சிறுவர் இதழ்களை வாசிப்பதால் ஏற்பட்ட வாசிப்பின் அறிமுகம் அதிலிருந்து வெகுஜன இதழ்களை நோக்கிச் சென்றபோது கல்கண்டில் பொது அறிவுத் துணுக்குகள், ஒரு பக்கக் கட்டுரைகள், சங்கர்லால் துப்பறியும் தொடர்கதைகள் போன்றவற்றைப் போலவே அதில்வரும் தமிழ்த் திரைப்பட விமர்சனங்களும் விருப்பத்துக்குரியனவாக அமைந்திருந்தன. திரைப்படம் என்பது அப்போது எனக்குத் தமிழ்த் திரைப்படங்களாகவே இருந்தது. திரைப்படங்களைப் பார்ப்பது போலவே திரைப்படங்கள் குறித்த இதழ்களை வாசிப்பதிலும், திரை விமர்சனங்களை வெவ்வேறு இதழ்களில் வாசிப்பதிலும் சிறுவயதில் ஆர்வம் இருந்தது. அந்த இதழ்களிலும் சினிமா பற்றிய பகுதி இருந்தது. வெகுஜனத் திரைப்படங்களைக் குறித்து ஒன்று அல்லது ஒன்றரைப் பக்கத்தில் சுருக்கமாகக் கருத்துகளைக் கூறி அறிமுகப்படுத்துவது இந்த இதழ்களின் பாணியாகும்.
இதற்குப் பின்னர் சர்வதேச அல்லது சீரிய திரைப்படங்களைப் பற்றிய அறிமுகம் ஏற்பட்டபோது அவை பற்றிய விமர்சனங்களையும் அறிமுகங்களையும் தேடி வாசிக்கத் தொடங்கியிருந்தேன். மிக நுணுக்கமாக அந்தத் திரைப் படங்கள் பற்றிய அறிமுகத்தையும், அவற்றின் பின்னணியையும் அவை பேசும் அரசியல் பற்றிய எதிர்வினைகளையும், படிமங்கள் குறித்தும் அந்தத் திரைப்படங்களின் உருவாக்கம் குறித்த நுட்பரீதியான நோக்குகளையும் கொண்ட நீண்ட, தொடர்ச்சியான உரையாடலொன்றினை முன்னெடுப்பனவாக இந்த உரையாடல்கள் அமைவன. அதுமட்டுமல்லாமல் அந்தத் திரைப்படங்களில் கூட்டாக இருக்கின்ற ஏனைய கலைவடிவங்கள் பற்றிய நுணுக்கமான அவதானங்களையும் இந்த உரையாடல்கள் கொண்டிருப்பன.
இவற்றிலிருந்து வேறுபட்ட, இவையிரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு பாணியில் திரைப்படங்களைக் குறித்த விமர்சன அறிமுகக் கட்டுரைகளைத் எழுதிவருபவர் இ.சு. முரளிதரன். சிறுகதை, கவிதை, அபுனைவெழுத்துகள் என்று தொடர்ந்து செயற்படும் இ.சு. முரளிதரன் வெவ்வேறு காலப்பகுதிகளில் தீம்புனல், ஜீவநதி, சஞ்சீவி, தினகரன் தெரிதல் ஆகிய இதழ்களிலும் பத்திரிகைகளிலும் எழுதிய திரைப்படங்கள் குறித்த 24 கட்டுரைகளுடன் ஜீவநதி வெளியீடாக வந்துள்ள “மற்றும் பலர் நடித்த” என்கிற நூல் இவ்வகையான கட்டுரைகளைக் கொண்ட சுவாரசியமான ஒரு நூலாகும்.
“சினிமா மீதான தீராத மோகம் பால்ய பருவத்திலிருந்தே தொடங்கிவிட்டது. இலக்கிய ஈடுபாட்டின் பின்னர், தரமான திரைப்படங்களை நோக்கி நகரத் தொடங்கினேன்” என்று இந்த நூலின் என்னுரையில் குறிப்பிடுகின்றார் முரளிதரன். அவ்வாறு தான் பார்த்த தரமான திரைப்படங்களை இலக்கிய ஈடுபாடு கொண்டுள்ள வாசகர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் அல்லது குறித்த திரைப்படம் குறித்த தனது அபிப்பிராயங்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்பட்டவை என்று சொல்லத்தக்க வகையில் மூன்று நான்கு பந்திகளுக்குள் அடங்கிவிடக் கூடியதாக இந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு திரைப்படத்தைக் குறித்தும் அவை ஏன் தனக்குப் பிடித்திருக்கின்றன என்பதையும் அவற்றில் விதந்துசொல்லத்தக்கவகையில் எந்தத் தொழினுட்பங்கள் கையாளப்பட்டிருக்கின்றன என்பதையும் சொல்லுவதை ஓர் உத்தியாக முரளிதரன் இந்தக் கட்டுரைகளில் கையாளுகின்றார்.
