உரையாடற்குறிப்பு: புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட 8 பேருக்கான நினைவு நிகழ்வினை முன்வைத்து

Event

புரூஸ் மக்ஆர்தரினால் கொலை செய்யப்பட்ட ஸ்கந்தா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப் பேர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிகள் சென்ற வாரம் ரொரன்றோவில் இரண்டு இடங்களில் நடைபெற்றிருந்தன.  இவற்றில் வெள்ளிக்கிழமை ஸ்கார்பறோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன்.  இந்நிகழ்வினை

  • தமிழ்த்தாய் மன்றம்
  • நாடு கடந்த தமிழீழ அரசு
  • கனடியத் தமிழர் தேசிய அவை
  • தமிழர் வகை துறை வள நிலையம் (தேடகம்)
  • Alliance for South Asian Aids Prevention
  • கனடிய நயினாதீவு அபிவிருத்திச் சங்கம்
  • கந்தமுருகேசனார் பண்பாட்டு அமையம்
  • Canadian Tamil Forum
  • பிராம்டன் தமிழர் ஒன்றியம்
  • மிசிசாகா தமிழர் ஒன்றியம்
  • கனடியத் தமிழர் தொழிலாளர் சங்கம்

என்கிற எட்டு அமைப்புகள் சேர்ந்து ஒருங்கிணைத்திருந்தன.  இது ஒரு முக்கியமான அம்சம் என்று கருதுகின்றேன்.  ஓர் அமைப்பினர் செய்கின்ற நிகழ்வுகளை, கருத்தியல் ரீதியான காரணங்கள் இல்லாமல், இவர்கள் செய்தால் நாம் கலந்துகொள்ள மாட்டோம் என்கிற போக்கே பிரதானமானதாக இருக்கின்ற சூழலில், இதுபோல குறைந்தபட்ச உடன்பாடுகளுடன் பொதுவேலைத் திட்டத்தில் இணைந்து செயலாற்றுவது மிக ஆரோக்கியமான விடயமாகும்.  உணர்வுத் தோழமையுடனும் தமக்கிடையிலான முரண் உரையாடல்களுடனும் முன்னெடுக்கப்படக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளும், போராட்டங்களும் காலத்தின் தேவையுமாகும்.

இந்த நிகழ்வில் எய்ட்ஸ் விழிப்புணர்வுச் செயற்பாட்டாளரான கரண் விஜயநாதனின் பேச்சு மிக முக்கியமானதாகும்.  அதன் ஒளி/ஒலிப்பதிவினையோ அல்லது எழுத்து வடிவினையோ விழா ஒருங்கிணைப்பாளர்கள் பகிர்வது முக்கியமானதாகும்.  இந்த நிகழ்வு முக்கியமானதாக புரூஸ் மக் ஆர்தரினால் கொலைசெய்யப்பட்ட தமிழர்களை முதன்மைப்படுத்தியதாக இருந்தது.  அதேநேரம், தமிழர்களாக நாம் அவர்களை அடையாளம் காணுகின்ற அதேநேரம், ஸ்கந்தா நவரட்ணம் தன்னைத் தற்பாலினராக அடையாளப்படுத்தியும், தற்பாலினர் உரிமைக்காகச் செயற்பட்டும் வந்தவர் என்கிறபோது, அவரது அந்த அடையாளத்தினை நாம் மறைக்கின்றோமோ என்கிற கேள்வியை கரன் விஜயநாதன் கேட்டிருந்தார். குறிப்பாக ஸ்கந்தா நவரட்ணத்தைத் தமிழராகவும், அதேநேரம் தற்பாலினராகவும் சேர்த்து இனங்காட்டுவதில் தமிழ்ச்சமூகத்துக்கு இருக்கக் கூடிய தயக்கத்தினை அவர் சுட்டிக்காட்டினார். அதுபோல, இவர்கள் இருவருமே காணாமற்போய் நீண்டகாலம் ஆகியும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் இவை தொடர்பாக போதுமான கவனப்படுத்தல்களைச் செய்யவில்லை என்பதேயும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, ஸ்கந்தா நவரட்ணம் காணாமற்போய், பின்னர் புரூஸ் மக் ஆர்தரினால் கொலை செய்யப்பட்டார் என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரைத் தமிழராக அடையாளம் கண்டு அவர் குறித்த செய்திகளோ அல்லது கவனயீர்ப்பு நிகழ்வுகளோ நடைபெறவில்லை என்பதையும் நாம் கவனத்திற்கொள்ளவேண்டும்.  கிருஷ்ணகுமார் கனகரட்ணம் கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், ஸ்கந்தா நவரட்ணம் தமிழ்ச்சமூகத்தால் தவறவும் மறக்கவும் பட்டிருப்பார் என்பதே கசப்பான உண்மை.    தற்பாலினராகத் தன்னை அறிவித்துக் கொண்ட ஒருவரை, அவர் கொலை செய்யப்பட்ட பின்னர் ஏதோ ஒருவிதத்தில் எம்முடன் சேர்த்து இனங்காட்டுவதற்கு பெரும்பான்மைச் தமிழ்ச்சமூகத்துக்கு இருந்திருக்கக் கூடிய விருப்பின்மை என்றே இதனைக் கருதமுடிகின்றது.  சமூக அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படவிரும்புகின்ற ஊடகங்களும் அமைப்புகளும் இதுபோன்ற விடயங்களில் கவனம் செலுத்துவது அவசியம்.

அதேநேரம், தற்பாலினர் குறித்த அக்கறையுடனும், அவர்களது உரிமைகள் எதுவும் மறுக்கப்படாமல் வழங்கப்படவேண்டும் என்றும் தொடர்ந்து பேசுகின்ற, பிரக்ஞை உள்ளவர்கள் பலரை நான் தனிப்பட அறிந்திருக்கின்றேன்.  குறிப்பாக தற்பாலினர் உள்ளிட்ட விளிம்புநிலையாக்கப்படவர்கள் குறித்த உரையாடல் நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படும் போதெல்லாம், இவர்கள் அனேகம் அவற்றில் பங்கேற்று உரையாடல்களில் கலந்துகொள்வதையும் உணர்வுத்தோழமையை வழங்குவதையும் அவதானித்தும் இருக்கின்றேன்.  ஒப்பீட்டளவில் சிறிய அளவில் இருக்கின்ற “தீவிர” இலக்கிய வாசிப்பு மற்றும் சமூக அக்கறை உள்ளவர்கள் ஒருங்கிணைத்திருந்த பன்முகவெளியின் இரண்டு நிகழ்வுகளிலும், தேடகம் ஒருங்கிணைத்திருந்த மறதிக்கு எதிரான நினைவின் போராட்டம் கருத்தரங்கின் அரங்கொன்றிலும், Friends Against Homophobia என்கிற நிகழ்விலும் ஒப்பீட்டளவில் பெருந்தொகையானோர் கலந்துகொண்டிருந்தனர் என்பதையும் இங்கே நினைவுகூர்கின்றேன்.  இந்த விடயத்தில் பொதுநிலைப்பாடு உடையவர்கள் தொடர்ச்சியாக உரையாடுவதுடன், பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்திற்கும், அவர்களின் மனவோட்டத்தினைப் பிரதிபலிக்கின்ற / கட்டமைக்கின்ற ஊடகங்களுக்கும் Sexual Orientation (பாலியல் வகைமை) குறித்த உரையாடல்களை எடுத்துச் செல்லவேண்டும்.

இந்த நிகழ்வின் முழுமையான ஓளித்தொகுப்பினை தமிழ்த்தாய் மன்றத்தினர் பகிர்ந்திருக்கின்றனர்.  அதற்கான இணைப்பு


ஏப்ரல் 27, 2018 அன்று ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் இடம்பெற்ற நினைவு நிகழ்வினை முன்வைத்து…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: