மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும்

Captureஅண்மையில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது விளம்பரம் ஒன்றில் “துமித்தலையில் நீர் வடிகின்றதா?” என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறி, அவர்கள் எதனைக் குறிப்பிடுகின்றார்கள் என்பதை என்னால் அனுமானிக்கமுடிகின்றதா என்று கேட்டிருந்தார்.  சற்று யோசித்தேன்.  எதையும் ஊகிக்க முடியாமல் என்ன சொல்கின்றார்கள் என்று கேட்டேன்.  Shower Head என்பதற்கான தமிழ்ச் சொல்லாகவே அவர்கள் “துமித்தலை” என்பதைப் பயன்படுத்துகின்றார்கள் என்று குறிப்பிட்டார்.  Shower Head என்பதற்கான சரியான சொல் தமிழில் இல்லை என்ற அளவில் அதற்கான சொல்லாக்கம் செய்யப்படவேண்டியதன் அவசியம் முக்கியமானதே.  அதேநேரம் இவ்வகையான நேரடியான மொழிபெயர்ப்புகள் முறையான சொல்லாக்கமாக அமையமுடியாது என்றே கருதுகின்றேன்.

ஓர் எளிய புரிதலுக்காக மொழியை ஒரு தொடர்புசாதனம் என்று சொல்லலாம்.  ஆனால் ஒரு குறிக்கப்பட்ட மொழி அது வழங்கப்பட்டுவரும் மக்களின் வாழ்வியலையும், சமூக வரலாற்றுக் கூறுகளையும் பண்பாட்டுக் காரணிகளையும் உள்ளடக்கியதாகவே அமைகின்றது.  எம்மிடையே மிகச் சாதாரணமாக நிகழுகின்ற உரையாடல்களில் கூட நாம் இந்த அம்சங்களை அவதானிக்கமுடியும்.  மொழியானது இந்த அம்சங்களால் சமூகத்தைப் பிரதிபலிப்பதாகும்.  எனவே எந்த ஒரு மொழிக்கும் அது வழங்கப்பட்டும் பிரதேசத்தின் பண்பாட்டுச் சூழலுக்கும் தொடர்ச்சியான நெருக்கமான தொடர்பு இயல்பாகவே இருக்கும்.  எமக்கு நன்கு அறிமுகமான ஆங்கில சிறுவர்  பாடலான Rain rain go away…” ஐ எடுத்துக்கொள்வோம்.  அடிக்கடி மழை பெய்யும் வழமை இருக்கின்ற, அதனால் சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடுவது தடைப்படுகின்ற காலநிலை உள்ள பிரதேசத்தில் தோன்றியது இந்தப்பாடல்.  இந்தப் பாடலின் பல்வேறு வடிவங்களிலும், மழையினால் சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடுவது தடைப்படுகின்றது என்றே சுட்டிக்காட்டப்படுகின்றது.  சில காலங்களுக்கு முன்னர் இந்தப் பாடலுக்கு மாற்றாக தமிழில் வெளியான “மழையே மழையே மெத்தப் பெய்” என்ற பாடலை கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டி இருந்ததைக் காணமுடிந்தது.  பொதுவாக மழைவளம் குன்றிய, மக்களின் அடிப்படைத் தொழில் மழையை எதிர்ப்பார்த்து இருக்கின்ற விவசாயமாக இருக்கின்ற மக்கள் கூட்டத்தைக் கொண்டிருந்த/இருக்கின்ற தமிழ்ச்சூழலில் மழையை வரவேற்றுப் பாடும் பாடல்கள் தானே வந்திருக்கமுடியும்.  அந்த அடிப்படையிலேயே தமிழில் இருக்கின்ற “மழையே மழையே மெத்தப் பெய்..” உள்ளிட்ட சிறுவர் பாடல்கள் எழுந்திருக்கின்றன.  இதுபோல ஆங்கிலத்தில் பரவலாக வழக்கத்தில் இருக்கின்ற Warm Welcome, Warm Wishes போன்ற சொற்பிரயோகங்கள் கூட, குளிருக்கு இதமாக இருக்கக்கூடிய கதகதப்பு என்கிற பின்னணியுடனேயே எழுந்திருக்கவேண்டும்.  எனவே முன்னர் குறிப்பிட்டதைப் போலவே மொழிக்கும் அது வழங்கப்பட்டும் பிரதேசத்தின் பண்பாட்டுச் சூழலுக்கும் இருக்கின்ற தொடர்ச்சியான நெருக்கமான தொடர்பு பற்றிய புரிதலுடன் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளை சிறப்பான மொழிபெயர்ப்புகளாக அமையும்.

புவியரசு செய்திருந்த கரமசோவ் சகோதரர்கள் மொழிபெயர்ப்பினை வாசித்தபோது அதில் பல்வேறு இடங்களில் “ரொட்டியும் கறிக்குழம்பும் உண்டான்” என்று குறிப்பிடப்படுவதை அவதானித்து இருக்கின்றேன்.  தமிழில் இந்த நாவலை வாசிக்கின்ற ஒருவருக்கு “ரொட்டியும் கறிக்குழம்பும்” உண்டான் என்று குறிப்பிடப்படும்போது, ரஷ்யாவிலும் குழம்பு உண்ணும் வழக்கம் இருக்கின்றது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிடும் அல்லவா.  இதுபோல உணவு வகைகளின் பெயர்களை மொழியாக்கம் செய்வதில் நிறைய சவால்கள் இருக்கின்றன.  எமது வீடுகளில் நாம் வழக்கமாகச் செய்யும் “வறை” இனை (சுறா வறை, முருங்கையிலை வறை போன்றன…) Stirfry என்று ஆங்கிலத்தில் சில இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கவனித்து இருக்கின்றேன்.  அதுபோல கனடா வந்த புதிதில் ரொரன்றோவில் இருந்த பல உணவகங்களில் வடையை ஆங்கிலத்தில் Lentil Doughnut என்று குறிப்பிடும் வழக்கம் இருந்தது.  இதுபோன்ற மொழியாக்கங்கள் தவிர்க்கப்படவேண்டும் என்றே கருதுகின்றேன்.  மாறாக சாய்ந்த எழுத்துக்களில் Varai, Vadai என்று குறிப்பிடலாம்.  வேண்டுமானால் மேலதிக விளக்கத்திற்கு அடிக்குறிப்புகள் வழங்கலாம்.  இன்னொரு நூலில் “அவரது நல்ல மனைவி…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  His Good Wife என்பது ஆங்கிலத்தில் பாவனையில் இருக்கின்ற பிரயோகம்.  அதை நேரடியாகத் தமிழ்ப்படுத்தியதாலேயே இவ்விதம் நிகழ்ந்திருக்கின்றது.

சடங்குகள் உள்ளிட்ட பண்பாட்டுக் காரணிகளை எவ்விதம் மொழியாக்கம் செய்வது என்பது இன்னொரு சவால்.  உதாரணமாக Dating என்பதை எவ்விதம் தமிழில் கூறுவது என்று பல்வேறு இடங்களில் உரையாடப்படுவதைக் கவனித்து இருக்கின்றேன்.  “உடன்போதல்” என்பது அதற்கு சரியான சொல் என்று கூறப்படுவதையும் கவனித்துள்ளேன்.  உடன்போதல் என்பது பழந்தமிழர் மரபுகளில் ஒன்று.  அதற்கும் Dating இற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  அதுமட்டுமல்லாமல், அண்மைக்காலத்தில் எமக்கு அறிமுகமான ஒரு உறவுமுறையை எமது சங்க இலக்கியங்களில் கூறப்படுகின்ற உறவுமுறைக்குரிய சொல்லினால் அழைப்பது பொருத்தமற்றதும் என்றே கருதுகின்றேன்.  அதேநேரம் ஒரு முறை மணிவேலுப்பிள்ளை அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது Townhouses என்பதற்குரிய பொருத்தமான சொல்லாக நிரைமனை என்பதைச் சொல்லியிருந்தார்.  மணிவேலுப்பிள்ளை அவர்கள் எழுதிய ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு என்ற கட்டுரை மொழியாக்கங்கள் பற்றிய செறிவான கட்டுரைகளில் ஒன்றாகும்.

அதுபோல சடங்குகளுக்கான சரியான சொல்லாக்கங்களைச் செய்வதும் கடினமானதாகும்.  அவற்றுக்கும் முன்னர் குறிப்பிட்டதைப்போல சரிந்த எழுத்துக்களில் எழுதி, அடிக்குறிப்புகளில் விளக்கத்தைக் கொடுக்கலாம்.  ஓர் உதாரணத்துக்கு செல்வா கனகநாயகம் அவர்கள் காடாற்று என்பதற்கு Heal the Forest என்று ஆங்கிலப்படுத்தி இருந்தார்.  அதைவிட Kadatru என்று குறிப்பிட்டு அடிக்குறிப்பில் விளக்கங்களைத் தரும்போது காடாற்று என்பதற்குப் பின்னாலுள்ள பண்பாட்டு வரலாறும் வாசிப்பவரைச் சென்றடையும்.  அது வாசகருக்கு இன்னமும் நெருக்கத்தைத் தரும்.

வட்டார வழக்கு, Slang என்று சொல்லப்படுகின்ற சொற்கள் இவற்றையெல்லாம் மொழிபெயர்ப்பது இன்னும் சிக்கலானது.  ஒரு உதாரணத்துக்கு கறுப்பினத்தவர்கள் பேசும்போது yeh yeh என்று கூறுவதையும், yeah maan என்று கூறுவதையும் அவர்களது மொழிப்பாவனைகளுடன் பரிச்சயமில்லாதவர்கள் புரிந்துகொள்வது சிரமமானது.  ஆங்கிலத்தில் பேசும்போது man என்பதை அப்படியே தமிழில் மொழிபெயர்க்கும்போது மனிதா, மனிதா என்று குறிப்பிட்டால் முறையான மொழிபெயர்ப்பாக அமையாது.  அதுபோல ஆங்கிலத்தில் பேசும்போது மிகச் சிறிய விடயங்களுக்கெல்லாம் Sorry என்று சொல்வோம்.  ஆனால் தமிழில் அதையே மொழிபெயர்த்து வருந்துகின்றேன் என்றோ மன்னித்துக்கொள்ளுங்கள் என்றோ எழுதினால் எப்படி இருக்கும்?  அதுபோலவே மொழிப்பிரயோகத்தில் சரளமாக வருகின்ற தூசன வார்த்தைகளை எவ்விதம் மொழியாக்கம் செய்வது என்பதுவும் கூட சிக்கலானதுதான்.

தமிழைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் – குறிப்பாக புனைவுகளில் – நிறைய மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன.  அவற்றுள் நிறைய திருத்தமானதாகவே இருக்கின்றன.  அபுனைவு நூல்களில் மூலநூல்களில் மிகப் பெரும்பாலானவை இன்னமும் மொழியாக்கம் செய்யப்படாத நிலையிலேயே இருக்கின்றன.  (மார்க்சிய நூல்கள் மொழிபெயர்ப்புச் அனேகம் செய்யப்பட்டிருக்கின்றன)  மூலநூல்கள் மொழியாக்கம் செய்யப்படாமல் அவற்றினைப் பற்றிய கட்டுரைகளும், விமர்சனங்களும் உரையாடல்களுமே தமிழில் மொழியாக்கம் செய்யப்படுவதும் அவற்றில் இருக்கின்ற சில கூற்றுகள் (quotes) மட்டும் பல இடங்களில் பொன்மொழிகள் போல பயன்படுத்தப்படுவதும் எதிர்விளைவுகளையே அதிகம் ஏற்படுத்தும்.  கலைச்சொல்லாக்கத்தில் நிறையச் சொற்கள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் அவை இன்னமும் பரவலான கவனத்தைப் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

தமிழ்ச் சொற்கோவைக் குழு என்கிற குழுவினர் http://kalaichotkovai.blogspot.ca/ என்கிற தளத்தில் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கியும், தொகுத்தும் வருகின்றனர்.  இவர்களது இணையத்தளத்தில் 38 கோவைகளில் 10000 க்கும் மேற்பட்ட கலைச்சொற்கள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  இதுபோன்ற முயற்சிகளே தமிழின் இருப்பிற்கு உரமூட்டுவதாக அமையும்.


 

  1. இக்கட்டுரையில் இடம்பெற்ற விடயங்கள்  ரொரன்றோ தமிழ்ச் சங்கம்  செப்ரம்பர் 26, 2015 இல் ஒருங்கமைத்திருந்த மொழிபெயர்ப்புப் பற்றிய கருத்தரங்கில் என்னால் தனித்தனி குறிப்புகளாகப் பகிரப்பட்டது.
  2. இதன் கட்டுரை வடிவம் பெப்ரவரி 2016 தாய்வீடு பத்திரிகையில், நான் எழுதும் சொல்லத்தான் நினைக்கிறேன் பத்தியில் இடம்பெற்றது.
  3. இப்பாடலைப் பகிர்ந்துகொண்ட மணிவேலுப்பிள்ளை அவர்களுக்கு நன்றி!இட்டாற்றுப் பட்டொன்று இரந்தவர்க்கு ஆற்றாது
    முட்டாற்றுப் பட்டு முயன்றுள்ளூர் வாழ்தலின்
    நெட்டாற்றுச் சென்று நிரைமனையில் கைந்நீட்டும்
    கெட்டாற்று வாழ்க்கையே நன்று  (நாலடியார்: 288)

2 thoughts on “மொழிபெயர்ப்பு : சவால்களும் சில பரிந்துரைகளும்

Add yours

  1. உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கின்றேன். தமிழ்ச் சொற்கோவைக் குழுவினர் ( http://kalaichotkovai.blogspot.ca) கூட, Dating ஐ “உடன்போதல்” என்றே மொழிபெயர்த்துள்ளனர். மொழிபெயர்ப்பதற்கு முன்பாக குறித்த ஆங்கிலச் சொல்லினை முழுமையாக விளங்கிக்கொள்வது அவசியமானது.

    Like

Leave a reply to nagendra bharathi Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