Tom Tykwer இயக்கிய Perfume திரைப்படம் குறித்து எழுதும்போது “இவ்வுலகினை வசப்படுத்திய பெருவிம்ப நபர்களின் பின்னே தொடர்குற்றங்கள் இருக்கலாம் என்ற சிந்தனை கூட எழுகின்றது; வரலாற்றுத் தலைவர்கள் சாதி, மத, இன, மொழி வாசனையைப் பரப்பி அடிமை கொண்ட நிகழ்வும் குறியீடாகத் தெரிகின்றது” என்று முரளிதரன் சொல்வது ஒரு நுட்பமான அவதானம். இதுபோலவே “த கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் குறித்து எழுதும்போது “இந்தியக் குடும்ப அமைப்பின் (ஈழம் உட்பட) பொதுப் புத்தியில் வெளிப்படும் நல்ல கணவனுக்கான அத்தனை பண்புகளையும் கொண்டமைகின்றான். ஆனாலும் ஆணாதிக்கத்தின் மெய்யுருவாக வெளிப்படுகின்றான்” என்பதுவும் ஒரு முக்கியமான அவதானம். இந்தச் சிறுகட்டுரைகளிலேயே இத்தகைய அவதானங்களையும் பொதித்து எழுதுவதால் முரளிதரனின் எழுத்து இன்னும் ஈர்ப்பைத்தருகின்றது. பொதுவாக நாயகர்கள் மீதே கவனக் குவிப்பைச் செலுத்துமாறு பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு, பிற கதாபாத்திரங்களாக “மற்றும் பலர்” ஆக அமைவதாகவே தமிழ்த் திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் அமைவது வழக்கம்; இவற்றில் இருந்து வேறுபட்டு துணைக் கதாபாத்திரங்களையும் முழுமையும் முக்கியத்துவமும் கொண்டவையாக உருவாக்குகின்ற மிகச் சில இயக்குனர்களில் ஒருவர் பா. ரஞ்சித். அவரது சார்பட்டா பரம்பரை குறித்த “’மற்றும் பலர் நடித்த’ சார்பட்டா” என்ற கட்டுரையில் “மன்னர்களுக்கு மட்டுமல்ல – குடிமக்களுக்கும் பரம்பரைப் பெருமை உண்டு, வணிக ஆதாயம் இல்லாததால் அந்தக் காலப் புலவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க எத்தனிக்கவில்லை” என்று முரளிதரன் குறிப்பிடுவதை நாம் சங்க இலக்கியங்களிலிருந்து பேசப்பட்ட தலைவர்கள், மனிதர்கள் கருத்துநிலைகளுடன் இணைத்துப் பார்க்கின்றபோது இலக்கியங்கள் குறித்தும் வரலாற்று எழுதுகை குறித்தும் துலக்கமானதோர் பார்வை ஏற்படும்.
பொதுவாக தமிழில் திரைப்பட விமர்சனங்கள் எழுதும்போது வழமையாகப் பயன்பாட்டிலுள்ள பல சொற்களுக்கு மாற்றாக புதிய சொற்களை முரளிதரன் தனது எழுத்துகளில் பயன்படுத்துகின்றார். உதாரணமாக நடிப்புக்கு ஆற்றுகை என்று பயன்படுத்துவதுடன் அனுபவத்தொற்று, நடுவண் (கதையின் மையம் என்ற அர்த்தத்தில்), மீநயம், மர்ம முடிச்சியம் என்று இவர் பயன்படுத்துகின்ற புதிய சொற்கள் வாசிப்புக்கு தடையேற்படுத்தாமல் இருப்பதுடன் பொருத்தமாகவும் இருக்கின்றன. நல்ல திரைப்படங்களைப் பார்ப்பதில் ஆர்வர் கொண்ட ஒரு ரசிகர், தன்னை ஏதோவிதத்தில் கவர்ந்த திரைப்படங்களைப் பற்றிய சுருக்கமாகச் சொல்லி பிறருக்கும் அறிமுகம் செய்யும் நோக்குடனானவை முரளிதரனின் எழுத்துகள். இலக்கியங்களைப் பட்டியலிட்டு அறிமுகம் செய்வதைப் போன்றதோர் பணியிது. அதனை “மற்றும் பலர் நடித்த” செவ்வனே செய்கின்றது.
Leave a comment