Toronto Reel Asia International Film Festival இல் திரையிட தெரிவான Unlock குறும்படத்தின் இயக்குனர் நிரு நடராஜா மேற்படி திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக ரொரன்றோ வந்திருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் அக்குறும்படத்தினைப் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. Unlock அவரது முதலாவது திரைப்பட முயற்சி என்றபோதும் திரைத்துறையில் அவரது பங்கேற்பு ஏற்கனவே இருந்திருக்கின்றது. மூங்கில் நிலா என்கிற ஒரு இசைத் தொகுப்பினை 2000 ஆம் ஆண்டளவில் வெளியிட்டிருந்த நிரு, பின்னர் கலாபக் காதலன், ராமேஸ்வரம் ஆகிய தென்னிந்தியத் திரைப்படங்களின் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். இந்த இசைத்தொகுப்பு மற்றும் திரைப்படங்களின் பாடல்கள் அப்போது எனக்குப் பிடித்திருந்தன. அதே காலப்பகுதியில் கனடாவில் இருந்து கபிலேஷ்வர் என்கிற இளைஞர் வெளியிட்டிருந்த சுவாசம், காதல் நயகரா ஆகிய இசைத்தொகுப்புகளும் பிரபலமாகி அவரும் தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்திருந்தன. ஆயினும் இவர்கள் இருவரது இசைப்பயணமும் எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக அமையவில்லை என்றே சொல்லவேண்டும்.
இசையமைப்பாளராகத் தனது திறமையை வெளிப்படுத்தியும் கூட சரியான வாய்ப்புக் கிடைக்காத நிரு, தொடர்ந்து திரைத்துறையில் நம்பிக்கையுடன் செயற்பட்டு Unlock என்கிற குறும்படத்தினை இயக்கியிருக்கின்றார்; Unlock என்கிற அத்திரைப்படம் Bolton International Film Festival, Singapore South Asian Film Festival, Toronto Reel Asia International Film Festival ஆகிய திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றது.
இக்குறும்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்று ரொரன்றோ Woodside Cinema இல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்றது. மிக நீண்ட காலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு யுத்தத்தின் வடுக்களில் இருந்து இன்னும் தன்னை விடுவித்துக்கொள்ளமுடியாமல் இருக்கின்ற ஈழத்தமிழர்கள் போருக்குப் பின்னைய காலப்பகுதியில் தமது அனுபவங்களையும் எதிர்பார்ப்புகளையும் பல்வேறு கலைவடிவங்களிலும் வெளிப்படுத்தி வருவதை அண்மைக்காலத்தில் மிக அதிகமாகவே காண்கின்றோம். அவற்றில் முக்கியமான படைப்புகளில் ஒன்றாக நிருவின் Unlock அமைகின்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், கட்டடங்கள், நலிவடைந்த பொருளாதாரம் என்பன அழுத்தமாக இங்கே பதிவுசெய்யப்படுவதுடன் அது மக்களின் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதுவும் நுட்பமாக வெளிப்படுத்தப்படுகின்றது. டைனமோவைச் சுற்றிச் செய்தியைக் கேட்கின்ற சிறுவன் செய்தி முடிவடைந்தவுடனேயே டைனமோ சுற்றுவதை நிறுத்திவிட்டுச் செல்கின்றான். மின்சாரம் இல்லாத சூழலில் வானொலி என்பது அவனுக்கு செய்தி கேட்பதற்காக ஒரு கருவி மாத்திரமே. சிறுவனின் தந்தை உடுப்புத் துவைக்க பனம் பழத்தினை உபயோக்கித்துக் கொண்டிருக்கின்றார். பொருளாதாரத் தடை காரணமாக சவர்க்காரம் தடை செய்யப்பட்டிருந்த சூழலில் உடுப்புத் துவைக்க பனம்பழம் பாவிக்கப்பட்டதும், துவைத்து உலரவிடப்பட்டிருந்த ஆடைகளை கால்நடைகள் உண்ணமுற்படுவது போர்க்கால ஈழத்தின் வாழ்பனுவங்கள் அல்லவா. சிறுவர்களது விளையாட்டுகள் கூட யுத்தத்தினால் தாக்கமடைந்தனவாகவே இருக்கின்றன. சீட்டாடுவது போல சிறுவர்கள் துப்பாக்கிச் சன்னங்களை வைத்து விளையாடுகின்றார்கள். பொழுது போக்குகளாக துப்பாக்கிச் சன்னங்களையும் எறிகணையின் கோதுகளையும் சேகரிப்பது மாறியிருந்த ஒரு சூழல் இங்கே காட்சிரூபமாகின்றது. நிருவின் சம வயதானவன் என்ற வகையில் எமது சிறு வயதில் துப்பாக்கிச் சன்னங்கள் சைக்கிள் கீ செயின்களாகவும், வீடுகளில் அலங்காரங்களில் பயன்படக்கூடிய பொருட்களாகவும் மாறியிருந்த காலப்பகுதியை Unlock மீட்டித்தருகின்றது.
சுதுமலையில் எனக்குத் தெரிந்த ஒருவரது வீட்டில் ஜப்பான் ரோஸ் என்கிற பூச்செடியினை எறிகணையின் கோதினுள் நட்டு வளர்த்திருந்தார்கள். இக்குறும்படத்தில் வருகின்ற சிறுவர்கள் அல்லாத ஒரே ஒரு கதாபாத்திரமாக சோபாசக்தியின் கதாபாத்திரம் அமைகின்றது. திரைப்படம் முழுவதும் ஒரு வசனமும் பேசாமல் வருகின்ற அவரது பாத்திரம் போர்க்காலத்தில் குரலற்றவர்களாய் வாழ்ந்த மனிதர்களையே நினைவுபடுத்துகின்றது. ஆற்றாமையையும் அவலத்தையும் வெளிப்படுத்துவதாக அந்தப் பாத்திரம் அமைகின்றது. UN என்ற பெயரிட்ட வாகனம் கவிழ்ந்துகிடப்பதைக் காட்டுவதில் இருந்து, பாலா, டேவிட் என்று சிறுவர்களுக்குப் பெயரிட்டதில் இருந்து பல அடுக்குகளில் கதையைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகளை இத்திரைப்படம் தன்னகத்தே வைத்திருக்கின்றது.
படம் திரையிடப்பட்டதன் பின்னர் நடைபெற்ற சிறு உரையாடலில் பார்வையாளர்கள் படம் பற்றிய தமது புரிதல்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டனர். ஒவ்வொருவரது பார்வையிலும் இன்னொருவரது பார்வையுடன் உடன்படவும், நிராகரிக்கவும் கேள்வி எழுப்பவுமான அம்சங்கள் இருந்ததென்றே சொல்லவேண்டும். திரைத்துறையில் ஒரு இயக்குனராக Unlock மூலம் தனது காலடியை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கின்றார் நிரு.
இக்கட்டுரை நவம்பர் 2017 தாய்வீடு பத்திரிகையில், நான் தொடர்ந்து எழுதுகின்ற சொல்லத்தான் நினைக்கிறேன் பத்தியில் இடம்பெற்றது
Leave a Reply