சட்டநாதன்: தனித்துவமான ஒரு படைப்பாளி

எழுபதுகளின் தொடக்கங்களில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்புகளை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்னர் தொடர்ச்சியாக வாசித்தேன்.  இலக்கியம் / எழுத்துச் செயற்பாட்டின் நோக்கம், அதன் வடிவம், உள்ளடக்கம் என்பன குறித்த பல்வேறு விவாதங்களும், அந்த விவாதங்களின் தெறிப்புகளாக / எதிர்வினைகளாகவும் பல்வேறு படைப்புகள் இந்தக் காலத்தில் வெளிவந்திருந்தன.  அவற்றை வாசிக்கின்றபோது உள்ளடக்கம் சார்ந்தும், சொல்லப்படும் விதம் சார்ந்தும் முக்கியமானதொரு மாற்றம் இந்தக் காலத்தில் நிகழ்ந்திருக்கின்றது என்று உறுதியாகக் கூறமுடிகின்றது.  அறுபதுகளில் ஈழத்தில் இடம்பெற்ற இலக்கியம் பற்றிய விவாதங்களையும் அந்நேரத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கு இலக்கியம் பற்றிய வரையறைகளையும் தொடர்ந்து கலையமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்து, உள்ளடக்கத்திலும் பல்வேறு புதிய கருக்களைப் படைப்புகளூடாகப் பேசிய காலப்பகுதியாக இது அமைகின்றது.  குறிப்பாக தனிமனிதர்களுக்கிடையிலான உறவுகள், அதனால் எழுகின்ற சிக்கல்கள், சமத்துவத்தையும், விடுதலையையும் அவாவி நிற்கின்ற இளைய சமூகத்தினரின் ஊடான சமூகப் பார்வை என்பன இந்தக் காலகட்டங்களில் வெளியான சிறுகதைகளில் காணக்கிடைக்கின்றன.  இந்த வகையான எழுத்துக்களை எழுதியவர்களுள் தனித்துவமான ஒருவர் க. சட்டநாதன்.

க. சட்டநாதன் குறுநாவல், சிறுகதைகள், கவிதைகள் என்று பல்வேறு படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு இருந்தாலும் அவரது அடையாளமாக சிறுகதைகளே அமைகின்றன.  அவரது முதல் சிறுகதையான நாணயம் 1969 இல் வீரகேசரியில் வெளியானது என்று ஜீவநதியில் வெளிவந்த, பரணிதரன் எடுத்திருந்த நேர்காணலில் குறிப்பிடுகின்றார். ஐம்பது ஆண்டுகளாக எழுதிவரும் சட்டநாதனின் எழுத்துகளைப் பார்க்கின்றபோது 1995 வரை அவரது 3 சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன; அவை

  • மாற்றம் (1980)
  • உலா (1992)
  • சட்டநாதன் கதைகள் (1995)

இதற்குப் பின்னர் முக்கூடல், புதியவர்கள், பொழிவு, தஞ்சம், துயரம் தரும் வாழ்வு உட்பட 7 சிறுகதைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரைத் தொகுப்பு ஆகியன வெளியாகியுள்ளன. இக்கட்டுரை 1995 இற்கு முன்னர் வெளியான அவரது முதல் 3 சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்தே எழுதப்பட்டுள்ளது. 

சட்டநாதனின் கதைகள் நுட்பமான மனித உறவுகளும் அவதானங்களும், ஆண் பெண் உறவுகள் – அதில் நிலவும் சுரண்டல்கள், சாதிய ஒடுக்குமுறைகள் – அவற்றின் இறுக்கம், குழந்தைகள் உலகம், குழந்தைகள் குறித்த நுட்பமான அவதானம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு இவற்றை சிக்கனமான, தெளிவான மொழிதலில் வெளிப்படுத்துவனவாக இருக்கின்றன.  பாலியல் உறவுகளையும் அவற்றினூடாகத் தொழிற்படும் சுரண்டல்களையும் இவரது கதைகள் வெளிப்படுத்துவதோடு இவ்வகை எழுத்துகளின் முன்னோடிகளில் ஒருவராகவும் இவரைக் கொள்ளலாம் என்றும் கருதுகின்றேன்.

மாற்றம் என்கிற அவரது முதலாவது தொகுப்பு 1980 இல் வெளிவந்திருந்தது. மாற்றம், அந்தக் கிராமத்தியச் சிறுமி, தாம்பத்தியம், பிச்சைப் பெட்டிகள், இப்படியும் காதல் வரும், உறவுகள் என்கிற ஆறு சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.  அவரது இரண்டாவது தொகுப்பான உலா 1982 இல் வெளிவந்திருந்தது, அதில் தரிசனம், பக்குவம், தளம்பல், அரும்பு, ஒதுக்கம், வித்தியாசமானவர்கள், கவளம், உலா ஆகிய எட்டுக் கதைகள் வெளிவந்திருக்கின்றன. சட்டநாதன் கதைகள் என்கிற இவரது மூன்றாவது தொகுப்பில் அதற்கு முன்னைய தொகுப்புகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுடன் 3 புதிய கதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

“பிச்சைப் பெட்டிகள்” இவற்றில் இருக்கின்ற முக்கியமான கதைகளுள் ஒன்று.  இந்தக் கதையில் வருகின்ற ஈசன் ஒரு வேடிக்கையான மனிதர்.  பழம்பெருமையையும், தற்புகழ்ச்சியையும் வைத்து வாய் வார்த்தைகளால் தன்னை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்.  நாள்தோறும் எம்மைச் சுற்றி இவர் போல பல ஈசன்களை நாமும் கண்டே தான் இருப்போம்.  இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அனேகம் பேருக்கு இவர்களது பொய்மை நன்கு தெரிந்தே தான் இருக்கும்.  ஆனாலும் அவர்கள் ஒரு சுவாரசியத்துக்காக இவர்களை ஏற்றுக்கொண்டவர்களாக இருப்பர்.  அவர்கள் அணிந்துகொண்டிருக்கு அந்த கம்பீரமான முகமூடியைக் களைந்துவிட்டுப் பார்த்தால் அவர்கள் மிகுந்த கழிவிரக்கத்திற்கு உரியவர்களாக இருப்பர்.  தனது செல்வாக்குப் பற்றியும், இதோ மிகப் பிரகாசமான எதிர்காலம் ஒன்று தனக்கு அமையப்போகின்றது என்றும் தொடர்ந்து பேசும் ஈசனுக்கு அவர் கேட்காமலேயே பஸ் ரிக்கெட் முதல், கோப்பி வரை தனது செலவிலேயே வாங்கிக் கொடுத்து உபசரிக்கின்றார் கதை சொல்லி.  ஈசனது பெரிய மனிதத் தோரணையும் வைத்தியர் தாமோதரத்தாற்ர பேரன், சேர் துரை குமாரசாமியின் தம்பி பிள்ளை என்கிற அவரது சமூகப் பின்னணியும் கதைசொல்லி மீது செலுத்தி இருக்கக்கூடிய மறைமுகமான அதிகாரமும் (சமூகச் சலுகையும்) இதற்குக் காரணமாகக்கூடும் என்றும் புரிந்துகொள்ளலாம்.  சாதியம் போன்ற ஒடுக்குமுறைகள் தொழிற்படும் விதங்களைப் பற்றிய உரையாடல்களின்போது பலரும் சாதிய, சமூகப் பின்புலங்கள் ஒருவருக்குத் தெருகின்ற சமூகச் சலுகைகள் என்பது குறித்து நாம் மீளவும் மீளவும் உரையாடவேண்டி இருக்கின்றது. 

இதே கதையில் பஸ்ஸில் ரிக்கெட் எடுக்காமல் பயணித்து டிக்கெட் பரிசோதகர்களால் குற்றப்பணம் செலுத்தும்படி கூறப்படும் கிழவர் ஒருவர் வருகின்றார்.  அனேகமாக ஏழ்மை காரணமாக ரிக்கெட் எடுக்காமல் தவிர்த்திருக்கக் கூடியவராகவே இந்த கிழவர் சித்தரிக்கப்படுகின்றார்.  ஆயினும் அவர் குற்றப்பணம் செலுத்துவதற்காக அந்த பஸ்ஸில் இருக்கின்றவர்களிடம் இரந்து பிச்சை எடுப்பதுவரை கொண்டு செல்லப்படுகின்றார்.  இறுதியில் “அந்தப் பொடிச்சீற்ற தட்டிப் பறிச்சதுக்கு செம்மையாப் பட்டிட்டன் … இது நல்லதுக்குத்தான்” என்ற குற்ற உணர்வுடன் செல்கின்றார் கிழவர்.  ஆனால் எந்தக் குற்ற உணர்வும் ஈசனுக்கு இல்லை.  சர்வசாதாரணமாக அவரால் “தம்பி ஒரு பத்து ரூபாய் தாரும். பிறகு தாறன்” என்று கதைசொல்லியிடம் கேட்க முடிகின்றது.  கிழவரால் அப்படியெல்லாம் கேட்க முடியாது.  அவருக்கு இருப்பது பிச்சை எடுப்பது அல்லது தட்டிப் பறிப்பது என்கிற தெரிவுகள் மாத்திரமே. 

கதையில் வருகின்ற இளம்பெண் பாத்திரமும் முக்கியமானது.  அந்த ஒரு பஸ் சந்திப்பிலேயே ஈசன் அந்தப்பெண்ணுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்குகின்றார்.  பெண்ணும் அதற்கு இடம்கொடுப்பவளாகவே காட்டப்படுகின்றார்.  குற்றப்பணத்துக்காக பஸ்ஸில் இருந்த மற்றவர்களிடம் பணம் இரக்கும் கிழவர் ஈசனும் அந்தப் பெண்ணும் இருந்த இடத்தை அணுகியதும் பெண் தன்னிடமிருந்த சில்லறைகளை அவரிடம் கொடுத்து விட்டு அவசர அவசரமாக பஸ்ஸைவிட்டு இறங்கிவிடுகின்றார்.  அதன் பின்னர் தனது “பொக்கற்றறைப்” பார்க்கின்ற ஈசன் “நாற்பது ரூபாயும் சில்லறையும் இருந்த தனது பேர்சை அவள் அடிச்சிட்டாள்” என்கிறார்.  ஈசன் பொய்மை நிறைந்தவர் என்றும் அவர் சொல்பவற்றை நம்பமுடியாது என்று கதையூடாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் கதைசொல்லியே, தனது பர்ஸை அந்தப் பெண் திருடிவிட்டாள் என்று சொல்வதை அப்படியே நம்பி ஈசனுக்காக இரக்கப்பட்டுக்கொள்ளுகின்றார்.  எத்துவாளித்தனம் நிரம்பிய ஈசனைவிட அறிமுகம் இல்லாத ஆணுடன் நெருக்கமாகி, இழைந்து இழைந்து பேசுகின்ற பெண் மோசமானவளாக இருக்கக்கூடும் என்பதாகத்தானே பொதுப்புத்தி இருக்கின்றது.

மனிதர்கள் அதிகாரம் தமக்குக் கிடைக்கின்ற பட்சத்தில் அதனை எப்படி பிறர் மீது சர்வசாதாரணமாக பிரயோகித்துத் தமது அதிகாரத்தைக் காட்டுகின்றார்கள் என்று பார்ப்பது ஒரு சுவாரசியமான விடயம்.   புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களுக்குத் தெரிந்திருக்க கூடிய நல்லோதோர் உதாரணம், வீடுகள் வாங்குகின்றபோது வீட்டு விற்பனையை இறுதி செய்யும் கடைசி நேரத்தில் வீட்டு அடமானக் கடன் முகவர்கள் (Mortgage Brokers) எப்படி பெரும் அதிகாரம் கொண்டவர்களாகி, அதனை மற்றவர்கள் மீது எவ்விதம் பிரயோகிக்கின்றனர் என்பது.  சமூகத்தில் பெரிதாக எந்த விதமான அதிகாரமும் இருக்கமுடியாத சாதாரணமான நடத்துனரும் ஓட்டுனரும் அந்தப் பேருந்தில் தமது உச்சபட்ச அதிகாரத்தையும் பிரயோகிக்கின்றார்கள்.  மிச்சக்காசினை கேட்ட பயணியிடம் தான் ஏற்கனவே மிச்சக்காசினைக் கொடுத்துவிட்டேன் என்று பொய்யுரைப்பதுடன், அவர் இரண்டாம் தடவை மிச்சக்காசினைக் கேட்டார் என்றும் கூறி அவமானப்படுத்துகின்றார் கொண்டக்டர்.    அதுபோலவே பத்து றாத்தல் செத்தலும், ஐஞ்சாறு பிஞ்சுக் கத்தரிக்காயையும் ஒரு சிறு பையில் எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறும் ஒரு சிறுவியாபாரியிடமும் அந்தப் பையுக்கும் ரிக்கெற் போட்டுப் பணம் அறவிடுகின்றார்.  டிக்கெட் எடுக்காமல் பயணித்த கிழவர் இதர பயணிகளிடம் பணம் சேகரித்த பின்னரும் ஒரு ரூபாய் நாற்பது சதம் குறைவாக இருந்தபோது அவனது வேட்டி மடியைப் பிடித்து பரிசோதகர்கள் இழுக்க அதிலிருந்த வெற்றிலைப்பொட்டலமும் சில்லறைக்காசுகளும் சிதறி விழுகின்றன.  இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கின்ற பஸ் சாரதி கிழவரைப் பார்த்து அடக்கமுடியாமல் குபீரிட்டு விழுந்து விழுந்து சிரிக்கின்றார்.  தன் சக மனிதன் தாழ்வுற்று இருப்பது கண்டு அவனுக்கு எந்த வருத்தமும் இல்லை.  ஆனால் இதே சாரதியும், நடத்துனரும் பேருந்தை விட்டு இறங்கிய பின்னர் மானுடநேயம் மிக்கவர்களாக மாறிவிடுகின்றனர்.  பேருந்தில் இருக்கின்றபோது நகைப்பிற்கிடமாகத் தோன்றிய அதே கிழவர் மீது இரக்கம் கொண்டு அவருக்கு கைச்செலவுக்கு என்று ஐந்து ரூபாய் பணத்தைக் கொடுத்து உதவுகின்றார் சாரதி.  கதைசொல்லியின் மிச்சக்காசைக் கொடுக்காமல் அவரை ஏய்க்க நினைத்த நடத்துனரும் மனம் மாறுகின்றார்.  அவரது மிச்சக்காசினைக் கொடுப்பதோடு தம்பிக்கு ஏதேனும் நெருக்கடியோ என்று கேட்கும் கதைசொல்லியிடம், “நெருக்கடி என்டாலும் இப்படி வேண்டாம் மாஸ்ரர்” என்கிறார்.  எனது வாசிப்பில் மிக முக்கியமானதாக நான் அவதானித்த விடயம் இது.  பேருந்தினை விட்டு இறங்கியபின்னர் அந்தச் சாரதியும், ஓட்டுனரும் கூட சாதாரண மனிதர்கள்.  அப்போது அவர்களால் அந்தக் கிழவரையும், பயணியையும் சகமனிதராக நேசிக்க முடிகின்றது.  ஆனால் அதிகாரம் கையில் இருக்கின்றபோது அது எல்லார்மீதும் அதிகாரத்தைப் பிரயோகிக்க வைக்கின்றது.  இந்த வாழ்வனுபவத்தை மிகுந்த கலையமைதியுடன் இந்தச் சிறுகதையில் பதிவுசெய்துள்ளார் சட்டநாதன்.

“அந்தக் கிராமத்துச் சிறுமி” என்கிற கதை இன்னொரு விதத்தில் முக்கியமானது.  இந்தக் கதையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த சொர்ணம், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சண்முகத்துடன் தலைமறைவாகுவதைத் தொடர்ந்து ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் 28 குடிசைகளைத் தீக்கிரையாக்கி சண்முகத்தின் பெற்றோரையும் அடித்துக் கொல்கின்றனர்.  கோயில் முதலாளி மணியம், பழைய விதானை தர்மலிங்கம் ஆகிய அதிகாரம் கொண்டவர்கள் இதனை முன்னின்று செய்தபோதும் எவரும் காவல்துறையால் தண்டிக்கப்படாமல் தப்பிவிடுகின்றனர்.  சில ஆண்டுகளால் குழந்தை சொர்ணம்மாள் பிறந்தபின்னர் சண்முகமும் சொர்ணமும் ஊர் திரும்பும்போது மீண்டும் வன்முறை வெடிக்கின்றது.  இம்முறை ஒடுக்கப்பட்ட சாதியினரும் தமது எதிர்ப்பைக் காட்டுகின்றனர்.  ஆதிக்க சாதிவெறி பிடித்த தர்மலிங்கம் கொல்லப்படுவதோடு குழந்தை சொர்ணம்மாளின் பெற்றோர் சண்முகம், சொர்ணம் இருவரும் கொல்லப்படுகின்றனர்.  இதன் பின்னர் சொர்ணம்மாள் தனது உறவினரான நாகு குஞ்சி வீட்டில் வளர்கின்றாள்.  ஊரில் சில வீடுகளில் சிலவேலைகளைச் செய்யும் சொர்ணம்மாள், அதற்கான எந்த ஊதியமும் தரப்படாமல் சுரண்டப்படுகின்றாள்.  ஆயினும் இந்த கதையின் இறுதியில் அதனை உணரும் சொர்ணம்மாள் எதிர்க்குரல் எழுப்புகின்றாள்.  குடிமையாகவோ அல்லது சுரண்டலாகவோ தனது உழைப்பைத் தராது தனக்கு ஊதியம் வேண்டுமென்று எதிர்க்குரல் எழுப்புகின்றள்.  தனது “மாற்றம்” என்கிற கதையில் மூன்றும் பேரை தனியே எதிர்த்துத் தாக்கக் கூடிய பலங்கொண்டவனாக முத்தன் இருந்தபோதும் அவர்களிடம் அடிவாங்கி ஒடுங்கிப்போகின்றான்.  அந்தக் கிராமத்துச் சிறுமியில் திருப்பி அடிக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வும், உழைப்புக்கு ஊதியம் கேட்கும் சிறுமியின் குரலும் பதிவாகின்றன. 

சட்டநாதனின் கதைகளில் வருகின்ற சிறுவர்களின் உலகம் நுட்பமாகப் பதிவுசெய்யப்படுகின்றது. உலா தொகுப்பில் உள்ள அரும்பு என்ற கதையில் வருகின்ற ராஜி என்கிற சிறுமிக்கும் அந்தப் பெயரில் வருகின்ற கிரந்த எழுத்தான “ஜி” யை எழுத முடியாமல் இருக்கின்றது.  இதற்காக ராஜியின் வகுப்பாசிரியை அவளை அடித்துத் தண்டிக்கிறார்.  இதனால் பாதிக்கப்படும் ராஜி, தனது பெயரையே வெறுக்கத் தொடங்குகின்றாள்.  தான் பாடசாலைக்கே போகவில்லை என்று சொல்கின்றாள்.  நல்லூழாக ராஜியின் தகப்பன் சிறுவர்களை சுயமரியாதை உள்ள சக மனிதர்களாகப் பார்ப்பவனாக இருக்கின்றான், அதனால் அவனால் ராஜியைப் புரிந்துகொள்ளமுடிகின்றது.  சிறுவர்களின் உலகம் நுண்ணுணர்வுகளால் நிறைந்தது.  வன்முறைகளின் மூலம் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்படும் சிறுவர்கள் உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாவதுடன், வன்முறைகளின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறிவிடும் வாய்ப்பு இருக்கின்றது.  ராஜியின் தகப்பன் ராஜியை வேறொரு பாடசாலையில் சேர்த்துவிடுகின்றான்.  கிட்டத்தட்ட இதே அனுபவம் எனக்கும் நடந்தது.  எனது மகன் பெயர் அதீதன், அவன் கனடாவில் இரண்டாம் வகுப்புக்கான தமிழ் பாடசாலைக்குச் சென்றபோது அவனது ஆசிரியர் அவனது பெயரை ஆதித்தன் என்றே அழைத்தும் எழுதியும் வந்தார்.  அவன் ஆசிரியரிடம் தனது பெயரைத் திருத்திச் சொல்லியும் ஆசிரியர் கேட்கவில்லை.  அவனது பாடக் கொப்பியில் ஆசிரியர் ஆதித்தன் என்று எழுதியிருந்ததற்குக் குறுக்காக கோடிட்டு விட்டு அதீதன் என்று தனது பெயரை எழுதியிருந்தான்.  நாமும் ஆசிரியரிடம் அவனது பெயர் அதீதன் என்று திருத்திச் சொன்னோம், ஆசிரியரோ அது தனக்கு வாயில வருகிதில்லை, எல்லாம் ஒன்றுதான் என்று சொன்னாரே தவிர தனது தவறை உணரவேயில்லை.  வீடு வந்த அதீதன், ஆசிரியர் தனது பெயரைக்கூடச் சரியாகச் சொல்கிறார் இல்லை, தான் இனி அவரிடம் படிக்கப்போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான்.  பின்னர் அடுத்த வருடம் நாம் வேறு ஒரு ஆசிரியரிடம் சேர்த்துவிட்டோம். 

இதுபோல பக்குவம் என்கிற கதையிலும் அந்தச் சிறுமி நம்பிக்கையை ஊட்டுபவளாக இருக்கின்றாள்.  போர்க்காலச் சூழலில் சுட்டுக்கொல்லப்பட்ட பரந்தாமன் என்ற ஆசிரியரின் செத்தவீட்டுக்குப் போகின்ற ஒருவன் தனது கறள் பிடித்து, இரும்புக்கே விற்கக்கூடிய நிலையில் உள்ள துவிச்சக்கர வண்டியை நிறுத்த பாதுகாப்பான இடம்தேடி முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு வீட்டிற்குச் செல்கின்றான்.  அந்த வீட்டில் இருந்த ஒன்பது அல்லது பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி துவிச்சக்கரவண்டியை விட்டுச் செல்ல அனுமதியளிக்கின்றாள்.  ஏன் சுட்டுக்கொல்லப்பட்டான் என்று தெரியாமலே 31 வயதில் சுட்டுக்கொல்லப்பட்டதால் ஏற்படும் வாழ்வின் அபத்தம், அதனால் ஏற்படும் எதிர்மறை எண்ணங்களுடன் செத்தவீட்டால் திரும்பிவரும்போது தனது துவிச்சக்கரவண்டி பாதுகாப்பாக இருக்குமா, பெய்யும் கடும் மழையால் நனைந்திருக்குமோ என்று யோசித்துக்கொண்டுவரும்போது வண்டியைத் தூக்கிப் பாதுகாப்பாகவும் நனையாமாலும் வைத்திருக்கும் சிறுமி நம்பிக்கை தருபவளாக இருக்கின்றாள்.   சிறுவர்களின் உலகத்தையும் சிறுவர்களின் இருப்பைப் பற்றியும் பிரக்ஞையில்லாத, சிறுவர்களின் எதிர்பார்ப்பை புரிந்துகொள்ளாத பெரியோர்களினை வெளிப்படுத்தும் கதையாக உலா அமைகின்றது. 

தாம்பத்தியம் என்கிற கதையில் வேலாயுதம் என்பவரின் மனைவி பர்வதம் நோயுற்றபின்னர் உதவிக்கு வருகின்ற பர்வதத்தின் தங்கை லட்சுமியுடன் வேலாயுதத்துக்கு உறவு ஏற்படுகின்றது.  லட்சுமி குழந்தையையும் பெற்றுக்கொள்ளுகின்றாள்.  பர்வதமும் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்கின்றாள்.  இந்தக் கதையுடன் சேர்த்துப் பார்க்கின்றபோது இந்தக் கதையும் சரி இதற்கு முன்னர் குறிப்பிட்ட மாற்றம் கதையும் சரி, சாதிய, பொருளாதார ரீதியில் தமக்கிருந்த ஆதிக்கங்களின் / அதிகாரங்களின் மறைமுகமான துணையுடன் ஆண்கள் பெண்களுடன் திருமணத்துக்கு அப்பாலான உறவுகளாகப் பேணியமையை ஆண்கள் மீதான மென்மையான போக்குடன் பார்க்கின்றமை ஒரு உறுத்தலாகவே  இருக்கின்றது.

ஆயினும் உலா தொகுப்பில் உள்ள தரிசனம், தளம்பல் போன்ற கதைகளில் ஆண்களின் சுரண்டலால் பாதிக்கப்பட்டு, விவாகரத்தாகி இரண்டாம் திருமணம் / உறவிலும் ஏற்பட்ட விரிசலின் பின்னர் ஆண்களில்லாத – தனித்துவாழும் பெண்களைக் காட்டுகின்றது.  தரிசனம் கதை மிக முக்கியமான கதை, இதில் வாசிப்புப் பழக்கம் கொண்ட பெண்ணுக்கு ஆணாதிக்க, பழமைவாத சிந்தனைகள் கொண்ட ஆணுடன் திருமணம் நடக்கின்றது.  அவனின் நண்பனான நகுலேஸ் என்பவன் தீவிர இலக்கிய வாசிப்பும் சீரிய திரைப்படங்கள் பற்றிய அறிவும், இசையிலும் பல்வேறு கலைகளிலும் ஈடுபாடும் கொண்டவன்.  கணவனின் நண்பன் என்று அறிமுகமாகும் நகுலேஸ் மூலம் அவளும் திரைப்படக் கண்காட்சிகளுக்குப் போகவும் நிறைய விடயங்களைத் தேடி வாசிக்கவும் தொடங்குகின்றாள்.  அவள் நகுலேசுடன் பழகுவது கணவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தி அவன் கொடுமைப்படுத்தி விவாகரத்து வரை செல்கின்றது.  ஏழாண்டுகள் கழித்து வீடு தேடிவரும் கணவனிடம் அவள் பின்வருமாறு சொல்கின்றாள்:

“எனக்குப் பசித்தது.  மலருக்கும் பசித்தது. இலக்கியம் அது இதெல்லாம் இரண்டாம்பட்சமாய் போன பொழுதுதான் நகுலேஸ் திரும்பவும் எனது வாழ்விலை குறுக்கிட்டான்…

தனித்திருந்தவளுக்கு அவனது துணை வேண்டியிருந்தது.  ஆரம்பத்தில் பொருளாதாரக் காரணங்கள்தான்.  வயிறு குளிர்ந்தது.  மீண்டும் இலக்கியப் பேச்சு, கலைத் திரைப்படங்கள், மதுரை சோமுவின் கச்சேரி, பாலேந்திராவின் நாடகங்கள், ரிவியில் லெஸ்ட்டரின் படங்கள், இந்தச் சுகங்களுக்கெல்லாம் துணையாய் இருந்தவன் தனது சுகத்தையும் நினைத்து என்னைத் தொட்டபொழுது, வருத்தத்துடன் உங்களைத்தான் நினைத்துக்கொண்டேன். அன்று கையையும் காலையும் ஒருவித அபிநயத்துடன் ஆட்டிக்கொண்டு ‘நண்பன் மனைவியைப் பெண்டாளலாமோ என்று குதித்தவர் இதைப் பார்ப்பதற்கு இல்லையே என்று’.

என்னைத் தொட்ட நாளிலை இருந்து நகுலேசுக்கும் புத்தி மாறிப்போச்சு.  உங்களைப் போலத்தான் அவனும் தனது மீசை முளைத்த தனத்தை பறை கொட்டத் துவங்கினான்.  நளினம், நாகரிகம் எல்லாமே முகமூடிதான்.  திரைகிழிய, அவனது சொரூபம் தெரிந்தது.  இந்த வாத்தி உத்தியோகம் போனவருஷன் தான் எனக்குக் கிடைச்சது.  இது கிடைக்கிறவரைக்கும் அவன் ஆண், நான் பெண். அவன் உழைத்துப் போடிறவன்; நான் எதிர்பார்த்திருப்பவள்.  நான் அவன் சொற்படி நடக்க வேண்டாமோ?

வாசிப்பும், கலை இலக்கியப் பரிச்சயமும் ஈடுபாடும் கூட மனிதர்களைப் பக்குவப்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாவதமும் இல்லை.  குறிப்பாக சுரண்டல்வாதிகளுக்கு இவையெல்லாம் தமது சுரண்டல்களுக்கான கருவிகளாகவும் அமைந்துவிடும் என்பது நுட்பமாக வெளிப்படும் கதை இது. 

உறவுகள் என்கிற கதையில் கல்வியாலும், பதவி, சம்பளம் ஆகியவற்றாலும் பெண் உயர்நிலையில் இருந்தபோதும் கூட “ஆணாகவும்” சாதியத்தாலும் ஒரு ஆண் எப்படி ஆதிக்கம் மிக்கவானவும் ஒடுக்குமுறையாளனாகவும் மாறுகின்றான் என்பதை வெளிப்படுத்துகின்றது.  எழுத்தாளராக இருக்கும் பெண்ணுக்கும், சக எழுத்தாளரான அருணுக்கும் இருக்கும் நட்பினை அவர்களுக்கிடையில் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து உடல், உளரீதியில் துன்புறுத்துகின்றான் கணவன்.  ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாத மனைவி தான் “தூய்மையானவள்” என்பதைக் கணவனுக்குத் திரும்பத் திரும்பச் சொல்வதயே அவமானமாக கருதுகிறாள்.  அவனது சித்திரவதைகள் பொறுக்கமாட்டாது “ஓம் இன்று நான் அருணோட அவன்ட அறையிலதான் இருந்தனான்” என்று பொய்க்குச் சொல்கிறாள். அவன் உடைந்துவிடுகிறான், பின்னர் தனது உடைமைகளையும் தான் வாங்கிக்கொடுத்த தாலியையும் எடுத்துக்கொண்டு அவன் வீட்டிலிருந்து வெளியேறிவிடுகின்றான்.  தாம்பத்திய உறவை வெட்டிக்கொள்ளும் துணிவில்லாமல் இருந்த தனக்கு அவனாகவே வீட்டைவிட்டு வெளியேறியதே பெரிய உதவி என்று அவள் நிம்மதியடைகின்றாள்.

சட்டநாதனின் கதைகளில் வரும் பெண்கள் பலர் ஆணாதிக்கத்தாலும், சமூகச் சுரண்டல்களாலும் பாதிக்கப்பட்டாலும் அவற்றை எதிர்த்து சோர்ந்துவிடாமல் துணிந்து நிற்பவர்களாக, அல்லது சமூகக் கட்டுகளால் பாதிக்கப்பட்டிருந்து அதிலிருந்து உடைத்துக்கொண்டு வெளியேறும் முதல் தலைமுறையினராகக் காட்டப்பட்டுள்ளனர்.  ஜீவநதி இதழாசிரியர் பரணிதரனுக்கு வழங்கிய நேர்காணலில் சட்டநாதன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

பெண்கள் பொதுவாக ஆதரவற்றவர்கள், ஆணின் ஆதிக்க அழுத்தங்களுள் அகப்பட்டுச் சிதைந்து போகக் கூடியவர்கள்.  நமது சமூக வெளியில் அத்தகையவர்களே அனேகமாக உள்ளனர்.  அத்தகைய பெண்களுக்கு எனது எழுத்து பலம் தருவதுடன் அவர்கள் நிமிர்ந்துநின்று சரியெனப்படுவதைச் செய்ய துணை சேர்ப்பதாகவும் இருக்கின்றது.  ஆயினும் சமூகக் கட்டுப்பாடுகளுக்குள் நின்று செயற்படவே அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள்.

பிரக்ஞைபூர்வர்மான இந்தப் புரிதலுடன் தனது எழுத்துச் செயற்பாட்டை மேற்கொண்ட சட்டநாதன் சமூகத்தில் இருந்து சாதிய ஒடுக்குமுறை, பாலியல் சுரண்டல்கள், ஆணாதிக்கம், இவற்றால் நிகழும் ஒடுக்குமுறைகள், அந்த ஒடுக்குமுறைகளிலில் இருந்து வெளியேறுவதற்காகச் செய்யப்படும் மீறல்கள் ஆகியவற்றையும், குழந்தைகளதும் பெண்களதும் உலகத்தையும் தனது படைப்புகளூடாகச் செய்த தனித்துவமான எழுத்தாளராவார்.

குறிப்பு:
இலக்கிய வெளி நட த்தும் 36வது அரங்கான இந்த நிகழ்வு சட்டநாதன் புனைவுகள் குறித்த உரையாடலாக அமைந்துள்ளது.  36 நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நட த்துவது என்பது எவ்வளவு சவாலானது என்பதுவும் எவ்வளவு உழைப்பைக் கோருவது என்பதையும் நன்கறிந்தவன.  அந்தகையில் இந்நிகழ்வில் உரையாடக்கிடைத்த சந்தர்ப்பத்துக்கு நன்றிகள்.  தவிர இன்றைய நிகழ்வில் உரையாற்ற இருக்கின்ற செல்வமனோகரன் அவர்கள் நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் இருந்தே நான் விரும்பிக்கேட்ட ஒரு பேச்சாளர்.  குணேஸ்வரன் அவர்களும் ரமேஷ் அவர்களும் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய எழுத்தாளார்கள், பேச்சாளர்கள்.  இவர்களுடன் பேசக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்.

https://youtu.be/C4y8KKAwdBE?si=JOVYiZkOoR5W_-HK

இக்கட்டுரை மே, 2024 தாய்வீடு இதழில் வெளியானது. அதற்கான இணைப்பு https://thaiveedu.com/pdf/24/May2024.pdf#page=62%22

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