“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலின் வெளியீட்டில் நான் வாசித்த கட்டுரைக்கான எதிர்வினையாகச் சில கருத்துகளை வ.ந. கிரிதரன் பகிர்ந்துள்ளார். இவை பற்றிய தெளிவுபடுத்தல்ளைச் செய்யும் பொருட்டு இந்தப் பதிவை எழுதுகின்றேன்.
“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலை முன்வைத்துச் சில குறிப்புகள் என்கிற இந்தக் கட்டுரையில் பின்வருமாறு நான் குறிப்பிட்டிருப்பேன்:
“பாரதி ஒரு மார்க்சியவாதியா?” என்கிற 1983 இல் எழுதப்பட்ட கட்டுரையும் “பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு” என்கிற கட்டுரையும் பாரதியை மார்க்சிக் கோட்பாடுகளின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளமுனைகின்றன. கிரிதரன் அவர்கள் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த எண்பதுகளின் தொடக்கம் பாரதி இளைஞர்களுக்கான ஆதர்சமாக இருந்த காலப்பகுதியாகும். குறிப்பாக அது பாரதி நூற்றாண்டு (1982) ஐ அண்மித்த காலம். அன்று பாரதி புரட்சிகரமான, முற்போக்கான ஒரு விம்பமாகவே கட்டமைக்கப்பட்டிருந்தார். பாரதியிடம் ஏற்றத் தாழ்வு ஒழியவேண்டும், வறுமை ஒழியவேண்டும் ஆகிய நோக்குநிலைகள் ஒரு கனவாக இருந்தன. ஆனால் அவற்றுக்கான வழிமுறைகள், வேலைத்திட்டங்கள் குறித்து பாரதியின் எழுத்துகளிலும் செயற்பாட்டிலும் கவனப்படுத்தல்கள் இல்லை. இந்தக் குழப்பத்தை பாரதி ஒரு மார்க்சியவாதியா என்கிற கட்டுரையில் கிரிதரன் பதிவுசெய்திருக்கின்றார். மானுடத்தின் முழுவிடுதலை என்பதை அகவிடுதலையைப் பெறுவதன் மூலமும் மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலமும் மட்டுமே பெறமுடியும் என்று பாரதி கருதுவதை விரிவாக ஆராயவேண்டும் என்றும் கிரிதரன் குறிப்பிட்டேயுள்ளார். பாரதியின் எழுத்துகளை அரசியல் பிரக்ஞை கொண்டு, கோட்பாட்டுப் பின்னணியில் வைத்தால் குழுப்பமும் தெளிவின்மையுமே ஏற்படும். அப்படியிருக்கின்றபோது பாரதிக்கு இந்த நூலைச் சமர்ப்பணம் செய்திருக்கும் கிரிதரன், பாரதி குறித்து “அவரது சமூக, அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த தெளிவுமிகு எழுத்துகள். அவற்றில் விரவிக்கிடக்கும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகள் என்னை மிகவும் பாதித்தவை. அவரது முரண்பாடுகளை நான் அறிவுத் தாகமெடுத்து அலையும் சிந்தனையின் வெளிப்பாடுகளாகனவே காண்கின்றேன்” என்று தனது சமர்ப்பணத்தில் குறிப்பிடுவதுடன் என்னால் உடன்படமுடியவில்லை.
இதற்கான எதிர்வினையாகப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் வ.ந. கிரிதரன்:
“பாரதியின் எழுத்துகளை அரசியல் பிரக்ஞை கொண்டு, கோட்பாட்டுப் பின்னணியில் வைத்தால் குழப்பமும் தெளிவின்மையுமே ஏற்படும. அப்படியிருக்கின்றபோது பாரதிக்குச் சமர்ப்பணம் செய்திருப்பதைத் தன்னால் ஏற்க முடியவில்லை என்கின்றார். பாரதியின் எழுத்துகளைக் கவனத்தில் கொள்ளும்போது அவரது காலகட்டத்தில் வைத்து அவரை எடை போடுவதே சாலச் சிறந்ததாகவிருக்கும். பாரதியின் எழுத்துகள் சமூகப்பிரக்ஞை மிக்கவை. அரசியல் பிரக்ஞை மிக்கவை. பாரதியார் சமூக, அரசியல் பிரக்ஞை மிக்கவர் என்பதால்தான் அக்டோபர் புரட்சி பற்றிப் பாட முடிந்திருக்கின்றது. மார்க்சியம் பற்றி மஞ்செஸ்டர் கார்டியனில் வெளியான ருஷ்ய சமுதாயம் பற்றி , அங்கு பெண்களின் நிலை பற்றிய கட்டுரைகளில் அவர் கவனம் செலுத்தியிருப்பது ஆச்சரியம் தருவது.
