ரொரன்றோவில் இருக்கின்ற ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயத்திற்கு சிற்பிகளாக அழைத்து வரப்பட்ட நால்வர் CBC க்கு கோயில் தொழிலாளர்களை நடத்தும் விதம் குறித்தும் அங்கு நடக்கின்ற அத்துமீறல்கள் குறித்தும் தெரிவித்த தகவல்களையும் அது தொடர்பான மேலதிக கருத்துகளையும் தொகுத்து பதிவேற்றியிருக்கின்றது. இவற்றை இக்கோயில் நிர்வாகம் மறுத்திருந்தாலும், அந்தக் குற்றச்சாற்றுகளில் உண்மை இருக்கலாம் என்று கருதமுடிகின்றது. CBC இல் வெளியான கட்டுரையை இந்த இணைப்பில் காணலாம். http://www.cbc.ca/news/canada/toronto/hindu-priest-abuse-allegations-1.4485863
கனடாவில் இருக்கின்ற கோயில்களில் நடக்கின்ற சுரண்டல்கள் குறித்தும் அவை எவ்விதம் சமூக அழிவுகளை முன்னெடுக்கின்ற என்றும் 2009 ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களாக மாறிவரும் கோயில்கள் என்கிற கட்டுரை ஒன்றினை எழுதி இருந்தேன். அது கூர் மலரிலும் வெளியாகி இருந்தது. இப்போது அந்தக் கட்டுரையை தேவை கருதி மீள பிரசுரிக்கின்றேன். இந்தக் கட்டுரை பொதுசன மனநிலையில் கோயில்கள் பற்றி இருக்கின்ற நம்பிக்கைகளின் அடிப்படையில் கோயில்களின் செயற்பாடுகளை தர்க்கபூர்வமாக எதிர்கொள்ளும் நோக்குடன் எழுதப்பட்டது.
இதுபோன்ற சமூக சுரண்டல்கள் குறித்து நாம் அக்கறையாக இருப்பதும் அவை தொடர்பாக தொடர்ந்து உரையாடுவதும் எதிர்ப்பைக் காண்பிப்பது முக்கியமானது என கருதுகின்றேன்.
நான் கோயில்களை இருக்கக் கூடாது என்று சொல்லவில்லை, கோயில்கள் கொடியவர்களின் கூடாரங்களாக இருக்கக் கூடாது என்றுதான் சொல்கிறேன்” என்ற வசனம் கிட்டத் தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பராசக்தி திரைப்படத்தில் கருணாநிதியால் எழுதப்பட்டது. தமிழகம் எங்கும் பரபரப்பாக பேசப்பட்ட பராசக்தி வசனங்களுல் முக்கிய வசனங்களுள் இதுவும் ஒன்று. தமிழகத்தில் அன்று கொடியவர்களின் கூடாரங்களாக இருந்த கோயில்கள் இன்று மெல்லப் புலம்பெயர்ந்து, புலம்பெயர் தமிழர் வசிக்கின்ற நாடுகளில் கார்ப்பரேட் நிறுவனம் போன்ற நிதி நிறுவனங்களாகவும், பணம் உழைக்க ஏற்ற ஒரு வணிக/வியாபார அமைப்புகளாகவும் உருமாறி இருக்கின்றனவோ என்றே தோன்றுகின்றது. நான் ஒரு போதும் மதரீதியான நம்பிக்கைகளை எதிர்க்கவில்லை. ஆனால், மதங்களின் பெயரால் மூட நம்பிக்கைகளைப் பரப்பி மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர் தொகை அண்மைக்காலமாக அதிகமாகியே வருகின்றது.
