தேரா மன்னா!

வெளிப்படையானதும் வினைத்திறனையும் கொண்டதாக ஓர் உரையாடல் அமையவேண்டுமானால் நாம் உரையாடும் எதிர்த்தரப்பினர் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கூர்மையாக அவதானிப்பதும், அதில் ஏதும் குழப்பம் இருப்பின் தெளிவுபடுத்திக்கொள்வதும்,  தாம் இருக்கும் நிலைப்பாட்டுடன் எதிர்த்தரப்பினர் சொல்லும் கருத்துநிலை / எடுக்கின்ற நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுத் தமக்குள் கேள்வி எழுப்பிக் கொள்வதும், அவர்கள் என்ன அர்த்தத்தில் (context) சொல்கின்றார்கள், எந்த உரையாடலின் அல்லது கடந்தகால நிலைப்பாடுகளின் தொடர்ச்சியாக அதைச் செய்கின்றார்கள் என்பதையும் முன் முடிவுகளோ அல்லது திரிவுபடுத்தல்களோ இல்லாமல் புரிந்துகொள்வதும், குறைந்த பட்சம் அதற்கு முயற்சி செய்வதும் பின்னர் எதிர்வினையாற்றுவதும் முக்கியமானது.  

அவப்பேறாக நண்பர் கற்சுறாவுக்கு இந்த நடைமுறை சாத்தியமாவதில்லை.  அவர் எதிர்த்தரப்பு என்ன சொல்கின்றார்கள், ஏன் சொல்கின்றார்கள் என்று எதையும் யோசித்துப் பார்க்காமல், தானே அவர்கள் இதைத்தான் சொல்கின்றார்கள் என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, அவர்கள் அயோக்கியர்கள் / முட்டாள்கள் / போலியானவர்கள் என்று தானே முடிவெடுத்துக்கொண்டு, அவர்களை தான் பிழையானதாக நினைக்கின்ற அடையாளங்களில் ஒன்றுடன் தொடர்புபடுத்திவிட்டே உரையாடுவதைத் தன் வழமையாகக் கொண்டுள்ளார்.  இந்த வகை மனநிலையுடனும் நிலைப்பாட்டுடனும் எத்தனை முறை உரையாடினாலும் எல்லாருமே அயோக்கியர்களாகவோ அல்லது அயோக்கியத்தனம் செய்பவர்களாகவோ தான் தெரிவார்கள் என்பதைத் தெரிவித்துக்கொண்டு எனது பதிவுக்கு இட்ட பின்னூட்டத்திலும், தான் தனியாக எழுதிய முகநூல் பதிவிலும் கற்சுறா குறிப்பிட்ட கருத்துகளுக்கு இங்கே சில விளக்கங்களைக் கொடுக்கின்றேன்.

//இதேநேரம், இலங்கையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதவில்லை என்பதுவும் அது குறித்த விவாதங்களை முன்னெடுக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது. இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று.”// 

என்று நான் குறிப்பிட்டதற்கு கற்சுறா பின்வருமாறு எதிர்வினையாற்றியுள்ளார்.

“இங்கே நீங்கள் குறிப்பிடும் “பெரும்பான்மையான பொதுமக்கள்” என்பவர்கள் யார்? எனது பட்டறிவில் இடதுசாரிகளின் செயற்பாடுகளை வெறுத்தவர்கள் யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதியினராகத்தான் இருந்தது. அதாவது சாதி வெறி அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் போன்றவர்கள். உண்மையில் பெரும்பான்மை மக்கள் இடதுசாரிகளில் நம்பிக்கை இழக்கவில்லை. புலிகளின் ஆயுத ஆக்கிரமிப்பு அவர்களைப் பேசவிடவில்லை என்பதே உண்மை. நீங்கள் சொல்வது புலிச் சொல். இன அபிமானம் – தேசஅபிமானம்- பாசை அபிமானம் பேசுபவர்கள் சமூகநீதி பற்றிப் பேசமுடியாது. சமூகநீதி என்பது இன்னும் விரிவானது. ஒருவன் தன்னுடைய பிறப்பை- தான் பிறந்த இடத்தை- தான் பேசும் மொழியை புனிதாமானது என்று எப்போது கருத நினைப்பானோ அப்போதே அவனுக்கும் சமூகநீதிக்கும் சந்தர்ப்பம் இல்லை என்றாகிவிடும். மற்றதின் அடக்குமறையை எதிர்த்தல் என்பது வேறு. அதற்காகத் தன்னுடைய பெருமையை அடையாளம் கொள்ளுதல் என்பது வேறு. ஈழவிடுதலைப் போராட்டம்- ஈழவிடுதலை யுத்தம். ஈழவிடுதலைச் சமாதானம்- ஈழவிடுதலை இயக்கங்கள் என்ற பார்வைகள் எல்லாம் தனியே புலி மனதிற்குள் பார்க்கவும் முடியாது. விவாதிக்கவும் முடியாது. அவை வேறு. நீங்கள் அவற்றிலிருந்து மாறத்தான் வேண்டும். மாறி வரத்தான் வேண்டும். i am waiting!!!”

இப்படியாக எதிர்த்தரப்பு என்ன சொல்கின்றது என்று உணர எந்த முயற்சியும் எடுக்காமல், சர்வசாதாரணாமாக நான் சொல்வதைப் புலிச் சொல் என்று சொல்லிக் கடந்துபோய்விடுவதைத்தான் கற்சுறா உரையாடல் என்று சொல்கின்றார்.  

நான் எனது பதிவில் தெளிவாகவே இடதுசாரிக் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று, கட்சிகள் என்று விளித்தே (இடதுசாரிக் கட்சிகள், இடதுசாரிகள் அல்ல), அவை

 “தேசிய இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதவில்லை என்பதுவும் அது குறித்த விவாதங்களை முன்னெடுக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது. இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று” 

என்று குறிப்பிட்டுள்ளேன்.  இந்தக் காலப்பகுதியில் தான் தமிழ் தேசிய அரசியலைப் பேசிய கட்சிகள் அங்கே மக்களிடம் செல்வாக்கைப் பெற்றன, அவை பேசிய உணர்வூட்டும் பேச்சுளின் உள்ளடக்கம் இனவாதத்தைக் கொண்டதாகவும் பெருமிதத்தைக் கொண்டதாகவும் இருந்தது.  இந்த இடத்தில் முற்போக்கான அரசியலைப் பேசியிருக்கவேண்டிய இடதுசாரிக் கட்சிகள் தமது கடமையில் இருந்து வழுவினார்கள் என்பதே உண்மை.  மக்களுக்கு அந்தக் கட்சிகளிடமும் கட்சிகள் சார்ந்தவர்களிடமும் நம்பிக்கை இழக்க, அன்றைய காலப்பகுதியில் மக்கள் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சனை ஒன்றினைக் குறித்து இடதுசாரிக்கட்சிகள் போதிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதும் முக்கியமான காரணம் என்பதே எனது நிலைப்பாடு.  (குறிப்பாக 1972 யாப்பு உருவாக்கம், 1978 யாப்புச் சீர்திருத்தம் போன்றவற்றையும் மொழியுரிமை, நிலவுரிமை குறித்த அன்றைய இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாட்டையும் உள்ளிட்ட பலகாரணிகளைச் சொல்லலாம்.) 

இங்கே கற்சுறா இந்த உரையாடலுக்கு எந்த அவசியமும் இல்லாமல் “எனது பட்டறிவில் இடதுசாரிகளின் செயற்பாடுகளை வெறுத்தவர்கள் யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதியினராகத்தான் இருந்தது. அதாவது சாதி வெறி அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் போன்றவர்கள் என்று சொல்லிவிட்டு, உண்மையில் பெரும்பான்மை மக்கள் இடதுசாரிகளில் நம்பிக்கை இழக்கவில்லை. புலிகளின் ஆயுத ஆக்கிரமிப்பு அவர்களைப் பேசவிடவில்லை என்பதே உண்மை. நீங்கள் சொல்வது புலிச் சொல். இன அபிமானம் – தேசஅபிமானம்- பாசை அபிமானம் பேசுபவர்கள் சமூகநீதி பற்றிப் பேசமுடியாது” என்றும் தொடர்கிறார்.  முன்னனுமானங்களுடன் செய்யப்படும் எதிர்வினை இவ்விதம் தான் அமையும்.

இதுதவிர, தனது முகநூல் பதிவில் கற்சுறா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்; 

“சமூகநீதியின் பொருட்டு ஈழத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரிகள் ஆலய நுழைவு, தேனீர்க்கடைப் பிரவேசம், சமபந்தி என என்னவெல்லாம் செய்தார்கள் என்பதனை அறியாதவரல்ல அவர். ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இந்த இடது சாரிகள் ஒன்றும் பேசா மடந்தைகளாக இருக்கவில்லை.”

மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகின்றேன்.  நான் குறிப்பிட்டது தேசிய இனப்பிரச்சனை ஒரு முக்கியமான பிரச்சனையாக எழுந்தபோது இலங்கையில் இருந்த இடதுசாரிக் கட்சிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதே. அதன்காரணமாகவே தேசிய இனப்பிரச்சனையை பிற்போக்குவாத, இனவாத உள்ளடக்கத்தைக் கொண்ட கட்சிகள் தலைமையேற்றுக்கொண்டனர் என்பதே எனது வாதம். கற்சுறாவின் வாதம் திட்டமிட்டோ அல்லது தற்செயலாகவோ என்னை இடதுசாரிகளுக்கும் தமிழ்த் தேசிய விடுதலைக்காகப் போராடிய பிற இயக்கத்தினருக்கும் எதிரானவனாக நிலைநிறுத்துவதாக அமைகின்றது.

இடதுசாரிகள் என்பதற்கும் இடதுசாரிக் கட்சிகள் என்பதற்கும் வேறுபாடு இருக்கின்றது என்பதை நான் இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்.      எனது வாசிப்பினதும் நிலைப்பாட்டினதும் அடிப்படையில் 1970களின் மத்தியில் இருந்தே இடதுசாரிக் கட்சிகள் இலங்கையில் செல்வாக்கை இழக்கத்தொடங்கிவிட்டன.  தமிழ்மக்களிடையே பெரும்பாலான மக்கள் இந்தக் காலப்பகுதியில் தமிழ் தேசியக் கட்சிகளுக்குத் தமது ஆதரவை அளிக்கத் தொடங்கினர்.  அது விடுதலைப் புலிகள் தனிப்பலம் கொண்ட இயக்கமாக உருவாகுவதற்கு முந்தைய காலகட்டம்.  

விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் வடக்கு கிழக்கின் பெரும்பகுதி வந்தபோது இருந்த நிலைபற்றி எனது பதிவில் நான் மிகத் தெளிவாகவே பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றேன்:

“பிற இயக்கங்கள் அழிக்கப்பட்டதுடனும் தடைசெய்யபட்டதுடனும், பிற அமைப்புகள் சமூக நீதிக்கருத்துகளுக்காக இயங்குவதும் தடைசெய்யப்பட்டே இருந்தது. “

அப்படி இருந்தும் ஏதோ நான் மறைக்கின்ற உண்மை ஒன்றைத் தான் கட்டுடைத்துவிட்டதுபோல I am waiting என்று பஞ்ச் டயலொக் விடுவது எந்தவிதத்திலும் பொருத்தமில்லாதது.  எதிர்த்தரப்பினர் என்ன சொல்கின்றனர் என்பதை நிதானமாக வாசித்து, அதனை மறுபடிச் சரிபார்த்து உரையாடாமால் எந்தவிதமான அறமும் இல்லாமல் எதிர்த்தரப்பின் உரையாடலை திரித்து அவர்களைப் பாத்திரப் படுகொலை (character assasinate) செய்வதே இங்கே நடக்கின்றது.  இந்தப் போக்கு எந்தவிதமான உரையாடலையும் நிகழ்த்தாது.

பின்னிணைப்புகள்

எனது பதிவுக்கான இணைப்பு https://arunmozhivarman.com/2025/02/16/20250216/

எனது முகநூல் பதிவுக்கான இணைப்பு https://www.facebook.com/amvarman25/posts/pfbid06GRrDUpmfKxBCmEzQugrmdJnPSudKY2U1UMemQrG28gTy7kzhVd8E8CuXESCgSvMl

கற்சுறா எனக்கிட்ட பின்னூட்டம்: “பிற இயக்கங்கள் அழிக்கப்பட்டதுடனும் தடைசெய்யபட்டதுடனும், பிற அமைப்புகள் சமூக நீதிக்கருத்துகளுக்காக இயங்குவதும் தடைசெய்யப்பட்டே இருந்தது.

இதேநேரம், இலங்கையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதவில்லை என்பதுவும் அது குறித்த விவாதங்களை முன்னெடுக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது. இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று.” என்கிறீர்கள். இங்கே நீங்கள் குறிப்பிடும் “பெரும்பான்மையான பொதுமக்கள்” என்பவர்கள் யார்? எனது பட்டறிவில் இடதுசாரிகளின் செயற்பாடுகளை வெறுத்தவர்கள் யாழ்ப்பாணத்து ஆதிக்கசாதியினராகத்தான் இருந்தது. அதாவது சாதி வெறி அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் போன்றவர்கள். உண்மையில் பெரும்பான்மை மக்கள் இடதுசாரிகளில் நம்பிக்கை இழக்கவில்லை. புலிகளின் ஆயுத ஆக்கிரமிப்பு அவர்களைப் பேசவிடவில்லை என்பதே உண்மை. நீங்கள் சொல்வது புலிச் சொல். இன அபிமானம் – தேசஅபிமானம்- பாசை அபிமானம் பேசுபவர்கள் சமூகநீதி பற்றிப் பேசமுடியாது. சமூகநீதி என்பது இன்னும் விரிவானது. ஒருவன் தன்னுடைய பிறப்பை- தான் பிறந்த இடத்தை- தான் பேசும் மொழியை புனிதாமானது என்று எப்போது கருத நினைப்பானோ அப்போதே அவனுக்கும் சமூகநீதிக்கும் சந்தர்ப்பம் இல்லை என்றாகிவிடும். மற்றதின் அடக்குமறையை எதிர்த்தல் என்பது வேறு. அதற்காகத் தன்னுடைய பெருமையை அடையாளம் கொள்ளுதல் என்பது வேறு. ஈழவிடுதலைப் போராட்டம்- ஈழவிடுதலை யுத்தம். ஈழவிடுதலைச் சமாதானம்- ஈழவிடுதலை இயக்கங்கள் என்ற பார்வைகள் எல்லாம் தனியே புலி மனதிற்குள் பார்க்கவும் முடியாது. விவாதிக்கவும் முடியாது. அவை வேறு. நீங்கள் அவற்றிலிருந்து மாறத்தான் வேண்டும். மாறி வரத்தான் வேண்டும். i am waiting!!!

கற்சுறாவின் பதிவு :
“இதேநேரம், இலங்கையில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தேசிய இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதவில்லை என்பதுவும் அது குறித்த விவாதங்களை முன்னெடுக்கவில்லை என்பதும் கவனிக்கவேண்டியது. இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று.”

இது நண்பர் அருண்மொழிவர்மன் அவர்களது கூற்று.

இந்தக் கூற்றினை தமிழ்க் காமராசன் என்ற ஒருவரது ( தமிழ்நாடு) பதிவிற்குப் பிரதிப் பதிலாக எழுதியதில் அருண்மொழிவர்மன் அவர்கள் குறிப்பிட்டுச் செல்லும் வாசகம் இது.

கடந்தகால ஈழ விடுதலைப் போராட்டம் என்ற பேசு பொருளைச் சுட்டி பேசமுற்படும் தற்போதைய தேடல் கொண்டவர்களால் பல விடயங்களின் தார்ப்பரியங்களை கிட்டத்தில் அணுகவே முடிவதில்லை. ஏற்கனவே சமூகத்தில் கட்டப்பட்ட கதைகளினூடாகவே கதை சொல்ல முற்பட்டுக் கடந்து போய்விடுகிறார்கள். ஆனாலும் புதியதொரு தலைமுறையின் உரையாடலாக நண்பன் அருண்மொழி வர்மனிடம் இருந்து வெளிப்பட்ட இந்த வார்த்தைகள் இன்னும் இன்னும் மேலதிகமான உரையாடலைக் கோரிநிற்கிறது.

சமூகநீதியின் பொருட்டு ஈழத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரிகள் ஆலய நுழைவு, தேனீர்க்கடைப் பிரவேசம், சமபந்தி என என்னவெல்லாம் செய்தார்கள் என்பதனை அறியாதவரல்ல அவர். ஈழவிடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இந்த இடது சாரிகள் ஒன்றும் பேசா மடந்தைகளாக இருக்கவில்லை. இவர்கள் செயற்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழமக்கள் புரட்சிகர மக்கள் முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு, மற்றும் தமிழீழத் தேசியவிடுதலை முன்னணி போன்ற பல அமைப்புக்களுக்கு உள்ளும் புறமுமாய் இந்த இடதுசாரிகள் இருந்தார்கள் தான். அவர்களின் சமூகநீதிப் போக்குகளை உள்வாங்கியே இந்த இயக்கங்கள் பல செயற்பாடுகளை முன்வைத்துக் கொண்டன. தேசிய இனப்பிரச்சினையை அவர்கள் அணுகிய விதம் வேறுதான். அவை வேறே வேறுதான். அதற்கும் விடுதலைப் புலிகள் கொண்டிருந்த அணுகலுக்கும் அதிக வேறுபாடு உள்ளது.

விடுதலைப் புலிகள் பெண்களை இயக்கத்தில் இணைப்பதே கேவலம் என்றிருந்த காலங்களை அருண்மொழிவர்மன் அவர்கள் அறியாதிருக்கலாம். புளொட் இயக்கத்தினரும் ஈ.பி.ஆர். எல்.எவ். இயக்கத்தினரும் பெண்களை ஆரம்பத்திலேயே இணைத்திருந்தனர். அவ்வாறு இணைக்கப்பட்டபொழுதுகளில் புலிகள் பேசிய வசைச் சொற்கள் கொஞ்சமல்ல.

பிற்காலம் ::அனைத்தையும் அழித்து அனைவரையும் அழித்து துப்பாக்கி முனையில் னைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலங்களில் சமூகநீதிக்காக இயங்கிய ஈழத்தின் இடது சாரிகள் எப்படி வாழ்ந்திருக்க முடியும் என்பது குழந்தைக்கும் தெரியும். துப்பாக்கியின் நிழலில் சாதி மறைந்திருக்கிறது என்று சொன்னார்கள்.

“தந்தை பெரியாரின் கொள்கைத் தொடர்ச்சியே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் என வாதிட முடியுமா?” என்றெழுத வந்த வர்மன் அவர்கள் “இலங்கையைப் பொருத்தவரை பெரும்பான்மையான பொதுமக்கள் இடதுசாரிக் கட்சிகளில் நம்பிக்கை இழக்க இது ஒரு காரணமாயிற்று.”

என இப்படியொரு கூற்றைப் பதிவிட்டது மிகவும் கவலையானது. துப்பாக்கிக்கு முன்னால் மவுனமாக இருந்தது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் அனைவரும் தங்களோடேயே இருக்கிறார்கள் என்று இறுக்கமான “பாஸ்” நடைமுறையை விதித்து வைத்துக் கொண்டிருந்த புலிகள் அக்காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் சொன்ன அதற்கும் இன்று வர்மன் சொல்லும் இதற்கும் என்ன வித்தியாசம் என்கிறேன்.?

ஒரு விவாதத்திற்காக- உரையாடலுக்காக… https://www.facebook.com/katsura.bourassa/posts/pfbid0fyHnREabUXm3QfxRMUaMWSh3bjRgMqpV65wmRZwS7SQUEE4y7t4XPedsbq2neHG6l

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