down 2 தமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது.  பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம்.  அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும் தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது.  ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” – குறிப்பாக யதார்த்தத்திற்கு மாறாக மகன் பற்றி 24 வருடங்களின் பின்னர் மகன் பற்றி தெரியவரும் “உண்மைக்கு” அவர் எதிர்வினையாற்றுகின்ற விதம் பற்றி உரையாடவேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன்.  அதனை தமிழ்நதி வெளிப்படுத்துகின்ற விதத்தில் கைது செய்யப்பட்ட மகன் பின்னர் விடுதலையாகி நேரடியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போய் இணைந்து போரிட்டு வீரச்சாவடைந்தான் என்று எழுதிச் செல்கின்ற போது அதனை வீரம் என்றோ பழிவாங்கும் உணர்வென்றோ விடுதலை உணர்வென்றோ அவர் கருதியிருக்கக் கூடும்.  ஆயினும் இந்த இடம் யதார்த்தமாக இல்லாமல் இருப்பதுடன் மிகைப்படுத்தலாகவும் தோன்றுகின்றது.   இதனை தமிழ்நதி முன்வைக்கின்ற தேசியவாதம் மற்றும் அவரது உணர்வுநிலை சார்ந்த பிரச்சனைகளாக எடுத்துக்கொள்ளலாம்.  அதற்கு அப்பால், சங்ககாலத்தில் சொல்லப்பட்ட மறத்தாயின் தொடர்ச்சியாகக் கொள்ளக்கூடிய இந்தக் கதையில் வருகின்ற சித்திகரிப்பின் காரணமாக கதையானது இன்னொரு நடைமுறைப் பிரச்சனையை எப்படிக் கையாளுகின்றது என்பதையும் பார்க்க வேண்டி இருக்கின்றது.

கதையில் ராணுவத்தால் பதினேழு வயது கோகுலன் கைது செய்யப்படுகின்றான்.  அவன் கைது செய்யப்பட்ட பின்னர் அவனைத்தேடி அவனது தாய் தொடர்ந்து போராடுகின்றார்.  தாயின் பார்வையூடாக ஒரு அப்பாவி இளைஞன் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதான ஒரு விம்பம் காண்பிக்கப்படுகின்றது.  காணாமற் போன மகனைத் தேடி உளையும் தாய்மனமும் அவள் படும் பாடுகளும் தொடர்ந்து காண்பிக்கப்படுகின்றன.  அவர் படும் அலைச்சல்களைப் பார்த்துச் சகிக்க முடியாத பக்கத்து வீட்டு கணேசரத்தினம் மாஸ்ரர் அவரையும் கூட்டிக்கொண்டு நகுலனைத் தேடி அலையும்போது வெலிக்கடைச் சிறைச்சாலையின் அதிகாரியொருவர் கோகுலனை ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணூற்றைந்தாம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாங்கள் விடுதலை செய்துவிட்டதாகக் கணேசரத்தினத்தினத்திடம் தனியாகக் கூறுகிறார்.  அதை நம்பாமலே தனது மகனை இன்னமும் தேடுகிறார் ஞானம்மா.  இடையில் சிலர் ஞானம்மாவின் மகனை இயக்கக் கூட்டங்களில் உரையாற்றும்போது கண்டதாகக் கூறுகின்றார்கள்.  ஆனாலும் ஞானம்மா தனது மகன் இன்னும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவே நம்பித் தொடர்ந்து தேடுகின்றார்.  காணமற் போனவர்களுக்கான வெவ்வெறு போராட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்காக நீதி கேட்டுப் போராடுகின்றார் ஞானம்மா.

இன்று வரை போர்க் குற்றங்களுக்கான விசாரணைகளின்போதும் மக்கள் நீதி கேட்டு நடத்தும் பல்வேறு போராட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்கள் முதன்மையானதாக இருக்கின்றன.  சென்ற ஆண்டு இலங்கையின் வடபகுதியில் பல்வேறு இடங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் நடந்தன.  தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டங்களுடன் எழுச்சியாக தொடங்கிய இந்தப் போராட்டங்கள் தீர்வு கிடைக்காமலேயே தேக்கமடைந்தன.  இதுபோன்ற விடயங்கள் கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தப்படுவதும் பதிவுசெய்யப்படுவதும் மிகவும் அவசியமானது.  ஆனால் இந்தக் கதையின் பிற்பகுதியில் இடம்பெறும் சம்பவங்களோ இந்த நோக்கிற்கே எதிரானதாக மாறிவிடுகின்றன.  கைது செய்யப்பட்டு காணாமற்போன நகுலனின் அறையின் கூரையில் இருந்து பொதி ஒன்று 20க்கு மேற்பட்ட வருடங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்படுகின்றது.

//பொதியினுள் சில புகைப்படங்கள், துண்டுப்பிரசுரங்கள், சிவப்பு மட்டையிடப்பட்ட சிறிய புத்தகம்… புகைப்படங்களில், ஊருக்குள் இயக்கமென்று அறியப்பட்ட இளைஞர்களோடு கோகுலன் நின்றான்.

“அவனுக்கு புலியளோட தொடர்பிருந்திருக்கு. துண்டுப் பிரசுரமெல்லாம் வைச்சிருந்திருக்கிறான்” அன்றிரவு சாப்பிடும்போது அம்மாவிடம் சொன்னான்.

“இயக்கத்திலை இருந்தவங்களெல்லாரையுமா ஆமி பிடிச்சுக்கொண்டு போயிட்டான்?”

