மலையகத்தைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற சீமை இதழின் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களின் இதழ்களை அண்மையில் வாசித்தேன். காத்திரமான, மக்களுக்கு விழிப்புணர்வையூட்டும் நோக்குடனான கட்டுரைகளைக் கொண்ட இதழாக சீமை வந்துகொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. வரவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலைக் கருத்திற்கொண்ட கட்டுரைகளுடன் கிட்ணன் செல்வராஜா எழுதியுள்ள அசலும் நகலும்: தோட்டத்தொழிலாளர் சம்பள விடயத்தில் என்ற கட்டுரை தோட்டத் தொழிலாளருக்கு 1700 ரூபா சம்பளம் என்று ஜனாதிபதி ரணில் சம்பள அறிவிப்பை அறிவித்தபின்னரும் 21 கம்பனிகள் தொடுத்த வழக்கினடிப்படையில் இந்த அறிவிப்புச் செல்லாது என்கிற மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பினையும் அதன் விளைவாக இந்தப் பிரச்சனை எவ்விதம் இழுபறிப்பட்டு தோட்டத்தொழிலாளரின் ஊதியம் சுரண்டப்படுகின்றது என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. எம். ராமதாஸ் எழுதிய “ஆசிரியர் உதவியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளப்படும் ஒரு கருவியா?” உதவி ஆசிரியர்கள் என்ற பெயரில் மலையகத்தில் 2014 இல் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் 6000 ருபாய்கள் மாத்திரம் மாதச் சம்பளம் பெறுவதாகவும், அதன் பின்னர் நல்லாட்சிக் காலப்பகுதியில் எழுந்த போராட்டங்களின் பின்னர் 6000 ரூபாய் கொடுப்பனவுடன் வாழ்க்கைச் செலவீன கொடுப்பனவாக மேலதிகமாக 4000 ரூபாய் கொடுக்கப்படுவதாகவும் கூறுகின்றது. இன்றைய வாழ்க்கைச் செலவினங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது 10,000 மாத வருமானம் என்பது எந்தவிதத்திலும் போதாத ஒன்றல்லவா?
அதுபோல AR. ரொஹான் எழுதிய “இலவசக் கல்வியைக் காப்பது அரசாங்கத்தின் பணி! ஆசிரியர்கள் மீது குற்றம் சுமத்தாதே!” என்கிற கட்டுரை இலவசக் கல்வி என்கிற அருமையான, ஒரு திட்டத்தை எவ்விதமெல்லாம் குளறுபடி செய்துவைத்துள்ளார்கள் என்று குறிப்பிடுகின்றது. உலகநாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமத்துக்கமைய ஒரு நாட்டின் நிதியொதுக்கீட்டில் ஆறு சதவீதத்தைக் கல்விக்கு ஒதுக்குதல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் என்று கூறுகின்றபோதும் இலங்கையில் இது வெறுமனே இரண்டு சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே தொடர்ச்சியாக வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டு வருகின்றது என்று கூறுவதுடன், நாடு முழுவதும் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை, ஏற்றுக்கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்பில் 1/3 பங்கு சம்பளப்பணம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டு, 2/3 பங்கு சம்பளப் பணம் இன்னும் நிலுவையில் இருத்தல், பாடசாலை உபகரணங்களின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு, பாடசாலை பராமரிப்புச் செலவினங்களைப் பெற்றோர் மீது சுமத்தியுள்ளமை போன்ற பல்வேறு பிரச்சனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் முன்வைக்கின்றது.
இலங்கை போன்ற நாடுகளில் அதிகரித்துச்செல்லும் கடன், பொருளாதார நெருக்கடிகள் பற்றிப் பேசுகின்றபோது அவற்றுக்குக் காரணங்களாக அந்நாடுகளில் இருக்கின்ற இலவசத் திட்டங்களைக் காரணமாக்கித் தனியார்மயமாக்கலை ஆதரிக்கின்ற, பரிந்துரைக்கின்ற பார்வை அதிகரித்துச் செல்கின்றது. ஆனால் உலகவங்கியின் தரவுகளைப் பார்க்கின்றபோது (https://data.worldbank.org/indicator/SE.XPD.TOTL.GD.ZS?most_recent_value_desc=false) உலக நாடுகளில் கல்விக்கான நிதியொதுக்கீட்டின் சராசரி 3.7% ஆகவும் இலங்கையில் நிதியொதுக்கீடு 1.2% ஆக மாத்திரம் இருக்கின்றது என்பதுவும் தெளிவாகின்றது. இந்தியாவில் தற்போதைய ஒதுக்கீடு 4.6% ஆக இருக்கின்றது. குறிப்பாக இலங்கையைவிடக் குறைவாக கல்விக்காக நிதியொதுக்கீடு செய்பவை சோமாலியா, ஹையிட்டி ஆகிய இரண்டு நாடுகளே மாத்திரம் என்று தெரிகின்றபோது இலங்கையின் கல்விநிலையின் அவலநிலை தெளிவாகின்றது.
பாலசுப்ரமணியம் நிவேதா எழுதியுள்ள மலையச் சிறுமிகளின் கல்விப் பின்னடைவில் எங்கிருந்து நுழைந்தது காமென்ட்ஸ்? என்கிற கட்டுரை மலையகத்தில் கல்விமுறையிலும் வளங்களின் பகிர்விலும் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளுக்கும் “காமென்ட்ஸ்” என்கிற ஆயத்த ஆடை உற்பத்தியில் குறைந்த சம்பளத்துக்குச் சிறுமிகள் வேலைக்கமர்த்தப்படும் சுரண்டலையும் கூறுகின்றது. அத்துடன் அந்தச் சிறுமிகள் வெளியில் சென்று சுயதொழில் தொடங்கிவிடாமல் தொடர்ந்தும் ஆடைத் தொழிற்சாலைகளிலேயே தங்கியிருக்கும்படியான பொறிமுறையை எப்படித் தக்க்வைத்துள்ளனர் என்பதையும் கூறுகின்றது. பிரியதர்ஷன தயாரத்ன எழுதி மகேந்திரன் கிறிஸ்டோபர் தமிழாக்கம் செய்துள்ள ரணிலும் நெருப்பும் என்கிற கட்டுரை 1977 முதல் ரணில் எவ்வாறு வெவ்வேறு விதங்களில் இலங்கை நாட்டைத் தீயிட்டுக் கொழுத்தி பிற தேசிய இனங்களுக்கு எதிரான அழித்தொழிப்புகளையும் பொருளாரத வங்குரோத்துகளையும் செய்துள்ளார் என்றுகூறுகின்றது.
இதழில் கவிதைகள் சிலவும் இடம்பெற்றிருக்கின்றன என்றாபோதும், இதழ் அதுகொண்டுள்ள அரசியல், தொழிலாளர் உரிமைகள், கல்வித்துறையில் உள்ள பிரச்சனைகள் போன்ற விடயங்கள் குறித்த கட்டுரைகளுக்காகவே முக்கியமானதாகின்றது. இதுபோன்ற அரசியல் பேசும் இதழ்கள் இலங்கையில் இன்னும் அதிகளவில் வரவேண்டும். அந்தவிதத்தில் சீமை இதழ் ஆசிரியர், ஆலோசகரிகளுக்குத் தோழமையும் அன்பும். இந்த இடத்தில் எனக்குள்ள இன்னொரு கேள்வியையும் பொருத்தம் கருதிப்பகிர்கின்றேன். வடக்கு கிழக்கில் இதுபோன்ற பிரச்சனைகளைக் கவனப்படுதி இதழ்கள் வரவேண்டிய தேவை இருக்கின்றதல்லவா? அங்கே சம்பள உயர்வு குறித்த போராட்டங்களோ அல்லது உரையாடல்களோ நடைபெறுவதில்லையா? தொழிற்சங்கங்கள் எப்படி இயங்குகின்றன? எந்தப் பிரச்னைகள் குறித்துப் பேசுகின்றன?
Leave a comment