டிசம்பர் 11, 1882 பிறந்த பாரதி செப்டம்பர் 11, 1921 மறைந்து விட்டார். ருஷ்யப் புரட்சி நடந்து நான்கு வருடங்களில் மறைந்து விட்டார். இந்நிலையில் இன்று எமக்குக் கிடைப்பது போல் மார்க்சியம் பற்றிய விரிவான நூல்கள் அக்காலத்தில் பாரதிக்குக் கிடைத்திருக்கும் சாத்தியமில்லை. இருந்தாலும் அவரது தீவிர வாசிப்பு காரணமாக அவரது கவனம் மார்க்சியம் வலியுறுத்தும் சமுதாய அமைப்பு பற்றியதற்கு முக்கிய காரணம் அவரது சமூக, அரசியற் பிரக்ஞையே. அவர் தனக்கு அக்காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ருஷ்ய சமுதாய அமைப்பு பற்றிச் சிந்திக்கின்றார். கருத்து முதல்வாதம் , பொருள்முதல்வாதம் ஆகியவை பற்றிச் சிந்திக்கின்றார். அத்வைதம் பற்றிச் சிந்திக்கின்றார்.
இவ்விதமாகத் தனது சிந்தனையை இவ்விடயங்களில் செலுத்திய பாரதியாரின் கருத்துகளில் காணப்படும் முரண்பாடுகளை நான் அவரது அறிவித்தாகமெடுத்தலையும் சிந்தனையின் வெளிப்பாடுகளாகவே காண்கின்றேன். அவர் பொதுவுடமையை ஆதரிக்கின்றார் என்பதை அவரது எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன. பெண்களின் சம உரிமையினை ஆதரிக்கின்றார். இதனால்தான் ஐரோப்பிய சமுதாய அமைப்பில் பெண்களின் நிலை பற்றியெல்லாம் அவரால் கட்டுரைகளை எழுத முடிந்திருக்கின்றது. இதனால்தான் ‘புதிய ருஷ்யா’ என்னும் கவிதையில் “குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/ மேன்மையுறக் குடிமை நீதி/கடியொன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது /அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ” என்று பாட முடிகின்றது.
என்னை அவரது இந்த அறிவுத் தேடலே மிகவும் கவர்ந்தது. அத்துடன் அவர் சமூக, அரசியற் செயற்பாட்டாளராகவும் இருந்திருக்கின்றார். இந்தியரின் தேசிய விடுதலைப் போராட்டத்திலும் பங்களித்திருக்கின்றார். தான் வாழ்ந்த காலகட்டத்தை மீறிச் சிந்தித்தவர் பாரதியார். செயற்பட்டவர் பாரதியார். அந்த அவரது ஆளுமைதான் என்னை மிகவும் கவர்ந்தது. அதற்காகவே என் கட்டுரைத் தொகுப்பினை அவருக்குச் சமர்ப்பணம் செய்தேன். மானுடர்கள் யாவருமே குறை,நிறைகளுடன் உள்ளவர்கள்தாம். கார்ல் மார்க்சும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். பாரதியாரின் குறை நிறைகளுடன் அவரது சமுதாயப் பிரக்ஞை மிக்க எழுத்துகள் காரணமாக, அவரது சமூக,அரசியற் செயற்பாடுகள் காரணமாக அவரை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
இவ்விதமாகப் பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.”
எனது கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போலவே, கிரிதரனின் நூலில் இடம்பெற்றுள்ள பாரதி பற்றிய கட்டுரைகளை அவர் எழுதியபோது (1980களில்) பாரதி பற்றிக் கட்டமைக்கப்பட்டிருந்த புரட்சிகரமான, முற்போக்கானவர் என்கிற விம்பத்தை வைத்தே கிரிதரனின் மேற்கண்ட எதிர்வினையும் அமைந்திருக்கிறது.
அதே நிலைப்பாட்டுடன் 2021 ஜனவரியில் வெளிவந்த நூலிலும் “அவரது சமூக, அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த தெளிவுமிகு எழுத்துகள். அவற்றில் விரவிக்கிடக்கும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகள் என்னை மிகவும் பாதித்தவை. அவரது முரண்பாடுகளை நான் அறிவுத் தாகமெடுத்து அலையும் சிந்தனையின் வெளிப்பாடுகளாகனவே காண்கின்றேன்” என்று கூறி கிரிதரன் சமர்ப்பணம் செய்வதுடன் என்னுடன் உடன்படவில்லை என்பதை எனது வாசிப்புகளின் அடிப்படையில் மீளவும் உறுதிப்படுத்துகின்றேன். பாரதி பற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற விம்பமானது அவரது ஆரம்பகாலக் கவிதைகளை வைத்தே அப்போது உருவாக்கப்பட்டது. ஆயினும் பின்னாளில், அவரது கட்டுரைகளில் அவர் நேரடியாகவே குறிப்பிட்ட கருத்துகளையும், கவிதைகளை கால ஒழுங்கில் வைத்து, பாரதியின் நிலைப்பாடுகளையும் ஒப்புநோக்கும்போது பாரதி பற்றிய இன்னொரு பார்வை கிடைக்கின்றது. ஆரம்பகாலத்தில் பாரதி எழுதிய சில எழுத்துகளை மாத்திரம் வைத்துக்கொண்டு பாரதியை வைத்துக் கட்டிய முற்போக்கு, புரட்சியாள விம்பத்தைத் தன் பிற்கால எழுத்துகளால் தானே தவிடுபொடியாக்கி இருக்கின்றார் பாரதி.
பாரதி “இந்தியா”வில் எழுதி பின்னர் பாரதி விஜயா கட்டுரைகள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள “காலாடியில் பிரதிஷ்டை” என்ற கட்டுரை பாரதியின் நிலைப்பாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. பெப்ரவரி 26, 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் பாரதி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“இதன்பிறகு மகமதியர்கள் வந்தபொழுது அவர்களைத் தடுக்கப் பெருமுயற்சி ஒன்றும் செய்யப்படவில்லை. நம் பாரத நாடு சோர்வடைந்துகொண்டே வந்ததுமன்றி மகமதியர்களும் கிரேகரவ்வளவு நாஸ்திகரல்ல. உலக விஷயங்களைத் தியாகஞ் செய்வது நம்மைப் போல் இவர்களிலும் ஒரு முக்கிய கொள்கை. இவர்கள் மூலமாய் நமக்கு ஆத்ம நாசம் விளையும் என்னும் பயமில்லாவிட்டாலும் ஆரிய பரம்பரையைக் கைவிடக்கூடாதென்று செய்யப்பட்ட ஏற்பாட்டுக்கு ஶ்ரீ வித்யாரண்ய சுவாமி தலைவரானார். இவரை ஆதி சங்கராச்சாரியாரின் மறு அவதாரமாகச் சொல்லலாம். இவர் விஜயநகர் ஸமஸ்தானத்தை ஸ்தாபித்து உலகெலாம் புகழடையச் செய்ததுமன்றி வேதம், வேதாகமங்கள், ஸ்மிருதி, இதிஹாஸ புராணங்கள் இவைகளை ஒன்றுசேர்த்துப் புஸ்தகங்களாக எழுதிவைத்தார். இவர் சன்னியாசியாகவிருந்த போதிலும் ஆரிய தர்மத்தைக் காப்பாற்றும் பொருட்டு ராஜ தந்திரியாகவும், ராணுவத் தலைவராகவும் இருந்திருக்கிறார். இம்மாதிரியாக இந்தத் தடவை ஆபத்தில் நின்றும் மீண்டது கூட ஆதி சங்கராச்சாரியாரின் அநுக்கிரகமென்றே கூறலாம்.
தற்காலத்தில் ஆரிய தர்மத்துக்கு ஒரு பெரிய விபத்து வந்திருக்கின்றது. உலமெல்லாம் தெரியும். இந்தியாவில் யாரைக் கேட்டாலும் தருமமழிந்துபோய்விட்டதே! தருமமழிந்துபோய்விட்டதே என்று சொல்லாதவரில்லை. முற்காலத்தில் நாஸ்திகர்களாயிருந்தபோதிலும் சுய கௌரவத்தையும் ஆண்மைத்தனத்தையும் நாம் கைவிட்டோமில்லை. இப்பொழுது மேற்குத் தேசத்திய நாஸ்திகத்தை (Materialism) மேற்கொண்டு நம் ஆண்மைத்தனத்தை இழந்து நம்மால் ஒன்றும் முடியாது என்று சொல்லும் பேடிகளாய் விட்டோம்.
இப்படி ரிஷிபுத்திரர்களாகிய நாமெல்லோரும் ஒரே குரலாய் கதறும்போது முன் இரண்டு முறை நம்மைக் காப்பாற்றிய ஶ்ரீ சங்கராசாரியார் இந்த விசைச் கைவிட்டு விடுவாரா? ஒரு நாளுமில்லை. அவர் மறுபடியும் வரத்தான் போகிறார். அதற்கு முதலடையாளம் இப்பொழுது நடந்தேறும் காலாடி பிரதிஷ்டைதான்….
காலாடியிலுள்ள இரண்டு கோவில்களில் ஒன்றில் ஶ்ரீ ஆதி சங்கராசாரியார் விக்கிரகமும் மற்றொன்றில் சாரதாம்பாள் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஶ்ரீ சிருங்கிரி ஸ்வாமியில் ஆதீனத்தில் தான் இவை எல்லாம் நடைபெற்றன. புதுவையிலிருந்த ஶ்ரீ சிவகங்கை ஸ்வாமியும் அங்கு விஜயம் செய்திருந்தார். ஶ்ரீ சிருங்ககிரி ஸ்வாமி உபன்னியாசத்தில் கேட்டுக்கொண்டது போல் நாமெல்லாரும் ஸநாதன தர்மத்தை ஸ்தாபிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.”
சனாதனத்தைக் காக்கவேண்டும், ஆரிய தர்மத்தைக் காக்கவேண்டும் என்கிற வர்ண உணர்வு கொண்ட மதவாதியாகவே பாரதியை இந்தக் கட்டுரை வெளிப்படுத்துகின்றது. “இப்பொழுது மேற்குத் தேசத்திய நாஸ்திகத்தை (Materialism) மேற்கொண்டு நம் ஆண்மைத்தனத்தை இழந்து நம்மால் ஒன்றும் முடியாது என்று சொல்லும் பேடிகளாய் விட்டோம்” என்று வெளிப்படையாகவே சொல்லும் பாரதியின் வரிகள் அவர் மார்க்சியம் குறித்து எவ்வளவு வெறுப்புணர்வும் எதிர்நிலையும் கொண்டிருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றன. 1910 இல் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் ஆர்ய தர்மத்துக்கு ஆபத்து வந்துவிட்டது என்று பதறுகின்ற பாரதி, 1917இல் சுதேசமித்திரனில் பார்ப்பனரல்லாதோர் இயக்கம் குறித்து எழுதும்போது திராவிட அடையாளம் என்பதே ஒரு சூழ்ச்சி என்று குறிப்பிடுவதையும் நோக்கவேண்டும்.
ஆரம்பகாலங்களில் பெண்விடுதலை, கற்பினை இருவர்க்கும் பொதுவில் வைப்போம் என்றெல்லாம் பாடிய பாரதி, விதவா விவாகத்தை ஆதரித்த, உடன்கட்டையேற்றத்தை எதிர்த்த பாரதி பின்னாளில் அவற்றையெல்லாம் ஆதரித்தார். கர்மயோகியில் 1910 இல் எழுதப்பட்ட கட்டுரையொன்றில் பாரதி உடன்கட்டையேற்றத்தை ஆதரித்தும் புகழ்ந்தும் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“நமது பூர்வகாலத்து ஸ்திரீகளில் பிராண நாதர்களைப் பிரிந்திருக்க மனமில்லாமல், உடன்கட்டையேறிய ஸ்திரீகள் உத்தமிகளாவார்கள். இனி, எதிர்காலத்திலே தர்மத்தின் பொருட்டாகவே வாழ்ந்து அதற்காகவே மடிந்து இதன் மூலமாகவேத் தமது நாயகர்களுடைய ஆத்மாவுடன் லயப்பட்டு நிற்கும் ஸ்திரிகளே மஹா ஸ்திரிகளாவார்கள்”
இதுபோல ஜார் சக்கரவர்த்தியின் வீழ்ச்சியின் போது எழுதிய புதிய ருஷியா என்கிற பாடல் எழுதப்பட்டது பெப்ரவரி புரட்சியை வாழ்த்தியே அன்றி ஒக்ரோபர் புரட்சியை வாழ்த்தியல்ல என்ற ஆய்வாளர்களின் நோக்கை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். நிலவுடமையாளார்களிடம் இருந்து நிலத்தைப் பறித்து லெனின் கொடுத்தை விமர்சிக்கின்ற பாரதி அதுகுறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
“லெனின் வழி சரியான வழி இல்லை. முக்கியமாக நாம் இந்தியாவிலே இருக்கிறோம் ஆதலால் இந்தியாவின் ஸாத்தியா ஸாத்தியங்களைக் கருதியே நாம் யோசனை செய்ய வேண்டும். முதலாவது இந்தியாவிலுள்ள நிலஸ்வான்களும், முதலாளிகளும் ஜரோப்பிய முதலாளிகள் நிலஸ்வான்களைப் போல் எழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடைமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகமாக விரும்ப மாட்டார்கள். எனவே கொள்கைகளுடன் கொலைகளும், சண்டைகளும், பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசியைத் தீர்ப்பதற்குரிய வழியைத்தான் நாம் தேடிக் கண்டுபிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும்.
1917 இன் நவம்பர் மாதத்தில் எழுதிய செல்வம் என்கிற இரண்டு பாகங்களாக வெளிவந்த கட்டுரைகளில் (பாரதியும் உலகமும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது) பாரதி, நிலவுடமையாளர்களே நிலமில்லாதவர்களுக்கு நிலங்களைப் பகிர்ந்துகொடுக்கவேண்டும் என்றும் மிராசுதாரர்களும் சில்லறை நிலஸ்வான்களும் ஏழை மக்களிடம் ஒரு ஒப்பந்தம் போடவேண்டும் என்று கூறி இந்தியச் சூழலிற்கான பொதுவுடமையாகப் பின்வரும் பரிந்துரையைச் செய்கின்றார்.
“கடயத்தில் மொத்தம் 30 பெரிய மிராசுதாரர்களும் பல சில்லறை நிலஸ்வான்களும் உள்ளனர். அவர்களாகவே வந்து ஏழைகளிடம் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தம் என்னவென்றால், அதாவது எங்களில் சிலரும் உங்களில் சிலரும் கூடி ‘தொழில் நிர்வாக சங்கம்’ என்றொரு சங்கம் அமைக்கப்படும். பயிர்த்தொழில், கிராம சுத்தி, கல்வி, கோயில்(மதப்பயிற்சி), உணவு, துணிகள், பாத்திரங்கள், இரும்பு, செம்பு, பொன் முதலியன சம்பந்தமாகிய நானா வகைப்பட்ட கைத்தொழில்கள். அவை இந்த கிராமத்திற்கு மொத்தம் இவ்வளவு நடைபெற வேண்டுமென்றும், அத்தொழில்களுக்கு இன்னின்ன தொழில்களுக்கு இன்னின்னார் தகுதி உடையவர் என்றும் மேற்பபடி தொழில் நிர்வாக சங்கத்தினர் தீர்மானம் செய்வார்கள்.
அந்தப்படி கிராமத்திலுள்ள அத்தனை பேரும் தொழில் செய்ய வெண்டும். அந்தத் தொழில்களுக்கு தக்கபபடியாக ஆண்,பெண், குழந்தை முதலியோர் இளைஞர் அத்தனை பேரிலும் ஒருவர் தவறாமல் எல்லாருக்கும் வயிறு நிறைய நல்ல ஆகாரம் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பிள்ளை பிள்ளை தலைமுறையாக இந்த ஒப்பந்தம் தவற மாட்டோம். இந்தப்படிக்கு இந்த ஆலயத்தில் தெய்வ சன்னதியில் குழந்தைகளின் மேல் ஆணையிட்டு ப்ரதிக்ஞை செய்து கொடுக்கிறோம். இங்ஙனம் நமக்குள் ஒப்பந்தம் ஆன விஷயத்தை எங்களில் முக்கியஸ்தர் கையெழுத்திட்டு செப்பு பட்டயம் எழுதி இந்தக் கோவிலில் அடித்து வைக்கிறோம். இங்ஙனம் ப்ரதிக்ஞை செய்து, இதில் கண்ட கொள்கைகளின் படி கிராம வாழ்க்கை நடத்தப்படுமாயின் கிராமத்தில் வறுமையாவது, அதைக் காட்டிலும் கொடியதாகிய வறுமையச்சமாவது தோன்ற இடமில்லாமல் ஒற்றுமையும் பரஸ்பர நட்பும் பரிவுணர்வும் உண்டாகும். ஒரு கிராமத்தில் இந்த ஏற்பாடு நடந்து வெற்றி காணுமிடத்து பின்னர் அதனை உலகத்தெல்லாருங் கைக்கொண்டு நன்மையடைவார்கள்.”
ஒக்டோபர் புரட்சி நடந்து ஒரு மாதத்துக்குள்ளேயே பதறியடித்துக்கொண்டு, அது இந்தியாவுக்கு வேண்டாம் என்று பழைய மொந்தையில் பழைய கள்ளாக பாரதி முன்மொழிந்திருக்கும் இந்தப் பிரேரணை பாரதிக்குள் இருக்கின்ற சனாதனியையே வெளிக்காட்டுகின்றது. உழைப்பவர்களுக்கு ஆகாரம் மட்டும் கொடுத்துவிடுகிறோம், தலை தலைமுறையாக எங்கள் நிலங்களில் நீங்கள் உழைத்துக் கொடுங்கள், ஆகாரம் நிச்சயம் என்று ஏழைத்தொழிலாளர்களை நோக்கி மிராசுதாரர்களதும் நிலஸ்வான்களினதும் பிரதிநிதியாக நின்று அழைப்புவிடுபவராக அல்லவா பாரதி அம்பலப்பட்டு நிற்கின்றார்? பாரதி மீது கட்டப்பட்டிருந்த புரட்சியாளர் என்கிற விம்பத்தை பாரதியின் கட்டுரைகளையும், கவிதைகளையும் அவை எழுதப்பட்ட கால ஒழுங்கையும் வைத்து ஆராயும்போதே இது புலப்படுகின்றது.
இதனாற்றான் பாரதி குறித்து தனது சமர்ப்பணத்தில் வ.ந. கிரிதரன் “அவரது சமூக, அரசியல், கலை, இலக்கியம் சார்ந்த தெளிவுமிகு எழுத்துகள். அவற்றில் விரவிக்கிடக்கும் ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடுகள் என்னை மிகவும் பாதித்தவை. அவரது முரண்பாடுகளை நான் அறிவுத் தாகமெடுத்து அலையும் சிந்தனையின் வெளிப்பாடுகளாகனவே காண்கின்றேன்” என்று எழுதியிருப்பதுடன் உடன்படமுடியவில்லை என்று எனது கட்டுரையில் குறிப்பிட்டேன். குறிப்பாக பாரதியின் பின்னாளையை நிலைப்பாடுகளிலும் எழுத்துகளிலும் அவர் ஆர்ய தர்மத்தையும் ஸனாதன தர்மத்தையும் காக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதையும் அவரே எழுதியிருப்பது போல “கலியுகம் ஒழிந்து மீண்டும் கிருதயுகம் வரவேண்டும். அப்போது மீண்டும் நால்வருணம் ஏற்படும். அப்போது மாதம் மும்மாரி பொழியும்” என்று நம்பியதையும் அறிவுத் தாகமெடுத்து அலையும் சிந்தனையின் வெளிப்பாடு என்றோ, அது அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்கள் என்றோ என்னால் ஒருபோதும் உடன்பட முடியாது!
பாரதி பற்றிய இந்த வாசிப்புகளை வெளிக்கொண்டுவந்ததில் வாலசா வல்லவனின் பங்கு முக்கியமானது. அவர் சிந்தனையாளனில் எழுதிய இரண்டு முக்கியமான கட்டுரைகள்:
- பொதுவுடைமை பற்றி பாரதி – https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3953-2010-02-20-09-28-31
- பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது? – https://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/3944-2018-01-21-14-05-18
“வ.ந. கிரிதரனின் கட்டுரைகள்” நூலை முன்வைத்துச் சில குறிப்புகள் என்கிற எனது கட்டுரைக்கான இணைப்பு: https://arunmozhivarman.com/2024/07/03/20240703/
வ.ந. கிரிதரனின் எதிர்வினைக்கான இணைப்பு: https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/8368-2024-02-01-18-43-57
(வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் குறித்த வ.ந. கிரிதரனின் எதிர்வினைக்கான பதிலைத் தனியாக விரைவில் எழுதுவேன்)
நன்றி: பாரதி பற்றிய புதிய திறப்பை எனக்குச் செய்த வாலசா வல்லவனுக்கு
LikeLike