நான் ஒரு தமிழ் மாணவன்; அதுவே எனது அடையாளம் என்பதைத் தொடர்ந்து சொல்லிவரும் ஆர். பாலகிருஷ்ணன் இந்தியவியல், திராவிடவியல், தொல்லியல் போன்ற துறைகளில் ஆழங்கால்பட்ட அறிவுடைய ஆய்வறிஞரும் ஆவார். தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்ற இவர், ஐ.ஏ.எஸ். பரீட்சையை முழுமையாகத் தமிழ்மொழி மூலம் எழுதித் தேர்தவான ஒரே நபர் என்ற பெருமையையும் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-இல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் அவர்கள் ஓய்வின் பின் ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றும் வந்த அழைப்பை ஏற்று ஐந்து ஆண்டுகள் பணியாற்றியவர். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மைய த்தின் மதிப்புறு ஆலோசகர். பொறுப்புவாய்ந்த பல பதவிகளை வகித்தபோதும் சங்க இலக்கியம் மீதான தன் ஆய்வுமனப்பாங்கினாலும் இவரது தேடல்களின் பலனாகவும் ‘சிந்துச் சமவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’ என்பதை ஆய்வுரீதியாகக் கண்டடைந்தவர். ‘மக்களின் வரலாறே வரலாறு; மற்றதெல்லாம் வாய்க்கால் தகராறு’ என்பதை அழுத்தமாகச் சொல்லும் இவர் சங்க இலக்கியங்கள் சொல்லும் வாழ்வியலுடன் வரலாற்றையும் தொல்லியலையும் இடப்பெயர் ஆய்வையும் இணைத்துத் தன் ஆய்வுகளை முன்னெடுப்பவர். சங்க இலக்கியத்தை மக்களிடம் பரவலாக்கும் நோக்குடன் உரைகளையும் எழுத்துப்பணிகளையும் தொடர்ந்து செய்துவரும் சிந்துவெளி ஆய்வாளாரான இவர் சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் (2016), Journey of a Civilization: Indus to Vaigai (2019), ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை (தமிழ்ப் பதிப்பு) (2023) ஆகிய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியுள்ளார். சிந்துவெளி நாகரிகம் அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த ஆண்டு, 2023ஆம் ஆண்டுக்கான இயல்விருதினைப் பெற்றுக்கொள்ள கனடா வந்திருந்த ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுடன் தாய்வீடு இதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது.
? தமிழ் இலக்கியத்தை முதுகலை வரை கற்ற நீங்கள் பின்னாட்களில் தொல்லியல் சார்ந்து மிக ஆழமான ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு எவை அடிப்படையான காரணங்கள் என்று கூறமுடியுமா?
அடிப்படையில் ஆட்சிப் பணி போன்ற பல்வேறு பதவிகளில் இருந்தாலும் கூட தமிழ் மாணவன் என்பதுதான் எனது அடையாளம். நான் அப்படிச்சொல்வதுடன் அப்படியாகத்தான் வாழ்ந்துகொண்டுமிருக்கின்றேன். தொல்லியலில் நான் ஆய்வு செய்வேன் என்றோ அதில் ஈடுபாடுகொள்வேன் என்று கூட எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு நிறையக் கேள்விகள் இருக்கின்றன என்பது நன்றாகத் தெரியும் அந்தக் கேள்விகள் என்னை ஒரு தேடலை நோக்கி நகர்த்தின. சங்க இலக்கியமாணவனாக இருக்கும் பொழுது எனது மனதில் சங்க இலக்கியத்தில் வருகின்ற ஓர் அகநானூற்றுப் பாடலில் ஒட்டகம் எப்படி வந்தது? அது எப்படி எலும்பைத் தின்றது? எப்படி வணிகர்களின் சுமையைத் தாங்கியது? தென்னிந்தியாவில் தான் பாலைவனமில்லையே? ஒட்டகமும் இல்லையே? அப்போ சங்க இலக்கியம் ஒட்டகத்தை இங்கே எப்படிக் குறிப்பிடுகிறது? இப்படி எல்லாம் எனக்குக் கேள்விகள் வரும்.
நாங்கள் சங்க இலக்கியம், சங்க இலக்கியம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோமே; அது ஏன் சங்க இலக்கியம் என்றுசொல்லுகின்றோம்? ‘ச’ என்ற எழுத்தில் தமிழ்ச்சொல் தொடங்காதென்று தொல்காப்பியர் சொல்லி இருக்கின்றாரே? ‘சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே, அ ஐ ஒள எனும் மூன்றலங் கடையே’ என்று ஒரு தொல்காப்பிய சூத்திரத்தின்படி சங்கம், சமணம், சத்தியம் என்கின்ற இவையெல்லாம் தமிழ்ச் சொற்களாக இருக்க முடியாது. மேலும் நாங்கள் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று சொல்லும் பொழுது கபாடபுரம் என்று சொல்கிறார்களே, கபாடபுரம் என்ற சொல் தமிழ் போலத் தெரியவில்லையே? இப்படியாக நிறையக் கேள்விகள் எனக்குப் படிக்கும்போதே வரும். ஒரு மாணவனாக எனக்கு எழுந்த அந்தக் கேள்விகளுக்கான விடை எனக்கு வகுப்புகளில் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அந்தக் கேள்விகளை எவரும் பெரிதாக ஆதரிக்கவும் இல்லை. வெளியில் இருந்து பார்ப்பவர்கள் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்று நினைத்தார்கள். ஆனால் எனக்கோ அந்தக் கேள்விகள் மிக முக்கியமானவையாகப்பட்டன.
ஆனால், பின் நாட்களில் நான் தொல்லியல் ஆய்வுகள் செய்யப்போகிறேன் என்றோ, ஐ.ஏ.எஸ். ஆகி ஒடிசாவுக்கு போகப் போகின்றேன் என்றோ, அல்லது சிந்து வெளி என்று ஆராயத் தொடங்கி கோவை மாநாட்டில் கட்டுரை சமர்ப்பித்துப் பிறகு கீழடி வரை வந்து சேர்வேன் என்றோ நான் அப்பொழுது நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இப்பொழுது யோசித்துப்பார்க்கும்பொழுது இவற்றுக்கெல்லாம் தொடக்கம் எனக்குள் இருந்த கேள்விகளும் விடைகள் கிடைக்காத அந்த கேள்விகளுக்கு நான் விடை தேடத் தொடங்கியதும் தான் என்று நினைக்கின்றேன்.
? ஒடிசா மாநிலத்தின் கூடுமைத் தலைமைச் செயலாளர், வளர்ச்சி ஆணையாளர், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையகத்தின் பிரதித்(Deputy) தேர்தல் ஆணையாளர், ஒடிசா மாநில முதலமைச்சரின் தலைமை ஆலோசகர் உள்ளிட்ட பல முக்கியமான பதவிகளை வகித்தவர் நீங்கள். ‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்’ என்று பெருமையுடன் சொல்லுகின்ற உங்களின் இந்தப் பயணம் எவ்விதத்தில் ஆரம்பித்ததது?
பொதுவாகத் தமிழ்நாட்டுச் சூழலில் ஒருவர் தமிழ் இலக்கியம் கற்றுவிட்டு அதன் வழியில் தன்வாழ்க்கையைக் கொண்டு நடத்தப் போகிறேன் என்று சொன்னால் அவரது உறவினர்களிடம் இருந்தோ நண்பர்களிடமிருந்தோ ஆதரவு கிடைக்காது. எஞ்சினியர் அல்லது டாக்டருக்குப் படித்தால் முன்னேறி விடுவார்; வெளிநாட்டுக்குப் போய்விடுவார் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் பொழுது ஒருவர் தமிழ்படிக்கப் போகிறேன் என்று சொன்னால் அவரது எதிர்காலம் என்னவாகும் என்று பயம் அவர்களுக்கு ஏற்படும்.
‘ஆனால் பிடித்ததை விடாதீர்கள், பிடிக்காததைத் தொடாதீர்கள்’ என்பதே வாழ்க்கை குறித்த எனது அணுகுமுறையாக இருந்தது. தமிழில் தான் நான் முதல் மாணவனாக இருப்பேன் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் நான் தமிழைத் தேர்ந்தெடுத்தேன். தமிழ் படித்தால் வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும் என்று சிலர் சொன்னார்கள். ஆனால் எனக்கு அது சிரமமாக இருக்கவில்லை, எனது எம்.ஏ. பரீட்சை முடிவுகள் வெளிவருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே நான் தினமணி பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். நான் எழுதிய ஒரே ஒரு தேர்வு ஐ.ஏ.எஸ். தேர்வு தான். இந்தியாவில் இதைத் தவிர வேறு எந்தத் தேர்வு எழுதுவதற்கும் நான் விண்ணப்பங்கூட போட்டது கிடையாது.
எனது நண்பர்கள் வெவ்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பித்தபோதும் நான் விண்ணப்பிக்கவில்லை. ‘அப்படி விண்ணப்பித்து சிலவேளை எனக்கு ஏதோ ஒருவேலை கிடைத்து விட்டால்…’ என்ற பயம் எனக்கு இருந்தது. நான் வெற்றி பெற விரும்பிய ஒரே தேர்வாக ஐ.ஏ.எஸ். தேர்வே இருந்தது. அதனால் அதற்கு மட்டும் நான் பரீட்சை எழுதினேன். அந்தப் பரீட்சையில் நான் முதல் தடவையிலேயே வெற்றியும் பெற்றேன்.
முதலில் நான் ஒடிசாவில் சப் கலெக்டராகப் பணிபுரியச் சென்றேன். நான் போன இடம் ஒடிசாவில் மிகவும் சவால் நிறைந்த பிரதேசமாகவும் இருப்பதிலேயே பெரிய மாவட்டமாகவும் இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஒரு புயல் ஏற்படும் பொழுது அங்கு முன்னணிக் களவீரர்களில் ஒருவராகவும் நான் செல்லவேண்டி இருந்தது. இப்படியாக புயல், வெள்ளம் என்று சவால்கள் ஏற்படும் பொழுதும் தேர்தல் போன்ற நெருக்கடியான காலகட்டங்களின் பொழுதும் நிதித்துறையில் சில சிக்கல்கள் ஏற்பட்டபோது அதைச் சமாளிக்கும் பொருட்டும் வெவ்வேறு பதவிகளும் பொறுப்புகளும் 2018-இல் நான் ஓய்வு வரும் வரை என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. 2018-இல் நான் ஓய்வு பெற்ற பின்னர் முழுநேர ஆராய்ச்சிகளில் இறங்குவோம் என்று நினைத்தபோதும்கூட ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராக இருக்க வேண்டும் என்கின்ற வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு நான் மீண்டும் ஒடிசாவுக்கே சென்று விட்டேன்.
ஆனால், இப்பொழுது திரும்பிப் பார்க்கும்பொழுது, நான் பணியாற்றிய ஒவ்வொரு வேலையிலும் அதன் புதிய எல்லைகளைத் தொட்டிருக்கின்றேன் என்பது திருப்தியாக இருக்கின்றது. 25 – 30 வருடங்களானபோதும் கூட அந்தத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவராக எனது காலம் இருக்கின்றது என்று பலர் நினைவுகூரும்போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. நான் வேலை செய்த துறைகளிலும் மாவட்டங்களிலும் சிறந்த புதிய விடயங்களை நான் செய்ததாக பலர் கூறுவார்கள்.
இடர் மேலாண்மை போன்ற பயிற்சிகளையும் மேற்பட்டங்களையும் பெறுவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. இவற்றை நான் அரசநிதி உதவியுடன் செய்திருக்கலாம், ஆனால், அப்படிச் செய்தால் அவையெல்லாம் நான் பெற்றுக்கொண்ட இந்த நிதி நிர்வாகம், இடர் மேலாண்மை போன்ற கல்விப் பின்புலத்தால்தான் என்னால் செய்யக் கூடியதாக இருந்தது என்று சொல்வார்கள். ஆனால் நான் அதை விரும்பவில்லை. ஒரு தமிழ் மாணவனாகிய நான், ஒரு தமிழ் மாணவனாகத்தான் இவற்றையெல்லாம் செய்தேன் என்று நிரூபிக்க விரும்பினேன். ஹார்வர்டில் படித்தவர், ஒக்ஸ்போர்டில் படித்தவர் என்று சொல்லி அதுவே முன்னிலைப்படுத்தப்படுவதை விட 40 ஆண்டு காலமாக ஐ.ஏ.எஸ். ஆகச் சிறப்பாகப் பணிபுரிந்த, தொல்லியல் ஆய்வுகளைச் செய்த இவர், தமிழ் எம்.ஏ. என்பதையே தனது தகுதியாகக் கொண்ட தமிழ் மாணவர் என்பதுவே எனது அடையாளமாக இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஒரு தமிழ் மாணவனால் இவையெல்லாம் முடியாது என்று கிடையாது, அதனை நிரூபிக்கும்படியாக எனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன்
? இந்தியக் குடிமைப் பணித் தேர்வினைத் தமிழில் எழுதிச் சித்தியடைந்த ஒரேயொருவர் என்பது உங்களது இன்னொரு தனித்துவமான அடையாளம். அந்த விதத்தில், தாய்மொழிக்கல்வியின் முக்கியத்துவத்தைச் சொல்ல மிகவும் தகுதியான ஒருவர் நீங்கள். அது பற்றி சிறிது சொல்லுங்கள்?
தாய்மொழிக் கல்விக்கொள்கைக்கு ஆதரவான குரல் எங்கு ஒலித்தாலும் அத்துடன் சேர்ந்து ஒலிக்கும் குரல்களில் எனது குரலும் ஒன்றாக நிச்சயம் இருக்கும். எனது தாயை நான் நேசிப்பதன் அர்த்தம் இன்னொரு தாயை வெறுப்பது அல்ல என்பதை எனது வாழ்க்கையின் கொள்கைகளில் ஒன்றாக வைத்துள்ளேன். அந்தந்தப் பகுதிகளில் வாழ்பவர்களின் வாழ்க்கையை அந்தந்தத் தாய்மொழியில் தான் சரியாக எடுத்துரைக்கமுடியும். அதிகம் பனி உள்ள பிரதேசங்களில்தான் பனிக்கான பல சொற்கள் இருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
மேலும், தகவல் தொழினுட்பத்தில் சிறந்து விளங்குகின்ற நாடுகளான ஜப்பான், ஜேர்மனி, கொரியா போன்ற நாடுகளில் அவர்களது தாய்மொழியில்தான் அறிவியலை வளர்க்கின்றார்கள். அவர்களுக்கு மேலதிகமாக ஓர் இணைப்புமொழி தேவைப்படுகின்றது. அந்த விதத்தில் ஆங்கிலம் தவிர்க்க முடியாத ஓர் இணைப்புமொழியாக இருக்கின்றது. அவ்விதமே தமிழைத் தாய்மொழியாகவும் ஆங்கிலத்தை இணைப்புமொழியாகவும் கொண்ட என்னால் உலகில் எங்கு போயும் வேலை பார்க்கமுடியும்.
உதாரணத்துக்கு, என்னை ஒடிசாவில் பணிக்கமர்த்தினார்கள். இப்போது என்னால் ஒரிய மொழியைப் பேசவும் எழுதவும் வாசிக்கவும் முடியும். நான் ஒடிசாவைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அவை ஒரிய மொழிக்கு மொழிபெயர்க்கவும் பட்டிருக்கின்றன. கடைசியாக 2024 பெப்ரவரியில் நடந்த சர்வதேச ஒரியா செம்மொழி மாநாட்டினை நான்தான் முழுமையாகப் பொறுப்பேற்று நடத்தினேன். தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான் கட்டுரை வாசித்தேன். தமிழைச் செம்மொழியாக்கவேண்டும் என்கின்ற அமைச்சரவைக் குறிப்பேட்டுக்கான வரைபாணையை என்னை எழுதும்படி அமைச்சர் தயாநிதி மாறன் கேட்டிருந்தார். நானும் அதை எழுதிக்கொடுத்திருந்தேன். எனவே நான் தமிழைச் செம்மொழி ஆக்குவதற்கும் ஒரு பங்கைச் செய்திருக்கின்றேன். அதுபோல நான் வேலைசெய்யப்போன இடத்தில் அந்த இடத்து மக்களின் தாய் மொழியான ஒரிய மொழியைச் செம்மொழியாக்குவதற்கும் பங்களித்திருக்கின்றேன். இந்த மொழி பெரிது சிறிதென்று இல்லை. ஒவ்வொருவரும் தமது தாய் மொழியில் கல்வி கற்கும்போது அவர்களது அறிவு கூர்மையாகும் என்பதுடன் அவர்களது பங்களிப்பும் அதிகமாகும் என்று நான் நம்புகின்றேன்.
ஓர் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் கேட்கும்பொழுது அதனை மனனம் செய்யத்தான் முடிகின்றதே தவிர அது என்ன சொல்லி இருக்கின்றது என்பதனை முழுமையாக உணர்ந்து பகுத்தாய்ந்து சிந்திப்பதற்குத் தாய்மொழியில் கற்காதபொழுது தடையாக இருக்கின்றது. ஆட்சிப்பணியர் பதவிகளைப் பொருத்தவரை அவை நீதியரசர்களின் பிள்ளைகளுக்கோ அல்லது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிள்ளைகளுக்கோ கிடைக்கக்கூடிய பதவி என்பது போலத்தான் இருந்தது. ஆனால் சாதாரணமானவர்களும் இந்த பதவிகளைச் சென்றடையலாம் என்பது கல்வியில் பரவலாக்கம் நடந்த பின்னர் தான் சாத்தியமானது. 1950-களில் யார் ஐ.ஏ.எஸ். ஆக வந்தார்கள், 1960-களில், 1970-களில், 1980-களில் யார் ஐ.ஏ.எஸ். ஆக வந்தார்கள்? என்று பார்த்தாலே இந்த மாற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ளமுடியும். ஒருவர் ஐ.ஏ.எஸ். பரீட்சையின் அனைத்துத் தாள்களையும் அவர்களது தாய்மொழியிலேயே எழுதலாம் என்பது 1979-இல் தான் நடைமுறைக்கு வருகின்றது. ‘1979 முதல் 1984 வரை யாரும் இந்த பரீட்சையை எழுதினார்களா?’ என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் எழுதி எவரும் வெற்றிபெறவில்லை என்று தெரியும். சிலர் ஒரு தாளை மட்டும் தமிழில் எழுதினார்கள். ஆனால் நான் தான் பி.ஏ. தமிழ், எம்.ஏ. தமிழ் படித்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான அனைத்துத் தாள்களையும் தமிழில் எழுதி வெற்றிபெற்ற முதலாவது நபர். இது 1984-இல் நடைபெற்றது.
இப்படியாக, தமிழ் இலக்கியம் படித்தவர்கள்நிறையப்பேர் ஐ.ஏ.எஸ். பரீட்சையை தமிழில் எழுத முன்வரவேண்டும், தேர்வாகவேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு சில தாள்களை மட்டும் எழுதி இருக்கிறார்களே தவிர வேறு யாரும் முழுமையாக ஐ.ஏ.எஸ். பரீட்சையைத் தமிழில் எழுதவில்லை. தமிழ் இலக்கியம் படித்தவர்கள் யாருக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நான் இங்கே மீண்டும் ஒருமுறை அழுத்திச்சொல்கின்றேன். நான் ஐ.ஏ.எஸ். பரீட்சையைத் தமிழில் எழுதிச் சித்தி அடைந்தவுடன் அப்போதைய பத்திரிகைகளில் எல்லாம் இது ஒரு செய்தியாக வந்தது. அப்போதைய தமிழக முதல்வரைச் சந்தித்து ஆசி பெறுமாறும் அவர் மூலம் வேலைக்கான பரிந்துரை கிடைக்கும் என்றும் சிலர் ஆலோசனை கூறினார்கள். உண்மையில் அப்போதைய தமிழக முதல்வரிடம் இருந்து எனக்கு அழைப்புக் கூட வந்தது. நான் பரீட்சையைத் தமிழில் எழுதிச் சித்தியடைந்ததால் தமிழ்நாட்டில் நான் பணியாற்றுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்றும் பலர் ஆலோசனை கூறினார்கள். ஆனால் அதனை நான் ஒரு குறையாக நினைத்தேன். எனக்கு எங்கு இடம் ஒதுக்கப்படுகிறதோ அந்த இடத்திலேயே நான் சென்று பணியாற்றலாம். தமிழில் நான் பரீட்சை எழுதி சித்தி அடைந்தது எந்த விதத்திலும் எனக்கு ஒரு தடையாக இருக்காது என்று நான் முழுமையாக நம்பினேன். அப்படியே ஒடிசாவில் எனக்காக பணியை ஒதுக்கினார்கள். நானும் அங்கு சென்றே எனது பணியை ஆரம்பித்தேன்.
? இன்று ஓர் ஆய்வாளராக மிகப்பரவலாக அறியப்பட்டுள்ள உங்களது முதலிரண்டு நூல்களும் கவிதைத் தொகுப்புகள். ஆரம்பகாலத்தில் புனைவிலக்கியத்தில் தான் நாட்டம் அதிகம் இருந்ததா? சிறுவயதில் வாசிப்புப் பழக்கம் இருந்ததா? எவற்றையெல்லாம் விரும்பி வாசித்தீர்கள்?
என்னுடைய பல பேச்சுகள் யூடியூப் காணொளிகளாக இருக்கின்றன. அவற்றில் நான் ஒரு தமிழ் மாணவன் என்று எப்படிச் சொல்கிறேனோ, அது போலவே அடிப்படையில் நான் ஒரு கவிஞன் என்பதையும் அடிக்கடி சொல்லி இருக்கின்றேன். நான் அடிப்படையிலேயே எழுதுபவன், பேசுபவன். மதுரையில் இருந்த பொழுது கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றேன். எனவே கவிதை எனக்குள் இருந்தது என்றே சொல்லவேண்டும். எனக்கு அப்போது மரபுக்கவிதைகளில் நல்ல பயிற்சி இருந்தது. அறுசீர்விருத்தம், எண்சீர்விருத்தம் போன்ற வடிவங்களில் எல்லாம் எனக்கு நல்ல லாவகம் இருந்தது. எண்சீர்விருத்தம் எனக்குப் பிடித்தமான வடிவமாகவும் இருந்தது. ஆனால் இதற்குப் பிறகு நான் புதுக்கவிதைகளும் எழுதியிருக்கின்றேன். நீங்கள் சொன்னது போல 1991-இல், ‘அன்புள்ள அம்மாவுக்கு’ என்கின்ற எனது கவிதைத் தொகுதி நர்மதா பதிப்பக வெளியீடாக வந்தது. அப்பொழுது நான் ஒடிசாவில் இருந்தேன். அதற்குப் பிறகு 2012 வரை நான் எழுதவே இல்லை. கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் நான் எழுதாமல் இருந்தேன். அவ்வாறு எழுதாமல் இருக்கின்றேன் என்பதை நான் வெளியே பெருமையாக சொல்லியிருக்கின்றேன். ஏனென்றால் எனக்கு அப்பொழுது செயற்படுவதில் கூடுதல் ஆர்வம் இருந்தது. அப்பொழுது பணி நிமித்தம் நிறையப் பிரச்சினைகளை எதிர் கொண்டிருந்தேன். மண்ணெய் ஊழல் நடந்திருக்கும். சில நிர்வாகச் சிக்கல்கள் நடந்திருக்கும். இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் எனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அடித்தட்டு மக்களின் உரிமைக்காக போராடுகின்ற ஒருவனாக, தாடியெல்லாம் வைத்துக்கொண்டு ‘கோபக்காரனாக’ இருந்தேன். எழுதுவதாலோ, கவியரங்களில் கலந்துகொள்வதாலோ எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது. மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளும் அதிகாரமும் எனது கையிலே இருக்கின்ற பொழுது அதனை நான் செயல்படுத்துவது தான் சரியானதாக இருக்கும் என நம்பினேன். எனவே நான் ‘செயற்படுவதே ஒரு கவிதை’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.
இதற்குப் பிறகு நிறைய நண்பர்கள் ஊக்குவித்து என்னைக் கூட்டங்களில் பேசக்கூப்பிட்டார்கள். அப்பொழுது எனது அனுபவங்களை, ‘சிறகுக்குள் வானம்’ என்று எழுதினேன். அதில் ஒவ்வொரு பகுதியையும் நிறைவு செய்யும் பொழுது ஒரு கவிதையை எழுதி நிறைவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தேன். எனவே, அடிப்படையில் ஒரு படைப்பாளர் என்று என்னைச் சொல்கின்ற உங்களது அனுமானம் சரியானதுதான். உண்மையில் நான் இப்பொழுது கூட கவிதைகள் எழுதிக் கொண்டு தான் இருக்கின்றேன். சென்ற ஆண்டு ‘இப்படி ஒரு தீயா!’என்கின்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டேன். அவை குறள் தழுவிய காதல் கவிதைகளாக இருந்தன. அதற்கு முன்னர் ‘பன்மாயக் கள்வன்’ என்கின்ற கவிதைத் தொகுப்பு ஒன்றும் வெளியிட்டேன். அவையும் திருக்குறளின் இன்பத்துப்பாலை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்திருந்தன. இதன் பின்னர், ‘நாட்டுக்குறள்’ என்ற பெயரில் ஏழுபாடல்களைக் கொண்ட ஒலிப்பேழையும் டிராட்ஸ்கி மருதுவின் ஓவியங்கள் நிறைந்த ஒரு புத்தகமும் வெளியிட்டேன். இந்த மூன்று புத்தகங்களையும் நான் திருக்குறளைஅடிப்படையாக வைத்து எழுதுவதற்கு காரணம் நான் ஒரு எழுத்தாளன் என்றோ கவிஞன் என்றோ நிரூபிப்பதற்காக அல்ல. அவை திருவள்ளுவரின் வேட்டி வெள்ளை நிறமானது தான் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக நான் எழுதியவை. திருவள்ளுவரின் வேட்டியின் வண்ணத்தை ஒருவரும் மாற்றிவிடக்கூடாது; அவருக்கு வேறு சாயம் பூசி விடக்கூடாது என்கின்ற எனது பண்பாட்டு அரசியலை நான் அங்கு முன்னெடுத்தேன். எனது படைப்பு எப்பொழுதும் நோக்கம் கருதியே அமைவது. நான் படைப்பு படைப்புக்காக என்ற அரசியல் பேசுபவன் அல்லன். எனது படைப்புகள் எப்பொழுதும் மக்களுக்கானவை. திருவள்ளுவரை பிறர் தமது அரசியலுக்குப் பயன்படுத்தும் நோக்குடன் அவரது வண்ணத்தை மாற்ற முற்பட்டபோது அதற்கான எதிர்வினையை நான் பதிவு செய்தேன். அந்த எதிர்வினையைப் பதிவு செய்வதற்கு எனது கவிதை பயன்பட்டது.
நீங்கள் கேட்டது போல நான் சிறுவயதில் நிறைய வாசிப்பேன். அப்பொழுது புதுமைப்பித்தன் எனக்கு மிகப் பிடித்தவராக இருந்தார். அதுபோல ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், பிரபஞ்சன் ஆகியோரின் எழுத்துகளை மிகுந்த நேசத்துடன் நாங்கள் வாசித்திருக்கின்றோம். எனது வயதொத்தவர்களுக்குப் பிடித்த கவிஞர்களாக, மு. மேத்தா, அப்துல் ரகுமான், மீரா போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் நான் தமிழ்நாட்டுக்கு வெளியே நீண்டகாலம் இருந்தபடியால் எனக்குப் பலருடன் தொடர்புகள் இல்லாமலே இருந்தது. இந்தக் காலப்பகுதியில் புதிதாக எழுதவந்தவர்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு அப்பொழுது கிடைக்கவில்லை. பணியும் அழுத்தம் நிறைந்ததாக இருந்தது. அதுபோலவே சிந்துவெளி பற்றிய ஆராய்ச்சியும் மிகுந்த நேரத்தைச் செலுத்த வேண்டியதாக இருந்தது. எனவே இந்தக் காலப்பகுதியில் எனது பணி, சிந்துவெளி பற்றிய ஆய்வுகள், சங்க இலக்கியம் என்றே நான் பெரிதும் வாழ்ந்துவிட்டேன். நண்பர்களில் நிறையப்பேர் நான் சங்க இலக்கியத்திலேயே வாழ்வதாகச் சொல்லுவார்கள். இதனால் எனது சமகால இலக்கிய வாசிப்பும் பரிச்சயமும் குறைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் உண்மையில் அதற்காக நான் பெரிதாக வருந்துவதும் கிடையாது. எனது எழுத்துகளில், ‘கவிதைக்கான தோரணம் இருக்கின்றதா?’ ‘எழுத்துக்கான தோரணம் இருக்கின்றதா?’ என்பது பற்றியெல்லாம் நான் அதிகமாக யோசிப்பது கிடையாது. எனது எழுத்துகளும் செயற்பாடுகளும் காரணம் கருதியவை. எனவே அந்த நோக்கத்துடன் தொடர்பில்லாத எதையும் நான் செய்வதில்லை. அதற்கான நேரமும் எனக்கு இல்லை.
? முதுகலை தமிழ், இதழியல் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்கள் நீங்கள். உங்களிடம் இருக்கின்ற ஆய்வுரீதியான பார்வைக்கு உங்கள் சிறுவயது வீட்டுச் சூழல், கல்விச் சூழல், வாசிப்புப் பழக்கம் போன்றவை காரணங்களாக இருந்தனவா? எவ்வாறு இருந்தன?
நிச்சயமாக அது காரணமாக இருந்தது. ‘நான் என்ன படித்தேன்?’ என்பது காரணம். ‘அதை நான் எங்கே படித்தேன்?’ என்பது காரணம். ‘அதை எப்படிப் படித்தேன்?’ என்பது காரணம். நான் சங்க இலக்கியம் படித்தது 1970-களில். ‘2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்க்கை எப்படி இருந்தது?’ என்பதனைப் பற்றி யோசித்துப் பார்க்கக் கூடிய வாய்ப்பை அந்தத் தமிழ் இலக்கியம் எனக்குத் தந்தது. அப்பொழுது நான் சங்க இலக்கிய மாணவனாக இருந்தேன்; ஆனால் சமகாலத்தில் இருந்தேன். இது தமிழ் இலக்கியம் படித்ததால் தான் எனக்குக் கிடைத்தது. மற்றைய துறைகளில் கல்வி கற்றவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்திருக்காது.
அடுத்து நான் எங்கு படித்தேன் என்பது முக்கியம். நான் மதுரை காமராஜர் கல்லூரியில் படித்தேன். மதுரை, கலை இலக்கியத்தில் எப்பொழுதும் ஒரு முக்கியமான பங்களிப்பைத் தந்த இடமாக இருந்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் நான் அப்பொழுது பொதுவாழ்க்கையிலும் இருந்தேன். நெருக்கடி நிலைக்கு முன்னரே பெருந்தலைவர் காமராஜரின் ஒரு தொண்டனாகவும் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவனாகவும் நான் இருந்தேன். பழ.நெடுமாறன் அப்பொழுது எனக்கு மிக நெருக்கமானவராக இருந்தார். நான் அவரை, ‘அண்ணன்’ என்றும், அவர் என்னை, தம்பி’ என்றுந்தான் அழைப்போம். இப்பொழுது எனது, ‘Journey of a Civilization: Indus to Vaigai’ என்கின்ற புத்தகத்தைப் பற்றிக் கூட 167 பக்கங்களில், ‘சிந்து நாகரிகமும் பழந்தமிழர் நாகரிகமும்’ என்கிற ஓர் ஆய்வுநூலை அவர் எழுதி இருக்கின்றார்.

நான் ஒரு செயற்பாட்டாளன். என்னைச் சுற்றி நடக்கின்ற ஒவ்வொரு விடயத்திலும் நான் ஏதோ ஒரு நிலைப்பாடு எடுத்திருக்கின்றேன். இவை எல்லாம் சேர்ந்துதான் எனக்கு ஒரு தேடலைக் கொடுக்கின்றன. எனவே எனது வாசிப்புப்பழக்கம், நான் என்ன படித்தேன்?, நான் எங்கு படித்தேன்?, நான் வாழ்ந்த சூழல், எனக்கு ஏற்பட்ட போராட்டங்கள் போன்றன எல்லாம் சேர்ந்து எனக்கு ஒரு தேடலை கொடுத்தன.
நான் தமிழ் இளங்கலை படிக்கும் பொழுது பல்கலைக்கழகத்தின் முதல் மாணவனாக வந்து அதற்காகத் தங்கப்பதக்கம் கூட வாங்கினேன். அதுபோல நான் முதுகலையிலும் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவனாக வந்து தங்கப்பதக்கம் வாங்கினேன். வழமையாக இப்படியாகத் தங்கப்பதக்கம் வாங்குகின்றமாணவர்கள் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியைச் செய்வார்கள். ஆனால் நான் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கு போகவில்லை. எனது முதுகலைப் படிப்பை முடித்த பின்னர் நான் 240 ரூபாய் சம்பளத்திற்கு தினமணி பத்திரிகையில் உதவி ஆசிரியர் பணியில் இணைகிறேன். எனது தேடல் தான் இதற்குக் காரணமாக இருந்தது. எனது தேடுதலுக்கான விடைகளை இப்படியான பணிகளின் ஊடாகத்தான் பெற்றுக் கொள்ளலாம் என்று நான் நம்பினேன். உண்மையைச் சொல்வதென்றால் அப்பொழுது எனது கேள்வி என்ன என்பது கூட எனக்கு முழுமையாகத் தெரியவில்லை. ஓர் ஆராய்ச்சி செய்வது என்றால் அதற்கு அடிப்படையான ஒரு கேள்வி தேவை. பொதுவாக ஆராய்ச்சி செய்வதற்கு வழிகாட்டுபவர்கள் இது இலகுவான தலையங்கம், இதில் ஆராய்ச்சியைச் செய்யலாம் என்று ஒரு தலையங்கத்தை ஆராய்ச்சி மாணவர்களுக்குக் கொடுப்பார்கள். எனக்கு அப்படி இலகுவான தலையங்கங்களில் ஆராய்ச்சி செய்வதில் விருப்பம் இருக்கவில்லை. எனது தேடல் எதுவோ அது குறித்ததாக ஆராய்ச்சி இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன்.
எனவே, எனது வாழ்நாள் முழுக்க என்னைத் துரத்திக் கொண்டிருக்கக் கூடிய அந்தக் கேள்வியை முழுமையடையச் செய்வதற்கு முதல் எனது ஆராய்ச்சியைத் தொடங்குவது முறையல்ல என்று நான் உணர்ந்தேன். நான் உதவி ஆசிரியராகத் தினமணியில் பணியாற்றச் சென்றமைக்கும் இதுவே தூண்டலாக அமைந்தது. ஆனால் நான் பின்னாளில் ஐ.ஏ.எஸ். ஆவதற்கு இந்த இதழியல் சார்ந்த பணி தான் எனக்கு உதவியது. நான் அங்கு இருக்கின்றபொழுது எனது பணி PTI, UNI போன்ற செய்தி நிறுவனங்களில் இருந்து ஆங்கிலத்தில் வருகின்ற மூலச் செய்திகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தமிழில் தலைப்பிடுவது. இந்தப்பணி காரணமாக எனக்கு உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. இந்தக் காலப்பகுதியில் ஆர்ஜென்டினாவிற்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஃபோக்லாண்ட் போர் நடைபெற்றது. இலங்கையில் வெலிக்கடைப் படுகொலைகள், மட்டக்களப்புச் சிறையுடைப்பு போன்ற சம்பவங்களும் பஞ்சாப் கலவரங்கள் போன்றனவும் இந்தக் காலப்பகுதியில்தான் நடக்கின்றன. இப்படியான பல செய்திகளை ஆங்கிலத்தில் படித்து உடனடியாக அதைத் தமிழில் எழுதி அதனை அச்சுக்கனுப்புவது என்பதன் மூலம் எனக்குக்கிடைத்த பயிற்சி எனது ஐ.ஏ.எஸ். பரீட்சையை நான் தமிழில் எழுதுவதற்கு உதவியது. ஐ.ஏ.எஸ். பயிற்சிக்காக பல ஆங்கில நூல்களைத்தான் நான் படிக்க வேண்டியிருந்தது. இவ்வாறு ஆங்கில நூல்களில் நான் கற்றுக்கொண்ட விடயங்களை பரீட்சையில் தமிழில் விரைவாகவும் தெளிவாகவும் எழுதுவதற்கு எனக்கு இந்தப் பயிற்சி உதவியது.
ஒரு விதத்தில் பார்த்தால் நான் இந்த உதவி ஆசிரியர் பணிக்குப் போகாமல் முனைவர் பட்டஆராய்ச்சிக்குப் போயிருந்தால் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகியிருக்க மாட்டேன்; ஒடிசாவுக்குப் போயிருக்க மாட்டேன்; ஒடிசாவுக்குப் போயிருக்காவிட்டால் நான் இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கமாட்டேன; இந்த ஆராய்ச்சிகளில் நான் ஈடுபட்டிருக்காவிட்டால் இன்று நானும் நீங்களும் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்.
எனது அப்போதைய அணுகுமுறை.
‘நாளை விடிந்ததும் பேசலாம் நாளையோடு,
இப்போது
பாடத்தோன்றினால் பாடு’
என்கிற எனது கவிதையைப் போல் இருந்தது. காற்றில் பட்டம் பறப்பது போல் வாழ்க்கை இலகுவாக அமையவேண்டும் என்று நினைப்பேன். பல எழுத்தாளர்கள் தாங்கள் ஒரு சிலுவையைச் சுமந்து கொண்டிருப்பது போல பேசுவார்கள். தாங்கள் எழுதாவிட்டால் அந்த மொழியோ இலக்கியமோ செத்துவிடும் என்பது போல் அவர்கள் செயற்படுவார்கள். எனக்கு அப்படியான நினைப்பு எதுவும் கிடையாது. நான் மிக மிக இலகுவானவன். நான் துரத்துகின்ற கேள்வி என்னை விடப் பெரிதாக இருக்கவேண்டும். என்னை விடப் பெரிய கேள்விகளைத்தான் நான் துரத்த வேண்டும் என்றும் என்னை விடப் பெரிய விடயங்களின் பின்னர் தான் நான் செல்லவேண்டும் என்றும் நான் எப்பொழுதும் விரும்புவேன். இப்படியான சூழல் எனக்கு அமைந்தும் விட்டது. அதற்குப்பிறகு முனைவர் பட்டமே நான் வாங்கியது இல்லை. எனக்கு மதிப்புறு முனைவர் பட்டம் தருவதற்காகச் சில பல்கலைக்கழகங்களிலிருந்து அணுகினார்கள், ஆனால் நான் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டேன். இறுதியில் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் அணுகியபோது அதைத் தருவது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் என்பதனால் மாத்திரம் அந்தப் பட்டத்தை நான் பெற்றுக்கொண்டேன்.
? உங்களுடைய நூல்களையும் உரைகளையும் அறிந்தவர்கள் உங்களுக்கிருக்கின்ற பழந்தமிழ் இலக்கியப் பரிச்சயத்தையும் அதனை விஞ்ஞானரீதியிலான ஆய்வுநோக்கில் பார்க்கின்ற பார்வையையும் அறிந்திருப்பார்கள். இன்றைய தலைமுறையினருள் பலரிடமும், ‘இலக்கியம், வரலாறு போன்றவற்றின் பயன் என்ன?’ என்கிற கேள்வியும் விளக்கமின்மையும் இருப்பதை அவதானிக்கமுடிகின்றது. வரலாற்றுணர்வு, இலக்கியப்பரிச்சயம், பண்பாட்டு வரலாறு பற்றிய அறிதல் போன்றன ஆளுமை விருத்திக்கும் சமூகத்தின் பண்பாட்டு விடுதலைக்கும் எவ்விதம் பங்களிக்கும் என்று கருதுகின்றீர்கள்?
இது ஒரு மிக முக்கியமான கேள்வி. இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டது எனக்கு மிகமகிழ்ச்சி. இந்தக் கேள்வியை முன்வைத்துத்தான் நான் தொடர்ந்து இளம் சமூகத்திடம் உரையாடிக்கொண்டிருக்கின்றேன். நாம் நிகழ்காலத்தில் வாழ்கிறோம். நான் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து ஓரிடத்தில் இருந்து ஓர் எதிர்காலத்தை மனதில் வைத்து பேசிக்கொண்டிருக்கின்றோம். நாம் இதை இளையதலைமுறையை மனதில் வைத்துத்தான் பேசுகிறோம். இதைப் பேசிக்கொண்டிருக்கும் எம்மை விட ஓர் இளைய தலைமுறை மீதிருக்கும் அக்கறையிலும் நம்பிக்கையிலும் நாம் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்துக்காகப் பேசுகின்றோம். இப்படியாக நாம் நிகழ்காலத்திலிருந்துகொண்டு எதிர்காலத்தைப் பற்றி பேசும்பொழுது அங்கு தவிர்க்க முடியாமல் இருக்கின்ற ஒருவிடயம் கடந்தகாலம் என்பது. கடந்தகாலத்தைப் பற்றி திரும்பிப் பார்க்காத எந்தச் சமூகமும் தனது நிகழ்காலத்தைச் சரியாகக் கட்டமைத்து எதிர்காலத்தை நோக்கிச் சரியாகப் பயணிக்க முடியாது. அதற்குக் காரணம், நம்மைக் கடந்து போவது கடந்த காலம்தான். நிகழ்காலம் என்று எதுவுமில்லை, எதிர்காலம் என்றும் எதுவும் இல்லை, கடந்தகாலம் தான் நம்மைக் கடந்து செல்கிறது என்று நான் ஓரிடத்தில் குறிப்பிட்டு இருப்பேன்.
