சிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார்

unnamedஈரோட்டின் பகுதியாகிய கருங்கல்பாளையம் என்ற ஊரில் இயங்கிவந்த வாசகசாலையின் 9வது ஆண்டுவிழா நிகழ்வினைப் பற்றி குடியரசு இதழில் 1925 இல் வெளிவந்த துணைத்தலையங்கம் விடுதலைக்குப் போராடிக்கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில் வாசகசாலைகளுக்கு இருக்கக் கூடிய அவசியத்தையும் சிறு சங்கங்கள் தொடர்ச்சியாக செயற்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்துவதாக அமைகின்றது.   அன்றைய இந்திய – தமிழகச் சூழலில் கூறப்பட்ட இந்த விடயங்கள் இன்றைய ஈழத்துச் சூழலுக்கும் பொருந்தும்; Continue reading “சிறுசங்கங்களின் தேவையும் வகிபாகமும் குறித்து பெரியார்”

ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் பிரதேசங்களது சமகால இலக்கியப் பங்களிப்பும்

ஈழத்து இலக்கியம் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தொடர்ச்சியாக உரையாடுகின்றபோது ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்கவேண்டி இருக்கின்றது.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் வளர்ச்சியை நோக்கிச் செல்வதான ஒரு கருதுகோள் அண்மைக்காலமாக முன்வைக்கப்படுகின்றபோது அதன் உண்மைத்தன்மை பற்றியும் குறுக்குவெட்டுத் தோற்றம் பற்றியும் அலசவேண்டியது அவசியமாகின்றது.  அப்படிப் பார்க்கின்றபோது அவற்றின் செல்நெறி, இலக்கியத் தரம், கலைத்துவம், அவற்றின் உள்ளடக்கம் தனித்துவம் என்பவற்றோடு சமகாலத்தில் இலக்கிய முயற்சிகளும் செயற்பாடுகளும் ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலும் எவ்வாறு பரவியும், வளர்ச்சியடைந்தும் இருக்கின்றன என்பதைக் குறித்துக் கவனம் செலுத்தவேண்டியதும் முக்கியமானதாகும்.  அந்த வகையில் இந்தக் கட்டுரையானது ஈழத்தின் வெவ்வேறு பிரதேசங்களதும் சமகால இலக்கியப் பங்களிப்பு எப்படி இருக்கின்றது என்பதையும் அதில் புதிதாக எழுத வந்திருப்பவர்களின் எவ்வளவு பங்கேற்கின்றார்கள் என்பது குறித்தும் ஆராய்கின்றது.

சமகால இலக்கியப் போக்குகளையும் புதிதாக எழுத வருகின்றவர்களையும் அறிந்துகொள்வதற்கு இதழ்களே அதிகம் பொருத்தமானவை என்ற புரிதலின் அடிப்படையிலே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.  முதலில் ஈழத்தில் இருந்து தற்போது வெளிவருகின்ற இலக்கிய இதழ்கள் என்று எடுத்துக்கொண்டால் ஞானம், கலைமுகம், ஜீவநதி, மறுகா, மகுடம், படிகள், புதியசொல், தளவாசல் ஆகிய இதழ்களைக் குறிப்பிடலாம்.  இவற்றில் ஏதாவது விடுபடல்கள் இருக்கலாம், எனது கவனத்தை எட்டியவை இவையே.  இவற்றில் படிகள், தளவாசல் இரண்டு இதழ்களின் பிரதிகளும் எனக்குக் கிடைக்கவில்லை, ஏனையவற்றைத் தொடர்ச்சியாக வாசித்துகொண்டிருக்கின்றேன் என்ற வகையிலேயே எனது அவதானங்களை முன்வைக்கின்றேன்.

ஈழத்து இலக்கியம் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் அது ஒற்றைத்தன்மையானதாக இருக்காது என்பது அடிப்படையான புரிதலாகும்.  ஈழத்தில் வாழும் தமிழ் பேசும் சமூகத்தினரின் இலக்கியமே ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டாலும் அவர்கள் மூன்று வெவ்வேறு தேசிய இனங்களைச் சார்ந்தவர்கள்; வெவ்வேறு மதங்களையும், பண்பாட்டு, பொருளாதார, சமூகப் பின்னணிகளையும் சார்ந்தவர்கள்; தவிர பிரதேச வேறுபாடுகளும் அவர்களின் வெளிப்பாடுகளில் தாக்கம் செலுத்துகின்றன.  இதுதவிர ஒவ்வொரு பிரிவினரும் எதிர்கொள்ளும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளும் கூட வேறுபட்டவை.  இவற்றின் தாக்கங்களின்  காரணமாக பிரதேசங்களுக்கேற்ப தனித்துவமான இலக்கிய வெளிப்பாடுகளும் அமையும்.  இவ்வாறு பல்வகைத்தன்மையான எழுத்துகளும் படைப்பிலக்கியங்களும் ஒருவிதத்தில் ஈழத்து இலக்கியம் என்பதற்கு வலுவும் வளமும் சேர்ப்பன.  எனவே ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சி பற்றியும் செல்நெறி பற்றியும் பேச முற்படுகின்றபோது வெவ்வேறு பிரதேசங்களில் இருந்து வரும் இலக்கிய வெளிப்பாடுகள் எங்ஙனம் அமைகின்றன என்று நோக்குவது முக்கியமானதாகும்.  ஈழத்து இலக்கியம் என்பதை பிரதேச ரீதியாக

  1. யாழ் குடாநாடு
  2. திருகோணமலை
  3. கிளிநொச்சி மற்றும் வன்னி மாவட்டங்கள்
  4. மலையகம்
  5. கொழும்பு
  6. மட்டக்களப்பு, அம்பாறை

என்கிற பிரதேச அலகுகளாகப் பிரிக்கலாம்.  இதற்கு அப்பாலும் தென்பகுதியிலும் மேற்குக்கரையோரமாகவும் தமிழர் வாழும் பிரதேசங்கள் இருந்தாலும் அவற்றில் போதுவான இலக்கிய அசைவியக்கங்கள் நடைபெறுவதை அவதானிக்க முடிவதில்லை.

