யாழ்ப்பாணம் அம்பனைப் பிறப்பிடமாகக் கொண்ட எஸ்.கே. விக்னேஸ்வரன் அரசியல், கலை இலக்கியச் செயற்பாடுகள், இதழியல் போன்ற பல்வேறு துறைகளில் ஆழங்காற்பட்டவர். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் காட்டிய எஸ்.கே. விக்னேஸ்வரன், வாசிப்பினூடாக இடதுசாரிக் கருத்தியல் நோக்கி நகர்கின்றார். இலங்கையில் இடதுசாரிக்கட்சிகள் செல்வாக்குடன் இருந்த எழுபதுகளில் மாணவராக அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிய இவர், தேசிய இனப்பிரச்சனை பிரதான பிரச்சனையாக உருவெடுத்த காலப்பகுதியில் தேசிய இன விடுதலைப் போராட்டத்திலும் நேரடியாக ஈடுபட்டவர். ”ஆயுதப்போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரலாறாக்கிவிடத் துணிந்தபோது நான் அதிலிருந்து விடுபட்டுப்போனேன்” என்று குறிப்பிடும் எஸ்.கே. விக்னேஸ்வரன், ஈழத்திலிருந்து வெளிவந்த, மிகமுக்கியமான உரையாடல்களை முன்னெடுத்த சரிநிகர் பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்து அதன் உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் காத்திரமான பங்காற்றியவர். மரபிலக்கியம், நவீன இலக்கியம், கூத்து, சித்தர் பாடல்கள், நிகழ்த்துகலைகள், விமர்சனம், சமூகநீதிக் கோட்பாடுகள், அமைப்பாக்கம் போன்றவற்றில் ஆழ்ந்தகன்ற ஈடுபாடும் புலமையும் கொண்ட எஸ்.கே. விக்னேஸ்வரன் தனித்துவமான பார்வையுடனும் விமர்சன பூர்வமான அணுகுமுறையுடனும் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்னெடுப்பவர். ஆளுமைகள், அனுபவங்கள், அவற்றின் வழி உரையாடல்கள் என்கிற நோக்குடன் கலைமுகத்துக்காக எடுக்கப்பட்ட நீண்ட உரையாடலின் முதற்பகுதி இந்த இதழில் வெளியாகின்றது.
- பெரும் ஆளுமைகள் அனைவரது உருவாக்கத்தினையும் நாம் ஆராயும்போது அதற்கான மூல விதை ஏதோ ஒருவிதத்தில் அவர்களது சிறுபிராயத்திலேயே அமைந்திருப்பதைக் காணுகின்றோம். உங்களது சிறுபிராய வாழ்க்கையும் வாழ்க்கைச் சூழலும் எப்படியாக இருந்தது?
‘பெரும் ஆளுமைகளுக்கு மட்டுமல்ல நம்போன்ற சாதாரணர்களுக்கும் கூட அது உண்மைதான். நான் பிறந்து வளர்ந்தது வடமராட்சி கிழக்கில் உள்ள ஒரு சிறிய கிராமம். பருத்தித்துறையிலிருந்து கிழக்காக தாளையடி நோக்கிச் செல்லும் பாதையில் அப்போது ஓரளவுக்கு பரவலாக அறியப்பட்ட குடத்தனை, நாகர்கோவில் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் இடையில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். வடபுற எல்லையாக வங்காளவிரிகுடாக் கடலையும் தென்புற எல்லையாக மண்டான் என்று எம்மால் அழைக்கப்படும் குடாநாட்டின் சதுப்புநீர் ஏரியையும் கொண்ட சிறிய கிராமம்; பெயர் அம்பன். கிட்டத்தட்ட மூன்று மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் கொண்ட இந்தக் கிராமம் பெருமளவில் முழுக்க முழுக்க விவசாயக் கிராமமே. கடலிலிருந்து கிட்டத்தட்ட இரண்டுமைல் தெற்குப்புறமான பகுதி முழுவதும் குடியிருப்புக்கள் எதுவுமற்ற பரந்த வெண்மணல் கும்பங்களும் மழைகாலத்தில் நீர் தேங்கிநிற்கும் இயற்கையாய் அமைந்த பள்ளங்களும் நிறைந்த மணற் காடு. கினியா, பாவட்டை, பாலை, முதிரை, வீரை, உயில், நாவல் (நாவற் பழக்காலத்தில் மணலில் சிறு பற்றைகள் போல வளர்ந்திருக்கும். மணலில் படுத்ததிருந்தே நாவல் பழங்களை வாயால்கடித்துப் பிடுங்கிச் சாப்பிட்டு விளையாடியிருக்கிரோம்!), கருங்காலி மற்றும் வெள்ளேரிச்ச பனை வடலிகளும் ஈச்சம் பற்றைகளும் என்று பரவலாகப் பல்வகை மரங்கள் நிறைந்த ஒரு சிறு காட்டுப் பிரதேசம். அதையண்டி பனங்கூடல்களும் தென்னஞ் சோலகளும் நிறைந்த தரவைப் பகுதி காட்டுப் பிதேசம் கிட்டத்தட்ட இரண்டு மைல் அகலமானது. உடும்பு, முயல் போன்ற வேட்டையாடப்படக்கூடிய விலங்குகளும் நரிகளும் அங்கே வசிக்கின்றன. கார்த்திகை மாதத்தில் மலரும் கார்த்திகைப் பூக்கள், காலமெல்லாம் பூக்கும் முல்லை, காட்டுமல்லிகை, அரளி என்று பூக்கள் பற்றைகளுக்கு மேலாக உயர்ந்தும் படர்ந்தும் பூத்திருக்கும் அழகை மணிக்கனக்காக நின்று ரசிக்கலாம். இந்த மணற்காட்டுப்பகுதி முடிவடையும் பகுதியில் இருந்து தெற்குப்புற்மாக உள்ள நிலம் வண்டல் மண் நிலமாகத் தொடங்கித் தெற்குக் கரையை அண்மிக்கும்போது அடர்த்தியான இறுகிய களிமண் பிரதேசமாக மாறும். இந்த நிலப்பகுதிகள் தான் கிராமத்தின் விவசாயத்திற்கான நிலம். மழையை நம்பி நெல் விதைக்கும் காலம் போக மற்றைய காலங்களில், அவற்றில் குறிப்பிடத்தக்க சில பகுதி நிலங்கள், வெங்காயம், மிளகாய், தக்காளி, கத்தரி என்று அந்த மக்களின் அன்றாட உணவுத் தேவைகளுக்கான பயிர்களைப் பயிரிடும் நிலங்களாக மாறிவிடும். நிலத்திலிருந்து ஐந்து அல்லது ஆறடி ஆழத்துக்கு வெட்டினால ஊரிக் கற்படலம் வரும். கிட்டத்தட்ட ஆறு தொடக்கம் பத்து அங்குலம் வரையான தடிப்பம் உள்ள அதை உடைத்தால், தென்னையில் இருந்து பிடுங்கிய இளநீர்க் குரும்பையைச் சீவ வரும் அதன் இளம் தேங்காய் ஓட்டைக் கொத்தி உடைக்கத் தளதளக்கும் இளநீர் போல, இந்தக் கற்படலத்தின் கீழ் தெளிந்த நீரைக் காணலாம். மரக்கறி, வெங்காயத் தோட்டங்களுக்கு நீறிறைக்கவென இப்படியான குளங்கள் வெட்டப்படும். இந்தக் குளங்களை நாம் துரவுகள் என்று அழைப்போம். சிறுதோட்டத்திற்கு நீரிறைக்க இவற்றினுள்ளே இறங்கிப் பட்டைக் கூட்டத்தில் தண்ணீர் மொண்டு வந்து ஊற்றுவோம். மிக அமைதியான கிராமம்.
தெற்கு எல்லையாக இருக்கும் ‘மண்டான்’ சதுப்புநீர் ஏரி சதுப்பு நீர்த் தாவரங்கள் அடர்ந்து வளர்ந்த ஒரு காட்டுப் பகுதி. கண்டல், பொற்பத்தை தில்லை ஆகிய சதுப்புநிலத் தாவரங்களால் நிறைந்த இந்தக் காடும் விறகுகள் வெட்டவும், மண்வீடுகள் கொட்டில்களுக்குத் தேவையான உறுதியான தடிகள் வெட்டவும் என நமது ஊர் மக்களுக்குப் பயன்பட்டு வந்தன. தில்லை மரம் பாரம் குறைந்தது. ஆழம் குறைந்த தண்ணீரிலும் மிதக்கக் கூடியது. அதனால் இதன் கொப்புகள் அல்லது கிளைகள் பிணைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு கடல் மீன்பிடிக்குப் பயன்படுத்தப்படும் கட்டுமரம் போல சேகரித்த விறகுகளை ஏற்றிக் கரைவரை இலகுவாக இழுத்துவருவதற்கான சாதனமாக நம்மூரில் பயன்படுத்தி வந்தார்கள். சேகரிக்கப்படும் விறகுகள் மாட்டு வண்டில்களில் ஏற்றப்பட்டு பருத்தித்துறையை அண்டிய பகுதிகளுக்கு சென்று விற்றுவருவதும் நமது ஊரவர்களிடையே நிலவி வந்த ஒரு தொழிலாக இருந்து வந்தது
கிராமத்தில் பெரியம்பன் கற்பகப் பிள்ளையார் ஆலயம், முருகன் ஆலயம் என ஒப்பீட்டளவில் பெரிய, பிராமண ‘ஐயரால்’ பூசிக்கப்படும் இரண்டு கோவில்களும் வேறு சில பிராமணரல்லாத ஊரவர்களால் பூசைசெய்யப்படும் கோவில்களும் உண்டு. பிள்ளையார் கோவிலில் பிள்ளையார் கதைக் காலம் மிகச் சிறப்பாக நடக்கும். பிள்ளையார் கதை படித்தல், பிள்ளையார் புராணம் படித்துப் பயன் சொல்லல், திருவெம்பாக்கால பூசைகள் நடத்தல் என்பவை வருடாவருடம் சிறப்பாக நடக்கும். இவ்வாறே முருகன் கோவிலில் கந்தப்புராணம் படித்தலும் பயன் சொல்லலுமாகிய நிகழ்வுடன் விழா கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடக்கும். இவற்றின் முக்கியத்துவமாக நான் கருதுவதென்னவென்றால், இவை அங்குள்ள மக்களிடையே இயல்பான ஐக்கியத்தையும், சிறுவர்களிடையே தமிழ் மொழி சார்ந்த அறிவில் குறிப்பிடத்தக்க அளவிலான விருத்தியையும் வளர்ப்பதில் பெரும் பங்காற்றின என்பதே. வெள்ளாளர், வண்ணார், அம்பட்டர், பள்ளர், நளவர் என்ற சாதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கு வாழ்ந்தாலும் அந்த மக்களிடையே சாதீய ரீதியான உறவுகளில் ஒருவகை இயல்பு நிலை நிலவியது என்று சொல்லலாம். சாதீய ஒடுக்குமுறை என்பது நிலவுவதற்கானான உயர் சாதியினரில் மற்றவர்கள் தங்கியிருக்கும் ஒரு நிலமை பெருமளவுக்கு நிலவாமை காரணமாக அங்கு ஒரு இயல்பான வாழ்க்கை நிலை இருந்தது என்று நினைக்கிறேன. கோவிலுடன் சம்பந்தப்பட்டு மட்டுமே தீண்டாமை என்ற விடையம் இருந்ததாகினும் நான் அங்கிருந்த காலத்தில் அவை இயல்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக நடைமுறையாக இருந்து வந்தன. நான் இப்படிச் சொல்வதற்குக் காரனம் சாதியமைப்பு சார்ந்த முரண்பாடுகள் நான் வாழ்ந்த காலத்தில் அங்கு பெரிதாக வெளிப்பட்டிருக்கவில்லை என்பதை வைத்தே. இது தாம் சாதீய அடிப்படையில் கீழ் மட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்நிலை அங்கு பெரிதாக வளர்ந்திருக்காததும், அல்லது தமது சாதி என்பது பிறப்பின் காரணமாக வந்த ஒன்று என்ற அளவில்மட்டுமான புரிதல் அவர்களிடம் நிலவியதன் காரணமாகவும் இருக்கலாம். தவிரவும் அங்கு உயர் சாதியினர் எனப்படுபவர்கள் கூட உடல் உழைப்பில் ஈடுபடும் விவசாயிகளாகவே இருந்தார்கள் என்பதையும் இத்துடன் இணைத்து நோக்கலாம். உயர் சாதியினர்க்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர்க்கும் இடையிலான தொழில் சார்ந்த உறவு மிகவும் இயல்பானதாக நடைமுறையில் இருந்தது. உதாரணமாக உயர்சாதியினரது விவசாய நிலங்களைப் பண்படுத்துதல் (தோட்டம் கொத்துதல், சாறுதல் போன்ற வேலைகள்) களை பிடுங்குதல், அறுவடை செய்தல் போன்றவற்றிற்கான வேலைகளில் கூலிகளாக வேலை செய்வதும், அதற்காக அங்கீகரிக்கப்பட்ட கூலியைப் பெற்றுக் கொள்வதும், அதைத் தர மறுத்தால் வேலைக்கு வரமுடியாது என்று சொல்லக்கூடிய நிலைமை இருந்ததுவும் காரணமாக அங்கு ஒடுக்கப்படுகிறோம் என்ற உணர் நிலை பெரிதாக உணரப்பட்டிருக்கவில்லை என்று நினைக்கிறேன். அங்குள்ள உயர்சாதியினரில் ஒடுக்கப்பட்ட சாதியினர் தங்கிவாழும் நிலமை பிரதானமாக இருக்கவில்லை என்பதே இதற்குக் காரணமாக இருந்தது என்பதே என்னுடைய புரிதல்.
எனது குடும்பத்தைப் பொறுத்தவரை எனது தாயார்வழிப் பாட்டனாரும், தந்தைவழிப் பாட்டனாரும் தமிழ், சைவ இலக்கியங்களில் ஓரளவு பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தனர். சிறுவயதிலிருந்தே என்னுடன் நெருக்கமாக இருந்த இவர்களிடமிருந்து கதைகளையும் பாடல்களையும் கேட்டறிந்தது மட்டுமல்லாமல் அவற்றை மனப்பாடம் செய்துகொள்ளவும் பழகியிருந்தேன். அம்மாவழிப் பாட்டனார் ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞரும் கூட. பலகூத்துக்களில் நடித்த அனுபவமும் சில கூத்துக்களைத் தானே பழக்குபவராக இருந்து இயக்கி நடித்த அனுபவமும் கொண்டவர். அவர் மூலமாக கூத்துக்கள் வேறு, நாடகங்கள் வேறு என்ற பகுப்பை அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது.
எங்கள் கிராமத்தில் அப்போதெல்லாம் பெண்கள் குங்குமம் வைக்கும் மரபு இருந்ததில்லை. அம்மா கோவிலில் பிரசாதமாகத் தரப்படும் குங்குமத்தைப் இட்டால் ஒழிய ஒருபோதும் சாதாரணமாக குங்குமம் இடுவதில்லை. ஆயினும் வேறு பிரதேசங்களில் உள்ள எங்களுக்கு சொந்தமான, திருமணமான பெண்கள் எல்லோரும் குங்குமம் இடுவதைப்பார்த்து அம்மாவழிப் பாட்டனாரிடம் ஏன் எங்கள் அம்மா குங்குமப் பொட்டு வைப்பதில்லை என்று நான் கேட்டதும் அதற்கு அவர் சொன்ன பதிலும் எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. பொட்டு வைப்பதையும் பூ வைப்பதையும் யாரும் விரும்பினால் வைக்கட்டும். ஆனால் திருநீறு பூசாவிட்டால் அதற்கு எந்தப் பிரயோசனமும் இல்லை என்று சொல்லி ‘நீறில்லா நெற்றி பாழ், நெய்யில்லா உண்டி பாழ்’ என்ற நல்வழியில் வரும் ஔவையாரின் பாடலைச் சுட்டிக்காட்டி குங்குமம் பற்றி அவர் எதுவும் சொல்லவிலை என்று குறிப்பிட்டதுடன் கூடவே இதெல்லாம்’இந்தியாச் சினிமாப் படங்கள்’ வந்தபின் வந்த புதுப் பழக்கம் என்று கூறியுமிருந்தார் (கிட்டத்தட்ட இதே வகையான கருத்தினை முருகன் கோவிலில் கந்தபுராண படன காலத்தில் ஒருமுறை படிப்போரும் பயன் சொல்வோருமிருந்து உரையாடிய வேளையில் அவர்கள் பேசிக்கொண்டதையும் நான் கேட்டிருக்கிறேன்). அதுபோலவே ஊரில் நடந்த அரிச்சந்திரா, காத்தவராயன் ஆகிய கூத்துக்களைப் பற்றி அவருடன் (அப்போதெல்லாம் எல்லா மேடை நிகழ்வுகளையும் கூத்து என்றே அழைப்போம்; பின்னாட்களில் கூத்து வேறு நாடகம் வேறு என்ற விடையம் தெரிய வந்த போதும்) பேசும் போது அவர் இவையெல்லாம் கூத்துக்கள் அல்ல, நாடகங்கள் என்று சொல்லுவார். உண்மையில் தமிழ்நாட்டு நாடக சபாவின் தாக்கத்தால் வந்த நாடகங்கள் தான் அவை என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன்.
தந்தை வழிப்பாட்டனார் எங்களுடனேயே தங்கியிருந்ததால் பல பாடல்களை அவர் சொல்லக் கேட்டு மனப்பாடம் செய்துகொள்ள முடிந்தது. அவர் தச்சுவேலை தெரிந்தவராகவும் இருந்தார். சிறுவயதில் மரத்தில் எனக்குத் தொட்டிலும் மூன்று சக்கரம் வைத்த தள்ளுவண்டியும் (நடைவண்டி) அவர் செய்துதந்தவை என்பதை அம்மா சொல்லியிருக்கிறார். அம்மாவழிப் பாட்டனார் எனக்கு நிறைய சிறிய சிறிய நூல்களை வாங்கிவந்து வாசிக்கத் தருவதுடன் அவற்றை மனப்பாடம் செய்யும் படியும் வலியுறுத்துவார். சிவபுராணம், நல்வழி, நன்னெறி, ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற சிறிய நூல்களை வாங்கித்தந்து என்னை மனப்பாடம் செய்ய அவர் வலியுறுத்தியது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. உண்மையில் நான் பாடசாலையில் இவற்றைப் படிக்கும் காலம் வருமுன்பே இவற்றை அறிந்திருந்தது மட்டுமின்றிப் பலவற்றை மனப்பாடமாகச் சொல்லவும் தெரிந்து வைத்திருந்தேன். எனது கிராமச் சூழலும் வீட்டுச் சூழலும் எனக்கு ஆரம்பக் கல்விசார்ந்து குறிப்பாகத் தாய்மொழிக் கல்விசார்ந்து மிகவும் வாய்ப்பானவையாகவே அமைந்திருந்தன.
- வாசிப்புப் பழக்கம் உங்களுக்கு உருவாகுவதற்கு உங்கள் குடும்பம் காரணமாக இருந்தது பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள், அது பற்றிக் குறிப்பிடமுடியுமா?
நான் முதல் சொன்னது போல எனது பாட்டன்மார் இருவரும், தாயாரும் தான் எனது வாசிப்புப் பழக்கம் விரிவடையக் காரணமாக இருந்தவர்கள். நான் வாசிப்பதில் காட்டும் ஆர்வத்தைக் கண்டு இவர்கள் எப்போதும் எனக்கு வாசிக்க யாராவது பாவித்த ஏதாவது புத்தகங்களை எங்காவது தேடிக் கொண்டுவந்து தருவதுடன் அதில் உள்ள விடயங்களை என்னைச் சொல்லச் சொல்லிக் கேட்பார்கள். கூடவே அவர்கள் இருவருமே நல்ல கதை சொல்லிகள். இரவு நேரங்களில் தூக்கம் வரும்வரை கதை சொல்வதை எனது தந்தைவழிப் பாட்டனார் தனது பொறுப்புப் போல எடுத்துக் கொண்டிருந்தார் என்பது ஞாபகம். ஆயினும் அவர்களது எல்லை பெரிதும் சமயம் சார்ந்த, இராமாயணம், மகாபாரதம் என்பவற்றோடு சம்பந்தப்பட்ட நூல்களுடனான பரிச்சயத்தையே எனக்கு அளித்திருந்தது. உதாரணமாகச் சொல்வதானால் ஒரு சில அம்புலிமாமா இதழ்கள், ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, ‘சக்கரவர்த்தித் திருமகன்’ ஆகிய நூல்கள், கிருபானந்த வாரியாரின் கந்தபுராணம் தொடர்பான ஒரு நூல் – நூலின் தலைப்பு ஞாபகம் இல்லை- என்பவை தான் எனது சிறுவயதிலேயே வாசிக்க இவர்கள் மூலமாகக் கிடைத்த புத்தகங்கள். இவற்றைவிட வேறு சில நூல்களும் இருந்தபோதும் எனது வயது காரணமாக அவற்றைப் படிக்க அப்போது என்னை அவர்கள் உண்மையில் அனுமதிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.
பின்னாளில் அந்த நூல்களை நான் எடுத்து வாசித்திருக்கிறேன்.’ ஜீவப் பிரமைக்கிய வேதாந்த ரகசியம்’ என்ற ஒரு மிகப்பருமனான நூலும் சித்தர் பாடல்கள் என்ற நூலும் எனக்கு ஞாபகத்தில் இருப்பவை. இவை பெரிய நூல்களாக இருந்ததும், எனக்கு எனது சிறுவயது காரணமாக புரிந்துகொள்ள முடியாதவை எனவும் அவர்கள் கருதியிருக்கக் கூடும். என்னுடைய அம்மா வழிப் பாட்டனார் பெரிதும் சித்தர்களது பாடல்களுடனும் அவர்களது கருத்துக்கள் பலவற்றுடனும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கூடவே, நல்லூரில் தொடங்கி, செல்வச்சன்னிதி, வல்லிபுரக்கோவில், நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலயம், வற்றாப்பளை அம்மன் ஆலயம் என்பவற்றில் தரித்து அப்படியே கால்நடையாக கிழக்கில் மட்டக்களப்பு, வெருகல் ஊடாக கதிர்காமத்துக்குக் கால்நடையாகச் செல்லும் ஒரு யாத்திரீக மரபைக் கொண்ட சித்தர்களின் கூட்டத்துடன் அவருக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவர்களில் சிலர் போகும் வழியில் அவரது இல்லத்தில் தங்கி இரண்டொரு நாட்கள் இருந்து பயணத்தைத் தொடர்வது வருடாவருடம் நடக்கும் ஒரு நிகழ்வு. சில சமயங்களில் அவர்களுடன் அவரும் யாத்திரையில் இணைந்து கொள்வதுண்டு. அவர்கள் வரும்போது எல்லாம் என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவார். எனக்குத் தேவாரங்கள் தெரிந்திருப்பதால் அவர்களது பாராட்டும் ஆசீர்வாதங்களும் கிடைக்கும். இவற்றின் மூலமாக எனக்குள் எழுந்த வாசிப்பு ஆர்வம் கைகளில் கிடைக்கும் எல்லா வகையான நூல்களையும் தேடித்தேடி வாசிக்கும் பழக்கத்தை என்னுள் வளர்த்து விட்டிருந்தது. நான் ஆறாம் வகுப்பில் படிக்கும் போது எதிர்பாராத விதமாக எங்கள் பாடசாலையில் ‘ஆறாம் வகுப்பை நடத்தமுடியாது, அதற்கான வசதி இங்கு இல்லை என்று பாடசாலைக்கு புதிதாக வந்த அதிபர் கூறி முதலாம் தவணைக்குப் பிறகு வேறு ஒரு பாடசாலைக்குப் போகவேண்டும் என்று தெரிவித்ததால் அங்கிருந்து வேறு பாடசாலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது (அப்போது ஐத்தாம் வகுப்பு வரைக்கும் மட்டுமேயாக இருந்த அம்பன் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை என்று இருந்த அந்தப் பாடசாலை இப்போது ஒரு மகாவித்தியாலயம் ஆக வளர்ந்துள்ளது). அப்போது அந்தப் பாடசாலையையும் வீட்டையும் விட்டு காங்கேசந்துறைக்குச் சென்று தங்கியிருந்து கற்கும் நிலை ஏற்பட்டது. அங்கு நூல்களை வாசிக்கும் சூழல் பெரிதாகக் கிடைக்கவில்லை. ஆனால் அது வேறு பலவிடயங்களை அறிந்துகொள்ள எனக்கு உதவிய காலமாக இருந்தது. எனது ஞாபகத்தில் அந்த ஐந்தாண்டு காலத்தில் செ.கதிர்காமதாதன் அவர்கள் எழுதிய ‘ஒரு கிராமத்துப் பையன் பாடசாலைக்குப் போகிறான்’ என்ற கதையையும் (அது தனி நூலாக வந்ததாக ஞாபகம்) வேறு சில மர்மநாவல்களையும் படித்திருக்கிறேன். பி. டி சாமி போன்ற எழுத்தாளர்களின் மர்மநாவல்களை, மதிய நேரச் செலவுக்காக தரப்படும் காசை மிச்சம் பிடித்து வாங்கியிருக்கிறேன். பின்னர் ஒன்பதாம் பத்தாம் வகுப்புகளில் நண்பர்களிடையில் பல ‘கதைப் புத்தகங்கள், மர்மநாவல்கள் பரிமாற்றம் இருந்தது. ஆசிரியர்களுக்குத் தெரியாமல் இவற்றைப் பரிமாறிக் கொள்வதுண்டு. அவற்றில் எவையும் முக்கியமான புத்தகங்களாக எனக்கு ஞாபகத்தில் இல்லை. ஆனால் நினைவில் நிற்கும் முக்கியமான ஒரு புத்தகத்தைச் சொல்வதானால் அது புதுமைலோலன் எழுதிய ‘தடுப்புக் காவலில் நாம்’ என்ற நூல். ஒருவகையில் அன்றைய அரசியலை புரியத்தொடங்கிய காலத்தில் அதன் பாத்திரம் மிக முக்கியமானது என்றே நினைக்கிறேன்.
.
3. சமூகம் பற்றிய அக்கறை / அரசியல் பிரக்ஞை உங்களுக்கு உருவாவதற்கும் இந்தச் சூழல் காரணமாக இருந்ததா? எப்படி?
சமூகம் பற்றிய/அரசியல் பிரக்ஞை உருவாகியதற்கு இந்தச் சூழல் காரணம் என்று சொல்லமாட்டேன். எனது வீட்டுச்சூழலோ, கிராமச் சூழலோ அரசியல் பிரக்ஞையை வளர்க்கக் காரணமாக இருந்திருக்கவில்லை. ஆனால் அந்த வீட்டுச் சூழல் தான் சரியானவை, உண்மையானவை, நியாயமானவை என்பவற்றின் பக்கமாக நிற்கவேண்டும் என்ற அடிப்படையான எண்ணக் கருக்கள் என்னுள் வளர்வதற்கு காரணமாக இருந்தது என்று நினைக்கிறேன். குறிப்பாக அந்தவயதில் மேற்சொன்ன நூல்களை நான் படிப்பதற்கு என் வீட்டுச் சூழலே காரணமாக இருந்தது என்றவகையில் அப்படிச் சொல்லலாம். ஆனால் சமூகம் பற்றிய அக்கறை, அரசியல் பிரக்ஞை என்பவற்றை உண்மையில் நான்தான் வீட்டில் கொண்டுவர முயன்றேன் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு நூலகச் செயற்பாட்டை ஆரம்பித்து அதனூடாக அதை வளர்க்க முனைந்தேன். அதற்குமேல் அது செல்லவில்லை, ஆனால் நான் கூறிய காங்கேசந்துறையில் படித்தகாலம் அரசியல் பற்றி பலரும் பரவலாகப் பேசத்தொடங்கிய ஒரு முக்கியமான காலகட்டமாகும்.
காங்கேசந்துறையில் இருந்த ‘காங்கேசந்துறை ஆங்கில மகா வித்தியாலயம்’ என்ற பாடசாலையில் நான் கற்றுக்கொண்டிருந்த காலம் பரபரப்பாக அரசியல் பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்த காலமாக இருந்தது. அது தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் அவர்களது தொகுதி என்பதால் அது அரசியலில் மிகவும் உணர்வுத்துடிப்புள்ள பிரதேசமாக இருந்தது. 1970 இல் அறுதிப் பெருமான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் மிகமோசமான இன ஒடுக்கல் திட்டங்களைக் கொண்ட ஓர் ஆட்சியை நடத்த ஆரம்பித்தது. இந்த அரசுக்கும் அதன் திட்டமிட்ட இன ஒதுக்கல் நடவடிக்கைகளுக்கும் எதிரான பரவலான எதிர்ப்புணர்வு தமிழ்மக்கள் மத்தியில் தீவிரமாக வளர ஆரம்பித்தது. தனக்குக் கிடைத்த பாராளுமன்றப் பெரும்பான்மை காரணமாக நடைமுறையில் இருந்த சோல்பரி அரசியலமைப்புத் திட்டத்தை மாற்றிப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியது. அந்த அரசியலமைப்புச் சட்டம் தமிழர்களை நாட்டின் இரண்டாந்தரப் பிரஜைகளாக மாற்றும் விதத்திலான ஒரு சிங்கள பௌத்த அரசியலமைப்பாக அமையப்போவதாகத் தமிழரசுக் கட்சி கருதியது. அந்தத் திருத்தம் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழி சிங்களம் மட்டுமே என்ற கொள்கையைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் சிறுபான்மை மக்களுக்கு ஏற்கனவே இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அகற்றி, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவதாகவும் அமைந்திருந்தது. இதை முற்று முழுதாக எதிர்த்த தமிழரசுக் கட்சி, அது தொடர்பான கொள்கைவிளக்கக் கூட்டங்களைப் பரவலாக நடத்தி தமிழ் மக்களை அதற்கு எதிராக திரட்டுவதில் இறங்கியது. தமிழ் மக்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கோரிக்கையுடன் அது நடத்திய மக்களை அணிதிரட்டுவதற்கான நடவடிக்கைகள், எங்கள் பாடசாலையிலும் மேல்வகுப்பு மாணவர்களை ஆகர்சித்திருந்தது. சரியாகச் சொல்வதானால் அரசாங்கத்துக்கு எதிராகப் பரவலாக இளைஞர்கள் அக் கட்சியுடன் அணிதிரளும் போக்கு வலுவடைந்தது. இந்த வளர்ச்சியில் தமிழரசுக் கட்சியின் சுதந்திரன் இதழும் ஏனைய தமிழ்ப் பத்திரிகைகளும் பெரும்ங்காற்றின. பத்திரிகைகளில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய செய்திகள் பரவலாக வெளிவரத் தொடக்கியிருந்தன. பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இந்த விடையம் ஒரு பேசுபொருளாக மெல்லமெல்ல வளரத் தொடங்கியிருந்தது. அப்போது 14 வயதுச் சிறுவனாக இருந்த எனக்கு பெரிதாக எதுவும் புரியாவிட்டாலும் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக இயங்குகின்றது என்ற புரிதல் மட்டும் எங்களுக்குத் தெரிந்திருந்தது.
இவையெல்லாம் எனது ‘கண்டதையும் வாசிக்கும்’ பழக்கத்தாலும் அங்குள்ள மாணவர்களுடன் விவாதிப்பதாலும் அறிந்துகொண்ட தகவல்கள். கூடவே தமிழரசுக் கட்சியின் போராட்டவரலாறுகள் பற்றிய சில பிரசுரங்களையும் வாசிக்கக் கிடைத்தது எனக்கு நினைவில் உள்ளது. குறிப்பாக ‘தடுப்புக் காவலில்’ நாம் என்ற புதுமைலோலன் அவர்களால் எழுதப்பட்ட நூல், மகளுக்கு எழுதிய கடிதங்கள் என்ற வடிவில் அப்போது வெளிவந்திருந்த நூல் வாசிக்கக் கிடைத்தது போன்றவற்றின் மூலமாக ஒருவகை அரசியல் ஆர்வமும் என்னிடம் தொற்றிக் கொண்டிருந்தது. அரசாங்கம் தமிழருக்கு எதிராக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டபோதும், எனது வகுப்பில் உள்ள மாணவர்களில் சிலர் சிங்களவரை ‘மோட்டுச் சிங்களவங்கள்’ என்று மிகச் சாதாரணமாக இகழ்ந்து கதைப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாமல் இருந்தது. ‘எல்லாரும் அப்பிடியில்லை’ என்று நான் சொல்லி அதை மறுத்திருக்கிறேன். ஆராவது சிங்களவரை உங்களுக்கு நேரில் தெரியுமா என்று கேட்டும் இருக்கிறேன். அதற்கு அவர்கள் உனக்குத் தெரியுமா? என்று திருப்பிக் கேட்பார்கள். நான் தெரியும் என்று சொல்லுவேன்.
நான் ஆறாம் வகுப்பில் சேர்வதற்காகவென வந்து காங்கேசந்துறை மகாவித்தியாலயத்தில் சேர்ந்தது எனது பெரிய தகப்பனாரது வீட்டில் நின்று படிக்க முடியும் என்பதனால் தான். அவருக்கு என்னைவிட வயதில் சில மாதங்கள் மூத்த மகனொருவரும் அதே வகுப்பில் படித்துக் கொண்டிருப்பதால் இருவருமாக ஒரே பாடசாலையில் படிக்கலாம் என்று எமது பெற்ரோர் ஒழுங்கு செய்திருந்தனர். எனது பெரிய தந்தையார் காங்கேசந்துறை சீமெந்த்துத் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். அவருடன் வேலை செய்த சில நெருங்கிய சிங்கள நண்பர்கள் அவருக்கு இருந்தார்கள். சனி, ஞாயிறு தினங்களில் மாலை நேரத்தில் அவரது நண்பர்களில் ஒருவரான சீமன் சிங்கோ என்பவரது வீட்டுக்கு எங்கள் இருவரையும் செல்லும்படியும், அவர்கள் வீட்டிலிருக்கும் அவரது மகளான சுமித்திரா அக்காவிடம் சிங்களமும் ஆங்கிலமும் படிக்கும் படியும் ஒழுங்கு செய்திருந்தார். அந்த அக்கா மட்டுமல்ல அந்தக் குடும்பமும், அவர்களுக்கு அயலில் இருந்த சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த எல்லோருமே நன்றாகத் தமிழ் பேசுவார்கள். அந்த அக்கா எங்கள் இருவரையும் லொக்குமல்லி, பொடிமல்லி (பெரிய தம்பி, சின்னத் தம்பி) என்று அன்பாக அழைப்பார். அவரிடம் படிக்கப் போவதால் தொழிற்சாலை அருகில் இருந்த தொழிலாளர் குடியிருப்புக்களில் வசித்துவந்த எல்லாச் சிங்களக் குடும்பங்களுடனும் எங்களுக்குப் பரிச்சயம் இருந்தது. அங்குள்ள சிங்கள நண்பர்களுடன் விளையாட்டுக்களிலும் நாங்கள் பங்குபற்றுவோம். அவர்கள் அனைவருமே நன்றாகத் தமிழ் பேசினார்கள். நல்ல விருப்பமாக எங்களுடன் பழகினார்கள். தங்கள் வீட்டில் மட்டும் சிங்களம் பேசுவார்கள். இந்த அநுபவத்தால் எனது வகுப்பு மாணவர்கள் பொத்தாம் பொதுவாக ‘மோட்டுச் சிங்களவங்கள்’ என்று குறிப்பிடுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது.
ஆனால் அங்கு படித்த காலங்களில் குடியரசு தினம், சுதந்திரதினம் என்பவை துக்க தினங்களாகக் கொண்டாடப்படத் தொடங்கிவிட்டிருந்தன. பாடசாலைகளில் தேசிய கீதம் பாடுவதை எதிர்த்தல் போன்றன மாணவர்கள் மட்டத்தில் நடப்பதை தமிழரசுக் கட்சியின் சார்பில் அன்றைய தமிழ் இளைஞர்கள் ஊக்குவித்துவந்தனர். என்னுடைய வகுப்பில் இளைஞர் பேரவை புஸ்பராசாவின் சகோதரனும் ஒரு தங்கையும் படித்துவந்தார்கள். வரதராசா இத்தகைய போராட்டங்களை முக்கியமானவை என எங்களுடன் பேசுவான். தேசிய கீதம் பாடசாலையில் பாடும்போது எழுந்துநிற்கும் மரபை மறுத்து தான் எழுந்து நிற்க மாட்டேன் என்று கூறுவான். இதற்காக ஆசிரியர்களிடம் அவன் பலதடவை அடிவாங்கியிருக்கிறான். அவன் அடிவாங்கிய பின்னும் அசராமல் இருந்தது எனக்கு அவன் மீது ஒருவகையான மதிப்பை ஏற்படுத்தியது. ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதைத்தான் தான் என்னைப் பொறுத்தவரை அதுவரை காலமும் கடைப்பிடிக்கக் கற்றுக் கொடுக்கப்பட்டிருந்தேன். அவனுக்கு அடிவிழுந்தபின்னும் அவன் அசாராமல் இருந்தது எனக்குப் பெரும் ஆச்சரியமாக இருந்தது. அவனை அடித்த ஆசிரியர் கூட எங்களுக்கு உயிரியல் கற்பித்த அவனது ஊரான மயிலிட்டியைச் சேர்ந்த ஆசிரியர்தான். எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியரும் கூட. அதனால் தான் அன்று அச்சம்பவம்பற்றி அவனுடன் உரையாடும் போது ஏன் இப்படி நடந்துகொண்டாய் என்று நான் அவனிடம் கேட்டேன். அவனது கைகளில் அடிகள் பட்ட இடங்கள் பெரும் தழும்புகளாக வீங்கியிருந்தன. அந்த உரையாடலின் போதுதான் தமிழரசுக் கட்சியிலும், இளைஞர் பேரவையிலும் தேசிய கீதம் என்பது அப்போது பகிஸ்கரிப்புக்குரிய ஒரு விடயமாகி விட்டிருந்ததை நான் அறிந்துகொண்டேன். அதன் பின் அவனுடன் எனக்கு ஒரு புதிய வகையான உறவு ஏற்பட்டது என்று நினைக்கிறேன். அவன் லண்டன் முரசு, சுதந்திரன் ஆகிய பத்திரிகையின் பிரதிகளை எனக்கு வாசிக்கத் தந்தது ஞாபகம் இருக்கிறது. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் தொடர்பான ஆர்வம் அரசியலோடு சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகளை தேடி வாசிக்கும் ஆர்வத்தை என்னுள் வளர்த்துவிட்டதாக எண்ணுகிறேன். பின்னர் நான் திரும்ப எனது ஊருக்கு வந்து பருத்தித்துறையில் உயர்தர வகுப்புப் படிக்கத் தொடங்கியபோது எனக்கு நிறைய நூல்களையும் சஞ்சிகைகளையும் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கூடவே அந்தப் பாடசாலையில் இடதுசாரியக் கருத்துக்கள் கொண்ட ஆசிரியர்களும் இருந்தார்கள். இதன் காரணமாக தமிழ் அரசியல், இடதுசாரி அரசியல் இரண்டும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை வாசிப்பதும் அவை பற்றி நண்பர்களுடன் விவாதிப்பதுமான ஒரு சூழல் உருவாகிற்று. இப்படித்தான் எனது அரசியற் பிரக்ஞை ஆரம்பமானதாக நினைக்கிறேன். ஆனால் இந்தப் பிரக்ஞை ஏற்படத்தொடங்கிய காலத்தில் எனது குடும்பம், கிராமம், கிராமத்தில் உள்ள சாதீய ஒழுங்குமுறை என்பவை தொடர்பாக சிந்திக்கவும் நண்பர்களுடன் உரையாடவும், இவற்றையெல்லாம் பேசக்கூடிய ஒரு சூழலை உருவாக்கும் விதமாக ஒரு நூல் நிலையத்தையும் இலக்கிய சஞ்சிகை ஒன்றை கையெழுத்துப் பிரதியாக கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கினேன். இதைத் தொடங்கிய காலத்தில் எனது குடும்பத்தவர்களில் அதையிட்டு அம்மா தவிர வேறு யாரும் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்த வாசிப்புகளின் ஊடாக, குறிப்பாக கோவூர் அவர்களது நூல்கள் போன்றவற்றை வாசித்ததுடன் பருத்தித் துறையிலும் நெல்லியடியிலும் அவரால் நடாத்தப்பட்ட கூட்டங்களில் அவரது பேச்சுக்களையும் கேட்டதால் மெல்ல மெல்லமாக எனது கடவுள் நம்பிக்கை கிட்டத்தட்ட முற்றாகவே இல்லாமல் போய்விட்டதும் குடும்பத்தவர்களது ஆர்வம் காட்டாமைக்கு ஒரு காரணமாக இருந்தது எனலாம்.
இப்படித்தான் எனது அரசியற் பிரக்ஞை ஆரம்பமானதாக நினைக்கிறேன்.
4. பாடசாலையும் ஆசிரியர்களின் தாக்கமும் மாணவர்களின் ஆளுமையத் தீர்மாணிப்பதில் காத்திரமான பங்குவகிக்கின்றார்கள் என்று நம்புகின்றேன். உங்கள் சிறுவயதில் பாடசாலைக் கல்வியும் ஆசிரியர்களின் பங்கும் உங்களது ஆளுமை உருவாக்கத்தில் எப்படி பங்காற்றின
இந்த இடத்தில் நமது ஊரர்ப் பாடசாலையில் எங்களுக்கு நாலாம் வகுப்பிலிருந்து கணிதமும் தமிழும் ஆங்கிலமும் கற்பித்து வந்த ஆசிரியர் சிவபாதசுந்தரம் அவர்கள் பற்றிச் சொல்வது முக்கியம். தென் புலோலியைச் சேர்ந்த இவர் தான் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் என்னுடைய ஆர்வம் வளர்வதற்கான அடித்தளத்தைப் போட்டவர். அவர் தமிழில் அப்போது எங்களது பாடப்புத்தகத்தில் இருந்த நளவெண்பா உட்பட்ட அனைத்துக் கவிகளையும் கற்பிக்கும் பாங்கு மிகவும் மனதில் ஆழப் பதியும் தன்மைவாய்ந்தது. பெரும்பாலான அப்பாடல்களை அப்போதே மாணவர்களை மனனம் செய்ய வைப்பதிலும் அவர் மிகவும் கவனம் செலுத்தினார். வெண்பாவை நீங்களும் எழுதலாம் என்று எமக்கு வெண்பா எழுத ஊக்கமளித்தார். புலோலியூர் பேரறிஞர் கந்தமுருகேசனாரின் மாணவராக இருந்ததன் காரணமாக அவர் மிகவும் முற்போக்கான கொள்கைகளைக் கொண்டவராக இருந்தார். தீண்டாமை என்பது ஒரு சமூக ஒழுங்கு போல அங்கு நடைமுறையில் இருந்ததால் பாடசாலைக் கிணற்றில் அனைத்து மாணவர்களும் தண்னீர் அள்ளுவது என்ற முறைமை இருக்கவில்லை. இதை அவதானித்த அவர் அதை மாற்றியமைத்து, அனைத்து மாணவர்களும் பாடாலைக் கிணற்றில் தண்ணீர் அள்ளமுடியும் என்ற விதியை அங்கு முதன்முதலாகக் கொண்டுவந்தார். மேலதிக நேரமெடுத்து மாணவர்களுக்கு மிகவும் அக்கறையுடன் கற்பித்து வந்த அதேவேளை மிகவும் கண்டிப்பான ஆசிரியராகவும் இருந்தார். எமது பாடத்திட்டத்தில் இருந்த தெரிவு செய்யப்பட்ட அத்தனை நளவெண்பா பாடல்களையும் எங்களைப் மனப் பாடமாக்க வைத்த அவர் உங்களாலும் வெண்பா எழுத முடியும் என்று எங்களையும் எழுதும்படி ஊக்குவித்தார். எங்களால் அப்படியெல்லாம் எழுதமுடியுமா என்ற வியப்பில் நான் ‘உங்களால் எழுத முடியுமா?’ என்று அவரிடம் நேரிலேயே கேட்டுவிட்டேன். அவர் கோபப்படவில்லை. ‘புகழேந்தியார் போல் நளவெண்பா எழுதச் சொல்லி நான் சொல்லவில்லை. நீங்கள் நினைக்கும் ஏதாவதொன்றை அந்த வெண்பா வடிவத்தில் எழுதுங்கள் என்றுதான் நான் சொன்னேன். எழுதிப்பாருங்கள். உங்களுக்கு முடியும். இப்ப நான் விக்கி கேட்டதுக்காக ஒரு வெண்பா எழுதுகிறேன் என்று கூறி கரும்பலகையில் சோக்குக் கட்டியால் அவரது முத்தான எழுத்தில் இப்படி எழுதினார்:
விக்கிதன் சொல்லால் வழிவே றில்லாது
திக்கித் திணறித் தெண்டித்தேன் – எக்காலும்
படித்தோர் பரவும் பழந்தமிழிற் பாருமென
முடித்தேன் ஒருவெண் பா!
இது எனக்கு ஒரு பெரிய பெருமிதத்தையும் உத்வேகத்தையும் அந்த நேரத்தில் தந்தது. ‘பாடல் பெற்ற தலங்கள்’ மாதிரி இவனொரு பாடல் பெற்ற பெடியன்’ என்று எனக்குப் பக்கத்தில் இருந்த மாணவன் சிரித்துக் கொண்டே சொல்ல வகுப்பே அதிர்ந்தது.
கூடவே, பாடப்புத்தகங்களுக்கு மேலாக, வேறு நூல்களையும் வாசிக்கவேண்டும் என்று எங்களை அவர் ஊக்குவித்தார். அக்காலத்தில் வெளிவந்த அம்புலி மாமா இதழை வாசிக்கும் படி அவர் ஊக்குவித்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அப்போது நாங்கள் படித்த வகுப்புகளுக்கு அடுத்த வருடம் வரும் மாணவர்களுக்கு தமிழுக்கான பாடநூல் தொடர்ந்து புதிதாக வரத் தொடங்கியிருந்தது. அதனால் அவற்றையும் வாங்கி அவற்றிலுள்ள கதைகளையும் (ஒரு சிறுகதை அனேகமாக இருக்கும்) வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தேன். அப்படி வாசித்த கதைகளில் இன்றும் ஞாபகம் இருப்பது தாளையடி சபாரத்தினம் எழுதிய ‘குருவின் சதி’ என்ற சிறுகதை.
கிட்டத்தட்ட அடுத்த ஐந்துவருடங்களின் பின் மீண்டும் ஊருக்குவந்து கல்வி கற்கத் தொடங்கிய போது எனது வாசிப்புக்கு பெருமளவில் உதவியது பருத்தித்துறை சிவன் கோவிலடி நூலகமே. கூடவே பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களிடம் மாணவர்களது வாசிப்பு. விவாதம் என்பவற்றை ஊக்குவிக்கும் போக்குகள் முன்னைய பாடசாலையை விட அதிகமாக இருந்தன. பாடசாலையில் ஒரு கையெழுத்துப் பிரதி சஞ்சிகையும் நண்பர் ஆனந்த நடேசன் என்பவரால் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்தது. இது அப்பத்திரிகையில் எழுதும் ஆர்வத்தை எனக்கு ஊட்டியது. அங்கு ஒரு மாணவர் இசைக்குழுவும் இருந்தது. அந்த இசைக்குழுவுக்குப் பாடல்கள் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.
5. தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி போன்ற கட்சிகள் தமிழ்மக்கள் மத்தியில் பலமாகச் செல்வாக்குச் செலுத்திய காலகட்டத்தில் இடதுசாரிச் சிந்தனைகள் மீது சாய்வுகொண்டவராக உங்கள் ஆரம்பகாலங்களிலேயே நீங்கள் இருந்திருக்கின்றீர்கள், இது எவ்வாறு அமைந்தது?
1972இல் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமிழர் கூட்டமைப்பு என இணைந்து 1974 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் இயங்கத் தொடங்கியகாலம் இளைஞர்கள் மாணவர்களிடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் பரவலாக அரசியல் விடயங்கள் பேசப்படும் காலமாக இருந்தது. நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்தச் சூழலில் அரசியல் பேசுவதும் பேசப்படுவதைக் கேட்பதும் நடந்துகொண்டு தான் இருந்தது. 1974 ஒரு முக்கியமான வருடம். யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சிமாநாடு நடந்ததும் அதன் இறுதி நாளன்று பொலிசார் அதைக் குழப்ப எத்தனித்ததின் தொடர்ச்சியாக ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்ட சம்பவம் எல்லோருக்கும் பேரதிர்ச்சியைத் தந்த சம்பவமாக அமைந்தது. அப்போது நான் பருத்தித்துறைக்குப் படிக்க வந்துவிட்டேன். சம்பவம் நடந்தபோது எங்களுக்கான உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்படவில்லை என்று நினைவு. மாநாட்டின் இறுதி நாளன்று நான் ஊரில் இருந்ததால் நடந்த சம்பபவங்களை மறு நாளே கேள்விப்பட்டேன். பத்திரிகைகளில் வெளிவந்திருந்த செய்திகள் அரசாங்கத்தின் மீது மிகவும் கோபத்துடன் விமர்சிப்பவையாக இருந்தன. கிட்டத்தட்ட அந்த ஒன்பதுபேரும் கொல்லப்பட்டதற்குக் காரணமே அரசாங்கம் தானென்றும், மாநாட்டைக் குழப்பவென பொலிசார் திட்டமிட்டு அனுப்பப்பட்டார்கள் என்றும் பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்த செய்திகள் தெரிவித்தன. உண்மையில் இந்தக் காலம் எனது சிந்தனை, அரசியல் பார்வை என்பவை தொடர்பான பெரும் கேள்விகளுடன் நான் போராடிக் கொண்டிருந்த என்னளவில் முக்கியமான ஒரு காலம் என்று சொல்லலாம்.
நான் முன்னரே சொன்னது போல பாடசாலையில் கற்பித்த இடதுசாரிய கருத்துக்கள் கொண்ட ஆசிரியர்கள், அக்காலத்துத் தமிழ் அரசியல் தொடர்பாக சொல்லும் விமர்சனங்கள் என்று எல்லாவிதமான அரசியல் கருத்துக்களுடனும் பரிச்சயம் ஏற்படத் தொடங்கிய காலம் எனலாம். உண்மையில் 1974 முதல் 1977 வரையான காலம் பாடசாலைக் கல்விக்கு மேலாக சமூகம், அரசியல் என்பவை குறித்த மிகவும் முக்கியமான பல கேள்விகளுடனும் விவாதங்களுடனும் கழிந்த, அவற்றோடு சம்பந்தப்பட்ட பத்திரிகைகள், நூல்கள் என்பவற்றை வாசித்தல், அவை பற்றி உரையாடல் என்று கழிந்த காலம் எனலாம். இந்தக் காலத்திய எனது வயதோடொத்த வயதுள்ள அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் இது ஒரு பெரும்போக்காக இருந்தது என்று சொல்லலாம். இக்காலத்தில் சுதந்திரனை நான் எவ்வளவு ஆர்வமுடன் வாசித்தேனோ அவ்வளவு ஆர்வத்துடன் இடதுசாரிக் கட்சிகளது பத்திரிகைகளையும் கூட ஆர்வமுடன் வாசித்து வந்தேன். கூடவே கலை இலக்கியம் சார்ந்த நூல்களையும் வாசிக்கும் பழக்கம் உருவாகிவிட்டிருந்தது. உண்மையில் எனது இந்த வாசிப்புத்தான் இலங்கையில் இருந்த இடதுசாரிக் கட்சிகளின் பத்திரிகைகளை விட அதிகமாக என்னை இடதுசாரியக் கருத்துருவாக்கத்தைச் சார்ந்த ஒரு பார்வையை நான் வளர்த்துக் கொள்ளக் காரணமாக இருந்தது என்பதே சரியானது. நூலகத்தில் ஜெயகாந்தனின் நூல்களை வாசிக்கக் கிடைத்த வாய்ப்புத்தான் எனக்கு ஒரு தெளிவான பார்வையை நோக்கிச் சிந்திக்கும் திருப்பத்தை என்னில் ஏற்படுத்தியது எனலாம். அதன்பின்னரே இடதுசாரிய முற்போக்கு எழுத்தாளர்களை நான் அடையாளம் காண்கிறேன்.
ஒருபுறம் அன்றைய யதார்த்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் தமிழ் மொழிசார்ந்தும், தமிழ் மக்கள் சார்ந்தும் கொண்டுள்ள அணுகுமுறை ஒருவகையில் பௌத்த சிங்கள இனவாதமாக உருப்பெற்று வருவதை வெளிப்படையாகவே அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. அன்றைய இடதுசாரிய அமைப்புக்கள் சொல்லும் கருத்துக்கள் கொள்கைகள் என்பன எனக்கு ஆர்வமூட்டுபவையாகவும், நியாயமானவையாகவும் இருந்தன என்ற போதும், சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தை நிபந்தனையற்று அவர்கள் ஆதரிப்பதை என்னால் ஏற்க முடியாமல் இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போது பேசிவந்த விடயங்களும், சிறிமாவோவின் அரசாங்கம் கொண்டுவந்த புதிய அரசியலமைப்புச் சட்டம், அதுவரை இங்கிலாந்துக்குக் கீழ் டொமினியன் அந்தஸ்து நாடாக இயங்கிய இலங்கையை சுதந்திரமான குடியரசாக மாறி அதன் பெயரை சிறீலங்கா என மாற்றியமைத்ததும், அதன் பின்னான அதன் நடவடிக்கைகளும் முற்றுமுழுதாக தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக ஒதுக்கும் விதத்தில் கொண்டுவரப்பட்டதாகவே எனது அறிவுக்கும் பட்டது. இதன் காரணமாக இதை எதிர்த்து இளைஞர்களிடையே பலத்த அளவிலான விவாதங்கள் நடந்தன. இடதுசாரிக் கட்சிகள் இந்தக் குடியரசு உருவாகியதை வாழ்த்திய அளவுக்கு, நாட்டுக்கான பெயரை சிறீலங்கா என்று மாற்றியதை ஒரு பிரச்சினையாகக் கணக்கெடுக்கவே இல்லை. ஆனால் தமிழரசுக் கட்சி இதை எதிர்த்தது. தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளுடனான எந்த உடன்பாடுகளும் இன்றி, அவர்கள் முன்வைத்த முக்கியமான ஆறு அம்சக் கோரிக்கைகளைக் கணக்கிலேயே எடுக்காமல், உருவாக்கப்பட்ட இந்தக் குடியரசு அரசியலமைப்பில் அவை கணக்கெடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி அதன் காரணமாக தம்மால் இந்த புதிய அரசமைப்பின் மீது நம்பிக்கைவைக்க முடியாது என்று எதிர்த்து நின்றது. இத்தகைய ஒரு சூழலில், தமிழ் மக்கள் தாம் ஒரு தனிநாடாகப் பிரிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என உணர்வதால், தமிழரசுக்கட்சி அதற்காக போராடவுள்ளது என அறிவித்தது. இலங்கை அரசாங்கம் இது பற்றி அலட்டிக் கொள்ளாத நிலையில் தான் இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக்கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி (TUF) என்னும் ஓர் அமைப்பை திருகோணமலையில் வைத்து உருவாக்கின. இது, மிகவும் முக்கியமான ஒரு அரசியல் முடிவு என்றே நான் அப்போது கருதினேன். இடதுசாரிய பத்திரிகைகள், வந்துள்ள அரசாங்கம் மக்கள் அரசாங்கம் என்றும், தமிழ்க்கட்சிகள் இதை எதிர்த்து இனவாதம் பேசுகின்றன என்றும் கூறியதை என்னால் ஒப்பமுடியவில்லை. அதன் பின் செல்வநாயகம் அவர்கள் தனது காங்கேசந்துறை தொகுதிக்கான பாரளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, புதிதாக ஒரு இடைத் தேர்தலில் நமது மக்கள் இப் புதிய அரசியலமைப்பை ஏற்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களது அமோக ஆதரவைப் பெற்று மீண்டும் பாராளுமன்றத்துக்கு வந்து நிரூபிக்கிறேன் என்று கூறி வெளியேறுகிறார். ஆனால் அரசாங்கம் உடனடியாகத் தேர்தலை வைக்காமல் கிட்டத்தட்ட 3 வருடங்கள் இழுத்தடித்துவிட்டு 1975 இல் இடைத்தேர்தலை நடாத்தியது. கூறியது போலவே அமோக வெற்றியுடன் அவர் மீண்டும் பாராளுமன்றத்துக்கு சென்றார். ஆயினும் அரசாங்கம் மக்களது அந்தத் தீர்ப்பை எதிர்பார்த்தது போலவே கணக்கில் எடுக்கவில்லை. இந்த இடைக் காலங்களில் இளைஞர்கள் மத்தியில், வன்முறை மீதான ஆர்வம் படிப்படியாக வளரத் தொடங்கிவிட்டிருந்தது. இடதுசாரி அமைப்புக்களை சேர்ந்த பத்திரிகைகள் தமிழ் மக்களது உரிமை தொடர்பான கோரிக்கையை வெறும் இனவாதக் கோரிக்கையாகப் பார்த்து நிராகரிக்கும் போக்கைக் கொண்டிருந்தது எனக்கு அவர்கள் மீது ஒருவகை எரிச்சல் உணர்வு ஏற்படக் காரணமாக இருந்தது. அதேவேளை, சாதீயத்துக்கும் தீண்டாமை ஒழிப்புக்கும் எதிரான அவர்களது போராட்ட வரலாறு, அவர்கள் அறிமுகம் செய்த இலக்கியம் சார்ந்த உரையாடல்கள் என்பவற்றில் எனக்கு ஆர்வம் வளர்ந்துகொண்டே இருந்தது. சோவியத், சீன நூல்களின் மொழிபெயர்ப்புக்களை (அவை, பெரிதும் நாவல்கள், அல்லது சிறுகதைத் தொகுப்புகளாக இருக்கும்) அவர்களது தொடர்புகளினூடாகப் பெற்று வாசித்தும் விவாதித்தும் வந்தேன். அவர்களிடம் பெற்றுக்கொண்ட நூல்களிலிருந்தும் அவர்களுடனான உரையாடல்களிலிருந்தும் அவர்களிடையே இருந்த அணிகளிடையே ஏற்பட்ட பிளவுகள் அவற்றுக்கான காரனங்கள் என்ன என்பவை பற்றிய தகவல்களையும் அவற்றுக்கான காரணங்களாக அவர்கள் சொல்லும் கருத்துக்களையும் பற்றித் துருவித் துருவி கேட்டு அறிந்துகொண்டேன். அவர்களில் பலரும் அக்காலத்திலேயே தமிழ் மக்களது பிரச்சினைக்கான ஒரு நியாயமான தீர்வு அவசியம் தான். ஆனால் கூட்டணியின் வழிமுறை சிங்கள இனவாதத்திற்கு மாற்றான தமிழ் இனவாதம் தான் என்றகருத்தைக் கொண்டிருந்தனர். அவர்களது அந்தக் கருத்துடன் எனக்கு உடன்பாடு இருந்தது. அவர்கள் அப்போது ஒரு கட்சியாக பெரியளவில் இயங்குபவர்களாக இருக்கவில்லை. தவிரவும் அவர்களது கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்வர்கள், இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்ததையிட்டு அதிருப்தியுற்வர்களாகவும் இருந்தார்கள். குறிப்பாக அவர்களுக்கு தமிழ் மக்கள் ஒரு இனம், அவர்கள் விரும்பினால் பிரிந்து போவதற்கு ஏன் முடியாது, தாங்கள் தனியாக இயங்க அவர்களுக்கு உரிமை இருந்தால் தான் அது ஜனநாயகம் என்று நான் அவர்களுடன் வாதாடி இருக்கிறேன் (அப்போதெல்லாம் மாக்சிய இலக்கியத்தில் சுயநிர்ணய உரிமை பற்றிய விடயங்கள் பேசப்பட்டிருப்பது பற்றி நான் அறிந்திருக்கவில்லை). பாதிக்கப்படும் மக்கள் தாமாகப் பிரிந்து போகமுடியாது என்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்ற கேள்வி என்னுள் பலமாக இருந்தது. இதற்கு நான் தொடர்ந்து வாசித்துவந்த சுதந்திரன் பத்திரிகை காரணமாக இருக்கலாம். அவர்கள் சொன்ன பிரிந்து போக முடியாது என்ற கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது. ஆயினும் அக்காலத்தில் எனது கவனம் உயர்தர வகுப்புக்கான படிப்பிலும் இலக்கியத்தின் மீதும்தான் அதிகளவாக இருந்தது. அதனால் பெரும் ‘ஆராய்ச்சி’ களுக்குள் இறங்கவும் இல்லை. ஆனால் 1977 தேர்தல் நடந்தகாலத்தில் நடந்த அரசியற் பிரச்சாரங்கள் எனக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மீது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. குறிப்பாக அவர்கள் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ‘மரம் பழுத்தால் என்னவரும்?‘ என்று கேட்டு சிறுவர்களைக் கொண்டு ‘வௌவால் வரும் ‘ என்று சொல்லவைப்பதும் சிங்களவர் தோலை உரித்துச் செருப்புத் தைப்போம் என்றும் தமிழீழப் பாராளுமன்றம் தேர்தல் முடிந்ததும் வீரசிங்கம் மண்டபத்தில் நடக்கும் என்றும் பேசுவதை கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரிப்பதைப் பார்த்து அவர்கள் எப்படியெல்லாம் மக்களுக்கு ஏமாற்றுக் கதைகள் சொல்கிறார்கள் என்று கோபப்பட்டிருக்கிறேன். அப்போது எனக்கு வாக்களிக்கும் வயது வரவில்லை. ஆனால் என் வயதைச் சேர்ந்த சிலநண்பர்கள் அந்தத் தேர்தலில் வாக்குப்போட்டதை நான் அறிவேன். இப்படி எரிச்சல் பட்டுக்கொண்டிருந்த காலத்தில் ஒருநாள் தற்செயலாக பருத்தித்துறை பஸ்நிலையத்தில் சந்தித்த ஒருவருடன் இது தொடர்பாக பேசக் கிடைத்தது. உண்மையில் அவராகவே என்னுடன் பேச்சுக் கொடுத்தார். பஸ்ஸுக்காக காத்திருந்த வேளையில் நான் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ‘அரசியலைக்’ கேட்டுக்கொண்டிருந்ததால் என்னுடைய அதே பஸ்ஸிலேயே அவரும் ஏறியதன் காரணமாக அந்த உரையாடல் நிகழ்ந்தது. அவர் வேறு யாரும் அல்ல, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தைச் சேர்ந்த தேவராஜா அவர்கள். அவருடனான தொடர்பும் உரையாடல்களும் எனக்கு எனது அன்றைய அரசியற் புரிதலின் அடிப்படையில் மிகவும் முக்கியமானதும் காத்திரமானதும் என்று சொல்வேன். இன்னொருவகையில் அது ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது என்றும் சொல்லலாம். இப்படித்தான் அந்தச் சாய்வு வந்தது என்று நினைக்கிறேன்.
தேவராசாவுடனான தொடர்பு, தொழிலாளர் பாதை பத்திரிகை எனக்குத் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்பைத் தந்ததுடன் எனது கேள்விகள் அனைத்தும் பற்றிய அவரது விளக்கங்களை அறிந்துகொள்ள வாய்ப்பையும் எனக்குத் தந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்பான என்னிடமெழுந்த விமர்சனபூர்வமான கேள்விகளை அவர் தனது அரசியற் பார்வையில் விளக்குவார். அவரது விளக்கங்கள் இதற்கு முன்னர் நான் பழகிய பிற இடதுசாரிக் கட்சி ஆட்களது கருத்துக்களைவிட வித்தியாசமாக இருந்தன. அவர் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்ப்ட வேண்டியவர்கள் என்று குறிப்பிட்டது எனக்கு அவர் மீதான நம்பிக்கையை மேலும் மேலும்வலுப்படுத்தியது.
அவருடன் சேர்ந்து எங்கள் அயற் கிராமங்களில் அந்தப் பத்திரிகையை வீடுவீடாகச் சென்று விற்கும் ஒரு செயற்பாட்டில் இயங்கத் தொடங்கினேன். அவருடனான உரையாடல்களினால் எனக்கு அவர்மீது இருந்த மதிப்பின் காரணமாகவும், அப்பத்திரிகையில் எனக்குப் பிடித்த விடயங்கள் வெளிவந்திருந்தன என்பதாலும் அவற்றை மக்களுக்கு விற்பதும் உரையாடுவதுமான அவரது கட்சிப் பணிக்கு அவருடன் துணையாகப் போவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அங்கு அவர் பத்திரிகையை விற்பனை செய்வதற்காக சந்திப்பவர்களுடன் உரையாடுவதும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் அமைதியான பதில்கள் ஒருவகையில் எனக்கு அரசியல் விடயங்கள் பலவற்றை அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தருவதாக நான் உணர்ந்தேன். நான் இப்படி பத்திரிகை விற்பனைக்கு அவருடன் செல்வதைக் கண்ட நண்பர்கள் அந்தக் கட்சியில் நான் இணைந்துவிட்டேனா என்று என்னைக் கேட்கத்தொடங்கியபோது உண்மையில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கட்சியில் இணைந்தால் தான் அவர்களது பத்திரிகையை விற்கமுடியுமா என்று அவர்களிடம் கேட்பேன். அவர்களது பத்திரிகையில் இருந்த விடயங்கள் எனக்குச் சரியெனப்படுகிறது மட்டுமல்ல, தமிழ் மக்களை ஒரு தேசிய இனம் என ஒப்புக் கொள்வதும், அதுவும் ஒரு இடதுசாரிக் கட்சி ஒப்புக்கொள்வது என்பதும் எனக்கு மிக முக்கியமான அம்சமாகத் தோன்றியது. இதை நான் நண்பர்களுக்குச் சொன்னபோது அவர்கள் அதை அவ்வளவு ஒரு பெரிய முக்கியமான விடயமாகக் கருதவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியினது உணர்ச்சியூட்டும் வசனங்களுக்குப் பதிலாக, அறிவுபூர்வமாக அந்த விடயத்தைப் பேசும் ஒரு அரசியல் எனக்கு உண்மையில் பிடித்துத் தான் இருந்தது. இதுதான் இடது சாரிய அரசியலை நான் விரும்பி வாசிப்பதற்கு எனக்கு அடித்தளமாக அமைந்தது.
1978 இல் இரண்டாவது தடவையாக உயர்தர பரீட்சை எடுத்தபின்னான அடுத்த சில மாதங்களில் நான் கொழும்புக்கு எனது சிறிய தந்தையாருடன் செல்வதாக முடிவெடுக்கிறேன். பல்கலைக் கழகம் செல்ல வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் என்ற பயம் இருந்ததால் அவருடன் சென்று அங்கு ஒரு வேலை தேடிக் கொள்ளலாம் என்பதுதான் இதற்குக் காரணம். அங்கு சென்ற அடுத்தவாரமே எனக்கு ஒரு தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் வேலை கிடைத்தது. முழுக்க முழுக்க சிங்கள தொழிலாளர்கள் வேலைசெய்த அந்தச் சூழலில் சிங்கள மொழியில் ஒரு வார்த்தையும் பேசத்தெரியாத ஒருவனாக கடமையாற்றியது பல சுவாரசியங்கள் நிறைந்த ஓர் அனுபவம். தேவராசா அவர்களது தொடர்பு காரணமாக கொழும்பில் கட்சியின் பத்திரிகையான தொழிலாளர் பாதை வெளியிடும் அச்சகத்தில் மெய்ப்புப் பார்த்தலில் என்னால் உதவ முடியும் என்று அறிந்த இரு கட்சித் தோழர்கள் என்னைத்தேடி எனது தொழிற்சாலைக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாலையில் அங்குவந்து உதவ முடியுமா எனக் கேட்டார்கள். நான் மகிழ்ச்சியுடன் அங்கு சென்று வந்தேன். இது ஒரு ‘சம்பளமில்லாத உத்தியோகம்’ என்று நண்பர்கள் என்னைக் கேலி செய்த போதும் நான் அதை தொடர்ந்து செய்துவந்தேன். ஆசிரியர் கணேசதேவ் மூன்று மொழிகளிலும் நன்கு தேர்ச்சிபெற்ற ஒரு பத்திரிகையாளர். அங்கு அடிக்கடி வரும் ‘கம்கறு மாவத்த’ என்ற சிங்களப் பத்திரிகைக்கு கட்டுரைகள் எழுதும் அதன் ஆசிரியர்களில் ஒருவரான ஆனந்த வக்கும்புற அவர்களுடனான உரையாடல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நான் அங்கு வேலைசெய்த காலங்களில் தான் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக ஆங்கிலத்தில் எழுதிய ஒரு சிறு நூலின் (தலைப்பு நினைவில் இல்லை) தமிழ் மொழிபெயர்ப்பு பத்திரிகையில் தொடராக வெளிவந்துகொண்டிருந்தது.
6. உங்கள் பல்கலைக் கழக நாட்களிலேயே நேரடி அரசியல் / தமிழ் தேசிய அரசியலுக்குள் பிரவேசிக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன், அதன் பின்னணி என்ன?
அப்படிச் சொல்ல முடியாது. ஏனென்றால் 1983 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஊருக்கு வந்தபின்னரான காலத்தில் தான் அத்தகைய பிரவேசம் ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே, புரட்சிக் கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவின் போது அவர்களது கோட்பாடுகள் சம்பந்தமான கருத்துவிவாதங்களின் போது அவர்களுக்கும் எனக்கும் இடையில் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றத் தொடங்கின. மாக்சிச லெனினிச கருத்துக்களுக்கு அடுத்ததாக மாவோயிச சிந்தனைகளே நமது நாட்டின் இயல்புகளுக்குப் பொருத்தமானதென நான் முன்பு குறிப்பிட்ட கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சொன்ன விடயங்கள் தொடர்பாக நான் வினவியபோது, அவர்கள் அது தவறானது, திரிபுவாதத் தன்மை கொண்டது என்று தெரிவித்தனர். அப்போதெல்லாம் நான் கொழும்பு கொம்பனி வீதியிலிருந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூல் நிலையத்தில் மலிவாக வாங்கக்கூடிய புத்தகங்களை அவ்வப்போது வாங்கி வாசிப்பது வழக்கம். அவற்றுள் புதிய ஜனநாயகம் என்ற ஒரு சிறிய, சீனத்தலைவர் மாவோ சேதுங் எழுதிய நூல் என்னிடம் இருந்த பல கேள்விகளுக்கு விடைதருவதாகப் பட்டது. நான் இது தொடர்பாக தொழிலாளர் பாதை அலுவலகத்தில் சந்திக்கும் தோழர்களோடு பேச விரும்பியபோதுதான் அவர்கள் அந்த நூலை எவ்வளவு மோசமாக (பலர் வாசிக்காமலே) நிராகரிக்கும் விதத்தில் அதை ஒரு திரிபுவாதம் என்று தெரிவிக்கின்றனர் என்று புரிந்தது. எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. பின்னர்தான் அவர்கள் கொள்கையளவில் மாவோ சேதுங்கின் சிந்தனைகளையும் அவர் நடாத்திய சீனப்புரட்சியையும் ஒருவகைத் திரிபுவாத நடவடிக்கையாகவே அணுகுகின்றனர்கள் என்ற விடையம் எனக்குப் புரிந்தது. அதன் பின்னான காலங்களில் நான் தொழிலாளர் பாதையுடனான எனது தொடர்புகளைக் குறைத்துக் கொண்டேன். என்னைத் தேடி தோழர் ஆனந்த வக்கும்புற மொறட்டுவைப் பல்கலைகழகத்திற்கு பலதடவை வந்து உரையாடிச் சென்றிருக்கிறார். ஆயினும் அவர்களிடம் இருந்த நான்காம் அகில கோட்பாட்டு நிலையிலிருந்து வெளிவர முடியவில்லை என்பதை விளங்கிக் கொண்டதால் அவர்களுடனான எனது அரசியற் தொடர்பை நிறுத்திக் கொண்டேன். ஆயினும் வக்கும்புறவுடனான தனிப்பட்ட தொடர்பை நான் பலகாலம் பேணி வந்தேன். அற்புதமான மனிதர் அவர். எழுத்தாளர் தளையசிங்கம் அவர்களது பல்கலைக்கழககால நண்பர். (வெள்ளை யானை என்ற தனது சிறுகதையில் மு.த இவரது பெயரை ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்!) இப்போது அவரது மகன் வசந்தவுடன் தொடர்பு வைத்திருக்கிறேன்.
