தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்

Saththiyan

ஈழத்தவர்களின் வரலாறு பற்றியும் அவர்களின் அடையாளம் குறித்தும் பேசும்போது ஈழத்தவர்களின் பண்பாட்டு வரலாற்றைப் பற்றிய ஆவணப்படுத்தல்களைச் செய்வதும் ஆய்வுகளைச் செய்வதும் அவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதும் முக்கியமானவை.  குறிப்பாக ஈழத்து இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் நாம் எமது தனித்துவத்தையும் தனியான மரபையும் பற்றித் தொடர்ந்து சொல்லவேண்டியவர்களாகவே இருக்கின்றோம்.  ஈழத்தவர்களுக்கென்று பதிப்புத்துறை வளர்ச்சியடையாமல் இருக்கின்ற சூழலில் சந்தைப்படுத்தலும் சவாலாகவே இருக்கின்றது.  இதனால் ஏற்கனவே இருக்கின்ற பதிப்பகங்களும் கூட பொருளாதார ரீதியில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்வனவாகவே இருக்கின்றன.  இவற்றினை எதிர்கொள்வதற்கான வியூகங்களையும் பொறிமுறைகளையும் நாம் கண்டடையவேண்டி இருப்பதுடன் பரவலாக ஈழத்து இலக்கியத்தின் வரலாற்றைப் பற்றிய ஆய்வுகளைச் செய்வதற்கான மூலங்களை தொகுப்பதும், கண்டுபிடிப்பதும், மீள் பதிப்பாக்கம் செய்வதும், ஆவணப்படுத்துவதும் இருக்கின்றது. 

சத்யதேவனிற்கும் எனக்கும் இடையில் வாசிப்பிலும் தேடலிலும் இருந்த சில பொதுவான தன்மைகள் மனதளவில் நெருக்கமான உறவினை ஏற்படுத்தியிருந்தன.  பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னால் எழுநா பதிப்பகம் ஊடாக சில மீள்பதிப்புகளைக் கொண்டுவரவேண்டும் என்று தீர்மாணித்தபோது சற்குணம் சத்யதேவனுடன் நெருக்கமான அறிமுகம் கிடைத்தது. இலக்கிய வரலாற்றில் தீவிரமான ஆர்வம் கொண்ட சத்யதேவன் நீண்டகாலமாக தி.த. சரவணமுத்துப்பிள்ளை தொடர்பான தேடல்களில் இருந்தார்.  பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழுக்குத் தொண்டாற்றிய ஈழத்துத் தமிழறிஞர்கள் பற்றிய பட்டியல் நிறைய விடுபடல்களுடனேயே இருந்துவருகின்றது.  சமகாலத்தில் இந்த விடுபடல்களை உணந்து ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும் கூட பல்வேறு அறிஞர்களின் ஆய்வுகளையும் பணிகளையும் பற்றிய விபரங்கள் இல்லாமல் இருப்பது இன்னும் தடைகளை ஏற்படுத்துகின்றது.  அந்த வகையில் பெயரளவில் பல்வேறு அறிஞர்களால் முக்கியமானவராகக் குறிப்பிடப்பட்டிருந்தபோதும் தி,த. சரவணமுத்துப்பிள்ளையின் எழுத்துகள் கிடைப்பதற்கரியனவாக இருந்தன.

1865 ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த தி.த. சரவணமுத்துப்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை மிக்கவராக இருந்ததோடு ஆய்வாளர்களுக்குத் தேவையான விஞ்ஞான ரீதியான ஆய்வுப் பார்வையைக் கொண்டவராகவும் இருந்தார்.  தமிழிலக்கிய வரலாற்றிலே பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தவர்கள் அரும்பங்காற்றியவர்களாக இருந்துள்ளார்கள்.  அந்தக் காலத்திற்குரிய அறிஞர்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் தி.த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சரவணமுத்துப்பிள்ளையின் மூத்த சகோதரர் ஆவார்.  தனது பதினைந்தாவது வயதிலேயே தமையனுடன் இந்தியா சென்ற தி.த. சரவணமுத்துப்பிள்ளை மேற்படிப்பினை சென்னை பச்சையப்பாக் கல்லூரியிலும், பிரசிடென்சிக் கல்லூரியிலும் (சென்னை மாநிலக் கல்லூரி) கற்றவர்.  அவர் சென்னை மாநிலக் கல்லூரியின் கீழைத் தேயச் சுவடிகள் நிலையத்தின் பொறுப்பாளராகவும் கடமையாற்றியவர்.  சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது தி. த. சரவணமுத்துப்பிள்ளை ஆற்றிய தொடக்க உரையே 1892 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்பாஷை என்கிற ஆய்வுக்கட்டுரையாகும்.  தி. த. சரவணமுத்துப்பிள்ளையின் விஞ்ஞான ரீதியான அணுகுமுறையையும், வரலாற்றுப் பார்வையையும் தமிழறிவையும் இக்கட்டுரையில் காணலாம்.  தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் முழு எழுத்துகளையும் தொகுக்கவேண்டும், மீள்பதிப்பிக்கவேண்டும் என்பதைத் தன் வாழ்நாள் கனவாக வரித்துக்கொண்டு செயற்பட்ட சத்யதேவனின் முயற்சிகளால் தமிழ்ப்பாஷை அவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு எழுநா வெளியீடாக 2014 ஆம் ஆண்டு மீள்பதிப்புச் செய்யப்பட்டிருந்தது.

நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்கின்ற சரவணமுத்துப்பிள்ளையின் எழுத்துக்களை நோக்கும்போது அவரது சமகால அறிஞர்கள் பலரைவிட முற்போக்கான, பகுத்தறிவான சிந்தனை கொண்டவராக சரவணமுத்துப்பிள்ளை இருந்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது.  தமிழ் மொழியின் தோற்றம் பற்றி அன்றைய நாளில் நிலவிய புராணக் கதைகள் சார்ந்த நம்பிக்கைகளையும் அவை சார்ந்த நூல்களின் கருத்துகளையும் நிராகரித்துவிட்டு விஞ்ஞான ரீதியாக தனது ஆய்வைச் செய்ய முற்படுகின்றார்.  அதுபோல தத்தை விடுதூதில் அவர் எழுதிய பெண்விடுதலை பற்றியதும் பெண்களின் சமூகநிலை பற்றியதுமான கருத்துகளை வைத்துப் பார்க்கின்றபோது அவர் தமிழில் பெண்விடுதலை சிந்தனைகளின் முன்னோடிகளில் ஒருவர் என்று துணிந்து கூறலாம்.  இலக்கியப் பரப்பில் பொதுவாக பெண் விடுதலைச் சிந்தனையின் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகின்ற பாரதியார் அது தொடர்பாக எழுதத் தூண்டலாக அமைந்ததாக நிவேதிதாவை அவர் சந்தித்த சம்பவத்தைக் குறிப்பிடுவார்கள்.  அந்தச் சந்திப்பு நிகழ்வதற்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே (தி.த. சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் இறந்த ஆண்டு 1896 என்றும் 1902 என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன) இறந்துவிட்டவர் சரவணமுத்துப்பிள்ளை என்பது அவரது பங்களிப்பினை அறிய துணைசெய்யக்கூடும்.

Mohanaangiதி.த. சரவணமுத்துப்பிள்ளைக்குரிய இடம் ஆய்வாளர்களாலும் அறிஞர்களாலும் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்பதை தத்தை விடுதூது, தமிழ்ப்பாஷை ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி அறியும்போது வெளிப்படையாக அறியமுடிகின்றது.  அவரது மிக முக்கியமான புனைவெழுத்தாக மோகனாங்கி என்கிற வரலாற்று நாவல் அமைகின்றது.  ஆயினும் அதன் பிரதி எதுவும் கிடைக்கப்பெறாமலேயே இருந்தது.  தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் எழுத்துகளை முன்னர் அவரது மூத்த சகோதரர் தி.த. கனகசுந்தரம்பிள்ளையின் மகன் தி.க. இராஜசேகரன் தொகுத்தபோதும் அதில் மோகனாங்கி இடம்பெறவில்லை. எழுநா வெளியீடாக வெளிவந்த தமிழ்ப்பாஷை நூலிலும் மோகனாங்கி பற்றிய குறிப்புகளை சத்யதேவன், பேராசிரியர் செ.யோகராசா, முனைவர் அரங்கராஜ் ஆகியோர் குறிப்பிட்டிருந்தனர்.  இந்த நூல் வெளியான பின்னரும் சத்யதேவன் தனது ஆய்வுகளைத் தொடர்ச்சியாகச் செய்துவந்தார்.  இந்த ஆய்வில் அவர் செலுத்திய காலம் அதிகரிக்க அதிகரிக்க அவர் இன்னும் முனைப்பானார் என்றே சொல்லவேண்டும்.  இந்தக் காலப்பகுதியில் சத்யதேவனுடன் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டது.  அவருடன் தொடர்ச்சியாக தொலைபேசியூடாகவும் சமூக ஊடகங்கள் ஊடாகவும் பேசுகின்றபோது அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இந்த ஆய்வுகளைச் செய்கின்றார் என்பதையும் அதற்காக எவ்வளவு விட்டுக்கொடுப்புகளை செய்கின்றார் என்பதையும் உணர்ந்தேன்.  பழைய நூல்களை மீட்டெடுத்துப் பதிப்பித்த சி.வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர், உவேசா என்று நாம் பட்டியல்களை மீட்கும்போதெல்லாம் நமது சம காலத்தில் இந்தப் பணிகளுக்காக உழைக்கின்றவர்களில் ஒருவராக சத்யதேவனை என்னால் கூறமுடியும்.  அதுபோல இன்னும் சிலரும் கட்டாயம் இருப்பார்கள் என்பது மகிழ்ச்சி.

சத்யதேவன் தி.த. சரவணமுத்துப்பிள்ளை பற்றியும் மோகனாங்கி பற்றியும் தான் தேடியவற்றை புதிய சொல் இதழில் தொடராக எழுதினார்.  அவை விடுபடல்களில் இருந்து தவிர்க்க முடியாமைக்கு : நவீன தமிழ் இலக்கிய சிந்தனை மடைமாற்றத்தில் தி.. சரவணமுத்துப்பிள்ளை என்ற பெயரில் புதிய சொல்லின் மூன்றாவது நான்காவது ஆறாவது இதழ்களில் வெளியாகின.  அந்தக் கட்டுரையின் முடிவுப்பகுதியை நெருங்கிகின்றபோது மோகனாங்கியின் பிரதியை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம் என்று தான் உணர்வதாக சத்யதேவன் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்.  தி.த. சரவணமுத்துப்பிள்ளை நூலகவியல் சார்ந்தவர் என்பதனாலும் அவர் சுவடிகள் காப்பகத்தில் பொறுப்பாளராக இருந்தவர் என்பதனாலும் அவர் தனது நூல்களை முக்கியமாக நூலகங்களுக்குச் சேர்ப்பித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்ற நம்பிக்கையும் சத்யதேவனுக்கு இருந்தது.  அடிக்கடி பேசுகின்றபோது கிட்ட வந்திட்டம், கிட்ட வந்திட்டம் என்று அவர் சொல்லுகின்றபோது சி.வை. தாமோதரம்பிள்ளையும் உ.வே.சாவும் பழைய நூல்களைத் தேடி அலைந்தது பற்றி அவர்களே எழுதியமையும் அவர்களைப் பற்றி மற்றவர்கள் எழுதியமையும் நினைவில் வரும்.

சென்ற ஜூலை மாதம் ஒரு நாள் நள்ளிரவு தாண்டி சத்யதேவன் தொடர்ந்து அழைத்துக்கொண்டிருந்தார்.  தூக்கக் கலக்கத்தில் என்னவென்று கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சியுடன் மோகனாங்கி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறினார்.  நான் தூங்கிக்கொண்டிருக்கும் நேரம் அதுவென்று தெரிந்தும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று எனக்கு அழைத்திருந்தார்.  ஆம், இப்போது மோகனாங்கி மீளக் கிடைத்து மறுபதிப்புச் செய்யப்பட இருக்கின்றது.  அதுபற்றிய பின்வரும் அறிவிப்பினை சத்யதேவன் தனது முகநூலுடாக டிசம்பர் 29 அன்று வெளியிட்டிருந்தார்.

