கதாகாலம்: மகாபாரத மறுவாசிப்பு

 

கதாகாலம்அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே.  எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரசகதைகளும் தீனியிட்டு வளர்த்துவந்தன.   அதே நேரம் எமக்குப் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்களான சண்முகராஜாவும், கோபியும் கூட வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள்.   இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன், பாண்டிமாதேவி, பார்த்திபன் கனவு என்று வாசித்து தள்ளியிருக்கின்றேன்.   எல்லா விதமான பொழுது போக்குகளும் தடுக்கப்பட்டிருந்த அந்த காலத்தில் சாரத்தை, அல்லது போர்வையை தோளில் கட்டியபடி, மரக் கொப்புகளை வெட்டிச் செய்த வில்லும், அம்பும், வாளுமாக கையிலேந்தியபடி வீட்டுப் பின் வளவுகளில் நானும் சகோதரர்களும் அலைந்திருக்கின்றோம்.  வரலாற்று நாயகர்களையும், அவர் வீரப் பிரதாபங்களையும் பேசிப் பேசியே இறுமாந்திருந்த அந்த நாட்களின் பசுமை இப்போதும் அடிமனதில் இருக்கின்றது. Continue reading “கதாகாலம்: மகாபாரத மறுவாசிப்பு”

தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை

kanavuchchiraiஈழத்துப் படைப்பாளிகளில் மிக நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் அரிது.  மிக அருமையான படைப்பிலக்கியங்களை ஆக்கிய பலர் இள வயதிலேயே மரணித்துள்ளார்கள்.  இன்னும் பலர் மிகச் சில படைப்புகளுடன் தம் எழுத்துகளை மட்டுப்படுத்திக்கொண்டுவிட்டார்கள்.  இந்த நிலையில், நீண்டகாலமாகவும், தொடர்ச்சியாகவும் எழுதிக்கொண்டிருக்கின்ற காத்திரமான படைப்பாளிகளுள் ஒருவர் தேவகாந்தன்.

“எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று மின்னம்பலத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தேவகாந்தன் குறிப்பிட்டிருக்கின்றார்.  தனது எழுத்துலகப் பிரவேசம் குறித்த கேள்விக்கு “எனது தொடக்கம் புதுமைப்பித்தன் எழுத்துக்களோடேயே ஆரம்பித்தது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். கலித்தொகைக் காட்சிகள் போன்ற இலக்கியக் கட்டுரைகள் எழுதிவந்த என்னை இத்தகு நவீன இலக்கிய வாசிப்பும், பத்திரிகைத் துறைப் பிரவேசமுமே எழுத்தாளன் ஆக்கிற்று என்றால் தப்பில்லை” என்று பதிலளிக்கின்றார் தேவகாந்தன்.  Continue reading “தேவகாந்தனின் கனவுச்சிறை : அறிமுக உரை”

மகாபாரதக் கதையின் அரசியல் என்ன?

மகாபாரதக் கதையின் அரசியல் என்ன என்கிற கேள்வியொன்றினை அண்மையில் முகநூலில் மீராபாரதி அவர்கள் எழுப்பி இருந்தார்.  மகாபாரதம் சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த காவியம்.  இராமாயணத்தைவிடவும் கூட.  அதிலும் குறிப்பாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்த 1990 – 96 வரையான காலப்பகுதியில் அனேகமான ஆலயங்களில் திருவிழாக்காலங்களில் கம்பராமாயண சொற்பொழிவு தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தது.  பெரும்பாலும் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவர்களாலும், சில தனிப்பட்டவர்களாலும் இச்சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன.  ஆயினும், மகாபாரதம் போல இராமாயணம் ஒருபோதும் நெருக்கமானதாக இருந்ததில்லை.

 

மகாபாரதம் சொல்லும் அரசியல் அல்லது நீதி என்ன என்று நானும் பலதடவைகள் யோசித்து இருக்கின்றேன்.  எனது வாசிப்பில், மகாபாரதம் பொது அறத்தை முன்னிறுத்தும் நூல் அல்ல.  அது ஆள்வோருக்கான அறத்தை / “உயர் குலத்துக்கான” (Aristocrat) அறத்தையும், அந்த அறம் நிலைநாட்டப்படுவதையுமே தன் பிரதான கருத்தாகக் கொண்டிருப்பது.  பொதுதர்மம் ஒன்றினை நிலைநாட்டுவதே ஆள்வோரின் கடமை என்றும் அப்படிக் காப்பதற்காக ஆள்வோருக்கு பொது தர்மத்திலிருந்து மகாபாரதத்தில் “சில விலக்குகளும்” வழங்கப்படுகின்றன.  ஆள்வோரின் அறமும் மக்களின் அறமும் வெவ்வேறு என்பது திருத்தமாகக் காட்டப்படுகின்றது.  ஆள்வோரைக் காப்பதற்காக சாதாரண மக்கள் பலியிடப்படுவதைக் கூட நியாயம் என்று வலியுறுத்துகின்றது.  இதை ஒத்த போக்கினை கிட்டத்தட்ட மகாபாரதம் “வியாசரால் எழுதப்பட்டதாகக்” கூறப்படும் கி.மு நான்காம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த கிரேக்க சிந்தனையாளர்கள் / தத்துவஆசிரியர்களிடமும் காணலாம்.  குறிப்பாக அரிஸ்ரோட்டில் “அறம்” குறித்து எழுதும்போது ஆள்வோருக்கான அறமாகக் கூறும் கருத்துக்களில் இதே சாரத்தை அவதானிக்கலாம்.

 

இன்றைய காலப்பகுதியில் வைத்து மகாபாரதத்தினை மதிப்பிடுவதும், “மனித உரிமைகள்” என்கிற பரந்த அடிப்படையில் மகாபாரதத்தை மதிப்பிடுவதும் முறையாக மாட்டா.  ஒரு இலக்கியமாக, காவியமாக மகாபாரதத்தை அது நிகழ்ந்ததாகக் கூறப்படும் காலப்பகுதியுடன் இணைத்துப் பார்ப்பதே பொருத்தமானதாகும்.  குறிப்பாக காந்தாரி தன் கண்களைத் திருமணம் ஆனதிலிருந்து கட்டிக்கொண்டாள் என்பதை ஆணாதிக்க, பெண்ணிய பிரச்சனையாக அணுகுவது முறையானதல்ல.  அவள் கொண்ட காதலின் வெளிப்பாடாக அவளே அம்முடிவை எடுத்திருக்கவும் கூடும் அல்லவா?  (அதே நேரம் காந்தாரி தான் கண்தெரியாத திருதராஷ்டிரனைத்தான் கல்யாணம் செய்யப்போகின்றேன் என்பது தெரியாமல் பீஷ்மக் கனவுகளுடன் இருந்தவள்  என்றும், அதற்கான எதிர்ப்பாகத்தான் தன் கண்களை மறைத்து துணிகட்டி மணமேடை வந்தாள் என்றும் தன் கதாகாலம் நூலில் எழுதியிருக்கின்றார் தேவகாந்தன்.  “இது பற்றிக் கேட்டபோது திருதராஷ்டிரன் சாம்பிப்போனான்.  அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான்.  ஆனால் சபையோ அவளின் பதிபக்தியாய் அதைக் கண்டு மெய் மறந்திருந்தது – பக்கம் 21).

