கண்கள் இரண்டினில் ஒன்றை…

பெண்களுக்கான வோட்டுரிமையை 1931 முதலே வழங்கிய நாடென்ற பெயர் இலங்கைக்கு இருக்கின்றது; அரசியலில் பங்களிக்கும் உரிமையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையும் பெண்களுக்கு சமத்துவமானதென்கிற UN Convention on Eradication of all forms of Discriminations Against Women என்கிற உடன்படிக்கையில் கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றென்ற வகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலையும், பங்கேற்பையும் உறுதிப்படுத்தும் கடப்பாடும், அவர்கள் பங்களிக்க முன்வரும்போது எதிர்கொள்ளுகின்ற தடைகளை உடைப்பதற்கான கடப்பாடும் முக்கியமானது.

ஆயினும் இலங்கைத் தேர்தல் திணைக்களத்தின் தரவுகளின்படி தற்போது இலங்கையில் மக்கள் பிரதிநிதிகள் நிறுவனங்களில் பெண்கள் பிரதிநிதித்துவம் பின்வருமாறு உள்ளது:

  • இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் – 5.8%
  • மாகண சபைகளில் – 0 %
  • உள்ளூர் அதிகார சபைகளில் – 1.9%

(https://elections.gov.lk/en/all_inclusive_election/all_inclusive_women_representation_E.html)

உலக அளவில் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் சதவீதம் இலங்கையை விடக் குறைந்த நாடுகளாக மாலைதீவு (5%), கட்டார் (4%), நைஜீரியா (4%), குவைத் (3%), பப்புவா நியூ கினி (3%), ஹையிட்டி (3%), வனாட்டு (2%), ஒமான் (0%), யெமென் (0%) ஆகிய நாடுகளே இருக்கின்றன.  அதாவது 189 நாடுகளில் 179 நாடுகள் இலங்கைக்கு மேலாக இருக்கின்றன.  இலங்கை கடைசி 10 இடங்களில் இருக்கின்றது.  (https://genderdata.worldbank.org/en/indicator/sg-gen-parl-zs?view=bar)

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலிலின்போது 22 மில்லியன் சனத்தொகையையும், அதில் 17 மில்லியன் வாக்காளர்களையும், அவற்றில் 9 மில்லியன் பெண் வாக்காளர்களையும் கொண்டிருந்தும் கூட போட்டியிட்ட 38 ஜனாதிபதி வேட்பாளர்களில் ஒரு பெண்கூட இல்லை என்பதை ரொரன்றோ ஸ்ரார் கட்டுரையாக வெளியிட்டிருந்தது.  நாமெல்லோரும் வெட்கப்படவேண்டிய விடயம் இது.  ஆனால் பெண்கள் ஏன் பொதுவெளிக்கு வருவதில்லை என்பதை நாம் இங்கே ஆராய்வதே சரியான தீர்வைத்தரும்.  (https://www.thestar.com/news/world/asia/sri-lanka-has-more-women-voters-than-men-but-no-female-presidential-candidates/article_f30d39bc-b827-576f-bf8e-9329676778f0.html)

மேற்குறித்த சூழலில் நடக்க இருக்கின்ற இலங்கைப் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.  தேர்தல்கள் வருகின்றபோது வேட்பாளர்கள் குறித்து பரஸ்பரம் குற்றச்சாற்றுகள் சுமத்தப்படுவதும், பழி சொல்லப்படுவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றாலும் வழமையாக நடப்பதுதான்.  ஆனால் இங்கே புதிதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சில பெண் வேட்பாளர்கள் மீது செய்யப்படும் அவதூறுகளும், கேலிகளும், நடத்தைப் படுகொலைகளும் முன்னைக்கு மிக அதிகமாக இருப்பதோடு மோசமானதாகவும் அமைந்திருப்பதுடன் ஒட்டுமொத்த சமூகத்திலும் நிலவுகின்ற ஆணாதிக்க, ஒடுக்குமுறைக் கூறுகளை வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன.  சனத்தொகையில் 50%க்கு மேலாக உள்ள பெண்களுக்கான உரிமைகளும் அதிகாரமும் பறிக்கப்படுகின்றபோது அது பறிக்கப்படுவது எங்கள் தாய்களிடமிருந்தும், சகோதரிகளிடமிருந்தும், துணைவியிடமிருந்தும், நண்பிகளிடமிருந்தும், தோழியரிடமிருந்தும், குழந்தைகளிடமிருந்தும் அல்லவா?

பொதுவெளிக்குப் பெண்கள் வருவதும் அவர்களது பிரதிநிதித்துவமும் குறைவாக உள்ளபோது அதற்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதிகளை நாம் வலியுறுத்தவேண்டும்.  ஆனால் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும், பொதுவாழ்க்கைக்கு வந்தால் விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற பெயரில் காழ்ப்பையும் வன்மத்தையும் ஆணாதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் அள்ளியிறைப்பதைத்தான் கருத்துச் சுதந்திரம் என்றபெயரில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.  மனித உரிமை அமைப்புகளும், அழுத்தக்குழுக்களும், தேர்தல் திணைக்களம், கண்காணிப்புக் குழுக்களும் இவ்வகையான அவதூறுகளுக்கு எதிரான தமது நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தவும் செயற்படுத்தவும் வேண்டும்.

உங்கள் கண்களில் ஒன்றை வேண்டுமானால் குத்திக் குருடாக்கிக் கொள்ளுங்கள், ஆனால் சமூகத்தின் ஒரு கண்ணைக் குத்த யாருக்குமே உரிமை கிடையாது!

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