இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நிறைய சூப்பர் ஸ்டார்களால் ஆனது என்று சொல்வார்கள். எனக்குக் கிரிக்கெட் அறிமுகமான காலத்தில், இந்தியாவில் இருந்து வருகின்ற தமிழ் இதழ்கள் தந்த அறிமுகத்தால் கவாஸ்கர், கபில்தேவ் என்கிற நாயகர்களின் வழிபாட்டுடன் சேர்ந்தே கிரிக்கெட்டும் அறிமுகமாகி இருந்தது. பின்னர் வெவ்வேறு காலப்பகுதிகளில் சச்சின், கங்கூலி, ஷேவாக், தோணி, கோலி, என்று அந்த ”சூப்பர் ஸ்ரார்” மரபு தொடர்ந்தது. இந்த நாயக வழிபாடு கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை என்கிற விமர்சனங்களும் நடந்தபடிதான் இருக்கின்றன. அந்த உரையாடலை கிரிக்கெட் ரசிகர்களும் அந்த நாயகர்களின் ரசிகர்களும் வைத்துக்கொள்ளட்டும். ஆனால், இந்தியக் கிரிக்கெட்டின் முதலாவது சூப்பர் ஸ்ரார் என்று சொல்லத்தக்கவர் யார்? இந்தியா விளையாடிய உத்தியோக பூர்வமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் 1932 இல் இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸ் மைதானத்தில் விளையாடிய போட்டி என்றாலும் அதற்கு முன்னர் முதன்முதலாக “அனைத்து இந்திய அணி” (All India Team) இங்கிலாந்துக்கு 1911 இல் உத்தியோகபூர்வமில்லாத போட்டிகளில் விளையாடச் சென்றபோது தனது பந்துவீச்சில் கலக்கி, 23 போட்டிகளைக் கொண்டிருந்த அந்த நீண்ட தொடரில் 114 விக்கட்டுகளை, விக்கட் ஒன்றுக்கு 18.8 என்கிற சராசரியுடன் வீழ்த்திய பந்துவீச்சாளரான பல்வங்கர் பலூ தான் உண்மையில் அவ்விதம் அறியப்பட்டிருக்கப்பட வேண்டியவர். கிட்டத்தட்ட அவரது சமகாலத்தவரான இங்கிலாந்தைச் சேர்ந்த வில்ஃப்ரெட் ரோட்ஸின் (Wilfred Rhodes) பந்துவீச்சுடன் ஒப்பிட்டு, இந்தியாவின் ரோட்ஸ் என்று இந்தத் தொடர் நடந்த காலப்பகுதியில் கிரிக்கெட் விமர்சகர்களால் புகழப்பட்டவர் பல்வங்கர் பலூ. புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளரும், கிரிக்கெட்டின் வரலாற்றையும் அரசியலையும் பற்றி எழுதிவருபவருமான ராமச்சந்திர குஹா எழுதிய “A Corner of a Foreign Field: An Indian history of a British sport” என்கிற நூலில், இங்கிலாந்துக் கிரிக்கெட்டுக்கு எப்படி WG. கிறேஸ் அடையாளமாகவும் அதன் முழுமையான முதலாவது வீரராகவும் மதிக்கப்படுகின்றாரோ, அதுபோலவே இந்தியக் கிரிக்கெட்டுக்கு பல்வங்கர் பலூவே அடையாளமாகவும் அதன் முழுமையான முதலாவது வீரராக மதிக்கப்படவேண்டும் என்று சரியாகவே குறிப்பிடுகின்றார்.
அப்படி இருந்தும், சர்வதேச கிரிக்கெட்டில் அதிகாரமிக்கவர்களாக இந்தியக் கிரிக்கெட் வாரியம் இருக்கின்றபோதும், இந்தியாவில் அதன் முக்கியமான பழைய வீரர்களை நினைவுகூரும் விதத்தில் ரஞ்சி கோப்பை, இரானி கோப்பை, தியோதர் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை என்று பல்வேறு போட்டிகள் நடக்கின்றபோதும் பலூவை நினைவுகூரும் விதமாக எதுவும் நடப்பதில்லை; அவர் பெயர் கூட பெரிதும் குறிப்பிடப்படுவதில்லை என்பவற்றைக் குறிப்பிட்டு பல்வங்கர் பலூ தலித்தாக இருந்ததாலேயே அவருக்குச் சரியான இடமும் மரியாதையும் கொடுக்கப்படவில்லை என்கிறார் ராமச்சந்திர குஹா.
பிரிட்டிஷ் இந்தியாவில், பம்பாய் இராசதானியின் கீழ் உள்ளடக்கப்பட்டிருந்த தார்வாட் என்ற இடத்தில் 1875 இல் பிறந்தவர் பல்வங்கர் பலூ. பிறப்பால் சமர் என்கிற தலித் சாதியைச் சேர்ந்தவராக பல்வங்கர் பலூ இருந்தார். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இவரது தந்தையார் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்துவந்தார். பல்வங்கர் பலூவையும் சேர்த்து நான்கு ஆண் பிள்ளைகளைக் கொண்ட அந்தக் குடும்பத்திற்கு அவரது தந்தையின் வருமானம் போதவில்லை என்பதால், சிறுவயதிலேயே பலூவும் அவரின் தம்பி சகோதரர் சிவ்ராமும் பார்சி ஜிம்கானா என்கிற கிரிக்கெட் மைதானத்தில் மைதான ஊழியர்களாக (Ground staff) வேலைக்குச் செல்கின்றனர். ஆரம்பகாலத்தில் ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் விளையாடியதைப் பார்த்து, அவர்களுடன் வியாபார உறவுகளை வைத்திருந்த பார்சிக்களும் கிரிக்கெட் விளையாடத் தொடங்குகின்றனர். இவ்வாறாக மெல்ல மெல்ல இந்தியர்களுக்கும் கிரிக்கெட் அறிமுகமாகின்றது. பின்னர் பம்பாய் பார்சி ஜிம்கானா,பம்பாய் முஸ்லிம் ஜிம்கானா, பம்பாய் இந்து ஜிம்கானா என்று முறையே தனி மைதானங்களும் கிடைக்கின்றன. இப்படியாகத்தான் இந்தியர்கள் மத்தியில் கிரிக்கெட் செல்வாக்குப் பெறுகின்றது.
புனேயில் இருந்த பம்பாய் பார்சி ஜிம்கானா மைதானத்தில் தான் பலூவும் அவர் தம்பியும் வேலைக்குச் செல்கின்றனர். அங்கே பார்சிகள் கிரிக்கெட் விளையாடிய பின்னர் விட்டுச் சென்ற கிரிக்கெட் உபகரணங்களை வைத்து பலூவும் அவரது தம்பி சிவ்ராமும் கிரிக்கெட் விளையாடப் பழகிவிடுகின்றனர். இங்கே பலூவிற்குக் கிடைத்த சம்பளம் மாதம் 3 ரூபாய். அதன்பிறகு 1892 அளவில் அவர் புனேயில் இருந்த ஐரோப்பியரின் ஜிம்கானாவுக்கு அதே மைதான உதவியாளர் பணிக்கு 4 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலைக்குச் சேருகின்றார். அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவ அதிகாரியாகவும், கிரிக்கெட், ரென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவருமான ஜே.ஜி. க்றேக்கும் (John Glennie Greig) அதே மைதானத்தில்தான் பயிற்சி எடுத்தது பலூவின் கிரிக்கெட் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. பலூவிடம் இயல்பாகவே உள்ள திறமையை அடையாளங் கண்டுகொண்ட க்றேக், தான் பயிற்சி எடுப்பதற்காக பலூவைப் பந்துவீசும்படி கேட்பதுடன், பலூ தன்னை ஆட்டமிழக்கச் செய்யும் ஒவ்வொரு தடவையும் தான் 8 அணாக்களைப் பரிசாகத் தருவேன் என்றும் ஊக்குவிக்கின்றார். அந்த ஊக்குவிப்பினால் சிறப்பாகப் பந்துவீசு க்றேக்கினை ஆட்டமிழக்கச் செய்து, பலூ கிடைக்கவேண்டிய சம்பளத்திலிருந்து மூன்று மடங்கு சம்பளத்தைப் பேறுக்கொண்டார். இவ்வாறாகத் தான் பூனா கிரிக்கெட் க்ளப்பில் நூற்றுக்கணக்கான மணித்தியாலங்கள் பந்துவீசியிருந்தாலும் ஒரு தடவை கூட தனக்கு துடுப்பாடச் சந்தர்ப்பம் தரப்படவில்லை என்பதைத் தனது மகனிடம் பகிந்துள்ளார் பலூ. அந்நாட்களில் கிரிக்கெட்டில் துடுப்பாடுவது “உயரடுக்கைச் சேர்ந்தவர்களுக்கும் பிரபுக்களுக்குமான” ஒன்றாகப் பார்க்கப்பட்டதாம்.[i]
இக்காலத்தில் பலூவின் பந்துவீச்சுத் திறன் பற்றி ஐரோப்பிய ஜிம்கானாவில் நன்கு பேசப்படுகின்றது. அன்றைய சமகாலத்தில் பார்சி அணியைச் சேர்ந்த புகழ்பெற்ற பந்துவீச்சாளரான Dr. M.E. Pavri பலூ பற்றி, “அவர் சிறந்த உள்ளூர்ப் பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவர் வீசும் பந்து காற்றில் வளைந்தும், கூர்மையாகத் திரும்பியும் வருவதுடன் நன்கு சுழலவும் செய்கின்றது. கடினமான பிட்ச்களில் விளையாடுவதற்கு அச்சுறுத்தலாக இருப்பவர்” (one of the best native bowlers. He both breaks and curl in the air and has a lot of spin on the ball. The most deadly bowler in sticky wicket) என்று எழுதும் அளவிற்கு பலூவின் திறமையும் புகழும் பரவியிருக்கின்றன. பலூவின் திறமையை ஆரம்பத்திலேயே கண்டறிந்தவரான ஜே.ஜி. க்றேக்கும் தொடர்ந்து பலூவைப் பற்றிப் பேசுகின்றார். இந்து ஜிம்கானா அணி பலவீனமானதோர் அணியாக அன்று இருந்தது. அப்படியிருந்தும் கூட பார்ப்பனரே அந்த அணியில் நிறைந்திருந்ததால் சமர் என்கிற தலித் சாதியைச் சேர்ந்த பலூவை அணிக்குள் தேர்ந்தெடுக்க அவர்கள் விரும்பவில்லை. பலூ அணிக்குள் சேர்க்கப்படாமல் இருப்பதற்கு சாதியே காரணம் என்பதை உணர்ந்துகொண்ட ஜே.ஜி. க்றேக் “பலூவின் திறமையைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது இந்துக்கள் அணியின் முட்டாள்தனம்” என்று பத்திரிகையாளரிடம் குறிப்பிட்டிருந்தார்.
பலூவைத் தமது அணிக்குள் சேர்த்தால் அணி பலம்பெறும் என்பது இந்துக்கள் அணியில் இருந்த பார்ப்பனர்களுக்குத் தெரியாமல் இருந்திருக்காது. ஆனால் அவர்களது சாதிய மனப்பாங்கு அதற்கு இடங்கொடுக்கவில்லை. இறுதியில் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கில் பலூவை புனே இந்துக்கள் அணியில் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால் மைதானத்தில் ஒன்றாக விளையாடினார்களே தவிர தீண்டாமைக் கொடுமையை அவர்கள் கைவிடவில்லை. தேநீர் இடைவேளையின்போது மற்ற வீரர்கள் எல்லாம் மைதானத்தை விட்டு வெளியேறியபோதும், பலூவை மாத்திரம் மைதானத்தின் எல்லையில் ஒரு முக்காலியில் இருக்கவைத்து களிமண்ணால் ஆன கோப்பையில், இன்னொரு தலித்தை வைத்து அவருக்குத் தேநீர் பரிமாறினார்கள். இன்று களிமண் கோப்பை என்பது கலை வெளிப்பாடுள்ள ஒன்றாகக் கருதப்பட்டு நட்சத்திர உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருக்கின்றது. ஆனால் அந்நாட்களில் அது பொது இடங்களில் தலித்துகளுக்கு உணவு கொடுத்துவிட்டு அவர்கள் பாவித்தபின்னர் உடைத்து நொறுக்கப்பட்ட ஒன்றாகும். அதுமட்டும் அல்லாமல் பலூவை மைதானத்தின் எல்லையில் வைத்து தேநீர் கொடுத்ததன் மூலம், பார்வையாளர்கள் அனைவருக்கும் பார்ப்பனர்கள் எவரும் பலூவுடன் ஒன்றாக இருந்து தேநீரோ உணவோ அருந்தவில்லை என்பதையும் காட்டிக்கொண்டார்கள். பலூவின் திறமையால் வெற்றிபெற்றும் கூட சாதிய மனப்பான்மை அவ்விதம் வெளிப்பட்டிருக்கின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் பயன்படுத்துகின்ற தோட்டக்களின் மீது பன்றிக் கொழுப்பும் பசுவின் கொழுப்பும் பூசப்படுவதாக ஒரு வதந்தி பரப்பப்படுகின்றது. இதனால் ராணுவத்தில் பணிபுரிந்துவந்த இந்துக்களும் (அன்று சாதி இந்துக்கள் என்றழைக்கப்பட்ட ஆதிக்க சாதி இந்துக்கள்), முஸ்லிம்களும் பலவிடங்களில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்துக்கு எதிராகக் கலகம் செய்கின்றனர். பலர் ராணுவத்தை விட்டு விலகியும் சென்றனர். அதுவரை காலமும் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சமர்கள் உள்ளிட்ட தலித்துகள் துப்புரவுப்பணிகளையும் இழிவானதாகக் கருதப்பட்ட பணிகளையுமே செய்துவந்தனர். இந்தச் சூழலில் பிரித்தானியர், ராணுவத்தில் ஆட்களின் தொகையை இட்டு நிரப்பவும், சாதி இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர் ஆகியோரின் அதிகாரத்தைக் குறைக்கவும் சமர்கள் உள்ளிட்ட தலித்துகளை ராணுவ வீரர்களாகவே சேர்க்கத் தொடங்கினர்.[1] 1897இல் ராணுவத்தில் பணிபுரிவதற்காக பலூவும் பம்பாய்க்கு இடம்பெயர்கின்றார். அங்கே அவரது பந்துவீச்சுத் திறமை இன்னும் மெருகேறுவதுடன் பலூவும் இன்னும் பிரபல்யமாகின்றார்.
ஆங்கிலேயர்களுக்கும் பார்சிகளுக்கும் இருந்த வணிக உறவுகளினால் அவர்களுக்கிடையில் நிலவிய நெருக்கம் பற்றி முன்னரும் பார்த்தோம். அதுவரை பம்பாயில் ஆங்கிலேயர்களின் பம்பாய் ஜிம்கானாவுக்கும் பார்சி ஜிம்கானாவுக்கும் இடையிலேயே கிரிக்கெட் போட்டிகள் நடந்துவந்தன. பலூ உள்ளிட்ட சிறந்த வீரர்களைக் கொண்டிருந்த இந்து ஜிம்கானா, 1906 இல் பார்சி ஜிம்கானாவை கிரிக்கெட் போட்டி ஒன்றுக்கு அழைத்தது. ஆயினும் வகுப்புவாத வேறுபாடுகளைக் காரணங்காட்டி பார்சி ஜிம்கானா, இந்து ஜிம்கானாவுடன் விளையாட மறுப்புத்தெரிவித்தது. அதேநேரம் பம்பாய் ஜிம்கானா இந்து ஜிம்கானாவுடன் விளையாடும் சவாலை ஏற்றுக்கொண்டது. இவர்கள் இருவருக்கும் இடையில் பெப்ரவரி 6, 1906 இல் நடைபெற்ற போட்டியே ஐரோப்பியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் போட்டியாகும். இந்தப் போட்டியில் பலமிக்க பம்பாய் ஜிம்கானா அணியை இந்து ஜிம்கானா அணி 110 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் பலூ இரண்டு இன்னிங்சுகளிலும் சேர்த்து மொத்தம் 8 விக்கெட்டுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் இந்து ஜிம்கானாவின் வெற்றிக்கு மூல காரணமானார். இந்தப் போட்டியின் போது இரண்டு அணியைச் சேர்ந்த வீரர்களும் ஒன்றாக உணவு அருந்துவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்தப் போட்டிக்கும் முன்னரே பலூவையும் அவர் தம்பி சிவ்ராமையும் தமது மைதானத்துக்குள்ளும், தேநீர்ச்சாலைக்குள்ளும் அனுமதிப்பது என்கிற நிலைப்பாட்டிற்கு வந்திருந்தனர். பிரித்தானியருக்கு எதிரான தேசிய உணர்வும் விடுதலைப் போராட்டமும் பரவிவந்த அக்காலகட்டத்தில், தலித்களும் சாதி இந்துக்களும் ஓரணியில் விளையாடியதையும் அவர்கள் ஐரோப்பியர்களின் அணியை வெற்றிபெற்றதையும் தேசிய எழுச்சிக்கான நேர்மறையான ஒரு சமிக்ஞையாக The Indian Social Reformer என்கிற பத்திரிகை எழுதியது. இந்த வெற்றி பின்வருமாறு அரசியல் காரணங்களுக்காகவும் வரவேற்கப்பட்டது[2];
“பூனாவையும் பம்பாயையும் சேர்ந்த இந்து விளையாட்டு வீரர்கள், தேசிய நலனை வென்றெடுப்பதற்கு, முன்னிருந்த வழக்கங்களை உடைத்தேனும் அனைத்துச் சாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்குவது அவசியம்.
விளையாட்டில் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை அரசியல், சமூகம் மற்றும் கல்வி போன்றவற்றிலும் தொடரவேண்டும். உயர்ந்தோர், தாழ்த்தப்பட்டோர், மிகவும் தாழ்த்தப்பட்டோர் என்று தேசத்தின் ஒற்றுமைக்கும் தேசிய உணர்விற்கும் குந்தகம் செய்கின்ற பழைய வழக்கங்கள் எல்லாம் ஒழிந்து உலகத்தாரின் கேலிப்பொருளாக இருப்பதிலிருந்து இந்தியா விடுதலை பெறட்டும்”
அடுத்த ஆண்டு, 1907 இல் பார்சி ஜிம்கானாவும் இந்து ஜிம்கானாவுடன் விளையாடுவதற்கு இணங்க, ஐரோப்பியரின் பம்பாய் ஜிம்கானா, இந்து ஜிம்கானா, பார்சி ஜிம்கானாக்களுக்கு இடையிலான முத்தரப்புப் போட்டிகளாக (Bombay Triangular winners) நடைபெற்றது. இப்போட்டிகளில் 1907 முதல் 1912 வரையான 5 ஆண்டுகளும் இந்து ஜிம்கானா அணியே தொடர்ச்சியாக வெற்றிபெற்றது. பலூவுடன் சேர்த்து அவரது தம்பியர் சிவ்ராம், கண்பத், விதால் ஆகியோரும் இந்து ஜிம்கானா அணியின் நிரந்தர வீரர்களாக விளங்கினர். அணியும் பலமிக்க அணியாக விளங்கியது.
பலூவின் கிரிக்கெட் வாழ்வின் மிகமுக்கியமான கட்டமாக அனைத்திந்திய அணி முதன்முதலாக இங்கிலாந்துக்குச் சென்ற 1911 ஆம் ஆண்டு அமைந்தது. 14 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இந்தியர்களால் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது; ஆனால் பலூவின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக அமைந்திருந்ததுடன் புகழையும் அவருக்குப் பெற்றுத்தந்தது. இந்த 14 முதல் தரப் போட்டிகளில் பலூ 75 விக்கெட்டுகளை 20.12 என்ற சராசரியுடனும் பிற போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 22 போட்டிகளில் 114 விக்கெட்டுகளை 18.84 என்ற சராசரியுடனும் பெற்றிருந்தார். இந்தத் தொடரில் பலூவின் தம்பி சிவ்ராமும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 930 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இந்தியர்கள் சார்பில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களில் இரண்டாவதாகவும் அவர் இருந்தார். இங்கிலாந்தைச் சேர்ந்த்அ புகழ்பெற்ற விமர்சகரான E.H.D Sewell என்பவர் “இங்கிலாந்தில் இருக்கும் எந்த ஒரு கவுண்டி அணியும் பல்வங்கர் பலூ போல ஒரு பந்துவீச்சாளர் கிடைத்தால் பெருமகிழ்வடைவார்கள்” என்று எழுதியிருந்தார். பலூ, சிவ்ராமின் இளைய சகோதரர் விதாலும் இந்த அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்திலிருந்து திரும்பிய பலூவுக்கு பம்பாய் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சங்கத்தின் சார்பில் ஒரு பாராட்டுவிழாவும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் பலூவை வாழ்த்திப் பேசியவர்களில் அப்போது இருபது வயது மாணவராக இருந்த அம்பேத்கரும் ஒருவரும். அம்பேத்கர் கலந்து கொண்ட முதலாவது பொதுநிகழ்வாக இதுவே பதிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.[3]
இக்காலப்பகுதியில் பம்பாய் முத்தரப்பு போட்டிகளில் முஸ்லிம் ஜிம்கானாவும் சேர்ந்துகொள்ள, அவை நாற்தரப்புப் போட்டிகளாக பரிணமித்தன. தனது ஆட்டத்திறனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி அணிக்குள் ஒரு நாயகனாக இருந்தபோதும் அணித்தலைவராக பலூவைத் தேர்வுசெய்யவில்லை. MD Pai என்கிற பார்ப்பனரே அணித்தலைவராக இருந்தார். அவரது சாதியைச் சேர்ந்த சங்கத்தினர் அவருக்கு 1913 இல் வைத்த பாரட்டுக் கூட்டமொன்றில் “அணித் தலைவர் பதவியானது தனது நண்பரும் மூத்த வீரரும், அனுபவசாலியுமான பல்வங்கர் பலூவிற்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும்” என்று MD Pai வெளிப்படையாகவே தெரிவித்தார். ஒப்பீட்டளவில் குறைந்த உடலுழைப்பைக் கோருவதாகவே அன்றைய கிரிக்கெட் இருந்தது. அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டில் அணித்தலைவர் சிந்தித்து, முன்கூட்டியே திட்டமிட்டு முடிவெடுக்கும் ஆற்றலுடையவராக இருக்கவேண்டும் என்றும் அந்தத் தகுதி பார்ப்பனர்களுக்கும் அவர்களை ஒத்த ஆதிக்க சாதியினருக்குமே இருப்பதாகவும் அன்று நம்பவைத்திருந்தார்கள். பல்வங்கர் பலூவின் அணியில் விளையாடிய சகவீரர்கள் அவரது திறமையில் மதிப்புக் கொண்டிருந்தபோதும் இந்து ஜிம்கானாவைத் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த வணிகர்கள், வக்கீல்கள் போன்றவர்கள் பல்வங்கர் பலூவை அணித்தலைவராக்குவதற்கு உடன்படவில்லை என்று ராமச்சந்திர குஹா குறிப்பிடுகின்றார். ஆயினும் 1915 இல் இந்து ஜிம்கானா அணியில் இருந்து சரியான காரணங்களைச் சொல்லாமல் பல்வங்கர் பலூ நீக்கப்பட்டபோது, அதை நியாயப்படுத்துவது போல பூசிமெழுகியபடி பேசியவர்களில் MD Pai உம் ஒருவர். ரசிகர்களும் பத்திரிகைகளும் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களும் வெளிக்காட்டியபின்னர் பல்வங்கர் பலூ அணிக்குள் மீண்டும் சேர்க்கப்படுகின்றார். 1915 முதல் 1919 வரை பல்வங்கர் பலூவை இந்து ஜிம்கானா அணிக்குத் தலைவராக்கவேண்டும் என்று பரப்புரைகள் நடந்தும் அது கைகூடவில்லை.