ஞானம்மாவுக்கு இயக்கம், துப்பாக்கி, விடுதலை, துண்டுப்பிரசுரம் எதைப் பற்றியும் தெரியாது. தன்னிடமிருந்து தனது மகனைப் பிரித்தெடுக்க யாருக்கும் உரிமையில்லை. அவருக்குத் தெரிந்த நியாயம் அவ்வளவுதான்.//

அதற்குப் பிறகு கதையின் இறுதிப் பகுதியில் நகுலன் உண்மையாகவே ராணுவத்தால் விடுதலை செய்யப்பட்டான் என்றும், அவன் தாயைக் கூட பார்க்கவராமல் நேரடியாகவே இயக்கத்தில் இணைந்து போராடி மரணமடைந்தான் என்றும் தெரிய வருகின்றது.  அவன் கைது செய்யப்பட முன்னர் காதலித்த பெண், அவன் இறந்துவிட்டான் என்று அறிந்த பின்னரே திருமணம் செய்தார் என்று காலக் கணக்கு செய்து இறும்பூது அடைகின்றாள் ஞானம்மா, // “உங்களைக் கண்டபிறகு இயக்கத்துக்குப் போக மனம் வராதெண்டபடியாலைதான் இங்க வராமல் நேரை இயக்கத்திலை போய்ச் சேர்ந்திருக்கிறான்” // என்று சொல்லும் அற்புதனுக்கு //“அதில்லை. என்ரை பிள்ளைக்கு எவ்வளவு அடி அடிச்சிருந்தால் அவன் என்னைக்கூடத் தேடி வராமல் இயக்கத்துக்குப் போயிருப்பான்!”// என்று கூறுகிறாள் ஞானம்மா.  உண்மையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் என்கிற முக்கியமான விடயத்தினை எழுதத் தொடங்கி, காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்காக நீதி கேட்டு அலையும் தாயை முன்னிறுத்தும் கதையானது மகன் வீரச்சாவடைந்தான் என்று பூரிக்கும் தாயாக அபத்தமாக மாறி நிற்கின்றது என்றே சொல்லவேண்டும்.  இந்தக் கதையில் இராணுவ அதிகாரி ஒருவர் ஏற்கனவே நகுலனை விடுதலை செய்துவிட்டோம் என்று சொல்கின்றார்.  அதைக் கேட்டு பரிகாசமாகச் சிரிக்கின்றார்.  மகனை விடுதலை செய்யவேண்டும் என்று கேட்டும், காணாமல் ஆக்கப்பட்ட மகனுக்கு என்ன நடந்தது என்றும் கேட்டும் தொடர்ந்தும் போராடுகின்றார்.  கடைசியில் உண்மையாகவே மகன் இராணுவத்தால் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டான் என்றும் அதன் பிறகு அவன் இயக்கத்தில் சேர்ந்து இறந்தான் என்றும் அறிந்து அவர் அமைதி அடைகின்றார் என்பதை என்னவென்று சொல்வது? போரில் மகன் இறந்தான் என்று கேட்டதும் காயம் முதுகிலா நெஞ்சிலா என்று கேட்ட புறநானூற்றுத்தாயின் புதிய அவதாரமா ஞானம்மா?  காணாமல் ஆக்கப்பட்டோரின் சார்பாக அவர்களின் குடும்பத்தினர், அவர்கள் நிரபராதிகள் என்றும் அப்பாவிகள் என்றும் தொடர்ந்தும் வாதிட்டு வருகின்றது.  அரசோ அவர்கள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்கிறது அல்லது அவர்கள் தம்மிடம் இல்லை என்கிறது அல்லது கள்ள மௌனம் சாதிக்கின்றது.  இப்படியான ஒரு அவல நிலையில் காத்திருப்பு என்ற இந்தக் கதை சொல்லும் வீரமும், பெருமிதமும் அபத்தமாகவே தெரிகின்றது.

பிற்குறிப்பு:

இந்தக் கதை பற்றிய குறிப்பொன்றினை தர்மு பிரசாத் முகநூலில் எழுதி இருந்தார்.  அதில் அவர் தமிழ் மனதுடன் கதை சொல்வது குறித்தும் “விரும்பியும் விரும்பாமலும் இலங்கையர் ஆகிவிட்டோம் என்று குறிப்பிடுவது குறித்தும் எனக்கு மாற்றுப் பார்வைகள் இருக்கின்றன.

இலங்கையைப் பொறுத்தவரை, அங்கே “இலங்கையர்” என்ற பெயரில் பௌத்த சிங்கள அடையாளமே திணிக்கப்படுகின்றது.  அதுவே இலங்கையில் வாழுகின்ற நான்கு தேசிய இனங்களுக்குமே நிகழ்கின்றது.  அந்தத் திணிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கருதுகின்றேன்.  ஆனால் எதற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற தேசியவாதங்கள் முற்போக்காகான உள்ளடக்கத்துடன் பிறிதொரு ஒடுக்குமுறையை ஆதிரிப்பதாகவே அல்லது நிகழ்த்துவதாகவோ அமைந்துவிடக்கூடாது என்பது முக்கியம்.  புலிகளை மையமாக வைத்தே இந்த விவாதங்கள் நிகழ்வதால் நிலைப்பாடுகளும் எப்போதும் துருவ நிலைகளிலேயே அமைந்துவிடுகின்றன.  இந்தத் துருவநிலைகள் இன்னும் இன்னும் இறுகிச் செல்வதும் எதிர்ப்பு ஆதரவு என்ற நிலைப்பாடுகளுடன் தமர் – பிறர் என்று பிரிப்பதும் ஆரோக்கியமாக மாட்டாது.

காத்திருப்பு கதையினை வாசிக்க இணைப்பு  http://kapaadapuram.com/test5/?p=1897

இந்தக் கட்டுரையில் பாவிக்கப்பட்டுள்ள புகைப்படம் Newsfirst என்கிற இணையத் தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது