பின்னர் அவரை தொடர்ச்சியாக எல்லா நிகழ்வுகளிலும் கண்டிருக்கின்றேன். கிட்டத்தட்ட அவர் இல்லாத நிகழ்வுகளே இல்லை எனும் அளவிற்கு அவரது பிரசன்னம் நிறைந்திருக்கும். “கனடாவில் நமது இனம் சார்ந்த, மொழி, சார்ந்த, கலை சார்ந்த, அரசியல் சார்ந்த, அனைத்து நிகழ்வுகளையும் ஏனைய சமூகங்கள் சார்ந்த பல முக்கிய நிகழ்வுகளையும் அவர் தோளில் சுமந்த கமரா அழகாக ஒளிப்பதிவு செய்து உலகெங்கும் பரப்பியது” என்று அவர் பற்றிய குறிப்பொன்றை அவரது மரணத்தின்பின்னர் காணக்கிடைத்தது. முழுக்க முழுக்க உண்மையான வரிகள் இவை.
2009ல் ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருந்தபோது ரொரன்றோவில் தொடர்ச்சியாக போராட்ட நிகழ்வுகளும், கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றுவந்தன. அவற்றில் எல்லாம் பெரிதும் அவரைக், கர்ணனின் கவச குண்டலம் போல கமராவுடன் கண்டிருக்கின்றேன். அக்காலப்பகுதியுல் தமிழ்வண் தொலைக்காட்சியில் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றிய நண்பர் கிருஷ்ணா பவான் பற்றி கூறும்போது, “நான் வேலைக்கு காலையில் புறப்படும்போதே பவான் அண்ணாவிடம் இருந்து போன் வரும். கிருஷ்ணா இன்றைக்கு இந்த இந்த இடத்தில் ப்ரொரெஸ்ற் நடக்கிது. நீங்கள் நியூசை ரெடி பண்ணுங்கோ, நான் கிளிப்ஸோட வாறன்” என்று பவான் அண்ணா கூறுவார் என்று நினைவுகூர்ந்தான். அவருக்கு எல்லாத் துறையினருடனும் நல்ல தொடர்பும் உறவும் இருந்தது. உடுக்கை இழந்தவன் கைபோல உதவும் அவர் இயல்பு எல்லாருடனும் நல்லுறவைப்பேணா அவருக்கு உதவியிருக்கும். அவருடன் பணியாற்றிய சிலருடன் அவர் பற்றி அறிந்தபோது இதனை முழுதாக உணரமுடிந்தது.

அவரது ஆரம்பகால நண்பர்களில் ஒருவரான கருணா அவர்களிடம் பேசியபோது பவான் எனக்கு இன்னமும் நெருக்கமானவராகத் தோன்றினார். அனேகம்பேருக்கு வீடியோ படப்பிடிப்பாளராகவே தெரிந்திருந்த பவான், ஆரம்பகாலங்களில் DJ கலைஞராகவே பணியாற்றியிருக்கின்றார். அது மட்டுமல்ல நல்லதோர் புகைப்படக்கலைஞராகவும் இருந்திருக்கின்றார். விமானம் ஒன்றை பின்னணியில் வைத்து சிறுவர்களை பவான் எடுத்திருந்த ஒரு புகைப்படம் பற்றி விதந்து பேசிக்கொண்டிருந்தார் கருணா. வீடியோப் படப்பிடிப்பு என்பது அவருக்கு “உயிருக்கு நேராகவே” (Passion என்பார்களே அப்படி) இருந்திருக்கின்றது.

வீடியோ படப்பிடிப்பு என்பதே அவர் உயிராக இருந்தபோதும், அதில் அசாத்தியமான திறமைகொண்டவராக இருந்தபோதும், செய்யும் தொழிலே தெய்வம் என்பவராக இருந்தபோதும், நிறைய தொடர்புகளை (Contacts) உடையவராக இருந்தபோதும் அதனை தனக்கு பணம் கொழிக்கவைக்கும் தொழிலாக்க தெரியாதவராகவே இருந்தார் பவான். தனது நாளாந்த வாழ்வைக் கொண்டுநடாத்தத் தேவையான குறைந்தபட்ச நிதியைப் பெறுவதே அவருக்கு தேவையானதாக இருந்தது. மற்றும்படி, தன்னையும் தன் திறன் அனைத்தையும் வீடியோ படப்பிடிப்பிற்கும், தான் பணியாற்றிய இடத்துக்கும் நேர்ந்துவிட்டவராக இருந்தார் பவான். அந்த வகையில் அவர் மரணம் மிகக் கடுமையான செய்தி ஒன்றினை விட்டுச்சென்றிருக்கின்றது. கலை சார்ந்த துறைகளில் காதல் கொண்டிருக்கும் ஒருவர் அதனை வணிகமாக்காது ஆத்மார்த்தமாக அதில் ஈடுபடுவதற்கும், அப்படியான ஒருவர் சுரண்டல்களும், வணிக தந்திரங்களும் நிறைந்த புறச்சூழலிலும், வேலைத்தளங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களும், அது நிஜ வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளுக்கும் இடையில் போராடி தோற்றுப்போனாலும் ஒரு மகாமனிதராக தன்னைத் தக்கவைத்தவராகவே பவான் அவர்களின் மரணம் எனக்குத் தோன்றுகின்றது. பொருளீட்டலையே இலக்காகக்கொண்டு நகரத்தொடங்கியிருக்கும் புலம்பெயர் தமிழர் வாழ்விலும், அவர்களில் பலர் அதே புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாரராலேயே சுரண்டப்படுவதற்குமான சமகால உதாரணம் அவர். கனடாவில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தவர் பவான். அரசியல் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள், பரப்புரைகள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று கமராவுடன் கூடிய பவானைக் காணாத நிகழ்வுகள் அபூர்வம். இனியும் இவை நடைபெறும். பவான் இருக்கமாட்டார். ஆனால் அவர் விட்டுச்சென்ற செய்திகளும் படிப்பினைகளும் இருக்கும்.