இந்த நிலையில் 1920 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இந்து ஜிம்கானா அணித்தேர்வு அறிவிக்கப்பட்டபோது பலூ மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்ததுடன் MD Pai மீண்டும் அணித்தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆயினும் அவ்வாண்டுக்கான முதலாவது போட்டி தொடங்குவதற்கு முன்னரே MD Pai உடல்நிலை காரணமாக போட்டியில் இருந்து விலகிக்கொள்கிறார். தற்போது அணியில் அடுத்த நிலையில் உள்ள மூத்த வீரர்களும் திறமையான வீரர்களுமான பலூவின் சகோதரர்கள் சிவ்ராம், விதால் ஆகியோரில் ஒருவரே அணித்தலைவராக நியமிக்கப்படுவர் என்று இந்து ஜிம்கானாவைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்த்தனர். அந்த நியாயமான எதிர்பார்ப்பு தனக்கும் இருந்ததாக விதாலும் தனது நினைவுக்குறிப்பில் பதிவுசெய்துள்ளார். ஆயினும் அணித்தலைவராக தியடோரை (DB Deodhar) தேர்வாளர்கள் அணித்தலைராக அறிவிக்கின்றனர். தியடோரும் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தபோதும் அவருக்கு நிகரான அல்லது விஞ்சிய திறனுடையவர்களாக பலூவும் சகோதரர்களான சிவ்ராமும் விதாலும் இருந்தார்கள் (பலூவின் கடைசித்தம்பியான கன்பட் இளவயதிலேயே 1918 இல் இறந்திருந்தார்). இவர்கள் அனைவரும் தியடோரை விட அனுபவத்தில் கூடியவர்களாக இருந்தார்கள். பலூவுக்கு அணித்தலைவர் பதவி கொடுக்கப்படவேண்டும் என்ற அழுத்தம் எழுந்துகொண்டிருந்தபோது அவர் அணியில் இருந்தே நீக்கப்பட்டதும், அவரது தம்பியர்களுக்கு அணித்தலைமை பதவி கொடுக்கப்படாமையும் பார்ப்பனரான தியடோர் அணித்தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டதும் சாதிய அடிப்படையிலான அநீதியே. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவ்ராம், விதால் உள்ளிட்ட சில வீரர்கள் போட்டியில் விளையாடாமல் புறக்கணிக்கின்றார்கள்.
இந்தப் புறக்கணிப்புக்கான காரணங்களைச் சொல்லி இவர்கள் வெளியிட்ட அறிக்கை அவ்வாண்டின் முதல்போட்டியான இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான போட்டியின் முதல்நாளன்று வெளியான தினசரிப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்தது. இந்த அறிக்கையின் தெளிவையும் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும்பொருட்ட அறிக்கையின் கடைசிப் பகுதியின் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:
“தனது நிலைப்பாட்டிற்கு இந்து தேர்வுக் குழு சொல்கின்ற முன்னுக்குப் பின் முரணான காரணங்கள் இந்துக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணியில் இருந்து விலகி, விளையாடாமல் புறக்கணிக்கும் நிலைக்கு எம்மைத் தள்ளியது. இந்து கிரிக்கெட் அணியின் சாதனைகளுக்கு நாமும் பங்களிக்கவேண்டும் என்கிற எமது உண்மையான விருப்பத்திற்கு எதிராகவே இந்த முடிவை நாம் எடுத்துள்ளோம்.
எம்மை “தாழ்த்தப்பட்டவர்கள் (so-called depressed class)” என்று அடையாளம் சுமத்தி எம்மீது நேரடியாகவோ மறைமுகமாகவோ நிகழ்த்தப்படும் இழிவுகள், எங்களுக்கான அங்கீகாரத்தையும் உரிமைகளையும் நிரந்தரமாக நிராகரிப்பதற்கு சமமானதாகவே அமைகின்றன. சாதி என்பது கிரிக்கெட்டில் தீர்மானிக்கின்ற காரணியாக இருக்கின்றது என்பதனை மௌனமாகத் தலைவணங்கி ஏற்க எம்மால் முடியாது என்பதால் இந்த ஆண்டுக்கான இந்து அணியில் இருந்து விலகவேண்டும் என்று முடிவெடுத்தோம்.
எமது கொள்கையையும் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ள (இந்து கிரிக்கெட் தேர்வாளர்களின்) செயலே எம்மை இந்த நிலைப்பாட்டுக்குள் தள்ளியது என்பதைப் புரிந்துகொண்டு கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் மக்கள் எம்மைப் பழிப்பதிலிருந்து விலகுவார்கள் என்று நம்புகிறோம்.”
இதன் தொடர்ச்சியாக நடந்த விடயங்கள் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றவை. சிவ்ராம், விதால் உள்ளிட்டோர் அணியில் இருந்து விலகிச் செய்த புறக்கணிப்பு, அதற்கு அப்போது பலம்பெற்று வந்து தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினர் கொடுத்த ஆதரவு போன்றவற்றுடன், முக்கியமாக பல்வங்கர் சகோதரர்களின் திறமை இந்து ஜிம்கானா அணிக்குத் தேவைப்பட்டதும் சேர்ந்து இந்தி ஜிம்கானா தனது முடிவை முதலாவது போட்டியின் இறுதிநாளன்று ஒரு போஸ்ரர் ஊடாக “PAI CAPTAINING THE TEAM: BALOO BROTHERS PLAYING” என்று அறிவித்திருந்தது. அணியிலிருந்து நீக்கப்பட்ட பலூவும் அணிக்குத் திரும்ப அழைக்கப்பட்டிருந்தார். முதலில் மறுத்திருந்தாலும் பின்னர் பலரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க பலூவும் அணியில் இணைந்துகொண்டார். நியாயப்படி அணித்தலைவராக எப்போதோ தேர்வு செய்யப்பட்டிருக்கப்படவேண்டிய பலூ இப்போது உபதலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். தம் நல்லெண்ணத்தையும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக MD Pai, பார்சிகள் அணியினர் துடுப்பாடும்போது களத்திலிருந்து வெளியே செல்ல பலூ அணியை தலைமை தாங்கினார். தமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய உரிமைகளின் சிறுபகுதியை அடைவதற்குக் கூட தலித்துகள் போராடத்தான் வேண்டி இருக்கின்றது என்பதையே இதுவும் காட்டுகின்றது.
ஆனால் 1922 இல் நான்கு அணிகளுக்கிடையிலான போட்டிகள் பல்வங்கர் சகோதரர்களின் சொந்த இடமான பூனாவில் இடம்பெற்றபோது நிலைமை மீண்டும் மோசமானது. அன்றைய காலத்தில் பம்பாயில் இருந்த PJ இந்து ஜிம்கானாவுடன் ஒப்பிடும்போது பழமைத்தனத்தை இறுகப்பிடித்துக்கொண்டிருந்ததாக பூனா இந்து ஜிம்கானா இருந்ததுவும் தீண்டாமை தவறானது என்பதைக் கூட ஏற்றுக்கொள்ளாதவர்களாக அவர்கள் இருந்தார்கள் என்பதுவும் இதற்குக் காரணம். இம்முறை MD Pai ஓய்வுபெற்றுவிட, ஒப்பீட்டளவில் சாதாரணமான வீரரான SM Dalvi என்பவரை அணித்தலைவராக பூனா இந்து ஜிம்கானாவினர் நியமித்தனர். மறுபடியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விதாலும் சிவ்ராமும் விளையாடும் அணியில் இருந்து விலகிக்கொள்கின்றனர். வலுவான பார்சிக்கள் அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளவேண்டிய சூழலில் அணியை வலுப்படுத்தும் நோக்குடன், MD Pai ஐ மீண்டும் அணிக்குள் கொண்டுவந்து தலைவராக்குவதுடன் அவரது தலைமையின் கீழ் சிவ்ராமையும் விதாலையும் விளையாடச் செய்யலாம் என்கிற தந்திரத்தை பூனா இந்து ஜிம்கானா செய்ய முனைந்தது. ஆனால் MD Pai மீண்டும் விளையாட மறுத்துவிட, பல்வங்கர் சகோதாரர்களும் விளையாடவில்லை. இறுதிப்போட்டியில் பார்சிகளிடம் இந்து ஜிம்கானா அணி 121 ஓட்டங்களால் தோல்வியடைகின்றது.[ii] விதாலினதும் சிவ்ராமினதும் நிலைப்பாடு தமது உரிமையையும் சுயமரியாதையையும் கோருகின்ற ஒன்று என்பதைப் பற்றி அக்கறைப்படாமல், இந்து ஜிம்கானாவின் தோல்விக்குக் காரணம் இவர்களே என்று மறைமுகமாகக் குற்றஞ்சாற்றும் வேலையை பூனாவிலிருந்து வெளிவந்த பத்திரிகைகள் செய்தன. பால கங்காதர திலக் ஆங்கிலத்தில் வெளியிட்டு வந்த மஹ்ரட்ட (Mahratta) என்ற பத்திரிகை பின்வருமாறு எழுதியிருந்தது:
“”பார்சிகளின் வெற்றிக்கு நாங்கள் வாழ்த்துகளைக் கூறுகிறோம். இந்துக்கள் தங்களுடைய பலவீனங்களைக் ஈடு செய்வதுடன் தனிப்பட்ட விரோதங்கள் தமது செயல்திறனைத் தடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் வேண்டிக்கொள்கிறோம்.”
பூனாவில் நிலைமை இப்படி இருந்தபோதும் பம்பாயில் இதன் தாக்கம் நேர்மறையானதாக இருந்தது. B.V. வரேர்கள் (B.V. Varerkar) என்கிற நாடக ஆசிரியர் பூனா இந்து ஜிம்கானாவின் நிர்வாகிகளின் சாதியவாத நடவடிக்கைகளால் சிவ்ராமும், விதாலும் அணியில் விளையாடாமல் புறக்கணித்தையும் அதனால் இந்து ஜிம்கானா அணியினர் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததையும் விமர்சித்து இயக்கிய “Turungachya Darat (At the Gate of a Prison)” என்கிற நாடகம் பற்றித் தனது கட்டுரையில் ராமச்சந்திர குஹா தனது கட்டுரையில் குறிப்பிடும்போதும் அதன் தாக்கம் எவ்வாறு இருந்தது என்று தெரியவில்லை என்கிறார். ஆனால் இந்தத் தோல்விகளின் தாக்கம் 1923 இல் நடந்த இந்து ஜிம்கானாவின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் எதிரொலித்தது. முன்னைய ஆண்டின் தேர்வுக்குழு மீது நம்பிக்கையில்லாத் தீர்மாணம் கொண்டுவரப்பட்டு அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டுக்கான அணி தேர்வுசெய்யப்பட்டபோது அதன் தலைவராக விதால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அணித்தலைவராவதற்கான அனைத்துத் திறமைகளும் இருந்தும் பலூவுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவேயில்லை; 1921 இல் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று இரண்டே ஆண்டுகளில் அவர் தம்பியும் அக்காலத்தில் மிகப் பிரபலமாக துடுப்பாட்டக்காரராக விளங்கிய சிகே நாயுடுவுக்கு நிகராக ஒப்பிடப்பட்டவருமான விதால் பல்வங்கர் இந்து ஜிம்கானா அணியின் தலைவராகின்றார். அந்நாட்களில் மிகவும் லாவகமான விளையாடுவதற்குப் பெயர்பெற்றிருந்த விதாலைத் தனது கனவு நாயகன் என்று புகழ்பெற்ற துடுப்பாட்டக் காரரான விஜய் மெர்ச்சன்ட் குறிப்பிட்டுள்ளார். பலூ அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பரப்புரையும் தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே பலூவின் தம்பி விதால் அணித்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஒரு நீண்ட போராடத்தின் பின்னர் கிடைத்த நீதி.
அந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டி ஐரோப்பிய ஜிம்கானாவுடன் நடந்தது. அதில் முதல் இன்னிங்சில் 101 ஓட்டங்களைப் பெற்றதுடன் தனது சிறப்பான தலைமையினால் இந்து ஜிம்கானா அணிக்கு வெற்றியையும் தேடித்தந்தார் விதால். அவர் தலைமை தாங்கிய நான்காண்டுகளில் மூன்றாண்டுகள் அவரது அணிக்குச் சம்பியன் கோப்பையையும் பெற்றுத்தந்தார் விதால். அவர் தலைமை தாங்கிய நான்காவது ஆண்டில் சம்பியன் கோப்பையை பூனா மைதானத்தில் வெற்றிபெற்று அந்தச் சம்பியன் கோப்பையை பூனா மைதான அரங்கில் பெற்றுக்கொண்டார். இந்து ஜிம்கானாவின் மிகச் சிறந்த வீரராக இருந்தபோதும் பலூவுக்கு அந்த அரங்கில் (Pavilion) நுழைவதற்கான அனுமதி அவர் விளையாடும் நாட்களில் கிடைக்கவேயில்லை. அந்த வகையில் விதால் அதே பூனா மைதான அரங்கில் வைத்து சம்பியன் கோப்பையைப் பெற்றுக்கொண்டது முக்கியமான ஒரு நிகழ்வு.
1920 அளவில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைப் பற்றிப் பிரசாரம் செய்யத்தொடங்கியபோது, தீண்டாமை ஒழிக்கப்படுவது சுயராஜ்யத்துக்கு முக்கியமானது. அதுவே முழுமையாக சுயராஜ்யம் என்கிற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். இந்த இடத்தில் The Great Tamasha நூலில் ஜேம்ஸ் அஸ்ரில் (James Astill) குறிப்பிடுகின்ற, “பல்வங்கர் சகோதரர்கள் இந்தியாவின் தேசியக் கலாசாரத்தை அனுபவித்தர்கள் மட்டுமல்ல; அதனை உருவாக்கியவர்கள்” (The Palwankars were not merely enjoying India’s national culture, they were making it) என்பது முக்கியமானது. அணி வெற்றி பெறுவதற்கு பல்வங்கர் சகோதரர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாத ஒன்று என்கிற நிலை உருவானதும், பரவி வந்த தேசிய உணர்வின் காரணமாக சாதிய கட்டுப்பாடுகளில் ஏற்பட்ட தளர்ச்சியும் இக்காலப்பகுதியில் நேரடியாக உணரப்பட்டுள்ளது.
விதால் பல்வங்கர் 1932 ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற போது நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிர பூரண சுயராஜ்யத்தைக் கோரியிருந்தனர். பூனா ஒப்பந்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. காந்தியும் தீண்டாமை ஒழிப்பைப் பேசிக் கொண்டிருந்த அதேநேரம், இதே 1932 இல் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி வழங்குவதற்கு எதிராக உண்ணாவிரதமும் இருந்தார். இந்த விதத்தில் கிரிக்கெட்டில் தமது திறமையூடாக பல்வங்கர் சகோதரர்கள் செய்தது ஓர் எதிர்ப்பரசியல். இதனை அமெரிக்காவில் கருப்பினத்தவர்களான பேஸ்போல் வீரர் ஜக்கி ரொபின்சனும் (Jackie Robinson) குத்துச் சண்டை வீரர் முகம்மது அலியும் (Muhammad Ali) சாதித்ததுடன் ஒப்பிடுகின்றார் ராமச்சந்திர குகா
இக்காலப்பகுதியில் நேரடி அரசியலிலும் ஈடுபடுகின்றார் பலூ. பலூவின் திறமையும் ஒடுக்குமுறைக்கு எதிரான அவரது ஓர்மையும் அம்பேத்கரைக் கவர்ந்தன. இதனால் பலூ தலித்துகளுக்கு ஒரு வழிகாட்டி என்று கூறிய அம்பேத்கர், நகராட்சி சபை உறுப்பினராக பலூ நியமனம் பெறுவதற்காகக் முழுமையாக முயன்றார். காந்தி வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்துக்கொண்டு தீண்டாமை ஒழிப்பையும் பேசிக்கொண்டிருந்த காலம் அது. காந்தியை அம்பேத்கர் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார். இந்து மதத்தின் உயிர்நாடியே சமத்துவமின்மைதான் என்று கூறிய அம்பேத்கர், நான் இந்துவாக சாகமாட்டேன் என்று பிரகடனம் செய்கின்றார். 1936 இல் அவர் சுதந்திர தொழிலாளர் கட்சியை (Independent Labour Party) நிறுவுகின்றார். இன்னொரு பக்கத்தில், பலூ ஒடுக்கப்பட்ட மக்களிடையே மிகப் பிரபலமானவராக அப்போதும் விளங்கினார். அத்துடன் காந்தியின் கருத்துகளால் கவரப்பட்டிருந்த அவர் இந்து மதத்துக்குள் நடைபெற்றுவந்த மாற்றங்கள் அல்லது சீர்த்திருத்தங்களே தீண்டப்படாதோரின் நிலையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றத்துக்குக் காரணம் என்றும் நம்பினார். அதுமட்டுமல்லாமல் நகரங்களில் சாதியம் ஒரு முக்கியமான பிரச்சனையாக இல்லாமற்போய்விட்டது என்றும் நம்பினார். 1932 இல் பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதிகளை வழங்க பிரிட்டிஷ் அரசு முன்வந்தபோது அப்படிச் செய்வது தீண்டப்படாதோரையும் சாதி இந்துக்களையும் பிரித்துவிடும் என்று காரணம் சொல்லி காந்தி எரவாடா சிறையில் உண்ணாவிரதம் இருந்தார் அல்லவா. காந்தியின் உடல்நிலை மோசமடைந்தபோது அம்பேத்கரைச் சந்தித்துப் பேசி அவரது மனதை மாற்றியவர்கள் எம்.சி ராஜாவும் பல்வங்கர் பலூவும் என்கிறபோது பலூ அன்று எவ்வளவு செல்வாக்குள்ளவராக இருந்தார் என்பதை அறியமுடிகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில், குறித்த சூழ்நிலை குறித்து “ உண்மையிலேயே திரு. காந்தியவர்கள் உயிர் விடுவதாயிருந்தாலும், அதற்குப் பயந்து கொண்டு தீண்டாதாருக்கு அளித்திருக்கும் தனித்தொகுதி அமைப்பு மாற்றப்படுமானால், அது ஒரு மனிதரைக் காப்பாற்ற வேண்டி, ஏழுகோடி மனிதர்களைப் பலிகொடுப்பதாகத்தான் முடியும் என்று தான் உறுதியாக நாம் கூறுவோம்” என்று “காந்தியின் வைதிக வெறி” என்ற தலைப்பில் செப்ரம்பர் 18, 1932 குடிஅரசில் தலையங்கம் எழுதிய பெரியாரின் தீர்க்கதரிசனத்தை நினைவுகூர்ந்தே ஆகவேண்டும். ஆனால் இங்கே சாதி இந்துக்களின் கபடத்தனத்துக்கு பலூ பலியாகிவிட்டார் என்றே சொல்லவேண்டும். பின்வரும் ஆண்டுகளில் நடந்தவற்றுடன் தொடர்புபடுத்திப் பார்க்கின்றபோது அது இன்னும் உறுதியாகின்றது.
1937 இல் நடைபெற்ற பம்பாய் சட்டமன்ற தேர்தலில் (Bombay Presidency legislative election) இல் அம்பேத்கருக்கு எதிராகப் போட்டியிடத் தமது வேட்பாளராக பலூவைக் காங்கிரஸ் கட்சி தேர்வுசெய்தது. இந்த முடிவை எடுத்தவர் சர்தாய் வல்லபாய் பட்டேல் என்றும், அப்போதைய சனத்தொகைக் கணக்கெடுப்புகளின் படி அந்தத் தொகுதியில் பலூ பிறந்த சமர் சாதியினர் கணிசமாக இருந்தனர் என்பதாலும், பலூவை அம்பேத்கருக்கு எதிராகத் தேர்தலில் நிறுத்துவதன் மூலமாக அம்பேத்கருக்கு தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய வாக்குகளைப் பிரிப்பதும், அதனால் அம்பேத்கருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி அவர் பிறதொகுதிகளில் பிரச்சாரம் செய்வதைத் தடுப்பதும் வல்லபாய் பட்டேலது நோக்கமென்றும் Subaltern Sports நூலில் உள்ள கட்டுரையில் ராமச்சந்திர குகா குறிப்பிடுகின்றார். தேர்தல் பிரசாரத்தில் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலரும் பலூவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததுடன் அவர்கள் இதனை அம்பேத்கருடனான பலப்பரீட்சையாகவே பார்த்தார்கள். பலூவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் நிறைவேற்றப்பட்ட பூனா ஒப்பந்தத்துக்கு ஆதரவானதாகவும், அதனை ஏற்றுக்கொள்ளாத அம்பேத்கருக்கு எதிரானதாகவும் கருதப்படும் என்று பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். மராத்தி மொழியில் வெளிவந்துகொண்டிருந்த காங்கிரஸ் ஆதரவு பத்திரிகையான நாவ கால் (Nava Kaal) பலூவுக்கு ஆதரவான பிரச்சாரத்தைத் தானாகவே முன்வந்து செய்யத் தொடங்கியது. அம்பேத்கரின் இளம் பிராயத்தில் அவர் எப்படியெல்லாம் பலூவைப் பிரமிப்புடன் பார்த்தார், அவர் பலூவை எப்படியெல்லாம் பாராட்டிப் பேசினார் என்பதையெல்லாம் செய்திகளாக வெளியிட்ட நாவ கால் பத்திரிகை வாக்காளர்களை பலூவுக்கு வாக்களிக்கும்படியும் அம்பேத்கரின் ஆளுமையைக் கண்டு மதிமயக்கம் அடைந்துவிடவேண்டாம் (Vote for Baloo and not be hypnotized by Ambedkar’s personality) என்றும் கேட்டுக்கொண்டது. அம்பேத்கரைத் தோற்கடிக்கவேண்டும் என்று முழுமையான ஓர்மத்துடன் காங்கிரஸ் கட்சியினர் வேலைசெய்தபோதும் தேர்தலில் அம்பேத்கருக்கு 13245 வாக்குகளும் பலூவுக்கு 11225 வாக்குகளும் கிடைத்தன.
தலித்துகளுக்கான எந்த ஒதுக்கீடுகளும் கிடைக்கப்பெறாத அந்நாட்களில் தன் திறமை ஒன்றைக் கொண்டே தடைகளை முட்டி மோதிக்கொண்டு வளர்ந்துவந்தவர் பலூ. அவருக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய பதவிகளும் வாய்ப்புகளும் கூட அவருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி அவர் வெளிவந்தபோது அவரது பிரபலத்தையும் விம்பத்தையும் சாதி இந்துக்களின் நலன்களுக்காக காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொண்டது என்பதே உண்மை.
ராமச்சந்திர குஹாவின் “A Corner of a Foreign Field” நூலே உண்மையில் பலூவை சரியான வெளியுலகிற்கு, அவரது ஆளுமையையும், அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பின்னால் இருக்கின்ற சாதியத்தையும் சேர்த்துப் பதிவுசெய்து பலூவிற்கான கௌரவத்தைக் கொடுத்தது. ஆனாலும் இன்றுவரை இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் தலித்துகள் இடம்பெறுவது என்பது குதிரைக்கொம்பாகவே இருக்கின்றது. கௌரவ் பவ்னானியும் சுபம் ஜெயினும் இணைந்து எழுதி Economic & Political Weekly வெளிவந்த Does India Need a Caste-based Quota in Cricket? என்கிற கட்டுரையில் 1932 முதல் கட்டுரை 2017 வரையான காலப்பகுதியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் 289 வீரர்கள் விளையாடி இருப்பதாகவும் அதில் ஏக்நாத் சோல்கர், கர்ஷன் காவ்ரி. வினோத் காம்ப்ளி, புவனேஷ்வர் குமார் ஆகிய நான்குபேர் மாத்திரமே தலித்துகள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுபோலவே முஸ்லிம்கள் இந்திய அணியில் இடம்பெறுவதும் ஒப்பீட்டளவில் கடினமாகவே இருக்கின்றது என்றபோதும் தலித்துகளுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்குள் இடம்பெறுவது அதிகமாக இருக்கின்றது என்பதுடன், 2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு முஸ்லிம்கள் அணிக்குள் வருவது சற்றி அதிகரித்துள்ளதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலேயே முஸ்லிம் ஜிம்கானா என்கிற அணி உருவாகி இருந்ததும், அவர்கள் அப்போது வருடந்தோறும் இடம்பெற்ற நான்கு அணிகளுக்கு இடையிலான போட்டிகளிலும் ஆடிவந்தார்கள் என்பதனாலும் முஸ்லிம்கள் இடையே கிரிக்கெட் பரவுவதும் அவர்கள் அணிகளில் ஆடுவதும் இயல்பாக இருந்தது. ஆனால் தலித்துகள் அப்போதிருந்த இந்து ஜிம்கான அணிக்குள் நுழைவதற்கே பெரும்போராட்டங்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. அதுமட்டுமல்லாமல் மன்சூர் அலிகான் பட்டோடி, சையத் முஷ்டாக் அலி போன்ற புகழ்பெற்றிருந்த முஸ்லிம் கிரிக்கெட் வீரர்களும் ஆரம்பகாலத்திலேயே முஸ்லிகள் மத்தியில் கிரிக்கெட் பரவலடைவதற்குத் தூண்டுதலாக இருந்தார்கள். ஆனால் தலித்துகளுக்கு அப்படியேதும் நடக்கவில்லை. தான் தலித் என்பதால் தன் மீது சாதியப் பாகுபாடு காட்டப்பட்டது என்று ஆரம்பத்தில் கூறிய வினோத் காம்ப்ளி கூட பிற்காலத்தில் இது குறித்து மழுப்பலான பதிலையே சொல்லக்கூடிய அளவுக்கு சாதியத்தால் நிகழ்த்தப்படும் பாகுபாடுகளை வெளிப்படையாகப் பேசமுடியாத அளவு அழுத்தம் இருக்கின்றது. Great Tamasha நூலின் ஆசிரியர் ஜேம்ஸ் அஸ்ரில் வினோத் காம்ப்ளியிடம் இதுபற்றிக் கேட்டபாது அவர் மழுப்பலாகப் பதில் சொன்னதாகவும் பாகுபாடு 1% மட்டுமே காரணமாக இருந்துள்ளது என்றும் கூறியதாகப் பதிவுசெய்துள்ளார். ஹர்ஷா போக்ளே போன்ற புகழ்பெற்ற வர்ணனையாளர்களும், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்களும் அணிக்குத் தேர்வாவதில் சாதியம் ஒரு தடையாக இருப்பதில்லை என்று கூறுகிறார்கள். இந்த இடத்தில் கவாஸ்கரின் வாழ்வில் நடந்த ஒருவிடயத்தைச் சொல்வது அவசியம். கவாஸ்கர் பிறந்தபொழுது அவரது காதுமடலில் ஓரு ஓட்டை இருந்திருக்கின்றது. அதன்பிறகு குழுந்தையைக் குளிப்பாட்ட எடுத்துச் செல்லும்போது குழந்தை வேறொரு குழந்தையுடன் மாறிவிட்டது. குழந்தையின் காது மடலில் ஓட்டை இல்லை என்றவுடன் தேடத் தொடங்கி, ஒரு மீனவக் குடும்பத்திடம் குழந்தை மாறிச்சென்றுவிட்டதைக் கண்டு மீட்டெடுத்தார்கள். தன் சுயசரிதையில் இதைக் குறிப்பிடும் கவாஸ்கர், அன்று தன்னைத் தன் குடும்பத்தினர் கண்டுபிடித்திருக்காவிட்டால் தான் வெளியில் அறியப்படாத ஒரு மீனவனாக இருந்திருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அவரிடம் நேர்காணல் ஒன்றில் இந்தியக் கிரிக்கெட்டில் சாதியத்தின் பங்கு குறித்துக் கேள்விகேட்டபோது “ஒரு விதத்திலும் பாதிப்பதில்லை” என்கிற பதிலைச் சொல்லியிருப்பார். ஆய்வாளர்கள் ஆதாரபூர்வமாகத் தரவுகளுடன் தலித்துகள் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்குத் தேர்வாவதில் அமைப்புசார் தடைகள் (Structural barriers), முற்தீர்மானங்களின் அடிப்படையிலான பாகுபாடு (Unconscious bias) போன்ற காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதை எடுத்துக்காட்டியுள்ளார்கள்.
அதுமட்டுமல்லாமல் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை துடுப்பாட்டக் காரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் இடையில் நிலவுகின்ற சமமின்மையும் கவனிக்கப்படவேண்டியது. இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளில் கறுப்பினத்தவர்களும், இந்திய அணியில் தலித்துகளும் முஸ்லிம்களும் பந்துவீச்சாளர்களாகவோ அல்லது சகலதுறை ஆட்டக்காரர்களாகவோதான் அணிக்குள் நுழைய முடிகின்றது. இதற்குப் பின்னால் வரலாற்று ரீதியான ஓர் உளவியல் காரணம் இருக்கின்றது. இங்கிலாந்தில் கிரிக்கெட் பரவலாகி வந்தபோது அங்கே தொழில்முறை இல்லாத ஆட்டக்காரர்கள் (Amateurs), தொழில்முறை ஆட்டக்காரர்கள் (Professionals) என்கிற இரண்டு பிரிவினர் இருந்தார்கள். இவர்களில் தொழில்முறை இல்லாத ஆட்டக்காரர்கள் பொதுவாக பிரபுக்களாகவும் இலவசமாக ஆடுபவர்களாகவும் இருந்தார்கள், தொழில்முறை ஆட்டக்காரர்கள் விளையாடுவதற்காகச் சம்பளம் பெறுபவர்களாகவும் பிரபுக்கள் அல்லாத பிற வர்க்கத்தினராகவும் இருந்தார்கள். தொழில்முறை இல்லாத ஆட்டக்காரர்களாகிய பிரபுக்கள் துடுப்பாட்டக்காரர்களாகவே விளையாடினார்கள், தொழில்முறை ஆட்டக்காரர்கள் பந்துவீச்சாளர்களாக இருந்தார்கள். பந்துவீச்சு என்பது உடலுழைப்பைக் கோருவதாகவும் துடுப்பாட்டத்தைவிட ஒருபடி கீழானதாகவும் கருதப்பட்டது. இந்தியாவிலும் பிரித்தானியர் காலத்தில் பந்துவீசுவதற்காக இந்தியர்களை பணம் கொடுத்து வேலைக்கமர்த்தியிருந்தனர். 2014 இல் தனது முதலாவது டெஸ்ட் போட்டியை டெம்பா பவுமா (Temba Bavuma) ஆடியிருந்தார். அவர்தான் தென்னாபிரிக்காவுக்காக ஒரு துடுப்பாட்டக்காரர் என்ற வகையில் அணிக்குத் தேர்வான முதலாவது கறுப்பினத்தவர். இன்றுவரை இங்கிலாந்து அணியில் Roland Butcher, Wilf Slack ஆகிய இருவர் தலா மூன்று டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டக்காரர்கள் என்ற வகையில் விளையாடி இருக்கின்றார்கள், மற்றும்படி எந்த ஒரு கறுப்பினத்தவர் கூட இங்கிலாந்து அணியில் துடுப்பாட்டக்காரர் என்ற வகையில் தொடர்ச்சியாக விளையாடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. மேலே குறிப்பிட்ட எகனமிக் அன்ட் பொலிடிகல் வீக்லியில் வெளியான கட்டுரை, பாடசாலை மட்டங்கள், உள்ளூர் போட்டிகளில் இருந்து ஆரம்பித்து தலித்துகளுக்கு கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீட்டைச் செய்யலாம் என்பதைப் பரிந்துரை செய்கின்றது. பல்வங்கர் பலூவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பிரக்ஞை பூர்வமான போராட்டம் என்பது சாதியடிப்படையில் நிலவுகின்ற அமைப்புசார் தடைகள் (Structural barriers), முற்தீர்மானங்களின் அடிப்படையிலான பாகுபாடு (Unconscious bias) என்பவற்றை ஒழிப்பதற்காக குரலெழுப்புவதும் செயற்படுவதும் ஆகும். பல்வங்கர் பலூவின் 150 ஆவது ஆண்டில் இதற்காக உறுதியேற்போம்.
பின்குறிப்புகள்
a. பல்வங்கர் பலூ பிறந்த ஆண்டினை 1876 என்றும் சில புத்தகங்களிலும் கட்டுரைகளிலும் குறிப்பிடுகின்றன. ஆயினும் Cricket, Caste and the Countryside நூலில் ராமச்சந்திர குஹா 1875 இல் பலூ பிறந்தார் என்றே குறிப்பிட்டுள்ளார்.
b. பல்வங்கர் பலூ குறித்தும் அவரது சகோதர்கள் குறித்தும் தான் எழுதிய A Corner of a Foreign Field என்கிற நூலினைத் திரைப்படமாக்குவதற்கான உரிமையை Reel Life Entertainment வாங்கியுள்ளதாக ராமச்சந்திர குஹா மே 30, 2024 இல் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
உசாத்துணை
- Cricket, Corruption and the Turbulent Rise of Modern India by James Astill in The Great Tamasha
- https://countercurrents.org/2019/08/a-short-history-of-untouchables-in-indian-army-and-role-of-dr-ambedkar/
- The moral that can be safely drawn from the Hindus’ magnificent victory: Cricket Caste and The Palwankar Brothers by Ramachandra Guha (Subaltern Sports)
- A Corner of a Foreign Field: The Indian History of a British Sport
நன்றி
இக்கட்டுரை ஜூன் 2025 தலித் இதழில் வெளியானது.
[i] The moral that can be safely drawn from the Hindus’ magnificent victory: Cricket Caste and The Palwankar Brothers by Ramachandra Guha (Subaltern Sports)
[ii] https://www.thecricketmonthly.com/db/STATS/BY_CALENDAR/1920S/1922/ARCHIVE_1922-23/IND_LOCAL/BOM-QUAD/HINDUS_PARSEES_18-20SEP1922.html


Leave a comment