 

அதே நேரம், மகாபாரதத்தை புனித நூலாக, போதனையாக முன்னிறுத்தி, இந்துத்துவப் பிரசாரம் செய்யப்படும்போக்கு சற்று மேலோங்கிவருவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  குறிப்பாக அண்மைக்காலத்தில் இரண்டு முக்கிய தொலைக்காட்சிகளில் தொடராகவும், ஜெயமோகன் அவர்களின் இணையத்தளத்தில் நாளொன்றுக்கு ஒரு அத்தியாயமாகவும் எழுதப்படுவதையும், இந்திய மைய அரசு மத அடிப்படைவாத பாஜகவின் வசம் வந்திருப்பதையும் எந்தச் சந்தேகமும் இல்லாமல் பார்க்கமுடியாமல் இருக்கின்றது.  ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கூட மக்களால் இந்தத் தொலைக்காட்சித் தொடர்கள் அதிகம் பார்க்கப்படுவதும் ஒரு விதமான கலாசாரப் படையெடுப்பே.

 

கதாகாலம் என்கிற மகாபாரதத்தின் நல்லதோர் மறுவாசிப்பினை எழுதிய எழுத்தாளர் தேவகாந்தனுடன் இந்த கருத்துக்களைக் குறித்துப் பேசியபோது அவர், வியாச பாரதத்திலேயே அறம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்டு கூறப்படுகின்றது.  ஆனால் கதைசொல்லிகளால் சொல்லப்பட்டுவரும் பாரதக்கதைகளில் இந்த “ஒழுங்குபடுத்தப்பட்ட அறம்” என்பது இல்லை என்று கூறினார்.  மகாபாரதத்தில் மிகவும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட கீதையில் தான் இந்த அறம் நேரடியாக போதிக்கப்படுகின்றது.  ஒரு விதத்தில், பாரதம் என்கிற வழங்கப்பட்ட கதையினை “இந்துத்துவத்திற்கு” ஆதரவு தரும் பிரதான நூல்களின் ஒன்றான மாற்றியது அதில் செருகப்பட்ட கீதையே.  இன்று வரை கூத்து போன்ற மக்கள் கலைவடிவின் பாடு பொருளாகவும், அண்மைக்காலம் வரை சுருட்டுச் சுற்றுதல் முதலிய சிறு தொழில்கள் நடைபெறும் இடங்களில் வாசிக்கப்பட்டு வந்ததுமாக இருப்பது பாரதமே.  இராமாயணம் போல பாரதம் மக்களை விட்டு விலகி நின்றதல்ல.  அது போலவே மகாபாரதத்தின் கதை மாந்தரும்.  கீதையைத் தவிர, கிருஷ்ணன் பாரதக்கதையில் வேறெங்கும் அவதாரமாவதில்லை.

 

 

 

 

# Aristocrat என்பது அனேகம் உயர்குலம் என்றே பொருள்படும் என்றாலும், இங்கே அதை ஆள்வோர் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளேன்.

 

# தேவகாந்தனின் கதாகாலம் நூல்பற்றி முன்னர் நான் எழுதிய பதிவு

https://arunmozhivarman.com/2009/06/29/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

 

அதே கட்டுரையின் இரண்டாம் பகுதி

 

https://arunmozhivarman.com/2009/07/08/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE/

 

 

# மீராபாரதியின் முகநூலில் நடைபெற்றா உரையாடல்

(<div id=”fb-root”></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_US/all.js#xfbml=1″; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));</script>
<div class=”fb-post” data-href=”https://www.facebook.com/praknjai/posts/10152153793302362&#8243; data-width=”466″><div class=”fb-xfbml-parse-ignore”><a href=”https://www.facebook.com/praknjai/posts/10152153793302362″>Post</a&gt; by <a href=”https://www.facebook.com/praknjai”>மீராபாரதி பிரக்ஞை</a>.</div></div>)

தற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்

முன்பொரு முறை அ. மார்க்ஸ் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில்  “ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம்” என்று குறிப்பிடிருந்தேன்.  துரதிஸ்டவசமாக இதே மேற்கோளை எனக்கு அதிகம் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனுடனும் இணைத்துப் பார்க்கவேண்டிய நிலையை அடைந்துள்ளேன்.
 

கனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன் பக்கங்கள் என்கிற பெயரில் பத்தி ஒன்றினை தேவகாந்தன் எழுதி வருகின்றார்.  அதில் இரண்டாவது கட்டுரையாக அவர் எழுதிய கட்டுரை பற்றிய சில எதிர்வினைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.  மேற்படி கட்டுரையை அவர் தனது வலைப்பக்கத்திலும் (http://devakanthan.blogspot.com/2010_12_01_archive.html) பதிவு செய்திருக்கிறார்,  எனவே இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க முன்னர் அவர் எழுதிய கட்டுரையை மேற்படி இணைப்பில் சென்று வாசிப்பது புரிதலுக்கு இலகுவாக இருக்குமென்று நம்புகின்றேன்.  தேவகாந்தனின் கட்டுரையை வெளியிட்டிருந்த தாய்வீடு பத்திரிகை இந்த எதிர்வினையையும் வெளியிடுவதே அதிகம் பொருத்தமானது என்றாலும், அவ்வாறு வெளிவராதவிடத்து குறைந்த பட்சம் எனது வலைப்பதிவுகளிலேனும் இதற்கான எதிர்வினையை பதிவு செய்யவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்.
 