ஜனவரி 2015 தாய்வீடு இதழில் பிரசுரமானது.
தகவல்களுக்கு நன்றி : புகைப்படக் கலைஞர் கருணா மற்றும் நண்பன் கிருஷ்ணா

எஸ்பொ பற்றி ஒரு நனவிடை

Tamil_Writer_S_Poமுற்குறிப்பு : சென்றவாரம் வழமைபோலவே கடைசிநேரத்தில் வாராந்த யாழ் உதயனுக்கான கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது முகநூல் உரையாடல் மூலம் இடைவெட்டிய நண்பர் கற்சுறா “எஸ்பொ அதிக நாள் தாங்கமாட்டார் என்று செய்தி கிடைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு அன்றைய கட்டுரையை மனமொருமித்து எழுதமுடியவில்லை. மனம்பாரமான வழமையான பொழுதுகளில் செய்வதுபோலவே மலேசியாவில் இருக்கின்ற நண்பன் விசாகனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் வேலையில் விடுப்பு, தூங்கி எழுந்தால் தொலைபேசியில் குறுஞ்செய்தி காத்திருந்தது. தேவகாந்தன் அனுப்பியிருந்தார், “EsPo expired two hrs ago” என்று.

எஸ்பொ எனக்குள் செலுத்திய தாக்கம் அதிகம். ஆயினும் அவருடன் நெருக்கமான உறவு எனக்குக் கிடையாது. ஒரு வாசகனாக அவருடனான/அவர் பற்றிய என் பரிச்சயத்தை நான் முன்னர் பதிவாக்கியிருந்த இரண்டு குறிப்புகளையும் இத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.

எஸ்பொ நனவிடை தோய்தல்

யூலை 7, 2012

இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்பொ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை.  சடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந்தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. அதே நேரம் நிறைய விடயங்களில் எஸ்பொ ஒரு ரசிக மனநிலையுடனேயே என்னால் ரசிக்க முடிந்தது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

தனது உரையின் ஆரம்பத்தில் முதல்நாள் இயல் விருது வழங்கும் விழாவில் பேசுவதற்குக் கூறப்பட்டிருந்த “ஒழுக்க விதிகள்” பற்றிக் கிண்டலடித்து தன்னைக் காட்டான் என்றும், இங்கே எப்படியும் பேசலாம் என்று கூறிக்கொண்டே பேசிய எஸ்பொ, தனது கருத்துக்களையும் அரசியலையும் நேரடியாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார். இது பற்றிய முழு ஒலிப்பதிவும் இருப்பதால் அதையும் இந்தப் பதிவுடன் இணைக்கின்றேன்.

இதே நிகழ்விலேயே ஆபிரிக்க இலக்கியங்களுடன் தமிழர்களுக்கு கலாசார ரீதியில் இருக்கின்ற தொடர்புகளைக் குறிப்பிட்ட எஸ்பொ ஐந்து ஆபிரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த புத்தகங்களின் வெளியீடும் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நடைபெற்றது. இந்த ஆறு புத்தகங்களுடன் எஸ்பொ கவிதை நடையில் எழுதிய காமசூத்திரம் நூலும் சேர்த்து ஒரு தொகுதியாக விற்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்ட எஸ்பொ, தான் லேகியம் விற்பவனைப்போல தனது படைப்புகளைத் தானே விற்பனை செய்வதாகத் தன்னைத் தானே கேலி செய்யவும் தவறவில்லை. எஸ்பொவின் இயல் விருது ஏற்புரைப் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது என்று நண்பர்கள் கூறியபோதும் அந்த விழாவிற்குச் செல்லாததால் அதனைக் கேட்கமுடியவில்லை. மறுநாளே அதற்குப் பரிகாரமும் கிடைத்தது போல அமைந்தது இந்த நிகழ்ச்சி.

 

நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ
யூன் 19, 2011
ஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுள் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே. அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக வாசிக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.  ஆனாலும் அதே நேரத்தில் அவரது புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்காமையாலும், நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காலத்தின் தேவை கருதி வேறு சில புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்ததாலும் துரதிஸ்டவசமாக எஸ்பொவை அவரது கனேடிய வருகையின்போதும் முழுமையாக வாசிப்பது என்பது சாத்தியமில்லாதது ஆகிவிட்டது. அதே நேரம் எஸ்பொ எழுதியவற்றில் நான் வாசித்தவற்றைப் பற்றி சில குறிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

சடங்கு

சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சில காலங்களிற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை வாசித்திருந்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.

செந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.

வெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.

சடங்கு நாவலைப் பற்றிய குறிப்பினை நான் முன்னர் ஒரு முறை வலைப்பதிவில் எழுதி இருந்தபோது தொடர்புகொண்ட காலம் செல்வம், இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். அதன் பின்னர் அது பற்றி எதுவுமே நான் கேள்விப்படவில்லை. குறிப்பிடப்பட்டது போல ஆங்கில மொழிபெயர்ப்பு பொருத்தமான மொழி பெயர்ப்புடன் வரும்போது அது ஈழத்து இலக்கியத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை பரவலாக அறிமுகம் செய்துவைக்க அதிகம் தோதாக அமையும்.

 

தீ

எஸ்பொவின் தீ மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் உறவுகளின் அடிப்படையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது என்பதை தத்துவ நோக்கில் (ஆழமாக இல்லாத விடத்தும்) அதே நேரம் ஒரு நாவல் வடிவில் சொல்கின்ற படைப்பாகும். கதையில் கதையின் நாயனுக்கு அவன் வாழ்வில் சந்திக்கின்ற 7 பேருடன் பாலுறவின் அடிப்படையிலான தொடர்பு உருவாகின்றது. (இதில் சிறு வயதில் பாதிரியார் ஒருவரால் அவன் பாலியல் தேவைகளுக்காக அறிந்தும் அறியாமலும் பலியாக்கப்படுவதும், பின்னர் அவனே பூப்பெய்தாத சிறுமியை தனது தேவைகளுக்காக பலியாக்க முயல்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலாசாரம் பண்பாடு என்ற போர்வைகளில் வெளிப்படுத்தப்படாது ஈழத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்திலே கூட நிறையப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எமது சக மாணவன் ஒருவன் அப்போது மாணவ முதல்வனாக இருந்த ஒருவனால் மாணவ முதல்வர்களுக்கான அறையில் வைத்து சுயமைதுனம் செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டான் என்பதை எமது வகுப்பில் அனேகம் பேர் அந்நாட்களில் அறிந்தே இருந்தோம். எனினும் பயம் காரணமாகவும், வெட்கம் காரணமாகவும் இது பற்றிப் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே உண்மையாகும். ஆனால் 1957 களிலேயே இது பற்றி எஸ்பொ எழுதி இருக்கின்றார் என்பதை அறியும் போது வியப்பாகவே இருக்கின்றது. இந்த ஏழு பேருடனும் கதை நாயகனுக்கு இருக்கின்ற உறவும், உணர்ச்சிகளும் வேறுபட்டிருப்பதும் கதாபாத்திரம் பார்க்கின்ற கோணங்களும் பார்வைகளுமே கூட வேறுபட்டிருப்பதும் முக்கிய அவதானங்களாகும்.

பனிக்குள் நெருப்பு

2006ல் புதுவைப் பல்கலைக்கழகத்திலே நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இரண்டு அமர்வுகளாக புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பெயரில் எஸ்பொ பேசியவற்றின் எழுத்துவடிவிலான தொகுப்பே பனியும் என்கிற இந்த நூலாகும். 1990ல் சிட்னியில் இலங்கை அகதிகள் சார்பாகப் பேசுகின்றபோது “The Tamil Diaspora” என்பதற்குப் பதிலாக புலம்பெயர்ந்த தமிழர் என்ற சொற்றொடரை முதன் முதலில் பாவித்தது முதல் நிறைய விடயங்களிந்தப் புத்தகத்தில் உள்ளன. எனக்குத் தெரிந்து புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஆய்வாக முதலில் வெளிவந்த நூல் (புலம் பெயர் எழுத்தாளரால் எழுதப்பட்ட) இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த நூலில் அந்தக் காலப்பகுதிவரை புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த இதழ்கள், சஞ்சிகைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி ஆவணப்படுத்தி இருப்பதுடன், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளிற்கு தான் சென்ற போது தனக்குக் கிட்டிய அனுபவங்களையும் கூறியுள்ளார். அண்மைக்காலத்தில் துவாரகனும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய சில கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி இருந்தார். இளங்கோவும் தற்காலத்து ஈழத்து இலக்கியம் என்ற கடந்த பத்தாண்டுகளில் ஈழத்து இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் புலம்பெயர் இலக்கியம் பற்றியும் மிகப் பெரும்பான்மையான அளவிற்கு ஆவணப்படுத்தி இருந்தார். சில வாரங்களிற்கு முன்னர் GTN TVயிற்காக யமுனா ராஜேந்திரனும் குருபரனும்சேர்ந்து புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆரம்ப காலங்களில் வெளியான சில சிற்றிதழ்களின் ஆசிரியர்களிடம் அது தொடர்பான அவர்களது அனுபவங்களை நேர்காணல் செய்திருந்தனர். இவை எல்லாம் புலம்பெயர் இலக்கியம் பற்றிச் செய்யப்பட்ட காத்திரமான பதிவுகள்.

(சிறு சந்தேகம் ஒன்று:- எஸ்பொ பாரிஸ் சென்றிருந்த போது அங்கே ஒரு இளைஞரை pub ஒன்றில் சந்தித்ததாகவும் கருத்து முரண்பாடுகள் இருப்பினும் அறிவுச் சுதந்திரத்தை முன்னெடுக்கும் பொருட்டே அந்தச் சந்திப்பைச் செய்ததாகவும் பின்னர் அந்த இளைஞர் அந்த உரையாடலை “வானத்திலே சென்ற பிசாசை ஏணி வைத்துப் பிடித்த தாகக்” கதை பண்ணிப் பிரசுரித்ததாகவும் கூறுகிறார். பின்னர் அந்த இளைஞர் உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன் எழுதிய புலி எதிர்ப்பு நாவல் ஒன்று அற்புதம் என்று புலி எதிர்ப்பாளரர்களால் விளம்பரம் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் பிரபலமாக்கப்பட்டது (பக்கம் 45) என்றும் கூறுகிறார். அவர் (அந்த இளைஞர்) யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.)

