முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்

Poster

மார்ச் 18 அன்று ரொரன்டோ. கனடாவில் இலங்கையில் பௌத்த சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டனர். 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் தோழமையை வெளிப்படுத்திய இந்தக்கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர்), கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்), ஜோன் (அனைத்துலக மன்னிப்பு சபை), ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), மீரா பாரதி (அரசியல் செயற்பாட்டாளர்) ஆகியோர் உரையாற்றினர். இவ் நிகழ்வுக்கு முனைவர் சுல்பிகா ஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம், நீதிக்கான பொறிமுறை, நிரந்தர தீர்வுக்கான முன்னெடுப்பு என்பவற்றுக்காக அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்ற விருப்பை பங்குபற்றிய பலரும் வெளிப்படுத்தினர்.  

இந்த நிகழ்வானது கனடாவில் வாழ்கின்ற பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த ஈழத்தவர்களும் சேர்ந்து ஒருங்கிணைத்த ஒரு போராட்ட நிகழ்வாகும்.  அந்த வகையில் இந்த ஒருங்கிணைப்பில் பங்களித்த பலரில் ஒருவன் என்ற வகையில் திருப்தியுறுகின்றேன்.    இந்த போராட்டத்துக்காக வரையப்பட்ட அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎஃப் வடிவிலான அறிக்கையில் தமது சம்மதத்தினைத் தெரிவித்திருந்த “இலங்கையில் சமாதானத்திற்கான கனடியர் அமைப்பு” என்கிற அமைப்பினர் தமது சம்மதத்தினை மீளப்பெற்றிருந்தனர்.  

நன்றி

அருண்மொழிவர்மன்

முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கிறோம்!

தொடரும் பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்கினை நிராகரிக்கிறோம்!

கடந்த வாரத்திலிருந்து  அம்பாறை, கண்டி மாவட்டங்களில் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்குரோத வன்முறைகள் தற்போது சற்றுத் தணிந்திருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோன்ற பல்வேறு வன்முறைகள் தொடர்ந்து நடந்தவண்ணமே இருக்கின்றன. பௌத்த மதகுருமார்களும், கடந்தகாலங்களில் கிரிபத்கொட முதல் அளுத்கம ஈறாக பல்வேறு இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களை மேற்கொண்ட அரசியல்வாதிகளின் ஆதரவுபெற்ற குழுக்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து  இந்தத் தாக்குதல்களில் வெளிப்படையாகவே ஈடுபட்டனர். நேரடிச் சாட்சியங்கள், வீடியோ ஆதாரங்கள் எனப் பல விபரங்கள் சமூக வலைத்தளங்கள் மூலமாகப் பரவலாகியுள்ள போதும் அவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவருதல், தாக்குதல்களை நிறுத்துதல், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குதல் போன்ற எந்த உருப்படியான நடவடிக்கைகளும் அரச தரப்பிலிருந்து இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இலங்கை அரசு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி சிறப்புப் பொலிஸ்படை மற்றும் இராணுவத்தினரைக் குவித்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்தும் செய்திகள் பரவாமல் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்தியும், எந்தக் குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி கட்டுக்கடங்காத நிலையில் இந்த தாக்குதல்கள் நடைபெற்றிருந்தன. 70க்கும் மேற்பட்ட வியாபார நிலையங்கள், 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தீயிடப்பட்டும் தாக்கப்பட்டும், சேதப்படுத்தப்பட்டுமுள்ளன. காயமடைந்த மற்றும் உயிரிழந்தோர் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அனேகமான இடங்களில் பாதுகாப்புக்கென அனுப்பப்பட்ட பொலிசாரும் இராணுவத்தினரும் நடக்கும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில் வெறும் பார்வையாளர்களாகவே நடந்துகொண்டதாக  அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் அவசரகால நிலையென்பது பாதிக்கப்பட்டவர்களை மௌனமாக்கவும், கட்டுப்படுத்தவுமே பாவிக்கப்பட்டிருக்கின்றது. இன்று தொடரும் தாக்குதல்களும் அதையே மேலும் உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையின் கடந்தகால அரசாங்கங்கள் அனைத்துமே பௌத்த பேரினவாதத்தை பேணுவதையும், இனங்களுக்கிடையே நல்லுறவு வளர்வதைத் திட்டமிட்டுத் தவிர்த்தும் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்துள்ளன. இந்த நிலைக்கு ஒரு மாற்றான அரசாங்கமாக, இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நல்லாட்சி எனத் தன்னைச் சொல்லிக்கொண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இன்றைய அரசாங்கம், பதவிக்கு வந்ததன் பின் இனங்களுக்கிடையே ஐக்கியத்தைப் பேணுவதற்கு அடிப்படையான நடவடிக்கைகளில் தனது கவனத்தைக் குவிக்கவில்லை. இன ஐக்கியத்துக்கு எதிராக, இனக்குரோத நடவடிக்கைகளில் கடந்தகாலங்களில் ஈடுபட்டோரை சட்டத்தின் முன் நிறுத்த முயலவில்லை அல்லது நல்லரசாங்கத்தில் நீதிகிடைக்கும் என்று நம்பி நீதிமன்றங்களை நாடியவர்களது வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டன. இனக் குரோதப் பேச்சுக்களை, நடவடிக்கைகளை செய்துவரும் பொதுபல சேனா போன்ற அமைப்புக்களையும் அவற்றின் முக்கிய தலைவர்களையும் கட்டுப்படுத்த முயலவில்லை. நாட்டின் அனைத்து இனங்களும் சமத்துவமான உரிமைகளைக் கொண்டவை என்ற தமது வாய்ச்சொல்லை உறுதிப்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதில் அக்கறை காட்டவில்லை. குறைந்தபட்சம், தொடர்ச்சியான இனக் காழ்ப்புணர்வுப் பேச்சுக்களைப் பகிரங்க மேடைகளில் பேசியவர்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டவர்கள் மீதான நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை.  அரசின் இத்தகைய  பொறுப்பற்ற போக்கு உண்மையில் அவர்களும் -நல்லாட்சியினரும்- நாடு இனரீதியாகப் பிளவுபட்ட நிலைமையில் தொடர்ந்து இருப்பதையும், எந்நேரமும் இனக்குரோத நடவடிக்கைகள் தொடர்வதற்கான நிலைமைகளைக் கொண்ட இனமோதலுக்கான ஒரு விளைநிலமாக இருப்பதை விரும்புவதையே காட்டுகிறது. இதன் காரணமாகவே கருத்தடை மாத்திரை உணவில் கலக்கப்படுவதாகப் பரப்பப்படும் ஒரு வதந்தியோ அல்லது குடிபோதையில் நடக்கும் ஒரு கைகலப்போ கூட ஒரு பெரும் இனக்கலவரத்தைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கிறது. இதுதான் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அல்லது குழுக்களுக்குத் தேவையான நிலைமை. இதைத் தமது அரசியல் நோக்கங்களுக்காக சில அரசியல்வாதிகளும், சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தமது தனிப்பட்ட மற்றும் குழு நலன்களுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். நிலவும் சூழல் உருவாக்கப்பட்டுள்ள விதம் பெரும்பாலான பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியிலும் இத்தகைய தாக்குதல்கள் நியாயமானவையே என்று நம்பும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இத்தகைய நிலைமைகளைக் கண்டிக்கும் ஜனநாயக சக்திகளின் குரல் இந்தப் பேரினவாதப் பேரொலியின் முன் பலமற்ற குரலாகவே இருக்கிறது.

இலங்கையில் இதுவரை நடந்த அனைத்து இனக்கலவரங்களையும் போலவே இப்போது நடந்துகொண்டிருப்பவையும் திட்டமிட்ட வகையில் இந்தப் பேரினவாத சக்திகளினால் அல்லது குழுக்களாலேயே நடத்தப்படுகின்றன. தொடர்ச்சியாக பிற இனத்தவர்களை அபாயகரமானவர்களாகச் சித்தரித்தும், அவர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் செய்யப்பட்ட பரப்புரைகளின் விளைவாகவே இதுபோன்ற இனக்கலவரங்களைப் பார்க்க முடிகின்றது. இன்றைய அரசாங்கமும் இதற்கு முந்திய கால அரசாங்கங்கள் போலவே நேரடியாக இல்லாவிட்டாலும், இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் கடைப்பிடிக்கும் மெத்தனப் போக்குக் காரணமாக இத்தகைய நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் ஒன்றாக செயற்படுவதாகவே கொள்ளவேண்டியிருக்கிறது.

முஸ்லிம் மக்களுக்கெதிராக நடத்தப்படும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்களை கனடாவாழ் சிவில் சமூகத்தவர்கள் என்ற வகையில் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நஸ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் நாம் வலியுறுத்துகிறோம். இவற்றை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசினை கூட்டாக நிர்ப்பந்திக்குமாறு புலம்பெயர்ந்தும் இலங்கையிலும்  வாழும் அனைத்து இனங்களையும் சேர்ந்த சமூக ஜனநாயக சக்திகள், சமூக நிறுவனங்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள், சர்வதேச மனிதநேய அமைப்புக்கள் மற்றும் கனடிய அரசியல்வாதிகள் அனைவரிடமும் கோருகிறோம். சமத்துவமும் சுதந்திரமும் கொண்ட விதத்தில் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் தமக்குரிய தனித்துவங்களைப் பேணியபடி ஐக்கியமாக வாழ்வதற்கான ஒரு சூழல் உருவாக வேண்டும் என்ற அக்கறை கொண்ட அனைத்துலக மக்கள் அமைப்புக்களையும் இதற்காகக் குரல் கொடுக்குமாறு கோருகிறோம்.

அறிக்கையின் பிடிஎஃப் வடிவம்:

தமிழில் Statement Tamil

ஆங்கிலத்தில் Statement

Poster 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: