பாடசாலைச் சங்கங்கள்: பொறுப்புணர்வும் மதச்சார்பின்மையும்

குறிப்பு: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் அழைப்பில் ஆறு திருமுருகன் அவர்கள் கனடா வருகைதர இருப்பது குறித்த செய்தியொன்று வெளியாகி இருந்தது.  இது குறித்து சங்கத்தின் செயலாளராகப் பதவி வகித்த எனது நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்குடன் சங்கத்து நான் அனுப்பிய பதவி விலகல் கடிதத்தைப் பொதுவெளியில் பகிர்கின்றேன்.  இக்கடிதத்தை சங்கத்தின் நிர்வாக சபைக்கு அனுப்பியதுடன் சங்கத்தின் அனைத்து அங்கத்தவர்களுக்கும் இதனை அனுப்பிவைக்கும்படியும் கேட்டிருந்தேன்.  எனது பதவி விலகலை ஏற்றுக்கொண்ட சங்கத்தினர் அதனை அங்கத்தவருடன் பகிரும்படியான எனது வேண்டுகோளை நிறைவேற்றவில்லை.  இந்த நிலையில் எனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும், பாடசாலைச் சங்கங்கள், கல்வித்துறை ஆகியவற்றில் மதச்சார்பின்மையின் தேவையை வலியுறுத்தவும் இந்தக் கடிதத்தைப் பகிர்வது அவசியம் என்று கருதுகின்றேன்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடா நிர்வாக சபையினருக்கும், இதர அங்கத்தவர்களுக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினருக்கும் தோழமை நிறைந்த வணக்கம்,

டிசம்பர் 9, 2023 இல் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதர்சன் (அருண்மொழிவர்மன்) ஆகிய நான் 2015 முதலாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் நிர்வாக சபை உறுப்பினர், உப செயலாளார், செயலாளர் போன்ற பொறுப்புகளில் இருந்தும், நிர்வாக சபை உறுப்பினராக இல்லாத போதும் கூட உப குழுக்களில் பங்களித்தும் சங்கத்துக்கு எனது பங்களிப்பையும் பங்கேற்பையும் செய்துவருகின்றேன். 

பாடசாலைகள் என்பன வெறுமே மாணவர்கள் கல்வியைப் பெறுவதற்கான பயிற்சிகளைச் செய்துகொடுத்து கெட்டிக்காரத் தொழிலாளர்களை, மருத்துவர்களை, பொறியியலாளர்களை உருவாக்குகின்ற பட்டறைகளாக இருந்துவிடக்கூடாது, அவர்களைப் பொறுப்புணர்வும் சமூகப் பிரக்ஞையும் கொண்ட பிரஜைகளாக உருவாக்குகின்ற இடமாக அமையவேண்டும் என்பது மாபெரும் கனவு.  கல்வியென்பது அறிவை மூளைக்குள் திணித்தோ சேமித்தோ வைப்பது அல்ல; அது ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கும் சமூக மாற்றத்துக்குமான ஒரு கருவி.  இதனைப் பலவிடங்களில் நான் தொடர்ந்தும் பதிவுசெய்தும் உரையாடியும் வலியுறுத்தியும் வந்துள்ளேன். 

பாடசாலைகளுக்கு இருக்கவேண்டிய சமூகப் பொறுப்பும் வகிபாகமும் குறித்த புரிதல் பாடசாலை நிர்வாகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரமல்லாமல் பழைய மாணவர் சங்கங்கள் உட்பட்ட பாடசாலைச் சமூகத்தினர் அனைவருக்கும் இருக்கவேண்டியது அவசியமானதாகும்.  ஈழத்தில் பாடசாலைகள் என்பன எதிர்காலத்தில் பொருளாதார ரீதியிலும் சமூக மதிப்பிலும் உயர்வுற்று விளங்கக் கூடியவர்களை உருவாக்கித் தருகின்ற பட்டறைகளாகவே பொதுப்புத்தியில் விளங்கிக்கொள்ளப்படுகின்றன.  அங்கு நடைமுறையில் உள்ள, பயிலப்படும் கல்விமுறையும் அதற்குத் துணைசெய்வதாகவே இருக்கின்றது.  இந்தக் கல்விமுறையிலும் பாடசாலைகளின் நோக்குகளிலும் சமூகத் தலைமைகளையும், செயல்வீரர்களையும், பொறுப்புணர்வுடன் சுயமரியாதையும் சமத்துவமும் சகோதரத்துவமும் நிறைந்த மனிதர்களையும் உருவாக்குவது பற்றிய அக்கறை குறைவாக இருப்பதாகவே உணர்கின்றோம்.  சுயமரியாதையும் சமத்துவமும் நிறைந்த ஒரு சமூகத்தினை உருவாக்குவது என்பது மானுட சமூகத்தின் மிகப்பெரும் கனவாக இருக்கவேண்டியது.  அதனை நனவாக்க நாம் பல்வேறு தளங்களிலும் தொடர்ந்து போராடவேண்டி இருக்கின்றது.

