கற்சுறா,
எனது பதிவில், நான் சொல்லாத விடயங்களைச் சொன்னதாகவும், சொன்ன விடயங்களைச் சொல்லாததாகவும் நீங்கள் எழுதியிருப்பது ஒரு விதத்தில் என் மீதான ஒரு அவதூறாக அமைகின்றது என்பதை நான் நான் என்ன சொல்லியிருக்கின்றேன், அதை எவ்வாறு நீங்கள் மடைமாற்றியிருக்கின்றீர்கள், நான் சொன்னவற்றைச் சொல்லவில்லை என்றிருக்கின்றீர்கள் என்பதையெல்லாம் விளக்கமாகவே சுட்டிக்காட்டியிருக்கின்றேன்.
அந்தப் பதிவு ஒரு கட்டுரையோ அல்லது ஈழப்போராட்டம் குறித்த வரலாறோ அல்ல; உரையாடல் ஒன்றுக்கான ஒரு குறிப்பு. ஆனால் நீங்கள் ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தில் இடதுசாரிகளினதும் பிற இயக்கத்தினரினதும் பங்களிப்பையும் நான் மறைத்து அல்லது மறுத்து இருப்பதுபோல உங்கள் முகநூலில் ஒரு பதிவையிட்டிருந்தீர்கள். இன்றைய Post Truth காலத்தில் அவதூறுகளையும் வலதுசாரிக் கருத்துகளையும் கூற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர் கைக்கொள்ளும் உத்தி அது. அந்தப் பதிவின் கீழ் நீங்கள் இணைப்புக் கொடுத்துள்ள எனது பதிவை பார்க்காமலே உங்கள் கருத்தைப் பார்த்து அப்படித்தான் நான் எழுதியிருக்கின்றேன் என்று நம்பிப் பரப்புவர்களே அதிகம். இப்போது, அந்தப் பதிவின் கீழ் பின்னூட்டத்தில் நீங்களே, அவ்விதம் நீங்கள் எழுதியது தவறென்றாலும், நான் எத்தனை பதிவுகள் இட்டாலும் அந்தப் பிழையான கருத்து அதன்வழி பரவியே செல்லும். உங்கள் பதிவும் அவ்விதம் இருக்கின்றது என்பதை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்.
இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது அதற்குப் பொறுப்புக்கோருவது, அல்லது அது தவறாக நடந்துவிட்டது என்று ஒப்புக்கொள்வது. ஆனால் நீங்கள் அதுபற்றி ஏதும் சொல்லாமல், இப்படித்தான் முன்னரும் சிலர் இருந்தார்கள் என்றெல்லாம் ஏதோ எழுதி உள்ளீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் நம்பிக்கை வைத்தவர்களும் வைத்த கருத்தியல்களும் பிற்காலத்தில் ஏமாற்றம் அளித்தன என்பதற்காக அவற்றை எனது தலையில் திணித்தால் நான் என்ன செய்வது?
அதுமட்டுமல்லாமல், இந்தப் பதிவிற்கும் எனது கேள்விகளுக்கும் எந்தத் தொடர்புகளும்
//இதற்குள் அருண்மொழிவர்மனைப் போன்றவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பதத்தின் மூலம் முள்ளிவாய்க்காலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மட்டும் அடையாளம் காட்ட முனைந்தார்கள்.( மிகக் கவனமாக இதனை வாசியுங்கள். அருண்மொழி வர்மனைப் போன்றவர்கள் என்கிறேன்)//
என்பது அடுத்த அவதூறு. நான் எங்கே எப்போது முள்ளிவாய்க்காலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மட்டுமே காணாமல் ஆக்கப்பட்டோர் என்று சொன்னேன் என்று சொல்லமுடியுமா? அடைப்புக்குறிக்குள் “மிகக் கவனமாக இதனை வாசியுங்கள். அருண்மொழி வர்மனைப் போன்றவர்கள் என்கிறேன்” என்று நீங்கள் சுட்டியிருப்பதால், நான் சொல்லவில்லை, என்னைப் போன்றவர்கள் சொன்னார்கள் என்று சொல்வீர்களோ தெரியாது; உண்மையில் நீங்கள் செய்வது நடத்தைப் படுகொலையும் அவதூறுமன்றி வேறொன்றுமில்லை.
ஓகஸ்ட் 30 ஆம் திகதியை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் (International Day of the Victims of Enforced Disappearances) என்ற 2010 ஆம் ஆண்டு முதல் ஐநா கடைப்பிடித்துவருகின்றது. சர்வதேச அளவில் 85 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இது கடைப்பிடிக்கப்படுகின்றது. இலங்கையில் இது குறித்த நிகழ்வுகள் நடந்தபோது நான் அதற்கு ஆதரவளித்தேன். அதனை “அருண்மொழிவர்மனைப் போன்றவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பதத்தின் மூலம் முள்ளிவாய்க்காலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மட்டும் அடையாளம் காட்ட முனைந்தார்கள்” என்று சொல்வது மிகமோசமான அவதூறு மட்டுமல்ல, வன்மமும் கூட.
அடுத்து, 48வது இலக்கியச்சந்திப்பு, அதுபற்றி எழுதவேண்டும் என்கிறீர்கள். எழுதுங்கள் ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் உங்கள் கேள்விகள் என்னவென்று சொன்னால்தானே பதிலோ விளக்கமோ சொல்லமுடியும்? நான் நம்பியிருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்கள், நான் நம்பியிருந்த கருத்துகள் ஏமாற்றிவிட்டன, அதனால் அருண்மொழிவர்மனுடன் உரையாடுகின்றேன் என்று சொல்லி நான் சொல்லாததை எல்லாம் சொல்லிக்கொண்டிருந்தால், அப்படிச் சொல்லவில்லை என்றால் நீங்கள் சொல்லவில்லை உங்களைப் போன்றவர்கள் சொன்னார்கள், எம் முன்னோர்கள் சொன்னார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தால், உங்களைக் கவலையுடன் விலகியிருந்து வேடிக்கை பார்க்கத்தான் முடியும். வேறென்ன செய்வது கற்சுறா?
கற்சுறாவின் பதில்கள் கீழே
தேரா மன்னாவின் பதிலின் முதல் பாகம்.
எனது நேரம் கருதி தினம் ஒரு பதிவாக எனது கருத்தினைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.
அருண்மொழி வர்மன் அவர்கள் ஆய்வற்ற கருத்து என்பதாக அடையாளமிட்டு தான் செப்புவதைக் கேட்கச் சொல்லும் பதிலிறுப்பினை நான் வாசித்தேன். இந்தப் பதிலையாவது அவர் முன்வைத்ததற்கு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
நானோ அவர் மீது எழுதும் முதற்தாக்கம் அல்ல இது. அவரது கருத்து நடைமுறைகளை நான் தொடர்ந்தும் செவி மடுப்பதனாலும் உற்று நோக்குவதனாலும் மட்டும் நான் கருத்திட முன்வரவில்லை.
நமது கடந்தகால அனுபவங்கள், அழிவுகள், அழிவுகளின் பின்னிருந்த கருத்தியல்கள், அவற்றிற்குச் சொல்லப்பட்ட விளக்கங்கள், அவற்றை உண்மை என நம்பவைக்கப்படச் செயற்பட்ட ஊடகங்கள், அந்த ஊடகங்களை நடத்தியவர்கள், அதற்காகவே உருவாக்கப்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமது பத்திரிகைகளில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு மடைமாற்றம் செய்து எழுத உருவாக்கப்பட ஆய்வாளர்கள், அவர்களையே சமூகத்தின் முன்னுதாரணமாகக் காட்டிநின்ற பத்திரிகைகள் என்று ஒரு சமூகத்தின் அழிவுக்கு வழிவகுத்து நின்ற பலரின் நினைவுகளை எனது யுத்தகால அனுபவம் கொண்டிருக்கிறது.
இன்னொரு தலைமுறையின் நீட்சி என்று நான் அருண்மொழிவர்மனைக் கருதுவதால்த்தான் அவர் மீது அதிக கவனம் கொள்கிறேன். அந்த நீட்சிக்கு நான் மேலே குறிப்பிட்டவர்களது வகிபாகம் அவரில் இருந்து விடக் கூடாது என்று நான் அதிகம் விரும்புகிறேன். அப்படியான அடையாளம் அவரில் ஒவ்வொருமுறையும் தெரியவரும்போது நான் உடனடியாகவே தெரியப்படுத்தியும் விடுகிறேன். அதனால்த்தான் அவரின் எழுத்துக்கள் மீது நான் அதிக கவனம் வைத்து உரையாட முனைகிறேன்.
பொதுவெளியில் இவ்வாறு எழுதுவது மட்டுமல்ல. உள்பெட்டியிலிலும் நேரடியாகவும் நான் அவருடன் அதிகம் முரண்பட்டுக் கொண்டுதானிருக்கிறேன். அவ்வாறு உரையாடும் ஒரு இடத்தில் என்னை நட்புமுரன் எனச் சொல்லும்போது. நட்பில் முரண் இருக்காது. நட்பு என்பது நட்புத்தான். இது கருத்து முரண் எனச் சொல்லியதாக ஞாபகம் உள்ளது. இப்போதும் சொல்கிறேன் அருண்மொழிவர்மன் அவர்கள் எனக்கு அதிகம் விருப்பம் உள்ளவர். நல்ல மனிதர். நண்பர். அவர் இந்த சமூகத்திற்காக என நினைத்து எழுதும் செயற்படும் இடங்கள் பல இளந்தலைமுறையினரை பிழையான வழிகாட்டலுக்குள் கொண்டு செல்லும் என நான் நினைக்கிறேன்.
உதாரணமாகக் கடந்த காலத்தில் அவர் அக்கறைப்பட்டு முன்நிறுத்திய “காணாமல் ஆக்கப்பட்டோர்” என்ற கருத்து நிலையை ஒரு இடத்தில் “ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்” என்ற நிலைக்குள் கொண்டு வந்து அடையாளம் காட்டினார்கள். ஈழப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து ஈழயுத்த காலம் தாண்டி இறுதி யுத்தகாலம் வரை காணாமல் ஆக்கப்பட்டவர்களது அடையாளம் மிக நீண்டது. இதற்குள் அருண்மொழிவர்மனைப் போன்றவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பதத்தின் மூலம் முள்ளிவாய்க்காலுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை மட்டும் அடையாளம் காட்ட முனைந்தார்கள்.( மிகக் கவனமாக இதனை வாசியுங்கள். அருண்மொழி வர்மனைப் போன்றவர்கள் என்கிறேன்) இதுகுறித்து எனது “DISCONNECT” என்ற கட்டுரைத்தொகுப்பின் இறுதிக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். அதனைக் கூட அருண்மொழிவர்மன் போன்றவர்களது செயற்பாட்டில் முரண்பட்டே எழுதியிருந்தேன். அதனை அவர் நன்கு விளங்கிக் கொள்வார்.
அதனையும் விட ரொரண்டோவில் நடைபெற்ற 48 இலக்கியச் சந்திப்பின் முதற் சந்திப்பு என்னுடைய வீட்டில் நடைபெற்றது. இறுதிச் சந்திப்பு அருண்மொழிவர்மன் வீட்டில் நடைபெற்றது. இதுபற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன். ஆனால் முதற் சந்திப்பில் நடந்த ஒரு உரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிப் பேச வேண்டும் என உரையாடப்பட்டது. நானும் நல்ல விடயம். அதனை நாம் பேச்த்தான் வேண்டும் என்றேன். அவர்கள் முள்ளிவாய்க்கால் மற்றும் இலங்கை இராணுவம் என்ற அடையாளத்திற்குள் நின்றார்கள். இல்லை புளொட் இயக்கத்திற்குச் சென்று திரும்பி வராதவர்களை எனக்குத் தெரியும். புலிகளின் துணுக்காய் வதைமுகாமிற்குக் கொண்டு செல்லப்பட்டுத் திரும்பிவராதவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று சொல்லி அனைத்தையும் பேசும் ஒரு அமர்வாக அதனைச் செய்யலாம் என்றேன். அதன் பிறகு அது பேசப்படவேயில்லை.( 48 வது இலக்கியச் சந்திப்புக் குறித்து நான் தனியாக எழுது வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அதனை இங்கேயே பதிவிடலாம். இந்தத் தொடர் முடிவதற்குள் அதனையும் பதிவு செய்வேன்.)
‘தேரா மன்னா! செப்புவது உடையேன்;
Leave a comment