கடந்த சில நாட்களில் வெளித்தெரிய வந்த இரண்டு முக்கியமான பிரச்சனைகள் குறித்து இந்த அவதானம்.
சிவபூமி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மகளிர் இல்லங்களில் இருக்கும் சிறுமியர் கட்டாயமாகத் திறந்த வெளியில் குளிக்குமாறு பணிக்கப்பட்டதாயும் அவ்வாறு அவர்கள் குளிக்கும் இடங்களை நோக்கி CCTV கமரா பொறுத்தப்பட்டதாகவும் வெளிவந்துள்ள செய்தியில் மக்கள் அறம் சார்ந்து, அவ்வாறு நடந்திருப்பது உண்மையா என்றும் நடந்திருப்பின் சிவபூமி அறக்கட்டளை, அதன் நிர்வாகிகளை பொறுப்புக் கோரும்படி கேட்டுத்தான் குரலெழுப்பியிருக்கவேண்டும். ஆனால் பிரச்சனை, அது தொடர்பாக உதயன் வெளியிட்ட செய்தியின் பிரகாரம் ஆளுனர் இந்த இல்லங்களை மூடும்படி ஆணையிட்டாரா? அவை மூடப்பட்டுவிட்டனவா என்பதிலேயே திசைமாற்றப்பட்டுவிட்டன.
இந்த இல்லங்களில் CCTV கமராக்கள் பொறுத்தப்பட்டிருந்தனவா? (பொறுத்தப்பட்டிருந்தன என்றே தெரிகின்றது) அப்படியானால் சிவபூமி அறக்கட்டளை, அதன் நிர்வாகிகள், போன்றோர் இதற்குச் செய்கின்ற பொறுப்புக் கோரல் என்ன?
000
அடுத்து சாவகச்சேரி வைத்தியசாலையில் இருந்த நிர்வாகச் சீர்கேடுகள், மருத்துவர்களின் ஒழுக்க மீறல் / ஊழல் போன்றவற்றைக் குறித்து மருத்துவர் அர்ச்சுனா இராமனாதன் முன்வைத்த குற்றச்சாற்றுகள் உண்மையென்றே தெரிகின்றது. மக்கள் ஆதரவும் அவருக்கு இருப்பதாகவே தெரிகின்றது. மக்கள் நலம் சார்ந்து உழைப்பவர்கள் அனைவரும் இந்த விடயத்தில், சொல்லப்பட்ட குற்றச்சாற்றுகளை நீக்குமுகமாக ஒன்று சேரவேண்டும். ஆனால் இங்கும் சிலர் இவற்றை அவர் பொதுவெளியில் சொன்னது சரியா, அவருக்கு அதிகாரம் இருக்கா என்று விடயத்தைத் திசை திருப்புமாறே நடந்துகொள்ளுகின்றனர்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான் (௪௱௪௰௮)
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் – புதிய உரை)
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். (௪௱௪௰௮)
— மு. வரதராசன்
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும். (௪௱௪௰௮)
— சாலமன் பாப்பையா
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும் (௪௱௪௰௮)
— மு. கருணாநிதி
Leave a comment