இனரீதியாக ஒடுக்கப்படுகின்ற, அடையாளம் அழிக்கப்படுகின்ற ஒரு சமூகம் என்றவகையிலும் நாம் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் வெறுப்பூட்டும் கருத்துகளுக்கும் எதிராகத் தொடர்ந்து செயற்படவேண்டி இருக்கின்றது.  வரலாறு என்ற பெயரிலும் மரபுரிமைகள் என்ற பெயரிலும் பழம்பெருமை பேசுவதையும், சமூகங்களிற்குள் சாதி, பால், பாலின, வர்க்க, மத, இன ரீதியிலான ஒடுக்குமுறைகள் திணிக்கப்படுவதையும் நியாயப்படுத்தப்படுவதையும் வெறுப்பூட்டும் பேச்சுகள் போன்றவற்றையும் நாம் ஒருபோதும் அனுமதித்துவிட முடியாது. 

பௌத்த சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட இனமொன்றில் இருந்து வந்தவர்கள் நாம்.  இந்தியாவின் பண்பாட்டு ஆதிக்கத்தாலும் நம்மில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.  புலம்பெயர்ந்து மேற்கு நாடுகளில் வாழ்வோர் என்ற வகையில் நிறவெறி போன்ற ஒடுக்குமுறைகளையும் எம்மில் பலர் உணர்ந்திருக்கலாம்.  இந்த எல்லா இடங்களிலும் சிறுபான்மையினராக நாம் இருந்து பெரும்பான்மையினரால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்; அந்த உளவியல் நெருக்கடியை, வன்முறையை உணர்ந்திருக்கின்றோம்.   அப்போது எல்லாம் நாம் மனம் வருந்தியிருக்கின்றோம், வெதும்பியிருக்கின்றோம், நமக்காக யாரேனும் பேசமாட்டார்களா என்று ஏங்கியிருக்கின்றோம், மனித உரிமைகள் குறித்தும் சமூக நீதி குறித்தும் அக்கறைப்பட்டிருக்கின்றோம். 

ஆனால் நாம் பெரும்பான்மையாக இருக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பெரும்பான்மையைக் காப்பதுதான் ஜனநாயகம் என்று வாதிடுகின்றோம்.  நண்பர்களே பெரும்பான்மையினர் சிறுபான்மைக் கருத்துகளையும் கருத்தியலையும் கவனத்தில் எடுத்து, அவற்றின் நோக்கம் குறித்துப் பரிசீலனை செய்து முடிவுகளை எடுப்பதுவே ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் காப்பாற்றும்.  Majoritarian democracy என்கிற பெரும்பான்மை ஜனநாயகத்திற்கு மாற்றாக Consensus democracy என்கிற “ஒருமித்த ஜனநாயகத்தை” முன்வைக்கவேண்டும்.

நாம் கனடியர் என்ற வகையில் அனைரையும் உள்ளடக்கிய பன்முகத்தன்மை வாய்ந்த மதச்சார்பற்ற நாடொன்றில் வாழ்கின்றவர்களாக பல்வேறு உரிமைகளை அனுபவிக்கின்றோம், மென்மேலும் எமது உரிமைகளுக்காகப் போராடுகின்றோம்.  பாடசாலைகளிலும் எமது பிள்ளைகளுக்கு இந்த நவீன சமத்துவக் கொள்கைகளைச் சொல்லித்தருகின்றார்கள்.  அலுவலகங்களிகும் பணியிடங்களிலும் கூட இவை தொழிலாளர்களின் உரிமைகள் என்று மீண்டும் மீண்டும் விழிப்புணர்வு ஊட்டுகின்றார்கள்.  மதச்சார்பின்மை (Secularism) என்பதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடிக்கின்றார்கள்.  நண்பர்களே, மதச்சார்பின்மை என்பது மதத்தையும் அரசு, அரசியல், பாடசாலைகள் என்பவற்றையும் பிரித்து வைப்பது.  இவற்றைத்தான் கனடாவில் அலுவலகங்களிகும் பணியிடங்களிலும் பாடசாலைகளில் கடைப்பிடிக்கவேண்டும் என்பதைக் கொள்கையாக வைத்துள்ளார்கள்.  இந்த மேலான விழுமியங்களை நாமும் பேணவேண்டாமா?

நண்பர்களே, உங்களில் பெரும்பாலோனோர் பிறப்பால் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் கேட்கிறேன், நீங்கள் வாழும் இடத்தை அங்கே பெரும்பான்மையாக இருப்போரில் செல்வாக்குடைய ஒருவர் பௌத்த பூமி என்றோ கத்தோலிக்க பூமி என்றோ இஸ்லாம் பூமி என்றோ அறிவித்து அந்த அடையாளங்களை வலியுறுத்தும்படி தொடர்ந்து செயற்பட்டால் நீங்கள் எப்படியான ஓர் உளவியல், இருத்தலியல் நெருக்கடிக்கு உள்ளாவீர்கள்?  யாழ்ப்பாணத்தைச் சிவபூமி என்று அழைக்கின்றமை எவ்வளவு வன்முறை வாய்ந்த குரல் என்பதைச் சிறுபான்மையினரின் நோக்கிலிருந்து பாருங்கள்.  தமிழர் பிரதேசங்களில் போதை மருந்துப் பாவனை, ஒழுக்கமீறல்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன, இவற்றுக்கான சமூகவியல் காரணங்கள் என்னவென்பதை நாம் தேடிக்கண்டுபிடித்துத் தீர்க்கவேண்டும்.  மாறாக பெண்கள் ஒழுக்கத்தைக் காக்கவேண்டும், ஆண்கள் செய்யும் ஒழுக்க மீறல்களுக்கும் பெண்கள் ஒழுக்கமில்லாமல் இருப்பதுதான் காரணம் என்று ஆண் ஒருவர் சொல்வது ஆணாதிக்கத்தின் உச்சபட்சக் குரல்களில் ஒன்றல்லவா?  சுயமரியாதையும் விடுதலையுணர்வும் கொண்ட உங்கள் துணைவிக்கோ, நண்பிக்கோ, சகோதரிக்கோ, தாய்க்கோ, மகளுக்கோ இதர உறவுகளுக்கோ இது எவ்வளவு மன அழுத்தத்தைக் கொடுக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.  இவற்றையெல்லாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்ற, மதவாத, ஆணாதிக்க மதிப்பீடுகளை வலுப்படுத்திக்கொண்டிருக்கின்ற ஆறு திருமுருகன் அவர்களை பாடசாலையின் அடையாளமாகவும் பெருமையாகவும் காட்டிச் சிறப்பிப்பது என்பது தலை நிமிர்வா? தலை குனிவா?  சிவபூமி என்ற பெயரிலும் தனது பேச்சுக்களாலும் நடத்தைகளாலும் இவர்களைப் போன்றவர்கள் முன்னெடுத்தும் பரப்பியும் வருகின்ற மதவாதமானது ஈழத்தில் மதக்கலவரங்களையும் வன்முறைகளையும் உருவாக்குவதையும் அதன் மூலம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதையும் நோக்காகக் கொண்ட ஒரு மூலோபாயம் என்றே தெரிகின்றது.  1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு இந்தியா முழுவதும் மதவாதம் பரவியதற்கான மூலவித்து 1949 இல் ராமர் – சீதா திருமணத்தைக் கொண்டாடுவது என்கிற சிறிய திட்டம் என்பதாகத்தான் இருந்தது என்பதை இங்கே கவனத்திற்கொள்ள விரும்புகின்றேன்.  Dhirendra K Jha எழுதிய Ascetic Games: Sadhus, Akharas and the Making of the Hindu Vote என்கிற நூல் ஆன்மீக அரசியல் என்ற பெயரில் நடக்கின்ற மானுடத்துக்கு எதிரான வேலைத்திட்டம் பற்றித் தெளிவாக எழுத்துக்கூறுகின்றது.  ஈழத்தில் “நல்லது செய்கிறோம்” என்றபெயரில் இவர்கள் செய்வதும் இப்படியான மானுடத்துக்கு எதிரான வேலைத்திட்டம் தான்.

