நூல்களுக்கான அறிமுக உரை வழங்குவது என்பது எச்சரிக்கையுடன் கையாளவேண்டியியதாகவே இருந்துவருகின்றது. பொதுவாக அறிமுக உரைகள் நூல்களின் வெளியீட்டின்போதே வழங்கப்படுகின்றன. இதனால் அந்த நூலை அரங்கிலிருப்போரும் இதர வாசகர்களும் வாசித்திருக்கக் கூடிய சாத்தியம் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. இதனால் அறிமுக உரையாற்றுபவருக்கு நூலின் உள்ளடக்கம் குறித்த பின்னணி, நூலாசிரியர் குறித்த எழுத்து, நோக்கு போன்றவை குறித்ததானவையாகவும் நூல் குறித்த அறிமுகமாகவும் கூறுவதாகவே அறிமுக உரை அமைகின்றது. உண்மையில், நூல் வெளியீடு செய்யப்பட்ட சிலகாலங்களின் நூலினை வாசித்தவர்கள் நூல் குறித்த விமர்சனை / உரையாடல் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும்போது அதிலே நூல் குறித்த ஆழமான உரையாடல்கள் சாத்தியமாகும். இப்படியான சூழலே ஆரோக்கியமான கலை இலக்கியப் போக்குக்கு வழிசமைக்கும். ஆயினும் நூல்கள் குறித்த வெளியீட்டு விழாவிற்குப் பின்னரான, உரையாடல் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுவது அண்மைக்காலத்தில் அரிதாகவே உள்ளது. வாசகர் வட்டச் செயற்பாடுகள், உரையாடல் குழுமங்கள், கலை இலக்கியச் செயற்பாட்டுக் குழுமங்கள் ஆகியன புதியவேகத்துடன் செயற்படத் தொடங்குவது இதற்கு மிக அவசியமான ஒன்றாகும். இதுபோன்ற அறிமுக நிகழ்வுகளுக்குப் பின்னர் பலரும் நூல்களை வாசித்து உரையாடும் ஆரோக்கியமான சூழல் உருவாகுவது முக்கியம். இதனை ஒரு வேண்டுதலாக முன்வைத்துக்கொண்டு அறிமுக உரைக்குள் புகுகின்றேன்.
இன்றைய நிகழ்வில் நான் அறிமுகம் செய்யவிருக்கின்ற “வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” என்கிற இந்த நூல் வெவ்வேறு காலப்பகுதிகளில் வ.ந. கிரிதரன் எழுதிய 14 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்புநூலாகும். ஜூன் 2022 இல் வெளியான இந்த நூல் ஜீவநதி பதிப்பகத்தின் 227வது நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் உள்ள கட்டுரைகள்,
- பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு!
- தமிழின் இலக்கிய வானிலொரு மின்னல்!
- தமிழினியின் சுயவிமர்சனம் கூர்வாளா அல்லது மொட்டைவாளா
- அறிஞர் அ.ந. கந்தசாமியின் பன்முக ஆளுமை
- அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவ வியற் பார்வைகளும்
- அ.ந.கவின் மனக்கண்
- சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு
- கலாநிதி நா. சுப்பிரமணியின் எழுதிய ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி…
- விஷ்ணுபுரம் சில குறிப்புகள்!
- ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந. கந்தசாமியின் பங்களிப்பு
- பாரதி ஒரு மார்க்சியவாதியா
- ஜெயமோகனின் கன்னியாகுமரி
- திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த் ஒரு நனவிடை
- எல்லாளனின் “ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்புகள்” தொகுப்பு முக்கியமனாதோர் ஆவணப்பதிவு.
“பாரதி ஒரு மார்க்சியவாதியா?” என்கிற 1983 இல் எழுதப்பட்ட கட்டுரையும் “பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு” என்கிற கட்டுரையும் பாரதியை மார்க்சிக் கோட்பாடுகளின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளமுனைகின்றன. கிரிதரன் அவர்கள் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த எண்பதுகளின் தொடக்கம் பாரதி இளைஞர்களுக்கான ஆதர்சமாக இருந்த காலப்பகுதியாகும். குறிப்பாக அது பாரதி நூற்றாண்டு (1982) ஐ அண்மித்த காலம். அன்று பாரதி புரட்சிகரமான, முற்போக்கான ஒரு விம்பமாகவே கட்டமைக்கப்பட்டிருந்தார். பாரதியிடம் ஏற்றத் தாழ்வு ஒழியவேண்டும், வறுமை ஒழியவேண்டும் ஆகிய நோக்குநிலைகள் ஒரு கனவாக இருந்தன. ஆனால் அவற்றுக்கான வழிமுறைகள், வேலைத்திட்டங்கள் குறித்து பாரதியின் எழுத்துகளிலும் செயற்பாட்டிலும் கவனப்படுத்தல்கள் இல்லை. இந்தக் குழப்பத்தை பாரதி ஒரு மார்க்சியவாதியா என்கிற கட்டுரையில் கிரிதரன் பதிவுசெய்திருக்கின்றார். மானுடத்தின் முழுவிடுதலை என்பதை அகவிடுதலையைப் பெறுவதன் மூலமும் மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலமும் மட்டுமே பெறமுடியும் என்று பாரதி கருதுவதை விரிவாக ஆராயவேண்டும் என்றும் கிரிதரன் குறிப்பிட்டேயுள்ளார். பாரதியின் எழுத்துகளை அரசியல் பிரக்ஞை கொண்டு, கோட்பாட்டுப் பின்னணியில் வைத்தால் குழுப்பமும் தெளிவின்மையுமே ஏற்படும். அப்படியிருக்கின்றபோது பாரதிக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கும் கிரிதரன், பாரதி குறித்து “அவரது சமூக, அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த தெளிவுமிகு எழுத்துகள். அவற்றில் விரவிக்கிடக்கும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகள் என்னை மிகவும் பாதித்தவை. அவரது முரண்பாடுகளை நான் அறிவுத் தாகமெடுத்து அலையும் சிந்தனையின் வெளிப்பாடுகளாகனவே காண்கின்றேன்” என்று தனது சமர்ப்பணத்தில் குறிப்பிடுவதுடன் என்னால் உடன்படமுடியவில்லை.
அதுபோலவே, இந்நூலில் உள்ள “அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவ வியற் பார்வைகளும்”, “விஷ்ணுபுரம் சில குறிப்புகள்” ஆகிய கட்டுரைகள் குறித்தும் சில விடயங்களைக் கவனப்படுத்தவிரும்புகின்றேன். இந்த இரண்டு கட்டுரைகளிலும் முறையே வெங்கட் சாமிநாதன் குறித்தும் விஷ்ணுபுரம் குறித்தும் அவற்றில் வெளிப்பட்ட வலதுசாரித்தனம், இந்துத்துவ/பார்ப்பன மனநிலை, மார்க்சிய எதிர்ப்பு போன்றவை குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கான பதில்களாகவே கிரிதரனின் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. “வெங்கட் சாமிநாதன், மார்க்ஸ் மீதும் எங்கல்ஸ் மீதும் அவர்களது கோட்பாடுகள் மீதும் நன்கு மதிப்பு வைத்திருப்பவர், ஆனல் அவை உருவான காலகட்டத்திற்குரியவை, இன்று நிலவும் சமுதாயப் பொருளியிற் சூழலுக்கேற்ப அவற்றிலும் மாறுதல்கள் செய்யப்படவேண்டுமென்பதையும் அவர் வலியுறுத்துபவர்” என்று இங்கே குறிப்பிடப்படுகின்றது. வெங்கட் சாமிநாதன் கொண்டாடிய, முன்மொழிந்த அழகியலும் கலை மரபுகளும் கருத்தியில் தளத்திலும், உள்ளடக்கத்திலும் சமூகப் பிரக்ஞை இல்லாதவை, சமூக நீதி குறித்த அக்கறைக்கு எதிரானவை. அதனால் தான் வெங்கட் சாமிநாதன்வால் சோவை அறிவுஜீவி என்று புகழவும், ஆர் எஸ் எஸ் கருத்தியலை முன்னெடுக்கும் அரவிந்தன் நீலகண்டனைக் கொண்டாடவும் முடிந்தது. வெங்கட் சாமிநாதனிடம் ஆழமாகக் குடிகொண்டிருந்த திராவிட / மார்ச்கிச வெறுப்பு அரசியலின் பின்னணியே அவரது மதிப்பீடுகளிலும் வெகுவாகத் தாக்கம் செலுத்தியது நான் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.
அதுபோல விஷ்ணுபுரம் பற்றி எழுதும்போது
“ஜெயமோகனின் விஷ்ணுபுரம் இருப்பு பற்றிய ஞானத்தேடல் தானென்று அவரே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளபோது அந்த ஞானத்தேடலுடன் ஒப்பிடும்போது வெகு சாதாரண விடயங்களைப் பெரிசுபடுத்தி “இல்லை இந்த அற்ப விசயங்களைத்தன் இந்நாவல் கூறுகின்றது” எனச் சிலர் வலிந்து பொருள் கூற முனைவதை என்னவென்பது. அது மூன்றாண்டுகளாக அலைந்து திரிந்த ஜெயமோகனைன் தேடலினைக் கொச்சைப்படுத்துவதாகும்”
என்று கிரிதரன் குறிப்பிடுவதைப் படிக்கின்றபோது அதிர்ச்சியே ஏற்படுகின்றது. முதலில் இப்படியான வாதம் வாசகரின் சுதந்திரத்துக்கும் வாசிப்புக்கும் தடையாக இருக்கின்றது. அதற்கு மேலாக, ஜெயமோகனின் மூன்றாண்டு உழைப்பு, ஞானத்தேடல் என்பவற்றை “சலுகைகளாக” அல்லது கேடயங்களாகப் பயன்படுத்தி ஜெயமோகனின் எழுத்துகள் / விஷ்ணுபுரம் எப்படி இந்துத்துவ எழுத்துகளாக சமூகநீதிக்கு எதிரானவையாக இருக்கின்ற என்கிற விமர்சனங்களை / குரல்களை நிராகரிக்கின்றது.
பொதுவாக நூல்கள் குறித்த அறிமுகங்களையும் கட்டுரைகளையும் எழுதும்போது குறித்த அந்த நூல்/கட்டுரையினது வாசிப்புக்கும் எமது முன்னைய வாசிப்பு, அரசியல் பிரக்ஞை / நிலைப்பாடு, அனுபவம், ஆகியவற்றுக்கும் இடையிலான இடைவெட்டுகளையே கட்டுரைகளாகவோ உரையாடல்களாகவோ வெளிப்படுத்துகின்றேன். இந்தவகையில் வாசிப்புகளையும், எழுத்துக்களையும் அவை குறித்த பகிர்வுகளையும் நீண்ட, தொடர்ச்சியான உரையாடலின் பகுதியாகவே கருதுகின்றேன். என்னுடையை இந்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கின்றபோது கிரிதரனின் எழுத்துகள், குறித்த பிரதிகள் பற்றி எழுதும்போது (அதிலும் குறிப்பாக புனைவுகள் குறித்து எழுதும்போது) அவற்றை அரசியல் பிரக்ஞை, சமூகநீதிக் கோட்பாடு ஆகியவற்றுடன் இடைவெட்டிப் பார்க்கத் தவறிவிடுகின்றன என்பதே எனது அவதானமாக உள்ளது.
தமிழினியின் கவிதைகள் குறித்த “தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்” என்கிற கட்டுரையும் கூர்வாளின் நிழலில் நூல் குறித்த “தமிழினியின் சுயவிமர்சனம் கூர்வாளா அல்லது மொட்டைவாளா? என்கிற கட்டுரையும் “எல்லாளனின் “ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள்” தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு!” என்கிற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. தமிழினியின் “ஒரு கூர்வாளின் நிழலில்” நூல் வெளியான பின்னர், தமிழினியின் கணவர் ஜெயக்குமரனுடனான உரையாடல் ஒன்றில் “தேசம் நெட்” ஜெயபாலன் “இது கூர்வாளல்ல, மொட்டை வாள்” என்று குறிப்பிட்டிருப்பார். தமிழினியின் விமர்சனங்கள் காரமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் தன்னையும் தான் சார்ந்திருந்த அமைப்பையும் பற்றிய சுயவிமர்சனம் செய்திருக்கின்றார் என்பதை தமிழினியின் நூலில் இருந்தே மேற்கோள்களைக் காட்டிக் கூறும் கிரிதரன் “முதல் முறையாக விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ஒருவர் தன்னை, தான் சார்ந்திருந்த இயக்கத்தை சுய விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கின்றார். அது வரவேற்கத்தக்கது. சுய விமர்சனங்கள் எப்பொழுதுமே ஆரோக்கியமானவை, எதிர்காலத்தில் சரியான பாதையில் நடப்பதற்கு வழிகோலுபவை. அதுவே இந்நூலின் முக்கியத்துவமும் கூட” என்று கட்டுரையை நிறைவு செய்கின்றார். அதேபோல ஈழப்போராட்டம் குறித்து வெளிவந்த தன்வரலாற்று நூல்களில், ஆவணப்பதிவுகளில் அளவில் சிறிய, சுருக்கமான நூலாக இருந்தாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவையும், அது எவ்வாறு அழிக்கப்பட்ட து என்பதையும் மிக மிக நுணுக்கமாகப் பதிவுசெய்த நூல் எல்லாளன் எழுதிய “ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள்” நூல். பிள்ளைளுக்குத் தமிழ்ப் பெயர்களை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த கிறித்தவக் குடும்பமொன்றில் பிறந்த எல்லாளன் இளவயதில் ஆலய நிர்வாகம், வாலிபர் சங்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்து பின்னர் அரசியல் உணர்வு பெற்று தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைந்து ரஞ்சித் என்ற பெயரில் போராளியாகச் செயற்பட்ட தன்வரலாற்றையும் இயக்கங்களிடையே ஏற்பட்ட முரண்கள் சுயவிமர்சனத்துடன் நிதானமாக அணுகிய எழுதிய நூலாக எல்லாளின் நினைவுக்குறிப்புகள் அமைகின்றது. அந்த வகையில் இந்நூல் குறித்த கிரிதரனின் பதிவு முக்கியமானதாகும்.
கிரிதரனின் பலமும் சிறப்புத் தேர்ச்சியும் அவரது ஆவணவியல் அறிவும் ஈடுபாடும் ஆகும். இந்த தொகுப்பில் உள்ள அ.ந. கந்தசாமி குறித்த மூன்று கட்டுரைகளும் அதற்குச் சான்றாகும். அ.ந.கவின் எழுத்துகளில் “வெற்றியின் இரகசியங்கள்” என்கிற சுயமுன்னேற்ற கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றையே நான் வாசித்துள்ளேன். சுயமுன்னேற்ற நூல்களை நான் வாசிப்பதில்லை என்றாலும் அ.ந.க வின் எழுத்துநடை பற்றிய கிரிதரனின் குறிப்பினைப் பார்த்துத்தான் இந்த நூலை வாசித்தேன். மிகவும் ஈர்க்க்க கூடிய ஒரு நடை. முற்போக்குச் சிந்தனையும், களச் செயற்பாட்டுப் பின்புலமும், எழுத்துகளில் முற்போக்குச் சிந்தனைகளை தெரிவிக்கின்ற நோக்குநிலையும் அ.ந.கவிடம் இருந்திருக்கின்றது. இந்நூலில் கிரிதரன் பல இடங்களில் கூறுவதுபோல அ.ந.கவின் எழுத்துகள் தொகுக்கப்படும்போதே அவர் பற்றிய இன்னும் முழுமையான பார்வை எமக்குக் கிடைக்கும். இப்படியாக இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் பற்றிய விபரங்கள் காலத்தால் மறைக்கப்பட்டோ மறக்கப்பட்டோ போய்விடக்கூடும். நாம் தொடர்ச்சியாக நூல்களை ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்துப் பேசிவருகின்றோம். ஆவணப்படுத்தலுக்கு முக்கியத்தவதும் தருவதுபோல நாம் பட்டியலாக்கத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். எழுத்தாளர்களின் எழுத்துகள், செயற்பாடுகள் குறித்த தகவல்களை பட்டியலாக்கம் செய்வது குறித்த பிரக்ஞையும் உருவாகும்போதே இது சாத்தியமாகும். அச்சிதழ்களும் பத்திரிகைகளும் குறைந்துசெல்கின்ற இன்றைய சூழலில், இந்தப் பட்டியலாக்கம் இல்லாதபோது குறித்த தரவுகளைத் தேடித் தொகுப்பதே சவால் மிகுந்ததாக அமைந்துவிடும் என்பதை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.
இந்நூலில் உள்ள “சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு” என்கிற கட்டுரை கிரிதரனிடம் உள்ள பிரதிகளை ஒப்பிட்டு ஆராய்ந்து கருத்துகளைக் கண்டு தெளியும் போக்கிற்கு உதாரணமாகும். நல்லூர் இராசதானிக்கு முன்னதாக யாழ்ப்பாண அரசர்களின் தலைநகராக இருந்த சிங்கை நகர் இன்றைய வல்லிபுரமே என்கிற பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தை மாற்றாக க. குணராசாவும் பரமு புஷ்பரட்ணமும் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்தது என்று சொன்ன கருத்தை புவியியல் ரீதியாகவும் பிரதிகளின் துணைகொண்டும் இந்தக் கட்டுரையில் கிரிதரன் மறுத்து, இன்றைய வல்லிபுரமே சிங்கை நகர் என்று மீண்டும் நிறுவுகின்றார். “கலாநிதி புஷ்பரட்ணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களைத் தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலுச்சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார்” என்கிற அபத்தத்தையும் கிரிதரன் சுட்டிக்காட்டுகின்றார்.
முன்னரே குறிப்பிட்டதுபோல இந்நூல் ஜீவநதியின் 227வது வெளியீடாக வந்துள்ளது. ஈழத்திலிருந்து இயங்கும் ஒரு பதிப்பகம் 227 நூல்களை வெளியிட்டிருப்பது ஒரு சாதனை. ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த எழுத்துப்பிழைகளுடன் இந்நூல் செம்மைசெய்யப்பட்டிருப்பதையும் குறிப்பிடவேண்டும். இந்நூலின் அட்டைப்படத்தையும் நூலையும் பரணிதரனே வடிவமைத்தும் இருக்கின்றார். அண்மைக் காலத்தில் பல நூல்களில் பொருளடக்கத்தில் பக்க எண்களை வழங்குவது தவறவிடப்படுகின்றது. இந்நூலிலும் அதே குறைபாடிருக்கின்றது, எதிர்காலத்தில் இதில் கவனம் செலுத்தவேண்டும். இலக்கியம், வரலாறு, ஆவணப்படுத்தல் என்று பரந்த தளங்களில் வாசிப்பையும் தேடலையும் கொண்ட கிரிதரனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பையும், அதில் குறிப்பிடப்படும் நூல்களையும் வாசித்துவிட்டும் உரையாடுவது இன்னும் பொறுத்தமாக இருக்கும், உரையாடல்கள் தொடரட்டும்!
பின்குறிப்பு
- வ. ந. கிரிதரன் எழுதிய “ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்கள் என்கிற கவிதைத் தொகுப்பு, நவீன விக்கிரமாதித்தன் என்கிற நாவல், வ.ந. கிரிதரன் கட்டுரைகள் என்கிற கட்டுரைத் தொகுப்பு ஆகிய மூன்று நூல்களின் வெளியீடும் அறிமுக உரைகளும் நவம்பர் 19, 2023 அன்று Scarborough Village மண்டபத்தில் நடந்தன. அந்நிகழ்வில் வ.ந. கிரிதரனின் கட்டுரைகள் என்கிற நூல் குறித்த அறிமுக உரையின் கட்டுரை வடிவம்.
- இக்கட்டுரை பெப்ரவரி 2024 தாய்வீடு இதழில் பிரசுரமானது. (https://thaiveedu.com/pdf/24/Feb2024.pdf)
- இக்கட்டுரைக்கான எதிர்வினையை வ.ந. கிரிதரன் பதிவுகள் தளத்தில் எழுதியுள்ளார். அதற்கான இணைப்பு: https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/8368-2024-02-01-18-43-57
- அட்டைப்படம் – நன்றி பதிவுகள் இணையத்தளம்