இந்தப் பிரதேச அலகுகளையும் மேலே குறிப்பிட்ட இலக்கிய இதழ்களையும் ஒப்புநோக்குவோமானால் எமக்குக் கிடைக்கின்ற முடிவுகள் அத்தனை ஆரோக்கியமானவை ஆகா.  முன்னர் குறிப்பிட்ட 8 இதழ்களில் கலைமுகம், ஜீவநதி, புதிய சொல், தளவாசல் ஆகிய 4 இதழ்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றன.  மறுகாவும் மகுடமும் மட்டக்களப்பில் இருந்து வெளிவருகின்றன.  ஞானம் கொழும்பில் இருந்தும் படிகள் அநுராதபுரத்தில் இருந்தும் வெளிவருகின்றன.  இந்தப் பிரதேசங்களில் இருந்து வெளிவருகின்ற இதழ்கள் தத்தம் பிரதேசத்தின் தனித்துவங்களை முறையாக வெளிப்படுத்துகின்றன என்று முழுமையாகக் கூறமுடியாவிட்டாலும் இந்த இதழ்களின் ஊடாக குறித்த பிரதேசங்களின் இலக்கிய செல்நெறிகள் பற்றிய அறிதலினை ஓரளவாவது அறியமுடியும்.  அதேநேரத்தில் இந்த இதழ்களை ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது இவற்றில் எழுதுபவர்கள் குறித்தும் அவர்கள் சார்ந்த பிரதேசங்கள் குறித்தும் ஓர் அவதானத்தைச் செய்யவேண்டியது அவசியமாகின்றது.

இந்த இதழ்களை எடுத்துக்கொண்டு அவற்றில் எழுதிவருபவர்களில் இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பின்னர் எழுத ஆரம்பித்தவர்கள் என்று (புதிய தலைமுறையில் / புதிதாக எழுத ஆரம்பித்திருக்கின்ற இளைஞர்களினை வைத்து இந்த ஆய்வினைச் செய்வதற்காகவே 2000 என்கிற ஆண்டுப் பிரிப்பு எடுக்கப்பட்டதே அன்றி அதற்கு இலக்கிய செல்நெறியில் முக்கியத்துவம் கிடையாது என்பது உண்மையே) நோக்குவோமானால் அதில் மீளவும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும், மட்டக்களப்பு, அம்பாறையையும் சேர்ந்தவர்களைத் தவிர வேறு பிரதேசங்களில் பெரிதாக ஒருவரையும் இனங்காண முடியவில்லை என்றே கூறவேண்டும்.  குறிப்பாக திருகோணமலை, மலையகம், கொழும்பு போன்ற தனித்துவமான பண்பாட்டுப் பின்னணியும் இலக்கியத் தொடர்ச்சியும் கொண்ட பிரதேசங்களில் கூட குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எழுத்தாளர்களை இனங்காணமுடியவில்லை என்பது கவனத்திற்கொள்ளவேண்டிய அம்சமாகும்.  இன்னும் குறிப்பாக நோக்குவோமானால் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து புதிதாக எழுத வருகின்ற இளைஞர்களும் இலக்கிய அசைவியக்கங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன.  இவர்களில் பலர் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டும் உரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டுமிருக்கின்ற அதேவேளை இலக்கியச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டபடியே இருக்கின்றார்கள்.  அதேநேரம் மட்டக்களப்பையும் அம்பாறையையும் பொறுத்தவரை நிறைய புதுமுயற்சிகளையும் சீரிய தன்மைகளையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக கவிதைகளிலும் இலக்கியம் குறித்த உரையாடல்களிலும் இவர்கள் மிகவும் தீவிரமாக இயங்கிவருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  அத்துடன் தொடர்ச்சியாக வெவ்வேறு இலக்கிய நிகழ்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றிலும் காத்திரமான ஒரு செல்நெறியை இந்தப் பிரதேசங்களில் இருந்து அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. 

இலங்கையின் பிற பிரதேசங்களைவிட வேறுபட்ட சமூக பொருளாதார உறவுகளையும் பண்பாட்டுப் பின்னணியையும் கொண்ட மலையகம் தனக்கென தனித்துவமானதும் தொடர்ச்சியானதுமான ஒரு இலக்கிய மரபினையும் கொண்டது.   ஆயினும் அதனை வெளிப்படுத்துமளவுக்கான இலக்கிய வெளிப்பாடுகள் சமகாலத்தில் போதுமானதாக இல்லை என்றே கூறவேண்டும்.  குறிப்பாக தொண்ணூறுகள் வரை தொடர்ச்சியாக இலக்கியப் பங்களிப்பைச் செய்துகொண்டிருந்த மலையகத்தின் இலக்கிய வளர்ச்சியானது அதற்குப் பிறகு தேக்கமடைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.  எனவே அந்தத் தலைமுறையினர் தொடர்ச்சியாக இயங்கிவருகின்ற போதும் புதிய தலைமுறையினர் எவரும் இவர்களைப் போன்ற வீச்சுடன் இங்கிருந்து உருவாகாத நிலையே காணப்படுகின்றது.  மலையகத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த கொழுந்து இதழும் தற்போது வெளிவருவதில்லை என்றே அறியமுடிகின்றது.  அதே நேரத்தில் வரலாற்று ரீதியான பதிவுகள், ஆவணப்படுத்தல் முயற்சிகள், என்பன தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது ஒரு ஆரோக்கியமான சமிக்ஞையே.  இதே முயற்சிகளுடன் மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிக்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படுவது முக்கியமானது என்பதை இங்கே சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது.  மற்றும் எனக்குத் தெரிந்து பெருவிரல் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் கருத்தரங்களும் நிகழ்வுகளும், இந்தக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கின்ற காலத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற “இலங்கை மலையகத் தமிழ் இலக்கியமும் கலை பண்பாட்டு வடிவங்களும்” போன்ற கருத்தரங்குகளும் ஏற்படுத்தக்கூடிய சலனம் புதியவர்களை ஊக்குவிக்கவும், சிறந்த இலக்கியச் செல்நெறி உருவாகவும் வழிசமைக்கும் என்று நம்புகின்றேன்.

கொழும்பைப் பொறுத்தவரை அங்கிருந்து ஞானம் இதழ் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கின்றது.  ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரை இத்தகைய தொடர்ச்சித் தன்மை முக்கியத்துவம் வாய்ந்தது.    ஈழத்தைப் பொறுத்தவரை பெருநகர வாழ்வு என்கிற அம்சம் இருக்கின்ற ஒரே நகரம் என்று கொழும்பினையே குறிப்பிட முடியும்.  ஆயினும் அந்த வாழ்வு இதுவரை ஈழத்து இதழ்களில் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.  குறிப்பாக, உலகமயமாக்கலின் தீவிரத்துக்கும் போருக்கும் பிந்தையதுமான கொழும்பு வாழ்க்கையும் கேளிக்கைகளும் களிப்புகளும் நிரம்பிய அதன் இரவு வாழ்க்கையும் இன்னும் ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு சரியான முறையில் அறிமுகமாவில்லை.  அதுமட்டுமல்லாமல் கொழும்பின் வறுமையும் நெருக்கமான சிறு இடங்களில் அமைந்த வாழ்விடங்களும் அது சார்ந்த பிரச்சனைகளும் கூட முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை என்றே சொல்லவேண்டும்.  மேலும் கொழும்பை மையமாக வைத்து வருகின்ற ஞானம் இதழில் மட்டுமல்லாது ஈழத்தில் இருந்து வெளிவருகின்ற எந்த இதழ்களிலும் புனைவிலக்கியங்கள் எழுதுகின்ற கொழும்பினைச் சேர்ந்த இளைய தலமுறையினர் எவரையும் அடையாளம் காணமுடியவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியது. 

போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டங்கள் இன்னும் போரின் அழிவுகளிலிருந்து முழுமையாக மீளவில்லை.  அத்துடன் போரினால் ஏற்பட்ட இழப்புகளும் இடப்பெயர்வுகளும் அப்பிரதேசத்தின் சமூகக் கட்டமைப்பிலும் பாரிய தாக்கத்தை செலுத்தியிருக்கின்றன என்பதும் உண்மையே.  அதேநேரம் கிளிநொச்சியையும் வவுனியாவையும் மையமாக வைத்து சில இலக்கிய நகர்வுகள் இடம்பெறுவதையும் வாசிப்பிலும் எழுத்துச் செயற்பாட்டிலும் அக்கறை கொண்ட ஒரு இளையதலைமுறை உருவாகி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.  அத்துடன் இவர்களில் சிலரது ஆக்கங்களும் இதழ்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ச்சியாக வெளிவரவும் ஆரம்பித்தும் இருக்கின்றன.  இது ஒருவிதத்தில் நம்பிக்கையூட்டுகின்ற சமிக்ஞையாகும்.  இவர்கள் தொடர்ச்சியாக உரையாடல்களிலும் கூட்டுச் செயற்பாடுகளிலும் ஈடுபடும்போது நேர்மறையான விளைவுகளை அது உருவாக்கும்

இந்தக் கட்டுரையில் இதழ்களே குறிப்பிடப்பட்டாலும் அதற்குஅப்பால் பத்திரிகைகளில் கவிதைகளையும் புனைவுகளையும் தொடர்ச்சியாக எழுதுகின்றவர்கள்சிலரையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  அதேநேரம் இதழ்களில் எழுதாமல் பத்திரிகைகளில்தனித்து எழுதுகின்றவர்கள் என்று எவரையும் சிறப்பாக அடையாளங் காணமுடியாமல் இருப்பதுடன்அவ்வாறு பத்திரிகைகளில் மட்டும் தனித்து எழுதுபவர்கள் அனேகமானவர்களது எழுத்துகள் இலக்கியமாகஇன்னும் வளரவில்லை என்பதையும் குறிப்பிடவேண்டியிருக்கின்றது.  இதற்கும் அப்பால் வலைப்பதிவுகளின் அறிமுகத்திற்குப்பின்னர் அச்சு ஊடகங்களை நாடாமல் இணையத்தளங்களின் ஊடாகவும் வலைப்பதிவுகளின் ஊடாகவும்மாத்திரமே தொடர்ச்சியாக எழுதுகின்றவர்களும் நிறையப் பேர் இருக்கின்றனர்.  குறிப்பாக இளந்தலைமுறையினரில் பெரும்பாலோனோர்இந்த ஊடகங்களையே கைக்கொள்ளுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைய திரட்டிகள் இருந்தபோது அவற்றில்தமது வலைப்பதிவுகள் ஊடாக தம்மை இணைத்துப் பதிவுகளை எழுதத் தொடங்கிய பலர் இருந்தனர்.  தற்போது பெரும்பாலான திரட்டிகள் செயலிழந்துவிட்டநிலையில் (தமிழ்மணம் தவிர்ந்த ஏனைய திரட்டிகள் செயலிழந்துவிட்டதாகவேஅறியமுடிகின்றது) பலரும் இவ்வாறான இணைய இதழ்களில் தமது பங்களிப்புகளைச் செலுத்துகின்றனர்.  அண்மையில் கூட ஈழத்தில் இருந்து உவங்கள் (http://uvangal.com/),ரோர் (https://roartamil.com/) என்கிற இரண்டு இணையத்தளங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.  நானிலம்தொடர்ச்சியாக இயங்கியும் வருகின்றது. ஆயினும் இவ்வாறு ஆரம்பிக்கப்படும் இணையத்தளங்களின் ஆயுட்காலம்மிகக் குறைவானதாகவே இருக்கின்றது என்பதை ஒரு எதிர்மறை சமிக்ஞையாகக் கருதவேண்டி இருக்கின்றது.  தவிர தற்போதைய இளந்தலைமுறையினர் அதிகமாகமுகநூல் போன்ற சமூக ஊடகங்களிலேயே தமது எழுத்துகளைப் பகிர்கின்ற வழக்கம் ஒன்றினை வைத்திருக்கின்றனர்.  இது ஆழமான, தொடர்ச்சியானஉரையாடல்களையும் பரவலையும் ஏற்படுத்தாமல் வெறும் பரபரப்புகளை ஏற்படுத்துவதாக அமைவதையும்கருத்திற்கொள்ளவேண்டி இருக்கின்றது. இந்த விடயம் குறித்துத் தனியாக ஆராயவேண்டி இருப்பதனால் அதனைஇங்கே தவிர்த்துக்கொள்கின்றேன்.         

ஈழத்து இலக்கியம் என்பதை ஒற்றைத்தன்மை கொண்டதாகக் கட்டமைக்காமல் அதனைப் பல்வேறு ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்களினது வெளிப்பாடாக நோக்குவதும் பிரதேசங்களிற்கான சமூக, பொருளாதார உறவுகள் மற்றும் அரசியல் நெருக்கடிகளின் காரணமாக வெவ்வேறு வெளிப்பாட்டு முறைகளையும், வடிவங்களையும் பிரச்சனை மையங்களையும் அவை கையாள்வதையும் ஆராய்வதும் புரிந்துகொள்வதும் முக்கியமானது.  குறிப்பாக இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இந்தப் பிரக்ஞை இருப்பது அவசியமானது.  இந்த அடிப்படையில் ஈழத்தில் தமிழர்கள் வாழுகின்ற, இலக்கிய வெளிப்பாடுகள் இருக்கவேண்டியதாக எதிர்ப்பார்க்கப்படுகின்ற வெவ்வேறு பிரதேசங்களில் இலக்கிய வெளிப்பாடுகளில் இருக்கக் கூடிய போதாமையும் அசமத்துவம் குறித்துவம் எவ்விதம் செயலாற்றுவது என்ற கேள்வி எழுகின்றது. இந்தப் பிரதேசங்களில் இலக்கிய வெளிப்பாடுகள் குறைவாக இருந்தாலும் கூட கலை இலக்கிய ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்களும் இருக்கவே செய்வார்கள்.  முதற்கட்டமாக அவர்களை இனங்காணவேண்டும்.  அவர்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களை ஏற்படுத்துவது மூலமாக ஈழத்து இலக்கியம், அதன் தனித்துவம், அதன் தொன்மை, தொடர்ச்சி மற்றும் எமது கலை, இலக்கியங்களின் வரலாறு, பண்பாட்டுப் பின்னணி என்பன தொடர்பான விழிப்புணர்வையும் பொதுத் தளத்திலான ஒத்த சிந்தனையயும் பொது வேலைத்திட்டத்தையும் உருவாக்கலாம்.  இந்தத் தொடர்புகளையும் விழிப்புணர்வையும் பிரக்ஞை பூர்வமாகப் பயன்படுத்தி அந்தந்தப் பிரதேசங்களில் உரையாடல்கள், சிறு சிறு அமைப்புகள், நூல்களின் பரிவர்த்தனைக்கான வலையமைப்பு என்பவற்றை உருவாக்கலாம்.  அடுத்து இதழாசிரியர்கள் இலக்கிய வெளிப்பாடு குறைவான பிரதேசங்களில் இருந்து ஆக்கங்களைப் பெறுவதிலும் அவர்களை ஊக்குவிப்பதிலும் தொடர்ச்சியாக ஈடுபடவேண்டும்.  அத்துடன் பிரதேசங்களுக்கான சிறப்பிதழ்களையோ அல்லது இதழ்களில் சிறப்புப் பக்கங்களையோ ஒதுக்கலாம்.  இதன் மூலம் அந்தப் பிரதேசங்களில் கவனக் குவிப்பு நிகழ்வதுடன் அங்கிருக்கின்ற வாசகர்களுடன் உரையாடல்களை ஏற்படுத்தவும் ஆரம்ப நிலை எழுத்தாளர்களை ஊக்கமூட்டவும் முடியும். ஜீவநதி இதழ் இந்த வகையில் திருகோணமலைச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ் என்பவற்றை வெளியிட்டிருப்பது முக்கியமானது. அடுத்து ஏற்கனவே இயங்கி வருகின்ற இதழ்கள் வெவ்வெறு பிரதேசங்களில் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் மூலமாக அப்பிரதேசங்களில் உரையாடல்களையும் கருத்தரங்குகளையும் ஒருங்கிணைக்கலாம். 

ஈழத்தைப் பொறுத்தவரை எமது இலக்கிய வரலாறு தமிழ்நாடு அளவிற்குப் பழமையானது என்றாலும் எமது இதழ்களின் தொடர்ச்சி என்பது மிகப் பலவீனமாகவே இருக்கின்றது.  தனியாக இதழ்கள் உருவாவதற்கு முன்னர் வெளிவந்த பத்திரிகைகளாக வீரகேசரியும் தினகரனும் ஈழகேசரியும் இலக்கியத்துக்கென்று விசேட கவனம் எடுத்தும் ஊக்குவித்தனர் என்பது வரலாறு.  ஆனால் கலை, இலக்கிய இதழ்கள் என்று பார்த்தால் கிட்டத்தட்ட 70 ஆண்டுப் பாரம்பரியத்தைக் கொண்ட ஈழத்து இதழியல் வரலாற்றில்

  • மல்லிகை – 1966 முதல் 2016 வரை 401 இதழ்களையும்
  • ஞானம் – ஜூன் 2000 முதல் செப்ரம்பர் 2017 இல் 205 இதழ்கள்
  • ஜீவநதி – ஓகஸ்ட் 2007 முதல் செப்ரம்பர் 2017 வரை 108 இதழ்கள்

என்றுவெறும் 3 இதழ்களே 100 இதழ்களுக்கு மேல்வெளிவந்துள்ளது என்று அறியமுடிகின்றது. இதழ்கள் தொடர்ச்சியாக வருவதற்கு உள்ள சவால்களில் முதன்மையானவையாகசந்தைப்படுத்தல் தொடர்பிலான பிரச்சனைகளும் பதிப்புத்துறை ஆரம்பநிலையிலேயே உள்ளதால்இதழ்களுக்கான தயாரிப்புச் செலவு மிக அதிகமாக இருப்பதுவும் அமைகின்றன.  இலக்கியச் செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும்முன்னெடுத்து புலம்பெயர் நாடுகளிலும் இலங்கைக்குள்ளும் இந்தியாவிலும் வலையமைப்புகளைஉருவாக்குவதன் மூலம் இந்த இதழ்களை பரவலடையச் செய்யவும் சந்தைப்படுத்தலில் ஏற்படுகின்றதடைகளையும் நிதி நெருக்கடிகளையும் எதிர்கொள்ளவும் முடியும்.  இதற்குச் சமநேரத்தில் வெவ்வேறு பிரதேசங்களில்இருந்தும் புதிய தலைமுறை எழுத்தாளர்களை ஊக்குவித்தும் உள்வாங்கியும் தொடர்ச்சியாக ஒப்பீட்டுஆய்வுகளையும் விமர்சனங்களையும் உரையாடல்களையும் உருவாக்கவேண்டும்.  ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்பது படைப்பிலக்கியவளர்ச்சி, விமர்சனத்துறையின் வளர்ச்சி, இதழியல்துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்ததும் பல்வகைத்தன்மைஉடையதுமான படைப்பிலக்கியங்களினதும் விமர்சகர்களதும் வருகையிலுமே தங்கியிருக்கின்றதுஎன்ற தெளிவும் அதை ஈடேற்றுகின்ற தொலைநோக்குப் பார்வையுமே ஈழத்து இலக்கியத்தை உயிர்ப்புடனும்செழிப்புடனும் வளர்க்கும்.

கூர் 5வது இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை.  

“சொற்களால் அமையும் உலகு: சில உரைகள் – சில விமர்சனங்கள்” நூலினை முன்வைத்து ஓர் உசாவல்

வாசிப்பும் தேடலும் நிறைந்தவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் திறப்பினைச் செய்வதாக அமைந்துவிடும் நூல்கள் எல்லாம் முக்கியமானவையாகவே அமைந்துவிடுகின்றன.  வாசிப்பு தரும் அனுபவமானது இதற்கு முன்னர் வாசித்த ஏதோ நூலுடனோ, கண்ட சம்பவத்துடனோ தனி அனுபவத்துடனோ தொடர்புபட்டதாகி, அனுபவத்தின் நீட்சியை ஏற்படுத்திவிடுகின்றது.  அத்தகைய, அனுபவ நீட்சியை ஏற்படுத்திய ஒரு நூலாக செல்வமனோகரன் எழுதிய ”சொற்களால் அமையும் உலகு” என்ற நூலினைச் சொல்லமுடியும்.

செல்வமனோகரன் எனக்கு முதலில் ஒரு பேச்சாளராகத்தான் அறிமுகமானார்.  நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், அங்கே பெரும்பாலான பேச்சாளர்கள் அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த கம்பன் கழகத்தின் பாதிப்பில் புராணக் கதைகளை எடுத்துப் பேசுபவர்களாகவே இருந்தார்கள், சமகால எழுத்துகளை எடுத்துப் பேச்சாளர்கள் பேசியதில்லை என்றே சொல்லலாம்.  இவர்களில் இருந்து மாறுபட்டு சமகால எழுத்துகளைச் சுட்டிக்காட்டி ஆற்றொழுக்காகப் பேசுகின்ற செல்வமனோகரன் எமக்குப் பாடசாலைக்காலத்தில் பிடித்ததோர் ஆளுமையாக இருந்தார்.  பத்தாம் வகுப்பில் பாலகுமாரனை ஆர்வமாக தேடித்தேடி வாசித்துக்கொண்டிருந்த எனக்கு எம்மை விட இரண்டு வயது கூடிய செல்வமனோகரன் பாடசாலை மண்டபத்தில் நிகழ்த்திய பேச்சொன்றில், பாலகுமாரனின் இரண்டாவது சூரியோதயத்தில் வருகின்ற ஒரு சம்பவத்தினை சுட்டிக்காட்டி “நெஞ்சுக்குள் நெருப்பாச்சு” என்ற வரிகளை மீளமீள விபரித்துப் பேசியது நினைவில் இருக்கின்றது.  கம்பன் கழகத்தாரின் பேச்சுகளில் இருந்த ஆர்வம் குறைந்து சென்ற அதேகாலப்பகுதியில் பாடசாலை மட்டத்தில் பேசிய செல்வமனோகரன் போன்றவர்களின் பேச்சு என்னை கவர்ந்திழுக்கத் தொடங்கியது. 

இதற்குப் பின்னர் செல்வமனோகரன் 1997 இல் தூண்டி என்கிற இதழின் ஆசிரியராக எனக்கு மீளவும் அறிமுகமானார்.   யாழ்ப்பாணம் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, மக்கள் அங்கே திரும்பிய மிகவும் நெருக்கடியான சூழலில் தொடங்கப்பட்ட இதழ் என்ற வகையில் தூண்டிக்கு முக்கியமான ஒரு பாத்திரம் உண்டு.  அத்துடன் அதில் மாணவப்பருவத்தில் இருந்த பலரும் எழுதி வந்தனர்.  இன்றுவரை தூண்டி இலக்கிய வட்டத்தின் சார்பில் காத்திரமான ஆய்வரங்குகளை ஒருங்கிணைப்பதுடன் புத்தகப் பதிப்புகளையும் செய்துவருகின்றார்.  மெய்யியலிலும் தமிழ் ஆய்வுகளிலும் இயங்கிவரும் செல்வமனோகரன் சிவஞான சித்தியார் ஞானப்பிரகாசர் உரை, சிவசங்கர பண்டிதம், சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், சைவ பூஷன சந்திரிகை ஆகிய நூல்களை மீள்பதிப்புச் செய்திருக்கின்றார்.  காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், தமிழர் மெய்யியல் ஆகிய நூல்களை ஏற்கனவே எழுதி இருக்கின்ற செல்வமனோகரன் ஆற்றிய உரைகளின் கட்டுரை வடிவங்களையும் நேரடியாக எழுதப்பட்ட கட்டுரைகளையும் கொண்டு பதினொரு கட்டுரைகளின் தொகுப்பாக ”சொற்களால் அமையும் உலகு” நூல் வெளிவந்திருக்கின்றது.

அ. யேசுராசாவின் குறிப்பேட்டிலிருந்து நூல் மீதான வாசிப்பாக அமைகின்ற குறிப்பேட்டிலிருந்து என்கிற கட்டுரையை ஒருவிதத்தில் இந்தத் தொகுப்பில் செல்வமனோகரன் எழுதி இருக்கின்ற வெவ்வேறு நூல்களின் வாசிப்பு அனுபவங்களுக்கான ஒரு மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.  குறிப்பேட்டிலிருந்து தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்ற கட்டுரைகளைப் பற்றிய அறிமுகங்களையும் அபிப்பிராயங்களையும் செல்வமனோகரன் சொல்லிச் செல்கின்றபோது அவை பெரும்பாலும் எனது அபிப்பிராயங்களையும் ஒத்தனவாகவே இருக்கின்றன.  இந்தக் கட்டுரை செல்வமனோகரன் கலை இலக்கியம் பற்றிய மதிப்பீடுகளை எந்த அடிப்படையில் மேற்கொள்கின்றார் என்பதனை ஒருவிதத்தில் தெளிவுபடுத்துவதாக அமைகின்ற அதேவேளை, அ. யேசுராசா என்கிற ஆளுமையினைப் பற்றி செல்வமனோகரனிற்கு இருக்கக்கூடிய மதிப்பீட்டினை இந்த நூலின் அடிப்படையில் மீண்டும் உறுதிசெய்வதாகவும் அமைகின்றது.  குறிப்பாக கலை, அழகியல் குறித்த யேசுராசாவின் நிலைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கலைப்பொருளுக்கு உயிர்த்துவம் அளிப்பது பற்றி விதந்து பேசும் செல்வமனோகரன் அதேசமயம் தொடர்ச்சியாக கைலாசபதி பற்றிய விமர்சனங்களை வைத்துள்ள அ.யேசுராசா, கைலாசபதியின் ஆக்கபூர்வமான பங்களிப்புகளைப் பற்றியும் எழுதவேண்டும் என்று எடுத்துரைக்கின்ற சமநிலையை செல்வமனோகரனிடம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 

அதேநேரம் அரசியல் புனைவுகளான நீந்திக் கடந்த நெருப்பாறு, வெற்றிச்செல்வியின் போராளியின் காதலி, ஈழப்போரில் இறுதி நாட்கள், ஆறிப்போன காயங்களின் வலி ஆகிய நூல்களைப் பற்றிப் பேசுகின்றபோது செல்வமனோகரன் அந்த நூல்கள் பேசும் அரசியலுடன் தனது அரசியல் நிலைப்பாடுகளையும் கலந்து இந்த நூல்கள் பேசும் அரசியலை இன்னும் வலுவூட்டிப் பேசுவதையும் காணமுடிகின்றது.  ஈழப்போரின் இறுதி நாட்களுக்குப் பின்னர் தமிழ்த் தேசியம், விடுதலை புலிகள், போராட்டம் ஆகியவற்றை விமர்சித்து வந்த பல்வேறு நூல்களும் படைப்புகளும் பேசிய அரசியல், அவை முன்வைத்த தரவுகள் என்பன குறித்தும் அவற்றில் இருக்கக்கூடிய போலித்தனம் குறித்தும் செல்வமனோகரன் கடுமையான விசனம் உற்றிருப்பதை இந்தக் கட்டுரைகளின் வாயிலாக அறியமுடியகின்றது.  ”வெற்றிச்செல்வியின் எழுத்துக்களில் பம்பைமடு” என்கிற கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் செல்வமனோகரன்,

“போராடும் தரப்போடு நின்று தம்மை உயர்த்திக்கொண்ட அல்லது தமக்கான அடையாளங்களைப் பெற முற்பட்ட அதேகுழுமம் போராடித் தோற்ற தரப்பை மிகவும் இழித்துரைக்க முற்பட்டது.  அதிகாரத் தரப்புடன் இணைந்து தம் விருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் தம் வாழ்வினை மேம்படுத்தவும் சுயலாப அரசியலைக் கட்டவிழ்த்துவிட்டது.  தமிழ்த்தேசியத்துக்கெதிரான மூளைச் சலவை செய்ய தமிழகம் தொட்டு தமிழர் வாழும் அனைத்துத் தேசங்களுக்கும் பறந்து சென்றது.  புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ்த்தேசியத்துக்கெதிரான குறித்த நபர்களுடன் இணைந்து பொருளாதார தேடத்தில் ஈடுபட்டது.  அத்தரப்பு சார்ந்த தமது பிறரதுமான எழுத்துக்களை நூலக்கம் செய்தது.  அவற்றை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்த்து பொருளாதார, அரசியல் லாபங்களைத் தேடமுற்பட்டுள்ளது.  இதன்வழி சந்தர்ப்பவாத அரசியலுக்கு தமிழ் இளைஞரிடையே தூபம் போற்பட்டது.  படித்த மேதாவிகள் சிலர் மயங்கித்தான் போயினர் (பக்கம்88)”

இவ்வாறு குறிப்பிடும் செல்வமனோகரன் தொடர்ந்து ஆயினும் காலவோட்டத்தில் இவ்விஷமப் பிரச்சாரங்களுக்கெதிரான குரல்கள் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கின (பக்கம் 89)” என்று குறிப்பிடுகின்றார்.  நடைமுறையில் இப்படியான ஒரு நிலைமை இருக்கின்றது என்பதும் பிரதிகளின் ஊடாக தமது அரசியல் நிலைப்பாடுகளையும் தாம் சார்ந்த அல்லது தாம் எதிர்க்கின்ற அமைப்புகளை ஆதரிக்கவும் எதிர்க்கவும் நிராகரிக்கவும் அவதூறு பரப்பவும் முயற்சிகள் நடக்கின்றன என்பதும் உண்மையே.  வாய்வழிக்கதைகளாகவும், உள்ரகசியம் என்ற தோரணையுடனும் பரப்பப்பட்டு வந்த பல்வேறு விதமான கதைகள் தற்போது பிரதிகளாகவும் படைப்புகளாகவும் உலவுவதுடன் அவையே ஈழப்போராட்டம் பற்றியும் ஈழம் பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினர் அறிவதற்கான மூலங்களாகவும் ஆனதைக் காலக்கொடுமை என்றே சொல்லவேண்டும்.  வெவ்வேறு கருத்துநிலைகளில் உள்ளவர்கள் தமது தரப்பினை நியாயப்படுத்தவும் தம் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றவும் மற்றைய தரப்பினரைத் தாக்கவும் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றபோது விமர்சகர்கள் பிரக்ஞையுடனும் விமர்சனப் பார்வையுடன் ஆழ்ந்தகன்று நோக்கித் தமது கருத்துகளை வெளிப்படுத்துவது மிக முக்கியமானதாகும்.  குறிப்பாக சில இடங்களில் துரோகம், துரோகிகள், கைக்கூலிகள் என்று குறிப்பிடும்போதும் காசுக்கும் பொருளுக்கும் பெண்ணுக்கும் விலைபோனவர்கள் என்றும் குறிப்பிடும்போது சமநிலை தவறி உணர்ச்சியால் உந்தப்பட்டுள்ளதாகவே உணரமுடிகின்றது.  இப்படியான சொல்லாடல்கள் எமது சூழலில் எதிர்க் கருத்துக்கொண்டவர்களை வசைபாட சர்வ சாதாரணமாகப் பாவிக்கப்படும் சொற்களாகி, சகிப்புத்தன்மை அறவே இல்லாமல் போய்விடும் சூழலில் இந்தச் சொற்களைப் பாவிப்பது குறித்து எழுத்துச்செயற்பாட்டில் ஈடுபடும் அனைவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தவேண்டி இருக்கின்றது.

ஆயினும் இந்தப் பிரதிகளை அவற்றின் உள்ளடக்கத்துக்காக செல்வமனோகரன் விதந்துபேசுகின்றபோதும் அவற்றின் வடிவம் சார்ந்து தனது நிலைப்பாடுகளை உள்ளடக்கத்தின் பாதிப்பில்லாமல் குறிப்பிடுகின்றார் என்பது முக்கியமான அம்சமாகும்.  நா. யோகேந்திரநாதனின் நீந்திக் கடந்த நெருப்பாற்றினை இறுதிப் போர் பற்றிய பொய்மைகளும் முழுப் புனைவுகளும் மட்டுமே கொண்ட ஆக்கச் சூழலில் இந்நாவலின் வருகை முக்கியமானதும் காத்திரமானது கூடஇது நாவல் என்ற வடிவவியலிலும் அதற்குரிய அழகியலிலும்  சிறந்தது என்று கூறமுடியாதுஆனால் நாவலுக்குரிய பண்புகளும் சித்திரிப்பு முறைகளும் கொண்ட முக்கிய படைப்புபதிவு எனலாம் (பக்கம் 109)” என்றே குறிப்பிடுகின்றார்.  இதே தொகுப்பில் சண்முகம் சிவலிங்கத்தின் காண்டாவனம் சிறுகதைத் தொகுப்புப் பற்றி எழுதுகின்றபோதுஅதன் (தமிழ்த் தேசியத்தின்) நியாயப்பாடுகளை கோசங்களோ பிரசார நெடியோ இல்லாமல் முன்வைக்கின்றார்அதுவே அவரின் ஆளுமைத்திறன் ஆகும் (பக்கம் 113)” என்று செல்வமனோகரன் குறிப்பிடுவதையும் கவனிக்கலாம்.  அவரது கலை இலக்கிய மதிப்பீடுகளின் ஆதாரத் தளங்களில் ஒன்றாகவும் இந்தப் பார்வையை எடுத்துக்கொள்ளலாம். 

இந்தத் தொகுப்பில் இருக்கின்ற ”துக்கத்தின் மீது கட்டப்பட்டதே வாழ்க்கையும்” (கனவுச்சிறை குறித்த கட்டுரை) ”தாமரைச்செல்வியின் படைப்புலகமும்” எனது வாசிப்புடன் நெருக்கமான கட்டுரைகளாக அமைகின்றன.  அஜந்தகுமாரின் சோம்பேறியின் கடல் கவிதைத் தொகுப்பையும் புதிய நூற்றாண்டின் ஈழத்து வடபுலத் தமிழ்க்கவிதைகள் என்கிற கட்டுரையில் குறிப்பிடப்படும் படைப்பாளிகளின் பெரும்பாலான கவிதைகளையும் நான் முழுமையாக வாசிக்கவில்லை என்பதால் அந்தக் கட்டுரைகள் எனக்கு சற்று இடைவெளியுடனேயே இருக்கின்றன.  ஆயினும் கவிதைகள் குறித்த கூர்மையான சில அவதானங்களை இந்தக் கட்டுரைகளில் காணமுடிகின்றது. 

எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களில் தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும் அவாவி நிற்கின்ற இளைய சமூகத்தினரின் ஊடான சமூகப் பார்வை என்பவற்றைத் தமது எழுத்துக்களின் பொதுத்தன்மையாகக் கொண்டிருந்தவர்களில் தனித்துவமான ஒருவராகவே நான் சட்டநாதனை அடையாளப்படுத்துகின்றேன்.  இந்தத் தன்மைகளை சட்டநாதன் கச்சிதமாகக் கையாண்ட தொகுப்பாக ”மாற்றம்” சிறுகதைத் தொகுப்பினைக் குறிப்பிடலாம்.  மாற்றம், உலா என்கிற அவரது தொகுப்புகளில் உள்ள சிறுகதைகளும் அவரது பின்னைய தொகுப்புகளும் ஒரே விதமாக மதிப்பிடக்கூடியன அல்ல,  முக்கூடல் என்கிற அவரது தொகுப்பும் அண்மைக்காலமாக அவர் எழுதிய பல்வேறு சிறுகதைகளும் மிகவும் பலவீனமானவை என்பதுடன் பெண்கள், உறவுகள் குறித்த புரிதல்களில் போதாமையும் கொண்டன (”புதியவர்கள்” தொகுப்பு இன்னமும் வாசிக்கக் கிடைக்கவில்லை).  குறிப்பாக க.சட்டநாதனின் கதைகளில் பெண்கள், குழந்தைகள் என்கிற கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற சட்டநாதனை அவரது அண்மைய படைப்புக்களில் காணமுடியவில்லை என்பதை இங்கே குறிப்பிடவே வேண்டும். 

ஈழத்துப் பெண்நிலைவாத சஞ்சிகைகள் என்கிற மிகப்பரந்த விடயம் இன்னொரு கட்டுரையில் ஆய்வுசெய்யப்படுகின்றது.  ஈழத்தில் வெளியான பெண்கள் சஞ்சிகைகள், ஆளுமைகள் போன்ற முதல்நிலைத் தரவுகளைத் தொகுக்கின்ற பணியே இன்னும் சரியாக நடக்கவில்லை என்பதே நடப்பு நிலையாகும்.  இந்தக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்ற பெண்ணின் குரல், நங்கை, தாகம் போன்ற இதழ்கள் 1979 -1988 காலப்பகுதியில் வெளியானவை.  பெண்கள் சேவா சங்கம் என்கிற பெண்களுக்கான அமைப்பினை 1902 இல் ஆரம்பித்த மங்களம்மாள் மாசிலாமணி 1923 முதல் 1971 வரை ”தமிழ்மகள்” என்கிற இதழினை நடத்திவந்தார்.  தமிழ்மகளுக்கும் செல்வமனோகரனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இதழ்களுக்கும் இடையில் ஈழத்தில் இருந்து வெளியான பெண்கள் இதழ்கள் எவை? அவை என்னவிதமான கருத்துநிலைப்பாடுகளைக் கொண்டிருந்தன என்பது பெரும் ஆய்வுக்கான விடயமாகும்.  பெண்நிலைவாத சஞ்சிகைகள் என்ற பொருளில் ஆய்வுரை ஒன்றைச் செல்வமனோகரன் செய்துள்ளபோதும் அவ்வாறாக வெளியான சஞ்சிகைகளை இந்தக் கட்டுரையின் பொருட்டேனும் வாசித்திருப்பார் என்றாலும் இந்நூல் முழுக்க முழுக்க ஆண்பால் விகுதிகளுடனே அமைந்திருப்பது ஏமாற்றமளிப்பதாக இருக்கின்றது.  வாசகர், எழுத்தாளர் போன்ற மிகச்சாதாரணமாகவே பழக்கத்திற்கு வந்துவிட்ட பாவனைகள் கைவிடப்பட்டு முழுக்க வாசகன், எழுத்தாளன் என்றே இந்நூல் முழுவதும் எழுதப்பட்டுள்ளது.  செல்வமனோகரன் இந்தவிடயத்தில் பிரக்ஞையுடன் செயற்படவேண்டும்.

”ஈழத்து நவீன இலக்கிய விமர்சனமும் கலாரசனையும்” என்கிற கட்டுரை உரையாடலுக்குரிய கட்டுரைகளில் ஒன்று.  இந்தக் கட்டுரையின் ஈழத்து விமர்சன வரலாற்றில் செல்வாக்குச் செலுத்திய போக்குகள், கருத்துநிலைகள் என்பவற்றைத் தொகுப்பாய்வு செய்கின்றார் செல்வமனோகரன்.  விமர்சன வகைகள் பற்றிய வெவ்வேறு வகையான பகுப்பாய்வுகளை இங்கே செல்வமனோகரன் குறிப்பிடுகின்றபோது எந்த வகையின் அடிப்படையிலான சட்டகத்தில் வைத்துத் தன் மதிப்பீடுகளை செல்வமனோகரன் முன்வைகின்றார் என்பது இந்தக் கட்டுரையில் தெளிவாகவில்லை.  உதாரணமாகக் கட்டுரையின் ஓரிடத்தில் 1) அநுகரணக் கொள்கை, 2) பயன்வழிக் கொள்கை, 3)வெளிப்பாட்டுக் கொள்கை, 4) புறநிலைக் கொள்கை என்று நால்வகையாகக் குறிப்பிடுகின்றார்.  இந்த நால்வகையும் எவ்வாறு வரையறை செய்யப்படுகின்றன என்கிற சிறுகுறிப்பையேனும் கொடுத்திருந்தால் கட்டுரை இன்னும் தெளிவாக அமைந்திருக்கும்.  செல்வமனோகரனின் கற்கைத் துறைகளான தமிழ் மெய்யியல் சார்ந்த விமர்சன மரபுகளாக அவை இருக்கலாம் என்பது துணிபு.  ஆனால் அந்த அடிப்படையிலான விமர்சன நோக்கில் இந்தத் தொகுப்பில் உள்ள செல்வமனோகரனின் ஏனைய விமர்சனங்கள் எழுதப்பட்டனவா என்று தெரியவில்லை.  இந்த நூலில் மேற்குறித்த நால்வகை விமர்சனக் கொள்கைகளைப் பற்றி செல்வமனோகரன் குறிப்பிட்டிருந்தார் அது வாசகர்களுக்கு இன்னொரு திறப்பினை ஏற்படுத்தியிருக்கும்.  அதுபோல, ஐம்பதுகளுக்குப் பின்னராக ஈழத்து இலக்கிய விமர்சனப் போக்கினை கருத்தியல் அடிப்படையில் 1)முற்போக்குக் காலம், 2)போரியற் காலம், 3)தற்காலம் என்று மூன்றுவகையாகச் சுட்டுகின்றார்.  இந்தப் பகுப்புகளை கருத்தியல் ரீதியாக பகுப்புகள் சென்று சொல்லமுடியாது; அந்த அந்தக் காலப்பகுதிகளில் செல்வாக்குச் செலுத்திய கருத்தியல்களை மையமாக வைத்து இந்தப் பகுப்புகள் செய்யப்பட்டிருக்குமானால் தற்காலம் என்பது பற்றிய தெளிவான வரையறை வழங்கப்பட்டிருக்கவேண்டும்.  செல்வமனோகரனின் இந்தக் கட்டுரையில் தற்காலப் போக்கை பல்வேறு இசங்களையும் தாண்டி பின்னவீனத்துவம் கோலோச்சுங்காலமிது என்று குறிப்பிடுவது சற்றுக் காலாவதியாகிவிட்ட கருத்தென்றே கருதமுடியும்.  பின்னவீனத்துவம் பேசப்பட்ட, அதன் வாசிப்புமுறைகள் அறிமுகமான காலகட்டத்தைத் தமிழ் இலக்கியச் சூழல் தாண்டிவிட்டது.  அவற்றின் பாதிப்பினால் ஏற்பட்ட சாதக, பாதக விளைவுகளை ஆய்வுசெய்கின்ற போக்கினையும் சமகாலத்தில் காணக்கூடியதாக உள்ளது.  பின்னவீனத்துவம் குறித்து செல்வமனோகரன் இந்தக் கட்டுரையில் குறிப்பிடும் கருத்துகளில் பின்னவீனத்துவத்தை சரியாக உள்வாங்காமல் பேசியவர்களின், செல்வமனோகரன் சொல்வதுபோலவே சொன்னால் பிதற்றல்கள் மீதான எதிர்வினையாகக் காணமுடியும்.  செல்வமனோகரனின் இந்த நிலைப்பாட்டை உறுதிசெய்வதாக அவரது பின்வரும் கூற்று அமைகின்றது தற்கால உலகமயமாதற் சூழல் முறையற்றதே முறையென்றும் வடிவமற்றதே வடிவமென்றும் கூறும் கூறுகெட்ட செயலை நற்செயலெனப் பாராட்டுபவர்களை உற்பவித்துள்ளது (பக்கம் 40)”.  ஆனால் அவற்றை வைத்து பின்னவீனத்துவம் பற்றிய நேரடியான முடிவுக்கு வந்துவிடுவது விமர்சகருக்கு ஏற்புடையதல்ல.

படைப்பிலக்கியமும் விமர்சனங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை.  ஈழத்து இலக்கியம் பற்றிய உரையாடல்களின்போதுஇந்தப் பிரக்ஞையுடன் எழுத்துச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் அரிதாக இருப்பதும் அப்படிஇருப்பவர்களும் தமது கருத்துகளை வெளிப்படுத்துவதில் தயக்கங்காட்டுவதையும் அறியக்கூடியதாகஇருக்கின்றது,  அப்படியானசூழலில் தொடர்ச்சியாக நூல்கள் பற்றிய விமர்சனங்களும் உரையாடல்களும் நிகழ்வதும் அவைபரவலாக்கப்படுவதும் முக்கியமானதாகும்.  செல்வமனோகரனின் சொற்களால் அமையும்உலகு அந்தவகையில் முக்கியமானதாகும்.  இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துவிமர்சனங்களும் முழுமையானவை என்று சொல்லமுடியாவிட்டாலும் அவை போலித்தனமில்லாதவையாக, உரையாடலைத்தொடர்வதற்கான வெளியைத் தருவனவாக இருக்கின்றன. இந்நூலின்முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல தனது ஏனைய உரைக்குறிப்புகளையும் செல்வமனோகரன்தொகுக்கவேண்டியது அவசியமாகும்.   

குறிப்பு: இக்கட்டுரை கலைமுகம் – 66வது இதழில் (ஏப்பிரல் – ஜூன் 2018) வெளியானது.  இந்தப் பதிவில் பாவிக்கப்பட்டுள்ள செல்வமனோகரனின் புகைப்படம் வசீகரன் குலசிங்கத்தால் முகநூலில் பகிரப்பட்ட புகைப்படத்தில் இருந்து பெறப்பட்டது.

அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்

Aramutrukaiமயன் காந்தன் எழுதி இயக்கிய அறமுற்றுகை என்கிற குறும்படத்தினை சென்ற டிசம்பர் மத்தியில், அந்தக் குறும்படத்தின் இணைத் தயாரிப்பாளர்களான Master screen Jaffna தமது உத்தியோக பூர்வமான யூ ட்யூப் தளத்தில் பதிவேற்றியபோதே பார்த்திருந்தேன்.  ஈழத்துத் திரைக்கலைஞர்களில் எனது விருப்பத்துக்குரியவரான மதி சுதா நடித்திருந்த குறும்படம் என்பதனை முகநூல் ஊடாகத் தெரிந்துகொண்டதால் இந்தக் குறும்படத்தினை ஆவலுடன் பார்த்தேன் என்றே சொல்லவேண்டும்.

குறிப்பாக மதி சுதா, ஈழத்துத் திரைப்படங்கள் என்பதை பிரக்ஞையுடன் அணுகி அதில் தொடர்ந்து ஈடுபடுபவர்.  தான் இயக்கிய, நடித்த படங்களுக்கு அப்பால், பிறரது படங்களிலும் தொடர்ந்து பங்களித்திருப்பதுடன் ஈழத்துத் திரைப்படம் பற்றித் தொடர்ச்சியாகப் பேசியும் எழுதியும் வந்தும் இருக்கின்றார்.  அவரது திரைப்படங்களில் ஈழத்தில் இருக்கின்ற சமகாலப் பிரச்சனைகளைப் பேசுபொருளாக்கியதும் அவற்றைக் கலைத்துவத்துடன் வெளிப்படுத்தியது முக்கியமான அம்சங்கள் என்று குறிப்பாகச் சொல்லமுடியும்.  மதி சுதா இயக்கிய தழும்பு, மிச்சக்காசு போன்றவற்றினை இதற்கு சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.  Continue reading “அறமுற்றுகை குறும்படமும் ஏமாற்றத்தின் சுவடுகளும்”

கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…

kalainjarகலைஞர் எழுதிய வசனங்களில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் ராஜாராணி திரைப்படத்தில் அவர் எழுதி இடம்பெற்ற ”காவேரி தந்த தமிழகத்துப் புதுமணலில் கரையமைத்து சேர சோழ பாண்டி மன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போரிட்டுக்கொண்டிருந்த காலமது…” என்று தொடங்குகின்ற வசனமாகும். Continue reading “கலைஞர் என்பது ஒரு சொல்லல்ல…”