நனவிடை தோய்தல்

நனவிடை தோய்தல் (nostalgia) என்றாலே காதலுடன் மாத்திரமே தொடர்புபடுத்திப் பார்க்கின்ற காலத்தில் முதன் முதலாக இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதாலோ என்னால் முதல் வாசிப்பில் லயிக்கமுடியவில்லை. ஆனால் அண்மையில் திரும்பவும் வாசித்த போது எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறை மிக மிக அழுத்தமாகவும் அதே நேரம் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்துப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எம் போன்றவர்களுக்கு இனி ஒருபோதும் கிட்டப் போகாத யாழ்ப்பாணத்து வாழ்க்கையை எஸ்பொவின் எழுத்துக்களூடாகத் தரிசிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். அதே நேரம் அந்நாளைய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய சிறந்த ஆவணப்பதிவாகவும் இந்தப் புத்தகம் உள்ளது. உதாரணத்துக்கு ஒரு சின்னப் பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது”
இது போல பணம், துட்டு என்கிற பிரயோகங்கள் மெல்ல வழக்கொழிந்து எப்படி ரூபா சதம் என்கிற பாவனை வந்தது என்பதையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லுகின்றார் எஸ்பொ. நாலு பணம் என்பது இருபத்தைந்து சதம். இந்தக் கணக்கின் அடிப்படையில் 3 பணம் என்றால் அது பதினெட்டுச் சதமா அல்லது பத்தொன்பது சதமா என்று பெரிய வாக்குவாதம் கூட நடைபெற்றதாம்.

(எஸ்பொ எழுதிய ஆண்மை, வீ, அப்பாவும் மகனும், அப்பையா, முறுவல் போன்றவற்றை வாசித்திருந்தாலும் அதை இன்னொரு பதிவில் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.)

 

பிற்குறிப்பு

எனக்குப்பிடித்த சில ஆளுமைகளின் மரணத்தின்போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தனமாய் பிழையான தகவல்களுடன், எதேச்சைத்தனமாக அஞ்சலிக்குறிப்புகளை எழுதித்தள்ளிய ஜெயமோகன் அவர்கள் எஸ்பொ அவர்களின் மரணத்திற்கான அஞ்சலிக்குறிப்பையும் விக்கிப்பீடியாவில் தான் பொறுக்கிக்கொண்ட தகவல்களைக் கொண்டு எழுதித்தள்ளியுள்ளார்.

எஸ்பொ பற்றிய விக்கிப்பீடியா குறிப்பையும், ஜெயமோகன் எஸ்பொவிற்கு எழுதிய அஞ்சலிக்குறிப்பையும் ஒருங்கே வாசித்துப்பார்த்தால், “எஸ்.பொ என்னுடன் நெருக்கமான தொடர்புள்ளவராக இருந்தார். சென்னையில் இருந்தால் என்னை அழைப்பார். நான் அவரைச் சென்று பார்ப்பதுண்டு. ஈழ இலக்கியப்பூசல்களைப் பற்றியும் அக்கால அரசியல் பற்றியும் ஏராளமான வேடிக்கைக் கதைகளை சொல்லியிருக்கிறார்.” என்று ஜெயமோகன் சொல்லும் எஸ்பொ பற்றிச்சொல்ல எனக்கு உடனடியாக சில செய்திகள் உண்டு,

1. //அவரது மகன் பொன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். எஸ்.பொ ஆஸ்திரேலியக் குடிமகன்.// எஸ்பொ அவர்களின் இன்னொரு மகனான மித்ர ஈழவிடுதலைப்போரில் 1986ல் மரணமடைந்த போராளியாவார். அவரது இயக்கப் பெயரான அருச்சுனா என்ற பெயரினையே அவர் நினைவாக யாழ்நகரில் முக்கியமான தெருக்களில் ஒன்றான “ஸ்ரான்லி வீதி” என்பதற்கு பதிலாக புலிகள் காலத்தில் யாழ் நகரில் பாவித்தனர்.  இது தவிர எஸ்பொவிற்கு மகள் ஒருவரும் உண்டு.

2. //எஸ்.பொ செனகல் நாட்டு எழுத்தாளரான செம்பென் ஒஸ்மேனுடைய ஹால [Xala] என்ற குறுநாவலையும் கூகி வா தியோங்கோ என்ற கென்ய நாட்டு எழுத்தாளரின் தேம்பி அழாதே பாப்பா [Weep Not Child] என்ற நாவலையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.//
எஸ்பொ ஒரு வேலைத்திட்டமாக ஆபிரிக்க நாவல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். அவற்றை ஒரே தொகுதியாகவே மக்களிடம் கொண்டுசெல்லவும் முயன்றார்.  (2011ல் ரொரன்றோ வந்திருந்தபோதும் அவர் அப்போது மொழியாக்கம் செய்து முடித்திருந்த 5 நாவல்களை ஒரே தொகுதியாகவே விற்பனை செய்தார்.  இவற்றில் சினுபா ஆச்சிபேயின் A Man of the People என்பதை “மக்களின் மனிதன்” என்று மொழியாக்கம் செய்ததும், நக்வீப் மஹ்ஃபூஃப் எழுதிய Miramar என்பதை சாதாரணன் மொழியாக்கம் செய்ததும், ஜே எம் கூற்சி எழுதிய The Disgrace என்பதை “மானக்கேடு” என்று மொழியாக்கம் செய்ததும், மையா கௌரோ எழுதுய “The Sleep Walking Land” என்பதை நித்திரையில் நடக்கும் நாடு என்று மொழியாக்கம் செய்ததும், கம்ரன் லெயெ எழுதிய The African Child என்பதை கறுப்புக் குழந்தை என்று மொழியாக்கம் செய்ததும், என்று பத்துக்குமேற்பட்ட ஆபிரிக்க இலக்கிய நூல்களை தமிழாக்கம் செய்து மக்களிடன் கொண்டுசெல்ல முயன்றார். அவரளவில் அவர் முன்னெடுத்த அரசியலுக்கு பண்பாட்டு ரீதியில் வலிமைசேர்ப்பதாகவும் இந்த இலக்கியங்களை அவர் கண்டுகொண்டார். இவைதவிர அவர் வெவ்வேறு காலப்பகுதிகள் செய்த மொழியாக்கங்கள் மகாவம்ச உட்பட பல!

