கொம்ரேட் காங்ஸ்டாவின் யூட்யூப் பக்கத்தில் “Break The Bloody Silence” என்கிற தற்போதைய பலஸ்தீனப் பிரச்சனை குறித்த தமிழ் ரப் பாடலினையும், அதன் வெளியீட்டுவிழாவில் செல்வா, ராஜு முருகன், யுகபாரதி ஆகியோர் ஆற்றிய உரைகளையும் பார்த்தேன். சமூக நீதிக்கான அரசியலுக்கான தணிக்கைகளும், அந்த அரசியல் பேசுவதையும் பேசுவோரையும் மைய ஊடகங்கள் தவிர்த்தும் புறக்கணித்தும் வருகின்ற, வலதுசாரி அரசியலுக்கு எதிரான கருத்துகள் கடுமையாகத் தணிக்கை செய்யப்படுகின்ற சூழலில் இதுபோன்ற சுயாதீன பாடல்களின் வருகை முக்கியமானதும் ஆதரவளிக்கவேண்டியதுமாகும். இந்தப் பாடலுக்கான இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/mQUh6emOatk?si=qfqaLBhWDe6ZY86l
அதிகாரத்துக்கான எதிர்ப்பரசியல், தனிமை, இருத்தலியல் சிக்கல்கள் போன்றவற்றைப் பெரும்பாலான ரப் பாடல்கள் தமது உள்ளடக்கங்களாக கொண்டுள்ளன. “Break The Bloody Silence” பாடலும் கச்சிதமாக பலஸ்தீனத்தில் நடந்துகொண்டிருக்கும் இனப்படுகொலை பற்றிப் பேசுகின்றது. கொம்ரேட் கான்க்ஸ்டா தளத்தில் உள்ள ஏனைய பல பாடல்களும் இவ்விதம் அரசியல் பேசுவனவாகவே அமைந்துள்ளதையும் பார்த்தேன். இது தொடரவேண்டிய பணி.
000
இந்த இடத்தில் அண்மைக்காலத்தில் பலத்த கவனிப்பையும் பிரபல்யத்தையும் பெற்று வருகின்ற வாகீசன் இராசையா பற்றிய எனது அவதானத்தையும் சொல்லவேண்டியுள்ளது. அவரது சொல்லாட்சியும், சந்தங்களுக்கு ஏற்றவாறு சொற்களைக் கட்டுகின்ற திறமையும் அபாரமானவை. ஆனால் அவரது பாடல்களின் உள்ளடக்கதைப் பார்த்தால் ஏமாற்றமாகவும் சலிப்பாகவும் தான் இருக்கின்றது. பெண்கள் குறித்த் வர்ணனைகளும் விடலைத்தனமான ஏக்கங்களும், தமிழ் வீரம், பு#லி*க$ள் இயக்கத்தினர் குறித்த பெருமிதம் என்பவற்றைத் தாண்டி சமூகநீதி என்பதை அவரது பாடல்களில் எந்த வரிகளிலுமே காணமுடியவில்லை! இத்தனை கவனத்துடன் செய்யப்படும் அரசியல் நீக்கம் என்பது அவதானத்துடன் நோக்கப்படவேண்டியது. ஏனென்றால் அரசியல் நீக்கம் என்பதற்குப் பின்னால் மக்கள் விரோத அரசியல் எப்போதும் மறைந்துகொண்டிருக்கின்றது.
ஆதலால், மக்களை அரசியல் மயப்படுத்தல் என்பது எமக்கு மிகவும் அவசியமானதாக இருக்கின்றது!
Leave a comment