முற்குறிப்பு:
இந்தப் பதிவிற்கான தொடக்கமாக https://goo.gl/b5Qtoq என்கிற என் முகநூல் பதிவு அமைந்தது. இந்தப் பதிவில் Kanaga Sivakumar அவர்கள் இட்டிருந்த பின்னூட்டங்களிற்கான பதில் ஒரே பின்னூட்டமாகப் போட முடியாத அளவில் அமைந்தமையால் அதனைத் தனிப்பதிவாகவே இங்கே பதிவுசெய்கின்றேன்.
இங்கே பகிரப்பட்டுள்ள காணொலி மறவன்புலவு சச்சிதானந்தின் பேச்சிற்கான எதிர்வினையாகவும், அவருக்கு சரியான பதிலடி என்பதாகக் குறிப்பிட்டும் பகிரப்பட்டிருந்தது. அவ்வாறு இந்தக் காணொலியைப் பகிர்வதில் இருக்கக் கூடிய அறப்பிறழ்வையும் அபத்தத்தையும் சுட்டிக்காட்டும் முகமாகவே இந்தப் பதிவினை முகநூலில் எழுதினேன். அதனடிப்படையில் இந்தப் பேச்சிலே குறிப்பிடப்படுபவற்றுள் நானும் உடன்படுபவற்றின் சாரத்தினையும் சுட்டிக்காட்டினேன். ஆயினும், அப்படிச் சுட்டிக்காட்டியதால் எனது நிலைப்பாடுகள் பற்றிய உங்கள் சந்தேகம் மீண்டும் வந்துவிடுவதால் சில விடயங்களைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
**இலங்கையில் இன்றைய சூழலில் தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இரு தரப்பிலும் வெறுப்புணர்வு இருக்கின்றது என்பதும் முரண்கள் வளர்ந்து செல்கின்றது என்பதும் உண்மையே. அதுபோல முஸ்லிம் தரப்பினரால் தமிழ் மக்கள் மீது செய்யப்பட்ட வன்முறைகள், மற்றும் அத்துமீறல்கள் குறித்து முஸ்லிம் அறிவுசீவிகள் / கலை இலக்கியச் செயற்பாட்டாளர்கள் பேசுவது மிகக் குறைவானது என்பதை நான் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றேன். தற்போதும் அதனை மீளப் பதிவுசெய்வதிலும் அதுவே இப்போதைக்குமான எனது நிலைப்பாடு என்று உறுதிசெய்வதிலும் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் புரிந்துணர்வும் வளரவேண்டும் என்றால் சுயவிமர்சனமும் தொலை நோக்குப்பார்வையும் அவசியம்; அது தமிழ்மக்களைப் போலவே முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் பொருந்தும்.
முகநூலில் நான் கருத்துரைப்பதும் பதிவுகள் இடுவதும் மிகக் குறைவாகவே இருக்கின்றது. அதேநேரம் இங்கே (ரொரன்றோவில்) நடைபெறும் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் நான் மீண்டும் மீண்டும் இதனையே வலியுறுத்தி உரையாடுவது வழக்கம். குறிப்பாக நீங்கள் குறிப்பிட்டிருக்கின்ற கிழக்குத் தமிழர் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து நான் தொடர்ச்சியாக உரையாடியே வருகின்றேன் என்பதனையும் இத்தால் உறுதிப்படுத்துகின்றேன். நான் //பரந்து பழகும் வட்டத்திலிருக்கும் மாற்றுக்கருத்தாளர்களும் முத்திரை குத்தின மார்க்ஸிஸ்ற்றுகளும் ரொட்க்ஸிற்றுகளும் ஸ்டாலின்&மாவோயிற்றுகளும் பீப் தின்னும் இந்துத்துவச்சிகளும் புலம்பெயர்புலிவேட்டைக்காரர்களும் பொதுபலசேன தலித்திஸ்ட்களும் உங்களுக்கும் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துக் கோடும் கோலமும் கீறிவிடுவார்கள் என்ற// பயமேதும் இல்லாமல் தான் அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எனது தரப்பைக்கூறி என்னால் உரையாட முடிகின்றது. ஆனால் நண்பர்களாக இருக்கும் உங்களைப் போன்றவர்கள் தான் இவற்றுக்கு அடுத்தகட்டமாகவும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்று பயமாகவும் உள்ளது.
**நான் என்னைத் தமிழ்த்தேசியவாதியாகவே அடையாளப்படுத்துகின்றேன். நான் தமிழ்த்தேசியவாதம் என்பதை விடுதலைக்கான ஒரு செயற்பாட்டுவடிவம் என்றே கருதுகின்றேன். அந்த அடிப்படையில் தமிழ்த் தேசியம் என்ற பெயரிலும் இன உணர்வு என்ற பெயரிலும் வளர்ந்துவரும் அல்லது வளர்க்கப்பட்டுவரும் இனவாதம், பிற இனங்கள் மீதான வெறுப்புணர்வு / நம்பிக்கையீனம், சகிப்புத் தன்மையின்மை போன்ற விடயங்களை மிகவும் ஆபத்தான சமிக்ஞையாகப் பார்க்கின்றேன். இப்படியான சூழலில், நாங்கள் முற்போக்குத் தேசியவாதிகள் என்று சொல்லி, நாங்கள் வேறு என்று புனிதப்படுத்தித் தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நாம் பின்பற்றவிரும்புகின்ற தேசியவாதம் முற்போக்குத் தேசியவாதமாக இருந்தாலும் எனது உரையாடலை நான் தமிழ்த்தேசியவாதிகளுடன், நான் ஆபத்தாக உணர்வதாக முன்னர் குறிப்பிட்ட ”வளர்க்கப்பட்டுவரும் இனவாதம், பிற இனங்கள் மீதான வெறுப்புணர்வு / நம்பிக்கையீனம், சகிப்புத் தன்மையின்மை” போன்றவற்றைக் குறித்த விமர்சனங்களை வைப்பதன் மூலம் நிகழ்த்த விரும்புகின்றேன். உங்களுக்கும் எனக்கும் பொது நண்பர்களாக இருக்கக் கூடிய முற்போக்குத் தேசியவாதிகள் என்று சொல்கின்றவர்கள் கூட, பெரும்பான்மையான தேசியவாதிகள் இருக்கின்ற அரங்குகளில், கூட்டங்களில், கலந்துரையாடல்களில் மென்று விழுங்கிக் கடந்துபோகின்ற சூழல்தான் இங்கே நிகழுகின்றது. இங்கே இருக்கின்ற உங்கள் நண்பர்களிடம் இதுகுறித்து நேர்மையான பகிர்தலினைக் கேட்டுப்பாருங்கள். நான் இயங்குகின்ற சூழலில், எந்தக் கருத்துநிலையை நான் முன்வைத்து எவருடன் என்னை அடையாளப்படுத்துகின்றேனோ, அவர்கள் தரும் நெருக்கடி மிக அதிகமாக இருக்கின்றது. நீங்கள் ஆறுமாத விடுப்பு எல்லாம் எடுக்கத் தேவையில்லை, ஒரு இரண்டு மாதங்கள் பொது நிகழ்வுகளில், கூட்டங்களில், கலந்துரையாடல்களில் கலந்துகொண்டாலே இதையெல்லாம் நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.
**அடுத்ததாக முஸ்லிம் சமூகத் தலைமைகள், அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள், முஸ்லிம் மக்களிடமும் தமிழ் மக்கள் மீது வளர்ந்துவரும் வெறுப்புணர்வு போன்றவற்றை அடிப்படையாக வைத்து சிவசேனை, இந்துத்துவத்தின் வளர்ச்சியை நீங்கள் காலத்தின் தேவை என்று மக்கள் உணர்வதாகவோ அல்லது சமூக/அரசியல்/பண்பாட்டுப் பின்னணியின் விளைவு என்றோ பொருட்படுத்திக்கொள்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். சிவசேனை / இந்துத்துவத்தின் வளர்ச்சியை இப்படியாக நீங்கள் தர்க்கிப்பது ஒருவிதத்தில் அதனை நியாயப்படுத்துவதாக அமைகின்றது. தர்க்கங்களை முன்வைப்பது உங்களது மிகப்பெரும் பலம். ஆனால் இதுபோன்ற விடயங்களில் பொறுப்புணர்வு முக்கியம் என்று கருதுகின்றேன். இவர்கள் முன்வைக்கின்ற கருத்துகள் மானுடத்துக்கே எதிரானவை என்பதை நீங்கள் புரிந்துகொள்வது கடினமானதல்ல. மறவன்புலவு சச்சிதானந்தம் போன்றவர்கள் முன்வைக்கின்ற கருத்துக்களில் அல்லது சிவசேனையின் செயற்திட்டத்தில் சமூகவிடுதலைக்கான எந்த வேலைத்திட்டமும் இல்லையென்பதையும் அவை மதரீதியில் நிறுவனமயப்படுத்தி அதிகாரத்தையும் படிநிலைகளையும் பேணுவதற்கான முனைப்புகள் என்றுமே நான் கருதுகின்றேன். ஓர் அடிப்படைவாதத்தை எதிர்கொள்ள இன்னோர் அடிப்படைவாதத்தை வளர்ப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணம்.
**இறுதியாக உரையாடல்களில் நம்பிக்கை வைப்பதையும் மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்வதையும் சுயமரியாதையைப் பேணுவதையும் எல்லாச் செயற்பாடுகளிலும் பேணுவதை ஓர் அடிப்படை நிபந்தனையாக நாம் நம்புகின்றேன். கேலியும் கிண்டலும் ஆத்திரமூட்டலும் சீண்டலுமாக உரையாடல் ஒன்றினை முன்னெடுப்பது மிகத் தவறான செயலென்றே கருதுகின்றேன். இந்தத் திரியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள
1 // நீங்கள் பரந்து பழகும் வட்டத்திலிருக்கும் மாற்றுக்கருத்தாளர்களும் முத்திரை குத்தின மார்க்ஸிஸ்ற்றுகளும் ரொட்க்ஸிற்றுகளும் ஸ்டாலின்&மாவோயிற்றுகளும் பீப் தின்னும் இந்துத்துவச்சிகளும் புலம்பெயர்புலிவேட்டைக்காரர்களும் பொதுபலசேன தலித்திஸ்ட்களும் உங்களுக்கும் கரும்புள்ளி, செம்புள்ளி வைத்துக் கோடும் கோலமும் கீறிவிடுவார்கள் என்ற எண்ணமா?//
2// தொடர்ச்சியாக, உங்களினைப் போன்ற நல்லவர்களிடம் //
3// யாழ்ப்பாணத்திலிருந்து உங்களுக்குத் தகவல் தருகின்றவர்கள் சரியாகத் தருவதில்லையா//
4// உங்களின் அனுசரணையிலே இம்முறை தொடரும் 49.93 ஆம் இலக்கியச்சந்திப்பிலே //
போன்ற விளிப்புகள் உண்மையில் தேவைதானா? இப்படியான விளித்தல்கள் உண்மையான, நிதானமான உரையாடல்களை உருவாக்க உதவுமா?
Leave a Reply