3. //ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்லும் சுயசரிதையான ‘வரலாற்றில் வாழ்தல்’ ஓர் ஆவணக்களஞ்சியம்.// வரலாற்றில் வாழ்தல் 2003இல் வெளியானது.  ஈழப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களான சமாதானப் பேச்சுக் காலகட்டம், நாலாம் கட்ட ஈழப்போர் ஆகியன அந்த நூலில் இல்லை.  எனவே அது ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்வது அல்ல.

 

 

 

திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களுடனான சந்திப்பினை முன்வைத்து: ஓர் அறிமுகம் ஓர் அனுபவம் ஓர் அவதானம்

 

திரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களைச் சந்திக்கும் அருமையான வாய்ப்பொன்றினை திரு நவம் அவர்களூடாகக் கிடைத்ததுஅண்மையில் எனக்குக் கிடைத்த பேறென்றே சொல்லுவேன்.  அந்தச் சந்திப்பின் போது அவரது சமூகப்பணிகளையும், செயற்பாடுகளையும் கோட்பாடுகளையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் வெளியான எழுச்சிப்பாதை என்கிற நூலையும் பெற்றுக்கொண்டேன்.  யார் இந்த ஆர். எம் நாகலிங்கம் என்று அறிந்துகொண்டால் நான் முன்னர் சொன்னதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.

இவர் 1936ம் ஆண்டில் மாவிட்டபுரத்தில் பிறந்தவர்.  ஈழத்தில் மிக மோசமான சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சமூகங்களில் ஒன்றான நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்.  சைவத்தமிழ் பாடசாலைகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக கல்விகற்பதற்கான சமத்துவ உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த அந்நாட்களில், தனது கல்வியை மாவிட்டபுரம் அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் பயின்றார்.  அதன் பின்னர் தன் பாடசாலை இறுதியவரையான படிப்பினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தொடர்ந்தார்.  தனது சிறுவயது முதலே, அதாவது 11 வயது முதலே தாம் ஒடுக்கப்படுவதை உணர்ந்தவர் கிராமசபைத் தேர்தல் ஒன்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் வெற்றிபெறுவதற்கான சரியான நகர்வுகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்பட்டார்.

இதன் பின்னர் இந்தப் போராட்டங்களை இன்னமும் முழு வீச்சுடன் முன்னெடுக்க வேண்டும் என்றுணர்ந்து முதல் முயற்சியாக 1955ல் மாவை பாரதி வாசிகசாலையை நிறுவுகின்றார்.  அதன் பின்னர் 1971ல் மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றமாக விருத்தியடைகின்றது.  அதன் பின்னர் நாடெங்கிலும் உள்ள நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய இயக்கத்தினை கட்டியெழுப்பும் நோக்குடன் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்களை அணுகி, அவர்களை அமைப்புகளாக ஒன்று திரட்டி, 28 அமைப்புகளை உருவாக்கி அவற்றை சமூக முன்னேற்ற கழகங்களின் சமாசம் என்கிற தேசிய இயக்கமாக 1980ல் கட்டியெழுப்புகின்றார். 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி செல்வச்சந்நிதியில் நடைபெற்ற மாநாட்டில் ஆறு அம்சப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படுகின்றது.  இந்தத் திட்டத்தில்

1)   சமாசத்தின் நிறுவன அமைப்புமுறை நோக்கங்கள் பற்றிய திட்டம்

2)   கல்வி அபிவிருத்திக்கான திட்டம்

3)   தொழிற்பெயர்ச்சி சக, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றுக்கான திட்டம்

4)   குடிமைத்தொழில் ஒழிப்புப் பற்றிய திட்டம்

5)   சமூக ஒருமைப்பாட்டை வளர்த்தல் பற்றிய திட்டம்

6)   ஒழுக்கக் கட்டுப்பாட்டை வளர்த்தல் பற்றிய திட்டம்

என்கிற அம்சங்கள் விரிவான திட்டமிடல்களுடனும் நோக்குகளுடனும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற சமூகங்கள் விடுதலை பெறுவதை கல்வியறிவினாலேயே முன்னெடுக்கமுடியும் என்ற நோக்குடன் அதனை தான்  சார்ந்திருக்கும் ஈழத்தின் பஞ்சமர் சாதிகளுல் ஒன்றான நாவிதர் சாதியினரிடையே முன்னெடுத்து இன்று நாவிதர் சாதியினர் கல்வி வளர்ச்சி பெறவும், அதனூடாக சமூக விடுதலை நோக்கி நகரவும் முக்கிய காரணமானவர் ஆர். எம். நாகலிங்கம் அவர்கள்.  எழுச்சிப்பாதை என்கிற இந்தத் தொகுப்பானது நிச்சயம் வாசிப்பின் மீதும், சமூகம் மீதும், சமூக அரசியல் செயற்பாடுகள் மீதும் அக்கறை கொண்டவர்கள் அனவரும் வைத்திருக்கவேண்டிய முக்கியமான ஒரு ஆவணமாகும்.

 

-2-

புலம்பெயர் நாடுகளில் சாதியம் ஒழிந்துவிட்டது என்கிற கருத்துக்கள் பல்வேறு இடங்களில் இடங்களில் கூறப்படுவதைக் கேட்டிருக்கின்றேன்.  இன்னும் இரண்டு தலைமுறையில் ஒருத்தருக்கும் சாதி என்றால் என்னவென்றே தெரியாது என்றெல்லாம் சமூகச் செயற்பாட்டாளர்களை நோக்கி சொல்லப்படுவது மிக வழமையானதாகி வருகின்றது.  ஆனால் உண்மை அப்படியா இருக்கின்றது?  புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன்; எத்தனையோ ஊர்ச் சங்கங்கள் இருக்கின்றன, இவற்றில் எத்தனை ஊர்ச்சங்கங்களில் முக்கிய பதவிகளிற்கு தாழ்த்தப்பட்டவர்களும் தலித்துக்களும் தெரியப்பட்டிருக்கின்றார்கள்?  ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சாதியப் பாகுபாடுகள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தன.  ஆனால் மக்களின் மனநிலையில் மாற்றம் உண்டானதா என்பது கேள்விக்குறிதான்.  சட்டங்கள் மூலம் மாத்திரமே சாதியொழிப்பினைச் செய்துவிடமுடியாது.  சாதியொழிப்பு என்கிற கருத்தியலினை தொடர்ச்சியாக மக்களுடன் உரையாடலில் ஈடுபடுத்துவதனால் மாத்திரமே மக்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்கலாம்.  மக்களுடனான உரையாடல் இல்லாமற்போனது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகளை உருவாக்கிய காரணிகளுல் முக்கியமானது.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுபவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களில் ஈடுபடுவது மூலமே ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றிப்பெறும் என்று Pedagogy of the Oppressed நூலில் Paulo Freire வலியுறுத்தியதே மீண்டும் ஞாபகம் வருகின்றது.

 

-3-

சாதியம் தொடர்பான இன்னும் ஓர் அவதானத்தினை அண்மையில் பார்த்த மதயானைக் கூட்டம் திரைப்படத்திலும் காணமுடிந்தது.  மதயானைக்கூட்டம் திரைப்படத்தை முதன்முறை பார்த்தபோது அத்திரைப்படத்திற்கும் கிழக்குச் சீமையிலே திரைப்படத்துக்திற்கும் இடையில் சில ஒற்றுமைகளைக் உணரமுடிந்தது.  அதன் தொடர்ச்சியாக இரண்டு படங்களையும் மீளவும் பார்த்ததில் பெற்ற அவதானம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன்.  இரண்டு படங்களிலும் வில்லன்களாக காட்டப்படும் பெரிய கறுப்பும் (கிழக்குச் சீமையிலே), பொன்ராசுவும் (மதயானைக் கூட்டம்) பிரதான பாத்திரம் வகிக்கும் மாயாண்டித் தேவன் – சிவாண்டி (விஜயகுமார்-நெப்போலியன்) மற்றும் ஜெயக்கொடி தேவர் – வீரத்தேவர் (முருகன்ஜி – வேல ராமமூர்த்தி) பாத்திரங்களை விட சமூக மதிப்பில் / சாதிய படிநிலையில் குறைவான படிநிலையில் இருப்பவர்கள்,  இருவரும் (பொன்ராசு பொருளாதார உயர்வினாலும், பெரிய கறுப்பு “உயர் குடிப்பெண்ணை” மணம் செய்வதன் மூலமும்) தமது “சமூக அந்தஸ்தை உயர்த்த” அல்லது “மேல் நிலையாக்க” விரும்புபவர்கள்.  குறிப்பாக கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் வரும் பெரிய கறுப்பு கதாபாத்திரம், தன்னைவிட சாதியப் படிநிலையில் உயர்வாக உள்ள பெண்ணைத் திருமணம் செய்வதன் மூலம் தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளவிரும்புகின்றது என்பது அக்கதாபாத்திரம் பிற கதாபாத்திரங்களுடன் செய்யும் உரையாடல்களினூடாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.  இத்திரைப்படங்களில் இங்கே குறிப்பிடப்பட்ட கதாபாதிரங்கள மாத்திரமே வில்லன்கள் / எதிர் பாத்திரங்களா அல்லது அந்தப் போக்கே (மேல்நிலையாக்கமே) தவறானதாக படைப்பாளிகளால் பார்க்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது.   அத்துடன் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் நேரடியான வில்லத்தனங்கள் எதுவும் செய்யாமல் “பங்காளிகளான” மாயாண்டித் தேவன் – சிவாண்டி (கிழக்குச் சீமையிலே), ஜெயக்கொடி தேவர் – வீரத்தேவர் (மதயானைக் கூட்டம்) இடையே புறங்கூறி குழப்பத்தையும் விரோதத்தையும் வளர்ப்பதன் மூலமும், சூழ்ச்சி செய்வது மூலமுமே தமது எதிராளிகளை பழிவாங்குவது அல்லது வன்மம் தீர்ப்பதாயும் காட்டப்படுகின்றது.  அந்தவகையில் மக்களின் பொதுப்புத்தியை பிரதிபலிப்பதாக இத்திரைப்படங்களும் அமைகின்றன.

 

 

-தாய்வீடு இதழுக்காக எழுதப்பட்டது.

எனது நினைவில் பாலுமகேந்திரா…

download (1)

காலஞ்சென்ற பாலுமகேந்திரா அவர்கள் தமிழ்நாட்டு மையசினிமாவில் நல்லசினிமாக்கள் என்று சொல்லக்கூடிய சில சினிமாக்களை இயக்கியவர்,  ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் புகழும் விதம் மிகமிக அளவுக்கு மிஞ்சியதாகவே அவதானிக்க முடிந்தது.   ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கும் மௌனிகாவிற்கும் இடையிலான உறவு, அவ் உறவு பற்றி பாலுமகேந்திராவும், மௌனிகாவும் வழங்கிய பேட்டிகள், பகிர்வுகள் போன்றன மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன.  (பாலுமகேந்திராவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மௌனிகா இயக்குனர் பாலாவினால் தடுக்கப்பட்டமையும் இவ் உறவு மீண்டும் மீண்டும் பகிரப்படக் காரணமாக இருந்திருக்கலாம்.  ஆனால் மௌனிகா – பாலுமகேந்திரா உறவு பற்றிப் பேசிய பலருக்கு வசதியாக ஷோபா மறக்கப்பட்டவர் ஆனது ஒருவித செலக்ரிவ் அம்னீஷியா என்றே தோன்றுகின்றது.   அது கூட பரவாயில்லை என்னும் அளவுக்கு, ஷோபாவுடனான அவரது உறவு குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களயும் தாண்டி அவரது ஷோபாவுடனான உறவை தெய்வீகக்காதல் என்று கொண்டாடுவோரைப் பார்க்கின்றபோது அதுவும் ஆனந்த விகடனுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பட்ட, “அந்த வண்ணத்துப்பூச்சி எனது தோளிலும் சிறிதுகாலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்துபோன சோகத்தையா..?” என்ற வார்த்தைகளைக் கூறி உருகுகின்றபோது எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.

  1. அவரது அழியாத கோலங்கள் திரைப்படத்தின்போது ஷோபாவை உதவி / துணை இயக்குனர் என்று பெயரிட்டுக் காட்டி இருப்பார்.   அந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றபோது ஷோபாவுக்கு எத்தனை வயதிருக்கும்?.  நிச்சயம் 16 வயதிலும் குறைவாகவே இருந்திருக்கும்.  அந்தளவு இளவயதினரை உதவி / துணை இயக்குனர் என்று; அதுவும் அந்தப் பட்டியலில் வந்த 3 பெயர்களில் முதன்மையானதாக பட்டியலிட்டது ஏன்?   இதனை இயக்குனர் என்கிற அதிகாரம் கொண்டிருந்த பாலுமகேந்திரா அவர்கள் செய்த அதிகாரபீடத்தின் அலட்டல் என்றும் மிக மிகக் கேவலமான உள்நோக்கம் கொண்டதென்றுமே பார்க்க முடிகின்றது.
  2. மூடுபனி திரைப்படத்தின் ஆரம்பத்தில் வருகின்ற “எனக்கு எல்லாமுமாய் இருந்த அம்மு(ஷோபாவுக்கு) ஆத்ம சமர்ப்பனம்” என்கிற டைட்டில் கார்ட் பெரும் ஆயாசத்தைக் கிளப்பியது.  மூடுபனி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடத்தின் பின் வெளியான அவர் மௌனிகாவுடனான தனது உறவை பகிரங்கமாக வெளிப்படுத்திய விகடன் பேட்டியிலோ அல்லது பின்னர் நிகழ்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களிலோ ஷோபாவை மனைவி என்று சொன்னது இல்லை.  தேவதை என்றும்,, சிறுபிள்ளைத்தனமானவர் என்பதுவுமாகவே அவரது கருத்துப்பகிர்வு ஷோபா குறித்து நிகழ்ந்து இருக்கின்றது.  தற்கொலைசெய்துகொண்ட ஷோபாவோ அல்லது தற்கொலை நோக்கித் தள்ளப்பட்டவர் என்றவகையில் கொலைசெய்யப்பட்ட ஷோபாவோ மாத்திரமல்லை, அவரது வாழ்க்கையில் துணைவியாகின்றபோது மௌனிகாவும் கூட 16 வயது அல்லது அதற்கு உட்பட்டவரே.  இதனை  ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டியில் “இருபது வருடங்கள் தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது என்று அவரே கூறி இருக்கின்றார்.   பின்னர் பாலுமகேந்திராவின் இறப்பிற்குப் பின்னர் மௌனிகாவும் தமிழ் இந்துவிற்கு வழங்கிய பாலுமகேந்திரா குறித்து வழங்கிய நினைவுப் பகிர்வில் “1985ம் ஆண்டு வெளியான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குனர் பாலுமகேந்திராவிற்கு அறிமுகமானேன்.   எங்கள் திருமணம் 2000ல் நடைபெற்றது.   28 வருட அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளார்.   இதனை பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளார்/இயக்குநர் என்கிற அதிகாரத்தினை பயன்படுத்தி செய்ததாகவே கருதமுடிகின்றது.   குறிப்பாக பாலுமகேந்திராவிற்கு மேற்குறிப்பிட்டவர்களுடன் இருந்த உறவுகள் பற்றிய ஓயாத புகழ்ச்சிகளே மீள மீள இவற்றை நினைவுறுத்துவனவாயும் இருக்கின்றன.

அதேநேரம் இந்தக் கட்டுரையின் ஆரம்பவசனத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு படைப்பாளியாக பாலுமகேந்திரா தமிழ்நாட்டு மையநீரோட்ட திரைப்படங்களில் நல்ல திரைப்படங்கள் என்று கூறக்கூடிய சில நல்ல திரைப்படங்களை இயக்கியவர்.  குறிப்பாக வீடு, சந்தியாராகம் மற்றும் அழியாதகோலங்கள்.  இவற்றில் சந்தியாராகமும், அழியாத கோலங்களும் எனக்கு மிகப் பிடித்த திரைப்படங்களும் கூட.   எனினும் அவை மட்டுமல்லவே பாலுமகேந்திரா.  அவர் சமரசமே செய்யாதவர் என்று எப்படிக் கூறுவது?   மூன்றாம் பிறை, மறுபடியும் திரைப்படங்களில் கலைநேர்த்தியும், திருத்தமான இயக்கமும் இருந்தாலும், அவற்றில் வணிக நோக்கிற்காக திணிக்கப்பட்ட கவர்ச்சி பாடல்கள் அவர் செய்த சமரசம் தானே.  அவர் விரும்பியோ, முழுமனதுடனோ செய்திருக்காவிட்டாலும் கூட!

பாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவர் இயக்கிய எல்லாத் திரைப்படங்களையும் அடுத்தடுத்துப் பார்த்தேன்.  (ரொரன்றோவில் இருக்கின்ற திரைப்பட சீடீக்கள் விற்கின்ற கடை ஒன்றில் அவரது மறைவின் பின்னர் சில வாரங்கள் “பாலுமகேந்திரா வாரம்” என்கிற பெயரில் தனியாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டு விற்கப்பட்டன)  ரெட்டை வால் குருவி திரைப்படத்தை மறுபடியும் பாருங்கள்.  மிக மலினமான வணிகத் திரைப்படம்.  குறிப்பாக ஒரு மத்திய தர வர்க்க திருமணமான இளைஞன் ஒருவனின் பாலியல் விருப்புகளை/வேட்கைகளை அல்லது காமத்தை பேசுவது என்கிற விடயத்தைக் கையாண்ட திரைப்படம் என்றபோதும் அதனைக் காட்சிப்படுத்துவதில் மலினமான ரசனையைக் கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா.   அதுபோலவே சதி லீலாவதியும், வண்ண வண்ணப்பூக்களும், ராமன் அப்துல்லாவும், அது ஒரு கனாக்காலமும் கூட.   இவற்றை இங்கே குறிப்பிடுவது பாலுமகேந்திரா குறித்த எந்த காழ்ப்புணர்வினாலும் அல்ல, அவர் பற்றி தொடர்ச்சியாக கூறப்படும் அளவுக்கு மீறிய புகழுரைகள், அவர் பற்றிய எனது மதிப்பீட்டுடன் ஏற்படுத்திய சலனமே இந்தக் கட்டுரை.

பேசாமொழி இதழ் வீடு திரைப்பம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பாலுமகேந்திராவுடன் செய்த நேர்காணலில் பாலுமகேந்திராவிடம் “முழுக்க முழுக்க உங்கள் திருப்திக்காக எடுக்கப்பட்ட படமா வீடு?” என்கிற கேள்வியினைக் கேட்டிருப்பார்கள்.  அதற்கு பின்வருமாறு பதிலுரைத்திருப்பார் பாலுமகேந்திரா;

“என்னோட திருப்திக்கு என்பதைவிட, தமிழுக்கு இப்படியொரு படம் கண்டிப்பாக வேண்டும்.  I have my own way.  எனக்கு சுதந்திரம் இருந்தால் இப்படியான திரைப்படங்களைத்தான் நான் எடுக்க விரும்புவேன்.  இப்படியான படங்களை எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.  ஆனால் சினிமாக்களைத்தாண்டி எனக்கும் குடும்பம் இருக்கின்றது.  சினிமா என்பது என் கலாரீதியான  வழிபாடு மட்டுமல்ல.  என் தொழிலும் கூட.  தொழில் என்கையில் அதில் வரும் வருவாயை வைத்துத்தான் நான் சாப்பிடவேண்டும்.  அதனால மத்த படங்களை சமரசங்களோடு பண்ண வேண்டிய வேலைக்கு நான் தள்ளப்படுகிறேன். (பேசாமொழி இதழ் 2, தை 15, 2013)“

பாலுமகேந்திரா கூறுகின்ற நியாயங்களும், காரணங்களும், சேர்ந்தே இருப்பது புலமையும், வறுமையும் என்பதைப் பெருமையுடன் சொல்லத் தலைப்படும் தமிழ்ச்சூழலில் என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை அவர் பற்றி எழுப்பப்படும் மிகைப்படுத்திய விம்பங்கள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.  தன் தனிப்பட்ட வாழ்வின் பலவீனங்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த, நல்ல வாசகனாக இருந்து அவற்றின் பாதிப்பில் நல்ல சினிமாக்கள் சிலவற்றை இயக்கிய, தன் பெரும்பாலான படைப்புகளில் வணிகத்தை முன்னிறுத்தும் தமிழ் சினிமாவின் வியாபாரத் தேவைகளுக்கும் தன் தனிப்பட்ட கலை ரீதியான/அழகியல் ரீதியான தேர்வுகளுக்கும் இடையில் தடுமாறிய, தன் வழிவந்த / தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட / தன்னால் நெறிப்படுத்தப்பட்ட, தற்கால தமிழ் சினிமாவின் முக்கியமான சில இயக்குனர்களின் ஆசானாக இருந்த ஒரு கலைஞராகவே பாலுமகேந்திராவின் விம்பம் என்னில் எஞ்சி நிற்கின்றது


குறிப்பு:  எனது நண்பன் விசாகனுடன் சென்ற ஆண்டின் இறுதிப் பகுதியிலும், பாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னும் அவர் பற்றிப் பேசியவற்றின் நினைவுகளில் இருந்து இப்பதிவு எழுதப்படுகின்றது.