ரெஜி சிறிவர்த்தனவின் “Working Undergroud: The LSSP in Warime, A memoir of happenings and personalities என்கிற நூலின் தமிழாக்கமான “தலை மறைவு வாழ்க்கை ஒரு நினைவுக் குறிப்பு” என்ற நூல் சமூகம் இயல் பதிப்பகத்தின் வெளியீடாக எஸ் கே விக்னேஸ்வரன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. எஸ். கே. விக்னேஸ்வரன் அவர்களுடனான எனது அறிமுகம் கிட்டத்தட்ட 10 – 12 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர் கனடாவுக்கு வந்து சேர்ந்த சில காலங்களின் பின்னர் ஆரம்பித்தது. கனடாவில் எனக்கு வாய்த்த மதிப்புக்கும் அன்புக்கும் மிகுந்த தோழமைக்கு உரிய நண்பர்களில் அவர் முக்கியமானவர். இலக்கியம், வாசிப்பு என்று ஆரம்பித்த அந்த நட்பு பின்னர் சமூகச் செயற்பாடுகள், அவை பற்றிய உரையாடல்; அமைப்பு வேலைகள், அமைப்புகளுக்குள் ஏற்படக்கூடிய சிக்கல்கள், அதைப் பற்றி உரையாடல்கள் என்று வளர்ந்து சென்றது. வாரத்தில் ஒரு நாளேனும் சில மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக, அந்த வாரத்தில் இடம் பெற்ற முக்கியமான விடயங்கள், அவை பற்றிய என்னுடைய புரிதல்கள், எனக்கு இருக்கின்ற கேள்விகள் என்பவற்றை விக்னேஸ்வரன் அவர்களுடன் உரையாடித் தெளிவைப் பெற்றுக்கொள்கின்ற ஒருவனாக நான் இருந்தேன். குறிப்பாகக் கடந்த சில ஆண்டுகளாக அமைப்பாக்கம், அதன் தேவைகள், அதில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அவற்றிலிருந்து மீண்டு வருதல் போன்ற விடயங்கள் குறித்து நாம் நிறைய உரையாடி இருக்கின்றோம். அப்படியான ஓர் உரையாடலில்தான் அவர் ரெஜி சிறிவர்த்தன எழுதிய “Working Undergroud: The LSSP in Warime, A memoir of happenings and personalities” என்ற நூல் குறித்தும் ஒரு பகுதியைத் தான் ஏற்கனவே சரிநிகரில் மொழிபெயர்த்து வெளியிட்டதாகவும் கூறினார். அவ்வாறு இந்த நூலை அவர் எனக்குப் பரிந்துரைத்ததும் பின்னர் இந்த நூல் பற்றிய அறிமுக உரையினைச் செய்யும்படி கேட்டுக் கொண்டதற்கும் கூட இந்த நூல் எனக்குப் பயனுடையதாக இருக்கும் என்கின்ற எண்ணம் அவருக்கு இருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.
சென்ற ஆண்டு எஸ்கே விக்னேஸ்வரன் அவருடனான நீண்டதோர் நேர்காணலைச் செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. இந்த நேர்காணலில் அவர் எப்படி அரசியல் ஈடுபாடு கொண்டார் என்பதிலிருந்து அவர் ஈடுபட்டிருந்த அரசியல் அமைப்பும் அதன் அமைப்பு செயல்பாடுகள் குறித்தும் குறிப்பிட்டதுடன் பின்னர் அவரது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் புலிகள் இயக்கத்தினரால் கொன்றழிக்கப்பட்ட பின்னர் அமைப்பு செயலிழந்தது பற்றியும் குறிப்பிட்டிருப்பார். அதன் பின்னர் சரிநிகர் பத்திரிகை ஊடாகவும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தது குறித்துச் சொல்லும்போது “எங்களது கணிப்பில் எமது அமைப்பைச் சேர்ந்த மொத்தமாக 18 தோழர்கள் புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்டனர். சரிநிகர் என்ற ஒரு பத்திரிகையை நடாத்தும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் விட்டிருந்தால் இந்த உளவியல் தாக்கத்திலிருந்து நான் மீண்டு வந்திருப்பேனா என்பதை எனக்கு உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது.” என்று குறிப்பிட்டிருப்பார்.
பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்த அந்த நேர்காணலில் நான் ஒரு விடயத்தை முக்கியமாகப் புரிந்து கொண்டேன். அரசியல் பிரக்ஞையும் சமூக அக்கறையும் அஞ்சாமையும் கொண்ட ஒருவர் ஒருபோதும் தனது அரசியல் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவில்லை; அவர்களது எண்ணம் எப்பொழுதும் மக்கள் நலன் குறித்தது. அதற்கான ஓர் உதாரணமாகவே எஸ்கே விக்னேஸ்வரன் அவர்கள் செய்திருக்கின்ற இந்த மொழிபெயர்ப்பையும் பார்க்கின்றேன்; ஏனென்றால் இந்த நூல் ஒரு மொழி ஆக்கம் என்பதோடு மட்டுமில்லாமல் இலங்கையின் மிக முக்கியமான, லெஸ்லி குணவர்த்தன, என்.எம். பெரெரா, கொல்வின் ஆர்.டி. சில்வா, பிலிப் குணவர்த்தன, ரொபர்ட் குணவர்த்தன போன்ற நன்கறியப்பட்ட இடதுசாரி அறிவுசீவிகளால் ஆரம்பிக்கப்பட்ட இடதுசாரி இயக்கமும் இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியுமான லங்கா சமசமாஜ கட்சி பற்றிய சுய விமர்சனத்துடன் ரெஜி சிறிவர்த்தன எழுதி இருக்கின்ற நினைவுக்குறிப்புகளே இந்தச் சிறிய நூலாகும்.
1922 ல் பிறந்த ரெஜி சிறீவர்த்தன தனது இளமைப் பருவத்திலிருந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். மத்திய தர வர்க்க குடும்பத்தில் பிறந்து அவர் தனது தந்தையின் ஆதரவாலும், வாசிப்புப் பழக்கத்தாலும் உருவாக்கப்பட்டவர். சிறுவயதிலேயே ஆங்கில நூல்களை அறிமுகம் செய்து ஆங்கிலத்தில் வாசிக்க ஊக்குவித்த தந்தையின் பாதிப்பினால் அவர் ஆங்கில மொழியில் ஆளுமை கொண்டவராகச் சிறுவயதிலேயே விளங்கினார். இலவசக் கல்வி அறிமுகமாகாத அக்காலத்தில் வறுமையின் காரணமாகச் சில ஆண்டுகள் தாமதமாகவே பாடசாலையில் அவரைச் சேர்க்கின்றார்கள். ஆனாலும் வீட்டிலேயே கல்வி கற்பித்திருக்கின்றார்கள். அதனால் முதலாம் வகுப்பில் போய்ச்சேரும்போதே எளிதாக வாசிக்கத் தெரிந்திருக்கின்ற ரெஜியை அவரை விட வயது கூடிய மாணவியர் ஆச்சரியமாகப் பார்த்துத் தத்தம் வகுப்புப் புத்தகங்களை வாசித்துக்காட்டும்படி கூறுகின்றார்கள், ரெஜியும் இலகுவாக வாசித்துக்காட்ட, அவர் பாடசாலையில் ஓர் ஆச்சரியப்பொருளாகப் பார்க்கப்பட்டதாக இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியாக இலக்கியம், மார்க்சிய நூல்கள் என்று வாசிக்கும் அவர் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் அவரது நாட்டம் அரசியல் எழுத்துக்கள் மேல் திரும்புகின்றது. லங்கா சமசமாஜக் கட்சியில் ரெஜி சிறிவர்த்தன கிட்டத்தட்ட ஆறுவருடங்களே இருந்திருக்கின்றார். ஒப்பீட்டளவில் இது குறுகிய காலமென்றாலும் இக்காலப்பகுதியிலேயே அந்தக் கட்சியின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைக்கப்பட்டமை, கட்சி தடை செய்யப்பட்டமை, கட்சி தலைமறைவானமை, கட்சித் தலைவர்கள் சிறை உடைப்பால் மீட்கப்பட்டமை, கட்சி பிளவுண்டமை போன்ற முக்கியமான சம்பவங்கள் நடந்த காலப்பகுதியாகும். இவற்றின் பின்னர் கட்சியை விட்டு 1946 அளவில் வெளியேறிய ரெஜி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கட்சியிலிருந்து காலப்பகுதியில் நடந்த முக்கியமான விடயங்களையும், நடைமுறைகளையும், தனக்குப் பழகக் கிடைத்த முக்கியமான கட்சித் தலைவர்கள், ஊழியர்கள், அவர்களுடனான அனுபவங்கள் போன்ற நினைவுகளை மீட்பதுடன் இவை குறித்தும் கட்சியில் கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையில் இருந்த இடைவெளி குறித்தும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றார். பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்கா எழுதிய “புரட்சிகர இலட்சியவாதமும் பாராளுமன்ற அரசியலும்: இலங்கையில் ட்றொஸ்கியவதாம் குறித்த ஓர் ஆய்வு (Revolutionary Idealism and Parliament Politics: A study of Trotskyism in Srilanka) என்கிற நூலை வாசித்ததே தன்னை இந்தநூலை எழுதத் தூண்டியது என்று குறிப்பிடும் ரெஜி அதுகுறித்துப் பின்வருமாறு தன் முன்னுரையில் பதிவுசெய்கின்றார்.
“அக்காலத்தில் நடந்த சில சம்பவங்களைப்பற்றி நேரடி அனுபவத்துடன் பேசக் கூடிய ஒருவனாக, சற்றும் எதிர்பாராத, நம்பமுடியாத ஒரு விபத்துப்போல, நீண்ட ஆயுட்காலத்தைக்கொண்டு தப்பிப் பிழைத்த, சுய அறிவோடு பேசக்கூடிய நிலையில் உயிர்பிழைத்திருக்கும் கடைசி மனிதன் நானே என்பதை உணர்ந்து திடுக்கிட்டேன். அந்த அவதானிப்பின் அதிர்ச்சிதான் வயது முதிர்ச்சியின் காரணமாக வரும் தவிர்க்க முடியாத மறதி என் நினைவுகளை முறியடிக்கும் முன்பாக, அவற்றைப் பாதுகாக்கும் வரலாற்றுப் பதிவுக்கான கடமை எனக்கு இருக்கின்றதென்பதை உணர வைத்தது. இருந்தபோதும், இந்த நூல் அமரசிங்கவுக்குப் போட்டியாக எழுதப்பட்ட ஒன்று அல்ல, அவரது நூல் ஒரு வரலாற்று ரீதியான பகுப்பாய்வு நூல்; என்னுடையது ஒரு பங்கேற்பாளரும் பார்வையாளருமான ஒருவரின் தனிப்பட்ட நினைவுக் குறிப்பு”
அந்த வகையில் இது நிதானமாக வாசித்து உரையாடி மதிப்பிட வேண்டிய இந்தநூலை அறிமுகம் செய்யும்பொருட்டு சில முக்கிய விடயங்களைப் பகிர்வதாக இக்கட்டுரை அமையும்.
இலங்கையின் முதலாவது அரசியல் கட்சியும் இடதுசாரிக்கட்சியுமான லங்கா சம சமாஜக் கட்சி 1935இல் நிறுவப்பட்டது. இந்தக் கட்சி பல்வேறு தொழிற்சங்கங்களை நிறுவியதுடன் தொழிலாளர் உரிமைக்காகச் செயற்பட்டும் அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தும் வந்தது. அந்த வகையில் இன, மொழி அடையாளங்களை வைத்துச் செய்யப்படும் அரசியலைக் கைவிட்டு தொழிலாளர்கள் ஒன்றிணைப்பது என்கின்ற வகையில் இந்தத் தொழிற்சங்கங்கள் செயற்பட்டு வந்தன. மலையகத்தின் முதல் தியாகி என்று அறியப்படுகின்ற முல்லோயா கோவிந்தன் கொலை செய்யப்பட்ட பிரச்சனையும் போராட்டங்களும் நடந்தபோது சில இனவாதத் தலைவர்கள் அதனைத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமான பிரச்சனையாக மாற்ற முற்பட்ட பொழுதும் தொழிற்சங்கங்கள் அதனை ஒரு வர்க்கப் பிரச்சினையாக முன்னெடுத்தனர். இதில் கொல்லப்பட்ட முல்லோயா கோவிந்தன் குறித்து அன்றைய இடதுசாரி அமைப்புகளும் கட்சிகளும் கொண்டிருந்த பார்வையைக் குறித்து இந்த நூலில் குறிப்பிடுகின்றார்
“முல்லோயா தோட்டத்தில் நடந்த வேலை நிறுத்தமும் அப்போது நடந்த தொழிலாளி கோவிந்தன் அது கொலையும் ஒரு பெரிய அரசியல் பிரச்சினையாக மாறியது. முன்பு நடந்த பிரேஸ்கேடில் விவகாரம் போல், இதுவும் லங்கா சமசமாஜக் கட்சிக்குத் தேசிய அளவில் பெரிய முக்கியத்துவத்தை அளித்தது. முல்லோயா பிரச்சினை இன அரசியலுக்கு மேலாக வர்க்க ரீதியான அரசியலே பிரதான இடத்தைப் பெற்றிருந்ததைத் தெளிவாகக் காட்டியது. பல்கலைக்கழகத்தில் அன்றுவரை லங்கா சமசமாஜக் கட்சி அரசியலில் எந்த ஆர்வமும் காட்டாது இருந்தது. அதன் பிறகும் அரசியலில் ஈடுபடாத பல்கலைக்கழக மாணவ அமைப்பின் உறுப்பினர் தெரிவிற்கான தேர்தலில் ஒரு பதவிக்காகப் போட்டியிட்ட மாணவன் ஒருவன் திடீரெனச் சிவப்புச் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு மிகவும் காரமான உரையொன்றை ஆற்றினான். அவனது உரை இவ்வாறு முடிந்தது, “தோழர் கோவிந்தனது ரத்தம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு உரமாக நின்று அதை வளப்படுத்தும்”.
இன்றுள்ள எந்த ஒரு அரசியல்வாதி கூட தமிழ் தோட்டத் தொழிலாளி ஒருவரது மறைவினைத் தமது அரசியலுக்காகப் பயன்படுத்த முயலப்போவதில்லை. எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியும், அன்று லங்கா சமசமாஜக் கட்சி செய்தது போல ஒரு தமிழ் தொழிலாளியைச் சுட்டுக்கொன்ற ஒரு சிங்கள காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய அளவில் எதிர்ப்பு கிளர்ச்சியைச் செய்யப் போவதில்லை, இன்று ஒரு கொலைக்காக, அந்தக் கொலை நியாயப்படுத்தக் கூடியதோ இல்லையோ என்ற கேள்விக்காகத் தேசிய அளவில் ஓர் உணர்வலையைத் தட்டி எழுப்ப முடியாத அளவுக்கு ஆயிரக்கணக்கில் உயிர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு சூழலை நோக்கி நாம் வளர்ந்து விட்டோம்”
இலங்கை அரசியலைப் பொறுத்தவரை அங்கிருக்கின்ற பல்லின மக்களுக்கிடையிலான சமத்துவம், சமூகநீதி என்பன பற்றி எந்த அக்கறையும் இல்லாத, இனவாதத்தையும் பிரிவினையையும் பிற இனங்கள் மீதான வெறுப்பையும் தூண்டக்கூடிய வகையில் பேசியும் செயற்பட்டும் வருகின்ற தலைமைகளும் அமைப்புக்களும் தொடர்ந்து பலம்பெற்று வருவதைக் கண்டு கொண்டிருக்கின்றோம். இதற்கு மாற்றாக முற்போக்கான சமூகநீதி அரசியலை முன்னெடுக்க வேண்டிய அமைப்புகளும் தலைவர்களும் அந்தப் பிரக்ஞை கொண்டவர்கள் ஒன்றிணைவதும் அந்தப் பிரக்ஞையை மக்களிடையே பரப்புவதும் அவசியம். .ஆனால் அதற்கான எந்த அறிகுறியையும் எம்மால் அவதானிக்கமுடியவில்லை. சமகாலத்தில் இருக்கின்ற மோசமான நிலைமையை உணர்ந்து ஏற்றுக்கொள்வதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான முதலாவது காலடியாக அமையும். அதன்மூலமாகத்தான் இனங்களுக்கிடையே நல்லுறவில்லாமல், இனவாத, வெறுப்புணர்வும், மதவாதமும் பெரும்பலத்தையும் ஆதிக்கத்தையும் பெற்றிருக்கின்ற இந்த நிலைமைக்கு எப்படி வந்தடைந்தோம் என்பதைப் பற்றி நாம் அறிந்துணரவும் அது குறித்த உரையாடல்களை முன்னெடுக்கவும் முடியும். ஏற்கனவே எடுத்த முன்முடிவுகளை வைத்துக்கொண்டு இருக்கின்ற பிரச்சினைகளைப் பூசி மெழுகுவதும் இல்லை என்று சமாளிப்பதும் அதற்கு வேறு வேறு தத்துவார்த்த விளக்கங்களைக் கொடுத்துக் கடந்துவிடுவதும் புதிதுபுதிதாகச் சதிக்கோட்பாடுகளை (Conspiracy theory) உருவாக்குவதும் மேன்மேலும் மோசமான நிலைக்கே இட்டுச்செல்லும்.
இந்த நூல் நினைவுப்பகிர்வு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது தங்கள் பெருமைகளையும் தாங்கள் ஆற்றிய சேவைகளைத், தியாகங்களையும் கூறுவதாக அமையாமல் கட்சியின் கோட்பாடு, நடைமுறை போன்றவற்றை விமர்சனம் செய்வதாக அமைகின்றது. இங்கே உரையாடப்படுகின்ற கோட்பாடு சார்ந்த முக்கிய விடயம் லெனினின் கட்சி முன்னணிப் படையாகச் செயல்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தும் அது இலங்கையில் அவ்வாறு சாத்தியமாகுமா? சாத்தியமானதா? என்பது பற்றிய உரையாடலுமாகும். லெனினின் கருத்துக்கும் அன்றைய ட்ரொஸ்கிஸ்றுகளுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்களும் இந்த நூலின் 49,50, 51 ஆம் பக்கங்களில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கருத்தியலையும் நடைமுறையையும் கவனத்தில் கோருகின்ற இதுபோன்ற உரையாடல்களின் வெளிச்சத்தில் நாம் ஈழப்போராட்டத்தையும் சமூக நீதிக்கான போராட்டங்களையும் பார்ப்பது அவசியமானதாகும்.
“கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் நலன்களை முன்னிலையில் வைத்துச் செயல்படுவதுடன், அதன் இறுதி இலக்கான முற்றுமுழுதான விடுதலையைக் காண்பதற்கான போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் வழிகாட்டும் அமைப்பாக முன்னணிப் படையாக நின்று செயல்பட வேண்டும்; அது சிந்தனையிலும் உணர்திறனிலும் செயலூக்கத்திலும் வர்க்கத்தை விட முன்னேறியதாகவும், புரட்சிகர நோக்கங்களுக்காக முழுக்க முழுக்கத் தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் இருக்கவேண்டும் என்று லெனின் வலியுறுத்தினார். இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் ருசிய சோசலிச ஜனநாயகக் கட்சி, போல்ஸ்விக் கட்சி, மென்ஸ்விக் கட்சி என இரண்டாகப் பிளவுற்றது. அன்று இருந்த எல்லா மார்க்சிஸ்டுகளும் போல்ஸ்விக் நிலைப்பாட்டையே அல்லது லெனினின் இந்த நிலைப்பாட்டையோ ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்லமுடியாது. றோசா லக்சம்பர்க் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. ட்ரொஸ்கி 1904 இல் இதுபற்றி இவ்வாறு சொன்னார்: “போல்ஸ்விசத்தின் வெற்றி என்பது முழுக்கட்சிக்குமான பதிலீடுகளாகக் கட்சி அமைப்புகள் மாறுவதிலும், பின்னர் கட்சி அமைப்புகளுக்கு மத்திய கமிட்டி பதிலீடாக மாறுவதிலும், இறுதியாக ஒரு நபர் -தனிச் சர்வதிகாரி- தன்னை மத்திய கமிட்டிக்குப் பதிலாகத் தனி ஒருவராக நிறுவும் நிலைக்கும் இட்டுச்செல்லும்”. இன்று ட்ரொஸ்கியின் இந்தச் சொற்கள் ஆழமான முன்னோக்கிய பார்வையுடன் கூறப்பட்ட தூரதிருஸ்டி வாய்ந்த சொற்களாகத் தெரிகின்றன. ஆனால் பின்னர் 1917-இன் நடுப்பகுதியில் ட்ரொஸ்கி போல்ஸ்விக் கட்சியுடன் இணைந்த போது தனது இந்த விமர்சனத்தை மறந்து விட்டார்; அல்லது புறக்கணித்துவிட்டார்”
என்பதையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றார்.
லங்கா சமசமாஜக் கட்சி, கட்சியை முன்னணிப் படையாக கருதியே தனது நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இந்த இடத்தில் ஒரு பிரச்சனையை ரெஜி சுட்டிக்காட்டுகிறார்; “முன்னணிப்படைக் கோட்பாடு என்பது கட்சி ஊழியர்கள் சாதாரண தொழிலாளர்களை விட உயர்ந்த அளவிலான தத்துவார்த்தத் தெளிவு பெற்றவர்களாக இருப்பார்கள் என்ற அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது”, இதன் அடிப்படையில் கட்சித் தொண்டர்கள் கருத்தியல் சார்ந்த இடதுசாரி நூல்களைப் படித்துத் தெளிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது ஓர் அடிப்படையாக இருக்கின்றது. இந்த இடத்தில் என்ன பிரச்சனை வருகின்றது என்றால் அந்தக் காலப்பகுதியில் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கின்ற சாதாரணத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் படிப்பதற்கான இடதுசாரி தத்துவங்களையும் கூறுகின்ற நூல்களும் இலக்கியங்களும் சிங்கள மொழியில் இருக்கவில்லை. நடைமுறையில் எதிர்கொண்ட இந்தச் சவாலை நேரடியாகப் பின்வருமாறு எழுதுகின்றார்,
“இலங்கையில் லங்கா சமசமாஜக் கட்சியில் உள்ள ஒரு தொழிலாளிக்கு ஐரோப்பிய தொழிலாளியைப் போல் இவ்விடயத்தில் மொழி காரணமாக வெற்றி கொள்ள முடியாத ஒரு நிலைமை இருந்தது. ஆங்கிலத்தைத் தவிர மார்க்சியச் செவ்வியல் படைப்புகளையோ அல்லது மார்க்சியக் கருத்துகளைப் பிரபலப்படுத்த எழுதப்பட்ட எழுத்துக்களையோ படிக்க அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.”
இப்படிச் சொல்வதோடு, அதேநேரம் ஜோன் ஸ்றாச்சேயை (John Strache) போன்றவர்களை 17 வயது ஆவதற்கு முன்னரே படிப்பதற்கும் தொடர்ந்து வரலாறு, சோசலிசக் கோட்பாடு என்று பற்றிய சிறந்த எழுத்துக்களையும் தான் படிப்பதற்கான சாத்தியம் தனது குடும்பச் சூழலாலும் அதனால் ஏற்பட்ட ஆங்கிலப் புலமையாலும், தன்னால் மார்க்சியச் செவ்வியல் நூல்களை நோக்கி வரமுடிந்தது என்று கூறுகின்றார். அந்த இடத்தில் அவர் சிங்கள மொழி மட்டும் தெரிந்த ஒரு சாதாரண தொழிலாளி முயற்சி எடுத்தாலும் கூட இந்த எழுத்துக்களைப் படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காதல்லவா? என்கின்ற கேள்வியை எழுப்புகிறார். அக்காலகட்டத்தில் தனக்குத் தெரியக் கட்சியில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒரு மொழிபெயர்ப்பும் ட்ரொஸ்கியின் “சோவியத் புரட்சியின் வரலாறு” நூலினை நூறு பக்கங்களுக்கும் சுருக்கி லெஸ்லி எழுதிய ஒரு நூலும் தான் இருந்தன. எனவே சிங்கள மொழிமட்டுமே தெரிந்த வாசகர்கள் கல்வி வகுப்புக்களையும் கட்சி சொல்லித்தருகின்ற சில சுலோகங்களிலும் சில வாய்ப்பாடுகளிலும் தான் தங்கி இருக்கவேண்டிய நிலையே இருந்தது என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து மார்க்சிய நூல்களின் நூல்களின் மொழிபெயர்ப்புகளும் மார்க்சிய நூல்களும் தமிழில் வெளிவந்துகொண்டிருந்ததால் தமிழ் வாசகர்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக வாய்ப்புகள் இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார். சமூகத்தை மாற்ற முனைபவர்கள் சமூகத்தைப் புரிந்துகொள்வது முக்கியம், இங்கே ரெஜி அதற்குத்தான் முயற்சி செய்திருக்கின்றார்.
இப்பொழுது கட்சிக்கு ஆட்களை உள்வாங்குவதில் செய்கின்ற நடைமுறைகள் சார்ந்த இன்னொரு பிரச்சனை வருகின்றது. கட்சிக்குள் மாணவர்களையும் மத்திய வர்க்கத்தினையும் சேர்க்கும் பொழுது அவர்களுக்குக் கோட்பாட்டு ரீதியில் குறைந்தளவு புரிதலேனும் இருக்கின்றதா என்பதனைப் பார்த்தே கட்சிக்குள் உள்வாங்கப்படுகின்றார்கள். ஆனால் தொழிலாளர்களை அவ்விதம் சேர்ப்பது நடைமுறைச் சாத்தியமில்லாததாக இருக்கின்றது. இப்படியாக நாங்கள் செய்திருந்தால் கட்சிக்கு ஒரு தொழிலாளர்களையு எங்களால் சேர்த்திருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்.
இந்த அவதானத்தைப் பற்றிய ரெஜியின் பின்வரும் கூற்று மிகவும் முக்கியமானது:
“கட்சி என்பது வர்க்கத்தின் முன்னணிப்படை என்றால் கட்சியைத் தலைமைக் குழுக்கள் தான் அரசியல் உணர்விலும் அர்ப்பணிப்பு உள்ள செயற்பாட்டிலும் கட்சியின் முன்னணிப் படியாக இருக்கமுடியும். அர்ப்பணிப்பான செயற்பாடு என்பது ஒருவருடைய அரசியல் ரீதியான தயார் நிலையில் வந்து வருகிறது. அரசியல் உணர்வு என்பது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாகிறது. ஆனால் இது தத்துவார்த்தப் புரிதலூடாக மட்டுமே முழுமை அடைய முடியும். அன்றைய மத்திய கமிட்டியைத் திரும்பிப் பார்க்கையில் அதில் ஒரு சிறிய அளவிலான அளவில் சிறுபான்மையினராகவே தொழிலாளர் உறுப்பினர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பது தெரிய வருகிறது.
ஆனால் இது வெறும் பெயருக்குப் போலத்தான். அனேகமான விவாதங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் நடந்தன. பெரும்பான்மையானவர்களுக்கு ஆங்கில மொழியிலேயே விவாதிக்க முடிந்தது. முடிவெடுக்கப்படும் தருணங்களில் மட்டும் விவாதங்களின் சுருக்கம் சிங்களத்திலோ அல்லது தமிழிலோ வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய தத்துவார்த்த விடயங்களில் முடிவெடுக்க வேண்டி வரும்போது ஆழமற்ற புரிதலைக் கொண்டுள்ள தொழிலாள உறுப்பினர்கள் என்ன செய்வார்கள்? இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் செயற்பட்ட விதத்தில் அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் ஆகவே இருந்திருக்கின்றார்கள். 1942 இலும் அதன்பிறகும் கட்சி பிளவுறுவதற்கான குழுவாதப் போக்குக்கான வேர்களை இந்த நிலைமையே அப்போதிருந்தே உருவாக்கி விட்டிருந்தது”
அமைப்புகளுக்கு நீண்டகால நோக்கு, வேலைத்திட்டம் என்பனவற்றைப் போலவே மூலோபாயம், தந்திரோபாயம் குறித்த தெளிவிருப்பதும் அவசியமாகும். இது குறித்து ரெஜி எழுப்புகின்ற கேள்வி முக்கியமானது. 1935இல் வெளியிடப்பட்ட கட்சியின் விஞ்ஞாபனத்தில் கூட அதன் நோக்கமாகத் தேசிய சுதந்திரமும் சோசலிசமும் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவற்றை அடைவது எவ்வாறு என்ற என்பது அந்த விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. 1940 – 41 இல் லங்கா சமசமாஜக் கட்சி மீள ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு மார்க்சியக் கட்சியாகிய பொழுது புரட்சியின் ஊடாக இவற்றை அடையலாம் என்பது பதிலாகச் சொல்லப்பட்டது என்றபோது எந்தவித்மான புரட்சி என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதை ரெஜி சுட்டிக்காட்டுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலும் நீண்டகால நோக்கு, வேலைத்திட்டங்கள், மூலோபாயம், தந்திரோபாயம் என்பன குறித்துத் தெளிவான புரிதல் கட்சித் தலைமைக்கும் கட்சியின் அங்கத்தவர்களுக்கு இருப்பது மிகவும் அவசியமானது. தான் சார்ந்திருந்த கட்சி பின்னாளில் பலவீனமற்றுப் போனதற்கும் மக்களிடையே செல்வாக்கு இழந்ததற்கும் பிளவுண்டதற்குமான காரணங்களை அறிவதற்காகவும் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் அமைப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தக் கேள்விகளை ரெஜி எழுப்புகின்றார் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக இன்னொரு முக்கிய அவதானத்தையும் அவர் சொல்கின்றார், அன்றைய கம்யூனிஸ்ட்டுகளிடையே காலனித்துவ, அரைக் காலனித்துவ நாடுகளில் புரட்சி இரண்டு கட்டங்களில் நடைபெறும் என்கின்ற நம்பிக்கை இருந்தது. இந்த முதலாவது கட்டத்தில் ஏகாதிபத்தியமும் நிலப் பிரபுத்துவத்தின் எச்சச் சொச்சங்களும் இல்லாதொழிக்கப்படும் என்பதால், அந்த முற்போக்கான பாத்திரத்தைத் தேசிய பூர்ஷ்வாக்கள் செய்யும் வரை தொழிலாளர் வர்க்கமும், கட்சியும் அவர்களுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும். இதன் பிறகு முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கால இடைவெளிக்குப் பிறகு தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சோசலிசப் புரட்சியை நோக்கி நகர்வதற்கு வழிகாட்டவேண்டும் என்றும் அதுவே இரண்டாம் கட்டப் புரட்சி என்றும் கருதப்பட்டது.
ஆனால் இது குறித்து ட்ரொஸ்கியர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. அரைக்காலனித்துவ நாடுகளைப் பொறுத்தவரை அங்கே முதலாளித்துவம் பலவீனமாக வளர்ச்சியைக் கொண்டிருப்பது அந்த வர்க்கம் பலவீனமாக இருக்கின்றது என்பதையே சுட்டிக்காட்டுகின்றது; இதனால் அவர்கள் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கின்றார்கள். இதனால் இந்த நாடுகளில் முதலாளித்துவ வர்க்கத்தால் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிரான முற்போக்குப் பாத்திரத்தை எடுக்கமுடியாது. எனவே நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகவும் தேசிய சுதந்திரத்திற்காகவும் போராடும் பொறுப்பு அங்கே முழுக்க முழுக்க தொழிலாளர் கையில் இருக்கின்றது என்றும் ட்ரொஸ்கிஸ்டுகள் கருதினர். லங்கா சமசமாஜக் கட்சி ட்ரொஸ்கிசத்தைத் தழுவியதற்கு ட்ரொஸ்கியின் இந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு எவ்விதம் பொருத்தமானதாக இருந்தது என்பதற்குக் கட்சியால் சரியான விளக்கத்தை ஒருபோதும் தரமுடியவில்லை என்பதை ரெஜி இந்நூலில் சுட்டிக்காட்டுகிறார். அத்துடன், அரசியலையும் பொருளாதாரத்தையும் போலவே கலாச்சாரமும் முக்கியமானது என்பதை லங்கா சம சமாஜக் கட்சியினர் ஒருபோதும் உணரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அது மட்டுமல்லாமல் லங்கா சமசமாஜக் கட்சியின் செயற்பாடுகள் நிரந்தரப் புரட்சிக்கான கோட்பாட்டு நடைமுறையிலிருந்தும் விலகியே இருந்தது என்பதையும் பின்னர் அதன் பழைய உறுப்பினர்கள் மத்தியில் நிரந்தரப் புரட்சி என்பது “புனிதப் பசுவாக” இருக்கின்றபோதே ஒரு காலத்தில் தாம் “முதலாளித்துவ வாதிகள்” என்று அழைத்த கட்சியினருடனே அடுத்தடுத்துத் தேர்தல் கூட்டணி அமைத்ததையும் ரெஜி விமர்சிக்கின்றார்.
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்தவர்கள் அறிவுசீவிகளாக இருந்ததுடன் போதுமான நேரம் கிடைத்திருந்தபோதும் கூட தமக்குப் பின்னால் நின்று நிலைத்துப் பயனளிக்கக் கூடிய எழுத்துகளை விட்டுச் செல்லவில்லை என்பதையும், அவர்கள் செய்த மொழிபெயர்ப்புகள் கூட மிகக் குறைவானவை என்கிற விமர்சனத்தையும் ரெஜி முவைக்கின்றார்.
மிகவும் கனதியான உரையாடல்களைக் கோரக்கூடிய இந்த நூலில், எனது வாசிப்பில் ரெஜியின் தன்னனுபவத்தில் இருந்து அறிந்த, முக்கியமான சிலவிடயங்களையும் குறிப்பிடுகின்றேன்.
- இந்நூலில் தொடக்கத்தில் ரெஜி ரெயிலில் ஜோன் ஸ்ட்ராச்சியில் சோசலிசம்: தத்துவமும் நடைமுறையும்” என்கிற நூலை வாசித்துக்கொண்டு செல்கின்றார். அதைக்கண்டுதான் அதே ரெயிலில் பயணித்த பெர்னாட் சொய்சா ரெஜியிடம் நூல் குறித்து உரையாடுகின்றார். அந்த உரையாடலே தன்னை லங்கா சமசமாஜக் கட்சி வரை இழுத்துச் சென்றது என்றும் ரெஜி குறிப்பிடுகின்றார். இந்த நூலின் மொழியாக்கத்தைச் செய்த விக்னேஸ்வரன் அவர்களும் தனது வாசிப்புப் பழக்கத்தினூடாக “தொழிலாளர் பாதை” தேவராசா அவர்களுடன் ஏற்பட்ட உறவே தன்னை அரசியலுக்குள் ஆழமாக இழுத்துச் சென்றது என்று குறிப்பிட்டுள்ளார். வாசிப்பு மட்டுமே தலைவர்களையும் பிரக்ஞையையும் தந்துவிடாது என்பது உண்மையென்றாலும், தலைவர்களும், அரசியல் பிரக்ஞை கொண்டோரும் பெரும்பாலும் வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்; குறிப்பாக அரசியல் எழுத்துகளை வாசித்தனர் என்பது முக்கியமான ஒன்று.