சேவை நோக்கிலான நிறுவனங்கள் என்று தம்மைப் பதிந்து கொண்டிருக்கும் இந்த ஆலயங்கள் தம் நாளாந்த பூசை, அபிசேகம் போன்றவற்றின் மூலமாக உழைக்கும் பெருமளவு பணம் எங்கு போகின்றது என்ற கேள்விக்கு இன்றுவரை முழுமையான பதிலில்லை. முன்பெல்லாம் ஆலயங்கள் ஆகம விதிப்படி அமையவேண்டும் என்றூ சொல்வார்கள். அப்படி அமையாத நல்லூர் ஆலயத்தின் திருவிழா நடைபெறும் நாட்களையே 25ல் இருந்து மாற்ற வேண்டும் என்று ஆறுமுக நாவலர் போராடியுமிருக்கிறார். அதாவது ஆகம விதிப்படி முறைப்படி அமைந்த கோயிலிலேயே 25 நாட்கள் திருவிழா நடத்தலாமாம். அதானால் அப்படி ஆகம விதிப்படி அமையாத நல்லூர் ஆலயத்தின் திருவிழாக்கள் 25 நாள் உற்சவமாக நடைபெறக் கூடாதாம். இதில் முரண் நகை என்னவென்றால், அதே நல்லூர் கந்தசாமி கோயில் என்ற பெயரில் இங்கிருக்கும் கோயில் ஒன்றின் பின் சுவர், புகழ் பெற்ற ஒரு தந்தூரி சிக்கன் உணவகத்தின் பின் சுவராகவும் அமைந்திருக்கின்றது. எங்கே அய்யா போச்சு ஆகமம், மரபு எல்லாம்?. இன்னும் யோசித்துப் பார்த்தால், இங்கே இருக்கும் கோயில்காளில் எத்தனை கோயில்கள் ஆகம விதிப்படி இருக்கின்றன?. இங்கு சிலர் நினைக்கலாம், ஆகமம், வேதம் எல்லாம் வடக்கத்திய இடைச் செருகல். எனவே அவை பின்பற்றப் படவில்லை, இவை தமிழர் கோயில்கள் என்று. அப்படி சொல்பவர் இன்னும் பிறக்காத ஐந்து தலைமுறைகளுக்கும் சேர்த்து பூச்சுற்ற தொடங்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும். இப்படியான கோயில்கள், அமைப்புகள் எல்லாம் முழுக்க முழுக்க, பணம் பண்ணும் நோக்குடனேயே செய்யப்படும் சந்தர்ப்பவாதம். ஒரு முறை யோசித்துப் பாருங்கள். கோயில்கள் இடம் மாறுகின்றன என்ற அறிவித்தல்கள் பத்திரிகைகளில் வெளிவரும் என்று நாங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்துத் தன்னும் இருக்கிறோமா?, ஆனால் இன்று புலம் பெயர் நாடுகளில் நடப்பது அதுதானே. Ware House என்று சொல்லப்படும் தொடர்பகுதிகளில் ஒன்றை வாடகைக்கு எடுப்பது. அதில் ஒரு கோயிலை நிறுவுவது, அங்கிருந்து தம் ஆலயத்துக்கான் அத்திவாரத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவது, அதன் தொடர்ச்சியாக இன்னும் வசதியான இடத்துக்கு மாறுவது / புதிய இடம் ஒன்றை வாங்குவது. இப்படித் தானே இருக்கின்றன இந்த ஆலய நிறுவுனர்களின் அடுத்தடுத்த திட்டங்கள்.
இன்று ஈழத்தில் இருக்கும் முக்கிய ஆலயங்கள் அனைத்தின் பெயரிலும், அவற்றின் கனேடியக் கிளை போன்று கட்டமைக்கபப்ட்ட பிரமையுடன் கனடாவில் கோயில்காள் இருக்கின்றன. நாக பூஷனி அம்மன், நல்லூர்க் கந்தசாமி கோயில், கனடா செல்வச் சந்நிதி கோயில் என்று நிறையவே உதாரணங்களைச் சொல்லலாம். அடிப்படையில் இந்த ஆலயங்களுக்கும் ஈழத்தில் இதே பெயரில் இருக்கும் ஆலயங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வரலாற்றுத் தொடர்ச்சியும் இல்லை. உற்சவ நாட்களை அதே நாட்களாக பின்பற்றுகின்றார்கள். அதே பெயரை உபயோகிக்கின்றனர். ஏற்கனவே ஈழத்தில் இருந்த கோயில்களின் நீண்டகாலத் தொடர்ச்சியால் அவற்றின் மீது நம்பிக்கையும், பக்தியும் கொண்ட, இன்று புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் மக்களிடம், கடவுளின் பெயரை விற்று காசு சம்பாதிக்க்கின்றனர் இந்த மத வியாபாரிகள். இதில் இன்னும் அவதானிக்கவேண்டிய விடயம் என்னவென்றால், கனடாவில் இருக்கின்ற பெரும்பாலான ஆலயங்களின் நிர்வாகிகள் அல்லது நிறுவுனர்கள் அந்த ஆலய அர்ச்சகர்களாக இருப்பதும், அவர்கள் தமது முதலீட்டில் அல்லது இன்னும் ஒருவருடன் பங்குதாரராக இணைந்து ஆலயங்களைத் தொடங்குவதும் பின்னர் பங்குரிமை தொடர்பாக அடித்து இந்த விவகாரம் பற்றி எதுவும் தெரியாத கனேடிய நீதிமன்றம் வரை சென்று வழக்காடியதும். ஒரு ஆலயத்தில் கட்டட உரிமை ஒரு பங்குதாரரின் பெயரில் இருந்திருக்கிறது; ஆலய விக்கிரகங்கள் அர்ச்சகரின் பெயரில் இருந்திருக்கிறது. இருவரும் ஆலயம் யாருக்கு உரிமை என்று கனேடிய நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். இந்துமதம் சொல்கிற கலியுகம் என்றூ இவர்கள் அடிக்கடி சொல்வது இதுதானோ என்று தோன்றுகிறது.
அண்மையில் ஓர் ஆலயத்தில் ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரரின் படங்களும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜெயேந்திரர் செய்த லீலைகள் மற்றும் அடியாட்களை வைத்து செய்த கொலை போன்றவை பொது வெளியில் தீவிரமாக அலசப்பட்ட பிறகும் கூட அவரது படங்களை ஒரு வழிபாட்டுக்கு உரியவராக பொது வெளியில் வைத்திருப்பதன் பின்னால் இருக்கும் அரசியல் எனக்குப் புரியவில்லை. இது பற்றி இன்னுமொரு அர்ச்சகரிடம் கேட்டபோது அவர் சொன்னார் “பெண்களின் காமத்தைத் தணிப்பது தமது கடமை என்று வேதங்கள் சொல்கின்றன” என்று. இது போன்ற அடாவடித் தனங்களுக்கு வேதங்களைத் துணைக்கு இழுத்துக் கொண்டிருந்தால், வேதங்களும் அதற்குத் துணை போய்க் கொண்டிருந்தால் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கப் போவதேயில்லை
அதே நேரம் இவர்கள் இந்து மதம் அல்லது சைவ மதம் அறிவுறுத்தும் குருமாருக்குரிய நெறிகளை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றனர் என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது. நான், பிராமணார்கள் என்பதால் அவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற மனு காலத்து அல்லது அதை ஒட்டிய ஏனைய ஒழுக்க நெறிகளை மீண்டும் நிறுவ முயலவில்லை, ஆனால் மக்களிடமிருந்து கொண்டு தாம் பிறந்த சாதிப் பிரிவைக் காட்டி, அந்த சாதிப் பிரிவில் பிறந்ததால் நாம் தாம் கடவுளுக்கும் உங்களுக்குமிடையிலான தூதர்கள் என்று ஏய்த்துப் பிழைக்கும் இவர்கள் மக்கள் இவர்களை எவற்றுக்காக எல்லாம் மதிக்கிறார்களோ அவற்றையாவது செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு எழுவது பிழையில்லைத்தானே? அண்மையில் ஓர் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலய பூசகர்களுல் ஒருவர் இளையவர். ஆலயத்துக்கு வந்திருந்தவர்களை, அவரை விட பல வயது மூத்தவர்களைக் கூட சர்வ சாதாரணமாக “ஏய், மணி அடி”, “ஏய் தேவாரம் பாடு” என்று அதகளம் பண்ணிக் கொண்டிருந்தார். எனக்கோ பாரதி சொன்ன “மோதி மிதித்து விடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” தான் ஞாபகம் வந்து கொண்டிருந்தது. கற்பூர தீபத்தை வந்திருந்த மக்களுக்கு காட்ட தொடங்கியவர் (சொற்ப மக்களே இருந்தனர்) என்னைப் பார்த்து ஒற்றை விரலால் அழைத்து “ஏய், தொட்டுக் கும்பிடு” என்றார். “அந்தரப் பட்டு இழுத்துக்கொண்டு ஓடாதே, தீபத்தை மூன்று தரம் தொட்டுக் கும்பிடுறது மரபு, ஆறுதலாக் காட்டிக் கொண்டு போ” என்றேன். என்னிடம் ஒன்றும் சொல்லாமல் சென்றவர் என்னை அழைத்துச் சென்ற உறவினர்களிடம் “குரு நிந்தனை கூடாது என்று அவரிடம் (என்னிடம்) சொல்லி வையுங்கோ” என்று சொன்னாராம். இந்த மனநிலை காட்டுவது எதை, முழுக்க முழுக்க ஆதிகக வெறியைத்தானே. அவரைப் பார்த்து நான் ஏக வசனத்தில் பேசியது நிந்தனை என்றால், அவர் அவரை விட வயது மூத்தவர்களைப் பார்த்து ஏகவசனம் பேசுவதும் பிழைதானே?