தமிழ் கூறும் நல்லுலகுக்கு ஒரு நற்செய்தி! தற்காலத்தில் வாசிப்புக்கு கிடைக்காமல் ஏறக்குறைய மறைந்து போய்விட்டதாகக் கருதப்பட்டு வந்த, தமிழ் இலக்கிய வரலாற்றின் மைல்கற்களில் ஒன்றாக விளங்கும் தி.த.சரவணமுத்துப்பிள்ளை அவர்கள் எழுதிய தமிழின் முதலாவது வரலாற்று நாவல் ‘மேகானங்கி’ திருகோணமலை வெளியீட்டாளர்களால் எதிர்வரும் தை மாதம் (2018) மீள்பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் அறியத்தருகின்றோம். இதுவரை காலமும் ஆங்காங்கே சில செய்திகளினூடாக மட்டும் அறியப்பட்டு வந்த மோகனாங்கி எதிர்வரும் தைமாதம் முதல் மீளவும் தமிழ் இலக்கிய உலகில் மறு அவதாரம் எடுக்கின்றது. ஏறக்குறைய எனது 10 ஆண்டுகாலத் தேடலோடும் கலாநிதி க.சரவணபவன் அவர்களின் பெருமுயற்சியினாலும் மீளவும் கண்டறியப்பட்ட ‘மோகனாங்கி’ தமிழ் கூறும் நல்லுலகத்தவர்களின் பெரும் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் பரவலாகட்டும்

தமிழின் முதலாவது வரலாற்று நாவலான மோகனாங்கி நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மீள்பதிப்புக்கண்டு விரைவில் வெளிவர இருக்கின்றது.  மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் சொக்கநாத நாயக்கரின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட வரலாற்று நாவலே மோகனாங்கி ஆகும்.  இதனை Historical Romance வகையானதாக கமில் ஸ்வலபில் மதிப்பிட்டிருக்கின்றார்.  நாவல் என்கிற வடிவமே தமிழுக்கு புதிதாக இருந்த காலப்பகுதியில் வரலாற்றுப் பின்னணியுடன் தி.த. சரவணமுத்துப்பிள்ளை எழுதியுள்ளமை முக்கியமானது.  எமது தலைமுறையில் இந்த நாவலை வாசித்த மிகச்சிலரில் ஒருவரான சத்யதேவன் மோகனாங்கி குறித்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

சரவணமுத்துப்பிள்ளை எல்லா முக்கிய கதாபாத்திரங்களையும் பற்றி விரிவாக ஆய்வு செய்ததுடன், வரலாற்று ரீதியாகத் துல்லியமான நிகழ்வுகளுடன் தனது கதாபாத்திரங்களைக் கவனமாகப் பயன்படுத்தி நாவலுக்குரிய அம்சங்களையும் இணைத்து அற்புதமான காந்தர்வ விவாக காதல்கதையை படைத்துள்ளதால் சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது வழங்குகிறது. 1895 இல் வெளிவந்த நூல் என்றாலும், தற்கால நாவல்களைப் போன்றே விறுவிறுப்பும் சுவாரசியமும் குறையாத நாவல் இது. வெறும் வரலாற்றுக் கதைப்புத்தகமாக அல்லாமல், இந்நாவலில் பெண்ணியக் கருத்துக்கள் முதல் அரசியல் விமர்சனங்கள் வரை மிகக்கூர்மையாக முன்வைக்கப்படுகின்றன.  மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால்  வரலாற்றைச்  சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே  அதன் தனிச் சிறப்பு.  அந்தவகையில் ஒவ்வொருவரும் எமது வீட்டு நூலகங்களில் பெருமையுடன் வைத்துப் பேண வேண்டிய பெறுமதியான நூல் இதுவாகும்.

தி.த. சரவணமுத்துப்பிள்ளையின் தத்தை விடு தூது, தமிழ்ப்பாஷை ஆகியவற்றை வாசித்தவன் என்றவகையில் மோகனாங்கி பற்றிய சத்யதேவனின் குறிப்பினை முழுமையாக ஏற்கக் கூடியதாக இருக்கின்றது.  இதுபோன்ற முயற்சியை கனவாக வரித்து அயராது உழைத்த சத்யதேவனுக்கும் அவருக்குத் துணை புரிந்தவர்களுக்கும் நன்றி சொல்வோம்.  ஈழத்தவர்களின் தனித்துவமும் மரபும் அறிந்துகொள்ள இதுபோன்ற முயற்சிகளே மூலாதாரமாகும்.


  1. இக்கட்டுரை பெப்ரவரி மாத தாய்வீடு பத்திரிகையில் வெளியானது.
  2. ஜனவரி 31, 2018 மாலை 4:30 மணிக்கு கோணேஸ்வரர் இந்துக்கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் மோகனாங்கி வெளியீடு  நடைபெற்றிருக்கின்றது.
  3. இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள சத்யதேவன் (சத்யனின்) புகைப்படம் பப்பட்டீர் ஸ்டூடியோவினால் எடுக்கப்பட்டது,

 

One thought on “தி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும்

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: