தொடர்ச்சியாக பல்வேறு கலை இலக்கியப் பரப்புகளில் இயங்கிக்கொண்டிருக்கின்ற நவம் அவர்களின் பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், தடங்களைக் கடந்து செல்லும் காலநதி ஆகிய மூன்று நூல்கள் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நான்காவது பரிமாணம் வெளியீடாக வந்திருந்தன. கனடாவின் ஆரம்பகால பதிப்பகங்களின் ஒன்றான நான்காவது பரிமாணம் பதிப்பகத்தின் ஊடாக பல்வேறு நூல்களை வெளியிட்டவராக நவம் அவர்கள் இருந்தபோதும் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக அவரது எழுத்துகள் நூலுருவாக்கம் காணவில்லை. ஆயினும் மிகவும் சிரத்தையுடனான தயாரிப்புகளுடனும் தெளிவுடனும் நவம் அவர்கள் பல்வேறு தளங்களில் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டே இருந்தார். தவிர அவரது பல்துறை ஆளுமை குறித்த பிரமிப்பு எனக்கு எப்போதும் உண்டு. எழுத்தாளர்கள், எழுத்திற்கும் வாசிப்பிற்கும் அப்பால் இதர கலைவடிவங்களிலும் ஆர்வமும் பரிச்சயமும் கொண்டிருப்பதன் அவசியம் பற்றி அ.யேசுராசா அவர்கள் ஒவ்வொரு உரையாடலிலும் குறிப்பிட்டுச்சொல்வதுண்டு. அந்த வகையில் நவம் அவர்கள் எழுத்து, வாசிப்பு, விமர்சனங்கள், ஊடகத்துறை, நாடகங்கள், இதழியல், கவிரயங்கங்கள், ஓவியம் என்று பல்வேறு வகைமைகளில் தொடர்ச்சியாகச் செயற்பட்டும் தனது தேடல்களைத் தொடர்ந்தும் வருபவராவார். அத்துடன் ஒரு பதிப்பாளராகவும், நூல் வடிவமைப்பாளராகவும் கூட அவரை மதிப்புடன் பார்த்திருக்கின்றேன். குறிப்பாக, நூல் வடிவமைப்புக்கான செயலிகளும் தொழினுட்ப உதவிகளும் பெருமளவில் பரவலடையாத காலப்பகுதியிலே கூட அவர் வடிவமைத்த நூல்கள் மிகுந்த சிரத்தையுடனும் நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பதை அவதானித்திருக்கின்றேன். அந்த சிரத்தையையும் நேர்த்தியையும் நான்காவது பரிமாணமூடாக அண்மையில் வெளிவந்திருக்கும் நூல்களின் உருவாக்கத்திலும் காணலாம்.
நவம் அவர்களுடன் பழகுகின்ற வாய்ப்பு நாம் நண்பர்களாக இணைந்து ஏதிலிகள் என்ற பெயரில் சில இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியபோது ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்கு முன்னர், மிகுந்த நம்பிக்கையுடன் கனடிய இலக்கிய, செயற்பாட்டு உலகில் இயங்கத் தொடங்கியபோது எமக்கு மனமார வாழ்த்துகளைத் தெரிவித்து, உற்சாகமூட்டி, ஆலோசனைகளையும் வழங்கிய மிகச் சிலரில் நவம் அவர்களும் ஒருவர்.
ஏதிலிகளின் முதலாவது நிகழ்வுக்காக, அதில் பேச இருப்பவர்களை அறிமுகப்படுத்துவதற்கான குறிப்புகளை எழுதியபோது நவம் அவர்களை கவிஞர் நவம் என்று நாம் விளித்திருந்ததை, அப்படி விளிக்கத் தேவையில்லை என்றும், அதைத் தான் விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் நவம் அவர்களை நவம் மாஸ்ரர் என்று அழைப்பது ஒரு மரபாகவே நான் உள்ளிட்ட பலருக்கு இருந்தது. அதையும் அவர் விரும்புவதில்லை என்றே தெரிகின்றது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர், அவர் தன்னை நவம் மாஸ்ரர் என்று விளிப்பதைத் தான் விரும்புவதில்லை என்பதை ஒரு கட்டுரையாகவும் எழுதி முகநூலில் பகிர்ந்திருந்தார். மாஸ்ரர் படும் பாடு என்கிற அந்தக் கட்டுரை “தடங்களைக் கடந்து செல்லும் காலநதி” என்கிற அவரது கட்டுரைத் தொகுதியிலும் இடம்பெற்றிருக்கின்றது. இதே கட்டுரைத் தொகுதி வெளியான சமகாலப்பகுதியில் வெளியான ”படைப்புகளும் பார்வைகளும்” என்கிற நூல்பற்றிய அறிமுக விமர்சன உரையாக இந்தக் கட்டுரை அமைகின்றது.
படைப்புகளும் பார்வைகளும் என்கிற க. நவம் அவர்களின் கலை இலக்கியப் படைப்புகள் மீதான பார்வைகளின் தொகுப்பான இந்த நூலில் சண்முகம் சிவலிங்கத்தின் காண்டாவனம், செங்கை ஆழியானின் விடியலைத்தேடி, மயூ மனோவின் நாம் பேசிக் கொண்டிருந்தபோது பெய்திராத மழை, இளங்கோவின் சாம்பல் வானத்தில் மறையும் வைரவர், தேவகாந்தனை பிரதம தொகுப்பாசிரியராகக் கொண்ட கூர் 2010, என் எஸ் நடேசனின் வாழும் சுவடுகள், தேவமுகுந்தனின் கண்ணீரினூடே தெரியும் வீதி, தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, மெலிஞ்சி முத்தனின் வேருலகு, கருணாகரமூர்த்தியின் பதுங்குகுழி, சேரனின் வட் இஃப் ரெய்ன் ஃபெய்ல்ஸ், தெணியானின் இன்னொரு புதிய கோணம் ஆகிய கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, அரங்க நிகழ்வுகளைப்பற்றிய 12 கட்டுரைகள் இருக்கின்றன. .
படைப்புகளைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளை படிப்பது என்பது என்னளவில் ஒரு மாறுபட்ட அனுபவம். படைப்புகளை நேரடியாக வாசிக்கின்றபோது அந்தப் படைப்புடனும், படைப்பாளியுடனும் அந்த வாசிப்பு நிகழ்த்தும் உரையாடலாகவே ஒவ்வொரு வாசிப்பும் அமைகின்றது. அதேநேரம், படைப்புகளைப் பற்றிய கட்டுரைகளைப் படிக்கின்றபோது அந்த வாசிப்பு இன்னும் சில தளங்களில் விரிவடைகின்றது. குறிப்பாக அந்தப் படைப்புகளையும் நாம் ஏற்கனவே வாசித்திருக்கின்றபோது அந்தப் படைப்புகளுடனான எமது வாசிப்புக்கும் இன்னொருவரின் வாசிப்புக்கும் இடையிலான ஓர் உரையாடலாக அந்த வாசிப்பு பரிணமிக்கின்றது. நவம் அவர்களின் இந்தத் தொகுப்பில் இருக்கின்ற வட் இஃப் ரெய்ன் ஃபெய்ல்ஸ் நிகழ்வினைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை; வாழும் சுவடுகளையும் இன்னும் வாசிக்கவில்லை. ஏனையவற்றை வாசித்திருக்கின்றேன் என்ற அடிப்படையில் இந்த நூல் எனது வாசிப்புடனான உரையாடலாகவே அமைகின்றது. அந்த உரையாடலில், உடன்படவும், முரண்படவும், அப்படியா? என்று யோசிக்கவும், அதேதான் என்று உற்சாகமடையவும் நிறைய இடங்கள் சர்வ சாதாரணமாக வருகின்றன.
நவம் அவர்கள் கட்டுரைகளை அமைக்கும் பாங்கு நிச்சயம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. தனது ஒவ்வொரு கட்டுரைக்கும் மினக்கெட்டு, திட்டமிட்டு சரியாகக் கட்டமைத்து அதனை வழங்குவது என்பதை அவர் மிகவும் கவனமாகக் கையாளுகின்றார் என்றே சொல்லவேண்டும். அவரது கட்டுரைகள் பொதுவாக ஒரு மேற்கோளுடன் ஆரம்பிக்கின்றன. அவை இலக்கியம் குறித்தனவாகவோ, இலக்கிய வடிவங்கள் குறித்தனவாகவோ அமைகின்றன. அந்த மேற்கோள்களைத் தேர்ந்தெடுக்கும்போது மிகக் கவனமாக எவருடைய புத்தகத்தை, எந்த வடிவத்தைக் குறித்து அந்தக் கட்டுரை அமையப்போகின்றது என்று பார்த்து அதற்கு ஏற்றதாகவே தனது மேற்கோள்களைக் குறிப்பிடுகின்றார். கூர்மையான அவதானமும், பரந்துபட்ட வாசிப்பும், வெவ்வேறு துறைகளில் பரிச்சயமும் கொண்ட ஒருவராலேயே இதனைச் செய்யமுடியும். அடுத்து ஒவ்வொரு கட்டுரையும் பேசுகின்ற பொருள் பற்றிய பின்னணி, விளக்கம் என்பவற்றைக் கொண்டிருப்பதுடன், அவற்றை எழுதியவர்களின் சமூகப் பார்வை, கலை இலக்கியக் கருத்துநிலை என்பவற்றையும் சுட்டிக்காட்டுகின்றார்.
பொதுவாக எமது வாசிப்பில் நிகழ்வும் அதுதான். நாம் ஒரு விடயத்தை வாசிக்கின்றபோது அதனுடன் தொடர்புபட்ட, நாம் முன்னர் வாசித்த விடயங்களும், கேட்ட விடயங்களும் எமது தனிப்பட்ட அனுபவங்களும், அனுமானங்களும் சேர்ந்தை எமது வாசிப்பனுபவத்தைத் தீர்மாணிக்கின்றன. ஆயினும் அவை தனித் தனித்திட்டுகளாகவே இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து, ஒழுங்குபடுத்தி, சீர்தூக்கிப் பார்க்கின்றபோது தெளிவான ஒரு மதிப்பீடு உருவாகின்றது, இந்தக் கட்டுரைகளில் நிகழ்ந்திருப்பதும் அதுவே. நவம் அவர்களது எழுத்து நடை மிகத் தெளிவான, அதேநேரம் சுவாரசியமான வாசிப்புக்கானதாகவும், இலக்கியத் தரமாகவும் இருப்பதாகவும் இருப்பதும் ஒரு முக்கியமான விடயம். அந்த மொழி ஆளுமையினால், அவரால் நிறைகளை மட்டுமல்லாமல் குறைகளையும், பலவீனங்களையும் போதாமைகளையும் நேரடியாகச் சுட்டிக்காட்டக் கூடியதாக இருக்கின்றது.
அதேநேரம், நவம் அவர்கள் தனது வாசிப்பு மற்றும் புரிதல்களூடாக தனக்கென்று ஒரு விமர்சன அளவுகோலையும் கருத்தியல் தளத்தையும் இந்தத் தொகுப்பில் வெளிப்படுத்தவில்லை என்பதை ஒரு பலவீனமாகச் சொல்லவேண்டும். நவம் அவர்களுடனான உரையாடல்களின் வழியாக பரந்துபட்டதும் ஆழமானதுமான வாசிப்பினைக் கொண்டவராகவும் தெளிவான மதிப்பீடுகளைக் கொண்டிருப்பவருமாக அவரை அறிந்திருக்கின்றேன். அந்தப் பின்புலத்துடன் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகளை இன்னமும் கறாரான மதிப்பீடுகளை அவர் முன்வைத்திருக்கக் கூடியவர் என்பதை அறிவேன். ஆயினும், புலம்பெயர் நாடுகளில் புத்தக வெளியீட்டு விழாக்கள் நடக்கின்றனவே அன்றி விமர்சன அரங்குகள் நடைபெறுவது குறைவு. புத்தக வெளியீட்டு அல்லது அறிமுக விழாக்களில் உரையாற்றுபவர்களையும் புத்தக உருவாக்கத்தில் ஈடுபட்டவர்களையும் தவிர பிறர் புத்தகங்களை வாசித்திருக்காத சூழலே நிலவுகின்றது என்பதால் புத்தகத்தை நுணுக்கமாகவும் விபரமாகவும் ஆராய்ந்து உரையாற்றுவது குறித்த தயக்கம் உரையாற்றுபவர்களுக்கு இருக்கின்றது. ஆயினும் இன்னொரு விதத்தில் இது விமர்சனத்துறை வீரியம் இழக்கவும் அதன்வழியாக படைப்புகள் தரம் இழக்கவும் காரணமாகிவிடுகின்றது.
இந்த நூலில் அவர் குறிப்பிடுகின்ற தகவல்களும் குறிப்புகளும் ஒரு விதத்தில் இலக்கிய வரலாறுக்கான தகவல்களாகவும் அமைகின்றன. குறிப்பாக சண்முகம் சிவலிங்கத்தின் காண்டாவனம் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய கட்டுரையில் அவர் குறிப்பிடுகின்ற விடயங்களையும், காலகட்டங்களையும் குறிப்பிடலாம். ஒரு விதத்தில் இது போன்ற தொகுப்பு நூல்கள் வரவேண்டியதன் அவசியத்தையும் இதனூடாகக் எடுத்துக்கூறக்கூடியதாக இருக்கின்றது. ஈழத்து இலக்கியம் பற்றியோ, புலம் பெயர் நாடுகளில் இடம்பெறுகின்ற கலை இலக்கிய செயற்பாடுகள் பற்றியோ ஆய்வுகளைச் செய்ய விரும்புகின்ற தேவையான முதல் நிலைத் தரவுகளை இதுபோன்ற தொகுப்புகளே பதிவாக்குகின்றன. குறிப்பாக ஈழத்துப் பதிப்புத்துறை, ஈழத்து இலக்கியம் என்பது பற்றித் தொடர்ந்து பேசியும், இவற்றுக்கு தமிழகத்து பதிப்புத்துறை போன்றவற்றால் நேருகின்ற சவால்கள் பற்றியும் தொடர்ந்து பேசிவருகின்ற எனக்கு நவம் அவர்களின் இந்த நூல் பற்றிக் குறிப்பிட இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கின்ற அனைத்துக் கட்டுரைகளும் ஈழத்தவர்களின் படைப்பு முயற்சிகள் பற்றியே எழுதப்பட்டிருக்கின்றன. ஈழத்துப் படைப்புகள் பற்றி எழுதப்படுவதும் உரையாடல்கள் நிகழ்வதுமே ஈழத்துப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்துவதுடன் அந்த உரையாடல்களூடாக செழுமையடையவும் உதவும். அடுத்ததாக, இந்தத் தொகுப்பில் இருக்கின்ற அனைத்துக் கட்டுரைகளும் ஈழத்திலிருந்து வெளிவருகின்ற இதழ்களில் / புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவருகின்ற இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இது மிகவும் பிரக்ஞையுடன் செய்யவேண்டிய ஒரு பணி என்றே கருதுகின்றேன். ஈழத்துப் படைப்பாளிகள் அனைவரும் ஏதாவது ஒரு ஈழத்து இதழிலும் ஒரு புலம்பெயர் இதழிலிலும் எழுதுவது என்பதை ஒருவழமையாகக் கொள்ளவேண்டும், அந்தப் பரிவர்த்தனையே ஈழத்துப் படைப்புத்துறை வளர்ச்சிக்கு உதவும். நவம் அவர்கள் அந்த விதத்தில் நல்லதோர் முன்னுதாரணமாக அமைந்திருக்கின்றார். இது தற்செயலாக நடந்தது அல்ல; அவருடனான தனிப்பட்ட உரையாடல்களினூடாக அவர் ஈழத்து இலக்கியம், ஈழத்துப் பதிப்புத்துறை என்பன பற்றிய பிரக்ஞையுடனேயே இவற்றைச் செய்கின்றார் என்பதையும் அறியமுடிகின்றது. அந்த வகையில் இந்தத் தொகுப்பும் அண்மைக்காலத்தில் வெளியான ஈழத்தவர்களின் முக்கியமான கலை இலக்கியப் படைப்புகளில் 12 பற்றிய உரையாடலுக்கான வெளியை உருவாக்கித்தருகின்றது.
- ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி 2017 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற க. நவம், ஷியாமளா நவம் அவர்களின் நான்கு புத்தகங்களில் வெளியீட்டு விழாவில் நிகழ்த்தியை உரையின் கட்டுரை வடிவம்.
- இது மார்ச் 2018 ஜீவநதி இதழில் வெளியானது.