கனடாவில் இருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகைகளில் ஒன்றான வைகறையின் ஆசிரியரும் மிக நீண்டகாலமாகவே சமூக, அரசியல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தவரும், நண்பருமான ரவி என்கிற ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை ஜனவரி 25, 2025 அன்று இயற்கையெய்தி இருக்கின்றார்.
தனது சிறுவயது முதலே சமூக நலனில் அக்கறையும் அரசியல் உணர்வும் கொண்டு வளர்ந்த ரவி, எண்பதுகளில் ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருக்கொள்ளத் தொடங்கியபோது தானும் விடுதலை இயக்க அரசியலில் இணைந்துகொண்டார். தேசிய இன விடுதலை என்கிற அரசியல் பயணத்தில், அமைப்புகள் சிதறியபோதும், பல்வேறு ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளவேண்டி வந்தபோதும் கூட ரவி, ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்கிற தனது நிலைப்பாட்டில் பற்றுறுதி கொண்டவராகவே இருந்தார். அவரது சமூக, அரசியல் செயற்பாடுகளும் அவர் ஆதரித்து நின்ற தளங்களும் இந்த அடிப்படையிலே அமைந்திருந்தன.
அவரது வைகறை பத்திரிகை, மாற்றுக் கருத்துகளுக்கு இடமளித்து, அதேநேரம் அவதூறுகளைத் தவிர்த்து வெளிவந்த முக்கியமான பத்திரிகையாகும். இந்த நிலைப்பாட்டுக்காகப் பல்வேறு நெருக்கடிகளையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டபோதும்,
“சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்”
என்கிற தனது மகுட வாசகத்தை வைகறை தொடர்ந்தும் கடைப்பிடித்து வந்தமைக்கு ரவியின் தளராத மனவுறுதியே மூலாதாரம். வைகறை பத்திரிகையின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக தனிப்பட்ட மிரட்டல்களுடன், வைகறை பத்திரிகை விநியோகத்துக்காக வைக்கப்பட்டிருந்த கடைகளில் இருந்து எடுத்து எறியப்பட்டிருந்தபோதும் ரவி தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருந்துள்ளார்.
காலவோட்டத்தில் வைகறை பத்திரிகை நின்றுவிட்டபோதும் ரவி, இங்கு நடைபெறுகின்ற கலை, இலக்கிய, சமூக, அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுப்பவராகவும் ஆதரவளிப்பவராகவும் செயற்பட்டுக்கொண்டிருந்தார். வைகறை பற்றிப் பேசுகின்றபோது, வைகறை வெளிவந்த காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த பத்திரிகையாக வைகறையே இருந்தது என்பதுடன் கனடியப் பத்திரிகை ஒன்றில் பிரசுரமான எனது முதலாவது கட்டுரையும் வைகறையிலேயே வெளிவந்திருந்தது என்பதையும் குறிப்பிடுவது முக்கியமென்று கருதுகின்றேன். வைகறை பத்திரிகையை நிறுத்துவது என்கிற நிலைக்கு வந்தபின்னரும் கூட அப்போது வைகறையில் வெளிவந்துகொண்டிருந்த முக்கியமான தொடரொன்று நிறைவுறும்வரை காத்திருந்து அந்தத் தொடர் நிறைவுற்ற இதழே 2008 இன் இறுதிப்பகுதியில் வந்த கடைசி வைகறை. (இதன் பின்னர் 2009, 2010 இல் ஒவ்வொரு வைகறை இதழ்கள் வந்திருந்தன).
கிட்டத்தட்ட இந்தக் காலப்பகுதியிலேயே கலை, இலக்கிய, சமூகச் செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கிய எமக்கு தோழமையான ஆதரவைத் தருகின்ற ஒருவராக ரவி தொடர்ந்தும் விளங்கினார். அத்துடன் இங்கே நடக்கின்ற நூல் வெளியீடுகள், கலை இலக்கிய நிகழ்வுகள், போன்ற பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு விளம்பர அனுசரணைகளை தானாக விரும்பிச் சென்று செய்கின்றவராகவும் ரவி இருந்துள்ளார்.
முரண்பாடுகள், மாற்றுக்கருத்துகளுக்கு அப்பால் எப்போது பார்த்தாலும் பளீரென்ற அந்தப் புன்னகையுடன் நேர்மறை எண்ணத்தைத் தோற்றுவிக்கின்ற ஒருவராகவே ரவி இப்போது என் நினைவுகளில் நிற்கின்றார். கடந்த சில ஆண்டுகளில் பல தனிப்பட்ட சந்திப்புகள், ஒன்றுகூடல்களிலும் ரவியை அடுத்தடுத்துச் சந்திக்கின்ற வாய்ப்புகளும் தொலைபேசி உரையாடல்களும் வழமையாகி இருந்தன. தமிழ் தேசிய அரசியல் குறித்த தீர்க்கமான உறுதிப்பாடும் தேசிய இன விடுதலையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராடவேணும் என்ற நிலைப்பாடும் அர்ப்பணிப்பும் ரவியிடம் தொடர்ந்து இருந்தது. அவருடனான எந்த உரையாடலும் விரைவில் அரசியல், சூழலியல், சமூகம் குறித்ததாக மாறி நீண்டுசெல்வதே வழமையாக இருந்தது.
அரசியலுடன் சேர்த்து கல்வி, சூழலியல், புகைப்படம் எடுத்தல் போன்றவற்றிலும் பின்னாட்களில் ரவி தீவிரமான ஈடுபாட்டைக் கொண்டிருந்தார். சூழலியல் குறித்த அவரது ஈடுபாட்டின் காரணமாக, இயற்கையையும், வெவ்வேறு விலங்குகள் பறவைகளையும் புகைப்படங்கள் எடுத்து தனது முகநூலிலும் தனிப்பட நண்பர்களுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மிகக் குறிப்பாக, அவர் எடுக்கின்ற கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் எனக்குப் பிடித்தவை.
தனது ஈடுபாடுகள், சமூக அக்கறை, கல்வி போன்ற அனைத்தையும் ஒன்றுடன் ஒன்றிணைந்தவையாக ரவி பேணியும் மேம்படுத்தியும் வந்திருக்கின்றார். உயர்கல்வி கற்கவேண்டும் என்பதில் அவருக்கு ஆர்வம் இருந்தது, ஆனால் அதனை அவர் தொழிற்தேவைகளுக்காகவோ, அல்லது வேலைகளில் பதவி உயர்வுக்காகவோ செய்யாமல், சூழலியல் குறித்தே தனது உயர்கல்வியைத் தேர்ந்தெடுத்ததில் அவரது சமூகப் பிரக்ஞையும் இருக்கின்றது. அதுபோல புகைப்படத்துறையில் இருந்த ஆர்வத்தினால் அதில் தன் திறன்களை வளர்த்துச் சென்ற ரவி, அதிலும் சூழலியல் குறித்த தனது அக்கறையை வெளிப்படுத்தியிருப்பதைக் காணமுடிகின்றது.
சிறுவயதிலேயே விடுதலைப் போராட்ட அரசியலில் ஈடுபட்டதால் உயர்கல்வியை இழந்த பல்லாயிரக்கணக்கானோரில் ஒருவரான ரவி, கல்விக்கான தன் தேடலையும் ஆர்வத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தியே வந்தார். கார்ல்ரன் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழினுட்பத்துறையில் கற்றிருந்தபோதும் பின்னர் சூழலியலில் கொண்டிருந்த ஈடுபாடு காரணமாக யோர்க் பல்கலைக்கழகத்தில் சூழலியல் துறையில் பட்டம்பெற்று, தொடர்ந்து தனது உயர்கல்வியையும் யோர்க் பல்கலைக்கழகத்திலேயே கற்று வந்தார். இப்பல்கலைக்கழகத்தின் சூழலியல் , உயிரின ஆய்வுத்துறையில் (Faculty of Environmental and Urban Change – Resource Person) பணியாற்றி வந்தவர் , தனது ஆய்வுப் பணிக்காகவே இலங்கை சென்றிருந்தார். அது குறித்த ZOOM வழியாக பல்கலைக்கழகத்தினருடன் உரையாடிக் கொண்டிருந்தபோதே கதிரையில் இருந்து சரிந்து விழுந்திருக்கின்றார். மாரடைப்புக் காரணமாக உடனடியாக அவர் இறந்திருக்கின்றார்.
ஆரம்ப காலத்தில் தனது இயக்கத் தோழர்களால் GUES ரவி என்றும் தோழர் ரவி என்றும் அறியப்பட்டிருந்த ரவி, எமக்கு அறிமுகமானது வைகறை ரவியாக. அதிலிருந்து சூழலியல் குறித்த அக்கறைகொண்டவராக அந்தத்துறையிலும் தொடர்ந்து தேடல்களைச் செய்துகொண்டிருந்த ரவி, இனிய தோழராக நினைவுகளில் இருப்பார். ஒப்பீட்டளவில் அவருடன் மிகக் குறுகியகாலமே நான் பழகியிருக்கின்றேன். அவரது நண்பர்களும் தோழர்களும் அவரையும் அவரது கனவுகளையும் பற்றி விரிவாக எழுதுவதும் உரையாடுவதுமே நாம் அவருக்குச் செய்கின்ற தோழமை அஞ்சலியாகும் என்று நம்புகின்றேன்.
பின்குறிப்பு:
கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கு முன்னர் கனடாவில் இருக்கும் ஒரு பல்மருத்துவர் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஒரு பெண் மீது செய்த பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய செய்தியைக் கிட்டத்தட்ட இங்கிருந்த அனைத்து ஊடகங்களும் “மருத்துவர் தமிழர் என்ற உணர்வில்” கண்மூடிக் கடப்பது என்றிருந்தபோது அதைப் பற்றிய செய்தியை வெளியிட்ட பத்திரிகை வைகறை. வைகறையில் அந்தச் செய்தியைப் பார்த்தவுடன், இங்கு வந்துகொண்டிருந்த அனைத்துத் தமிழ் பத்திரிகைகளையும் தேடித்தேடிப் பார்த்து அவை எப்படி இந்தச் செய்தியைப் பதிவுசெய்திருக்கின்றன என்று பார்த்தேன். மருத்துவர் தமிழர் என்ற பெருமிதத்தைக் காக்கவேண்டுமென்றோ என்னவோ பெரும்பாலோனோர் மௌனம் காக்க, மருத்துவரின் கயமையப் பதிவுசெய்திருந்தது வைகறை. அந்த வைகறையை அடையாளமாகக் கொண்டுதான் அவர் வைகறை ரவி என்று அறியப்பட்டிருக்கின்றார்.
Leave a comment