1983 கலவரம் தொடங்குவதற்கு முன்னாக 1978 இல் ஜே.ஆர் ஜனாதிபதியாக வந்த காலத்திலிருந்தே இலங்கை அரசு மிகத்தெளிவாக இனவாத அரசாகச் செயற்படத் தொடங்கியிருந்தது. அந்த ஆட்சியிலிருந்த சிறில் மத்தியூ என்ற அரசியல்வாதியின் ‘கௌத கொட்டியா’ (யார் புலி?) என்ற நூலின் வருகையும் அது பரவலாக சிங்கள இளைஞர்களிடையே ஏற்படுத்தியிருந்த இனவெறி மனோபாவமும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக வடக்குக் கிழக்குக்கு வெளியே வாழ்ந்த தமிழ்மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருந்த காலம் அது. அப்போது தமிழ் மக்களது பிரதிநிதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எதிர்க்கட்சித் தலைமையைப் பெற்றிருந்தனர். இது இன்னமும் மோசமாக இனவாத நெருப்பை ஊதி வளர்க்க இனவாதிகளுக்கு வசதியாக இருந்தது. அந்தக் காலத்திலேயே தமிழ் தேசிய அரசியலின் முக்கியத்துவம் பற்றிய உரையாடல்கள் பரவலாக உணரப்படத் தொடங்கியிருந்தன. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலின்போது தான் வாக்களித்தது போல தமிழீழம் அமைப்பதற்கான எந்த முன்னேற்ற கரமான செயற்பாடுகளிலும் இறங்கவில்லை. அப்போது பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் மத்தியில் ஜே.வி.பியின் செல்வாக்கு மிகவும் பலமாக இருந்தது. ஆனால் அவர்களுடனான உரையாடல்களின் போதெல்லாம் சுய நிர்ணய உரிமை தொடர்பான விவாதங்கள் எழும். தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்வதாகக் கூறுவார்கள்; கூடவே அதனுடன் சேர்த்து ‘பிரிந்து செல்ல முடியாத’ என்பதையும் இணைத்துச் சொல்வார்கள். இதன் காரணமாக இவை பற்றி நானும் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தேன். ஆயினும் ஓர் அரசியல் அமைப்புச் செயற்பாட்டில் இறங்குவது பற்றிய நோக்கம் என்னிடம் இருக்கவில்லை. பல்கலைக் கழக தமிழ்ச்சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட , வவுனியா காந்தீய அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் ராஜசுந்தரம் அவர்களுடைய வேண்டுகோளின்படி அவர்கள் நடாத்திய நாவலர் பண்ணையை அண்டிய நிலங்களில் 1977 கலவர காலத்தில் இடம்பெயர்ந்த மலையக மக்கள் வாழ்ந்துவந்த பகுதிகளில் உள்ள அரச காணிகளைப் பங்கீடு செய்து அவர்களுக்கு சொந்தமாக வழங்கும் நடவடிக்கையில் நில அளவு செய்தல் உட்பட்ட சமூகநலன் கருதிய சிரமதான நடவடிக்கைகளுக்காக வார இறுதி நாட்களில் வவுனியா செல்வது என்ற எமது பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத்தின் செயற்பாட்டில் மற்றைய மாணவர்களுடன் நானும் ஈடுபட்டிருந்தேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்களது வேண்டுகோள்க் கடிதம் ஒன்றைத் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பட்டுவத்தவிதானவிடம் சமர்ப்பித்து இந்த நடவடிக்கைக்கான அனுமதியை தமிழ்ச்சங்கம் பெற்றிருந்தது (தாராளவாதியான பேராசிரியர் பட்டுவத்தவிதான எடுத்த அவசர நடவடிக்கைகள் நானுட்பட பல நண்பர்கள் 1983 கலவரத்தில் தப்பிப் பிழைக்க முக்கிய காரணமானவை. இவர் பின்னர் 1989இல் ஜே.வி.பி யினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்). இந்த விடயத்தைச் சாதிப்பதில் நானறிய நண்பர்கள் பிரேமச்சந்திரா, வித்தியானந்தன் ஆகியோர் முக்கிய பங்காற்றியிருந்தனர். இந்த சிரமதான நடவடிக்கை ஏற்படுத்தித் தந்த சந்தர்ப்பங்கள் பல அனுபவங்களையும் அரசியற் செயற்பாடுகளில் இயங்கும் தோழர்களை அறிமுகம் செய்துகொள்ளும் வாய்ப்பையும் எனக்குத் தந்தது. அங்கு சந்தித்த முக்கியமான தொடர்புகளாக பின்னாளில் புலிகளால் காணாமலாக்கப்பட்ட தோழி செல்வி, தீப்பொறி காந்தன், புளொட் அமைப்பினைச் சார்ந்த அசோக் ஆகியோரைக் குறிப்பிடலாம். அக்காலத்தில் தான் எனக்கு, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி (மா/லெ) யின் மக்கள் அமைப்பான தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் பிரசுதரங்களைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. அந்தப் பிரசுரங்கள் மிகவும் முக்கியமான பிரசுரங்கள் என எனக்குப் பட்டது. ஆனால் அந்தக் கட்சியும் அதன் அமைப்பும் எவ்வளவு தூரம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை நான் பெரிதாக அப்போது அறிந்திருக்கவில்லை. அதை அடுத்து 1983 இல் இனக்கலவரம் வெடித்தது. கலவரத்தின் பின்னணியில் சிறையில் வைத்துக் கொல்லப்பட்டவர்களில் டாக்டர் ராஜசுந்தரமும் ஒருவர் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல. இந்தச் செய்தியை இலங்கை வானொலி ஒலிபரப்பியதை நான் எனது பல்கலைக்கழக நண்பர்களுடன் இரத்மலான விமான நிலைய அகதிமுகாமில் திக்பிரமை பிடித்தவர்கள் போல கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டிருந்தோம்.
7. உண்மையில் உங்கள் பல்கலைக் கழக நாட்கள் குறித்து உரையாடும்போது இதைப்பற்றிக் கேட்டிருக்கவேண்டும், அன்றைய நாட்களில் டொக்ரர் ராஜு சுந்தரம் அவர்களின் பண்ணை முறையில் பல்கலைக்கழக மாணவர்களின பங்கேற்பும் காத்திரமானதாக இருந்தது. மாணவர்கள் பண்ணைமுறைக்குள் உள்வாங்கப்படுவதற்கான பொறிமுறை எப்படி இருந்தது?
உண்மையில் மாணவர்கள் பண்னை முறைக்குள் உள்வாங்கப்படுதல் என்ற அடிப்படையில் அது உருவாகவில்லை. அப்போது டேவிட் ஐயா எனப் பரவலாக அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளரும் வைத்தியர் ராஜசுந்தரம் அவர்களும் வேறு சில நண்பர்களும் இணைந்து இயக்கிவந்த காந்தியம் என்ற அமைப்பு பல சமூகநலத் திட்டங்களை நடாத்தி வந்தது. நெடுங்கேணியிலுள்ள வெடிவைத்த கல்லு என்ற இடத்தில் அமைந்திருந்த நாவலர் பண்ணை அவர்களது தொடர்பு மையங்களில் ஒன்றாக இருந்துவந்தது. அவர்களுக்கு உதவியாக சிரமதானப் பணிகளில் ஈடுபடுவதற்காகவே நாம் அங்கு சென்றோம். இந்தக் காந்திய அமைப்பினூடாக ஏற்கனவே கிராமமட்டத்திலான செயற்பாடுகள் பரவலாக நடந்துவந்தன என்பதை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன். குறிப்பாக சிறுவர்களுக்கான நூற்றுக்கணக்கான பள்ளிகளை காந்தியம் இயக்கிவந்தது பற்றிய செய்தியை எம்காலத்து மாணவர்கள் அனேகமானோர் அறிந்திருந்தனர். 1977இல் நடந்த இனக்கலவரம் காரணமாக அஞ்சி இந்தியாவுக்கு ஓடித்தப்பிய மலையக மக்களில் சிலர், அங்கிருந்து எதுவும் செய்யமுடியாமல் மீண்டும் இலங்கை நோக்கித் திரும்பியிருந்தனர். அவர்களில், திரும்பவும் மலையகம் போவதில் இருந்த அச்சம் மற்றும் வேலைவாய்ப்புக்கான நிச்சியமின்மை என்ற காரணங்களால் மலையகத்துக்குப் போக விருப்பமற்று இருந்தவர்களுக்கென காந்தியத்தின் உதவியுடன் நாவலர் பண்ணையோடொட்டிய நிலம் குடியிருப்புக்கும் விவசாயத்துக்குமென பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிலங்களில் குடியேறிய மலையக மக்களுக்கு விவசாயம் செய்து பரிச்சயம் இல்லை. அவர்கள் பண்ணையில் விவசாயம் உள்ளிட்ட சிறு தொழில்களைப் பழகிக்கொள்வதும், அவர்களது நிலங்களைப் பண்படுத்தி அவற்றில் விவசாயம் செய்வதற்கு அவர்களுக்கு உதவுவதும், அவர்களுக்கு இக்குடியேற்றத்திற்கென காந்தியத்தால் வழங்கப்பட்டுள்ள நிலத்தின் எல்லைகளை அளந்து வரையறை செய்து கொடுப்பதும் தான் மாணவர்களாகிய எமக்குரிய பணியாக இருந்தது.
உண்மையில் காந்தியம் அக்காலத்தில் தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும் இத்தகைய பணிக்காக பல மையங்களை நிறுவி இயக்கி வந்தது. தமிழ்க் கிராமங்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிறுவர் கல்விநிலையங்கள் நிறுவப்பட்டிருந்தன என்று நாங்கள் அப்போது அறிந்திருந்தோம். முன்பு நான் அறிந்திருக்கவில்லையாயினும் டேவிட் ஐயா குறித்து “அத்துடன் பண்ணைகள், நடமாடும் மருத்துவமனைகள், பெண்களுக்கான பயிற்சி நிலையங்கள், சிறுவர்களுக்கான பால், மா விநியோகம், ஆசிரியர்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் ‘பன்னிரண்டு ஒரு-ஏக்கர் மாதிரிப் பண்ணைகளை இவர் அமைத்தார். அத்துடன் மலையகத்தில் இருந்து ஏதிலிகளாக வந்த 4, 500 குடும்பங்களை வவுனியாவிலும், 300 குடும்பங்களைத் திருகோணமலை மாவட்டத்திலும், 200 குடும்பங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலும் காந்தியம் அமைப்பின் ஊடாக TRRO, மற்றும் செடெக் ஆகிய அமைப்புகளின் உதவியுடன் குடியமர்த்தினார்’ என்று இப்போது விக்கிபீடியாவின் தகவல் ஒன்று கூறுகிறது. இது உண்மையாக இருக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என்பதை டேவிட் ஐயாவின் செயற்றிறன் பற்றி அறிந்தவன் என்ற முறையில் நானும் நம்புகிறேன்.
இந்தச் சிரமதானப் பணிக்காக மாணவர்கள் வார இறுதி நாட்களில் அங்கு சென்று வருவது என்பது மாணவர்கள் மத்தியில் ஒரு பயனுள்ள செயலை மக்களுக்காகச் செய்கிறோம் என்ற திருப்தியயும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதில் முன்னின்று உழைத்தவர்களில் முக்கியமானவர்களும் நமது நண்பர்களுமான கே. வித்தியானந்தன், கே. பிரேமச்சந்திரா ஆகியோர் இப்போது கனடாவில் வசிக்கின்றனர்.
1982இன் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வுக்கான அனுமதியை அன்றைய பல்கலைக் கழக துணைவேந்தர் பட்டுவத்த விதானகே அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வது எமது தமிழ் சங்கத்திற்கு ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்களும் இந்த முயற்சிக்கு மாணவர்கள் உதவுவதை அனுமதிக்குமாறு கோரும் ஒரு கடிதத்தையும் சங்கத்தின் கோரிக்கையின் பேரில் வழங்கியிருந்தார். இவை குறித்தும் முன்னரும் குறிப்பிட்டிருக்கின்றேன். இந்தச் சிரமதான நிகழ்வு, பின்னர் 1983 ஏப்ரல் மாதம் ராஜசுந்தரம் அவர்களும் டேவிட் ஐயாவும் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டதுடன் நின்று போயிற்று. யூலையில் நடந்த சிறைச்சாலைப் படுகொலைகளில் கொல்லப்பட்ட 53 பேரில் வைத்தியர் ராஜசுந்தரம் அவர்களும் ஒருவர் என்பது உலகறிந்த விடையம்.
- இவற்றின் தொடர்ச்சியாகத்தான் நீங்கள் நேரடியாக இயக்க அரசியலுக்குள் வருகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அது குறித்தும் ஈழப்போராட்ட த்தை நீங்கள் அங்கம் வகித்த அமைப்பு எவ்விதம் அணுகியது என்பது பற்றியும் கூறமுடியுமா?
சொல்லலாம். ஆனால் அவ்வளவு சிறிய பதிலாக இருக்க முடியாது என்று நினைக்கிறேன். ஆனால், முடிந்தளவு சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன் கூடவே ‘இயக்க அரசியல்’ என்ற பதத்தால் அதைக் குறிப்பிட முடியாது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அந்தச் சொல் பாவனைக்கு வந்தது சற்றுப் பின்னால் என்பது மட்டுமல்ல, அது அக்கால இயக்கங்களின் போக்குப் பற்றிய ஒரு விமர்சனம் கலந்த சொல்லும் கூட. இயக்கம் என்பது இயங்குதல் என்பதைக் குறிப்பதற்குப் பதிலாக, மக்களின் பேரால், அவர்களின் போராட்டப் பங்களிப்பற்று, அவர்களுக்காக இயங்குவதாகக் கூறும் இராணுவக் குழுக்களின் செயற்பாடு பற்றிய ஒரு விமர்சனத்தையும் கூடவே கொண்ட ஒரு சொல் அது. நான் செயற்பட இணைந்தது ஒரு அரசியல் அமைப்பு. இதற்கான காரணம், எனக்கு அரசியற் செயற்பாடு தொடர்பாக அன்று இருந்த புரிதல் தான் என்று நினைக்கிறேன். விடுதலை இயக்கத்தைக் கட்டியெழுப்புவது என்பது இராணுவக் குழுக்களை உருவாக்குவதல்ல என்ற புரிதல் என்னிடம் ஏற்கனவே இருந்தது. இதற்கு எனது இடதுசாரிய கட்சிகளைச் சேர்ந்தவர்களுடனான தொடர்பும், அதன் காரணமாகக் கிடைத்த வாசிப்புமே காரணம் என்று நினைக்கிறேன். அப்போதைய விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் மக்களுடன் எந்தச் சம்பந்தமும் அற்ற தனிப்பட்ட தாக்குதல்கள் என்ற விமர்சனம் ஏற்கனவே என்னிடம் இருந்தது.
இரத்மலானை அகதி முகாமில் இருக்கும் போதே நண்பர்கள் பலரும் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாகவும் போராட்டம் தொடர்பாகவும் விவாதித்துக் கொண்டிருந்தோம். அப்போது எம்மை ஊருக்கு அனுப்ப தரைவழிப் போக்குவரத்து ஆபத்தானது என்று கூறி, ‘அகதிகளை கப்பலில் ஏற்றிக் காங்கேசந்துறைக்கு அனுப்புவது’ பற்றிய பேச்சு அடிபடத் தொடங்கியதும் 1977 இனக்கலவரத்தின் போதும் இவ்வாறு கப்பலில் தமிழ் மக்கள் அகதிகளாக பருத்தித் துறை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டதை மையமாக வைத்து, அருளர் அவர்கள் எழுதிய ‘லங்காராணி’ என்ற நாவல் எனக்கு நினைவுக்கு வந்தது. அந்த நாவல் பற்றியும் நாம் பேசிக்கொண்டோம். அகதிகளை ஏற்றிவந்த கப்பலின் பெயர் லங்காராணி என்பதாலும் அந்த நாவலின் கதை முழுவதும் கப்பற் பயணத்திலேயே நடப்பதாக இருந்ததாலும் அந்த நாவலுக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. எங்களுக்கு ஒழுங்குசெய்யப்பட்ட கப்பல் ‘லங்கா கல்யாணி’. அந்த இரண்டுநாட் கப்பல் பயணத்தை அருளரைப் போலவே நானும் ஒரு நாவலாக எழுதவேணும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கிருந்து வந்தபின்னான நாட்கள், எனது அந்த ஆர்வத்தை விடவும் மீறியதாக எனது அரசியல் என்ன என்பது பற்றிய சிந்தனையைத் தூண்டும் சில சந்திப்புக்களை எனக்கு ஏற்படுத்தித் தந்தது. நான் முன்னர் சொன்ன ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ இந்த விடையம் சம்பந்தமாக இப்போது என்ன செய்கிறது என்று அறியும் ஆர்வத்துடன் அதைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினேன். நான் சற்றும் எதிர்பாராத விதமாக எங்களுடன் காந்தீயத்தில் வேலை செய்த சில -எங்கள் பல்கலைக் கழகம் சாராத- நண்பர்களும் என்னைத் தொடர்பு கொண்டு ஒரு விடுதலை இயக்கமாக நாம் செயற்படவேண்டும் என்றும் என்னை அவர்களுடன் இணைய முடியுமா என்றும் கேட்டு வந்தார்கள். ஆனால் அவர்களிடம் அரசியல் விடுதலை தொடர்பாக இருந்த கருத்துக்களும் சிந்தனைகளும் மிகவும் அப்பாவித்தனமான, தமிழீழம் காண்பதற்கான ஆயுதப்போராட்டத்தை நடாத்துவதற்கான பயிற்சியை முன்னிறுத்தியவையாகவே இருந்தன. அவர்களிடம் அடிப்படையில் இருந்தது ஒருவகை உணர்வுக்கொந்தளிப்பே அன்றி விடுதலைப் போராட்டம் சம்பந்தமான அறிவுசார் திட்டங்கள் எவையும் இருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி, இளைஞர் பேரவை போறவற்றிடம் இருந்த அதே சமூக அரசியற் பார்வைகளையே அவர்களும் கொண்டிருந்தனர். ஒரு விடுதலை இயக்கம் அல்லது அமைப்பு கட்டாயமாகக் கொண்டிருக்கவேண்டிய அரசியல் வழியை முன்வைக்கும் திட்டம், மக்களை அரசியல் மயப்படுத்தி அமைப்பாக்கலில் ஈடுபடுபடுவதற்கான கட்சி அல்லது அமைப்பு தொடர்பான திட்ட வரைபு ஒன்றுகூட அவர்களிடம் இருக்கவில்லை. உண்மையில் அப்படி ஒன்று அவசியம் என்று கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை. இவை தொடர்பான அவர்களுடனான எனது உரையாடல்கள் அவர்களுக்கு உண்மையில் சலிப்பேற்றின என்றே நான் நினைக்கிறேன். நாங்கள் எல்லோரும் தமிழீழம் என்ற உன்னத இலட்சிய்த்துக்காக செயற்பட ஒன்றிணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதே ஒரேவழி என்று சாதித்தனர். எனக்கு இதில் மாற்றுக் கருத்து இல்லாத அதேநேரம் அதுமட்டுமே போராட்டத்தில் இறங்கப் போதுமானதல்ல என்பதை நான் வலிறுத்தி வந்ததுடன், அவர்கள் அப்போது செயற்பட்டு வந்ததாகக் கூறிய உமாமகேஸ்வரன் சந்ததியார் ஆகியோரது தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆதரவாளர்கள் அல்லது உறுப்பினர்கள் என்ற வகையில் அவர்களுடன் தொடர்ந்து உரையாடலில் இருந்தேன்.
1984 ஜனவரியில் நான் காங்கேசன் துறை லங்கா சீமெந்துத் தொழிற்சாலையில் வேலையில் சேர்ந்துகொண்டேன். அந்தக்காலத்தில் தான் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியைச் சார்ந்த தோழர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அதன் தலைமை அமைப்பான இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி(மா/லெ) பெருமளவில் இயங்கும் நிலையில் இருக்கவில்லை. தோழர் விசுவானந்த தேவன் அவர்கள் அப்போது தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை ஓர் அரசியல் அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர்களுடனான எனது உரையாடல்கள், என் மனதிலிருந்த அத்தனை கேள்விகளுக்கும் தெளிவான, நம்பிக்கையூட்டும் பதில்களை அளிப்பவையாக இருந்தன. அவர்கள் தான், கட்சி, அரசியல் வழி, மக்கள் போராட்டம் என்பவை குறித்து என்னால் ஒப்புக்கொள்ளக் கூடியளவு தெளிவான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருந்தார்கள்.
மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக வேலைசெய்தல், மக்களை அரசியல் ரீதியாக அமைப்பாக்கல், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் ஆகிய மக்கட் பிரிவினரிடையே மக்கள் அமைப்புக்களைக் கட்டிஎழுப்புதல் என்பவற்றின் மூலமாக அவர்களை அரசியல்மயமாக்கும் முயற்சியில் ஈடுபடல் என்ற வேலைத்திட்டத்துடன் அந்த அமைப்பு இயங்கத் தொடங்கியிருந்தது. புதிய சூழலின் நிலமைகளைக் கருத்திற் கொண்டு தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி 1983 செப்ரம்பரில் ஒரு தேசிய மாநாட்டை நடாத்தியது. இம் மாநாடு இரண்டு பகுதியாக நடந்தது. அதில் ஒன்று ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்பது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மா/லெ) இனது ஒரு வெகுஜன அமைப்பு என்பதாலும், கட்சி தற்போது செயலற்ற நிலைக்குச் சென்றுவிட்டதாலும், நாம் ஒரு புதிய கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு கருக்குழு வடிவிலாவது முதலில் உருவாக்க வேண்டும் என்ற தோழர் விசுவானந்த தேவன் அவர்களது கருத்தின் அடிப்படையில் கட்சிக்கான, ஏற்கனவே மாக்சிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியுடன் தொடர்ந்து இயங்கிவந்த கட்சித் தோழர்களை இணைத்து கட்சிக்கான ஒரு மாநாடு நடாத்தப் பட்டது. இந்த மாநாட்டிற்கு, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் ஏற்கனவே இயங்கிவந்த தோழர்களில் எனக்குத் தெரிந்த சிலர் அழைக்கப்படாமல் இருக்க நான் அழைக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தோழர் விசுவானந்த தேவன் அவர்கள், ஜனநாயக முன்னணியில் இயங்கும் எல்லோரும் கட்சியின் உறுப்பினர்கள் என்ற அளவுக்கு அரசியல் ரீதியான புரிதல்கள் கொண்டவர்கள் அல்ல என்பதால் கட்சியில் தீர்மானங்களை எடுப்பதில் அவர்களையும் சேர்த்துக் கொள்வது பொருத்தமற்றது; இந்த மாநாட்டின் பின்னர், நாம் நடத்தப் போகும் ஜனநாயக முன்னணிக்கான மாநாட்டில் அவர்கள் எல்லோரையும் அழைப்போம்; அவர்கள் முன்னணியில் வேலை செய்வதன் மூலமாகப் பின்னர் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார்கள் என்று தெரிவித்தார். முன்னணியில் வேலை செய்யாமலே நேரடியாகக் கட்சிக்குள் நான் சேர்க்கப்பட்டது எனக்குச் சரிதானா என்ற குழப்பம் இருந்தது. நான் இதுபற்றித் தோழர் விஸ்வாவுடன் பேசினேன். அதில் தப்பு இல்லை என்றும் ஏற்கனவே கட்சியுடன் இருக்கும் எமது தோழர்களின் மாக்சியப் புரிதலுக்கும், அமைப்புச் செயற்பாடு பற்றிய அனுபவத்திற்கும் குறைவில்லாத அளவுக்கு எனக்கு விடயங்கள் தெரிந்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டுதான் மற்றைய தோழர்களும் தானுமாக என்னைக் கட்சிக்குள் இணைத்துக் கொள்ளும் முடிவை எடுத்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார். இது ஒருவகையில் எனக்குப் பெருமையாக இருந்தபோதும், அதைவிட முக்கியமான பொறுப்பு இது என்ற தயக்கமும் என்னிடம் இருந்தது.
கட்சியின் மாநாடு நடந்தபோது, அவர் கட்சியின் முக்கியத்துவம், தமிழ் மக்களது விடுதலைக்கான ஒரு ஜனநாயக முன்னணியை நடாத்துவதிலும் அதற்காக மக்களை அனிதிரட்டுவதிலும் கட்சி கைக்கொள்ள வேண்டிய விடையங்கள், அதற்கான கட்சி உறுப்பினர்களின் பொறுப்பு என்ற பல விடயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கான அமைப்புக் குழுவாக கட்சி இருந்தபடி கட்சியைக் கட்டி எழுப்புவதையும் அதேநேரம் தமிழ் மக்களது தேசிய விடுதகலைக்கான ஒரு முன்னணியை- ஒரு வெகுசன அமைப்பைக் கட்டியெழுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்தப் புதிய ஜனநாயக முன்னணிக்கான பெயராக ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ என்ற பெயர் பிரேரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. கட்சியின் வழிகாட்டலில் முன்னணி இயங்குவதற்கேற்ற முறையில் அதற்கான ஆரம்ப வேலைத்திட்டங்கள், அமைப்புக் குழுக்களை உருவாக்கும் முறைமை, முன்னணிக்கான பத்திரிகை என்று பலவிடயங்களும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டன.
கட்சியின் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்பு, தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு கூட்டப்பட்டது. இந்த மாநாட்டில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் அவசியம் பற்றியும் அதற்கான மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல் பற்றியும் விவாதிக்கப்பட்டதுடன் அமைப்பின் பெயரை ‘தமிழீழ தேசிய விடுதலை முன்னணி’ என்று அறிவிப்பது என்பதும் நிறைவேற்றப்பட்டது.
இந்த மாநாடு நடந்துகொண்டிருந்த வேளையில், இந்தியா, தமிழ் இளைஞர்களுக்கு தங்களால் இராணுவப் பயிற்சியை வழங்கமுடியும் என்று தெரிவித்த செய்தி தோழர் விஸ்வானந்ததேவன் அவர்களுக்குக் கிடைத்திருந்தது. இந்தச் செய்தியை அவர் மாநாட்டில் முன்வைத்து உரையாற்றுகையில், நமது மக்களது போராட்ட உணர்வை இந்தியா தனது பூகோள நலனின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு நயவஞ்சகமான அறிவிப்பு என்று வர்ணித்தார். எமது மக்களது போராட்டம் இந்தியா உட்பட்ட உலகெங்கும் வாழ்கின்ற புரட்சிகர சக்திகளுடனான உறவையும் ஆதரவையும் வென்றெடுக்க வேண்டுமேயன்றி இந்திய அரசின் ஆதரவை அல்ல என்பதை அவர் மிகத் தெளிவாக முன்வைத்து உரையாற்றினார். இந்தியா ஒரு நாடாக இந்தியாவில் வாழும் பல தேசிய இனங்களைத் தொடர்ந்து ஒடுக்கி வருவதை ஆதாரங்களுடன் விவரித்த அவர், நாம் எமது போராட்டத்தினை எமது மக்களது பலத்தில் நின்று அவர்களை அரசியல் மயப்படுத்தி அணிதிரட்டுவதன் மூலமான மக்கள் யுத்தப்பாதையிலேயே நடாத்தவேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் இலங்கையின் அனைத்து மக்கட் பிரிவினராலும் அங்கீகரிக்கப்படுவதுடன் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளின் புரட்சிகர சக்திகளுடனான உறவை வளப்படுத்திக் கொள்ளவும் முடியும் என வலியுறுத்தினார். மாநாடு முடிந்து நாம் இயங்கத் தொடங்கிய ஒருசில மாதங்களுக்குள்ளேயே புதிது புதிதாகத் தோன்றிய பல இயக்கங்கள் ஆயிரக்கணக்கில் இளைஞர்களையும் மாணவர்களையும் பயிற்சிக்காக இந்தியாவுக்கு அனுப்பத் தொடங்கியிருந்தன.
மாநாடு முடிந்த ஒருமாத காலத்தில் அமைப்பின் அரசியல் அறிக்கையும் முதலாவது இலக்கு இதழும் வெளியாகின. அமைப்பின் வெளியீடுகளை விநியோகித்தல், அவற்றிலுள்ள விடயங்களை விவாதித்தல், விடுதலைப் போராட்ட அரசியலை மையப்படுத்திய மக்களுடனான சந்திப்புக்களை நிகழ்த்துதல், அரசியல் வகுப்புக்களில் இளைஞர்களை இணைத்தல், அவர்களுக்கு மக்கள் மத்தியில் வேலை செய்வதற்கான வழிகாட்டலை வழங்குதல், மக்கள் மத்தியிலான பிரச்சினைகள் தொடர்பாகக் கவனம் செலுத்துவதும் அவற்றைக் கையாள்வதும் அவற்றினூடாக அவர்களது ஆதரவையும் பங்களிப்பையும் திரட்டுதல் என்றவகையில் அமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. மற்றைய அமைப்புக்களின், குறிப்பாக, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(PLOTE), தமிழீழ விடுதலைப் புலிகள்(LTTE), தமிழீழ விடுதலைக் இயக்கம்(TELO), ஆகிய அமைப்புக்களின் வெளியீடுகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பாக விவாதிப்பதன் மூலமும், உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறுகளை உரையாடலுக்கு எடுத்துக் கொள்வதும், அவற்றின் வழி, மக்கள் போராட்டத்தின் அவசியத்தையும் அதன் வழிமுறைகள் எவை, அவற்றின் வெற்றி தோல்விகளுக்கான அடிப்படைகள் என்ன, அவை எமது சூழலில் எவ்வாறு கணக்கில் எடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் உரையாடுவதும் விவாதிப்பதும் மூலமாக மக்கள் மத்தியிலான எமது செயற்பாடுகள் அமைந்திருந்தன. மற்றைய இயக்கங்கள் இந்தியாவுக்குப் பயிற்சிக்கு மாணவர்களை அனுப்பத் தொடங்கியதன் காரணமாக எமது இந்தச் செயற்பாட்டில் ஒருவகை தொய்வுநிலை இருக்கவே செய்தது. இளம் மாணவர்களிடையே பயிற்சிக்காக வெளிநாடு போதல் என்பது ஒரு மனக் கிளர்ச்சியூட்டும் போக்காக இருந்ததால், எமது செயற்பாடுகளில் ஒருவகையான தொய்வு நிலை இருக்கவே செய்தது என்பது உண்மைதான். போராட்டம் என்பது மக்களுக்காக மக்களால் நடாத்தப்படுவது, தெரிவு செய்யப்பட்டு ஓர் ஒடுக்குமுறை அரசின் இராணுத்தால் பயிற்சி பெற்ற இளைஞர்களால் நடாத்தப்படுவதல்ல, அப்படிப் பயிற்சியளிக்கப்படும்-அதுவும் ஒரு மோசமான, மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் அனுசரணையில் நடக்கும் பயிற்சியில் வளரும்- இராணுவம் மக்களின் நலங்களுக்காகப் போராடும் மக்கள் இராணுவமாக இருக்க முடியாது. அது யதார்த்தத்தில் மக்கள் நலன்களுக்கு எதிரான இராணுவமாகவே செயற்பட முடியும் என்பவை போன்ற வியங்கள் எமது வகுப்புக்களில் உரையாடப்பட்டன. எமது பத்திரிகையான முன்னணிச் செய்தி, சஞ்சிகையான இலக்கு என்பவற்றினூடாக இந்தக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இந்த இதழ்களுக்கான ஒரு ஆசிரியர் குழுவும் அதன் தலைவராக (ஆசிரியராக) நானும் அமைப்பினால் நியமிக்கப்பட்டதுடன் எமது வேலைகள் ஆரம்பமாகின.
இந்த வழிமுறை ஓர் அரசியல் இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அடிப்படையான ஒன்று என்பதில் நாம் மிகவும் தெளிவாகவே இருந்தோம். முன்னாள் இடதுசாரியும் கவனிப்புக்குரிய எழுத்தாளருமான அன்ரன் பாலசிங்கம் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படத் தொடங்கியபின் எழுதிய நூல்கள் மிக மோசமான திரித்தல்வாதக் கருத்துக்களைக் கொண்டவையாக, புலிகளின் நடவடிக்கைகளை நியாயப் படுத்துபவையாக அமைந்திருந்தன. விடுதலைக்காக அரசியல் ரீதியாக வளர்க்கப்படாத இளைஞர்களது கைகள் ஆயுதம் ஏந்துவதன் மூலம் உருவாகும் அதிகாரம், மக்களை அதிகாரம் செய்யவும், அவர்களுக்கு எதிராகவே ஆயுதங்களைத் திருப்பவும் வழிசெய்யும் என்பதை இலக்கு இதழ் சுட்டிக் காட்டி எழுதியது. இவற்றை விமர்சிப்பதும், அவற்றின் மக்கள் விரோதப் போக்கை அம்பலப் படுத்துவதும் எமது தவிர்க்க முடியாத பணியாக அமைந்தன.
மக்கள் மத்தியில் கிராமம் கிராமமாகச் சென்று வேலை செய்தல், அவர்களை மாக்சிய லெனிச மாவோயிச சிந்தனைகளின் அடிப்படையில் அமைப்பாக்கல் ஆகிய விடயங்களில் அமைப்பு கவனத்தைக் குவித்திருந்த அதே வேளை, நில உரிமைக்காகவும் கூலி உயர்வுக்காகவும் போராடும் மக்கள் மத்தியில் வேலை செய்யவும் அவர்களது போராட்டத்துடன் இணந்து கொள்வதுடன் அவர்களை அரசியல் மயப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதும் இந்தப் போராட்டத்தினின்றும் பிரிக்கமுடியாத அம்சம் என்பதை அமைப்பு வலியுறுத்திச் செயற்பட்டு வந்தது. கூடவே புதிய ஜனநாயக மாணவர் சங்கம், புதிய ஜனநாயக மகளிர் அணி என்ற அமைப்புக்களும் உருவாக்கிச் செயற்படத்தொடங்கின. புதிய ஜனநாயக மகளிர் அணியினால் ‘சக்தி’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகையும் வெளிவரத் தொடங்கியது. இவற்றின் மக்கள் மத்தியிலான செயற்பாடுகள் போராட்டங்கள் என்பவற்றினூடாக பயிற்சிபெறும் தோழர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தோழர்களுக்கு இராணுவப் பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் அமைப்பு, கட்சியின் அமைப்புக்குழுவின் மேற்பார்வையில் தொடங்கியிருந்தது. அமைப்பின் அரசியல் அறிக்கை, அரசியற் திட்டம், அது வெளியிட்ட பிரசுரங்களிற் சில, பத்திரிகைகளான இலக்கு, முன்னணிச் செய்தி ஆகியற்றின் (தோழர் ரயாகரன் அவர்களால்) தேடித் திரட்டப்பட்ட சில பிரதிகள் படிப்பகம் வலையமைப்பில் வாசிக்கக் கிடைக்கின்றன. பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் புலிகளால் கடத்தப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற தொடர் போராட்டங்களில் புதிய ஜனநாயக மாணவர் சங்கத்தின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது. அப்போதைய பல ஆவணங்கள் உட்பட பல உள்ளக விவதங்களுக்காக முன்வைக்கப்பட்ட முக்கியமான எழுத்துக்கள், ஆவணங்கள் வெளியீடுகள், அச்சிடப்பட்ட சில குறுநூல்கள் அனைத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பால் இயக்கத் தோழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்டு இயக்கம் இயங்காமல் செய்யப்பட்டபோது அழிந்து போயின. அண்மையில் ரயாகரன் அவர்கள் வெளியிட்ட அரசியல் அநாதைகள்-1 என்ற நூலும் வேறு பல முக்கியமான தகவல்களை தொகுத்துத் தருகிறது.
அதிகம் பேசிவிட்டதாக நினைக்கிறேன். உங்கள் கேள்விக்குரிய பதிலும் இதில் உள்ளடங்கியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
- ஈழத்தில் தேசிய இன விடுதலைப் போராட்டம் வீச்சம் பெற்ற காலப்பகுதி பெண்விடுதலை, வர்க்க விடுதலை, தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு ஆகியன பற்றிய கருத்தியல்களும் போராட்டங்களும் பலம்பெற்று வந்தகாலப்பகுதியாகும். இவை குறித்த பிரக்ஞை இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எப்படி இருந்தது? இந்தப் போராட்டங்களை ஆதரித்தவர்களுக்கு எப்படி இருந்தது?
ஆம். உண்மையில் அது ஒரு அற்புதமான காலம் தான். இந்த வகையான அனைத்து விடயங்களும் பேசப்பட்ட, விவாதிக்கப்பட்ட காலம். 1983 இனக்கலவரம் முடிந்த பின்னான காலம் முழுவதும் அரசியல் விடயங்களிலேயே எனது கவனம் குவிக்கப்பட்டிருந்தது. கலவரத்துக்குப் பின்னான அரசியற் சூழலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பாக நான் முதற் கேள்விக்கான பதிலில் குறிப்பிட்ட தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் தோழர்களுடன் இணைந்து பலவிடயங்களை விவாதித்திருந்தோம். அரசியல் ரீதியாக மாணவர்கள், இளைஞர்கள் பெண்கள், தொழிலாளர்கள், கூலி உழைப்பாளிகள் என்று மக்களின் அனைத்துத் தரப்பினருக்கும் மேலாக இனரீதியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறைகளுக்குள் இருந்து வெளியில் வருவதற்கான, விடுதலைக்கான சரியான மார்க்கம் எது என்பது பற்றிய விவாதங்களாக அவை இருந்தன. ஏற்கனவே இயங்கிவந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புக்கள் இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதப் பயிற்சிக்காக பல இளைஞர்களைத் திரட்டி அங்கு அனுப்பத் தொடங்கியிருந்தன. பல புதிய இயக்கங்கள் பயிற்சி எடுப்பதற்காகவே உருவாகிக் கொண்டும் இருந்தன. இவற்றுடன் TELO என்றொரு இயக்கமும், இடதுசாரியக் கருத்துநிலையை ஓரளவு கொண்டிருந்த EPRLF, EROS ஆகிய இயக்கங்களும் புதிதாக இணைந்திருந்தன. இதைத் தவிர வேறு பல இயக்கங்களும் அதே நோக்கங்களுக்காக தோன்றின. இந்தியாவில் இவற்றுக்காக பல முகவர்களும் இயங்கத் தொடங்கிவிட்டிருந்தனர். எமது அமைப்பு தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்ற பெயருடன் இயங்குவதாக முடிவெடுத்ததும் அது தனது மக்கள் மத்தியிலான வேலைகளை நடாத்துவதற்கான மாணவர் அமைப்பு, பெண்கள் அமைப்பு என்ற இரண்டு அமைப்புக்களை ஏற்படுத்திக் கொண்டதும் பற்றிச் சொன்னேனல்லவா? அவற்றினூடாக மக்கள் மத்தியிலான வேலைகளை ஆரம்பிக்கத் தொடங்கியதில் அதனிடம் பிரதானமான, மற்றைய அமைப்புகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டிய, மூன்று முக்கியமான விடயங்கள் இருந்தன. ஒன்று இந்திய அரசின் இராணுவப்பயிற்சியை அது நிராகரித்தது, இரண்டாவது தமிழீழ உழைக்கும் மக்களது தலைமையிலான போராட்டமாக இந்த விடுதலைப் போராட்டம் நடைபெறும் என்பதை அது தன் கொள்கையாகக் கொண்டிருந்தது. மூன்றாவதாக மாக்சிய லெனினிய மாசேதுங் சிந்தனைகளின் வழிகாட்டலில் அமைப்பு இயங்கும் என அது அறிவித்தது. ஏனைய அமைப்புக்களிடம் இத்தகைய தெளிவான கருத்துக்கள் முவைக்கப்பட்டிருந்தன என்று சொல்ல முடியாது.
அனைத்து இயக்கங்களிடமும் எதிரிப்படையினருக்கு எதிரான ஆயுதமேந்திய தாக்குதலை நடாத்துவது என்ற கருத்தே பிரதானமாக இருந்தது. ஆயினும் மேற்குறிப்பிட்ட அனைத்து முக்கியமான இயக்கங்களுக்கும் கூட மாணவர் அணி, பெண்கள் அணி என்பன உருவாகின. ஆயினும் சாதீயம், தீண்டாமை, வர்க்க விடுதலை போன்ற விடயங்களை அவர்கள் பெரிய அளவில் கவனத்திலெடுக்கவில்லை. பொதுவாக அவர்களது நடவடிக்கைகளில் பிரதான அம்சமாக இருந்தது, இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம். அதுவும் படையினர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளிலேயே அவர்களது முழுக் கவனமும் குவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. கூடவே மாற்றுக்கருத்துள்ளவர்கள், தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்கள் எல்லோரும் சமூகவிரோதிகள் என்ற மதிப்பீடே அவர்களிடம் இருந்தது. போராட்டத்துக்கு எதிரானவர்கள் என்ற பெயரில் அவர்களது கருத்துக்களுடன் உடன்படாதவர்கள் விசாரணைகளெதுவும் இல்லாமல் தண்டிக்கப்பட்டனர்; கொல்லப்பட்டனர். இயக்கங்களுக்கிடையே மோதல்கள் எழுந்தன. இயக்கப் படுகொலைகள் இயக்கங்களுக்கு இடையிலேயே மட்டுமல்ல இயக்கங்களுக்குள்ளேயும் நடக்கத் தொடங்கின. இந்திய இராணுவப் பயிற்சியும் அது வழங்கிய ஆயுதங்களும் இவ்வாறு அதிர்ச்சியூட்டும் விதத்தில் பாவிக்கப்படும் நிகழ்வுகள் நடக்கத் தூண்டின. 1986 இல் ரெலோ இயக்கத்தின் மீதான புலிகளது தாக்குதலில் ரெலோ தலைவருட்பட பல போராளிகள் கொல்லப்பட்டார்கள். 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரை இந்தக் கொலைகள் நிற்கவில்லை. அதன்பின் ஓரளவுக்கு தற்காலிக அமைதி வந்ததாயினும் இத்தகைய, மற்றைய இயக்கங்கள் மீதான தாக்குதல்கள் புலிகளால் 1990 வரை தொடர்ந்து நடாத்தப்பட்டன. உண்மையில் அவர்கள் ஆயுதமேந்திய போராட்டம் பற்றிப் பேசிய அனைத்து இயக்கங்களையும் இயங்குவதற்குத் தடை விதித்தார்கள். என்.எல்.எஃப்.ரி யின் தோழர்களும் அதன் தலைமைத்தோழராக இருந்து பின்னர் பி எல் எப்ஃரி யாக இயங்கிய விசுவானந்ததேவன் அவர்கள் உள்ளிட்ட தோழர்களுமாக மொத்தம் 18 தோழர்கள் புலிகளாலும், இராணுவச் சுற்றி வளைப்பில் இருவரும் ரெலோ இயக்கத்தினால் ஒருவருமாக மொத்தமாக 21 தோழர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் பின்னணியில் புதிய ஜனநாயக மாணவர் அமைப்பினர் இணைந்து நடாத்திய, 1986 இல் நடைபெற்ற பல்கலைக்கழக மாணவர் விஜிதரன் கடத்தலை எதிர்த்து நடந்த போராட்டத்தின் பின்னராக பெருமளவில் மாணவர்கள், பெண்களது போராட்டங்கள் நடப்பதற்கான நிலைமைகள் இருக்கவில்லை., மகளிர் அமைப்புக்களோ பெரிய அளவிலான சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சொல்லமுடியாது. அன்னையர் முன்னனியினரால் “எங்கள் பில்ளைகளைத் தா’’ என்ற கோரிக்கையை முன்வைத்து நடாத்தப்பட்ட போராட்டங்களைத் தவிர வேறெந்தப் போராட்டங்களும் நடப்பதற்கான சூழல் அங்கு நிலவவில்லை. இந்தியப் படையினரின் நிலைகொள்ளல் இருந்ததால் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் இலங்கை இராணுவம் குண்டுகள் போடுவதை நிறுத்தியிருந்தது என்பது மட்டுமே. இந்தப் பின்னணியிலே தான் உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க முடியும். நீங்கள் சொன்ன அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் மக்கள் மத்தியிலான பிரக்ஞை மிகவும் ஆரம்ப மட்டத்திலேயே இருந்தது. உண்மையில் பெண்ணியச் சிந்தனைகளுக்கான அடிப்படை கருத்துருவாக்கம் போர்ச்சூழலில் உருவாகக் காரணமாக இயக்கங்கள் என்பதைவிடவும் ‘பெண்கள் ஆய்வு வட்டமே’ முக்கியமான பங்களித்தது என்று நினைக்கிறேன். இந்த அமைப்பினரால் வெளியிடப்பட்ட “பெண்ணிலைவாதம் பொருத்தமானதே” என்ற நூல் எம்மிடையே விரிவான உரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.
உண்மையில் மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்து வந்த நீங்கள் கேட்ட சிந்தனைப்போக்குக்களை மேலும் வளரவிடவும், வளர்க்கவுமான சூழல் அதன் பின்னான நீண்ட காலத்துக்கு இருக்கவில்லை என்றே சொல்லலாம். பெண்கள் ஆயுதமேந்தி ஆண்களுக்கு நிகராகப் படை நடாத்தியது என்பது ஒரு முக்கியமான மாற்றம் என்ற போதும், அவ்வாறு பெண்களையும் சமமாக மதிக்கும் உளப்பாங்கை தமிழ்ச் சமூகம் பெற்றுவிடவில்லை; பெறுவதற்காக அறிவூட்டப்படவுமில்லை. யுத்த முடிவுக்குப்பின்னான காலத்தில் அந்தப் பெண்போராளிகள் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புகையில் எமது சமுதாயம் எவ்வளவுதூரம் அலட்சிய மனோபாவத்துடன் இருந்தது என்பது நடைபெற்ற அரசியற் பாதையின் தவறை அடையாளம் காட்டும் முக்கிய குறிகாட்டியாகும் என்பதை மட்டுமே இப்போது சொல்லமுடிகிறது!
- “தேசிய விடுதலைக்கான போராட்டம் – அரசியற் போராட்டத்தின் நீட்சியாக – ஆயுதப் போராட்டத்தின் வடிவத்தையும் எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டபோது அதனுடன் இணைந்து, பின்னர் ஆயுதப் போராட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரலாற்றாக்கிவிடத் துணிந்தபோது நான் அதிலிருந்து விடுபட்டுப்போனேன்” என்று மூன்றாவது மனிதனுக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மையில் ஈழத்தில் தேசிய இனவிடுதலைக்கான போராட்டம் பற்றிய குறுகத் தறித்த கூற்று இது, ஓர் இடதுசாரியாக ஈழப்போரட்டத்தில் அமைப்புரீதியாகப் பங்கேற்று பின்னர் அதிலிருந்து வெளிவந்தது வரையான அந்த நீண்டபயணத்தின் அடைவுகள் பற்றி சுருக்கமாக கூறமுடியுமா?
அது உண்மைதான். அண்றைய நிலையில் அதைவிட அதிகமாக அந்த நேர்காணலில் பேசமுடியவில்லை. மொத்தமாக போராட்டத்தின் அடைவு என்று சொல்ல அதிகமாக எதுவும் இல்லை என்பது துயரம் தருவது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியின் அரசியலில் இருந்து விலகி, தேசம், தேச விடுதலை, மக்கள் போராட்டம், ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம், ஆயுதப் போராட்டம், ஆயுதப் போராட்டத்தில் அரசியலை தலைமையில் வைத்தல், ஆயுதம் ஏந்துவதே அரசியல் கிடையாது, அது எதற்காக, எப்போது எந்தச் சதர்ப்பத்தில் அவசியமாகிறது என்பதுபோன்ற விடயங்கள் பேசப்பட்டது என்பது மிகவும் முக்கியமான விடையம். ஆனால் இந்திய இலங்கை அரசுகளின் ஆளும் வர்க்கங்களது நோக்கங்களுக்காக நமது போராளிகளை அவமாக உயிர்த்தியாகம் செய்யும் நிலைக்கு தள்ளிவிடும் விதத்தில் அந்தப் போராட்டம் வளர்த்தெடுக்கப்பட்டது. மாற்றுக்கருத்துக்கள், மாற்று இயக்கங்கள் எல்லாம் ஒன்றுக்கொன்று எதிரானவை என்ற மிக எளிமையான வாய்பாட்டுடன் அவை இயங்க வைக்கப்பட்டதால் போராட்டம் அழிவை நோக்கிச் செல்வது ஒரு தவிர்க்கமுடியாத முடிவாக மாறியது. போராட்டத்தின் முக்கியமான பலம் ஒடுக்கப்படும் மக்களும், அவர்களுக்கு ஆதரவான ஜனநாயக சக்திகளும் என்பதை மறைத்து இடைவழி சமரசத்துக்கு இந்த அரசுகள் வலியுறுத்தியதன் பின்னாலுள்ள நோக்கங்களை எந்த விடுதலை இயக்கங்களும் கருத்தில் எடுக்கவில்லை அல்லது அவர்களும் அதுவே சரியென நம்பவைக்கப்பட்டார்கள்.
இந்தப் போராட்டப் பயணத்தின் தோல்விக்கான காரணம் பற்றிச் சொல்வதானால் அது மூன்று அடிப்படையான விடையங்களில் கவனம் செலுத்தவில்லை அல்லது, அவை அவசியமானவை என்பதை அறிந்திருக்கவில்லை என்று சுருக்கமாகக் குறிப்பிடலாம் என்பது தான் எனது கருத்தாக உள்ளது. அந்த மூன்று விடையங்களையும் இவ்வாறு வகைப்படுத்தலாம்:
- முதலாவதும் முக்கியமானதும் என்னவென்றால், இந்தப் போராட்டத்தை இந்திய அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சாதகமாக கையாளுமென, அன்றைய அரசியல்வாதிகளாலும் ஊடகங்களாலும் இயக்கங்களாலும் தமிழ்பேசும் மக்கள் நம்பவைக்கப்பட்டமை
- இரண்டாவது விடுதலைப் போராட்டத்தை நடத்துவது பாதிக்கப்பட்ட மக்களும் அவர்களுக்கு ஆதரவான, உள்நாட்டிலும் உலகளாவிய அளவிலும் வாழும் ஜனநாயக சக்திகளுமே என்பதை நம்பவோ அல்லது கணக்கிலெடுக்கவோ தயாராக இல்லாத, இராணுவத்துக்கெதிரான எதிர்த் தாக்குதல்கள் மட்டுமே விடுதலைக்கான போராட்டமாக அமைந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை போராளிகளிடையே முழுமையாக வலியுறுத்தும் மூளைச் சலவை அரசியற் போக்கு வர்த்தெடுக்கப்பட்டமை
- மூன்றாவதாக ஆயுதப் போராட்டம் ஒரு கருவி மட்டுமேயொழிய அது விடுதலைக்கான பிரதான சக்தி அல்ல என்பதைக் கண்மூடித்தனமாக மறுத்தமை
- தேசிய இன விடுதலை என்கிற நோக்கத்துக்காகப் போராட முன்வந்த பல அமைப்புகள் பின்னர் அழித்தொழிக்கப்பட்டபோது, அந்த அமைப்புகளில் இருந்தவர்கள் பலவந்தமாக தமது செயற்பாடுகளைத் தொடர்ந்தும் முன்னெடுக்கமுடியாமல் நிர்ப்பந்திக்கவும் விலக்கவும்பட்டபோது அது மிகப்பெரும் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் அல்லவா?
ஆம். அது ஒரு மிகப்பெரிய தாக்கம் தான். தம்மைத் தவிர்ந்த கிட்டத்தட்ட அனைத்து இயக்கங்களையும் அரசியல் ரீதியாக இயங்குவது புலிகளால் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது. அமைப்பு வேலைகளை மட்டுப்படுத்தி நாம் செயற்பட நினைத்தபோதும் புலிகள் அதனையும் அனுமதிக்கவில்லை. நமது முக்கிய தோழர் ரமணி, புலிகளால் கடத்திச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக எல்லா அமைப்புக்களையும் போலவே எங்களது அமைப்பிலிருந்தும் பல தோழர்கள் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். இவர்களில் எனது சகோதரர் ஒருவரும் அடங்குவார். இதனால் ஏற்பட்ட உளவியல் தாக்கம் மிகப் பெரிது. ரமணியின் கடத்தலை அடுத்துத் தேடப்பட்ட முக்கியமான நபராக நான் இருந்தேன். 1986 அளவில் அமைப்பின் செல்நெறி சம்பதமான கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து சென்று தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் இயங்கத் தொடங்கிய தோழர் விசுவானந்த தேவன் அவர்களது தலைமையிலான அமைப்பைச் சேர்ந்த தோழர்களில் அவருட்படப் பலரும் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். எங்களது கணிப்பில் எமது அமைப்பைச் சேர்ந்த மொத்தமாக 18 தோழர்கள் புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். சரிநிகர் என்ற ஒரு பத்திரிகையை நடாத்தும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் விட்டிருந்தால் இந்த உளவியல் தாக்கத்திலிருந்து நான் மீண்டு வந்திருப்பேனா என்பதை எனக்கு உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.
- 90களில் வெளிவரத்தொடங்கிய சரிநிகர் ஈழத்தின் பத்திரிகைகளில் ஆழங்காற்பட்ட தடத்தைப் பதித்தது. தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேரடியான செயற்பாடுகளில் இருந்து விலகிய நீங்கள் பத்திரிகைக்குள் நுழைந்தது வடிவங்கள் மாறினாலும் போராட்டத்தைத் தொடர்ந்ததோர் செயற்பாடென்று நான் புரிந்துகொள்கின்றேன். இதுதிட்டமிட்டு நடந்ததா?
உண்மையில் 1989 வாக்கில் தமிழில் அரசியல் பேசுவதற்கான ஒரு பத்திரிகையின் அவசியம் பற்றிய கருத்து எம்மவரிடையே இருந்தது. குறிப்பாக சிவகுமாரும் விஜெரட்னவும் நானும் இதுபற்றிப் பேசினோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம் (மேர்ஜ்) தமிழிலும் சிங்களத்திலும் இரு பத்திரிகைகளை கொண்டுவரத் தீர்மாணித்து அதற்குப் பொருத்தமான ஆட்களைத் தேடிக்கொண்டிருந்ததை கவிஞர் சேரன் எம்மிடம் தெரிவித்தார். இது ஒருவகையில் அந்த அமைப்பின் அரசியல் நிலைப்பாடு காரணமாக பல விடயங்களை சுதந்திரமாகப் பேசும் வாய்ப்பை எமக்குத் தரும் என நம்பியதால் நாம் அதற்கு உடன்பட்டோம். அப்படித்தான் சேரனைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு சரிநிகர் பத்திரிகை ஆரம்பமாகியது. சிங்களத்தில் “யுக்திய” என்ற பத்திரிகை ஏற்கனவே வெளிவரத் தொடங்கியிருந்தது.
‘சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே’ என்ற பாரதியின் வரியை மகுட வாசகமாகக் கொண்டு பத்திரிகையை ஆரம்பித்தோம். தமிழ் பேசும் மக்கள் அல்லது வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள், மலையகத் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் அனைவரும் அனுபவித்துவரும், இரண்டாந்தரப் பிரஜைகளாக நடாத்தப்படும் நிலமையை எதிர்க்கும் குரலில் அந்த இதழ் வெளிவருவதில் இறுதிவரை கிட்டத்தட்ட பத்தாண்டுகாலமாக அதை நடாத்தி வந்தோம். அரசியல், மொழி, ஊடகவியல், தனிமனித, மதக்குழுமங்களது உரிமைகளை உயர்த்தி பிடித்தல். ஆளும் அரசாங்கமும் அரசியல் வாதிகளும் செய்துவரும் மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள், விடுதலைப் போராட்ட நடவடிக்கையில் விடுதலைப்புலிகளது செயற்பாடுகள் பற்றிய விமர்சனங்கள், இலக்கியம் என்று பலதரப்பட்ட விடயங்களைப் பேச முயன்றோம். சரிநிகரின் அந்தப் பத்தாண்டுகால இயக்கம் பத்திரிகைத் துறைசார்ந்து பலத்த நேர்ப்படியான தாக்கங்களை கொடுத்திருக்கிறது என்று நம்புகிறேன்.
- சரிநிகரிலும் சரிநிகர் தொடர்பாகவும் அரசியல் ரீதியான உரையாடல்கள் இடம்பெற்ற காலப்பகுதி ஒருவிதத்தில் முக்கியமானது. இனவிடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர் முதன்முதலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சிக்கு வந்து, சமாதான ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்திருந்தது. இந்த சமாதான ஒப்பந்தம் கையாளப்பட்ட விதம் குறித்தும் சந்திரிக்கா அரசு குறித்ததுமான சரிநிகரின் நோக்கு ஒரு முக்கியமான நிலைப்பாடு. இது குறித்துக் கூறமுடியுமா?
சரிநிகர் ஆரம்பிக்கப் பட்ட போது பிரேமதாசவின் ஆட்சியே நிலவிவந்தது. பிரேமதாச படுகொலை செய்யப்பட்டு, அவரின் பின் டிங்கிரி பண்டா விஜயதுங்காஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடம்போன பின்னரே சந்திரிகா ஆட்சிக்கு வருகிறார். சரிநிகர் தொடங்கி அப்போது கிட்டத்தட்ட ஐந்தாண்டுகாலம் ஆகிவிட்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா வெற்றி பெறுவது நாட்டில் நிலவிய இனத்துவ அரசியல் நெருக்கடிகளுக்கு ஒரு நியாயமான தீர்வுகிடைப்பதை உறுதிசெய்யும் என்ற நம்பிக்கையுடன் வடக்குகிழக்கு மக்கள் மத்தியிலிருந்து அமோகமான வாக்குகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன. நாட்டின் அரசியல் போக்கில் ஒரு உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. சரிநிகரும் கூட அவர் அப்படிச் செயற்படுவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் இருக்கும் என்று நம்பிக்கையைக் கொண்டிருந்தது உண்மைதான்.
தேர்தல் முடிந்து, 17 ஆண்டுகால யூ.என்.பி யின் காட்டாட்சிக்கு முடிவுகட்டிய வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன், தமது ல்வாக்குக்களால் அந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், ஜனாதிபதிப் பதவியை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டபின் வெற்றிபெறும் ஜனாதிபதிகள் நாட்டு மக்களுக்கு நன்றிதெரிவித்து வழங்கும் வழமையான உரையை, கிட்டத்தட்ட அந்த ஜனாதிபதியின் ஆட்சிமுறை எப்படி அமையப்போகிறது என்பதை குறிப்பாக வெளிப்படுத்தும் உரையை அவர் நிகழ்த்தினார். அந்த உரையில் அவர் என்ன சொன்னார் என்பதை, தேர்தலை அடுத்து வெளிவந்த சரிநிகர் இதழில் எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டோம்:
“நாட்டுமக்கள் அனைவரும் எதிபார்த்திருந்த அவரது உரை, நாட்டுமக்களின் எதிர்கால இன ஐக்கியத்துக்கும் சுபீட்சத்துக்கும் கட்டியம் கூறுவதாக அமையும் என்று எதிர்பார்த்த அவரது உரை, அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தது போலவே ‘இந்த வெற்றி தனிப்பட்ட என்னுடைய வெற்றி அல்ல மாறாக இலங்கையின் ஒவ்வொரு சமுதாயத்தினதும் கடந்த காலத்தின் இருள்மண்டிய சகாப்தத்திலிருந்து விடுபடுவற்காகச் செய்யப்பட்ட கடும் உழைப்பிற்கும் தீர்மானத்திற்கும் கிடைத்த வெற்றியாகும்’ என்று அவர் தனது பேச்சில் தெரிவித்திருந்தார். வழமையாக வெற்றி பெறுகின்ற ஒவ்வொரு ஜனாதிபதியும் இவ்வாறானதொரு பேச்சை நிகழ்த்துவது ஒரு சடங்காக நடந்து வருகின்றபோதும் புதிய ஜனாதிபதியின் பேச்சில் நிதானமும் சொற்களைத் தேர்தெடுத்து பாவிக்கும் பொறுப்புணர்வும் தெளிவாகத் தெரிந்தன. தனது வெற்றிக்குக் காரணமான ஒவ்வொருவருக்கும் அவர் நன்றி கூறத் தவறவில்லை. ஆனால் இவ்வுரையைக் கேட்டுக் கொண்டிருந்த போது நெருடிய முக்கியமான விடயமும் ஒன்று இருந்தது.
ஏற்கனவே பொஜமுவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்ட அதே கருத்தை சிறுபான்மை தேசிய இனங்களைச் சார்ந்த மக்களின் அமோக ஆதரவின் பின்னும் அவர் பின்வருமாறு கூறியதுதான், இந்த நெருடலுக்குக் காரணம். அவர் கூறினார்:
‘சமாதானம் குறித்த எங்கள் அணுகுமுறை சிங்கள மக்களைப் பாதுகாப்பது அவர்களது உரிமைகளை உறுதி செய்வது என்பதில் முக்கிய கவனம் செலுத்தும் அதேவேளை பிற சமுதாயத்தினரும் சமமாகவும் கயமரியாதையுடனும் நடத்தப்படுவதை அங்கீகரிப்பதாகவும் அமையும்’
ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்டதும் நாட்டின் முழு மக்களாலும் தெரிவு செய்யப்பட்டவர் என்ற முறையில் அவரது இந்த அறிவிப்பு தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒருவகை ஏமாற்றத்தையே தோற்றுவித்தது.
ஆம்; தமிழ், முஸ்லிம், மலையக மக்களதும் மற்றுமுள்ள சமுதாயங்களதும் உரிமைகளைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்கள மக்களது உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று திரும்பத் திரும்ப உறுதிமொழி வழங்குவது ஒரு ஜனாதிபதி அவர் சிங்களமக்களுக்கு மட்டுமான ஜனாதிபதி தானா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
இத்தகையபேச்சு, மற்றைய தேசிய இனங்களின் உரிமை சிங்கள மக்களின் இறைமையையும் உரிமைகளையும் பறிப்பதனால் மட்டுமே வழங்கப்படலாம் என்ற எண்னக்கருவிலிருந்தே வருகின்றது என்பது மிகவும் துர்ப்பாக்கியமானதாகும். இதுவரை கால ஜனாதிபதிகளில் எல்லோரையும் போலவேதான் புதிய ஜனாதிபதியும் இவ்விடயத்தில் இருக்கப் போகிறார் என்ற அச்சத்தையே இவை தருகின்றன.
தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் – மறுக்கப்பட்ட அவர்களது அரசியல் சமூக வாழ்வியல் உரிமைகள் – வழங்கப்படுவது, சிங்கள மக்களை எந்தவிதத்திலும் பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்விடயத்தை இனங்களுக்கிடையேயான முரண்பாடாக மாற்றியதே அரசியலில் பிழைப்பு நடாத்தியவர்கள்தான். ஜனாதிபதி அவர்களின் தந்தையார் இவர்களில் முக்கியமானவர்.
உண்மையில் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம், சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக காட்டிக்கொண்ட முன்னைய அரசியல்வாதிகளின் வரலாற்றிலிருந்து புதிய ஜனாதிபதி தனது வரலாற்றை மாற்றியமைக்க விரும்பினால் அவர் இத்தகைய பேச்சுக்களை நிறுத்த வேண்டும்.
ஒற்றை (Unitary ஆட்சிக்குப் பதில் கூட்டாட்சியை (Unified) உச்சரிக்கும் அவர் இவ்விடயத்தில் கவனமாக இருக்காவிட்டால், எல்லாரையும் போலவே அவரும் தனது வரலாற்றில், வரலாறு காணா மக்கள் ஆதரவு என்ற பலத்தை வைத்துக் கொண்டே அரசியல் குற்றமிழைத்தவராவார்.
மக்கள் தமது கடமையை முடித்துவிட்டார்கள். இனியுள்ள கடமை ஜனாதிபதியிடம்…”
ஆனால் அவர் அதில் கவனம் செலுத்தவில்லை. அவருடைய காலம் முழுவதும் இனப்பிரச்சினை தொடர்பான விடையங்கள் திரும்பத் திரும்பப் பேசப்பட்டன. சரிநிகர் வெளிவந்த காலத்தில் ஆரம்பமான முதற்கட்டப் பேச்சுவார்த்தை குறுகிய காலமே- கிட்டத்தட்ட நான்கே மாதங்கள்- நீடித்தது. இந்தக் காலத்தில் நடந்த விடையங்கள் பற்றி சரிநிகரில் பல ஆக்கங்கள் வெளிவந்தன. அரசாங்கம் பேச்சுவார்த்தையில் போதியளவு அக்கறையுடன் ஈடுபடவில்லை என்பதை சரிநிகர் தெளிவாக முன்வைத்து வந்தது. நான் நாசமறுப்பான் என்ற பெயரில் எழுதிய பத்திகள், சரிநிகரின் ஆசிரிய தலையங்கங்கள் உட்படப் பல கட்டுரைகள், குறிப்புக்கள் அரசாங்கம் உண்மையில் தீர்வுக்கான முயற்சியில் வெளிப்படையானதும் தூரதிருஷ்டியுடையதுமான நிலைப்பாட்டுடன் நடந்துகொள்ளவில்லை என்பதைத் தெளிவாக முன்வைத்திருந்தன.
- சரிநிகர் அல்லது அதுபோன்ற பத்திரிகைகள் தொடர்ந்து நடக்கவேண்டிய தேவைகள் அதிகரித்து இருந்தபோதே சரிநிகரை நிறுத்தவேண்டிய கட்டாயம் உருவாகியிருந்தது. இன்று ஈழத்தில், பத்திரிகைகளும் ஊடகத் துறையும் எப்படி இருக்கின்றன?
அன்றைய ஊடகத்துறையை விட இன்று அதன் வளர்ச்சி தொழில் நுட்ப ரீதியில் மிகவும் பெரிதாகிவிட்டது. செய்திகளுக்கான தகல்களைத் திரட்டுதல் அவற்றை வெளியிடுதல் என்பவை இந்த இலத்திரனியல் உலகில் மிகவும் இலகுவானதாவும் அதேவேளை பரவலாக்கம் மிகப் பெரியதாகவும் மாறிவிட்டது. ஆயினும் ஊடகத்துறைக்கு அன்றிருந்த பொறுப்புணர்ச்சியும் பொறுப்புக் கூறலும் சொல்லும் மொழியில் கவனம் அவசியம் என்பதுவும் இப்போதைய ஊடகங்களில் அவ்வளவாகக் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்று நினைக்கிறேன். அதற்கும் மேலாக ஊடகவியலாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் தமது சூழலில் நடந்துகொண்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக தெளிவானதும் பொறுப்புணர்வு கொண்டதுமான பார்வை அவசியம் என்பது இலங்கைத் தமிழ் ஊடகப்பரப்பில் இப்போதெல்லாம் பெரும்பாலும் கவனத்தில் எடுக்கப்படுதாகத் தெரியபில்லை. நடக்கும் சம்பவங்களை ஊடகங்கள் தெரிவிக்கும் முன்பாகவே சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குப் பெரும்பாலும் தெரியவந்துவிடுகிறது. பத்திரிகைகளும் அல்லது இலத்திரனியல் ஊடகங்களும் அதையே சொல்வதானால் ஓர் ஊடகத்தின் அல்லது ஊடகவியலாளரின் பணி என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா? மக்களுக்கு செய்திகள் மட்டுமல்ல அவற்றின் பின்னாலுள்ள விடையங்களும் அவற்றால் வரக்கூடிய மாற்றங்களும் பற்றிய திரட்டப்பட்ட தகவல்களைக்கொண்ட செய்திகளே அவசியம். நாள் தோறும் அங்கிருந்து வரும் பத்திரிகைகளை பார்க்கிறேன்; எழுத்து, மொழி சார்ந்த தவறுகள் வருவது எரிச்சலூட்டுகின்றது. அதைக் கூட எரிச்சலுடனோ சிரித்துவிட்டோ கடந்து போகலாம் என்றால் வாசகர்களுக்கு எது தேவை என்பதைப் பற்றிய எந்தப் பொறுப்புமில்லாமல் வரும் எழுத்துக்களை என்ன செய்வது?
- அரசியல், வாசிப்பு, எழுத்து, பத்திரிகைத்துறை ஆகியவற்றில் தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் நீங்கள் இயங்கிய அதேசமயம் கல்வி/தொழில்முறை வாழ்க்கை என்பவற்றிலும் நீங்கள் சிரத்தை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். இந்தச் சமனிலையை நீங்கள் எவ்விதம் பேணினீர்கள்?
அதில் அவ்வளவு சிரத்தை எடுத்துச் செயற்பட்டதாக கூறமுடியுமோ தெரியவில்லை. கொழும்பில் வேலைக்குச் சேர்ந்தபோது நாட்டின் தொழில் முகாமைத்துவம் சம்பந்தமான போக்குகள் மாறத் தொடங்கியிருந்தன. அதனால் அவற்றைக் கற்பதும் ஒரு தவிர்க்கமுடியாத தேவையாக இருந்தது. அந்த வேலையை நான் வைத்துக் கொள்ளுவது சாத்தியப் பட்டிராவிட்டால், நீங்கள் சொல்லும் ‘அரசியல், வாசிப்பு, எழுத்து, பத்திரிகைத்துறை’ என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட அனைத்துக்குமான களமான சரிநிகரில் அவ்வளவுக்கு எனது உழைப்பைப் போடும் வாய்ப்புக் கிடைத்திருக்காது. இதனால், நான் எனது பொறியியல் படிப்புடன் நில்லாமல் முகாமைத்துவக் கல்வியையும் மேற்கொண்டேன். அது எனது வேலையில் சிறப்பாகச் செயற்படும் ஆற்றலை எனக்குத் தந்ததென்பது உண்மைதான். ஆனால் சரிநிகர் பத்திரிகை வெளியிடும் முயற்சியில் நாம் ஈடுபட்டிருக்காவிட்டால் அப்படியெல்லாம் படித்திருப்பேனோ தெரியாது! ஆனால் நீங்கள் கேட்கும் சமநிலையைப் பேணுதல் என்பதுவும் கூட நவீன முகாமைத்துவ கல்வியில் ஒரு முக்கியமான விடயமாகப் போதிக்கப்படுகிறது. ஆனால் அவற்றைக் கற்பதும் பட்டம் பெறுவதும் மட்டும் போதாது. அப்படிமட்டுமே செய்தால் அவை உங்களது வேலைக்கான தகுதியாக மட்டுமே கணக்கெடுக்கப்படும். ஆனால், உங்களது தேவைகள், ஆர்வங்கள், பொறுப்புகள் சம்பந்தப்பட்ட தெரிவுகளை, அவற்றின் முக்கியத்துவம் சார்ந்து நிரைப்படுத்துதலையும், அதற்கான கால ஒழுங்கை நீங்கள் எவ்வாறு முகாமைத்துவம் செய்யலாம் என்பதை அறிந்துகொள்ள அந்தக் கல்வி உதவும், உதவியது என்பது எனது அனுபவம். ஆனால் உங்களது வெற்றி என நீங்களே திருப்திப்பட்டுக் கொள்ளும் நிலைக்கு வர அவசியமான அடிப்படை உங்களது என நீங்கள் தெரிவுசெய்யும் தெரிவுகளில்தான் பெரிதும் – சரியாகச் சொல்வதானால் முழுக்க முழுக்கத் தங்கியுள்ளது என்று நினைக்கிறேன்.
அதுபோலவே, உங்கள் துணைவியான ஔவை, மகள்கள் அரசி, அனிச்சா ஆகியோரும் அரசியல், கலை, இலக்கிய ஈடுபாடும் ஆளுமையும் நிரம்பியவர்களாகவே இருக்கின்றார்கள். நாங்கள் செய்ய விரும்பும் சமூக மாற்றம் பற்றிய உரையாடலை எங்கள் வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும் என்பது உண்மையல்லவா, அது எவ்விதமாக சாத்தியமானது?
ஔவை நான் செயற்பட்ட அரசியல் அமைப்பின் ஒரு தோழராக எனக்கு அறிமுகமானவர். அவரது அரசியல், சமூகம், வாழ்க்கை என்பவை தொடர்பான பார்வைகளின் வளர்ச்சிக்கும் எமக்கிடையிலான உறவுக்கும் தொடர்ச்சியான சம்பந்தம் இருந்து வந்தது. எனது மகள் அரசிக்கும் சரிநிகருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. அவள் 1990 மே மாதத்தில் பிறந்தவள். சரிநிகரும் 1990 மே இல் பிறந்தது. எங்களது வீடு பெரும்பாலும் சரிநிகரின் உத்தியோகப்பற்றற்ற அலுவலகமாக இருந்தது. அந்தச் சூழல் இயல்பாகவே அவர்களுக்கு அரசியல், வாசிப்பு இலக்கியம் என்பவற்றில் ஆர்வத்தைத் தரும் சூழலாக இருந்தது. கூடவே ஔவை பாடசாலை ஆசிரியராகவும் கவிதை, இசை, நடனம், நாடகம் போன்ற கலைகளில் ஆர்வமுள்ளவராக இருந்ததனாலும், அவர்களுக்கு அவையெல்லாம் இயல்பாகவே ஆர்வமுள்ள விடயங்களாக அமைந்துவிட்டன. அவ்வாறு சமூக மாற்றம் சம்பந்தமான சிந்தனைகள், அவற்றுக்கான வாசிப்புக்கள் என்பவையும் அவர்களிடம் இயல்பாகவே அமைந்துவிடுகின்றன. தெருவில் நடக்கும் ஒரு சம்பவமோ, தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு காட்சியோ, செய்தியில் காட்டப்படும் ஒரு நிகழ்வோ பற்றிய எனது குடும்ப உரையாடல்கள் அவர்களது பார்வையை விரிவுபடுத்துகின்றன. இவையெல்லாம் திட்டமிட்டுச் செய்யப்படவேண்டும் என்றில்லாமலே இயல்பாகவே வளரக் கூடியன. தேவையானதெல்லாம் உரையாடல் மட்டுமே. இவற்றினூடாகவே, எதிர்காலத்தில் தாம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான சமூகம் சார் சிந்தனைக்கான அரும்பு அவர்களிடம் ஆரம்பித்து விடுகிறது என்றே நான் நினைக்கிறேன்.
- சிறுவயதில் உங்களுக்கு கூத்துக் கலையுடன் ஏற்பட்ட ஈடுபாடு / பரிச்சயம் குறித்து (தனிப்பட்ட உரையாடல்களில்) குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபோலவே சித்தர் பாடல்கள், மரபிலக்கியம் போன்றவற்றிலும் மிகுந்த பரிச்சயத்தையும், நினவிலிருந்து பாடல்களையும் கவிதைகளையும் சொல்லிக்காட்டுகின்ற உங்கள் ஆற்றலையும் நான் அவதானித்துள்ளேன். இந்தப் பரிச்சயம் எப்படி உருவானது? இவை உங்கள் எழுத்து, அரசியல், சமூகச் செயற்பாடுகளில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனவா?
இது பற்றி முன்னரும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்; இவையெல்லாம் எனது அம்மாவழிப் பாட்டனாரின் காரணமாக வந்த பரிச்சயம் தான். சாதீயம் தீண்டாமை போன்ற அனைத்து மதம் சார்ந்த கருத்துக்களையும் மூட நம்பிக்கைகளியும் கேலிசெய்யும் சித்தர் பாடல்கள் மிக முக்கியமானவை என்பதனை பின்னாளில் நான் உணர்ந்திருக்கிறேன்.
‘நட்ட கல்லைச் சுற்றி வந்து நாலு புஷ்பம் சாற்றியே;
சுற்றி வந்து முணு, முணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ!
நட்டகல்லும் பேசுமோ; நாதன் உள்ளிருக்கையில்!’
என்ற பாடல் எவ்வளவு ஆழமான, மதச் சடங்குகளின் போலித்தனத்துக்கு எதிரான குரல் என்பதைப் பின்னர் உணர்ந்திருகிறேன். கலகக்காரர்களான சித்தர்களது சிந்தனையைக் கொண்ட அவரும் அவரது நண்பர்களும் கால்நடையாக கதிர்காமம் செல்லும் வழியில் உள்ள இடைத்தங்குமிடங்களில் அவரது வீடும் ஒன்றாக இருந்தது. இதுவும் யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரது கருத்துக்கு மாற்றாக நிலவிய ஒரு சித்தர் வழிப்பட்ட எதிர்நிலைப் போக்காக இருந்து வந்திருக்கிறது. சைவத்தமிழ் மரபுக்கு சமாந்தரமாக, அவற்றைக் கேள்விக்குட்படுத்தும், தீண்டாமை, சாதி போன்ற மரபுகளைக் கடந்த ஒரு வாழ்வுமுறையும் இருந்தது என்பது முக்கிய கவனத்துக்குரியது
இதை அடிப்படையாக வைத்து பேராசிரியர் சிவத்தம்பி அவர்களது ‘யாழ்ப்பாணம்: சமூகம் பண்பாடு கருத்துநிலை’ என்ற நூலின் வெளியீட்டில், இதை இந்தச் சமூகத்தின் ஓர் அம்சமாக நீங்கள் ஏன் கருதவில்லை என்று வினவியதுடன் இதுபற்றிச் சற்று விரிவாக மூன்றாவது மனிதன் இதழிலும் நான் எழுதியிருந்தேன். அதற்கான அவரது பதிலாக ‘இதுபற்றித் தனியாக எழுத வேண்டும் விக்கி. அதுவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடையம் தான்’ என்று சொன்னார். ஆனால் அவர் அதை எழுதுவதற்கான அவகாசம் அவருக்கு இறுதிவரை கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
- ஆரம்பகாலங்களில் புனைவெழுத்துகளை எழுதிய நீங்கள் பின்னர் அதனைத் தொடரவில்லை. உங்கள் புனைவெழுத்துகள், கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் என்று நூலாக்கம் செய்யப்படவேண்டியவை ஏராளமாக உள்ளன. அதுகுறித்து நீங்கள் ஏன் அக்கறை செலுத்தவில்லை?
அக்கறை செலுத்தும் அளவுக்கு அவை முக்கியமானவையாக இருக்கிறனவா என்ற கேள்வி ஒரு காரணமாக இருக்கலாம். சிறுகதைகள் எல்லாவற்றையும் தொகுத்து நூலாக வெளியிடும்படி நண்பர்கள் கேட்டுள்ளார்கள். தேடி எடுத்துவிட்டேன். ஆனால் அவை எழுதப்பட்ட காலங்களின் கதைப்போக்கு என்றவகையில் கவனப்படுத்தப்படுவதைவிட இன்றைய சூழலில் பெரிய முக்கியத்துவம் பெறுமா என்று தெரியவில்லை. அடுத்த வருடத்துள் கொண்டுவரவிரும்பும் நூல்கள் மூன்றில் இதுவும் ஒன்று. இரண்டாவது சரிநிகர் ஆசிரிய தலையங்கங்கள். அடுத்தது றெஜி சிறிவர்த்தன அவர்களது Living Underground என்ற நூலின் மொழிபெயர்ப்பு. இது சரிநிகரில் தொடராக வந்தது. கடைசிப் பகுதி ஒரு இரண்டு பக்கம் வெளிவரமுன்பே இதழ் நின்றுவிட்டது. அதை நூலாகக் கொண்டுவர முதலில் முயன்றபோது அதற்கு எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இப்போது அதை வெளியிடலாம் என பேராசிரியர் நுஃமான் அவர்கள் சொல்லியுள்ளார். அது ஒரு முக்கியமான, பலராலும் வாசிக்கப்பட வேண்டிய நூல் என்பதால் அதைக் கொண்டுவரலாம் என யோசிக்கிறேன். நான் எழுதிய அரசியற்கட்டுரைகளை எடுத்துத் தொகுக்க வேண்டும். ஈழமோகம் என்று சரிநிகரில் வந்த கவிகளின் தொகுப்பு கைலாசநாதனது ஓவியங்களுடன் வருவதாக இருந்தது. சிவகுமார் கைதான போது அந்த ஓவியங்கள் தொலைந்து போனதும் அது கைவிடப்பட்டுவிட்டது. நான் அவ்வப்போது எழுதிய நூல் விமர்சனங்கள், இலக்கியக் கட்டுரைகள் போன்றவற்றிலிருந்து முக்கியமானவைகளை தொகுக்கவும் முடியும். எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!
- சமூக ஊடங்களின் பரவல், இணையப் பாவனையின் பரவல் ஆகியவற்றின் காரணங்களால் இன்று பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எவ்விதமாக அவதானிக்கின்றீர்கள். சமூக நலன் குறித்த அக்கறைகளும், அரசியல் பிரக்ஞையும் கருத்தியல் தெளிவும் இந்த ஊடகங்களில் குறைந்து போயிருப்பதற்கான காரணிகள் என்னவாக இருக்கக் கூடும்?
உங்கள் முதலாவது கேள்வியைப் பொறுத்தவரை நான் மூன்று முக்கியமான விடயங்களை அவதானிக்கிறேன். அதன் பின்னணியில் இரண்டாவது கேள்வியை அணுகலாம் என்று நினைக்கிறேன்.
இணையப் பாவனை பரவலானதின் முதலாவதாகவும் முக்கியமானதாகவும் குறிப்பிட வேண்டிய ஒரு அனுகூலம் என்னவென்றால் அதனைப் பயன்படுத்த முடிந்த அனைவருக்கும் தமது கருத்துக்களை பொதுவெளியில் வெளிப்படையாக முன்வைப்பதற்கான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதுதான். முன்பெல்லாம் அதற்கான வாய்ப்புக்கள் மிக அரிதாகவே இருந்தன. அந்த அரிதான வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதிற் கூட மிகச்சிலருக்கு மட்டுமே முடியுமாக இருந்தது. இந்த நிலமை இப்போது முற்றாக மாற்றமடைந்துள்ளது என்று சொல்லலாம். வீட்டிலிருந்தபடியே உலகெங்கும் நடக்கும் விடையங்களை உடனுக்குடன் ஒரு கைத்தொலைபேசியை வைத்தே மிகச் சாதாரண மக்கள் கூட அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைப்பது என்பது பெரும் புரட்சிகரமான மாற்றம் தான். இது, இந்த விடையத்திலுள்ள, இந்த நூற்றாண்டுக்கேயுரிய அநுகூலமான பக்கம். உலகின் அதிகார சக்திகள் தங்களது பொய்களையும் புனைவுகளையும் மக்களிடம் செலுத்தித் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தி வந்த நிலையை இது ஒருவகையில் ஆட்டங்காணச் செய்துதானிருக்கிறது.
ஆனால் இதன் இரண்டாவது பக்கம் என்னவென்றால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது எவ்வளவுக்கு எவ்வளவு உடனடித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறதோ அவ்வளவுக்கு, கருத்துக்களும் தகவல்களும் அவற்றின் உண்மைத் தன்மை, தெளிவு, சொல்லும் முறை, பயன்படுத்தப்படும் மொழி, அவற்றைச் சமூகப் பொறுப்புணர்வுடன் செய்யவேண்டும் என்ற பொறுப்புணர்வு என்பவை சார்ந்து மிகவும் பலவீனமானவிதத்தில், ஆனால் முன்னரைவிட மிக வேகமாகப் பரவுகின்றதைக் குறிப்பிடலாம். இந்த நிலமை நீங்கள் குறிப்பிட்டது போல ஊடகத்கத்துறையில் மிகத் தெளிவாக வெளித்தெரியும் ஒரு அம்சமாக மாறியுள்ளது. ஊடகத்துறைக்கான, கல்வி, உழைப்பு, சமூகப் பொறுப்புணர்வு அதற்கான நெறிமுறைகள் என்பவை கணக்கிலெடுக்கப்படாமலேயே, சமூக ஊடங்களது தரமட்டத்தில் செய்தி ஊடகங்களும் தொழிற்படத்தொடங்கியுள்ள ஆபத்தான நிலை தோன்றியுள்ளது. நீங்கள் குறிப்பிடும் ‘சமூக நலன் குறித்த அக்கறைகளும், அரசியல் பிரக்ஞையும் கருத்தியல் தெளிவும்’ குறைந்திருப்பதற்கான காரணமும் இதுதான். ஊடகங்களை நோக்கி வருவது என்பது முன்னெல்லாம், சமூகநலன், அரசியல் பிரக்ஞை, கருத்தியல் தெளிவு என்பவற்றைக் கொண்ட அல்லது அப்படிக் கொண்டிருக்க விரும்பியவர்களுக்குத் தாம் இயங்குவதற்கான தளமாக அது இருந்தது என்ற அடிப்படையிலேயே நடந்து வந்தது. ஆனால் தற்போது எவரும் ஒரு சமூக ஊடகத்தை நடாத்திவிடலாம். அதற்கான கல்வி, அதன் நோக்கம், பொறுப்புணர்வு என்று எதுவும் இல்லாமலே ஒருவரால் ஒரு சமூக ஊடகத்தை ஒரு தொலைபேசியை வைத்துக்கொண்டே ஆரம்பித்துவிட முடியும் என்பதால் இந்த நிலை குறைந்தபட்சம் சில காலத்துக்காவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். இப்போது நீங்கள் கேட்கும் கேள்வி போன்ற கேள்விகள் எழுந்து பரவலாகும் போதுதான் இந்த நிலையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்.
ஆனால் அதேவேளை இந்தச் சூழலில் மூன்றாவதும் முக்கியமானதுமான பகுதி என்னவென்றால், எந்தத் தகவலையோ கருத்தையோ செயலையோ அல்லது செயல்முறையையோ சரிதானா என்று தேடுவதற்கு உரிய வாய்ப்புக்களும் விரிவாக வளர்ந்திருப்பது என்பது இந்தக் காலத்தின் மிக முக்கியமான அனுகூலமான ஒரு விடையம் ஆகும் (’தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்ற யேசுநாதரது வார்த்தை இந்த இடத்தில் மிகப்பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்). ஆக, எம் கண்முன்னால் எல்லாமே விரிந்து, கைக்கெட்டிய அளவில் இருக்கின்றன. எமக்குத் தேடல் இருக்கும்வரை எமக்கு கண்டடைதலுக்கான வாய்ப்பு இப்போது அதிகரித்துள்ளதாகவே எனக்குப் படுகிறது.
- இன்று ஈழத்தில் கல்வியுட்பட பொதுப்பணித்துறை மிகவும் மோசமான நிலையை நோக்கிச் சென்றுகொண்டுள்ளன. சமூக வன்முறைகள், போதைப் பொருட்பாவனை போன்றன அதிகரித்துச் செல்கின்றன. பின்போர்க்கால விளைவுகளில் ஒன்றாக மாத்திரம் இதைக் கடந்துபோய்விட முடியாதல்லவா? இந்த நிலைமைக்கான காரணிகள் என்னவாக இருக்கக் கூடும்?
இலங்கையின் கடந்த ஒரு தசாப்தகாலத்துக்கு மேலான காலம், குறிப்பாக ராஜபக்ஷ குடும்பத்தினரின் இரண்டாவது ஆட்சிக்காலம் முழுவதும் ஊழலும், அரச வங்கிகள், அரச சொத்துக்கள், அந்நியக் கடன்கள் என்று அனைத்திலும் தொடர்ச்சியான சூறையாடல்கள் நடக்கத் தொடங்கி வளர்ந்து வந்த காலம். சட்டவிரோதமான தொழில்கள், இறக்குமதிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், அரசியல் அதிகாரத்துக்கென மக்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தை தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்துதலை எத்தகைய தயக்கமுமின்றிச் செயற்படுத்தல் என்று வளர்க்கப்பட்ட ஒரு மோசமான மோசடிக் கலாச்சாரத்தின் விளைவுகளே இவையாகும். கல்வி, சுகாதாரம் பொதுப்பணித்துறை, சூழலியல் என்று எல்லத் துறைகளிலும் ஊழலும் அதிகார துஷ்பிரயோகங்களும் ஒரு பெருநோயாகப் பீடித்து வளர்ந்துவிட்டுள்ளன. அண்மையில் நூற்றுக் கணக்கான பொலிஸ் அதிகாரிகளுக்கு அவசர அவசரமாக இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டதும், நல்ல பிரதேசப் பொலிஸ் நிலையங்களுக்குப் போக விரும்புபவர்களிடம் பணம் வாங்கிகொண்டு மாற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் வெளிவந்ததும் இந்தப் போக்கின் மிகக் கிட்டிய உதாரணம். இவற்றிற்கும் போருக்குப் பின்னான காலத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
உண்மையில் போருக்குப் பின்னான காலம் மிக வேகமாக நாட்டை துரிதமான அபிவிருத்தியில் நடாத்திச் செல்ல அரசுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால் இலங்கையில் அப்படி நடக்கவில்லை. சமூக விரோத சக்திகளும் அரச தலைமைகளும் கூட்டாக இணைந்து மக்களின் பேரால் நடாத்திவந்த கூட்டுக் கொள்ளையின் விளைவையே மக்கள் இன்று எதிர்கொள்கின்றனர். இந்தப் பின்னணியில் வளர்ந்துள்ள சமூக வன்முறைகள், சமூகச் சீரழிவு நடவடிக்கைகள், கொலைகள், கொள்ளைகள் என்பன பரவலாக சமூக நெருக்கடிகளை உருவாக்கியுள்ளன. இது போருக்குப் பின்னான காலத்தில் அதிகரித்துள்ளதன் காரணமாக பின்போர்க்கால விளைவுகள் என்று நியாயப்படுத்திவிட முடியாது. அரச அதிகாரத்தில் உள்ளவர்களது ஆதரவுடன் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, பரவலாக்கப்பட்டுள்ள ஒரு விடையம் என்றே நான் நினைக்கிறேன். அதற்கு வசதியாக, சிவில் நிர்வாகம், பொலிஸ் நிர்வாகம், இராணுவம், நீதித்துறை, ஏற்றுமதி இறக்குமதித் துறை என்று அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்குச் சாதகமான, சட்டம், நீதி, நியாயம் என்பவற்றைப் பற்றிக் கவலைப்படாது, சட்டவிரோதமாகவும் மனிதாபிமானமற்றும் அடாவடித்தனமாக அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரவர்க்கங்களைச் சேர்ந்தவர்களை அவர்களே உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த நிலையில் மாற்றம் ஒன்று தேவையெனில், முற்றுமுழுதான மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசியல் மாற்றம் நடைபெற வேண்டும். இப்போதுள்ள அரசாங்கமும் கூட அந்த வகையில் பெரியளவான மாற்றத்தைத் தரப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
- இப்படியானதொரு இறுக்கமான நிலைமையிலும் ஈழத்தில் இருந்து தொடர்ச்சியாக ஜீவநதி, கலைமுகம், தாயகம், ஞானம் போன்ற இதழ்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. அதேநேரம் தொடர்ச்சித் தன்மையைப் பேணமுடியாத சிற்றிதழ்களும் வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன. ஈழத்திலிருந்து தற்போது வெளிவரும் இதழ்களின் போக்கும், அவற்றில் வரும் ஆக்கங்களின் கருத்துநிலையும் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்.
ஆம், இந்த இதழ்களின் தொடர்ச்சியான வருகை என்பது மிகவும் மகிழ்ச்சியானதும் நம்பிக்கை தருவதுமான ஒரு விடையம். ஈழத்தில் சிற்றிலக்கிய இதழ்களை நடாத்தும் முயற்சிகள் காலங்காலமாக இருந்து வந்திருக்கின்றன. அவ்வாறே அவை குறுகிய காலத்துள் நின்றுபோயுமிருக்கின்றன. ஆனாலும் மீண்டும் மீண்டும் புதிதாக இதழ்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. இது ஒரு ஆரோக்கியமான நிலை என்றே நான் கருதுகிறேன். இத்தகைய இதழ்கள் வியாபார நோக்கம் அற்றவை. தாம் நம்பும் அல்லது உரையாட விரும்பும் விடையங்களை வெளியில் கொண்டுவர வேண்டும் என்று மனம் உந்தப்படும் போது, ஏற்கனவே உள்ள இதழ்களின் போதாமை அல்லது அவற்றுடன் உடன்பாடின்மை என்ற காரணங்களால் புதிய இதழ்களைக் கொண்டுவரும் நிகழ்வு நடக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த நிகழ்வு ஒரு வகையில் நீண்டகாலத் திட்டமிடலுடன் நடப்பதில்லை. தாம் ஏதாவது ஒரு விடயத்தை உரையாட வேண்டுமென விரும்பும் ஒருவரோ அல்லது ஒரு குழாமோ, அவர்கள் தாம் பேசவிரும்பும் விடையங்கள் மீதான தமது ஆர்வத்தை மட்டுமே முதலாகக் கொண்டு இதழை வெளியிட ஆரம்பிக்கிறார்கள். இதுவே இதழ்களின் வருகைக்கான அடிப்படை. இது தமிழ் நாட்டில் சி.சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகையின் காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் வரலாறாக இருந்துவருகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து செயற்படுத்துவது என்பது சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்துடன் சம்பந்தப்பட்ட செயல். அதற்குத் தொடர்ச்சியான இயக்கம் தேவை. ஆனால் சிற்றிதழாளர்களுக்கு அதற்காக செயற்படவென செலவழிக்கவேண்டியளவு காலம், பணம் என்பன பெரிதும் கிடைப்பதில்லை. இதனால் அவை ஒரு சில இதழ்களுடனோ அல்லது ஒருசில வருடங்களிலோ நின்றுபோவதைத் தவிர்க்க முடிவதில்லை. ஆயினும் சிறியளவு காலம் வாழ்ந்தவையாயினும் அவை சமூக மட்டத்தில் ஆற்றியிருக்கும் தாக்கங்களை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. பல முக்கியமான படைப்பாளிகளை அவைதான் ஈழத்திலும் ஏன் தமிழ்நாட்டிலும் எழுத்துலகுக்குத் தந்திருக்கின்றன.
நீங்கள் மேலே குறிப்பிடும் இதழ்கள் கால அளவில் நீண்ட காலம் வ்ந்துகொண்டிருப்பது உண்மையே. மல்லிகை, அலை போன்ற இதழ்களும் இவ்வாறு நீண்ட காலம் வெளிவந்தவையாயினும் அவற்றின் அந்தச் சாதனைக்கு அவற்றின் ஆசிரியர்களது தனிப்பட்ட அர்ப்பணிப்புள்ள உழைப்புத்தான் மிக அடிப்படையாக இருந்துள்ளதைக் கானலாம். நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள இதழ்களதும் தொடர்ச்சிக்கும் மிக முக்கியமான காரனம் அவற்றின் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான உழைப்புத்தான் என்பதில் சந்தேகமில்லை.
இந்தக் காரணங்களினாலேயே இதழ்களின் போக்கு, ஆக்கங்கள், அவற்றின் கருத்துநிலைகள் என்பவையும் பெரிதும் அவற்றின் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர் குழுக்களின் கருத்துநிலை சார்ந்தவையாக அமைவதைக் காணமுடியும். அதை தவறென்று சொல்ல முடியாது. அவை பல முக்கியமான விடயங்களைப் பேசுகின்றன, பல படைப்பாளிகளை அறிமுகப் படுத்துகின்றன. ஆனால் அவற்றில் வரும் படைப்புக்கள் அல்லது ஆக்கங்கள் பற்றிய கருத்துக்கள் அல்லது விமர்சனங்கள், அவற்றின் கருத்து நிலை என்பவை பற்றிய கருத்துக்கள், உரையாடல்களை, விவாதங்களை அவை பெரிதும் கொண்டிருப்பதில்லை. தவிரவும் இப்போதெல்லாம் வாசகர்கள் தமது கருத்துக்களை எழுதி அனுப்பும் போக்கிலும் ஒருவகைத் தொய்வு பொதுவாகவே ஏற்பட்டிருக்கின்றது என்றபோதும், அத்தகைய எழுத்துக்களை ஊக்குவித்தலும் கூட ஆசிரியர்களின் பணிகளில் ஒன்றாக அமைய வேண்டும். இந்த இதழ்கள் ஆற்றிவரும் பங்கு மெச்சுதற்குரியதென்பதில் சந்தேகமில்லை. அதே வேளை இலக்கியம், அரசியல், சமூகம் என்பவை சார்ந்த சமகால முக்கியத்துவம் உள்ள விடயங்கள் தொடர்பான பரவலான உரையாடல்களை நடாத்தும் களங்களாக இவ்விதழ்கள் தம்மை மாற்றுவதற்கு முயற்சி எடுப்பது நல்லதென்பது எனது அபிப்பிராயம். அவ்வாறான ஒரு இதழால் தான் பல புதிய எழுத்தாளர்கலையும், புதுமை எழுத்துக்களையும், புதிய சிந்தனைகளின் வருகையையும் வாசகர்கள் மத்தியில் அடையாளம் காட்டமுடியும்.
- ஈழத்திலிருந்து வெளிவரும் இதழ்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரதான நெருக்கடிகளில் தலையாயதாக விற்பனைக்கும் விநியோகத்துமான தொடர்புகளையும் அதற்கான பொறிமுறை ஒன்றையும் உருவாக்குவது இருக்கின்றது. இதனை எவ்வாறு கையாள்வது?
பொதுவாக பெரிய நிறுவனங்களால் நடாத்தப்படும் செய்திப்பத்திரிகைகள் போல சிறு சஞ்சிகைகளுக்கு அத்தகைய விநியோக வாய்ப்பு பெரிதாக வாய்ப்பதில்லை. அதற்குத் தேவையான பொருளாதார வசதி இத்தகைய இதழ்களுக்கு இருப்பதில்லை. ஆனால், எழுத்தாளர்கள் வாசகர்கள் உடன் இணைந்த வாசகர் வட்டங்கள் போன்றவற்றை பிரதேசங்கள், ஊர்கள் தோறும் உருவாக்குவது அல்லது அப்படிச் செயற்படும் குழுக்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது, அவற்றைத் தொடர்ச்சியாக இயங்கவைக்கும் விதத்திலான உரையாடல்களை நடாத்துவது போன்ற வழிமுறைகள் பயனளிக்கக் கூடும். இதழ்களுக்கு பரவலான இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் வாசகர் வட்டங்களை உருவாக்குதல் என்பது மிகவும் பழைய உத்தியாயினும் அது மிகவும் பயனுள்ள ஒரு முறைமை என நான் நம்புகிறேன். இன்று இலத்திரனியல் ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில் இளம் சமுதாயம் பெரிதும் அவற்றிலேயே கவனம் செலுத்துவதைக் கணக்கிலெடுத்தே இந்த விடயங்கள் கையாளப்பட வேண்டும். அச்சில் வரும் இதழ்கள் அவற்றை சமூக ஊடகங்களுடாக மேலும் பரவலாக்கும் முயற்சியில் ஈடுபடுவதன் மூலமாக சமூக ஊடகங்களூடாக இதழ்களுக்கும் வாசகர்களுக்குமான தொடர்பாடல்களை ஏற்படுத்த முயல்வதும் ஊக்குவிப்பதும் கூடிய பயனைத் தரும் என நம்புகிறேன்.
- சிறுவயதிலிருந்து வாசிப்புப் பழக்கத்தையும் எழுத்தாற்றலையும் கொண்டிருந்த நீங்கள் உங்கள் வாசிப்பினூடாக அரசியல் பிரக்ஞைகொண்டு இட்துசாரிக் கருத்தியலின்பால் ஈர்க்கப்படுகின்றீர்கள். அன்றைய காலத்தில் இடதுசாரிய / அல்லது அரசியல் சார்புகொண்ட நூல்களை அணுகுவதும் வாசிப்பதற்குமான சூழல் எப்படி இருந்தது. உரையாடலுக்கும் தொடர்ச்சியாகத் தேடுவதற்குமான வெளி எப்படி இருந்தது? (அன்றைய நாட்களில் இடம்பெற்ற கூட்டங்களையும் கலை/இலக்கிய நிகழ்வுகளையும் இன்று நடைபெறுவனவற்றையும் ஒப்பிட முடியுமா?)
நான் முன்னரே சொன்னது போலவே எனது வாசிப்பு மீதான ஒருவகை வெறிகொண்ட ஆர்வமே எனக்குப் பலவிடயங்களை அறிமுகப்படுத்துகிறது. இதற்கு எனக்குக் கைகொடுத்தவை நூலகங்களும் எனக்குக் கிடைத்த நண்பர்களும் தான். நண்பர்கள் என்று சொல்லும் போது நான் அவசியம் குறிப்பிடவேண்டிய ஒருவர் என் அன்புக்குரிய குலசிங்கம் அண்ணர். அவர் மஹாகவியின் ‘கோடை’ என்ற நூலைத் தனது கடையில் இருந்து வாசித்துக் கொண்டிருந்தபோது தற்செயலாகக் கண்டு அவருடன் உரையாடச் சென்றதிலிருந்து உருவாகிய நட்பு அது. அவரைச் சந்தித்த பின்னர்தான் பல முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது எழுத்துக்கள் பற்றியும் அறிந்துகொண்டதுடன், அவரிடமிருந்து நூல்களைப் பெற்று வாசிக்கும் வாய்ப்பையும் பெறுகிறேன். எனது வாசிப்புப் பரப்பு விரிவடைவதற்கு அவருடனான உறவும் உரையாடல்களும் கணிசமானளவு பங்களித்திருக்கின்றன. இந்த ஆர்வம் காரணமாகவே நான் ஜெயகாந்தனை அடையாளங் காண்கிறேன். அதன்காரணமாகவே அவரது நூல்களை தேடத்தொடங்கி தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களையும், ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களூடாக அறிந்து கொள்கிறேன். டொமினிக் ஜீவா, கைலாசபதி, சிவத்தம்பி, கே.டானியல், செ.கணேசலிங்கன், மு.யோகநாதன் என்று முற்போக்கு எழுத்தாளர்களை அடையாளம் காண்கிறேன். 1977 தேர்தலின் பின்னான எனது அரசியல் ஈடுபாடு இடதுசாரியம் சார்ந்ததாக முழுமையாக மாற்றம் கொள்கிறது. இதன்காரணமாக இலக்கியங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துக்குச் சமனாக இடதுசாரிய கருத்துக்கள் தொடர்பான நூல்களையும் வாசிக்கத் தொடங்குகிறேன்.
கம்யூனிசம் என்ற கருத்துரு பற்றிய எனது கேள்வி ஒன்றிற்காக முதன்முதலாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நூல் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ என்ற மொஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தின் வெளியீடான கார்ல் மார்க்ஸின் உருவ அட்டைப்படத்துடனான ஒரு சிவப்பு நிறப் புத்தகம். அதன் முதல் வரி ‘ஐரோப்பாவை இப்பொழுது ஒரு பூதம் பிடித்து ஆட்டிக் கொண்டு இருக்கிறது. அதுதான் கம்யூனிசம் என்னும் பூதம்’ என்று இருக்கும். இந்த வரி என்னை மிகவும் சிலிர்ப்புக்குள்ளாகியது இப்போதும் நினைவில் உள்ளது. இதைத் தொடர்ந்து மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரது நூல்களை வாசிப்பது என்பது ஒர் பழக்கமாக மாறிவிட்டது. அந்தக் காலத்தில் இந்த நூல்களை நான் வாசிப்பது ஒன்றும் புதிய விடயமாக இருக்கவில்லை. எனக்குத் தெரிந்த ஓரிரு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இந்த நூல்கள் இருந்ததன. நான் கொழும்பு சென்ற பின்னர், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் என்ற கட்சியுடனான தொடர்பு கிடைத்த பின்னர் எனக்கு வாசிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்ட சில நூல்களுள் லெனினுடைய நூல்களும் அடங்கும். இந்த நூல்கள் தொடர்பான உரையாடல்களை அவர்களுடன் நடாத்த முடிந்தது. தொழிலாளர் பாதை என்ற அவர்களது பத்திரிகையின் ஆசிரியர் கணேசதேவ் உடன் பலவிடயங்களை விவாதிக்கவும் தெளிவுபடுத்திக் கொள்ளவும் முடிந்தது. அவர்தான் எனக்கு ‘நீங்கள் முதலில் அந்தத் தத்துவம் தொடர்பான மார்க்ஸினதும் எங்கல்சினதும் நூல்களை வாசிக்க வேண்டும். குறிப்பாக ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ ‘குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல்களை வாசிப்பது நல்லது. ஏதாவது புரியாதது இருந்தால் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லியிருந்தார். அந்த நூல்களை நான் வாங்கப் போய்தான் கூடவே மாவோவின் புத்தகங்களையும் கொழும்பிலுள்ள அந்தப் புத்தகக் கடையில் வாங்கிய சம்பவம் நடந்தது.
இப்படியான ஒரு வாய்ப்பான சூழல் எனக்கு அமையக்கூடிய ஒரு நிலமை அன்று இருந்தது என்றுதான் என்று சொல்ல வேண்டும். அன்றும் சரி இன்றும் சரி நீங்கள் ஒரு நூலை வாசிக்கத் தொடங்கிவிட்டால் அது உங்களை அதன் பாதையில் அழைத்துச் செல்லும். வேறு நூல்களை அடையாளம் காட்டும். ஆனால் இன்றுபோல உங்கள் கதிரையில் இருந்தபடி ஒரு தொலைபேசியை வைத்துக்கொண்டே அதைப் பற்றி விசாரித்துவிட முடியாது. வாசித்த ஒரு புத்தகத்தில் இன்னொரு புத்தகம் பற்றி விதந்து கூறப்பட்டிருந்தால், இன்று போலல்லாமல் நீங்கள் வாசிகசாலைக்கோ அல்லது புத்தகக் கடைகளுக்கோ தேடிப் போகவேண்டும். இப்போது அந்தச் சிரமம் இல்லை. ஆனால் அந்தக்கால இலக்கிய விமர்சனக் கூட்டக்களிலும் சரி இப்போதும் சரி நூல்கள் பற்றிய அலசல்கள் பொதுவாக இலங்கையில் நடக்கும் கூட்டங்களில் சிறப்பாக நடக்கின்றன என்றே நான் நினைக்கிறேன். ஆனால் அப்படி எல்லாவிடங்களிலும் நடக்காமல் இருக்கக்கூடும். ஏனென்றால் புத்தக வெளியீட்டு நிகழ்வும், உரையும் இப்போதெல்லாம் ஒரு நூலின் முக்கியத்துவத்தையும் விட ஒரு ஆசிரியரின் முயற்சி என்ற அளவிலான அவரைப் பாராட்டும் ஒருவகை விழாவாகப் பரவலாக மாறிவிட்டது என்பதும் உண்மைதான். ஆயினும் இத்தகைய நிகழ்வுகளும் கூட அவசியமானவை. அப்போதுதான் கூட்டத்தின் பின்னரான உரையாடல்கள் எழவும் விரிவடையவும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.
- ஒடுக்கப்படும் மக்கள் பலம்பெறுவதற்கு அவர்கள் அமைப்பாகச் ஒன்றிணைவதும் முக்கியம். ஆயினும் இன்று அமைப்பாக்கத்தை தனிநபர் சுதந்திரத்துக்கும் “படைப்பு மனநிலைக்கும்” எதிரான விடயமாக கட்டமைக்கின்ற போக்கு நிலவுகின்றது. இந்த முரணை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இது ஒருவகையில் தவறான புரிதலென்றே நான் நினைக்கிறேன். தனிநபர் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு தனிநபர் தான் வாழும் சூழலில் தான் நினைத்த அல்லது விரும்பிய எல்லாவற்றையும் செய்வதற்கான சுதந்திரம் என்று அதை அர்த்தப்படுத்த முடியுமா? இல்லையே. படைப்பு மனநிலை என்பது என்ன? ஒருவர் ஒரு படைப்பைப் படைப்பதற்கான மனநிலையில் தன்னை அப்படைப்பு நிகழும்வரையான பொழுதில் நிலை நிறுத்திக் கொள்வது என்பதா, இல்லையே. இந்த மனநிலை ஒரு படைப்பாளிக்கு எல்லாநேரங்களிலும் உள்ளுறைந்து இருப்பதுதான். அதனால் தான் அவருக்கு ஏதாவதொரு விடையம் சாதாரணமக்களது கண்களுக்குப் படுவதை விட வேறு பரிமாணத்தில் புலப்படுகின்றது என்பதுதான்; இல்லையா? மக்களை அமைப்பாக்கலிலும் படைப்பு மனநிலைக்கும் எந்தவகையான முரண்பாடும் எழுவதற்கான நியாயங்கள் எனக்குத் தெரியவில்லை. சரியாகச் சொல்வதானால் அது மிகமுக்கியமான படைப்பாக்க மனநிலையுடன் செய்யப்படவேண்டிய ஒரு செயல். ஒடுக்கப்படும் மக்களை இன்றைய உலகில் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவது இன்னொரு மக்கட் பிரிவல்ல. அது ஒப்பீட்டளவில் ஒரு சிறு குழு மட்டுமே. அதன் நலனுக்காகவே அரசு இயங்குகிறது. நவீன சமுதாயத்தில் அந்த அரசு வரலாற்று ரீதியான மக்களது தொடர்ச்சியான போராட்டங்களின் காரணமாக ஒருவகை மட்டுப்படுத்தப்பட்ட போலி ஜனநாயகத் தன்மையைப் பேணி வருகிறது. இத்தகைய ஒரு சூழலில் மக்கள் தமது அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ள அமைப்பாக ஒன்றிணைவது அவசியமானது. ஆகவே அமைப்பாக்கம் என்பற்கும் தனிநபர் சுதந்திரம் என்பதற்குமிடையில் முரண்பாடு எழுவதற்கு ஏதாவது நியாயம் இருக்குமாயின், அது இரண்டே இரண்டு காரணங்களால் தான் சாத்தியமாகலாம். ஒன்று, அந்தத் தனிநபர், அந்த அமைப்பாக்கலுக்காக முன்வைக்கப்பட்ட கருத்துக்களும் செயற்திட்டங்களும் மக்களின் நலனுக்கு எதிரானவை என்று ஆதார பூர்வமாக உறுதியாக நம்பும் நிலை. இந்த நிலையில் அவர் தனது கருத்தை முன்வைத்து அந்த அமைப்பாக்கும் கருத்தியலை எதிர்த்து விமர்சிக்கவும், மக்களைத் திரட்டிச் செயற்படவும் முடியும். அந்த முயற்சி தடுக்கப்பட முடியாதது; வரவேற்கப்பட வேண்டியது. மற்றையது மக்கள் அமைப்பாதலின்போது அந்த அமைப்பு பரந்துபட்ட மக்களின் நலனைப் பிரதிபலிக்கிறதா இல்லையா என்பதை விடவும், தமது தனிப்பட்ட நலன்கள் முக்கியமானவை எனக் கருதும் நிலை. இந்த நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவும் ஒருவருக்கு பூரண சுதந்திரம் உண்டு. ஆயினும் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையிலான அவரது செயற்பாடு என்பது மக்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்கு எதிரானவையாக இல்லாதவரை அது ஒரு முக்கியமான பிரச்சனை அல்ல. இத்தகைய கருத்துகளும் கோட்பாடுகளும் சில புத்திஜீவிகளிடம் இருப்பது என்பது மக்களது போராட்ட வரலாற்றில் புதியதல்ல. அது எல்லாக் காலத்திலும் நிலவக் கூடிய ஒன்றுதான். அவை மக்கள் சார்பாகச் செயற்படும் அமைப்பினால் விமர்சித்து அப்பலப்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் என்ற அளவுக்கான முக்கியத்துவத்தை மட்டுமே கொண்டவை. இத்தகைய சிந்தனைகள், போக்குகள், அரசியல் நிலைப்பாடுகள் என்பவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, அதை பரந்துபட்ட மக்கள் நிராகரிக்கும் விதத்தில் செயற்படுவதே மக்கள் அமைப்பின் பணியாகும்.
- மொழிபெயர்ப்பிலும் பிரதி மேம்படுத்துதலிலும் (Copy Editing) உங்கள் தேர்ந்த புலமையை நேரடியாகப் பார்த்த அனுபவம் எனக்குண்டு. உங்கள் மொழிபெயர்ப்பில் வெளியான “குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே” என்போன்ற பலருக்கும் பயனான ஒரு மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்புகளுக்கான தேவை எவ்வாறாக இருக்கின்றது? கடந்த சில காலங்களில் தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களின் வருகை அதிகரித்து இருக்கின்றது. அதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பாரதியின் வழியை இந்தவிடயத்தில் முழுமையாக ஆதரிப்பவன் நான். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்பதுவே எனது கருத்துமாகும். ஆனால் வருபவை எல்லாம் எங்கள் மன்ணுக்கும் மொழிக்கும் மக்களின் வாழ்வுக்கும் வளம் சேர்க்கும் சிந்தனையைத் தரும் செல்வங்களாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. நூல்கள் அதிகரித்து வருவதென்பது மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது. ஆயினும் பாரதி சொன்னது போல தமிழினில் இதுவரை இல்லாத ‘புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்…, மேன்மைக் கலைகள்’ தமிழில் வருவது மிகவும் முக்கியம். கவிதைகள், நாவல்கள் சிறுகதைகளுடன் இந்த வருகைகள் நின்றுவிடாது நாம் இதுவரை சிந்திக்கத் தொடங்காத ‘மேன்மைக் கலைகள்’ அனைத்தும் இங்கு வந்து சேர வேண்டும்’ என்றே நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு நூல்களிலிருந்து, சொல்லும் பொருள், சொல்லும் முறை என்பவை பற்றிய முழுமையான உரையாடல்கள் நிகழவேண்டும். அந்த உரையாடல்களின் மூலமான புரிதல்களின் அடிப்படையில் எமது படைப்புகளும் மெருகேற வேண்டும். மெருகேறும், மெருகேறி உள்ளன என்று நினைக்கிறேன்.
- நீங்கள் கனடாவுக்குப் புலம்பெயர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன என்று நினைக்கின்றேன். இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் நாடான கனடாவில் தமிழர்களின் கலை இலக்கிய, அரசியற் செயற்பாடுகள் எப்படி இருக்கின்றன. அதில் இளையோரின், பங்கெடுப்பு எவ்வளவில் இருக்கின்றது. கனடியத் தமிழர்களுக்கும் / புலம்பெயர் தமிழர்களுக்கும் ஈழத்தில் உள்ள தமிழர்களுக்குமான ஊடாட்டம் எவ்விதத்தில் இருக்கின்றது.
ஆம். கடந்த 2023 யூலை மாதத்துடன் 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. கனடாவில் கலை இலக்கிய செயற்பாடுகள் பற்றிக் கடந்த பத்தாண்டு காலத்திய எனது அவதானிப்பில் என்னளவில் பல சிறப்பான விடயங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அந்தப் போக்கில் பெரியளவு மாற்றம் நிகழ்ந்ததை அவதானிக்க முடியவில்லை. நான் வரும்போது எழுதிக்கொண்டிருந்தவர்களைத் தவிர புதிதாக தமிழ் எழுத்துத்துறைக்கு வந்தவர்களை நான் இதுவரை சந்திக்கவில்லை. ஆனால் எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளிகளின் பல குறிப்பிடத்தக்க நூல்கள் வெளிவந்திருக்கின்றன. முக்கியமான நூல்கள் அவை. எனக்குத் தெரியாமல் ஒருசிலர் இருக்கக் கூடும்.
ஆனால், கலை, இலக்கியம் நாடகம், திரைப்படம் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க புது வரவுகள் வந்திருக்கின்றன. ஆயினும் ஒரு உயிர்த்துடிப்பான ஓட்டத்தை இங்கு காண முடியவில்லை. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, நோர்வே, போன்ற நாடுகளில் பல முயற்சிகள் சிறப்பாக நடக்கின்றன என நான் நினைக்கிறேன். கனடாவின் புதிய தலமுறைகளுக்கும் கலை இலக்கிய உலகில் செயற்படும் இன்றைய செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் உள்ள நெருக்கம் அவ்வளவாக- மற்றைய நாடுகளூடன் ஒப்பிடுகையில் குறைவாகவே ஊள்ளது என்று நினைக்கிறேன். குறிப்பிடத்தக்க நூல்களின் என்ணிக்கையளவில் பார்க்கையிலும் கூட ஒரு பத்தாண்டு காலத்துள் வந்த நூல்களின் தொகை எனது கணக்கின்படி ஒரு 20 – சிலவேளை அதிகமாகவும் இருக்கலாம்- நூல்களைத் தாண்டவில்லை என்பது ஒரு வகையில் கவலைக்குரிய விடயமே. அத்துடன் இந்த நூல்கள் இன்னமும் இலங்கை, இந்திய வாசகர்களையே பிரதானமாக கவனம் செலுத்துகின்றன என்று நினைக்கிறேன். தமிழ் எழுத்துக்களின் நிலை இன்னமும் ஆசிரியரே முன்னின்று வெளியிடும் அளவில் தான் இருக்கிறது. பதிப்பகங்கள் தேடி கேட்டுப் போடுகின்ற நிலை இன்னமும் நம்மவர் தமிழ் நூல்களுக்கு வந்ததாகத் தெரியவில்லை. சினிமா, நாடகத்துறை சார்ந்து மிகவும் முக்கியமான முயற்சிகள் நடந்துள்ளன. கலை இலக்கிய நிகழ்வுகளைப் பொறுத்தவரை அவை மக்கள் உயிர்த்துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான ஓர் அடையாளம் என்றே நான் நினைக்கிறேன். அது சற்றுக் குறைவாகவே இப்போது இருப்பதாக நான் உணர்கிறேன். கோவிட் தொற்றின் பின்னான காலம் மிகவும் வறட்சியான காலமாகக் கழிந்துவிட்டது. மற்றைய புகலிட தேசங்களில் இத்தகைய நிகழ்வுகள் பழையபடி வரத்தொடங்கி விட்டனவாயினும் கனடா இன்னமும் அந்த நிலைக்குத் தயாராகவில்லை என்றே தோன்றுகிறது, அது மீண்டும் உயிர்ப்பிக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆனால் அண்மையில் நண்பரும் நம்காலத்தின் முக்கியமான படைப்பாளியுமான தேவகாந்தனது நூலான கனவுச்சிறை மூன்று பாகங்களாக ஆங்கிலத்தில் வந்துள்ளது. ஆங்கிலம் படிக்கும் எமது அடுத்த பரம்பரையினருக்கு இந்த நூல்கள் வாசிக்குமளவுக்குக் கிட்டுகிறதா? அவர்களை இது எப்படி உணரவைக்கிறது என்பதை அறியவேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறே அநுக் அருட்பிரகாசம் அவர்களது இரண்டு நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நாவல்கள் குறித்த கனேடிய புலம்பெயர் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த இளம் தலைமுறையின் அவதானிப்பு என்ன என்பதும் கவனத்துக்குரியது என்று நினைக்கிறேன். கலை, இலக்கியம், சமூகம் சார்ந்து பல பயனுள்ள வேலைகளைச் செய்யக்கூடிய களமாக கனடாத் தமிழ்ச் சமூகத்தின் அளவு பெரிதாக இருந்தாலும், மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் செயற்றிறன் இதுவரை நடந்ததை விடப் பெரிதாக நடக்கமுடியும் என்று நினைக்கிறேன். நடக்கவேண்டும்.
இந்நேர்காணல் கலைமுகம் 75, 76 இதழ்களில் இடம்பெற்றது.