ஓவியராகவும் நூல் வடிவமைப்பாளராகவும் கவிஞராகவும் நன்கறியப்பட்டவரான றஷ்மி நிறைய நூல்களின் அட்டைப்படங்களை தனித்துவமான அழகியலோடு உருவாக்கிக் கொடுத்திருப்பவர். பல எழுத்தாளர்கள், கலை இலக்கியச் செயற்பாடுகளின் கோட்டோவியங்களை அவ்வப்போது வரைந்தும் முகநூலில் பகிர்ந்துவருவார். பலரது புரொஃபைல் படங்களாக றஷ்மி வரைந்த கோட்டோவியங்களே இருப்பதை அவதானித்திருக்கின்றேன். இதுவரை ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். காவு கொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள், ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு, ஈதேனின் பாம்புகள், ஈ தனது பெயரை மறந்துபோனது, அடைவுகாலத்தின் பாடல்கள் என்கிற இவரது கவிதைத் தொகுதிகளின் பெயர்களே “அட இது என்னவாக இருக்கும்” என்று அந்த நூலை வாசிப்பதற்கு ஆர்வமூட்டும் விதத்தில் அமைந்திருப்பன. சற்றே பெரிய கதைகளின் புத்தகம் என்கிற அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பும் அந்தவிதத்தில் அது என்ன பெரிய கதைகள்? என்று எண்ணத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது. 8 கதைகள் 200 பக்கங்கள் என்று பக்க அளவைப் பார்த்தாலும் பெரிய கதைகள் தான்; ஆனால் அவை சொல்கின்ற மனிதர்களின் வாழ்க்கையும் பாடுகளும் நம்பிக்கைகளும் இந்தக் கதைகளை உண்மையிலேயே பெரிய கதைகள் ஆக்கிவிடுகின்றன.
மேரி மக்தலீனும் தீர்க்கதரிசியும் என்கிற முதலாவது கதை “இப்போது” என்பதையே தலையாய சவாலாகக் கொண்டு வாழும் முடி, பாலியல் தொழிலைச் செய்யும், சிறைகளுக்குள் அகப்பட விரும்பாத சிறகுள்ளவளான ஜினா, முடியின் அறைத் தோழன் ஆன கதைசொல்லி ஆகிய பாத்திரங்களைக்கொண்டு புலம்பெயர் விளிம்புநிலை வாழ்வினைச் சொல்கின்றது. அந்தக் கணத்திலேயே வாழ்வை வாழ்ந்து செல்லும் முடி வதிவிட உரிமை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஜினாவை மணந்துகொள்ளத் திட்டமிடுகின்றான். இதனைக் காதல் என்று சொல்லமுடியுமா அல்லது தந்திரம் என்று சொல்லமுடியுமா என்று தெரியவில்லை, ஆனால் ஜீனா மீது கொண்ட உடைமையுணர்வு காரணமாக அவளைக் கொன்றுவிடுகின்றான் முடி. அகதிகள் “சட்டவிரோதம்” ஆக இருப்பது, “பாலியல் தொழில்” சட்ட விரோதம் ஆக இருப்பது என்பவற்றின் மூலமாக நிகழும் குற்றச்செயல்கள் பற்றிய உரையாடல்களை இந்தக் கதை எனக்கு ஏற்படுத்தியது.
இந்ததத் தொகுப்பில் உள்ள ஞானி என்கிற் கதையும் நீலம் என்கிற கதையும் சிறுவர்கள் உளவியல் பற்றிய கனதியான உரையாடலைத் தொடக்குகின்றன. சிறுவயதில் நாம் சொல்வோமே புளுகன் என்று, அப்படியானதோர் புளுகனாக இந்தக் கதையில் குஞ்சான் இருக்கின்றான். சிங்கத்துக்குக் கொம்பு இருக்கின்றது என்றும் தனது தந்தை சிங்கத்தை வேட்டையாடி அதன் கொம்பை வீட்டில் கொழுவி வைத்துள்ளார் என்றும், தமது வீட்டில் ஒரு சிங்கக் குட்டியை வளர்க்கிறோம் என்றும், சிங்கத்தின் முட்டையில் இருந்தே சிங்கக் குட்டி பிறக்கின்றது என்றும், குதிரைக்குக் கொம்பும் இறகும் இருக்கின்றது என்றும் பலகதைகளை தன் சகமாணவர்களிடம் கூறுகின்றான் குஞ்சான். நம்பவே முடியாத விடயங்களை நம்பும்படி பிறரிடம் கூறி அதன் மூலம் தனக்குத் தேவையானவற்றைச் சாதித்துக்கொள்ளும் குஞ்சான் இந்தத் திறமை மட்டுமே அடிப்படை மூலதனமாகத் தேவைப்படும் சாமியாராக, “தானே தனது நெற்றியில் பிளந்து அறியாமை அகற்றிய” ஞானியாக மாறுகின்றான். குழந்தைகளின் உலகம் மிகவும் நுட்பமானது, நுண்ணுணர்வுடன் அணுகவேண்டியது. குஞ்சான் படிப்பில் பிந்தங்கிய மாணவனாக இருக்கின்றான், வகுப்பேற்றப் பரீட்சையில் கூட சித்தியடையாமல் இருக்கின்றான். அதேநேரம் அவனது ஆசிரியர் அவனைப் பாடம் நடந்துகொண்டிருக்கும்போதே வெங்காய ரொட்டியும் இஞ்சித் தேனீரும் வாங்க கடைக்கு அனுப்புகின்றார். அதற்கு ஆசிரியர் குஞ்சானைத் தேர்வுசெய்ய அவன் வயதில் மூத்தவன் என்பது மட்டுமல்லாமல் கல்வியில் பின் தங்கிய மாணவர்கள் மீது ஆசிரியர் காட்டுகின்ற அலட்சிய மனப்பான்மையும், வேட்டைக்குச் செல்பவரின் மகன் போன்ற சமூகவியல் காரணிகளும் இருக்கக் கூடும். இப்படியான மாணவர்களுக்குத் தேவையான காபந்தினையும் பாதுகாப்புணர்வையும் உறுதிப்படுத்தவேண்டிய பாடசாலைச் சூழல் மாறாக அவர்களை இன்னும் இன்னும் சோர்வடையச் செய்வதாக அமைவதை கதை சுட்டுகின்றது. குழந்தைகளின் வளர்ச்சியின் போது 2 வயது முதலே பொய் சொல்லத் தொடங்குகின்றன என்றாலும் பொய் சொல்வது ஒரு நோயாக (Pathological Lying) அமைவதற்கு புறக்கணிப்பு அல்லது துஷ்பிரயோகம் போன்ற குழந்தைப் பருவ அஞரோ (Trauma) அல்லது மனச்சோர்வோ காரணமாக இருக்கலாம். குழந்தைப் பருவத்தில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யாதவர்கள், அவர்கள் விரும்பும் அன்பையும் உறுதியையும் பெறுவதற்கான முயற்சியில், ஒரு சமாளிப்பதற்கான வழிமுறையாக பொய் சொல்லத் தொடங்கலாம் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதுபோல குழந்தைகளின் உளவியலில் எதிர்கொள்ளுகின்ற முக்கியமான “கொடுமைப்படுத்தப்படல்” (Bullying) என்கிற பிரச்சனையை நீலம் கதை தொடர்புபடுத்துகின்றது. இந்தக் கதையில் மருந்தகம் ஒன்றில் வயாகரா அல்லது அதுபோன்ற மருந்தொன்றை வாங்குகின்ற மாத்தையா என்கிற கதாபாத்திரம் அதனைத் தான் கதைசொல்லியின் தந்தை கேட்டே வாங்குவதாகச் சொல்கிறான். கடையில் பகுதிநேரமாக வேலைசெய்த சிப்பந்திச் சிறுவனூடாக இது கதைசொல்லியின் பாடசாலைக்குப் பரவி, அவனைச் சகமாணவர்கள் அந்தக் குளிசையின் நிறம் நீலமென்பதால் நீலம் என்று அழைத்தும் ஆண்குறிகளின் படங்களை பாடசாலையிலும் வேறு பொது இடங்களில் வரைந்து நீலம் என்று எழுதியும் தொந்தரவு செய்கின்றனர். ஆசிரியர்களும் இதனை ஒரு பகிடியாக எடுத்துச் சிரித்துக் கடந்துபோகின்றனர். இது கதைச் சொல்லிக்குப் பெரும் மனஅழுத்தத்தைக் கொடுப்பதுடன் அவனது படிப்பையும் பாதிக்கின்றது. அதுவரை வகுப்பில் முதல் மாணவனாக வந்தவன் பின்தங்கிச் சென்று, கபொத சா/த பரீட்சை முடிவுகளைக் கூடச் சென்று பார்க்காமால் இருந்து விடுகின்றான். முதல் மாணவன் ஒருவன் கேள்விகள் கேட்கப்படாத, விடைகள் எதிர்பார்க்கப்படாத, ஆசிரியர்களால் எதிர்காலத்திதில் மாடுமேய்க்கத் தகுதியானவர்கள் என்று ஆசீர்வதிக்கப்பட்ட கடைசி வரிசை மாணவன் ஆகின்றான். இங்கும் அந்த மாணவன் பாடசாலை முறைமையால் (School System) கைவிடப்படுகின்றான். “கொடுமைப்படுத்தல்” போன்ற மிக கடுமையும் கொடுமையும் வாய்ந்தவற்றை பகடி என்று சொல்லும்போது அதனால் பாதிக்கப்படும் தரப்புகள் பற்றிய பிரக்ஞை உருவாகவேண்டியது அவசியம். (Unicef வெளியிட்ட Estimating the Prevalence and Drivers of BULLYING including CYBERBULLYING (2020) என்கிற அறிக்கையின்படி இலங்கையில் 47% மாணவர்கள் ஏதோ ஒருவிதமான “கொடுமைப்படுத்தலிற்கு” ஆளாகுவதாகவும், பாடசாலைகளில் 30% மாணவர்கள் பகடி என்ற பெயரில் கொடுமைப்படுத்தலுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிடப்பட்டிருப்பதை இங்கே கவனத்திற்கொள்ளலாம்)
இந்தக் கதையை றஷ்மி இன்னும் நுட்பமான தளத்துக்கு எடுத்த்ச் செல்கின்றார். தனது பின்னடைவைத் தான் இவர்கள் எல்லாரும் எதிர்பார்த்திருந்தனர் என்பதையும் அந்தப் பின்னடைவிற்கான காராணம் அந்தச் சூழல் தன்மீது ஏற்படுத்தியிருந்த அழுத்தம் என்பதையும் அவன் உணர்ந்து கடைச் சிப்பந்தியாகவும், பின்னர் பாலைவன நாடொன்றில் 20 வருடங்களும் மிக கடுமையாக உழைத்துப் பொருளாதார ரீதியில் முன்னேறுகின்றான். தன்னைவிடக் குறைவாகக் கல்வித்திறமை கொண்டவர்கள் படித்து நல்லபதவிகளில் இருக்கின்றார்கள் என்பது தரும் கசப்பை, அவர்கள் பொறாமைப்படும்படியாக பொருளாதார ரீதியில் உயர்ந்து வெற்றிகொள்கின்றான். அவன் அடைந்த அத்தனை வலிக்கும் வேராக அமைந்த மாத்தையா மீது கூட கோபம் கொள்ளாமல் கடந்துவிடுகின்றான். விட்டுக் கொடுப்பையும் மன்னித்தலையும் சரிவுநிலையில் இருக்கின்றபோது செய்யும்போது அது இன்னும் ஒடுக்குமுறைக்கே இட்டுச் செல்லும்; தன்னை நிரூபித்துக்கொண்டு அவன் மன்னித்து நகர்கின்றான்.
இந்த தொகுப்பில் இருக்கின்ற எனக்கு ஆகப்பிடித்த கதைகளில் ஒன்று நீலம், மற்றையது ஜ. ஜவின் பத்தாவது பிறந்த தினம் அவளது பெற்றோரால் பெருமளவில் கொண்டாடப்படுகின்றது. “என்னைக் கைவிட்டு விட்டு எல்லாரும் குடிப்பதிலும், சத்தமாகக் கதைப்பதிலும், சிரிப்பதிலுமே கவனமாகயிருப்பதாகத் தோன்றிற்று. எனது பிறந்தினம் அவர்களுக்குக் கொண்டாடித் தீர்க்க்க கிடைத்த ஒரு நாளாயிற்று” என்கிறாள் ஜ. அவள் களைப்புற்று உறங்கியபின்னர் அவளது மாமாவான பே யால் அவள் வன்புணர்வு செய்யப்படுகின்றாள். பாலியல் குற்றங்களின்போது விசாரணை என்ற பெயரில் பாதிக்கப்பட்டவர்கள் மீது கேள்விகள் இன்னும் பெரிய வன்முறையாக அமைவதே வழக்கம். “இத்தனை வருடங்கள் கழித்தும் அந்தப் படுக்கையில் இருந்து என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. எனக்கு அதுவரை நேர்ந்ததற்கு சற்றும் குறைவில்லாத வேதனையை அங்கு நட த்தப்பட்ட பரிசோதனைகளின்போதும் துக்க விசாரிப்புகளின்போதும் அனுபவித்தேன். ஆயிரம் வேறுவேறு சந்தர்ப்பங்களில் ஆயிரம் வெவ்வேறு ஆடிகளுக்குக் கதை சொல்ல வேண்டியதாயிற்று. “ என்கிறாள் ஜ.
சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப அவள் விரும்பியபோதும் அந்த அஞரிலிருந்து அவளால் வெளிவரவே முடியவில்லை. இதனை ஜ பின்வருமாறு பதிவுசெய்கின்றாள்
“நமது வேலையிடத்திற்கு என்னைக் காணவருகின்ற ஆண் நண்பர்களை நீ கடைக்கண்ணால் கவனித்துக்கொண்டிருப்பது எனக்குத் தெரியும். நீ என்ன நினைக்கிறாய்? அவர்கள் எல்லாருடனும் நான் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளுகிறேன் என்றா? ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்துகொண்டிருக்கின்ற தனிமை பற்றி உனக்குத் தெரியுமா? ஒவ்வொரு ஆண்களிடமும் நான் நட்பினை உருவாக்க முயன்று தோற்றுக்கொண்டிருப்பதை நீ அறியமாட்டாய். அவர்களிடம் நட்பாக இருக்கின்றேன். சினிமாக்களுக்குச் செல்கிறோம். பொது இடங்களில் எங்களைக் காதலர்களாகப் பிறரிடம் அறிமுகம் செய்துகொள்கிறோம். அவர்களை என்னுடைய வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கிறேன். அவர்களுக்காகச் சமைத்துக் கொடுக்கிறேன், அவர்கள் மது அருந்த நான் பார்த்திருக்கிறேன். அவர்களைக் கன்னங்களில் முத்தமிட அனுமதிக்கும் நான் உதடுகளில் முத்தமிட்டுப் பெறமுடியாதவளாகியிருக்கிறேன். அவர்கள் எல்லாரிடமும் சிகரெட்டும் விஸ்கியும் கலந்த நாற்றம் வீசுகிறது. இதழ்கள் வெடிப்புற்று மேல்தோல் சொரசொரப்பதுபோல சிராய்க்கின்றன. அவர்களோடு நீண்டநாட்களுக்கு உறவாயிருக்க என்னால் முடியவில்லை. புணர்தலைப் பகிர்ந்துகொள்ள ஒத்துழைக்காத பெண் நண்பியுடன் அவர்களுக்கும் நீண்டநாட்கள் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. உனக்குத் தெரியுமா? இதுவரை என்னோடு பழகிப் பிரிந்துசென்ற எவரும் சண்டையிட்டுப் போனதில்லை. அவர்களால் என்னைப் புரிந்து கொள்ளமுடியாமல், அவர்கள் சொல்வதுபோல “சரிசெய்ய” முடியாமல்தான் இறுதியில் விலகிப்போனார்கள். இப்படி “சரிசெய்ய” முடியாத பழுது என்ன என்பது பற்றி அவர்களிடம் அரைகுறை விளக்கங்களே உள்ளது தவிர, முழுவரலாற்றை அவர்களோடு நான் பகிர்ந்துகொள்ளவில்லை. தேவையற்ற சுமைகளை அவர்களின் மீது ஏற்றிவைக்க எனக்கு விருப்பமில்லை. ஒவ்வொரு உறவு தொடங்கும் முதலாவது உணர்ச்சி வயப்படுத்துகின்ற பார்வையின்போதும் எனக்குத் தெரியும், அது துயரும் பிரிவும் கேள்விகளும் நிறைந்து தூரவாகி நடந்துபோகும் ஒரு உருவம் கண்ணீரில் கரைய முடியப்போவதை”.
பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவரின் ஆன்மாவை வெளிப்படுத்தும் விதத்தில் அறத்துடனும் அக்கறையுடனும் இது பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.
கலை, இலக்கியம், வாசிப்பு என்பனவற்றை நடைமுறை வாழ்க்கையுடன் தொடர்புடுத்தவேண்டும்; அவை வாழ்வு பற்றிய பார்வையை, சகமனிதர்கள் பற்றிய பார்வையிலும் நிலைப்பாட்டிலும் சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்பது எனது நிலைப்பாடு. அண்மையில் ஈழத்தில் சிறுமியர் தங்கவைக்கப்பட்டிருந்த ஒரு மகளிர் விடுதியில் குளிக்கும் தொட்டிக்கு மேலாக சவைலன்ஸ் கமரா பொருத்தப்பட்டிருந்தது பற்றிய செய்திகள் வெளிவந்திருந்தன. இது எத்தனை பெரிய அழுத்தத்தை அந்த மாணவியர் மீது ஏற்படுத்தியிருக்க கூடியது? அந்த அஞரிலிருந்து அவர்கள் வெளிவருவது சவாலானது அல்லவா? ஆனால் இதைப் பற்றிக் கரிசனை இல்லாமல் இதனால் பிரபலங்களுக்கு கெட்டபெயர் வந்துவிடும் என்றும் காய்ச்ச மரத்துக்கு கல்லடி என்றும் கடந்துபோனவர்களின் மனசாட்சியை எவ்விதம் விசாரணை செய்வது?
இந்தத் தொகுப்பில் உள்ள வாவிக்கரை வீட்டில் வாழ்ந்தவர்கள், ஒரு காதல் கதை, இடையறாது ஆடும் ஊஞ்சலுள்ள முற்றம், பெண்ணாள் கதை ஆகிய கதைகளும் அன்பையும், ஆண் பெண் உறவுச் சிக்கலையும் காமத்தையும் பேசுகின்றன. இடையறாது ஆடும் ஊஞ்சல் உள்ள முற்றத்தில் வாழ்வின் அபத்தம் பேசப்படுகின்றது. பிறருக்குக் காட்டுவதற்கென்றும், பிறரது எதிர்பார்ப்புக்காகவும் வாழ்வை அமைத்துக்கொள்ளும் வாத்தி வாழ்க்கையைத் தொலைத்துவிடுகின்றார். இருபது நிமிடங்கள் மட்டும் உணவு இடைவேளை கிடைக்கிற (அது பத்தொன்பது நிமிடமாயிருக்கலாம், ஆனால் இருபத்தொரு நிமிடமாய் இருக்காது) வேலையை வாத்தி செய்யும்படி நிலைமை அமைகின்றது. ஆனாலும் அவருக்கு உள்ளூர ஒரு பெரிய கனவு இருக்கின்றது, நிலத்திற்கு மேலே வெளிச்சம்படுகிற மாதிரி எங்காவது இடத்தில் மனிதர்களோடு பேசிப்புழங்கி ஒரு நாளைக்காவது வேலை செய்யவேண்டும் என்பதுதான் அந்தக் கனா என்பது மிகுந்த கழிவிரக்கம் தரும் ஒரு நிலையல்லவா?
தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே துரோகத்தையும் வலியையும் ஏமாற்றத்தையும் பேசுகின்ற அதேநேரம் அவற்றைக் கடந்து எங்கிருந்தோ கிடைக்கும் அன்பையும் பரிவையும் கரிசனையையும் நம்பிக்கையையும் ஊட்டுவதாக இருக்கின்றன. பெண்ணாள் கதை என்கிற கதை குறித்து மாத்திரம் எனக்கு இதில் மாற்றபிப்பிராயம் இருக்கின்றது. ஏற்கனவே திருமண உறவில் இருக்கின்ற பெண்ணாள் பையனுடன் உறவேற்பட்டபின்னர் அவன் இடையில் உறவை முறித்துச் சென்றான் என்பதால் ஏற்பட்ட ஏமாற்றம் / கோபத்தால் அந்தப் பையனின் தந்தையான உத்தமருடன் உறவையேற்படுத்திக் கருவுற்றாள் என்று வருவது செயற்கையானதாக இருக்கின்றது.
தொகுப்புப் பற்றிச் சொல்லும்போது மிக முக்கியமாக குறிப்பிடவேண்டியது றஷ்மியின் கவித்துமான நடையும், கதை சொல்லும் உத்திகளும். குறிப்பாக அனேக கதைகளில் கதை நடக்கின்ற இடங்கள் பற்றியும் அவர்களது இனம் மொழி பற்றியுமான அடையாளங்கள் சொல்லப்படாமலே கதைகள் அமைகின்றன. அதேநேரம், அது குறைபாடாகத் தெரியாமல் பொதுத்தன்மையைத் தருவதாக அமைந்திருப்பது சிறப்பு. அதுதவிர படிமங்களும் உதாரணங்களும் புதிதாகவும் தனித்துவமாகவும் அமைகின்றன. உதாரணத்துக்கு நான் வெகுவாக ரசித்த மூன்றைச் சுட்டிக்காட்டுகின்றேன்:
- வானவில்லின் நிறம் கொண்டு காற்றில் பறந்த செதில்கள் (மீனில் உள்ள செதில்களை அரிவாளால் நீக்கும்போது சொல்லப்படுகின்றது)
- கிணற்றுவாளியில் இடப்பட்டிருந்த ஓட்டையூடு நீர் நீள்வட்டமாகச் சிந்தி, படிப்படியாக ஆரை குறைந்து இறுதியில் ஓர் நேர்கோடாகச் சிந்திக்கொண்டிருப்பது கேட்கிறது.
- அவர் சிரிக்க எத்தனிக்கும்போது உதடுகளிடையே சிகரெட் ஓர் ஓரமாக ஒதுங்கும். அப்போது அவர் கண்களைப் பாதிமூடியவராகப் புகையிலிருந்து தப்பிக்க முயல்வார்
இந்தத் தொகுப்பில் எந்த இடத்திலும் றஷ்மி பேசவில்லை, கதை நிகழும்போது கதையே எம்முடன் உரையாடல்களை முன்னெடுக்கின்றது. அது சமூக ஒழுங்கு குறித்தும் வாழ்வின் அபத்தம் குறித்தும் பலகேள்விகளையும் எழுப்புகின்றன இந்தச் சற்றே பெரிய கதைகள்.
பின்குறிப்பு:
ஒக்ரோபர் 19, 2024 ரொரன்றோவில் நடைபெற்ற ரஷ்மியின் இரண்டு புத்தகங்களில் வெளியீட்டு விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை. டிசம்பர் 2024 தாய்வீடு இதழிலும் இது வெளியானது.

Leave a comment