தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவான ஆரம்ப காலத்தில் அதற்குத் தமிழ்நாட்டில் இருந்து திராவிடக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் பெரும் ஆதரவைக் கொடுத்துக்கொண்டிருந்தன.  கிட்டத்தட்ட இதே சமகாலத்தில் எமர்ஜென்சி மூலம் தமிழ்நாட்டில் நடந்த ஒடுக்குமுறைகள், ஒன்றிய அரசால் எப்போதும் கலைக்கவும் கட்டுப்படுத்தவும் கூடிய நிலையிலேயே மாநில அரசுகள் கட்சிகளும் இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தி இருந்தது.  அதுபோலவே ஆயுதப் போராட்டத்தின் மூலம் புரட்சியை நடத்தி சோசலிச அரசை இந்தியாவில் ஏற்படுத்தலாம் என்ற நோக்குடன் இருந்த நக்ஸல்பாரிகளின் தாக்கத்தினைப் பெற்றிருந்த இடதுசாரிகளுக்கும் ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஒன்று தொடங்குவதை ஒரு புரட்சியாக நோக்கியிருக்கலாம்.  இவை ஈழத்தில் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியபோது அதனை திராவிட இயக்கங்களும், திராவிடக் கட்சிகளும் உணர்வுரீதியாகவும், நேரடியாகவும் ஆதரவளிப்பதற்குக் காரணங்களாக இருந்திருக்கலாம். 

இந்த உறவு திராவிட இயக்கங்களுக்கும் திராவிடக் கட்சிகளுக்குமான உறவாகவும், குறிப்பாக விடுதலைப் புலிகளை எடுத்துக் கொண்டால், விடுதலைப் புலிகளுக்கு இவர்கள் கொடுத்த ஆதரவாகவும் அமைந்ததே தவிர,  பெரியாரியக் கொள்கைகள் பற்றிய உரையாடல்களின் தொடர்ச்சியாக அமைந்த, அதன் வழியாக அமைந்தது என்று கூற முடியாது.  இயக்கங்களுக்கு திராவிட இயக்கத்தினருடன் இருந்த தொடர்புகளாலும் இயல்பாகவே ஏற்பட்டிருக்கக் கூடிய விடுதலை உணர்வாலும் சாதியம், பெண்ணுரிமை, மதம் குறித்த முற்போக்கான பார்வைகள் ஏற்பட்டிருக்கவும் வலுப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.  ஆனால் அவற்றைப் பெரியாரின் (அல்லது திராவிடக் கருத்தியலின்) கொள்கை வழித் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என்று வாதிடுவது பொருத்தமற்றது.

மிக முக்கியமாக பெரியார் சமூகநீதி என்பதை முன்வைத்து அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடினார்.  விடுதலைக்கான போராட்டம் என்பது அவ்விதத்தில் இருப்பதுவே பொருத்தமானது.  ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்பது இன ஒடுக்குமுறையே முதன்மையான பிரச்சனை என்று வரித்து, தனித் தமிழீழம் கிடைக்கும்போது அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளும் களையப்படும் என்பதாக அமைந்தது.  அதாவது அவர்கள், சாதியம் உள்ளிட்ட பிற ஒடுக்குமுறைகளை அக முரண்களென்றே கருதினர்.  சாதிய ஒடுக்குமுறை, பெண்களுக்கெதிரான வன்முறை என்பன புலிகளின் காலத்தில் தண்டனைக்குரிய குற்றங்களாக இருந்தன, அதே நேரத்தில் தண்டனைகள் மூலமே இந்த ஒடுக்குமுறைகளை ஒழித்துவிடலாம் என்று நம்பப்பட்டதே தவிர, உரையாடல்களும் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.  பிற இயக்கங்கள் அழிக்கப்பட்டதுடனும் தடைசெய்யபட்டதுடனும், பிற அமைப்புகள் சமூக நீதிக்கருத்துகளுக்காக இயங்குவதும் தடைசெய்யப்பட்டே இருந்தது. 

இதேநேரம், இலங்கையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதவில்லை என்பதுவும் அது குறித்த விவாதங்களை முன்னெடுக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது.  இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று. 

தமிழ்நாட்டைப் பொருத்தவரை திராவிட இயக்கங்களின் ஆதரவு தொடர்ந்தது, அதேநேரம் 90களுக்குப் பின்னர் திமுக வை ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரானவர்களாகக் கட்டமைக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு நடந்தன, வெற்றியும் பெற்றன என்றே சொல்லவேண்டும்.

கால ஓட்டத்தில், மிகக் குறிப்பாக இரண்டாயிரங்களின் பின்னர் (சமாதான காலகட்டத்தின் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுக்குச் சென்று வந்தவர்களாலும், வெளிநாடுகளில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களாலும் இது நடந்தது) ஈழத்தமிழரின் தேசிய இனவிடுதலைப் போராட்டம் என்பது பெருமிதங்களையும் விடுதலைப் புலிகளின் காலத்தினை தமக்கென்றிருந்த பொற்காலமாக வரித்து அது குறித்த அனைத்து விமர்சனங்களையும் மாற்று அபிப்பிராயங்களையும் எதிர்த்தரப்பில் வைப்பதாகவும் அமைந்தது.  இந்தச் சமயத்தில் சாதீயம், மதவாதம், பாலின ஒடுக்குமுறை, பிரதேசவாத பெருமித உணர்வு போன்றவற்றைப் பற்றிக் கதைத்தாலே, இந்தப் பிரச்சனைகள் எல்லாம் இப்போது இல்லை, அனைத்துமே தீர்க்கப்பட்டுவிட்டன என்று சொல்லி வாயை அடைக்கின்ற போக்கு வலுப்பெற்றதுடன், அதனை ஏற்றுக்கொள்பவர்களும் குறைந்த பட்சம் பொதுவெளியில் அதனை எதிர்க்காதவர்களும் மட்டுமே தமிழ் தேசியவாதிகள் என்பதான போக்கும் உருவானது.  முப்பது வருடங்களுக்கு மேலாக தேசிய இன விடுதலைப் போராட்டிய இனமென்று ஈழத்தமிழர்கள் அழைத்துக் கொள்கின்றோம்; அத்தனை வருட போரின்பின்னும் அரசியலைப் பிரக்ஞை பூர்வமான உரையாடவும், சமூகநீதி பற்றிய அக்கறை இல்லாமலும் இருப்பவர்களாகவே ஈழத்தமிழரில் பெரும்பான்மையினர் இருப்பதற்கு உரையாடலுக்கான வெளியே இல்லாமல், நாங்கள் முடிவெடுக்கிறோம், நீங்கள் தலையாட்டிக்கொண்டிருங்கள் என்கிறவிதமான அணுகுமுறைதானே காரணம்.    

ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந்த திமுக எதிர்ப்பு மனநிலை, விடுதலைப் புலிகள் இயக்கம் அழிந்தற்கே திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் காரணமென்று குற்றம்சாட்டி, ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் தோல்வியுற்றமைக்கு என்ன காரணமென்பதைக் கூட சுயவிமர்சனம் செய்துவிடாமல் செய்தது.  சீமான் போன்றவர்களால், இது ஒட்டுமொத்த திராவிடக் கட்சிகளும் இயக்கங்களுமே தமிழ்த்தேசியத்துக்கு எதிரானதாக கட்டியெழுப்பப்பட்டது.  (சீமான் தனது வசதிக்கேற்ப ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தையும், தமிழ்நாட்டின் தமிழ் தேசியத்தையும் ஒன்றுடன் ஒன்று குழப்பி தனது லாபத்துக்கேற்ற வெறுப்புணர்வால் கட்டியெழுப்பப்படுகின்ற தமிழ்தேசியவாதம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார்).  சமூக ஊடகங்கள், காணொலிகள் மூலம் பொய்யான தரவுகளையும் தகவல்களையும் அவதூறுகளையும் பரப்பி, அதனை நம்பக்கூடிய மனநிலையில் இருக்கின்ற பெரும்பான்மையினர் தொடர்ச்சியாக அதனைப் பரப்பியும் பரப்புரை செய்வதை தமக்குச் சாதகமாக்கி தேர்தல் வெற்றிகளையும் கருத்தியல் பரம்பலையும் செய்யலாம் என்கிற மோடி, ட்ரம்ப், இந்துத்துவ சக்திகள்,  உள்ளிட்டோர் செய்கின்ற அதே உத்தியையே சீமானும் தொடர்ந்து செய்கின்றார்.  

சமூகநீதி அரசியலைப் பேசுவதையே புறந்தள்ளி, இன்று சமூகநீதிக்கான தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் கருத்தியல்களையும் பேசினாலே அவர்களை ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு எதிரானவர்களாகப் பேசுகின்ற வடிவத்துக்கே (ஈழத்) தமிழ்த் தேசியவாதிகள் வந்துசேர்ந்துள்ளனர். அப்படிச் செய்பவர்களில் பலர் தமது அடையாளங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனின் பெயரையும் பாவிக்கின்றார்கள்.  ஆனால் இதன்மூலம் அவர்கள் முன்னெடுப்பது அனைத்து ஒடுக்குமுறைகளையும் மூடி மறைக்கும் அதன் மூலம் ஆதிக்க சக்திகள் சலுகைகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் தேசியமாகவே அமையும்.  இப்போது, (ஈழத்) தமிழ்த் தேசியவாதிகள் என்று எப்படிப் பொதுமைப்படுத்தலாம் என்ற கேள்வியை சிலர் முன்வைப்பர். அவர்கள் இப்படிக் கேட்பது ஒன்றும் புதிதல்ல.    அவர்கள் நான் மேலே குறிப்பிட்ட “சமூகநீதி அரசியலைப் பேசுவதையே புறந்தள்ளி, இன்று சமூகநீதிக்கான தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் கருத்தியல்களையும் பேசினாலே அவர்களை ஈழத்தமிழரின் தேசிய விடுதலைக்கு எதிரானவர்களாகப் பேசுகின்ற” போக்கிற்கு எதிராக தமது கருத்துகளையும் எதிர்ப்பினையும் முன்வைக்கவேண்டும்.  அப்படியில்லாதவிடத்து அவர்கள் இந்தப் போக்கினை இரசித்துக்கொண்டிருக்கின்றனரோ என்றுதான் நினைக்கவேண்டியிருக்கின்றது.    

ஈழத்தில் தேசிய இன ஒடுக்குமுறை இருக்கின்றது எவ்வளவு உண்மையோ, அதேயளவு உண்மை அங்கே சாதிய, பாலின, மதவாத, வர்க்க ஒடுக்குமுறைகளும் இருக்கின்றன என்பதுவும்.  ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் என்பது அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானதாகவே இருக்கவேண்டும்.  குறித்த ஒரு காலத்தில் ஒரு ஒடுக்குமுறை எரியும் ஒடுக்குமுறையாக இருக்கக்கூடும், ஆனால் அதைக் காரணம் காட்டி பிற ஒடுக்குமுறைகளைப் புறந்தள்ளிவிடவோ, அல்லது அந்தக் குரல்களை எதிர்த்தரப்பாக்கிவிடவோ கூடாது.  பெரியார் என்ற பெயரைச் சொன்னாலே பலரும் கொந்தளிக்கக் காரணம் அவர் சொல்லிச் செயற்பட்ட சுயமரியாதை, சமத்துவம், சமூகநீதி போன்றவற்றை ஏற்றுக்கொள்வதில் ஏற்படுகின்ற ஒவ்வாமை அல்லது பதற்றமாகவே இருக்கவேண்டும் என்று கருதுகின்றேன்.

தோழர் தமிழ் காமராசன் முகநூலில் பின்வரும் உரையாடல் ஒன்றினத் தொடக்கி இருந்தார்,  அதற்காக எழுதப்பட்ட குறிப்பு இது.  தமிழ் காமராசனின் குறிப்பு கீழே பகிரப்பட்டுள்ளது.

ஓர் தத்துவ விசாரணை

+++

தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

ஏற்கனவே இவ்வாறு திராவிட இயக்கத் தலைவர்களும் சிந்தனையாளர்களும் வாதிட்டுள்ளனர்; கருதி வந்துள்ளனர். இதன் தொடர் விளைவாக எழுந்த சீமான் இன்று பெரியார் குறித்து அவதூறுகளைப் பரப்பும் வலதுசாரி ஆகிவிட்டார். இப்போதும் இவ்வாறு திருமுருகன் காந்தி வாதிட்டு வருகின்றார்.

இன்றைய நிலையில் இதுபற்றி திராவிட இயக்கத் தலைவர்களின் – சிந்தனையாளர்களின் எண்ணம் என்னவென்று தெரியவில்லை.

+++

தந்தை பெரியார் மறைந்த போது (1973) பிரபாகரன் அவர்களின் வயது 19.

அப்போது இலங்கையில் தமிழர்களின் மீதான இன ஒடுக்குமுறை கடுமையானதாக மாறிக் கொண்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்குள் நிலவிய ஏற்றத் தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் கருதில் எடுக்காமல், “தமிழர்களின் மீதான சிங்களவர்களின் ஒடுக்குமுறையே முதன்மையான பிரச்சனை; இதற்குத் தீர்வு தனித் தமிழீழழ்; மற்றவற்றையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்கிற தேசியவாத அரசியல் சொல்லாடல் – செயல்பாடு ஒருபக்கம் எழுந்தது. இந்த அரசியலின் மாபெரும் பிரகிருதியாக எழுந்து செயல்பட்டவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

இதற்கு மாறாக, மற்றொரு பக்கம் ஏற்கனவே நடந்துகொண்டிருந்த சமூகச் சீர்திருத்த – சமூக மாற்றப் போராட்டங்களுடன் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இணைக்க முயன்றவர்களும் சிலர் அரசியல் களத்தில் இருந்தனர். அவர்களைத் தம் சொந்த மண்ணிலிருந்து ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கட்டத்தின் (1976-1990) முடிவில் (1986-1990) புலிகள் முற்றிலும் துடைத்தெறிந்தனர்.

இதன் பின்னரும்கூட தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களும் – கம்யூனிஸ்ட் இயக்கங்களும் உளமாற புலிகளை ஆதாரித்தனர்.

தமிழ்நாட்டுச் சூழலில் புலிகளின் ஆதரவு அரசியல் சொல்லாடலின் ஊடாகத் தேசியவாத அரசியல் சூறாவளியில் திடாவிட இயக்கத் தோழர்கள் சிக்கிக் கொண்டனர்; மென்மேலும் கம்யூனிஸ்ட் தோழர்கள் அமிழ்த்திக் கொண்டனர்.

தமிழ்நாட்டுச் சூழலில் இதன் முதல் பலியாக அமைந்தது, பெரியார் கட்டியெழுப்பிய பகுத்தறிவு சார்ந்த ஆதிக்க எதிர்ப்பு தமிழ் உணர்வு. அது ஆண்ட பரம்பரை பெருமிதத் தமிழ் உணர்வாக மடைமாற்றப்பட்டது. இதன் மடத்தனமான வெளிப்பாடு மணியரசன் என்றால், அற்பனத்தனமான வெளிப்பாடுதான் சீமான்.

ஈழ விடுதலைப் போர் பேரழிவில் முடிந்த பின்னரும்கூட, பெருமித தேசியவாத அரசியல் சொல்லாடலிலிருந்து தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் வெளியில் வர முடியவில்லை. இதன் விளைவாகத்தான் இறுதிப் போரின் பேரழிவு ஏற்படுத்திய கடுந்துயரத்தையும் தமிழ் அரசியல் உணர்ச்சிப் பெருக்கையும் சீமான் என்கிற அரசியல் பொறுக்கி – கோமாளி தமது அரசியல் முதலீடாக ஆக்கிக் கொள்ள முடிந்தது.

+++

சிந்தித்து பார்ப்பதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் வலி நிறைந்ததாக இருப்பினும், தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியாகக் கொஞ்சமேனும் தமிழீழ விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன் இல்லை என்பதுதான் நாம் ஏற்றுக்கொள்ள தயங்குகின்ற உண்மை.

+++

ஒருவர், பெரியார் கொள்கைத் தொடர்ச்சியின் பிரபாகரன் என்றும், பிரபாகரனின் வாரிசு தான் மாட்டும்தான் என்றும் பழைய சீமான் போல பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது தோழர் திருமுருகன் காந்தி போல பெரியாரையும் பிரபாகரனையும் இணைத்து சிந்திக்கும் அரசியல் ஒன்றே தமிழ்நாட்டின் விடிவெள்ளி என்று கச்சைக் கட்டிக் கொண்டு வாதிட்டு, திமுக எதிர்ப்பிற்கு நியாயம் தேடலாம்.

+++

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் எந்த முன்னிபந்தனையும் இன்றி திராவிட – கம்யூனிஸ்ட் புரட்சி இயக்கங்கள் ஆதரித்தனர் என்பது கடந்தகால வரலாறு. நானும் ஆதரித்தேன். ஆனால் இன்றைக்கு நாம் சரியாகச் செயல்படுவதற்கு, குறைந்தப்பட்சம் நம்மை நாமே விமர்சனப்பூர்வமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

+++

இது ஓர் வேண்டுகோள் மட்டுமே. சிந்திக்கும் துணிவுடையோர் சிந்தனை செய்க! உரையாடுக!

One thought on “தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?

Add yours

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