- ரெஜி சிரிவர்த்தன அவரது நண்பர் பாரூக்கின் வீட்டில் தங்கியிருந்து படிப்பதாகப் பொய்சொல்லிவிட்டுக் கட்சியின் தலைமறைவுச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார். இது ரெஜியின் தாய்க்குத் தெரியவரும்போது அவரது குடும்பத்தினர் “காணவில்லை” என்று ரெஜியின் படத்துடன் பத்திரிகை விளம்பரம் ஒன்றைக் கொடுக்கின்றனர். இதில் ரெஜியின் சகோதரரின் ஆலோசனைப்படி வேண்டுமென்றே அவரைக் கண்டுபிடிப்போருக்குச் சன்மானம் எதையும் அறிவிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
- ரெஜியைத் தேடி பொலீசார் அவர் குடும்பத்தினரை விசாரணைக்கு அழைக்கும்போது ரெஜியின் தாய் நூல்களை அழித்துவிடாமல் அதனை அவருக்குத் தெரிந்த இன்னொருவரிடம் கொடுத்து ரெஜியின் தாய் பாதுகாக்கிறார். இது ஏனோ எனக்குத் தாய் நாவலை நினைவூட்டியது.
- தலைமறைவாகத் தோழர்கள் இருக்கின்ற வீடொன்றுக்குச் செல்லும் ரெஜி வெளியிலிருந்து கதவைத் தட்டி விட்டும் உள்ளே செல்லும்போது உள்ளே இருக்கின்ற தோழர்கள் காவல்துறையோ என்று எண்ணிப் பதற்றமடைதல்.
இந்த முக்கியமான நூலை வாசிப்பது எமக்குள் சில கேள்விகளை எழுப்புவதுடன் பதில்களையும் தேடச்செய்யும். தொடர்ச்சியாக முக்கியமான, அரசியல் பயனுடைய நூல்களை வெளியிடும் சமூகம் இயல் பதிப்பகத்துக்கும் இதனை அழகுற மொழிபெயர்த்திருக்கும் எஸ்.கே. விக்னேஸ்வரனுக்கும் தோழமை நிறைந்த நன்றிகள். இந்த நூல் அமைப்பாக்கம், அமைப்புச் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு இருக்கவேண்டிய அரசியல் பிரக்ஞையின் அவசியம் போன்றவற்றை லங்கா சமசமாஜக் கட்சி பற்றிய சுயவிமர்சனத்தினை முன்வைத்து உரையாடலைத் தொடக்கிவைத்துள்ளது. இந்த உரையாடல் தொடர்வது அவசியாம். ஆனால் அதற்குப் பெரும் சவாலாக இருப்பது அமைப்பு செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லாத, கும்பல் மனநிலையில் நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பான்மையானவர்களாக மாறிவருகின்ற நிலைமையாகும். உரையாடல்களில் துளியும் நம்பிக்கையில்லாதவர்களுக்கு, குறைந்தபட்சம் எதிர்த்தரப்பு என்ன சொல்கின்றது என்பதைப் புரிந்துகொள்வதற்குக் கிஞ்சித்தும் முயற்சிசெய்யாதவர்களையே இன்றைய post-truth காலம் பெருக்கிவைத்துள்ளது. வாசிப்பதிலோ, சமூக நிகழ்வுகளை உற்றுநோக்குவதிலோ அவற்றைப் பகுப்பாய்வதிலோ எந்தப் பழக்கமும் நம்பிக்கையும் இல்லாமல் யாரோ, எவரோ அங்கே சொன்னார்கள், வட்சப்பில் அனுப்பினார்கள், டிக்ரொக்கில் சொன்னார்கள் என்று சொல்லிக்கொண்டு அதையே அறிவுமூலமாகக் கொண்டு அரசியலாக முன்னெடுக்கின்ற ரசிகர் மன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் தான் நாம் உரையாடவேண்டி இருக்கின்றது. அமைப்பச் செயற்பாடுகளில் நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருந்தவர்கள் அமைப்புக்கள் பலமாக இருந்த காலத்தில் அவைகுறித்து வரலாறாகவும் சுயவிமர்சனமாகவும் உரையாடல்கள் தொடரவேண்டும் என்ற நோக்குடன் எழுதிய இதுபோன்ற நூல்களை, நாங்கள் அமைப்புச் செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்து அதனையே ஒரு கேலிக்கூத்தாகச் சொல்பவர்கள் பெருகியுள்ள காலப்பகுதியில் பேச எடுத்திருப்பது ஒருவிதத்தில் அவசியமானது என்றாலும் இன்னொவிதத்தில் மிகுந்த சவால் உடையதாகவும் தான் இருக்கப் போகின்றது.
பின்குறிப்புகள்:
1. மே 11, 2025 அன்று ரொரன்றோவில் இடம்பெற்ற நூலறிமுகக் கூட்டத்தில் வாசித்த கட்டுரை, இது ஓகஸ்ட் – செப்ரம்பர் 2025 மானுடம் இதழிலும் வெளியானது.



Leave a comment