நேற்று (பெப்ரவரி 8, 2025) இலண்டனில் பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டமும் தமிழ் மொழிச் செயற்பாட்டகமும் இணைந்து ஒருங்கிணைத்திருந்த “தமிழர் தலைவர் தந்தை பெரியார் மீது தொடர்ந்து வீசப்படும் அவதூறுகள்: விளக்கமும் உரையாடலும்” என்கிற நிகழ்வில் புகுந்து நிகழ்ச்சியைக் குழப்பும் நோக்குடன் செய்யப்பட்டது ரவுடியிசம். இது தன்னிச்சையாக நடந்தது அல்ல; தொடர்ச்சியாகச் செய்யப்பட்ட வெறுப்பூட்டும் பேச்சுகள், இனப்பெருமிதங்கள், சாகச வாதக் கதைகள், உருட்டல் திரித்தல் கதைகளினூடாக மூளைச் சலவை செய்யப்பட்ட ஒரு கூட்டத்தின் செயற்பாடு இப்படித்தான் அமையும். இந்தப் போக்குக்கு எதிராக ஜனநாயகத்துக்காகவும் சமூகநீதிக்காகவும் போராடுபவர்கள் ஒன்று சேரவேண்டும்.
இது குறித்த உரையாடலில் பெரியாரை தமிழர் தலைவர் என்று குறிப்பிட முடியாது, எமக்கு ஒரு தலைவர் தான் என்கிற குரலையும் கூட்டத்தைக் குழப்பியவர்களில் ஒருவர் சொல்வதைக் கேட்க முடிந்தது.
இதே தொனியில் ஷோபா சக்தியின் பதிவின் கீழும் //ஆயிரம் தான் இருந்தாலும் ‘தலைப்பு’ கண்டிக்கத்தக்கது. தமிழர் என்றால் அதில் ஈழத் தமிழர்களும் அடக்கம். எங்களுக்குத் தலைவர் ஒரே ஒருவர் தான். அது பெரியார் அல்ல.// என்று சாதனா சகாதேவன் பதிவிட்டிருக்கின்றார்.
இதில் எங்களுக்கு என்பது எவருக்கு? ஈழத்தமிழரின் தேசிய இன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட இயக்கங்களில் விடுதலைப் புலிகளால் கொன்றழிக்கப்பட்ட இயக்கங்களின் உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தோழர்களும் கூட “அவரைத்தான்” தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமா? புலிகளால் இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு தமது பூர்வீக நிலங்களை விட்டுத் துரத்தப்பட்ட முஸ்லிம்களும் “அவரைத்தான்” தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
கருத்துரிமைக்காகவும், அது சார்ந்த செயற்பாடுகளுக்காகவும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டவர்களும், பாதிக்கபட்டவர்களும், தமது பூர்வீக நிலங்களை விட்டுத் துரத்தப்பட்டவர்களும், தமது செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டவர்களும் கூட “அவரைத்தான்” தலைவராகத் ஏற்றுக்கொள்ளவேண்டுமா?
ஈழப்போரின் இறுதிக்காலத்தில் கட்டாய ஆட்சேர்ப்பினால் பலவந்தமாக ஆயுதம் திணிக்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும், அவர்களின் கொல்லப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்படும் நிலைக்குக் கொண்டு செல்லப்படவர்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் தோழர்கள் அனைவரும் கூட “அவரைத்தான்” தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
நண்பர்களே, தோழர்களே நாம் சிந்திக்கவேண்டிய விடயம் இது. தமிழர் தலைவர் என்று நீங்கள் ஒருவரை தீர்மாணித்துவிட்டு, அவரைத் தவிர வேறு எவரையும் தமிழர் தலைவர் என்று சொல்லக்கூடாது என்ற வன்முறை உணர்வுடன், பெரியாரை தமிழர் தலைவர் என்று விளிப்பது பிழையென்று வன்முறையைத் தேர்ந்தெடுத்தால், பெரியார் சொன்ன கூற்றைத்தான் பதிலாகச் சொல்லவேண்டும்.
“அப்படியெல்லாம் மனசு புண்படக் கூடாது”
Leave a comment