இப்பொழுது கொரோனாக் காலத்தில் நான் சங்க இலக்கியத்தை மீள்வாசிப்புச் செய்தேன். அந்த மீள் வாசிப்பை வைத்துக்கொண்டு நான் எழுதியவை, ‘சங்கச் சுரங்கம்’ என்ற தலைப்பில், ‘கடவுள் ஆயினும் ஆக’, ‘அணிநடை எருமை’, ‘ஓர் ஏர் உழவன்’ ஆகிய மூன்று புத்தகங்கள். ஒவ்வொரு புத்தகத்திலும் பத்து உரைகளாக மொத்தம் 30 உரைகளை எழுதினேன். இந்தக் கொரொனா காலத்தின் பின் யார் யார் உயிருடன் இருப்போம், யார் யார் உயிருடன்இருக்க மாட்டார்கள் என்று கூடத் தெரியாத ஒரு சூழலில் நான் இவற்றை எழுதினேன். இறந்தவர்களின் உடலைக் கூட உறவினர்கள் பெற்றுக்கொள்ளாத நிலையையும், அந்த இறந்த உடல்களை அரச செலவில் எரிப்பதும் வழமையாகிப் போன காலம் அது. நெடுஞ்சாலைகளில் பல மனிதர்கள் நடந்தே தங்கள் சொந்த இடங்களுக்குப் போவதைப் பார்த்தேன். கட்டடத் தொழிலையும் கூலித்தொழில்களையும் செய்யும் லட்சக்கணக்கான மக்களை ஒருநாள், இரண்டு நாளில் இந்த கொரோனா 1500 கிலோ மீட்டர் தூரம் தெருவில் நடந்து செல்ல வைத்ததல்லவா? இது என்னை மிகவும் வருத்தியது. ஆனால் இது புதியதொன்றல்லவே? எமது முன்னோர்கள் இதுபோல பஞ்சம் பிழைப்பதற்காகவும் நோயிலிருந்து தப்பிப்பதற்காகவும் வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும் கடற்சீற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடையாய் நடந்திருக்கின்றார்கள். இந்தக் கொரோனாக் காலத்தில் இப்படியாக மக்கள் நடந்துபோனதை பார்க்கும் பொழுது எனக்கு எனது முன்னோர் நடந்தது, சங்ககாலத்தில் மக்கள் நடந்தது தான் தெரிந்தது. சிந்துவெளி அழிந்தபொழுதும் இப்படி நடந்திருப்பார்கள் என்று தோன்றியது. இதனால் கடந்த காலம் பற்றிய இந்த வாசிப்பு எனக்கு முக்கியமானதாகப்பட்டது. எனவே காப்பாற்றப்பட வேண்டியது நிகழ்காலமும் எதிர்காலமும் மட்டுமல்ல, கடந்தகாலமும் தான் என்பதை நான் வலியுறுத்துவேன். கடந்தகாலம் ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் வரலாறு முக்கியமானது. வரலாறு முக்கியமானது மட்டுமல்ல தப்பிக்கவும் முடியாதது. நாம் வரலாற்றைச் சரியாகக் கட்டமைக்கா விட்டால் எம் மீது கட்டுக்கதைகள் திணிக்கப்படும். அந்தக் கட்டுக்கதைகளை நாம், ‘வரலாறு’ என்று நம்பிவிடுவோம். வரலாற்றைப் பொறுத்தவரை அந்த வரலாற்றை யார் எழுதுகிறார்கள் என்பதை வைத்துத்தான் வரலாறு தீர்மானிக்கப்படும். இருண்ட காலம் எது? பொற்காலம் எது? என்பதை யார் தீர்மானிப்பது? எனது இருண்டகாலம் இன்னொருவருக்குப் பொற்காலமாகவும் எனது பொற்காலம் இன்னொருவருக்கு இருண்டகாலமாகவும் இருக்கலாம். எனவே இருண்ட காலம், பொற்காலம் என்பதை வரலாற்று அறிஞர்கள் தீர்மானிக்க முடியாது. இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியரேனும் ஒரு மன்னனின் குறைபாட்டைப் பற்றியோ அவனது அநீதிகள் குறித்தோ எழுதியிருக்கின்றாரா? எனவே நாம் தான் பகுத்தறிவோடு தரவுகளைப் பகுப்பாய்வு செய்யவேண்டும்.
‘எனது பண்பாடு பெரியது, உனது பண்பாடு சிறியது; எனது வரலாறு முக்கியம், உனது வரலாறு முக்கியம் இல்லை; நான் முக்கியம், நீமுக்கியமில்லை’ என்கிற முன் முடிவுகளுடன் நான் வரலாற்றை அணுகுவதில்லை. அடிப்படையில் நாம் எல்லோரும் மனிதர்கள்; ஆனால் பின்னால் ஏற்பட்ட அடையாளங்கள் இருக்கின்றனவல்லவா? அந்த அடையாளத்தை இன்னொருவனுக்கு அல்லது இன்னோர் இனத்துக்குக்கான அடையாளம் ஆக்கி ஒருமொழியின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ ஒற்றை அடையாளமாக யார் கட்டமைத்தாலும் அவர்கள் இந்த உலகத்தின் அழிவுக்கு காரணமானவர்கள் ஆகின்றார்கள். அந்த வகையில் இணக்கமான, வெறுப்புணர்வில்லாத, பொறுப்புணர்வுள்ள ஒரு பிரதிநிதியாக, ஓர் ஆய்வாளனாக நான் வாழவிரும்புகிறேன். இதற்கு என்னைத் தூண்டியது, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கின்ற வரியும், ‘எத்திசைச் செலினும் அத்திசை சோறே’ போன்ற பழம் பாடல்களும் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று சொன்ன பழந்தமிழ் இலக்கியமும் தான். பொதுவாகவே தமிழ் மக்கள் தொடர்ந்து பயணப்பட்ட மக்களாக இருக்கின்றார்கள். தமிழருக்குத் தெரியாத பயணம் என்ன? இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் உலகம் முழுக்கப் பரவியிருக்கின்றார்கள். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் என்பது எமக்கு நன்றாகவே பொருந்தும். அப்படி இருக்கும் பொழுது பயணங்களால் தான் மனிதர்களின் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.
? வரலாறு என்பது அறிவியல் பூர்வமாக அணுகப்படவேண்டியது என்பது நீங்கள் மீளமீள வலியுறுத்துகின்ற விடயங்களுள் ஒன்று. வரலாறு என்பதை உணர்வு சார்ந்ததாகவும் பெருமிதம் சார்ந்ததாகவும் பார்ப்பதில் இருந்து விடுபட்டு அதனை அறிவியல் நோக்குடன் பார்ப்பதன் அவசியம் பற்றிக் கூறுங்கள்?
வரலாறு என்பது எழுதுபவரின் நோக்கில் செய்யப்படுகின்ற ஒரு சித்தரிப்பு தான். ஆனால் அந்த வரலாற்றை எதை வைத்துத் சித்தரிக்கின்றீர்கள்? அந்த வரலாற்றை எழுதுகின்ற முயற்சிக்கு உங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டுமானப் பொருளாக எது பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே வரலாற்றை எழுதுவதற்கான கச்சாப் பொருள் என்ன, அந்தக் கச்சாப் பொருளை எப்படி நாங்கள் வாசிக்க வேண்டும், அதை அறிவியல் கொண்டு எப்படி நாங்கள் ஆராயவேண்டும் என்பது முக்கியமானது. எந்த ஓர் அறிவியலையும் எம்மால் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். ஆனால் வரலாற்றை உண்மையில் அப்படியாக உறுதிப்படுத்த முடியாது. பெருமைகள் என்ற பெயரில் பல விடயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றைப் பலர் நம்பிக் கொண்டும் இருக்கிறார்கள். அதனாற்றான், வரலாற்றைக் கூட அறிவியல்பூர்வமாக அணுகவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன். வரலாற்றை அறிவியல்பூர்வமாக அணுகுவதென்றால் என்ன? நாம் வரலாறு என்று நினைத்துக் கொண்டிருக்கிற பல விடயங்கள் உண்மையில் அவ்விதமாக இல்லாமல் இருக்கலாம்.
ஒரு விடயத்தைச் சொல்லுகிறேன் இந்தியாவில் அசோகர் என்று ஒரு மன்னர் இருந்தார். அவர் ஒடிசாவில் இருகின்ற கலிங்கத்தில் போர் நடத்தினார். அங்கு அசோகரின் கல்வெட்டுகள் இருக்கின்றன. அசோகரின் மகனும் மகளும் இலங்கைக்குச் சென்று அங்கே பௌத்தமதத்தைப் பரப்பினார்கள், இப்படி எல்லாம் ஒரு வரலாறு இருக்கிறது. ஆனால் அசோகர் என்று ஒரு மன்னர் இருந்தார் என்பதே 250 ஆண்டுகளுக்கு முன்னர் நமக்குத் தெரியாது. அப்படியாக ஒரு மன்னர் இருந்தார் என்பதையே ஒரு வெளிநாட்டுக்காரர் வந்து பிராமி மொழி படித்து, ‘அசோகன் பிராமி’ என்று அதற்கு பெயர்வைத்ததுடன் தேவநம்பிரிய என்பது அசோகன்தான் என்றும் அந்த வெளிநாட்டுக்காரர் தான் சொன்னார். அதுவரை இருந்த வரலாறு என்ன? எனவே வரலாறு என்பது தரவுகளால் கட்டமைக்கப்படுவது என்று சொல்லலாம். அந்தத் தரவுகளை எம்மால் பரிசோதித்து உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும். நான் ஓர் உதாரணம் சொல்கிறேன். சிந்துவெளி மக்கள் ஓர் இயற்கைச் சீற்றத்தால் அல்லது கடற்சீற்றத்தால் அல்லது ஒரு பெரும்புயலால், அல்லது சுனாமி போன்ற ஒன்றினால் புலம்பெயர்ந்து இருந்தார்கள் என்று வைப்போம். அப்படிச் செல்லும்போது எதைக் கொண்டுசெல்வார்கள், எதை விட்டுச்செல்வார்கள் என்பதை நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.
இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து செல்லும்போது எதைக் கொண்டுபோனார்கள்? இந்தியத் தமிழர்கள் எதைக் கொண்டுபோனார்கள்? தோட்டத் தொழிலாளர்களாகப் பிறநாடுகளுக்குப் போனவர்கள் இவ்வாறு எதை எடுத்துச்சென்றார்கள்? எதை விட்டுச்சென்றார்கள்? என்ற கேள்வியை மட்டும் கேட்டேன். பொருட்களை எடுத்துச்சென்றார்கள், வீட்டைத் தூக்கி சென்றார்கள் என்றெல்லாம் சொல்லமுடியாது. அவர்கள் அவர்களுடைய ஊர்ப் பெயர்களையும், இடப்பெயர்களையும், மலைகளின் பெயர்களையும் கடவுளின் பெயர்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றார்கள். கடவுளும் மாறாது. இங்கே இருந்தாலும் அங்கே இருந்தாலும் முருகன் தான். இங்கேயும் முனியாண்டி தான், அங்கேயும் முனியாண்டி தான். அதுபோல அவர்கள் அந்த இடப்பெயர்களையும் மீண்டும் பயன்படுத்துவார்கள் என்ற அடிப்படையில் தான் கொற்கை-வஞ்சி-தொண்டி பற்றி எல்லாம் நான் பேசுகின்றேன். வரலாற்றை அறிவியல் என்று சொல்லமாட்டேன். ஆனால் வரலாற்று எழுத்து அறிவியல் பூர்வமாக இருக்கவேண்டும். அறிவு சார்ந்திருக்கவேண்டும். அதனை உறுதிப்படுத்துவதற்கான சான்றுகளைக் கொண்டிருக்கவேண்டும் என்பது முக்கியமானது. இது தான் சரி என்று வாதிட முடியாத எதையும் நான் எழுதியது கிடையாது. ‘பண்பாட்டின் பயணம்’ என்கிற எனது பெரிய புத்தகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு பக்கத்திலும் நான் கூறியிருக்கிற விடயங்களைக் குறித்து என்னால் சான்று சொல்லி வாதாடமுடியும். ஒரு விடயத்தை பத்தாண்டுக்கு முன்னரே நான் கண்டுபிடித்துத் தரவுகளை வைத்திருப்பேன். ஆனால் அது உண்மையா என்கின்ற கேள்வி அந்தப் பத்தாண்டுகளுக்கு மேலாக என்னுடன் இருக்கும். இந்தப் பத்தாண்டுகளாக நான் என்னை உறுதிப்படுத்தி ஆயிரம் முறை என்னை நானே கேள்வி கேட்ட பிறகுதான் அதனை நான் பொதுவெளியில் வைக்கின்றேன். அண்மைக்காலத்தில் வந்திருக்கின்ற மரபணு ஆராய்ச்சி முடிவுகளும், அண்மைக்காலமாக நடக்கின்ற அகழாய்வு போன்றனவும் நாங்கள் இப்போது பேசிய இந்த வரலாற்றை சரியானவைதானென்று நிறுவியிருப்பது முக்கியமானது. இடப்பெயர் ஆய்வு சொல்வதை அகழ்வாராய்ச்சி உறுதி செய்ய வேண்டும். அகழ்வாராய்ச்சி சொல்வதை இடப்பயர் ஆய்வு ஒப்புக்கொள்ளவேண்டும். இந்த இரண்டும் சொல்வதை மரபணு ஆராய்ச்சி உறுதி செய்யவேண்டும். இந்த மாதிரியான தொடர்ச்சியான இணைப்புகளையும் ஒன்றை ஒன்றை கேள்வி கேட்டு உறுதிப்படுத்துவதையும் தான் அறிவியல்பூர்வமான வரலாறு என்று நான் சொல்கின்றேன்

? செம்மொழித் தமிழ் மாநாட்டில், ‘கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்’ அல்லது KVT Complex என்கிற கோட்பாட்டை முன்வைத்திருந்தீர்கள். இந்த ஆய்வினை நீங்கள் தொடங்குவதற்கு உந்துதலாக இருந்தது எது?
என்னுடைய மிக முக்கியமான அறிவிப்புகளை யார் முன்னிலையில் வெளியிடுகிறேன் என்பதை நான் எண்ணிப் பார்ப்பதுண்டு. 2010இல் செம்மொழித் தமிழ் மாநாட்டில் நான் கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் என்பதை அஸ்க்கோ பார்ப்பலோ, ஐராவதம் மகாதேவன் இருவர் முன்னிலையிலும் அறிவித்தேன். இவ்விருவர் முன்னிலையிலும் வெளியிட்டதை நானல்ல, காலமே முடிவுசெய்திருந்தது. இதனை வளாகம் என ஓர் உருவகமாகவே தலைப்பிட்டேன். சங்க இலக்கியத்தில் நாம் எதை உரிமை, உணர்வு, அடிப்படை எனக் கொண்டாடுகிறோமோ அந்தக் கொண்டாடுகின்ற எல்லா அடையாளங்களும் சிந்துவெளியில் இடப்பெயர்களாக விட்டு வரப்படுகின்றன என்பது என்னுடைய முன்மொழிவு. விட்டுவிடமுடியாத சங்க இலக்கியம் கொண்டிருந்த அடையாளம் அது.
அதில் முக்கியமான ஒன்று இடப்பெயர்கள். என்ன வகையான இடப்பெயர்கள் என்றால் கொற்கை, வஞ்சி, தொண்டி, நாலை இந்த மாதிரியாகச் சொல்லப்படுகின்ற ஊர்ப்பெயர்கள். இந்த ஊர்ப்பெயர்களை நான் ஏன் முக்கியமாக எடுத்துக் கொள்கிறேன் என்றால் இந்த ஊர்ப்பெயர்கள் வடமொழிக்குத் தெரியாதவை. வட இந்தியாவில், இந்தியோ சமஸ்கிருதமோ படித்த ஒருவரிடம், கொற்கை, வஞ்சி, தொண்டி என்றால் என்னவென்று கேட்டால் அவருக்குத் தெரியவே தெரியாது. அவர் கேள்விப்பட்டுக்கூட இருக்கமாட்டார். நான் அவரிடம் மாறன், வழுதி, பாரி, பேகன் போன்ற பெயர்களைச் சொன்னால் அவருக்கு அது புரியமாட்டாது. அவர்கள் சம்பந்தப்பட்ட இந்திரன், வசிஸ்டர், வியாசர் போன்றவை அவருக்குத் தெரிந்திருக்கும். எனவே வேறு எவராலும் உரிமை கோரப்பட முடியாத, தமிழ் மக்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு கோப்பொன்றினை நான் உருவாக்கினேன். இவை சிந்துவெளிப் பண்பாட்டிலும் இருக்கின்றன என்பதை நிறுவினேன். சிந்துவெளிப் பண்பாட்டில் அதற்குத் தேவையான கேள்விகளை நான் கேட்டேன். உதாரணமாக வன்னி, நொச்சி, ஈழம் போன்ற பெயர்கள் அங்கும் இருக்கின்றன. அவர்கள் ஆங்கிலத்தில் வேறுவிதமாக இந்தப் பெயர்களை எழுதுவார்கள், உதாரணத்துக்கு ஈழம் என்பதை ILAM என்று எழுதுவார்கள். இப்படியான இடப்பெயர்கள் எப்படியாக அங்கு வந்தன? அதியமான் என்பது எப்படி அங்கிருந்தது? கண்ணகி எப்படி ஓர் ஊர்ப்பெயராக இருந்தது? கோவலன் எப்படி ஓர் ஊர்ப்பெயராக இருந்தது? என்று கேள்விகளை நான் கேட்டபோது, கொற்கை – வஞ்சி – தோண்டி வளாகம் கோட்பாட்டை உறுதிசெய்தேன். அதனை இந்த இரண்டு அறிஞர்கள் முன்னிலையில் நான் முன்வைத்தது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது.
? இடப்பெயர் ஆய்வு என்பது இன்றும்கூட அதிகம் பிரபலமாகாததாகவே இருக்கின்றது. நீங்கள் செய்த இடப்பெயர் ஆய்வுகள் விஞ்ஞானரீதியிலும் பண்பாட்டின் அடிப்படையிலும் அமைந்தவை. இதில் நீங்கள் கவனம் குவித்தற்குக் காரணம் என்ன?
இதில் நான் கவனம் குவித்ததற்கு காரணம் யதார்த்தமாக நிகழ்ந்த ஒன்றுதான். நடைமுறையில் அது ஒடிசாவில் நிகழ்ந்தது. நான் மேற்கொண்டு ஆய்வுகள் செய்யாமல் இந்திய ஆட்சிப்பணிக்குச் சென்றமைக்குக் காரணமாக அமைந்தவை பெயர்கள் பற்றி எனக்குள் இருந்த கேள்விகள்தாம் . கபாடபுரம் தமிழில்லை, வேறு என்று தோன்றும். அது எதுவென அப்போது தெரியவில்லை.அப்படியாயின் ஏன் நாம் கொண்டாடுகின்றோம்? பின்னாளில் நாம் சங்க இலக்கியத்தில் திரும்பத் திரும்பச் சொல்கின்ற, ‘வாயில்’ என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ஏனென்றால் இந்தியில் ‘கபாட்’ என்றால் ‘கதவு’. துவார் என்றால் கதவு, துவாரகா என்றால் வாயில் / முற்றம் போன்ற சொற்களின் மொழிபெயர்ப்பு என பின்னாளில் புரிந்துகொண்டேன். மதுரைக்கு அருகில், ‘சிலம்பாறு’ என்ற ஒன்று உண்டு. அதனை ‘நூபுர கங்கை’ என மொழிபெயர்த்திருப்பார்கள். அவ்வாறாயின் தமிழ்ச் சொற்களை வடமொழிக்கு மொழிபெயர்த்தல் என்பது ஒரு வகையான பண்பாட்டு மேலாதிக்கத்துக்கான கருவியாகும். அதனை நான் இந்தோனேசியாவிலும் தாய்லாந்திலும் அவதானித்துள்ளேன்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது பெயர்கள் என்னை ஆய்வாளராக ஆக்காமல் தடுத்து வேறுபணிகளை நோக்கித் திசைதிருப்பிய போதிலும், அடிப்படையில் மாற்றத்தை உருவாக்கியது ‘தமிழி’ என்று ஒரிய மொழியில் பெயர் எழுதப்பட்டிருந்த மைல்கல். அதில் ஆங்கிலத்தில் ‘THAMILI’ என்று குறிப்பிடப்பட்டிருந்து. இது தமிழியா? தாமிழியா? தமீழியா? என எனக்குத் தெரியாமல் அந்த ஊருக்குச் சென்று அங்கு வாழ்ந்த மக்களிடம் பேசி அவர்கள் யார் எனத் தெரிந்துகொள்ள வேண்டும் எனப் போனேன். அங்கு திராவிட மொழியைப் பேசக்கூடிய, திராவிடக் குடும்ப மொழியைப் பேசக்கூடிய மக்கள் வசித்தார்கள். நிறையப்பேர் புரியாமல் திராவிட என்ற சொல்லைக் கேட்டாலே தலையைப் பிய்த்துக்கொண்டு திரிவார்கள். அந்த அந்தப் பிரச்சினை எனக்குக் கிடையாது. ஒடிசாவில் உள்ள கோயா, குயி, குவி, டோன்கிரியா, கோண்ட், பிகாரில் உள்ள மால்ட்டோ, ஒடிசா, ஜார்க்கண்ட்டில் உள்ள குரூக், பாகிஸ்தான் பகுதியில் உள்ள பிராகூய், போன்றவையும் துளு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்று திராவிட மொழிகள்.
அவ்வூரில் இருந்தவர்கள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ‘குவி’ என்ற மொழியைப் பேசிய மக்கள். தமிழி என்றால் அவர்களுக்கும் பொருள் தெரியாது. எனக்கும் தெரியாது. தமிழ் என்ற சொல்லோடு பொருளானதா அல்லது வேறானதா? எனத்தெரியாது. திராவிட மொழியைப் பேசுகின்றவர்கள் ஆதலால் அதில் ஏதோ தொடர்பிருக்குமோ என ஏற்பட்ட உணர்வுதான் என்னை இடப்பெயர் ஆய்வை நோக்கிக் கொண்டுசென்றது. அதன் பிறகே இடப்பெயர் பற்றிய புத்தகங்களை வாங்கிப் படிக்க ஆரம்பிக்கிறேன். மெட்ராஸ் பிரசிடென்சியில் இருக்கக்கூடிய அகரவரிசைப் பட்டியலில் முதலில் ஆரம்பித்தேன். சத்தீஸ்கரில் பஸ்த்தரில் இருக்கக்கூடிய ‘நாடு’ என முடிகின்ற 282 ஊர்களைத் தொகுத்து அந்த ஊர்ப் பெயர்கள் எவ்வாறு வந்தன, அவர்களின் வாழ்க்கைமுறைகள் என்ன என்றெல்லாம் கேள்விகளை எழுப்பினேன். அந்த வாழ்க்கை முறைகளை அவதானித்தால் சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடிய குறிஞ்சி நிலத்திணையில் இருக்கக்கூடிய வாழ்க்கைமுறையை அவர்கள் என் கண் முன்னே வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். அந்த வாழ்க்கை முறையை தமிழ்நாட்டில் தேடினால் கிடைக்காது. நீலகிரியில் வாழ்கிற பழங்குடி மக்களிடம் அந்த வாழ்க்கை முறையைக் கண்டுபிடிக்க முடியாது. சங்க இலக்கிய குறிஞ்சித் திணை கூறும் வாழ்வியலை கொல்லிமலையிலும் ஜவ்வாது மலையிலும் காணமுடியாது. 2000 ஆண்டுகளில் சங்க இலக்கியத்தில் எழுதப்பட்ட வாழ்வியலுக்கு ஓர் ஆய்வுகூடம் இருக்குமெனில் அது ஒடிசா – சத்தீஸ்கரில் இருக்கக்கூடிய திராவிடபழங்குடி மக்களிடம் உள்ளது என 1997-இல் ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டேன். அவர்களின் பெயர்களைத் தேடும்போது குமிழி, பழனி, தேக்கடி, தேனி போன்ற மதுரைக்கு அருகில் இருக்கக்கூடிய பெயர்கள் மத்திய பிரதேசத்தில் இருப்பதைக் கண்டேன். அந்த ஊர்களில் இருப்பவர்களும் திராவிட மொழியைப் பேசுவர்களாக இருக்கிறார்கள். ‘இப்பெயர்கள் எங்கிருந்து எங்கு சென்றன?’ என்ற உடனே எழுகின்ற கேள்விகளை நான் ஒத்திவைத்துவிட்டு இவற்றுக்கிடையோன உறவை உறுதிப்படுத்திவிட்டு அக்கேள்விகளுக்கு வரவிரும்பினேன். ஏனெனில் நானும் லெமூரியாக் கண்டம் என்ற ஒன்று இருந்தது, அங்கிருந்தே நாம் வந்தோம் என்றே படிப்பிக்கப்பட்டேன். ஆகையினால் முதலில் இவற்றிடையான தொடர்பை உறுதி செய்ய விரும்பினேன்.
பின்பு மத்திய பிரதேசத்தில் இருக்கக்கூடிய திராவிடப் பழங்குடியின் மூதாதையினர் அங்கிருந்து பழனி, இடுக்கியை நோக்கி வந்திருக்க வேண்டுமேயொழிய இங்கிருந்து அங்கு சென்றிருக்க வாய்ப்பில்லை என என் சிந்தனையில் தோன்றியது. ஏனெனில், கடினமான பகுதியிலிருந்து வசதியான பகுதிகளை நோக்கியே மக்கள்பயணிப்பார்களே அல்லாமல் வசதியான இடத்தை விட்டு கடினமான பகுதியை நோக்கிப் பயணிக்க மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்வுமுறை மிகவும் பழங்குடித்தன்மை வாய்ந்தததாக உள்ளது. நமது வாழ்வியலோ உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டதாக இருக்கிறது. ஆக, இவையெல்லாவற்றையும் பார்த்த பின்பே இடப்பெயர்கள் உண்மையானவை என்று நம்பி, தொடர்ந்து பயணம் பண்ணினேன். அது என்னை கொற்கை, வஞ்சி தொண்டி வளாகத்திலும் சிந்துவெளியிலும் கொண்டுவந்து சேர்த்தது. அதை நான் பலவகையான அறிவியல் சான்றுகளோடு தொடர்ந்து நிறுவிக் கொண்டிருக்கிறேன். இதில் திசைகளைவிட தேடல் முக்கியம். ‘திசைகள் என்பவை நேற்று வந்தவை, தேடல்கள் மனிதனின் உடன்பிறந்தவை’ என எனது பேச்சுக்களிலும் உரையாடல்களிலும் திரும்பத் திரும்பத் திரும்ப வலியுறுத்துவேன். கூறியது கூறல் குறித்து நான் கவலை கொள்வதில்லை. ஒரு மனிதரின் பொதுப்புத்தியில் போய்த் தங்கும் வரை கூறியதையே திரும்பத் திரும்ப வலியுறுத்திக்கொண்டிருப்பேன். இது முக்கியமானது.
புலப்பெயர்வு வரலாற்றைப் படிக்கும்போது 400 ஆண்டுகளுக்கு முன்னர், உணவுக்கு வழியின்றி மக்களை அடிமைகளாக விற்றிருக்கின்றனர். அடிமைகளாக தென்னாபிரிக்காவுக்கும் மொரிசியஸ் தீவுகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். பின்பு அடிமை வியாபாரம் தடைசெய்யப்படுகிறது. நான் ஆபிரிக்காவில் தான்சானியா, சான்சிபார் போன்ற அடிமை வணிகம் நடந்த கொத்தணிகளைப் பார்வையிட்டேன். எவ்வாறு மனிதர்களை மனிதர்கள் விற்றார்கள் என நான் கேட்டுக்கொள்வதுண்டு. பின்பு, தமிழ்நாட்டிலிருந்து ஒப்பந்தக் கூலி முறையில் மனிதர்கள் மொரிசியசுக்கும் பிஜித்தீவுகளுக்கும் குடும்பம் குடும்பமாக அனுப்பப்பட்டார்கள். அவர்களிடம் நீங்கள் ஏன் வடக்கு அல்லது தெற்குக்குப் போனீர்கள் என்று கேட்க முடியாது. பசித்தது.. அதனால் போனார்கள். பசிதான் மனிதரைத் துரத்துவது. மனிதர்கள் எல்லா திசைகளிலும் பயணிப்பார்கள். அதைத்தான் ஔவையார், ‘எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே’ எனச்சொன்னார். சோறு எங்குள்ளதோ அங்கு மனிதர் செல்வர்.
ஆகையினால், நாம் மனிதரின் பயணத்தைத்தான் பேசவேண்டுமெயொழிய இப்படிப் போனான், அப்படிப் போனான் எனப் பேசமுடியாது. பயணத்தின் திசையைவிட முக்கியமானது பயணம். பயணத்தைவிட முக்கியமானவர் பயணி. நீங்கள் பயணியின் முக்கியத்துவத்தை மறுப்பீர்களானால் உங்கள் வரலாற்றை மறுப்பவராகிறீர்கள். உங்கள் மூதாதையரை மறுக்கிறீர்கள். உங்கள் முன்னோடியை மறுக்கிறீர்கள். என் முன்னோடியும் மூதாதையரும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வயிற்றுப் பசியோடு நடந்திருப்பார்கள் என்று சொன்னால் அவர்கள் நடந்த திசையை மறுப்பது அவர்களை அவமதிப்பாகும். அதனால்தான் எனக்குத் திசைகளைப் பற்றிக் கவலையில்லை; தேடல்களைப் பற்றியதுதான் கவலை.
? சிந்துவெளி ஆய்வறிஞர்கள் சிந்துவெளிப் புதிரை விடுவிப்பதற்கு அதன் எழுத்துகளையும் குறியீடுகளையும் ஒழுங்குபடுத்துவதற்கும் வாசிப்பதற்குமான ஆய்வுகளைச்செய்து கொண்டிருந்தபோது நீங்கள் பண்பாட்டின் அடிப்படையில் சிந்துவெளி பற்றிய புதிர்களை விடுவிப்பதற்கான ஆய்வுகளை முன்னெடுத்தீர்கள். இதற்கான முன்னோடிகளாக யார் இருந்தனர்? நீங்கள் எவ்விதம் இந்த ஆய்விலும் ஆய்வுமுறையிலும் ஈடுபாடு கொண்டீர்கள்?
இதற்கான பதிலை சிந்துவெளி அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து தொடங்கவேண்டும். இந்த ஆண்டு செப்டம்பர் 20 அன்று சென்னையில், ‘ரிக் -இந்திரா- காந்தரா’ வளாகம் குறித்து ஓர் உரை நிகழ்த்தினேன். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு 1924 செப்டம்பர் மாதம் சிந்துவெளி கண்டுபிடிப்பை சேர். ஜோன் மார்சல் வெளியிட்டார். அந்த நூற்றாண்டு நினைவாகவே அந்த உரையை நிகழ்த்தினேன். சிந்துவெளி அறிவிப்பை வெளியிடும் போதே, ‘அதுவரை அறியப்பட்ட கடந்தகால வரலாற்றிலிருந்து வேறுபட்டது. வேதங்களோடு தொடர்பற்றது, ஆரியரோடு தொடர்பில்லாதது’ என சேர் ஜோன் மார்சல் கூறினார். பின்பு வெளியிட்ட அறிக்கையிலும், ‘Most like Dravidic’ என்று குறிப்பிட்டார். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட ஒரு மாத காலத்திற்குள் வங்காளத்தைச் சேர்ந்த சுனித்குமார் சட்டர்ஜி எனும் அறிஞர், ‘இது ஆரியப் பண்பாட்டோடு தொடர்புடையதல்ல. ஆரியருக்கு முற்பட்ட, ஆரியரோடு தொடர்பற்ற தமிழ்த் தொன்மைகளோடு தொடர்புடைய பண்பாடு’ என மொடேர்ன் ரிவியுவில் எழுதினார். அவர் ஆதிச்ச நல்லூர் பற்றியும் அதில் மேற்கோள் காட்டினார்.
அதற்கடுத்து, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹீராஸ், சிந்துவெளி எழுத்துகளை வாசித்தறிய முயற்சித்தார். ரஷ்ய அறிஞர்களும் இவ்வெழுத்துகளை வாசிக்க முயற்சித்தார்கள். பின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பார்ப்பலோ, ஐராவதம் மகாதேவன் எல்லோரும் முயற்சி செய்தும், அவ்வெழுத்துகளை வாசித்தறிய முடியவில்லை. ஏனெனில், இருவழிப் படிக்கக்கூடிய அழிந்து போன ஒரு மொழி. இன்னும் அழியாத மொழியிலிருக்கக் கூடிய ஓர் ஆவணம் கிடைக்குமானால் இரண்டையும் ஒப்பிட்டு, இலக்கண அமைப்புகளைக் கண்டுபிடித்துவிடலாம். நமக்கு அவ்வாறான எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும், முற்குறிப்பிட்டவர்கள் இது திராவிட மொழியாக இருக்கலாம் என நம்புகிறார்கள். அவர்கள், இதில் ‘முருகு’ அல்லது ‘பொறையன்’ என எழுதியிருப்பதாக ஒரு முடிவுக்கு வருகிறார்கள். நான் அந்த முயற்சியைத் தொடரவில்லை. ஏனெனில் அவர்கள் 40 ஆண்டுகளாகத் தமது வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து ஆய்வுசெய்தபோதிலும், பண்பாட்டு அரசியல் பேசுகின்ற ஒருவன் திட்டமிட்டே அதனை மறுக்கமுடியும். ‘நீங்கள் ‘முருகு’ என எழுதியுள்ளதாகக் கூறுகிறீர்கள். எனது வாசிப்பில் அப்படியில்லையே. இதில் ‘விஷ்ணு’ என எழுதியிருக்கிறதே’ எனச் சொல்வான். ‘எதை வைத்து அவ்வாறு சொல்கிறீர்கள்’ எனக் கேட்டால், ‘நீங்கள் எதை வைத்து முருகு என எழுதியிருக்கிறது என்று சொல்கிறீர்கள்’ எனக் கேட்பான். நான் ஐம்பது ஆண்டுகள் உழைத்து ஒரு கருத்தை முன் வைப்பேன். ஆனால், திட்டமிட்டு அரசியல் செய்கிறவன் காலையில் முடிவுசெய்து அதனை மறுதலிப்பான். அப்போது நான் எதனை வைத்து அதனை எதிர்கொள்ள முடியும்?
நான் ஏலவே பணிச்சுமைகளுக்கு மத்தியில் ஆய்வுகளை முன்னெடுக்கிறேன். பணிச்சுமைகளோடு ஒரு 40 ஆண்டுகள் உழைத்து ஆய்வு செய்தபோதிலும், ‘இவர் இவ்வாறு சொல்லியிருக்கிறார்’ எனச் சொல்வார்களே தவிர ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஆகையினாலேதான் நான் ஒருபோதும் வரிவடிவத்தை வாசிப்பதற்கு முயற்சி செய்ததில்லை. ஏனெனில் இதைக் கடைசியில் யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு வேறு அரசியல் உண்டு. இந்த அரசியலுக்குள் மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. நான் பண்பாடு தொடர்பில் பேசத் தொடங்கினேன். மொழி, பண்பாடு, பண்பாட்டு அசைவுகள், உடல் மொழி ஆகியவை குறித்துப் பேச விரும்பினேன். சிந்துவெளியின் மொழியைவிட சிந்துவெளியின் உடல்மொழியை நான் வாசிக்க முயற்சிசெய்தேன்.
அது என்ன உடல் மொழி?
- நகரத்தில் வாழ்ந்தவர்கள் – பெரிய வீடுகள் அமைத்தல், நேர்த்தியான தெருக்கள் அமைத்தல், குளியறை, கழிவறை, வடிகாலமைப்புகள் அமைத்தல் போன்றன இவை சிந்துவெளியின் உடல்மொழி.
- பத்து உருவ பொம்மைகள் கிடைத்தால், அதில் எட்டு பொம்மைகள் பெண் உருவம். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தல், தாய்த்தெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தல் போன்றனசிந்துவெளியின் உடல்மொழி.
- அவர்கள் ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கடல் தெரியும், வணிகம் தெரியும் என்பது சிந்துவெளியின் உடல்மொழி.
- அவர்களுக்கு எருமை மாடுகளைப் பிடிக்கும். அவற்றைப் பழக்கியுள்ளார்கள். அவற்றைக் கொண்டு மூவாயிரம் கிலோமீட்டர் அப்பாலுள்ள சுமேரியரோடு வணிகம் செய்துள்ளார்கள். அவர்களுக்கு எருமைமாடு பிடிக்கும் என்பது சிந்துவெளியின் உடல்மொழி.
- சிந்துவெளிப் பொறிப்புகளில் திமில் காளை பொறிப்பே உள்ளது. பசுமாடு இல்லாமல் காளைமாடு தோன்றமுடியாது. ஆயினும், அவர்கள் பசுவை முன்னிலைப்படுத்தவில்லை. பசுவை முன்னிலைப்படுத்தாமல் காளையை முன்னிலைப்படுத்துகின்றமை சிந்துவெளியின் உடல்மொழி.
- அவர்களுக்கு சேவல் சண்டை பிடிக்கும். சேவல் சண்டை சிந்துவெளியின் உடல்மொழி.
- புலியிருக்கிறது, சிங்கம் இல்லை. அவர்களுக்கு புலியைத் தெரியும், இது சிந்துவெளியின் உடல்மொழி.
- குதிரை இல்லை. அவர்களுக்கு குதிரை தெரியாது. இது சிந்துவெளியின் உடல்மொழி.
- அவர்களின் நகரங்கள் மேல்மேற்காகவும் – கீழ் கிழக்காகவும் அமைந்திருக்கின்றமை; வடக்குதெற்காக சாலைகள் செல்லும் இருபகுதிகளாக நகரங்களைப் பிரித்திருக்கின்றமை ஆகியன சிந்துவெளியின் உடல்மொழி.
இந்த உடல் மொழியெல்லாம் எந்த விதங்களில் எல்லாம் திராவிடத்துக்கும் தமிழுக்கும் ஒத்திருக்கிறது. வடமொழிக்கும் வேதமொழிக்கும் இந்த உடல்மொழி ஒத்துவராது என்பதை நான் பரிசோதனை மூலம் நிருபித்தேன். ஏனெனில் வேதத்தில் பெண்கடவுளே இல்லை. வேத நாகரிகம் பெண்ணுரிமை மறுக்கப்பட்ட சமூகம், கல்விப் பரவலாக்கம் பிடிக்காது, நகர்மய வாழ்வு இல்லை. எருமையைப் பிடிக்காது, அதை மகிஷாசுரன் என அசுரனாக்குவார்கள்.
மாறாக, சிந்துவெளி நாகரிகமும் திராவிட நாகரிகமும் பெண்மையைப் போற்றும் சமூகம், கல்விப் பரவலாக்கத்தை விரும்புகின்ற சமூகம். நாங்கள் எருமையைக் கொண்டாடுவோம். திமில் காளையை அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டாக நடத்துகின்ற சமூகம். ஆகவே உடல் மொழி மூலமாகத்தான் சிந்துவெளி மக்களை அடையாளங்காணமுடியும் என நான் கருதுகிறேன்.
? ‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே’ என்கிற உங்களது மிகப் பிரபலமான கூற்று புலப்படாமல் இருந்த / மறைக்கப்பட்டிருந்த வரலாற்றினைத் துலக்கமாக்குவதற்குப் பெரிதும் பயன்பட்டது. இந்தக் கூற்றினையும் இதனை எவ்விதம் வந்தடைந்தீர்கள் என்பதையும் விளக்கமுடியுமா?
நான் ஓசைகளில் மயக்கமுடையவன். எனக்குக்கவிதைகள் பிடிக்கும். கவிதையாகப் பேசப்பிடிக்கும். ஒரு சில நேரங்களில் ஒரு மிகப்பெரிய வரலாற்று உண்மை ஓர் ஒற்றை வரியில் துலங்கும். அவ்வாறு நான் வியப்படையும் நிறைய விடயங்கள் உள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது நாலே சொல். இந்த நான்கு சொற்களுக்குள் ஒரு பெரிய வரலாற்றுப் புரிதலையே ஒருவர் அடைக்கிறார். அவருடைய பண்பாடு, பயணங்கள் இல்லாதவர் அப்படிப் பேச முடியாது. இன்னொருவரோடு பழகாதவர் இதனைச் சொல்லமுடியாது. இன்னொருவரை சகித்துக்கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தாதவரால் இதைச் சொல்லமுடியாது. ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’, என்று மிக முக்கியமான உண்மைகள் மிக எளிமையாகத் தான் சொல்லப்பட்டிருக்கின்றன. அதையும் கவித்துவமாக ஓசை நயத்துடன் சொல்லும் போது நீங்கள் வரலாற்றை விட்டுச் செல்லவேண்டிய விடயங்கள் பெரிய பெரிய கட்டுரைகளில் அல்ல, பெரிய பெரிய உரைகளில் அல்ல, ஒற்றைச் சொல் அல்லது ஒற்றை வரி அல்லது இரட்டை வரி என எனக்குத் தெரியும். அதைத் திடீரென திட்டமிட்டுக் கொண்டுவரமுடியாது. ஒரு 30 – 40 ஆண்டு தேடலுக்குப் பின்னர். திடீரென உங்களுக்கு இப்படியான ஒன்று தோன்றும்.
சங்க இலக்கியத்தைப் படிக்கும் போது எனக்கு சிந்துவெளியில் இருப்பது போலவே இருக்கும். கீழடியில் இருப்பது போல் இருக்கும் . இரண்டுக்கும் தூரம் (distant) அதிகம்; ஆனால் இடைவெளி (gap) குறைவு. கங்கை சமவெளிக்கும் சிந்துவுக்கும் தூரம் குறைவு; ஆனால் இடைவெளி அதிகம். வைகைக்கும் சிந்துவுக்கும் தூரம் அதிகம்; ஆனால், பண்பாட்டு அடிப்படையில் இடைவெளி குறைவாக இருக்கிறது. சங்க இலக்கியத்தைப் படிக்கும் போது சிந்துவெளியில் இருப்பது போலஇருக்கும், சிந்துவெளிப் பொருட்களைப் பார்க்கும்போது சங்க இலக்கியத்தைப் படிப்பது போலிருக்கும். சிந்துவெளி வன்பொருள் (hardware) என்றால், அதற்கான மென்பொருள் (software) சங்க இலக்கியம் என்று சொல்வேன். சிந்துவெளிப் புதிர்முடிச்சை அவிழ்ப்பதற்கான திறவுகோல் சங்க இலக்கியம் எனச் சொல்வேன். கீழடி என்பது இன்னும் முழுவதுமாகத் தோண்டப்படாத சங்க இலக்கியம். சங்க இலக்கியம் இன்னும் முழுமையாக வாசிக்கப்படாத கீழடி என்பேன். இதுதான் எனக்குப் பிடித்தவகையான உரையாடல். அந்த வகையில் நான் பிடித்துக்கொண்ட இரண்டு வரிதான் ‘சிந்துவெளி விட்ட இடம், சங்க இலக்கியம் தொட்ட இடம்’.
முகம் தெரியாத இடத்தில் தமிழர்களும் தமிழ்க் குடும்பப்பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் என்னைப் பார்த்து அடையாளங்கண்டு பேசும்போதும் செல்பி எடுத்துக்கொள்ளும் போதும் நிறையப் பேர், ‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே சார்’ என்று சொல்லும்போதும், ‘இந்த இரு வரிகளை நாம் விதைத்துள்ளோம்’ என எனது வாழ்க்கை நிறைவானதாக எனக்குத் தோன்றும். படம் எடுக்கும்போது இந்த வரியை அவர்கள் சொல்வதுதான் என் 40 ஆண்டு வாழ்க்கைக்கான அடையாளமே.

? உங்களது, ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ நூல் வெளிவந்து சிலகாலங்களின் பின்னரே கீழடிக் கண்டுபிடிப்புகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்தன. அவை உங்களது ஆய்வுகளுக்கு வலுச்சேர்க்கும் தொல்லியல் சான்றுகளாக அமைந்தன. இதன்போது உங்களது மனநிலை எப்படி இருந்தது?
மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருந்தது. அதுக்கு முன்பு கீழடியில் இப்படியொரு ஆராய்ச்சி நடைபெற்றுக்கொண்டு இருப்பது எனக்குத் தெரியாது. எனது சொந்த ஊர் மதுரைதான். நான் படித்தது, வளர்ந்தது எல்லாம் அங்குதான். கீழடியிலிருந்து 10- 15 கிலோ மீட்டர் தூரத்தில்தான் நான் இருந்தேன். ஆயினும் அங்கு கீழடி என்ற ஒன்று இருப்பது எனக்குத் தெரியாது. 2002 -2004 ஆண்டுகளில் கொற்கை- வஞ்சி -தொண்டி வளாகம் எனக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. ஆனாலும் 2010 வரை காத்திருந்து, அதுபற்றிய கட்டுரையை வெளியிடுகிறேன். 2012-இல் ‘High-West: Low-East’ என ஆங்கிலத்தில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக பிரசுரமாக வெளியிடுகிறோம். 2016 இல் ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என நானே அக்கட்டுரையை தமிழில் மொழி பெயர்க்கிறேன். ‘இதுவரைக்கும் சிந்துவெளியைப் பற்றி தமிழில் வெளிவந்த நூல்களிலேயே இதுதான் தலைசிறந்த நூல்’ என்று அந்நூலின் அணிந்துரையில் ஐராவதம் மகாதேவன் எழுதியதுடன் அந்நூலை வெளியிட்டும் வைக்கிறார். இவ்வளவும் நடந்த பின்னர் 2016 மே 29-ஆம் நாள், The Times of India செய்தித் தாளில், ‘Harappa-like site surfaces in Tamil Nadu’ என்ற செய்தியை படிக்கிறேன். மே – 29, 30 இருநாட்களும் அந்தச் செய்தி வெளியாகியது. அடுத்து நான்கு நாட்களில் நான் ஒடிசாவிலிருந்து சென்னை வந்து அங்கிருந்து மதுரை சென்று விமானநிலையத்திலிருந்து நேராகவே கீழடிக்குச் சென்றேன். போகும்போதே அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டேன், அவரும் தயாராக இருந்தார்.
அமர்நாத் ராமகிருஷ்ணா வடமாநிலங்களில் பணியாற்றியவர். ஆகையினால் கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் சிந்துவெளி – ஹரப்பா பொருட்களைப் போலிருப்பதை அறிந்திருந்தார். அதை அவர் தனது மேலதிகாரிகளிடம் தெரிவித்தபோது யாரும் அவரை ஆதரிக்கவில்லை. ‘சிந்துவெளி எங்கே இருக்கிறது, கீழடி எங்கே இருக்கிறது, இரண்டுக்கும் முடிச்சுப் போடுகிறாயே?’ என நகைத்துள்ளார்கள். அந்தக் கட்டுரையுமே தகவல் கசிந்துதான் வெளியாகி இருந்தது. அதைப்பார்த்தே நான் நேரடியாகச் சென்றேன். அங்கு அவருடன் அரைநாள் தங்கியிருந்து அவருடன் உரையாடினேன். அங்கு ஒரு பானையோட்டின் படமும் எடுத்துக்கொண்டேன். அழகான அந்தப்பானைக்கு ‘கிளியோபட்ரா பானை’ எனப்பெயரும் வைத்தேன். அந்தப் படங்கள் இணையத்தில் இருக்கும். அது குறித்து ஒருபாடலையும் பின்பு எழுதினேன். அது ஒரு மிகநிறைவான தருணம்.

அகழாய்வின் துணையில்லாமல் இலக்கியத்தின் துணைகொண்டு, இடப்பெயர்களின் துணைகொண்டு, பண்பாட்டு அசைவுகளைப் படிப்பதன் மூலமாகவும், பயணங்களின் மூலமாக ஓடிசாவில் பயணித்து, ஜார்க்கண்டில், பீகாரில், மத்திய பிரதேசத்தில் பயணித்தும் கண்டுபிடித்த அடிப்படை உண்மையை மதுரைக்கு அருகில் கீழடியில் கிடைக்கிற பொருள் நிறுவுகிறது என்பதைத் தவிர மகிழ்ச்சி வேறெதுவும் வேண்டியதில்லை. அதற்குப் பின் வேறெதுவும் தேவையே இல்லை. அதன் பின்னரான அகழாய்வுகளில் பகடைக்காய்கள் கிடைக்கின்றன. அங்கு கிடைத்த பகடை கனசதுர அறுகோணப்பகடை. அதில் சொல்லப்பட்டுள்ள முறைதான் சங்க இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கிறது. ஆக, சங்க இலக்கியத்தில் பேசுப்படுவது, சிந்துவெளியில் கிடைத்தது, கீழடியில் கிடைத்தது எல்லாம் பொருந்திப்போனமை எனக்கு ஓர் உத்தரவாத முத்திரையாக இருந்தது. அகழாய்வு, இலக்கியம் இரண்டும் கைகோர்த்துக் கொள்ளும் இடமாகக் கீழடியைக் கண்டறிந்தேன்.

? இந்தியா உருக்குப்பானை (Melting pot) அல்ல, பன்மியச் சிறப்புமிக்க மழைக்காடு (Rainforest Pluralism) என்று குறிப்பிடுகின்றீர்கள். இதனை விளக்கிச் சொல்ல முடியுமா?
நீங்கள் இலங்கையில் இருந்து என்னுடன் பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கின்றேன். இப்பொழுது கனடாவில் இருக்கின்றேன். இந்த மூன்று இடங்களையும் வைத்துக் கொண்டு நாங்கள் பேசுவோம். இலங்கையை எடுத்துக் கொண்டால் அங்கு பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களும் இருக்கின்றார்கள் என்பது உண்மை. இது மற்றவர்களுக்கு விருப்பமோ இல்லையோ இதுதான் எங்கள் முன்னால் இருக்கின்ற பரம உண்மை. இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டால் அங்கே காடுகளிலும் மலைகளிலும் வேட்டையாடிக்கொண்டிருக்கக் கூடிய மிகத் தொன்மையான பழங்குடியினர் இப்பொழுதும் இருக்கக்கூடும். இதுபோல மீன்பிடியைத் தொழிலாகக் கொண்டவர்கள் விவசாயத்தை தொழிலாகக் கொண்டவர்கள் இன்னபிற வேலைகளைத் தொழிலாகக் கொண்டவர்கள் என்று வெவ்வேறு பிரிவானவர்கள் இருக்கின்றார்கள். மதம் என்று எடுத்துக்கொண்டால் கூட பௌத்தர்கள், சைவசமயத்தை சேர்ந்தவர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் போன்றவர்கள் இருக்கக்கூடும். அதுபோல ஐரோப்பிய காலனியத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட மாற்றங்களை உள்வாங்கிக் கொண்ட மக்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் வட இந்தியா தென்னிந்தியா என்று பல்வேறு பிரிவுகள்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், கேரளாவைச் சேர்ந்தவர்கள், ஏன் தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் கூட அங்கு இருக்கக்கூடிய பல்வேறு வகையான மக்கள், இருளர்கள், தோடர்கள் போன்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த மக்கள். இப்படியான பலவிதமான மக்கள், வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் இருக்கின்றார்கள். அடுத்து கனடாவை எடுத்துக் கொண்டால் இங்கும் ஆதிக்குடிகள் இருந்தார்கள். அதன் பின்னர் காலனியவாதிகள், ஐரோப்பியர்கள் வந்து இங்கு குடியேறினார்கள். அதற்குப் பிறகு வெவ்வேறு காலங்களில் புலம்பெயர்ந்து வந்த வெவ்வேறு நாடுகளையும் மதங்களையும் பின்னணியையும் கொண்ட மக்கள் இங்கு இருக்கின்றார்கள். இப்படியாக வெவ்வேறு மக்கள் சேர்ந்து வாழ்ந்தால்தான் இந்த உலகம் தொடர்ந்து வாழும்; ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று சொல்வது அதைத்தான்.
‘மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப்
புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்,
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்’
என்று பட்டினப்பாலையில் வருகின்ற பாடல் ஒன்று சொல்கின்றது. பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய மக்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்து ஓரிடத்தில் கலந்து இனிது வாழும் பட்டினம் என்று இந்த பாடல் சொல்கிறது.
நீங்கள் ஏ.எல். பசாம் எழுதிய, ‘வியத்தகு இந்தியா’ (The Wonder That Was India) என்கிற நூலை அறிந்திருக்கக்கூடும். அதுபோல ஆனந்தகுமாரசாமி எழுதிய நூல்கள் இருக்கின்றன; வால்கா முதல் கங்கை வரை, இப்பொழுது வந்திருக்கக்கூடிய சேப்பியன்ஸ், ஆதி இந்தியர்கள் (Early Indians) போன்ற நூல்களை எல்லாம் எடுத்துக்கொண்டால் அவை எல்லாமே இவ்வாறு வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து சேர்ந்த மக்கள் ஓரிடத்தில் கூடி வாழ்ந்த பின்னணியைத்தான் கூறுகின்றன. இந்தியாவைப் பற்றிக் கூறும்போது இவையெல்லாமே சாராம்சமாக, ‘உருக்குப்பானை’ (India is a melting pot of many languages and cultures) என்ற உருவகத்தைப் பயன்படுத்தின. அதனை நான் மறுத்தேன். உருக்குப்பானை என்று எடுத்துக் கொண்டால, நீங்கள் ஐம்பொன் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், ஐந்து விதமான உலோகங்களை சேர்த்து உருக்கிச் செய்கின்ற சிலைகள் ஐம்பொன்னாலானது என்று சொல்வார்கள். இன்று இந்த உருவகத்தைப் பயன்படுத்தும்போது பல்வேறு விதமான உலோகங்களால் ஆக்கப்பட்டது என்பதைப் பெருமையாகச் சொல்கின்றார்கள். ஆனால் அங்கு இருக்கின்ற சிக்கல் என்னவென்றால் இந்தத் தனித்தனி உலோகங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு அவை எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டு அடையாளமாக உருவாக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு நிகழும்போது அது ஓர் ஒட்டுமொத்தமான, ஒற்றையான ஒரு தேசிய வடிவத்துக்கு அதிகாரத்தைத் தருவதாக அமையும். அதன் கீழாக இருக்கக்கூடிய சிறு சிறு கூறுகள் தங்கள் அடையாளங்களை இழந்ததாகப் போய்விடும். அத்துடன் இப்படியான ஒரு கூட்டு அடையாளம் உருவாகும் பொழுது அதன் பகுதியாக இருக்கின்ற, ஏதோ ஒரு விதத்தில் செல்வாக்கு மிக்கதான ஒரு கூறு பிற கூறுகளின் தனி அடையாளங்களையும் இயல்புகளையும் மறைத்து, அவற்றைத் தனது சாயலாக்கி தான் பலம்பெற்றதாகவும் அதிகாரத் தரப்பாகவும் மாறிவிடும். எனவே இந்த உருக்குப்பானை என்று சொல்லும்பொழுது அதற்குள் இருந்து அடையாளம் அழிக்கப்பட்ட ஒன்று கதறி அழுவது போன்ற ஒரு தோற்றம் எனக்குத் தோன்றுகின்றது. நான் ஒடிசாவில் கிட்டத்தட்ட 2000 பேர் மட்டுமே இருக்கக் கூடிய ஒரு பழங்குடி இனமக்களைப் பார்த்தேன். அவர்கள் தங்கள் மொழியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த மொழியைத்தான் அவர்கள் பேசுகின்றார்கள். அவர்களுக்கான தனித்துவமான உடைகள் இருக்கின்றன; ஆபரணங்கள் இருக்கின்றன; ஒரு பண்பாடு இருக்கின்றது; தனிக் கடவுள் இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு அடையாளமும் இன்றும் பேணப்படுகின்ற இடமாகத்தான் இந்தியா இருக்கின்றது. இவர்கள் எல்லோரையும் இந்தியர்கள் என்று உருக்குப்பானையில் இட்டு உருக்கினால் அவர்களின் அடையாளமே போய்விடும். அதனால் இந்தியா ஓர் உருக்குப் பானை இல்லை என்பதை நான் உறுதியாக நான் கூறத் தொடங்கினேன்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் இது இன்னொரு விதமாகச் செய்யப்படுகின்றது. அங்கு கறுப்பின மக்கள் ஆரம்பத்தில் அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டபோதும், பின்னர் அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினார்கள். தற்போது அவர்களை ‘ஆஃப்ரோ அமெரிக்கர்கள்’ (Afro-Americans) என்று அழைக்கின்றார்கள். ஆனால் அங்கே என்ன நடக்கின்றது என்றால், மெக்சிகர்கள், ஸ்பானியர்கள், இந்தியர்கள், சீனர்கள் என்று அங்கிருக்கின்ற எல்லாரும், ‘அமெரிக்கர் என்கிற குடிமக்களாக நாம் இருக்கின்றோம்’ என்கிற அடையாளத்தைப் பெருமையாகக் கூறுகின்றார்கள். ஆனால் இந்தப் பொறிமுறையும் ஜனநாயக ரீதியிலான, இயல்பானதாக இருப்பதில்லை என்பதால் எனக்கு அதிலும் உடன்பாடில்லை. இந்த இடத்தில்தான் நான் மழைக்காடு (Rainforest) என்கிற பொருத்தமான உருவகத்தைக் கண்டடைந்தேன்.
மழைக்காடுகளில் நிலம் எப்போழுதும் ஈரலிப்பாக இருக்கும். இதனால் அங்கே நிலத்தில் புழுக்கள், சிறு பூச்சிகள், பூஞ்சைக் காளான்களி்லிருந்து, பட்டாம்பூச்சிகள், குரங்குகள், சிறுத்தைகள், யானைகள், பறவைகள் என்று வெவ்வேறு உயிரினங்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும். மழைக்காடுகளின் மரங்கள் எல்லாம் சேர்ந்து Canopy என்று அழைக்கப்படுகின்ற குடை போன்ற ஒரு வடிவில் இருக்கும். சில மரங்கள் மாத்திரம் அந்தக் குடைவடிவை விடச் சற்று உயர்ந்ததாக இருக்கும், ஆனால் அவற்றின் வேர்களும் அந்த மழைக்காட்டில் தாம் இருக்கும். இங்கே யார் பெரிது சிறிதென்பது முக்கியமில்லை. எல்லோருடைய வேரும் அந்த மழைக்காட்டில்தான் ஊன்றி இருக்கின்றது. இங்கே இருக்கின்ற மிருகங்களும், மரங்களும் எல்லா உயிரிகளும் ஒன்றில் ஒன்று சார்ந்திருக்கின்றன, ஆனாலும் கூடிவாழ்கின்றன. இந்தியாவையும் நான் ஒரு மழைக்காடாகத்தான் பார்க்கின்றேன்.
? ரிக் -இந்திரா – காந்தரா வளாகம் (RIG Complex) ஆரியப் பரவல் கோட்பாடு என்பது நீங்கள் முன்வைத்திருக்கும் ஒரு கோட்பாடு. அதுகுறித்துச் சற்று விளக்கமுடியுமா?
இது குறித்த தரவுகளை நான் 2003-2004 காலப்பகுதியில் சேர்த்திருந்தாலும் இப்போதுதான் பேசத் தொடங்கியிருக்கின்றேன். வேறுவேலைகளில் கூடுதலாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருந்ததாலும், மேலும் சிறிது இது குறித்துப் படிக்கவும் தரவுகளைச் சேர்க்கவும் வேண்டியிருந்ததாலும் பொறுத்திருந்து, சென்னையில் செப்ரம்பர் 2024-இல் நடந்த, சிந்துவெளி நூற்றாண்டு நிகழ்வில்தான் முதலில் இது குறித்துப்பேசினேன். எப்படி கொற்கை-வஞ்சி-துண்டி வளாகம் குறித்து அஸ்க்கோ பார்ப்பலோ, ஐராவதம் மகாதேவன் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டேனோ அதுபோலவே, ரிக் – இந்திரா – காந்தரா வளாகம் பற்றிய கோட்பாட்டை பண்பாட்டு மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி முன்னிலையில் வெளியிட்டேன். இதுவும் ஓர் இடப்பெயர் ஆய்வுதான். மனிதர்கள் மரம் அல்ல, அவர்கள் கால்நடை. தொடர்ந்து அவர்கள் பயணித்துக்கொண்டே இருக்கின்றார்கள், அதற்கேற்ப வரலாறும் மாறிச்செல்கின்றது. இந்த அடிப்படையில் தான் எனது மூதாதையர்களின், சங்க இலக்கியத்தை எழுதியவர்களின் மூதாதையர்கள் கட்டியெழுப்பிய பண்பாடே சிந்துவெளிப் பண்பாடு என்பதை நான் நிறுவமுற்பட்டேன். இதுபற்றிய முரண்பாடுகள் சிலருக்கு இருக்கலாம், சங்க இலக்கியத்தினை எழுதியவர்களின் முன்னோர் சிந்துவெளிப் பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொன்னால் எம்மையெல்லாம் வடக்கில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று சிலர் என்னிடமே சொன்னார்கள். ஆனால் எங்கள் மூதாதையர்கள் அங்கெல்லாம் பரந்து வாழ்ந்திருக்கின்றார்கள் என்கிற உண்மையச் சொல்லத்தான் வேண்டும். நாம் கண்ணகியை எடுத்துக்கொண்டால், சிலப்பதிகாரத்தின்படி கண்ணகி புகாரிலிருந்து மதுரைக்குப் போய், மதுரையில் இருந்து சேரநாட்டில் வஞ்சிக்குப் போனதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால், இலங்கையில் இருக்கின்ற தமிழர்களும் சிங்களவர்களும் கண்ணகியை வழிபடுகின்றார்கள். சொல்லப்போனால் தமிழ்நாட்டைவிட அதிகமாக இலங்கையில்தான் கண்ணகி வழிபாடு உள்ளது, ஆனால் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்பவர்கள் கண்ணகி மதுரையில் இருந்து இலங்கைக்குத்தான் நேரடியாக வந்ததாகச் சொல்லுகின்றார்கள். இவைதான் கதை மரபு. இப்போது ஒருவர் கேட்கலாம், கண்ணகி மதுரையில் இருந்து நேரே சேர நாட்டுக்குப் போனாரா அல்லது இலங்கைக்குப் போனாரா என்று. இரண்டு இடத்துக்கும் தமிழர்கள் போனார்கள், அவர்களுடன் சேர்ந்து கண்ணகியும் போனார் என்பதே உண்மை. இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் நாங்கள் இடப்பெயர் ஆய்வுகளைப் புரிந்துகொள்ளலாம்.
கொற்கை – வஞ்சி – தொண்டி வளாகத்துக்கு உரிமையாளார்களாகிய தமிழர்களின் முன்னோடிகளாகிய, சங்க இலக்கியத்தின் முன்னோடிகள் பெரிய, உலகத்தில் சிறந்த நகர நாகரிகமான மொஹஞ்சதாரோ-ஹரப்பாவினை உருவாக்கினார்கள் என்பதில் நான் பெருமையடைகின்றேன். சிலருக்கு அது பெருமைக்குரிய விடயமாக இல்லாமல் இருக்கலாம். மரபணு ஆராய்ச்சிகளை எடுத்துக்கொண்டால் இந்த உலகத்தில் எல்லோருமே வந்தேறிகள், இந்த உலகத்தில் எல்லோருமே புலம்பெயர்ந்தவர்கள், இந்த உலகத்தில் எல்லாருமே பயணப்பட்டவர்கள். ஆனால் வரலாறு எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது என்றால், யார் எங்கிருந்து எப்போது எங்கே போனார்கள்?, அங்கே போய் என்ன செய்தார்கள்? என்பதை வைத்தே வரலாறு தீர்மாணிக்கப்படுகின்றது.
எந்த மக்கள் எந்தக் காலகட்டத்தில் எங்கு பயணித்தார்கள்?, யாரோடு பழகினார்கள்?, அதனால் வரலாறு எப்படி மாறியது? என்றுதான் நாம் பார்க்கவேண்டும். அந்தவிதத்தில் நான் கொற்கை-வஞ்சி-தொண்டி வளாகத்தை முன்வைத்து சிந்துவெளி மக்களுடைய தென்னோக்கிய புலப்பெயர்வு சங்க இலக்கியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, சங்க இலக்கியத்துக்கும் சிந்து வெளிக்கும் ஒருமரபு வழித் தொடர்ச்சி இருக்கின்றது என்பதைச் சொல்லும்போது வடநாட்டில் இருக்கக்கூடிய வேதங்களையும், ராமாயணம், மகாபாரதத்தையும் பேசக்கூடிய ஆரிய மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்றும் பேசவேண்டிய தேவையும் இருக்கின்றது அல்லவா?
அதற்கானதுதான் இந்த ரிக் -இந்திரா- காந்தரா வளாகம். எப்படி கொற்கை – வஞ்சி – தொண்டி வளாகத்துக்கு தமிழர்களைத் தவிர வேறுயாரும் உரிமை கொண்டாட முடியாதோ அதுபோலவே ஆரியர்களைத் தவிர அல்லது இந்தோ ஆரியர்களைத் தவிர வேறுயாரும் உரிமை கொண்டாடாத அடையாளங்களான ரிக் (R ), இந்திரன்(I), காந்தரா (G) ஆகியவற்றின் முதலெழுத்துகளைக் கொண்டு இந்த ரிக் -இந்திரா- காந்தரா வளாகம் என்ற பெயரை உருவாக்கினேன். இதனைஆங்கிலத்தில் RIG Complex என்றுசொல்லும்போது அதில் வருகின்ற, ரிக் என்பது கூட திராவிடர்கள் யாரும் உரிமை கோராத ரிக் வேதத்தின் பெயராக இருப்பதையும் திட்டமிட்டே செய்தேன்.
இந்த வரலாற்றை நான் இந்தோனேசியாவில் தொடங்கி, தாய்லாந்து என்று தொடர்ந்து தேடினேன். தாய்லாந்தில் ஓர் அயோத்தி இருக்கின்றது, அங்கிருக்கின்ற மன்னர்கள் தம்மை ராம் மன்னர்கள் என்று அழைப்பர். இந்தோனேசியாவின் விமானசேவைக்கு கருடா என்றே பெயர். பாண்டுரங்கன் என்ற பெயரில் அங்கே ஒரு ஊர் இருக்கின்றது. ஆனால், இங்கெல்லாம் இந்தச் சொற்கள் தென்னிந்திய மன்னர்களான பல்லவர்கள், சோழர்கள் மூலமாக இந்து மதம் அங்கு பரவும்போது போயின. இந்தப் பெயர்கள் வழங்கப்படுகின்ற இடங்களையெல்லாம் நான் திரட்டி அறிவியல் பூர்வமாக ஆராய்கின்றபோது இந்து மதப் பரம்பல் தென்னிந்தியா ஊடாக இந்தோனேசியா போன்ற கீழை நாடுகளுக்குப் பரவுவதற்கு முன்னால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக கிர்கிஸ்தான், தர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், அசர்பைஜான், ஜோர்ஜியா வரை சென்றிருக்கின்றது. இப்படியாக இந்தக் கதைப்பெயர்களையும், இடப்பெயர்களையும், சீதை தேடப்பட்ட இடங்களையும் தொகுத்து அட்சரேகை, தீட்சரேகையுடன் நான் கொடுக்கின்றேன். கணேசா, வியாஸ், சத்திரியன், பிராமணா, சூத்திரா என்கிற பெயர்களும் வர்ணக்கோட்பாடும் எப்படி வந்தது என்பதை இடப்பெயர் ஆய்வின் மூலம் நிரூபிப்பதாக அறிவித்திருக்கின்றேன். ரிக்-இந்திரா- காந்தரா வளாகத்தினை வெளிப்படுத்தும் அந்த நூலை நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கின்றேன். இதை முடித்தவுடன் நான் இரண்டு முக்கியமான அறிவுப்புகளைச் செய்தவனாக இருப்பேன்.
? உங்களுடைய ஆய்வுப் பயணத்தில் தொழினுட்பத்தின் வளர்ச்சியை உள்வாங்கிப் பயணித்தவர்கள் நீங்கள். உங்களது ஆய்வுகளில் / இனிவரும் காலத்தில் இதுபோன்ற ஆய்வுகளில் AI தொழினுட்பத்தின் உதவியும் பாதிப்பும் எப்படி இருக்கும்.
இதுவும் ஒரு முக்கியமான கேள்வி. ஒரு மொழிக்குத் தோற்றத்தைப் போலவே தொடர்ச்சியும் முக்கியமானது. தோற்றம் அதன் தொன்மையைக் காட்டுவது, தொடர்ச்சி அதன் இளமையைக் காட்டுவது. எனவே தோற்றத் தொன்மையும் தொடரும் இளமையும் மொழிக்குச் சிறப்பினைத் தருவனவாயிருக்கின்றன. அதற்கு தொழினுட்பத்தை மொழி பயன்படுத்திக்கொள்வது அவசியமானது. சங்க இலக்கியம் முதலில் பாறைகளில் தமிழி எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும். பின்னர் பாறைகளில் இருந்து ஏட்டுக்கு வந்திருக்கும், பின்னர் அச்சுக்கலை வந்தபின்னர் அதனை அச்சுவடிவுக்கு மாற்றினார்கள். இங்கே தொழினுட்பம், சங்க இலக்கியம் பரவுவதற்கும் அந்தப் பரவல் ஜனநாயகப்படுத்தப்படுவதற்கும் உதவியிருக்கின்றது. பின்னர் கணினி, இணையம், செயலி என்று தொழினுட்பங்கள் ஊடாக மொழியும் இலக்கியங்களும் பரவின. இப்போது ஒரு சாதாரணத் தொலைபேசியிலேயே ஒரு நூலகத்தில் இருக்கின்ற அளவுக்குப் புத்தகங்களை மின்னூல்களாகச் சட்டைப்பையில் வைத்துக் காவிச்செல்லலாம். இதன்அடுத்த கட்டப் பாய்ச்சலாக Artificial Intelligence, Machine Intelligence ஆகியவற்றைச் சொல்லலாம். எதிர்காலத்தில் இந்தத் தொழினுட்பங்களின் பாவனைகள் பரவலாகும்போது cloud களில் சேகரிக்கப்பட்டுள்ள தரவுகளில் இருந்தே அறிவுசேகரிக்கப்படுவது நடக்கும். கற்கள், எழுதுகோல், பேனா, தட்டச்சு, என்றிருந்த எழுதுகின்ற முறைகள் தற்போது பேச்சினை எழுத்துவடிவுக்கு மாற்றுகின்ற (Voice to type) தொழினுட்பமாக வளர்ந்துள்ளது. இது இன்னும் செம்மையாகும். தகவல் தொழினுட்பமும் இப்படியான ஒலிப்பதிவுகளில் இருந்தும் தரவுகளைத்தேடி எடுக்குமளவு வளர்ச்சிபெறும். நான் ரிக் -இந்திரா- காந்தரா வளாகம் பற்றிப் பேசி 30 நாள் கூட ஆகவில்லை, அதற்குள்ளேயே ChatGPT நான் பேசிய காணொலியைப் புரிந்துகொண்டு அந்த விபரங்களைக் கொடுக்கின்றது. பாறைகளில் இருந்து இணையம்வரை எப்படித் தமிழ் பயணப்பட்டதோ அதுபோல Artificial Intelligence, Machine Intelligence. Meta Data, Cloud Information போன்ற தொழினுட்பங்களூடும் தமிழ் பயணப்படும். அதற்கு நாம் ஆவன செய்யவேண்டும். ஒரு காலத்தில் வேற்றுக்கிரகங்களுக்கு மனிதர்கள் இங்கிருந்து பயணித்தால் தமிழும் அவர்களுடன் சேர்ந்தே பயணிக்கும்.
பின்குறிப்பு:
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான இயல் விருதினைப் பெற்றுக்கொள்வதற்காக ஒக்ரோபர் 2024 இல் கனடா வந்திருந்த ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுடனான நேர்காணல் ஒன்றினை இனிய தோழமையான சத்தியதேவனும் நானும் இணைந்து தாய்வீடு இதழுக்காக செய்திருந்தோம். இந்நேர்காணல் நவம்பர் 2024 தாய்வீடு இதழிலும் வெளியானது.



Leave a comment