நான் இணைந்து செயற்பட்ட சங்கமொன்றின் வருடாந்த நிகழ்வுகளில் கடவுள் வாழ்த்தும் வரவேற்பு நடனமும் தொடர்ச்சியாக நடக்கின்ற நிகழ்வுகளாக இருந்தன. மதச்சார்பின்மையையும் மரபுரிமையையும் கருத்திற்கொண்டு இவற்றுக்குப் பதிலாக மதச்சார்பின்மையையும், சமூகநீதி அரசியலையும் விஞ்ஞான ரீதியிலான பார்வையையும் கொண்டதான நிகழ்வொன்றைச் செய்து நிகழ்வை ஆரம்பிக்கவேண்டும் என்று நாம் முடிவெடுத்திருந்தோம்.
அதன் விளைவாக “ஈழநிலத்தார் அழைப்பாடல்” என்று ஒரு நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது. அதன் ஒவ்வொருவரியையும் மிகவும் அவதானமாக, சமூக முன்னேற்றத்துக்கும் அறிவியல் பார்வைக்கும் உரியதாக இருக்கவேண்டும் என்ற நோக்கம் எமக்கிருந்தது. அப்போது இது தொடர்பான அக்கறையுடன் உரையாடல்களில் எல்லாம் சேர்ந்து பயணித்த நண்பர் மெலிஞ்சி முத்தனிடம் இதனைச் செய்துதரமுடியுமா என்று கேட்டேன். அவர் அதனை கூத்து வடிவமாக எழுதி இயக்கினார். அத்துடன் பொருத்தமான கலைஞர்களை அவரே பேசி, இணைத்துக் கொண்டார். தர்ஷினி வரப்பிரகாசம் அகேனம் பறையிசைக் குழு ஊடாக ஒன்றிணைய, தமிழரின் மரபான கலை வடிவங்களான கூத்தும் பறையும் ஒருங்கிணைய, ஈழத்தாயாக மாலினி பரராஜசிங்கம் நடன அமைப்பையும் ஒருங்கிணைத்தார். இந்த முழுநிகழ்வையும் பின்னணி இசைக்கலைஞர்களையும் ஒருங்கிணைத்தமை மெலிஞ்சி முத்தனின் அர்ப்பணிப்பும் உழைப்புமாகும்.
பாடசாலைச் சங்கங்களும் ஊர்ச்சங்கங்களும் மதச் சார்பில்லாமல், சமூக முன்னேற்றத்துக்காக உழைத்தால் எவ்வளவோ செய்யலாம்.
இந்த வீடியோவை ஆர்வமுள்ளவர்கள் பாருங்கள்
000
ஈழநிலத்தார் அழைப்பாடல் முன்னுரை
எங்கள் சமூகத்தின் ஒவ்வொரு இதயத்திற்கும் எங்கள் இனிய வணக்கம்.
‘ஈழ நிலத்தார் அழைப்பாடல்’ எனும் அரங்காற்றுகைமூலம் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறோம்.
எங்கள் நிலத்திற்கு ஒரு வாசம் இருக்கிறது. முத்து விளையும் கடலில் முட்டிமோதி தனக்கேயுரிய தொன்மைச் சாரத்தைத் தக்கவைத்திருக்கும் நிலத்தோடு வாழ்வு கலந்த வாசம் அது. அந்த வாசத்தைத்தான் கலைக் கலயத்தில் அள்ளி அரங்கில் படைக்கிறோம்.
நமது முன்னோர் இயற்கையைப்போலப் பாவனை செய்துபார்த்தபோது பாட்டும், கூத்தும் பிறந்தன. வேட்டைக் காலத்தில் தமக்குச் சவாலாக இருந்த மிருகங்களை வென்று அவற்றின் பற்களைத் தங்கள் கழுத்தில் தொங்கவிட்டார்கள். அவற்றின் தோல்களை மரக்கொட்டுகளில் பொருத்தி தாளம் போட்டார்கள். ஆடலும் பாடலும் கொண்டாட்டமும் அங்கே பிறந்து வளர்ந்தது.
மனித வரலாற்றின் வெவ்வேறுபட்ட பரிணாம வளர்ச்சியில் கூத்தையும், பறையையும் கட்டிக் காத்து வளர்த்து வந்தவர்கள் சமூகத்தின் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்களே. இவையிரண்டுமே இந்த மனிதர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும் ஆழமாய்க் கலந்து நீண்டு வந்திருக்கின்றன.
இந்தக் கலைகளைக் கையாளும் நாம் பரவலாக்கல் எனும் பெயரிலோ, நவீனப்படுத்துதல் எனும் முனைப்புகளிலோ வர்த்தகச் சுழலுக்குள் இவற்றைச் சிக்கவைத்து சாரமிழந்தவையாக உருமாற்றாமலும் இருப்பதுடன் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவையாகவோ அதிகார மனநிலைகளுக்குச் சார்பானவையாகவோ பாவித்துவிடாமலும் இருக்கவேண்டும் என்பதில் மிக நிதானமாய் இயங்கவேண்டியவர்களாய் பொறுப்புடையவர்களாவோம்.
மொழி மூலம் அடையாளம் கொண்ட நாம் நம் சமூகத்தை வீழ்ச்சியிலிருந்து கட்டியெழுப்பவும், நம் சமூக வளர்ச்சிக்குத் தடையாக புரையோடிக் கிடக்கும் சிறுமைகளை அறுத்தெறியவும் எங்கள் கலைகளைக் கையிலெடுக்கிறோம். கலைவடிவங்களூடாக நாம் அரசியல் பேசுவோம்.
ஓ…..ஹொய் டும், டும், டும்
ஓ…….ஹொய் டும், டும், டும்
ஓ…. ஹொய் டும், டும், டும்




Leave a comment