பாவங்கள் என்று சொல்லிப் பட்டியலிடும்போது வட்டி அறவிடல் ஒரு பாவம் என்று கிட்டத் தட்ட எல்லா மதங்களுமே ஏற்றுக் கொள்ளுகின்றன. கனடாவில், டொரன்ரோவில் இருக்கும் பல முக்கியமான பூசகர்கள் வட்டி அறவிடுவதை நான் நன்கு அறிவேன். இந்த வட்டிக்குக் கொடுக்கும் காசு எங்கிருந்து வந்தது? மக்களிடம் மத நம்பிக்கைகளை விற்று வந்தது. அந்த லாபத்தை வட்டிக்குக் கொடுக்கிறார்கள், வீடுகள் வாங்கி வாடகைக்கு விடுகிறார்கள். இதைவிட முக்கியமாக கனேடிய இறைவரித் திணைக்களத்துக்கு வருடாந்த வருமானக் கணக்குகளைச் சமர்ப்பிக்கும்போது வரி விலக்குப் பெறுவதற்கான “நன்கொடைப் பற்றுச் சீட்டுகளை 10% தரகுக் கூலியுடன் ( அதாவது ஆயிரம் டொலர்கள் நன்கொடை தந்தார் என்று பற்றுச் சீட்டு பெற நூறு டொலர் கொடுக்கவேண்டும்) அள்ளிக் கொடுக்கின்றார்கள். கனேடிய அரசாங்கமும் பல்கலாசாரக் கொள்கைப்படி ஆலயங்களை லாபநோக்கில்லாத நிறுவனங்களாக கருதுவதால் இது சாத்தியமாகின்றது. இப்படி எப்படி எல்லாம் காசு உழைக்க முடியுமோ அப்படி அப்படி எல்லாம் காசு உழைக்கின்றனர். சமூகம் என்பதோ, சமூக அக்கறை என்பதோ பற்றிய சிந்தனைகள் இவர்களுக்கு எழுவதேயில்லை. இதனால் தான் நான் முன்பொருமுறை ஒரு பதிவில் எழுதினேன் “ஏஜன்சி நடத்துதல், கள்ளக் கிரெடிட் கார்டில் காசு உழைத்தல், கள்ள நம்பரில் காசு உழைத்தல் எல்லாவற்றையும் தாண்டி கனேடியத் தமிழர்களிடையே பணம் உழைக்க ஏற்ற தொழில் என்ற பட்டியலில் தொடர்ச்சியாக கோயில் கட்டுவதே இருக்கின்றது” என்று. உண்மையில் இதுதானே இங்கே நடக்கிறது. அப்படி இல்லாவிட்டால் லாப நோக்கின்றி சேவை அடிப்படையில் இயங்கும் ஸ்தாபனம் என்று அரசிடம் வருமான வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆலய உரிமையாளர் ஒருவர் ஐம்பதாயிரம் டொலர்களுக்கு அதிகமான பெறுமதியான வாகனம் ஒன்றை அதற்குரிய முழுச் செலவையும் காசாகவே செலுத்தி வாங்கிக் கொண்டதையும், அதன் தொடர்பாக கனேடிய இறைவரித் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஆலயத்துக் தொடர்ந்து வரும் பக்தர்களிடம் எல்லாம் அவர்கள் தனக்கு வாகனம் வாங்க நிதி உதவி செய்தார்கள் என்று பற்றுச் சீட்டுகளைக் கொடுத்து தன்னைக் காத்துக் கொண்டதும் அவ்வளவு எளிதில் எம்மவர்கள் மனதை விட்டுப் போகாது….
-2-
கோயில்கள் மட்டுமல்ல, ஊர்ச்சங்கங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கங்கள் என்றெல்லாம் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் அமைப்புகள் தமது செயற்பாடுகளில் எந்த விதமான சமூக அக்கறையையும் காட்டுவதில்லை / அல்லது மிகக் குறுகிய அளவே காட்டுகின்றார்கள். இது போன்ற அமைப்புகள் இங்கே திரட்டும் காசில் ஒரு சிறு தொகையை வைத்தே ஈழத்தில் எத்தனையோ புனர் நிர்மாணங்களைச் செய்யலாம், எந்த பிற நாட்டு அமைப்பிடமும் கை ஏந்த வேண்டியதில்லை.
ஒவ்வொரு ஆலயமும், பழைய மாணவர் சங்கங்களும்,, ஊர்ச் சங்கங்களும் தம்மால் இயன்றவரை சிறிய பிரதேசங்களை, பாடசாலைகளை தத்தெடுப்பது மூலம் நிறைய செய்யலாம். இதற்குரிய எல்லா ஆற்றலும் வளமும் எம்மிடம் இருக்கின்றன. உண்மையில் ஊர்ச்சங்கங்களைப் பொறுத்தவரை அவை சில ஊர்களில் நிறையவே செய்கின்றன. அது போல பழைய மாணவர் சங்கங்களும். ஆனால் பழைய மாணவர் சங்கங்களைப் பொறுத்தவரை ஊரில் இருந்த பெரிய பாடசாலைகளே இங்கும் சங்கங்களுடன் சிறப்பாக இயங்குகின்றன. ஆனால் சிறிய பாடசாலைகளைப் பொறுத்தவரை அவற்றுக்கு நிதி உதவி கிடைப்பது மிகக் குறைவு. (அதாவது பெரிய பாடசாலைகளுடன் ஒப்பிடும்போது). பெரிய பாடசாலைகள் பரந்த மனப்பான்மையுடன் செயற்பட்டு சிறிய பாடசாலைகளுக்கு தாம் திரட்டும் நிதியில் ஒரு பங்கைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதை நோக்கி அடி எடுத்து வைக்கலாம். அப்படி நேரும் பட்சத்தில் வடக்கின் வசந்தம், கிழக்கின் தோழன் எதுவுமே எமக்குத் தேவை இல்லை…
பின் குறிப்பு 1: திடீரென்று யாராவது புறப்பட்டு இதற்கும் நிதி திரட்ட வருவார்கள். கவனம். கடந்த காலங்களில் அள்ளிக் கொடுத்த நிதியெல்லாம் என்னவானது என்று ஒரு தடவை எண்ணிப் பாருங்கள்.
பின் குறிப்பு 2 : நான் பிறப்பால் இந்து மதம் / சைவ மதத்தைச் சேர்ந்தவன். எனவே இந்து ஆலயங்கள், மற்றும் அவற்றில் நடக்கும் குளறுபடிகள் பற்றியே ஓரளவு தெளிவாக எனக்குத் தெரியும். அது போல கிறீஸ்தவ மதத்திலும் மதம் மாற்றம் செய்வதற்காக வீடு தேடிவரும் பிரசாரகர்கள் செய்யும் குளறுபடிகள் பற்றி இன்னொரு பதிவில் எழுதுவேன். ஏனைய மதங்கள் பற்றி எனக்குப் பெரிதாக தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளவும்.
அருமையான அவதானிப்பு! இங்கு பிரான்சிலும் இதே லட்சணம் தான்! , இவர்கள் என்னை வீட்டிலே இறைவனைத் தொழு என ஆக்கிவிட்டார்கள். அதனால் அவர்களுக்குப் பாதிப்பில்லை. வியாபாரம் அமோகமாக நடக்கிறது. பல்லாண்டுகள் இயங்கிய ஒரு அம்மன் கோவில் மூடுவிழா நடாத்தப்பட்டு, மீண்டும் வேறோரிடத்தில் பூசகரால் மாத்திரம் தொடங்கப்பட்டுள்தாம். கூத்துக்குக் குறைவேயில்லை.
LikeLike
Really appreciate. We the People should understand these things
LikeLike