தற்பாலினர் என்ற விடயத்தில் உரையாடல் ஒன்றுக்கான எல்லா வாசல்களையும் மூடி வைத்து விட்டு ஒற்றைப்படையான தீர்ப்பொன்றை வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை.    அதே நேரம் தற்பாலினர் சார்ந்த விடயங்கள் போன்ற ஒருவரது பாலியல் விழைவுகள் சார்ந்த தேர்வுகள் அவரது அடிப்படை உரிமை சார்ந்தே கருதப்படவேண்டியன என்பதே எனது நிலைப்பாடு.  அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார், தற்பால் விழைவாளர்கள் தமது பாலியல் தேவைகளுக்காக பிறரைக் கட்டாயப்படுத்தியதையும், துஷ்பிரயோகம் செய்ததையும் கண்டதாலேயே தான் தற்பால் விழைவோரை எதிர்க்கத் தொடங்கியதாக.  மிக மிகத் தவறான நிலைப்பாடு இது.  இதே அடிப்படையில் பார்த்தால் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்கள் மிக அதிகம் என்பதை அனேகம் பேர் அறிந்தே இருப்போம்.  அவற்றில் பெரும்பாலானவை ஆண்களாலேயே செய்யப்படுகின்றன.  ஒருவர் இதை முன்வைத்து நான் எதிப்பால் விழைவோரை எல்லாம் வெறுக்கிறேன் என்று சொன்னால் அது அவரது புரிதலின் குறைபாடா அல்லது எதிப்பால் விழைவோரின் தவறா?.  பாலியல் துஷ்பிரயோகங்களை முன் வைத்து ஒரு சாராரின் பாலியல் விழைவையும் கூடவே அவர்களையும் வெறுப்பது / நிராகரிப்பது என்பது தவறான முன்னுதாரனமே.  கட்டுரையில் ஓரிடத்தில் தேவகாந்தன் கூறுகிறார்,

“இவர்களில் சிலவகையானவர்களுடன் எனக்கு பல்வேறு தருணங்களில் பழகுவதற்கான வாய்ப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.  இவர்களது வாழ்வு நிலையின் நேரடித் தரிசனம் என்னை அதிரவே வைத்திருக்கின்றது”

என்று.  தேவகாந்தன் நேரடித் தரிசனம் என்று எதனை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.  அதையும், அவை எவ்வாறு தற்பாலினரை வெறுப்பதற்குக் காரணமாயின என்பதையும் தேவகாந்தன் விளக்கமாக எழுதவேண்டும்.  மூன்றாம் பாலினர்களுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்களும் முன்னர் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்த மூன்றாம் பாலினர் பிச்சை கேட்கும்போது செய்யும் வற்புறுத்தல்களையும், அவ்வாறு பணம் கொடுக்கப்படாதவிடத்து கேவலமான முறையில் திட்டுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாற்றுகளையும் முன்வைப்பது வழக்கம்.  ஆனால் இவற்றுக்கான அடிப்படையைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.  சமூக அளவில் எல்லாவிதமான அங்கீகாரங்களும் மறுக்கப்பட்டிருந்த இந்தியச் சூழலில் (இது போன்ற குற்றச்சாற்றுகள் இந்தியாவை ஆதாரமாக வைத்தே முன்வைக்கப்பட்டன)  உயிர்வாழ்வதற்கான தேவையே அவர்களின் இது போன்ற நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருந்திருக்கின்றன.  மூன்றாம் பாலினரின்வாழ்க்கை நிலைகளைப் பேசுகின்ற ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல் –வாழ்வியல்”, லிவிங்ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையான “நான் சரவணன் வித்யா” போன்ற புத்தகங்கள் இந்தியச் சூழ்நிலையில் மூன்றாம் பாலினர் உயிர் வாழவே எதிர் கொள்ளக் கூடிய சிக்கல்களைப் பேசுகின்றன.  எனவே மூன்றாம் பாலினர்கள் வாழ்வதற்கான எல்லா உரிமைகளையும் தனக்கிருக்கின்ற பெரும்பான்மை என்கிற பலத்தால் மறைத்தும் தடுத்தும் வைத்துள்ள  சமூகம் மீது எமது கோபத்தைக் காட்டாமல் மூன்றாம் பாலினர் மீது எமது வெறுப்பைக் காட்டுவது எப்படிப் பொறுத்தமற்றதோ அதை ஒத்ததே தற்பாலினர்களின் அடிப்படை உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல், அவர்களைத் தொடர்ந்து கேலிக்கும், அவதூறுக்கும் ஆளாக்கிவரும் பெரும்பான்மை சமூகத்துக்கு தற்பாலினர் பற்றிய புரிதல்களையும், அவர்களுக்கான எல்லா நியாயங்களையும் புரியவைக்காமல் / அப்படிச் செய்வதற்கான முயற்சிகள் எதையும் எடுக்காமல் தற்பாலினர் மீதான வெறுப்பைக் கக்குவதும்.  இந்த அடிப்படையில் தேவகாந்தன் கட்டுரையில் குறிப்பிடுகின்ற

“…..அதனால் விபசாரர்கள், குற்றவாளிகள், அரவாணிகள் போல தற்பால் புணர்ச்சியாளர்ளையும் எளிதில் என்னால் வரவேற்று விட முடியாதிருக்கின்றது.  அது ஒரு தனி மனித பிரச்சனையே எனினும்  அதையும் மீறி அது ஒரு தனி மனித வக்கிர நிலையை அடைந்து வருவதால், இது சமூகப் பிரச்சனையும் தான் ஆகின்றது என்பதே என் திடமான கருத்து.”

என்னளவில் மேலே சொன்ன கருத்துக்களை துளியேனும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  தேவகாந்தனுக்கு அவரது கருத்துக்களை வெளியிடுவதற்கான எல்லா உரிமைகளும் இருக்கின்றது என்பதில் நான் குறுக்கிடவில்லை, ஆனால் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளையும், கருத்தை வெளியிடுகிறேன் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பைத் தூண்டும் வார்த்தைகளையும் வெளியிடுவது எந்த விதத்திலும் ஏற்புடையதன்று.  தவிர கட்டுரையில் “அதையும் மீறி அது ஒரு தனி மனித வக்கிர நிலையை அடைந்து வருவதால்” என்று கூறுகின்ற கட்டுரையாளர் அவ்விதம் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிடாமல், அதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.
 

அது போலவே கட்டுரையில் தற்பாலினர் என்பதற்குப் “தன் பால் புணர்ச்சியாளர்” என்கிற பதமே பிரயோகிக்கப்படுகின்றது.  பாலியல் விழைவுகள் குறித்த சரியான தமிழ்ச் சொற்கள் இல்லையென்பது உண்மையே.  Friends Against Homophobia என்கிற பெயரில் நாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்திலும் தமிழில் பாவனையில் இருக்கின்ற பாலியல் தேர்வுகள் குறித்த சொற்களுக்காக பற்றாக்குறை பற்றியே பலராலும் பேசப்பட்டது.  சிநேகிதன் அமைப்பைச் சார்ந்த டன்ஸ்ரனுடன் பேசியபோது அவரும் இது பற்றித் தெரிவித்ததாக நண்பர்களூடாக அறிந்திருக்கிறேன்.  ஆனால், என்னதான் சொற்கள் இல்லையென்றாலும் சில சொற்களைப் பிரயோகிப்பதைத்  தவிர்ப்பதே ஆரோக்கியமானது.  தன் பால் புணர்ச்சியாளர்கள் என்று சொல்கின்ற போது அந்த உறவுகளை அவர்கள் புணர்ச்சிக்காகத் தேர்ந்தெடுக்கின்ற பாலினர் சார்ந்து மாத்திரமே பிரித்து விடுவதாகா ஆகிவிடாதா?  ஒரு உதாரணத்துக்கு எதிர்ப்பால் விழைவோர்களை “எதிர்ப்பால் புணர்ச்சியாளர்” என்று அழைத்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்.  இந்த எதிர்வினையில் நான் உபயோகித்த “எதிர்ப்பால் விழைவோர்” என்ற அடையாளப்படுத்தலிலும் கூட அதற்கேயுரிய குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.  தவிர எனக்கு எந்தவிதமான அடையாளப்படுத்தல்களிலும் உடன்பாடில்லை.  (அடையாளப்படுத்தல்களின் அரசியல் பற்றி இன்னும் ஆழமாக வாசிக்காமல் அது பற்றிப் பெரிதாகப் பேசவேண்டாமென்று நினைக்கின்றேன்.)  ஆனால் “எதிப்பால் புணர்ச்சியாளர்கள்” என்று சொல்லும்போது அவர்களின் உறவு நிலையை முழுக்க முழுக்கப் புணர்ச்சியுடனேயே சம்பந்தப்படுத்திப் பார்ப்பதாகிவிடுகின்றது அல்லவா.  2009ல் வெளியாகி இருந்த கோவா என்கிற தமிழ்த் திரைப்படமே தமிழ்ச்சூழலில் தற்பால் விழைவோரைப் பற்றி அதிகம் சரியாகக் காண்பித்த திரைப்படமாக இருக்கின்றது.  சிநேகிதம் அமைப்பபச் சார்ந்த டன்ஸ்ரன், சிவா, விஜய் ஆகியோருடன் கறுப்பி செய்திருந்த நேர்காணலிலும் (இணைப்பு ) இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  எனவே இனிவரும் காலங்களிலாவது நாம் ஓரினச் சேர்க்கையாளர், தன் பால் புணர்ச்சியாளர் போன்ற சொற்களைப் பாவிப்பதை பிரக்ஞை பூர்வமாகவே தவிர்க்கவேண்டும்.
 

தவிர கட்டுரையில் இன்னோர் இடத்தில் தேவகாந்தன் குறிப்பிடுகிறார்

“தற்பால் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவது கனடா.  அது நல்லது.  அந்தளவுதான் அந்த விவகாரத்தில்.  சமூக அக்கறை அதை எதிர்க்கிற அளவு செல்ல வேண்டியதில்லை.  அதை தனி மனிதர்களின் விருப்புச் சார்ந்த ஒரு விஷயம் மட்டுமாக எடுத்துக் கொண்டு ஒதுக்கி வைப்பதுதான் விவேகம்.”

இந்தக் கூற்று முழுக்க முழுக்க ஆட்சேபத்துக்குரியது.  முதலில் கனடா தற்பால் திருமணத்தை அங்கீகரித்த நாடுகளில் இரண்டாவது மட்டுமே என்பதாலும், நிறைய உலக நாடுகளில் அது அங்கீகரிக்கப்படாத ஒன்றாயும், சில நாடுகளில் சட்டவிரோதமாயும் இருக்கின்றது என்பதாலும் நாம் தற்பால் விழைவோரின் திருமணம் செய்யும் மற்றும் இதர உரிமைகளையும் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது.  கனடாவையும் தற்பால் திருமணங்களை அங்கீகரித்த பிற நாடுகளையும் (http://en.wikipedia.org/wiki/Same-sex_marriage ) முன்னுதாரணமாய்க் கொண்டு பிற நாடுகளிலும் இது போன்ற உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கவேண்டுமே தவிர பல நாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி இவர்களை ஒதுக்குவது முறை அன்று.  சவூதி அரபியாவில் இன்றுவரை பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி கிடையாது.  எத்தனையோ நாடுகளில் பெண்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஓட்டுரிமையும் கிடையாது.  கட்டுரையில் தேவகாந்தன் தான் ஏற்றுக்கொள்வோராய்க் குறிப்பிட்டிருக்கின்ற மூன்றாம் பாலினர் கூட பெரும்பான்மையான நாடுகளில் இன்னமும் முழுக்க முழுக்க அங்கீரிக்கப்பட்டவர்கள் அல்ல.  எனவே உலக நாடுகளால் அங்கீகாரம் கிடைகின்ற மட்டத்தையே அளவு கோலாக்கி எம் கணிப்புகளை முன்னெடுப்பது முறையானதன்று.
 

அது போலவே கட்டுரையின் நிறைவுப் பகுதியில் தேவகாந்தன் குறிப்பிடுகின்ற கருத்துக்களும் எந்த விதத்திலும் ஏற்புடையதன்று.

“அது விபச்சாரம் போல மிகப் புராதனமானது.  சுயவின்பத் திருப்திப்படுத்தல் போல உயிரின இயல்பானது.  ஆனாலும் விபச்சாரத்தில் ஒரு சமூக நீதியின் கூறு ஒட்டிக் கொண்டிருக்கும்.  சுயவின்பதாரியிடம் தேக, மன அடக்குதல்களின் விடுபடுதல் என்ற முத்திரை இருக்கும்.  தன் பாற் புணர்ச்சியாளரிடத்தில் மனோவிகாரத்தின் கூறு மட்டும் காணக் கிடைக்கும்.
வெற்றிலை, புகையிலை, கள்ளு வரைக்கும் விகல்பம், கஞ்சாவும் அபினும் இடைநிலை, மறுப்பதற்கும் ஒத்துக்கொள்வதற்குமான நிலை, அது போல கொக்ஹேயினும், ஹெரோயினும் கருதப்படுவதில்லை”

என்கிற இந்தக் கருத்து ஒரு சாராரின் வாழ்க்கைத் தேர்வுகளை, பாலியல் தேர்வுகளை சர்வ சாதாரணமாக புறக்கணித்துத் தீர்ப்பெழுதி நகர்கின்றது.  கட்டுரையின் இறுதி வசனமாக “இதற்கு மேலே இச்சைகளின் கடும்கூத்தை, அதை இச்சிப்பதற்கான முயற்சிகளை வக்கரித்ததாய் நிராகரிக்க ஒரு பொது ஜனத்துக்கு நிராகரிக்க எப்போதும் உரிமை உண்டு” என்கிறார்.  தாம் சரியென்று கருதுவதை வெளியிடுகின்ற உரிமை பொது ஜனத்துக்கு இருக்கின்றபோது அது இன்னொரு சாராரின் இருப்பையே கேலி பேசுவதாகவோ அல்லது இருப்பையோ நிராகரிப்பதாயோ இருந்துவிடக்கூடாது என்பதும் முக்கியமானது.  அந்த வகையில் நான் அதிகம் மதிக்கின்ற எழுத்தாளர்களில் ஒருவரான தேவகாந்தனின் இந்தக் கட்டுரை மிகப் பெரிய ஏமாற்றமே. விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்

Devakanthanவிதி என்றால் விதிக்கப்பட்டது என்று எமக்கும் பத்தாம் ஆண்டில் படிப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதே பத்தாம் ஆண்டில் தான் ‘நாடென்ப நாடா வளத்த, நாடல்ல நாட வளம் தரும் நாடு’ என்பதும் படிப்பிக்கப்பட்டிருந்தது.  ஆனால் தேவகாந்தன் தனது விதி நாவலில், நாடியும் வளம் தந்து விடாத நாடொன்றில் பிறந்து வளர்ந்தவர்களின் கதையைச் சொல்லுவதன் மூலம் புதிய விதி பற்றிச் சொல்லுகின்றார்.

ஒரு காலத்தில கடவுளால படைக்கப்பட்டது விதி என்ற ஒரு கருத்து இருந்தது.  பிறகு ஒவ்வொருவரும் தாங்கள் தாங்கள் செய்கிற செயல்களின் மூலம் தங்கள் விதியைத் தீர்மாணிக்கிறதான ஒரு கருத்து இருந்தது …….  ஆனால் புதிய விதியோ இந்தச் சமுதாயத்தின் நிலைமை, அமைப்பு, அதன் தத்துவம், நடைமுறை, மரபு போன்றவற்றின் மூலமாக வருவது” (பக்கம் 300)

என்று இந்த நாவலில் வருகின்றது.  இதில் கடவுள் அமைத்த விதி தவிர  மற்றைய இரண்டு விதிகள் பற்றிய கருத்துக்களை இன்னும் செறிவாகவும் ஆழமாகவும் பார்க்கப்படும் போது சார்த்தர் – ஃபூக்கோ சொன்ன கருத்துக்களை வந்தடைகின்றன.  இந்தக் கதை நடக்கின்ற காலப்பகுதி 80களின் ஆரம்பமாக இருக்கின்றது.  இந்தக் காலப்பகுதியே சார்த்தர், பூக்கோ பற்றிய கருத்துக்கள் சற்றுப் பிரபலமாக எம்மவர்களிடையே பேசப்பட்ட  காலப்பகுதியாகவும் இருக்கின்றது. இதுதான் தேவகாந்தனின் உத்தி.  தனது வாசிப்பை, தனது எழுத்துத் திறனுடன் கலந்து தரும்போது நாவலில் அது புனைவொன்றின் ஊடாக நிறைய உரையாடல்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்கித் தருகின்றது.  இந்த நாவலை கதிர்வேல், தெய்வானையின் கதையாக சொல்லிச் செல்லும்போதே அவர்கள் வைத்திருந்த நம்பிக்கைகளின், வாழ்வு பற்றிய ஆசைகளின், அவர்கள் வாழ்ந்த சமூகத்தின், அவர்கள் வாழ்ந்த காலத்தின் வீழ்ச்சியை எந்தத் திணித்தலும் இல்லாமல், போதிக்கும் தொனியும்  இல்லாமல் சொல்லிச் செல்கின்றார். அதனால், இது எம்மில் பலருக்கு அதிகம் தெரிந்திராத காந்தீயம் குடியிருப்பு பற்றியும், காந்தீயத்தில் இருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் வாழ்க்கை பற்றியும் நல்லதோர் பதிவாகவும் ஆகிவிடுகின்றது.  எனக்கு தெரிந்தவரையில் தமிழ் இலக்கியப் பரப்பில் காந்தீயக் குடியிருப்புகள் பற்றிய ஒரே பதிவும் இதுவே.

ஈழத்தில் இனமுரண்பாடுகள் வெடித்தபோது எல்லாத் தரப்பினராலும் பாதிக்கப்பட்ட, தத்தம் தேவைகளுக்காக மாத்திரமே அரசியல் ரீதியில் உபயோகிக்கப்பட்ட, எல்லாத் தரப்பினராலும் உரிமைகள் நிராகரிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களான மலையகமக்கள் இனப்பிரச்சனையினாலும் வேலை நிமித்தமும் மலையகத்தை விட்டு வெளியேறி “காந்தீயம்” என்ற பெயரில் அரசு சாரா நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்ட குடியேற்றம் ஒன்றில் வசித்துவந்தனர்.  இது வவுனியாவை அண்டிய பிரதேசத்தில் அமைந்திருக்கவேண்டும்.  இந்த நாவலின் பதிப்புரையில் சொல்லப்படுவது போலவே இந்தக் குடியேற்றம் அழிக்கப்பட்டதற்கு அரசியல் ரீதியில் வலுவான காரணங்கள் இருந்திருந்தாலும் அவை இன்றுவரை பேசப்படவில்லை.  மலையகத்தில் இருந்து கலவரத்தால் பாதிக்கப்பட்டு இந்த காந்தீயக் குடியேற்றத்தில் வசித்துவந்தவர்கள் மெல்ல மெல்ல போரினால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் அல்லது எதிர்கொள்ளும் ஒரு  உபாயமாக மெல்ல மெல்ல இந்தியாவை நோக்கிப் போகின்றனர்.  இந்த சூழலை வைத்துப் பின்னப்பட்ட இந்த நாவல் போரினதும் போராட்டத்தினதும் பல்வேறு கூறுகளை தொட்டு அலசுகின்றது.  நாவலை படிப்பவர்களுக்கு வரக்கூடிய வாசிப்பனுபவத்தை விமர்சனம் என்ற பெயரில் தீர்ப்பெழுதி  கூறு செய்யாமல், என் வாசிப்பில் நான் அவதானித்தவற்றைப் பற்றிய கருத்துப் பகிர்தல்களின் தொகுப்பாகவே தொடரலாம் என்று நினைக்கின்றேன்.

கொள்கைக்காக வாழ்தல் என்பது பற்றிய கேள்விகளும் வாதங்களும் இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.  எடுத்த கொள்கை ஒன்றை எல்லாக் காலத்திலும் பின்பற்றுவது எவ்வளவு கடினமோ அது போலவே வாழ்வுடன் ஆடிய பகடையாட்டத்தில் தோற்றுப்போய் கொள்கைகளுடன் சமரசம் செய்யும் ஒருவன் அதன் பின்னர் தான் முன்னர் பழகிய சமுதாயத்தை எதிர்கொள்வதில் உணரும் அவமானமும் எதிர்கொள்ளக் கடினமானதே,  நாட்டை விட்டு வெளியேறி இந்தியா செல்பவர்களை எல்லாம் ஏளனம் செய்ய்ம் கதிர்வேலின் பின்னால் பதுளை – வன்னி – இந்தியா என்று பழிப்புக்காட்டியபடியே துரத்தி வருகின்றது காலம்.  தன் மனைவியிடமே தயக்கத்துடன் தான் இந்தியா செல்வதாக தான் எடுத்த முடிவை கதிர்வேலால் சொல்ல முடிகின்றது.  கதிர்வேலிற்கும், தெய்வானைக்கும் நடக்கும் இந்த உரையாடலை இன்றும் கூட நாட்டை விட்டு புறப்பட முடிவெடுத்தவர்கள் எல்லாருமே பிறந்த நாட்டை விட்டு வெளியேற விரும்பாத தமக்கு நெருக்கமானவர்களுடன் நிகழ்த்திக்கொண்டே இருக்கின்றனர்.

ம்ம் நல்லாத்தான் பேசிற, நான் கொள்கை பேசினப்போ நீ நடைமுறையைப் பற்றி பேசின, நான் நடைமுறையைப் பற்றி பேசிறப்போ நீ கொள்கை பற்றிப் பேசிற” (பக்கம் 86) என்று சொல்லும் போது தம் கொள்கைகளை தாமே துறக்கின்றபோது அது பற்றிக் கேள்வி கேட்டால் இப்பத்திய நடைமுறை இதுவென்றும், காலத்தின் கட்டாயம் இதுவென்றும் சொல்லும் அதிகார வர்க்கத்தின் குரலே மீண்டும் கேட்கின்றது.  கதிர்வேல் தெய்வானையிடம் இந்தியா செல்வது பற்றிய பேச்சினை எடுக்கின்றபோதே ஒரு தகவலாகத்தான் அவளுக்கு அதனை அறியத்தருகின்றானே அன்றி அது பற்றி அவளிடம் கலந்து கதைத்து முடிவெடுப்போம் என்று அவன் துளிகூட எண்ணவில்லை.  இந்தப் பேச்சின் முடிவில் தெய்வானையை சமாதானப் படுத்த நிரந்தரமாகவே விட்டிட்டுப் போகப் போறமா ? காலம் சீர்படுகிற வரைக்கும்தானே?” என்று கதிர்வேல் சமாளித்தது போல எம்மில் பலரும் ஏதோ ஒரு காலப்பகுதியில் சமாளித்துத்தானே இருக்கின்றோம். பிறிதொரு நாட்டில் குடிஉரிமை பெறவே மாட்டோம் என்ற கொள்கையத் தூக்கி அப்படியே லேக் ஒன்றாரியோவில் வீசிவிட்டு கனேடிய தேர்தல்களில் வாக்களிப்பது பற்றி கவலைப்படவும்  கனேடிய அரசியலில் ஒரு கனேடியராக அக்கறை கொள்ளவும் காலம் தானே எம்மைப் படிப்படியாக நகர்த்தி வந்திருக்கின்றது.  தான் எடுத்த இந்த முடிவால் கதிர்வேலுவிற்கு தன் மீதே ஒரு தப்பபிப்பிராயம் இருக்கின்றது. அந்த தப்பபிப்பிராயமே அவனை தான் நாடு விட்டு செல்வதாக எடுத்த முடிவினை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள விடாமல் தடுக்கின்றது.  நாட்டை விட்டு வெளியேறுபவர்களுக்கு அவ்வளவு எதிர்ப்பு காட்டியவன் அவன்.  ஆனால் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஒரு நாட்டில் இருந்து வெளியேறுபவர்களைப் பார்த்து அவர்களை கொள்கையின் பேரால் மறுபடி தூக்கிலேற்றுவதன் பின்னால் எவ்வளவுக்கு நியாயம் இருக்கின்றது என்பதையும் பார்க்கவேண்டியே இருக்கின்றது.

இந்தியாவில் கதிர்வேல் சந்திக்கின்ற திருநீலன் என்பவர் ஒரு உண்மையான பாத்திரமாக இருப்பின் அவர் எழுதிய கட்டுரைகளை படித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசையை கதிர்வேலிற்கும் திருநீலனிற்கும் இடையில் நடக்கின்ற உரையாடல் ஏற்படுத்தி இருக்கின்றது.  தனது தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி, கடத்தல் தொழில்களில் ஈடுபட்டு, படோபமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இருக்கின்ற ஒரு சூழலில் கதிர்வேல் சொல்கிறான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்சும், ஜனநாயக் தொழிலாளர் காங்கிரஸும் தோட்டத் தொழிலாளிகள் நலனுக்காக உழைக்கவில்லை என்பதாலேயே தொழிற்சங்க நடவடிகைகளில் இருந்து தான் ஒதுங்கியதாயும், அதன் பின்னர் வடக்கில் இருந்த இனவாத அரசியலே தான் வடக்கை விட்டு வெளியேற காரணம் என்றும் கூறுகிறான்.  இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் , ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸும் தோட்ட தொழிலாளிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என்பதையும் வடக்கில் அதுவும் நாவலில் பிறிதொரு அத்தியாயத்தில் சொல்லப்படுவது போல யாழ்ப்பாணத்தவர்கள் இனவாதமும், பிரதேசவாதமும் பார்த்தார்கள் என்றும் இன்றுவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் முழுமையாக ஒப்புக் கொள்ளும் அதே நேரம் மார்க்சியமே சர்வரோக நிவாரணி என்பதை இன்றுவரை ஆணித்தரமாக நம்புகின்ற மார்க்ஸியவாதிகள் (அண்மையில் கூட ஒரு லெனினிய மார்க்ஸீயவாதி மார்க்சியமே உலகின் பிரச்சனைகளுக்கெல்லாம் ஒரே தீர்வென்பது விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது என்று நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் அதே ரொரன்றோவிலே திரும்ப திரும்ப மேடையில் பேசியிருந்தார்), கம்யூனிஸ்டுகள் தமது சர்வரோக நிவாரணத்தை அந்தப் பிரதேசங்களில் பாவிக்காமல் வெளியேறுவது மருத்துவர்கள், இந்த பிரதேசத்தில் நோயாளிகள் அதிகம் இருக்கின்றனர் எனவே நான் இந்த ஊரில் வைத்தியம் பார்க்க மாட்டேன் என்று சொல்லி வெளியேறுவதைப் போல ஆகாதா? என்ற சந்தேகமே எழுகின்றது.  ஈழப்போராட்டத்தில் சென்ற ஆண்டில் ஏற்பட்ட பேரழிவுகளின் பின்னர் மார்க்ஸியம், கம்யூனிசம் பற்றிய கதையாடல்களும் பிரச்சாரங்களும் பலமடங்கு அதிகரித்துள்ளன.  மார்க்ஸியமும் தனக்கான சந்தையைப் பார்த்து கடை விரிக்கின்ற முதலாளித்துவ கூறிற்கு பலியாகிவிட்டதோ என்று கவலையாக உள்ளது.  அண்மையில் ஈழத்தில் இருக்கும் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னார் இப்ப இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றால் எல்லாரும் வீட்டில் இருந்து ஆளுக்கொரு விறகுக் கட்டையை எடுத்துக் கொண்டு வீதியில் இறங்கி அரசாங்கத்துக்கு எதிராக போராடவேண்டும் என்று“.  நான் மார்க்ஸியத்தை முற்று முழுதாக நிராகரித்துப் பேசவில்லை, ஆனால் மார்க்ஸியத்தை ஒரு மதம் போல ஆக்கிக்கொண்டு, அதில் எந்த மாற்றத்தையும் சேர்த்துக்கொள்ளவிடாமலும், தாம் வாழும் காலத்துக்கும், தாம் வாழும் இடத்திற்கும் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில், நிலப்பிரபுத்துவ முறை கொடிகட்டிப்பறந்த காலத்தில் எழுதப்பட்ட மார்க்ஸியக் கருத்துக்கள் எவ்வளவு தூரம் பொருந்தும் என்றும் கிஞ்சித்தும் அக்கறைப்படாமல் பேசுபவர்களை நினைக்க பயமாக இருக்கின்றது.     இந்த நாவலில் புரட்சி, பொதுவுடமை, மக்கள் போராட்டம் என்றெல்லாம் பேசுவோரைப் பார்த்து திருநீலன் சொல்லும் கருத்துக்கள் முக்கியமானவை.  எடுத்ததெற்கெல்லாம் இரஸ்யப் புரட்சி, என்றும் பிரெஞ்சுப் புரட்சி என்று கதைக்கத் தொடங்குபவர்களில் பலர் புரட்சிகள் பற்றிய அடிப்படையான புரிதலே இல்லாமல் புரட்சி என்பது ஏதோ ஒரு கணத்தில் தோன்றுவது என்பது  போன்ற பாவனையுடனேயே பேசத் தலைப்படுகின்றனர்.  விதி நாவலில் திருநீலன் இந்த வழக்கத்தை கிண்டல் செய்வதுடன் ஈழத்தில் அப்போது இயங்கிக்கொண்டிருந்த இயக்கங்களின் போதாமை பற்றியும் மெள்ள விமர்சிக்கிறார்.

புரட்சியா? பொதுவுடமையா? மக்கள் போராட்டமா? என்ன தம்பி சொல்கிறீர்? பல இயக்கங்களுக்கு அந்தச் சொல்லுகளைத் தவிர வேறொன்றும் தெரியாதே! …………………. தம்பி புரட்சி எண்டது சும்மா திடீரென்று ஏற்படுற விஷயமில்லை.  இப்ப பாரும், அடுப்புப் புகட்டில் ஒரு மரத்துண்டு இருக்கிறதாய் வைச்சுக் கொள்ளுவம்.  அந்த மரத்துண்டு என்ன மாதிரி வெப்பத்தில வெந்து வெந்து, தன் முழு ஈரப்பதனையும் இழந்து, தண்ட மரமெண்ட உடல் தாதுவையும் இழந்து கருகி, எண்டைக்கோ ஒரு நாள் பொறி பட்டு பக்கென்று நெருப்புப் பிடிச்சு எரியுமோ, அது மாதிரியானதுதான் மக்கள் போராட்டம் – புரட்சி என்பதும்.  வேதனைப்பட்டு வேதனைப்பட்டு, இனி மேல் பொறுக்க ஏலாதெண்ட நிலைமையில் ஏற்படுகிற கொந்தளிப்பு மட்டும்தான் அப்படியொரு புரட்சியாய் இருக்க முடியும்.  அப்பப்ப ஏற்படுகிற அடிதடி, வெட்டுக்குத்து, மானபங்கம் எல்லாம் புரட்சியை ஏற்படுத்தாது. அதுக்காக போன  ஜுலையில  நடந்த கொடுமையை நான் குறைவா மதிப்பிடேல்ல.  எண்டாலும் புரட்சிக்கு – மக்கள் போராட்டத்துக்கு – அது போதாது. காலகாலமான அநீதி, கொடுமை வேணும்.  அந்த உத்தரிப்பில மக்கள் எல்லாரும் இனமத மொழி பேதம் கடந்து அமைப்பு ரீதியாய் ஒண்டுபடவேண்டும்.  அதுக்கு பிறகுதான் புரட்சி ஏற்பட முடியும், வெற்றி பெற முடியும்”

அதே நேரம், எல்லா இன மத மொழி பேதம் கடந்து மக்கள் எல்லாம் ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று  சொல்லும் போது உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்தின் சாயல் கேட்கவே செய்கின்றது.  ஈழத்தின் இன்றைய நிலையை வைத்துப் பார்க்கின்ற எமது தலைமுறையினருக்கு இது போன்ற நம்பிக்கைகள் வருவதற்கான சாத்தியங்கள் பூஜ்ஜியத்துக்கு மிக அருகாகவே இருக்கின்றன.

கற்பு என்ற பெயரில்  மிகைப்படுத்தபட்ட ஒரு சிந்தனையை இன்னமும், இத்தனைகால போராட்ட அனுபவங்களின் பின்னரும் சுமந்து கொண்டிருப்பது தமிழ் சமூகத்தின் அவலங்களில் ஒன்று.  பாலியல் பலாத்காரம் ஒன்றுக்கு உட்படுத்தப்பட்ட தெய்வானையை, தன் பொறுப்பில்லாத்தனமும், கையாகாத்தனமும் ஒன்று கூடிய நேரம் ஒன்றில் கதிர்வேல், அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி கேலி செய்கிறான்.  அண்மையில் வெளியாகிய அங்காடித்தெரு திரைப்படத்தில் வந்த வசனம் போலவே தெய்வானை அப்போதே இறந்துவிடுகிறாள், அதன் பின்னர் அவள் உடல் மட்டுமே உயிர்வாழுகின்றது.  ஆனால் நாவலில் கதிர்வேல் இந்தச் சம்பவமும், அதனால் படிந்த கடக்க முடியாத நினைவுகளுமே தான் தெய்வானை கருவுற்றிருந்தபோது பொறுப்பில்லாமல் திரிந்ததற்கும், அவள் குழந்தை இறந்து பிறந்தபோது மகிழ்ந்ததற்கும், இந்தியா வந்து சேர்ந்ததற்கும், அதிகமாக குடிக்க தொடங்கியதற்கும் காரணம் என்று நியாயப்படுத்துகிறான்.  நாவலில் வரும் பாத்திரம் செய்கின்ற வாதம் இதுவென்றாலும், இது போன்ற நாயக தியாகங்களை அதிகம் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த எம்மில் ஒரு சிலர் அப்பப்பா என்ன தியாகம் என்று உச்சுக் கட்டவும் கூடும்.  தான் எடுக்கும் முடிவுகளிற்கும், தவறுகளிற்கும் பொறுப்பேற்காத அயோக்கியத்தனத்தையே இது வெளிப்படுத்துகின்றது.  துரதிஸ்டவசமாக இந்தக் கதிர்வேல் மாத்திரம் இல்லாமல் எம் தலைமுறையில் நிறையப்பேரும் இது போன்ற நியாயப்படுத்தலின் வழியேதான் பிழைத்துக் கொண்டிருக்கிறோம்.

80களில் கெட்டாலும் ஆண் மக்கள் என்று பாலகுமாரன் ஒரு சிறுகதை எழுதினார்.  அதில், திருமணத்திற்கு புறம்பாக தன்னிலும் வயது மிகக் குறைவான ஒரு இளைஞனுடன் ஒரு பெண் உறவு வைத்திருக்கின்றாள். இது அந்தப் பெண்ணின் கணவனுக்குத் தெரிந்துவிடுகிறது.  முதலில் கோபம் கொள்ளும் கணவன் அவளை அடித்து விடுகின்றான்.  பின்னர் அவளை மன்னித்துவிடுகிறான்.  ஆனால் அவளோ தன் வயற்றில் வளரும் கருவை கலைக்கு முயன்று அதன் தொடர்ச்சியாக இறந்தும்விடுகிறாள்.  கருக்கலைக்க அவள் சொல்லும் காரணம்அந்தப் பையன் கறுப்பு” என்பது.  அவளின் கணவன் அந்தப் பையனின் எதிர்காலம் கருதி அவன் இந்த விடயத்தை மறைத்துவிடுகின்றான். இறுதியில் அவன் மனைவியை நோக்கி இப்படி  சொல்லுவான்,

ஒரு வேளை நல்ல ஆண் மனசுதான் தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் வளருமோ, வெட்டு விழுந்த பின்னும் துளிர்க்குமோ, சகதியில் விழுந்து, புரண்டு  க்ஷணத்தில் தன்னைச் சரியாக்கிக் கொள்ளுமோ,

சியாமளி, அடுத்த ஜென்மத்தில் ஆணாய்ப் பிற, ஆண் பிள்ளை குணத்தோடு பிற

இந்த நாவலில் வரும் கதிர்வேலும் இன்னுமொரு கெட்டாலும் ஆண் மக்கள் சுவாமிநாதனின் வார்ப்பாகவே தெரிகின்றான்.  (இந்த நாவல் வெளிவந்த தொகுப்பிற்கு முன்னுரை எழுதிய கமலஹாசன் இதை நேர்மையாகவே சுட்டிக் காட்டி,

மனைவி தவறு செய்தாள் என்பதற்காக புருஷனை பாராட்டுவது உத்தமமாகாது.  பெண்ணுக்கு உண்டான நடைமுறை நிர்ப்பந்தங்களைப் புறக்கணித்து விட்டு ஆணைத் தட்டிக்கொடுப்பது சரியில்லை.  பாலகுமாரன் ஆணாக இருப்பதால் இது நேர்ந்து விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன்

என்று எழுதி இருந்தார்.  அது போலவே ஜெயகாந்தனும் இது பற்றி கடுமையான கருத்துக்களை தெரிவித்ததாக பாலகுமாரன் அவர் எழுதிய முன்கதைச்சுருக்கத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.)

சென்ற ஆண்டு வெளியான காலம் இதழில் இளங்கோ எழுதிய ஹேமாக்கா என்றொரு கதை வெளியாகி இருந்தது.  பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் திருமணமான பின்னர், அவளது கணவன் இந்திய‌ன் ஆமி உம்ம‌ளை கெடுத்த‌து ப‌ற்றி இதுவ‌ரை ஏன் என்ன‌ட்டை சொல்லேலை என்டு ம‌ட்டுந்தான் கேட்ட‌னான் வேறொன்றுமே கேட்க‌வில்லை. ஒன்டுமே பேசாம‌ல் இருந்த‌வா இப்ப‌டிச் செய்வா என்டு நான் க‌ன‌விலையும் நினைத்துப் பார்க்க‌வில‌லை இந்த நாவலில் கதிர்வேல் தெய்வானையைப் பார்த்து அன்னிக்கு அவங்கள் செய்ததெல்லாத்தையும் அனுபவிச்சியா” என்கிறான்.  எல்லாப் போராட்டங்களிலும் ஆணுக்கு ஏணியையும் பெண்ணுக்கு பாம்பையும் மட்டுமே சமுதாயம் பரிசளித்திருக்கின்றது.

தேவகாந்தனின் கதாகாலம் பற்றி முன்னர் ஒரு பதிவெழுதி இருந்தேன்.  அப்போது நிறையப் பேர் அந்தப் புத்தகத்தை வாசிக்கவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்த போதும் தமக்கு புத்தகம் கிடைக்கவில்லை என்றார்கள்.  இந்த விதி நாவலும் கூட நீண்ட காலமாக விற்பனைக்கில்லாமல் இருந்து இப்போதுதான் புதிய பதிப்பு வெளிவந்திருக்கிறது.  இது போல ஈழத்து எழுத்தாளர்களின் முக்கிய புத்தக்ங்கள் மீண்டும் பதிப்பிக்கப்பட்டு, பரவலாக வாசகர்களை சென்றடையும் ஒரு சூழல் உருவாகவேண்டும்.  இடையில் ஏற்பட்ட சிறிய தேக்கத்தில் இருந்து மீண்டு, புதிய படைப்புகளையும் பதிப்புகளையும் வெளியிடும் வடலி, புதிதாக செயற்ப்ட ஆரம்பித்திருக்கும் இலக்கு (இவர்கள் தொடர்ந்து புத்தகங்களை வெளியிட உள்ளதாக அறிகிறேன்), தொடர்ந்து இயங்கிவரும் காலம் வெளியீடுகள் மற்றும் ஏனைய ஈழத்தமிழரின் புத்தகங்களை வெளியிடும் பதிப்பகங்கள் இந்தப் பணியை செய்யும் என்று நம்புகின்றேன்.


ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இந்த விமர்சன உரையை இப்போது வாசிக்கின்றபோது இதில் மார்க்சியம் பற்றியும் மார்க்சிய வாதிகள் பற்றியதுமான எனது கருத்துகளை இன்னனும் முதிர்ச்சியுடன் முன்வைத்திருக்கவேண்டும் என்று இப்போது உணர்கின்றேன்.  -நவம்பர் 17, 2016

Continue reading “விதிக்கப்பட்ட வாழ்க்கையும் வீழ்ந்து சென்ற நம்பிக்கைகளும் – தேவகாந்தனின் விதி நாவல் பற்றிய சில அனுபவங்கள்”