ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஒருங்கிணைத்த கருத்தரங்கில் ரா. கமலக்கண்ணன் பேசிய ஆறுமுக நாவலரின் பதிப்புச் செயற்பாடுகள் என்கின்ற உரையை யூட்யூபில் பார்த்தேன். இதில் ஆறுமுகநாவலர் சைவத்தை வளர்க்க வேண்டும் என்பதற்காக தமிழினை ஒரு கருவியாக பாவித்தார் என்று கூறி ஆறுமுகநாவலர் தனது நிலைப்பாட்டில் இருந்து சரியாகத்தான் செயற்பட்டார் என்ற வாதத்தை முன்வைத்துப் பேசி இருக்கின்றார் கமலக்கண்ணன். இந்த உரையில் கிறிஸ்தவ மிஷனரிகள் இலங்கையில் மதப்பரப்பினைச் செய்யும் பொழுது கல்விக்கூடங்களை நிறுவினார்கள், பதிப்புக்கூடங்களை நிறுவி நூல் பதிப்புகளைச் செய்தார்கள், பிரசங்கங்களை நிகழ்த்தினார்கள்; இவையெல்லாவற்றையும் அவர்கள் மதப்பரப்புகை என்பதற்கான உத்திகளாகச் செய்தபோது ஆறுமுக நாவலரும் அதே உத்திகளைச் செய்து கல்விக்கூடங்களை நிறுவி, பதிப்புகளைச் செய்து, பிரசங்கங்களைச் செய்து சைவத்தைப் பாதுகாத்தார் என்கிறார்.
இந்த இடத்தில் “யாழ்ப்பாணத்தில் பெண்கள் கல்வி” என்ற நூலில் குறமகள் கேட்கின்ற ஒரு கேள்வி எனக்கு முக்கியமானதாகத் தோன்றுகின்றது. கிறிஸ்தவ மிஷனரிகள் மதப்பரப்புகைக்குச் செய்த வேலைகளை எல்லாம் நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றையெல்லாம் தானும் பின்பற்றி சைவத்தைக் காத்த நாவலர் என்று கூறுகிறார்கள்; ஆனால் கிறிஸ்தவ மதப் பரப்புகைக்கும் வளர்ச்சிக்கும் பெண்கள் கல்வி என்கின்ற விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு அதனை மிக வேகமாக கிறிஸ்தவ மிஷனரிகள் முன்னெடுத்தார்கள். ஆனால் நாவலர் பெண்கள் கல்வி பற்றி நினைக்கக்கூடவில்லை, மாறாக பெண்களை ஒடுக்குகின்ற கருத்துகளைக் கொண்ட பாலபாடம் போன்றவற்றை வெளியிட்டுக்கொண்டிருந்தார் என்ற விமர்சனத்தைக் குறமகள் முன்வைக்கின்றார். ஆறுமுகநாவலர் பதிப்புச் செயற்பாட்டில் அதன் நுட்பவியல் நோக்கில் ஒரு முக்கியமான ஆளுமையாக இருக்கலாம், ஆனால் அவர் சைவத்தைக் காப்பதற்காக பதிப்புச் செயற்பாட்டில் அதற்குத் தேவையான நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று அதனை நியாயப்படுத்துவது தவறு; ஆறுமுகநாவலர் அதன் மூலம் காலனிய காலங்களிலும் காலனிய பாடசாலைகளிலும் தளரத் தொடங்கியிருந்த சாதியம், பெண்ணொடுக்குமுறை போன்றவற்றினை மீண்டும் இறுக்கமாக்குவதனையே தான் அக்காலத்தில் எழுதிப் பதிப்பித்த நூல்களின் மூலமாகச் செய்தார்.
அதுபோல இந்த உரையில் ஆறுமுகநாவலர் பதிப்பிக்க இருப்பதாக குறிப்பிட்டு பின்னர் பதிப்பிக்காமல் விட்டிருக்கின்ற முக்கியமான நூல்களைப் பற்றி கூறும் பொழுது ஆறுமுக நாவலர் தன்னிடம் இருந்த நூல்களில் சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு தேவையான நூல்கள் என்கின்ற நூல்களை மட்டும் எடுத்து அவற்றைத் திருத்தமாக பதிப்பித்தார்; இது அவரது நிலைப்பாட்டில் இருந்து மிகச் சரியான ஒரு வேலையே என்கின்ற ஒரு கருத்தையும் கமலக்கண்ணன் கூறியிருக்கின்றார். இங்கே மறைமுகமாக, சைவசமயத்தின் மீதான தனது “வெறி” காரணமாக சைவசமயச் சார்பில்லாத பழந்தமிழ் நூல்களை ஆறுமுகநாவலர் கைவிட்டார், அதன் வழி பழந்தமிழ் இலக்கியங்கள் சில அழிந்துபோகவும் காரணமானார் என்பதையும், அவர் சைவத்துக்காகத்தான் இதனைச் செய்தார் என்று கமலக்கண்ணன் கூறுகிறார். உண்மையில் அந்த விதத்தில் பார்த்தால் ஆறுமுகநாவலரை ஒரு மதச் செயற்பாட்டாளராகத் தான் பார்க்கமுடியுமே தவிர அவரை ஒரு திருத்தமான பதிப்பாளராகவோ அல்லது தமிழுக்குத் தொண்டாற்றியவராகவோ பார்க்க முடியாது.
நாவலர் செய்த விஷயங்களில் இருக்கக்கூடிய சாதகத் தன்மைகள் என்று இவற்றையெல்லாம் நியாயப்படுத்திப் புளகாங்கிதம் அடைவது சமகாலத்தில் பெரும் ஆபத்தாகத் தான் முடியும்; ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் மதத்தையும் அரசியலையும் ஒன்றாக இணைத்ததில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் ஆறுமுகநாவலர். இலங்கை சட்டசபை பிரதிநிதியைத் தேர்வு செய்வதற்காக வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் நடைபெற்ற கூட்டத்தில் பொன். ராமநாதனை ஆதரித்து அவரது அரசியல் பிரவேசம் தொடங்குவதற்கு முக்கியமான ஆதரவுத் தளமாக இருந்தவர் நாவலர் என்பதை அனைவரும் அறிந்திருப்போம்.
இப்பொழுதும் ஈழத்தில், நாவலர் காலத்தைப் போலவே “புதிய” நாவலர்கள் உருவாகி மக்களுக்கான முடிவுகளை எடுப்பவர்களாகவும் அரசியல் தீர்மானங்களைச் செய்பவர்களாகவும் மாறிக்கொண்டிருக்கின்றார்கள். மதவாதிகளும், மதத்தலைவர்களும் சமூக தலைவராக உருவாகி வெறுப்புப் பிரச்சாரங்களைச் செய்துகொண்டிருக்கின்றார்கள். ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணத்தில் இருந்த எல்லாத் தமிழர்களையும் சைவர்கள் என்று பார்த்தார் என்று இலகுவாகக் கடந்துபோகின்றார் கமலக்கண்ணன், அப்ப அங்கிருந்த தமிழ்பேசும் பிற மதங்களைச் சேர்ந்தவர்களை எப்படிப் பார்ப்பது? இப்பொழுது ஒலிக்கத் தொடங்கியுள்ள அனைவரும் தாய் மதத்துக்குத் திரும்பவேண்டும் என்கிற பாசிச குரலைத்தானே அன்று ஆறுமுகநாவலரும் ஒலித்தார். நான்காவது பாலபாடத்தில் நல்லொழுக்கம் என்று சொல்பவை மறைமுகமாக தீண்டாமையைத்தானே போதிக்கின்றன. இவற்றையெல்லாம் அவர் சைவத்தைக் காக்கவேண்டும் என்ற நோக்கில் செய்த பதிப்புச் செயற்பாடுகள் என்று விமர்சனமின்றி கடந்துபோவது நல்ல அறிகுறியல்ல. குறிப்பாக ரா. கமலக்கண்ணனின் இந்த உரையே ஆறுமுகநாவலரின் மதச்செயற்பாடுளின் அடிப்படையில் வைத்தே அதற்காகச் சலுகை கொடுத்துக்கொண்டு அவரது பதிப்புச்செயற்பாடுகளை ஆராய்வதாக அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.
ஆறுமுகநாவலரின் பதிப்புச்செயற்பாடு உட்பட எதைப்பார்க்கும் போதும் அவற்றில் ஆறுமுகநாவலர் சமூகநீதி அல்லது சமத்துவம் என்கிற விடயங்களை எவ்விதத்தில் புறந்தள்ளிச் செயற்பட்டார் என்பதைப் பார்க்கவேண்டியது அவசியம். இவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவான கருத்துகளைப் பதிப்பித்ததும் அவர் சைவத்தைக் காப்பதற்காகச் செய்த செயற்பாடு என்றால், சைவமதம் ஒடுக்குமுறையைப் பேணும் மதம் என்பதையும் சேர்த்தே சொல்லவேண்டும்.
பிற்குறிப்பு:
இக்கட்டுரை ஜனவரி 11, 2025 அன்று ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் ஒருங்கிணைத்திருந்த “பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகம் – ஆளுமைகள்” என்கிற கருத்தரங்கில் இரா.கமலக்கண்ணன் ஆற்றிய உரைக்கான எதிர்வினையாக எழுதபட்டது.
Leave a comment