நண்பர்களே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை வாழ்நெறியாக வரித்துச் சுயமரியாதை, சமத்துவம், மதச்சார்பின்மை போன்ற கோட்பாடுகளை உள்வாங்கிய பாதையே சமூக நீதியை வென்றெடுக்க உதவும் என்கிற எனது உறுதியான நம்பிக்கைக்கு யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிச் சங்கம் கனடா, ஆறு திருமுருகன் அவர்களை பிரதம/சிறப்பு விருந்தினரானத் தெரிவுசெய்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதுடன் கண்டிப்புக்குரிய ஒன்றாகவும் அமைகின்றது. 

கடந்த 9 ஆண்டுகளாக சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று, உடல் உழைப்பையும், நிதி சேர்க்கை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு, சங்கத்துக்கான எழுத்துப் பணிகள், கருத்தியல் ரீதியான பங்களிப்பு, இதழாக்கம் போன்ற பல்வேறு பங்களிப்புகளை வழங்கியிருந்தேன்.  சங்கம், முற்போக்கான, திசையில் சாதி, பால், பாலின, வர்க்க, மத, இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் இடம்கொடுக்காததாக இருக்கின்றது, இருக்கும் என்ற எனது நம்பிக்கையையும் அதற்கான உழைப்பையும் சங்கத்தின் மேற்சொன்ன முடிவு உடைத்தெறிந்திருப்பதுடன் சங்கம் குறித்த எனது நம்பிக்கையையும் கேலிக்குரியதாக்கியிருக்கின்றது.  “சமூகச் செயற்பாடுகளில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு அதனை சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் செயற்படுத்துவதையும் வலியுறுத்திவருகின்றேன்” என்பதனை இதுவரையான அனைத்து பழைய மாணவர் சங்கத் தேர்தல்களிலும் எனது அறிமுகமாகக் கூறி வந்தேன்; ஆயினும் அதனைச் செயற்படுத்த முடியாத நிலையில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் இந்த முடிவானது மதவாதிகளதும், ஆணாதிக்க பழமைவாதச் சிந்தனையாளர்களதும் செல்வாக்கையும் தாக்கத்தையும் புலம்பெயர் நாடுகளிலிலும் வலுப்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கிவிடக்கூடியது; இது பிற பாடசாலைச் சங்கங்களுக்குப் பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்பதையும் வலியுறுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர், நிர்வாக சபை உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து ஓகஸ்ட் 25, 2024 முதல் விலகிக்கொள்கின்றேன்.  இங்கே எனது குரல் ஒற்றைக் குரல் பலவீனமான தரப்பாகவும், ஒற்றைக் குரலாகவும் இருக்கக்கூடும்.  ஆயினும் இந்தக் குரலினை சமூகநீதி எனும் அக்கினிக் குஞ்சினைக் காக்கின்ற சுடரேந்திய தொடரோட்டமாகப் பார்க்கின்றேன்.    

பழைய மாணவர் சங்கச் செயற்பாடுகளில் இதுவரையாக பெற்றுக்கொண்ட அனுபவங்களுக்கும் உறவுகளுக்கும் கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் அன்பையும் நன்றியையும் தோழமையையும் தெரிவித்துக்கொள்வதோடு, பழைய மாணவர் சங்கச் செயற்பாடுகள் குறித்த நம்பிக்கைகள் தகர்ந்திருக்கும் நிலையில் பழைய மாணவர் சங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளில் இருந்தும் என்னைத் துண்டித்துகொள்ளுகின்றேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