எழுபதுகளின் இறுதி முதல் எண்பதுகள் வரை ஈழத்தில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளை வாசிப்பதும் எழுதுவதும் எனக்குத் தனிப்பட திருப்தியளிக்கின்ற, ஆர்வமான ஒரு விடயம். ஈழத்தில் கலை இலக்கியங்களின் வடிவம், உள்ளடக்கம், கருத்தியல், சமூக நோக்கு உள்ளிட்ட விடயங்கள் குறித்த காத்திரமான விமர்சனங்கள் இடம்பெற்ற காலப்பகுதியின் விளைவுகளாக இந்தக் கலை இலக்கியப் படைப்புகளை அவதானிக்கமுடியும். இந்த விவாதங்களினால், விமர்சனத்துறை கூர்மையடைந்ததுடன் படைப்புகளும் செழுமையடைந்தன. இந்தக் காலப்பகுதியில் எழுதியதுடன், இதழாசிரியராகவும் செயற்பட்டு, விவாதங்களில் பங்கேற்றவர் டானியல் அன்ரனி.
1947 முதல் 1994 வரை குறுகிய காலமே வாழ்ந்த டானியல் அன்ரனி சிறுவயது முதலே வாசிப்பிலும் எழுத்திலும் ஈடுபாட்டுடன் இருந்திருக்கின்றார் என்றே கருதமுடிகின்றது. 1966இல் அவரது முதலாவது சிறுகதை தினபதியில் வெளிவந்திருக்கின்றது. பின்னர் ராதேயன், பாலகிரி, சசி கிருஷ்ணமூர்த்தி ஆகிய நண்பர்களுடன் இணைந்து செம்மலர்கள் இலக்கிய வட்டம் என்கிற இலக்கிய அமைப்பினை உருவாக்கியிருந்தார். இந்த அமைப்பின் வெளியீடாக அணு என்கிற இலக்கிய இதழையும் வெளியிட்டார்.
கருப்புப் பிரதிகள் வெளியீடாக 2023 ஏப்ரலில் – டானியல் அன்ரனி அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ள டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள் என்கிற இந்தத் தொகுப்பில் 11 சிறுகதைகளும், முற்றுப்பெறாத குறுநாவலொன்றின் முதல் அத்தியாயமும், அதிர்வுகள் என்ற பெயரில் அவர் எழுதிய 7 பத்திகளும்5 கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. கலை இலக்கியச் செயற்பாடுகள் அனைத்தும் ஒரு புதிய வாழ்க்கைக்கான மாபெரும் போராட்டத்தின் ஒரு பகுதி என்ற கொள்கையுடைவர் என்று டானியல் அன்ரனி குறித்த அஞ்சலிக் குறிப்பில் சசி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருப்பார் (மல்லிகை மே, 1994). அதற்கு நியாயம் செய்வது போலவே “உலகெங்கிலும் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகப் போராடி மானுட விடுதலைக்காக மடிந்த போராளிகளுக்கு…” இந்தத் தொகுப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகுப்பினைப் போலவே டானியல் அன்ரனியின் வலை சிறுகதைத் தொகுப்பும் இதே சமர்ப்பணக் குறிப்புடன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
நூலின் பதிப்பு அறிவித்தல் பகுதியின் முந்தைய பதிப்புகள் ஜனவரி 1987, ஜூன் 2005 என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது தவறுதலாக வந்துள்ள குறிப்பு. இவை முறையே டானியல் அன்ரனியின் வலை என்கிற சிறுகதைத் தொகுப்பின் முதலாவது இரண்டாவது பதிப்புகளின் விபரங்களாக இருக்கவேண்டும். நூல்கள் பற்றிக் கதைக்கின்றபோது நாம் அந்த நூல்களின் உள்ளடக்கம் குறித்தும் எழுத்தாளர் குறித்தும் உரையாடுவதோடு நிறுத்திவிடுகின்றோம்; ஆனால் அதனை வடிவமைத்தவர்கள், ஓவியங்கள் வரைந்தவர்கள் போன்றவற்றைப் பொதுவாகவே தவறவிட்டு விடுகின்றோம் என்ற விடயத்தை அண்மையில் ஓவிய நண்பர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த நூலை ஜீவமணி வடிவமைத்துள்ளார், ஆனால் இதன் அருமையான அட்டைப்படத்தை வரைந்த ஓவியரின் பெயர் தவறவிடப்பட்டிருக்கின்றது.
1966 முதலே டானியல் அன்ரனி எழுதத் தொடங்கியிருந்தாலும் ஆரம்பத்தில் அவரது கதைகள் ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற இதழ்களில் தான் வெளிவந்துள்ளன. ஆயினும் பின்னர் முற்போக்கு இலக்கியத்துடன் ஏற்பட்ட பரிச்சயம், அரசியல், சமூகநோக்கு என்பவற்றில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக டானியல் அன்ரனியின் கதைகள் சமூக நோக்குடையதாகவும், சமூக ஒடுக்குமுறைகளைக் கேள்விப்படுத்துவனவாகவும், மக்களின் வாழ்வியலை எழுத்துரைப்பனவாகவும் சமூகத்தில் நிலவுகின்ற சாதிய, வர்க்க ஒடுக்குமுறைகளை தனது கதைகளினூடாக எடுத்துச் சொல்பவையாகவும் அமைந்தன என்பதையும் சசி கிருஷ்ணமூர்த்தி பதிவுசெய்துள்ளார்.
பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன என்கிற கதையில் பதுளையைச் சேர்ந்த பெருமாள் என்கிற 10 வயது சிறுவனை சவரிமுத்து வேலைக்குச் சேர்க்கின்றார். பெருமாளின் கடுமையான உழைப்பின் துணையால் சாதாரண சவரிமுத்து சம்மாட்டி சவரிமுத்தாக மாறுகின்றார். பத்து வருடங்களுக்கு மேலாக பெருமாள் தனது தாய், சகோதரியைக் கூடப் பார்க்கப்போகாமல் சவரிமுத்துவுக்காக கடுமையாக உழைக்கின்றபோதும் பெருமாள் ஊருக்குப்போக விடுமுறை கேட்கின்றபோது சவரிமுத்து மறுத்துவிடுகின்றார். கடைசியின் தன் பத்துவருட உழைப்புக்கு எந்த ஊதியத்தையும் பெறாமலே பெருமாள், பேதுரு என்பவரிடம் வேலைக்குச் சேருகின்றார். அது பொறுக்காமல் பெருமாள் “கள்ளத் தோணியென்று” கடத்தல் செய்ததாக பெட்டிசன் போட்டு கைதாகும்படி செய்கின்றார் சவரிமுத்து. அதிகாரம் எப்படியெல்லாம மலையக மக்களைச் சுரண்டியது என்பதை இந்தக் கதை காட்டுகின்றது.
70/80 களில் வெளிவந்துள்ள கதைகளில் இருக்கின்ற பொது அம்சங்களில் படித்த முதல் தலைமுறை இளைஞர்கள் நகரங்களுக்கு / கொழும்புக்கு வேலைக்குப் போவது, அதன் பின்னர் ஏற்படும் மாற்றங்கள்; வேலையில்லாப் பிரச்சனை, படித்த முதல் தலைமுறை இளைஞர்களில் திருமணங்களில் ஏற்படும் சிக்கல்கள் – ஆண்கள் என்றால் அவர்களை வைத்துப் பெரும் சீதனம் வாங்கத் திட்டமிடும் பெற்றோர், படித்த பெண்களை சமூகம் எதிர்கொள்ளும் விதம் ஆகியன அந்தக் காலப்பகுதியில் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றத்தைக் காட்டுவன. இந்தத் தொகுதியில் உள்ள கட்டுகள், நிலைப்பாடு, வெற்றுக்காகிதங்கள் ஆகிய கதைகள் இவற்றைக் கவனப்படுத்துகின்றன. குறிப்பாக கட்டுகள் கதையில் கொழும்பில் பெரிய தபாற்கந்தோரில் டெலிபோனிஸ்ட் உத்தியோகம் பெற்று ஆறுமாதம் வேலை செய்துவிட்டு ஊர் திரும்பும்போது உருவாகின்ற ஒட்டாமை / அந்நிய உணர்வு காட்டப்படுகின்றது. இந்தக் கதையில் இரண்டிடங்களில் இந்த நுட்பமான அனுபவம் நுணுக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
“வீதியில் தண்ணீர் தேங்கி நின்ற குழிக்குள் ஒரு கால் “சளக்”கென்று இறங்கிவிட்டது. ஒரு கணம் தடுமாறி விழப்போனவன் சமாளித்துக் கொண்டே நீருக்குள் அமிழ்ந்துவிட்ட ஒரு காலை அவக்கென்று எடுத்தான்.
ஒற்றைச் செருப்பு அறுந்துவிட்டது. இரண்டு செருப்புகளையுமே கழற்றி வேலிக்கு அப்பால் வீசி எறிந்தான். வெறும் கால்களுடனேயே ‘காயாக’ நடந்தான்.”
இதன் பிறகு கடையில் சிகரெட்டுகளை வாங்குகின்றான். சிகரெட்டை வாங்கும்போது அவனுக்கு, சிறுவயதில் ஒரு றாத்தல் பாண் வாங்க இதே கடைக்குச் சென்றபோது கடைக்காரர் ஒரு சதம் குறைகின்றது என்று வீட்டிற்குத் திருப்பி அனுப்ப, இவன் வீடுசெல்லும்போது நாய் மீது இடறி கடிவாங்கிய வடு நினைவுக்கு வருகின்றது. சிகரெட்டைப் பிறர் முன்னிலையில் புகைப்பதற்குத் தயங்கும் அவனுக்கு அந்தக் கடைக்காரரிடம் சிகரெட்டை வாங்க எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. ஒரு விதத்தில், நீங்கள் ஒரு சதத்தை வீட்ட போய் எடுத்துவரச்சொல்லிக் கலைத்துவிட்ட சிறுவன் நான் இல்லை என்று கடைக்காரருக்கு காட்டவேண்டும் என்கிற உள்மன உந்தலின் வெளிப்பாடாக இதனை நான் பார்க்கின்றேன்.
“தெருவில் அவன் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டு போகின்றபோது தூரத்தில் யாரோ ஒருவன் வருவதைக் கண்டவுடன் “கையில் வைத்திருந்த சிகரெட்டை வாயில் வைத்து ஒரு தடவை தம் பிடித்து இழுத்துவிட்டு விரல் இடுக்கில் ஒளிப்பொட்டு தெரியாமல் மறைத்துக்கொள்ள நினைத்தவன், மறுகணம் தன்னுடைய செய்கைக்காக வெட்கப்பட்டான்”
எனக்கு நியாயம் என்று படுகிறதை செய்யிறதுக்கு மற்றவர்களுக்காக ஏன் பயப்பிடவேண்டும், ஒளிக்க வேண்டும்?” அவனது மனநிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம் முக்கியமானது. கதையின் இறுதியில் அவன் தாயிடம் சொல்கின்ற “அம்மா… இனிமேல் யாருக்கும் கல்யாணம் பேசப்போறதாக இருந்தால் பதில் மாப்பிள்ளை கேட்காத இடமாகப் போங்க” என்பதற்கான முன்னீடாக இது அமைகின்றது.
கடலோர சமூகத்தில் இருக்கும் சம்மாட்டியார், மன்றாடியார், வலைத் தொழிலுக்குப் போவோர் ஆகிய வெவ்வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் இடையில் இருக்கின்ற உறவுகள், ஒடுக்குமுறை ஆகியவற்றைப் பேசுகின்ற வலை என்கிற கதை, இவற்றை சமூக வழமையாக நினைத்துக் கொண்டிருந்தவர்களிடமிருந்து, இல்லை இது அடிமைத்தனம், இது ஒழிக்கப்படவேண்டியது என்பதைப் பேசவெளிக்கிடுகின்ற தலைமுறையைக் கதையாக்குகின்றது.
ஒரு சமூகத்தின் இயங்கியலைப் புரிந்துகொள்வதற்கு அதற்குள் நிலவும் பொருளாதார உறவுகளைப் புரிந்துகொள்வது அவசியம். மேலே சொன்ன வலை என்கிற கதையிலும் “வானம் எப்போதும் இருண்டு கிடப்பதில்லை”, “மண்குடிசைகளும் சில மயக்கங்களும்”, “ஒரு வெறும் மனிதனின் மரணம்”, “உயிர்” ஆகிய கதைகளிலும் பொருளாதார உறவுகளும் சுரண்டல்களும் எப்படி நிகழ்கின்றன என்பது சித்திரிக்கப்படுகின்றது. குறிப்பாக வானம் எப்போதும் இருண்டு கிடப்பதில்லை என்கிற கதையில் உயிரைப் பணயம் வைத்துக் கடலுக்குச் சென்று மீன் பிடித்துத் திரும்புகின்ற அந்தோனி மீன் பிடித்துப் பெற்ற வருவாயில் தரகுப் பணமாக
- கூறியானுக்குக் கொடுக்கும் பணம்
- விற்பனைக் கணக்குகளைப் பார்க்கும் கோவில் குத்தகைகுக் கொடுக்கும் பணம்
- கடைக் குத்தகைக்காரரின் பணம்
- தோணிக்கான கூலி
என்று தரகுப்பணம் போய்ச்சேர தொழிலாளிக்கு மிஞ்சும் பணம், 2 தோசை கடையில் சாப்பிடுவதற்குக் கூட யோசிக்கவேண்டிய அளவினதாகவே இருக்கின்றது என்ற நிலையைச் சொல்கின்றார்.
ஒரு வெறும் மனிதனின் மரணம் என்கிற கதையில், தொழிலாளியின் உழைப்பிலிருந்து தீர்வக் காசு என்ற பெயரில் பணம் தேவாலயங்களால் சுரண்டப்படுவதையும், அப்படித் தொழிலாளியிடம் சுரண்டிய பணத்தை தொம்மையர் தேவாலயத்துக்குக் கொடுக்கவில்லை என்பதால் சுவாமி வராமல் தவிர்க்க உடலடக்கம் செய்யாமல் தவித்துப் போவதையும் பதிவுசெய்கின்றார். மதமும், அதிகாரப் படிநிலைகளும் இணக்கமாக க் கைகோர்த்துக்கொண்டு அடித்தள மக்களை ஒடுக்கும், இதற்கெதிராகப் போராவதுதான் ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம். இந்த இடத்தில் “தூக்குங்கடா பிரேதத்தை, வாறது வரட்டும். தூக்குங்க” என்று யாரோ ஒருவன் முன்னுக்கு வந்து குரல் கொடுக்கின்றார். அப்படி யாரோ ஒருவனோ ஒருத்தியோ முன்னுக்கு வந்து குரல் கொடுக்க மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற மக்களின் வாழ்க்கைதான் டானியல் அன்ரனியின் கதைகளில் திரும்ப திரும்பப் பதிவுசெய்யப்படுகின்றது.
மல்லிகை இதழில் சசி கிருஷ்ணமூர்த்தி டானியல் அன்ரனிக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் பின்வருமாறு எழுதுகின்றார்:
“அப்போது காணப்பட்ட வியட்நாம் போரின் உணர்வுகளையும் யாழ்ப்பாணத்தில் சாதிப் போராட்ட த்தின் தாக்கமும் மாஓவின் புகழோங்கிய நிலையும் முற்போக்கு இலக்கியத்தின் உரத்த குரலும் எங்களையும் பாதிக்கத் தவறவில்லை. சமூக மாற்றம், சோசலிஷம், ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் அதனை அடைவதற்கும் கலை இலக்கியங்களின் பங்குப் பணியில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆர்வம் எமது கலை இலக்கிய ஈடுபாட்டை மென்மேலும் விசாலிக்கச் செய்தது”
இவற்றின் தாக்கமே டானியல் அன்ரனியை ஆரம்பத்தில் அவர் எழுதிக்கொண்டிருந்த கதைகளில் இருந்து வேறுப்பட்டு, சமூக நோக்கும் கூருணர்வும் கொண்ட கதைகளை எழுதுபவராக மாற்றியது என நம்புகின்றேன். டானியல் அன்ரனி தொடர்ந்து வாசித்து உரையாடல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவராகவும் தன்னைத் தொடர்ந்து இற்றைப் படுத்திக்கொண்டிருந்தவராகவும் இருந்திருப்பார் என்பதை இந்தத் தொகுப்பில் உள்ள அதிர்வுகள் என்கிற 7 பத்திகள் மூலம் அறிந்துகொள்ளலாம். சமர் இதழில் டானியல் அன்ரனி எழுதிய இந்தப் பத்திகள் அன்று நடந்த கலை இலக்கியம் குறித்த விவாதங்கள், எதிர்வினைகளாக அமைகின்றது. உண்மையில் இந்தப் பத்திகளின் வழி தெரிகின்ற டானியல் அன்ரனியின் ஆளுமை அவரது புனைவுகளின் வழி தெரியவில்லை என்றே சொல்லவேண்டும்.
அதேநேரம் இந்தத் தொகுப்பினைப் பதிப்பித்தவர்களின் கவலையீனம் அல்லது அசட்டைத் தனத்தால் ஏற்பட்ட தவறொன்றையும் இங்கே சுட்டிக்காட்டவேண்டி இருக்கின்றது. செப்ரம்பர் 1981 இல் வெளியான சமர் 7 வது இதழில் வந்த அதிர்வுகள் 6, இதழின் முன் அட்டையின் உள்பக்கத்திலும் பின் பக்கத்தின் உட்பக்கத்திலுமாக இரண்டு பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. முன்னட்டையின் உட்பக்கத்தின் வலது பக்க கீழ் மூலையில் “தொடர்ச்சி கலர் 3 ஆம் பக்கம்“ என்று தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது (படம் 1). இந்த முட்பக்க உள்ளட்டையில் கடைசி வரி “குறிப்பாக முதலாவது இதழில் வெளிவந்துள்ள கட்டுரைகளான…” என்று முடிகின்றது, இதனைத் கவனிக்காமல் / அசட்டைத்தனதால், இந்தப் பத்தியின் தொடர்ச்சியாக சமர் 7 இதழில் 8 வது பக்கத்திலிருந்து இடம்பெற்றுள்ள கே.எஸ். சிவகுமாரன் எழுதிய “கலையும் விவாதங்களும்” என்கிற கட்டுரையினை இதழின் 9வது பக்கத்திலிருந்து தொடங்கி அப்படியே முழுக்கட்டுரையையும் டானியல் அன்ரனி எழுதியதாக இந்தத் தொகுப்பில் வெளியிட்டிருக்கின்றார்கள். இது முழுமையாகத் தவறுதலாக நடந்தது என்றும் சொல்லிவிடமுடியாது ஏனென்றால் இதழில் முட்பக்க உள்ளட்டையின் கடைசி சொல்லான “கட்டுரைகளான” என்பதை இந்தத் தொகுப்பில் “கட்டுரைகள்” என்று இந்தத் தொகுப்பில் மாற்றிவிட்டிருக்கின்றார்கள். இந்த இடத்தில் கவனமாகப் பார்த்திருந்தால் இந்தக் குளறுபடிகளைத் தவிர்த்திருக்கலாம். (படம் 1 கீழே தரப்பட்டுள்ளது)

இந்தக் கவலையீனத்தால் நடந்த பெரும் அபத்தம் என்னவென்றால், Tamil Literary Scene – Marxists VS Formalists என்ற தலைப்பில் செப்ரம்பர் 15 1980 இல் வெளியான Lanka Guardian இதழில் சமுத்திரன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினையாக கே எஸ் சிவகுமாரன் சமர் 7 இல் எழுதிய கலையும் விவாதங்களும் என்கிற கட்டுரையில் கே.எஸ். சிவகுமாரன் எழுதியவற்றையெல்லாம் டானியல் அன்ரனியின் தலையில் சுமத்தி கேலிக்கூத்தாகவே நடந்துமுடிந்திருக்கின்றது. (இந்த லங்கா கார்டியன் மலர் 3, இதழ் 9 ஆகும், தவறுதலாக இது மலர் 8, இதழ் 9 என்று இந்த தொகுப்பில் பதிவாகியுள்ளது). உதாரணமாக இந்தக் கட்டுரையில் கே.எஸ் “கால மாற்றத்தில் மார்கியமே வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுவரும்போது 1930களில் நிலவிய மார்க்சிய இலக்கியக் கொள்கை இன்று அர்த்தமுடையதாக இருக்குமோ? என்ற கேள்வியைக் கேட்கின்றார். இதனை டானியல் அன்ரனி எழுதியதாக நினைத்துக்கொண்டு “கால மாற்றத்தில் மார்கியமே வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுவரும்போது 1930களில் நிலவிய மார்க்சிய இலக்கியக் கொள்கை இன்று அர்த்தமுடையதாக இருக்குமோ? எனத் துணிச்சலுடன் கேள்வியைக்கேட்டவர் அவர் என்று டானியல் அன்ரனியை இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய ஷோபா சக்தி சுட்டுகின்றார். அது மட்டுமல்லாமால் இதே முன்னுரையில் ஷோபா, டானியல் அன்ரனி எழுதியதாக மேற்கோள் காட்டும் “வெறும் அரசியலுக்காகக் கலை இலக்கியங்களைப் பயன்படுத்த முற்படும்பொழுது கலை இலக்கியங்கள் வெறும் அரசியலாகவே மாறிவிடுகின்றன… அரசியல் மாத்திரம் மிஞ்சி நிற்கும்பொழுது கடப் பாட்டு (கொமிட்டட்) வக்கிரமாகவே நின்றுவிடுகிறது” என்பது கூட இதே “கலையும் விவாதங்களும்” கட்டுரையில் கே.எஸ். சிவகுமாரன் எழுதியிருப்பதுதான். ஆகக் குறிப்பாக, இந்தத் தொகுப்பிற்கான முன்னுரையில் டானியல் அன்ரனியின் எழுத்துகள் என்று இரண்டு மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி டானியல் அன்ரனியின் காலத்தைய இட து சாரிகளின் கலை இலக்கியக் கொள்கைகளைக் கேள்வி கேட்டு டானியல் அன்ரனி எழுதியவை என்று ஷோபா சக்தி சுட்டிக்காட்டுகின்றார். ஆனால் அவற்றை எழுதியவரோ கே.எஸ். சிவகுமாரன். மார்க்சிய கலை இலக்கியக் கோட்பாட்டை அடிக்க கிடைத்த ஆயுதம் என்ற பரவசத்தில் ஷோபா சக்தி, டானியல் அன்ரனி இதே இதழில் அதிர்வுகள் 7 பத்தியின் கடைசி வசனமாக எழுதியுள்ள “இவ்விதழில் இடம்பெற்ற கே.எஸ். சிவகுமாரனின் கட்டுரை பற்றிய பதில் அடுத்த சமர் இதழில் இடம்பெறும்” என்ற வசனத்தை அப்படியே கைவிட்டுவிட்டார் (படம் 2).

இந்த அதிர்வுகள் பத்தியின் 2 பக்கங்களும் கீழே படங்களாக இணைக்கப்பட்டுள்ளன.


தொகுப்புகளைச் செய்வோர் மிகக் கவனமாகச் செய்திருக்கவேண்டிய வேலை இது. குறிப்பாக சமர் இதழின் அனைத்துப் பிரதிகளும், குறித்த கட்டுரை வெளிவந்த லங்கா கார்டியன் இதழும் நூலகம் தளத்தில் ஆவணப்படுத்தப்பட்டு பொது அணுக்கத்தில் இருக்கின்றன. அறியப்பட்ட இடதுசாரியான டானியல் அன்ரனியின் கருத்துநிலை இந்தக் கட்டுரையில் திடீரென்று மாறியிருக்கின்றது, பத்தியில் சொல்லத் தொடங்கிய விடயத்திலிருந்து திடீரென்று மாறிவிட்டிருக்கின்றது. குறைந்த பட்சம் இவற்றைக் கவனத்திற்கொண்டு மூலங்களை ஆய்வுநோக்கில் ஒப்பிட்டுப் பார்த்திருந்தாலே இந்த தவறினைத் திருத்தியிருக்கலாம். ஆனால் தீயூழாக இவை எதுவும் நடக்காததால் டானியல் அன்ரனியின் ஆளுமையும் கருத்துநிலையும் திரிவுபடுத்தப்பட்டு இந்தப் புத்தகம் வாயிலாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டானியல் அன்ரனியின் கட்டுரைகளில் அவர் சமரில் எழுதிய 7 பத்திகள் மாத்திரமே இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவை தவிர்த்தும் அவர் நிச்சயமாக எழுதியிருப்பாரென்றே நினைக்கின்றேன்; அந்தக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டுப் பார்க்கின்றபோது டானியல் அன்ரனியின் ஆளுமை, கலை இலக்கியக் கொள்கை நிலைப்பாடு என்பன பற்றிய முழுமையான பரிமாணம் கிடைக்கும். டானியல் அன்ரனியின் எழுத்துகளை வைத்துப்பார்க்கின்றபோது அவர் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் என்பதில் Committed ஆகவே இருந்தார். அவரது கலை இலக்கியச் செயற்பாடுகள் அனைத்து விடுதலைக்கான கருவிகளாக கலை இலக்கியத்தைப் பயன்படுத்தி முன்னெடுத்த போராட்டத்தின் பகுதியே.
பின்குறிப்பு:
இலக்கியவெளி Zoom செயலி ஊடாக ஏப்பிரல் 20, 2024 அன்று ஒருங்கிணைத்திருந்த டானியல் அன்ரனியின் நூல் விமர்சனக் கூட்டத்தில் இதனை நான் வெளிப்படுத்தியிருந்தேன். அன்றைய தினமே ஷோபாசக்தி தான் தனது முன்னுரையை விலக்கிக்கொள்ளவதாகத் தெரிவித்திருந்தார் எனது முகநூல் பதிவிற்குக் கீழே பதிலிட்டிருந்தார்.
இந்தக் குளறுபடிகளை நூல் வெளியீட்டில் சம்பந்தப்பட்ட ஷோபா சக்தியோ அல்லது கருப்புப் பிரதிகள் பதிப்பகமோ இன்றுவரை பொதுவெளியில் அறிவிக்கவில்லை; தவிர, புத்தக விற்பனையும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றது. இதனால் பிழையான, தகவல்களுடன், இந்தப் புத்தகம் வாசகர்களிடம் சென்றுகொண்டே இருக்கின்றது.
டானியல் அன்ரனி என்கிற ஆளுமையை அவர் உண்மையில் இருந்திராத விதத்தில் கட்டமைப்பதாகவே இந்தச் செயற்பாடுகள் நடக்கின்றன. ஷோபாசக்தியைப் பொறுத்தவரை இந்த முன்னுரையை தனது இணையத்தளத்தில் ஜூன் 19, 2023 அன்று பதிவேற்றியிருந்தார்; அதில் கே.எஸ். சிவகுமாரன் எழுதியவற்றை அவர் டானியல் அன்ரனி எழுதியதாகக் குறிப்பிட்டபகுதிகளை மாத்திரம் நீக்கி விட்டு இருக்கின்றார். ஆனால் குறைந்தபட்சம் இப்படி ஒரு தவறு நூலின் அச்சுவடிவில் நிகழ்ந்துவிட்டது என்பதை ஒரு குறிப்பாகக் கூட அவர் அந்தக் கட்டுரையின் கீழ் இணைக்கவில்லை. தவறொன்று நிகழ்ந்துவிட்டது என்பது ஓர் அவப்பேறு; ஆனால் இந்த நூலை எந்த எந்தத் தளங்களில் எல்லாம் பரப்பினார்களோ அந்தத் தளங்களில் இந்தத் தவறு / குளறுபடி நடந்துவிட்து என்பதையும் பகிர்வதே அறம். இன்றுவரை இந்த நூல் வெளியீட்டுடன் தொடர்புபட்ட பதிப்பாளரோ, முன்னுரை எழுதியவரோ, பதிப்பகமோ இதில் காட்டும் மௌனம் வெறும் மௌனம் அல்ல; திமிர்!
சமர் இதழ்கள் நூலகம் செயற்திட்டத்தின் கீழ் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கட்டுரை ஜீவநதி மே 2024 இதழில் வெளியானது.
Leave a comment